அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


‘ஆட்சியின் அநீதியைக் கண்டிக்க தி.மு.ககழம் அழைக்கிறது‘

பொதுச்செயலாளர் அண்ணா அறிக்கை

தனிப்படடவர்களிடம் நிலம் குவிந்து கிட்டப்பது தேசிய நீதிக்குப் புறம்பானதென்றும், உழுபவனுக்கு நிலம் சொந்தமாக்கப்பட வேண்டும் என்றும், நாட்டிலே முற்போக்குச் சக்திகள் எழுப்யி முழக்கத்தின் விளைவாகச் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கராச்சியிலே கூடிய காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானமொன்று நிறைவேற்றப்ட்டது.

முற்போக்குக் கட்சிகள் அனைத்துமே அந்தத் தீர்மானம் செயல் வடிவம் பெறவேண்டுமென்பதிலே முனைந்து ஆர்வங்காட்டி வந்திருக்கின்றன.

ஆட்சிப் பொறுப்பினைக் காங்கிரசார் ஏற்றுக் கொண்ட பிறகு, எட்டாண்டுக் காலமாகத் தமிழகத்தைப் பொறுத்தவரையில், நிலவுடைமைக்கு உச்ச வரம்பு கொண்டுவரப் போகிறோம் என்ற தீவிர அறிவிப்பு வெறும் தேர்தல் பிரசாரமாகவே இருந்து வந்திருக்கிறது.

உச்சவரம்புத் திட்டம் என்னானது?
உச்சவரம்பு ஆசையைக்காட்டி இரண்டு பொதுத் தேர்தலைச் சமாளித்துக் கொண்ட காங்கிரஸ் ஆட்சியாளர், மூன்றாவது பொதுத் தேர்தல் நேரத்தில் பிரசார அளவிலிருந்து உச்ச வரம்புச் சட்டத்தைச் செயல்படுத்த முன் வந்திருக்கும்போது அவர்கள் இதுவரை விவசாயப் பெருங்குடி மக்களை ஏமாற்றி வந்த உண்மைநிலை அம்பல மாகிவிட்டது.

6-4-60இல் தமிழகச் சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட அசல் சட்டத்தில் உள்ள குறைபாடுகளைத் தி.மு.கழகத்தினரும, பிற முற்போக்குக் கட்சியினரும் சுட்டிக்காட்டி, அவைகளை நிக்கவேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். ஒரு குடும்பத்திற்கு முப்பது ஸ்டாண்டர்டு ஏக்கர் என்றிருப்பதைப் பதினைந்து ஸ்டாண்டர்டு ஏக்கராக ஆக்க வேண்டுமென்றும் –
சர்க்கரை ஆலைக்குக் கரும்பு பயிரிடும் நிலம், கால்நடை மேய்ச்சல் நிலம், காபி, தேயிலைத் தோட்டம் மலை நிலம் முதலியவைகளுக்கு விதிவிலக்கு அளிப்பதன் மூலம் பெரிய நிலப்பிரபுக்கள் தப்பித்துக் கொள்ள இடமளிக்கக் கூடாதென்றும் –

சட்டம் வருவது முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு விட்டதால் நிலப்பிரப்புக்கள் தங்களிடம் குவிந்திருந்த உச்சவரம்புக்கு மேலாக எஞ்சக்ககூடிய நிலங்களைப் போலி ஏற்பாடுகளின் மூலம் தமக்கு வேண்டியவர்களுக்கும் போலி அமைப்புகளுக்குமாகப் பிரித்து வைத்துள்ளதனால், நிலங்களை மீட்கும் வகையில் இச்சட்டத்தை 1960 ஏப்ரலுக்குப் பதில் !காலம் முன்னதாக) 1952ஆம் ஆண்டு முதலே அமலாக்க வேண்டுமென்றும் –

கோயில் மடாலய நிலங்களுக்கு விதிவிலக்கு அளித்து 200 ஏக்கர் வரை நிலம் உரிமை அளிக்கலாம் என்ற விதியும் – உச்சவரம்பு நியாயத்துக்கு முரணானதால் அந்த விதிவிலக்கு கைவிடப்பட வேண்டுமென்றும் –
நிலத்தின் முதல் உரிமை பெற்ற சாகுபடியாளர்கள் நிலத்தினின்று அகற்றப்பட இடமளிக்கக் கூடாதென்றும் –
சட்டமனற்த்தில் தி.மு.கழகம் வற்புறுத்தியிருந்தும், ஆய்வுக் குழுவுக்கு விடப்பட்டுத் திரும்பிய மசோதா !நகர் சட்டம்) செத்துப் பிறந்த சேயாகக் கொண்டு வரப்பட்டது.

ஆளுங்கட்சி புறக்கணித்தது

சட்டமன்றத்தில் இம்மசோதா விவாதிக்கப்படும் இந்நாட்களில் –
மடாலய – கோயில் நிலங்கள் இச்சட்டத்தினின்று முழுவதும் விலக்கப்படுவதனைக் கண்டித்தும் –

இச்சட்டம் 1955ஆம் ஆண்டு முதலாவதாவது நடைமுறைக்குக் கொண்டு வரப்படவேண்டுமென்று வற்புறுத்தியும் ஒரு குடும்பத்துக்கு 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் என்ற அடிப்படையில் உச்சவரம்பு வகுக்கப்படுவதைக் கண்டித்து, 15 ஏக்கர்தான் அளிக்க வேண்டுமென்று வற்பறுத்தியும் –
சர்க்கரை ஆலைக்கு, மேய்ச்சல் நிலத்துக்கு என்ற காரணங்கள் காட்டி விதிவிலக்குகள் அளிப்பதைக் கண்டித்தும் –
திராவிட முன்னேற்றக் கழகமும், மற்ற முற்போக்கு எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து பேசியும், குரல் வாக்கெடுப்பும் எண்ணிக்கை வாக்கெடுப்பும் நடத்தியும் கொள்கையை வலியுறுத்த வெளிநடப்புகள் செய்து காட்டியும் ஆளுங்கட்சி தனது பெரும்பான்மை பலத்தால் விவசாயப் பெருங்குடி மக்களின் கோரிக்கைகளைப் புறக்கணித்து வந்துள்ளது.

புறக்கணிப்பு தொடர்ந்து, சட்டம் முழு வடிவில் நிறைவேறியதாக அறிவிக்கப்படும் நாள் விரைகிறது. நாட்டு மக்களின் கொதிப்பையும், உழவர்களின் பெரிய ஏமாற்றத்தையும், தொழிலாளர்களின் கண்டனத்தையும், இந்த அரசினர் உணரச் செய்ய வேண்டிய பெரும்பொறுப்பு தி.மு.கழகத்தைச் சார்ந்து விட்டது.

தி.மு.கழகப் பேரணி
வருகிற 28.9.61 வியாழன் காலை 7.30 மணிக்கு தமிழகச் சட்டமன்றத்தின் முன் உச்சவரம்புச் சட்டத்தின் பெயரால் இழைக்கப்படும் அநீதியைக் கண்டிக்க தி.மு.கழகம் பேரணி ஒன்று திரண்டாக வேண்டும்.

கழகக் காளையரே! தாய்மார்களே! பெரியோர்களே! பாட்டாளி மக்களே! உங்கள் அனைவரையும் தி.மு.கழகம் அழைக்கிறது.

அணிவகுக்க, அநீதியைக் கண்டிக்க, ஆட்சியாளர்களுக்கு உழவர் உரிமையை எடுத்துக்காட்ட பேரணி திரட்டிக் காட்டுக!

வருக – திரண்டு வருக!

26.9.61 வியாழன் காலை 7.30 மணிக்குத் தமிழகச் சட்டசபை முன்பு அமைதியான முறையில் தி.மு.க. தொழிற்சங்க செயலாளர் ஏ.கோவிந்தசாமி எம்.ஏ.கோவிந்தசாமி எம்.எல்.ஏ. அவர்கள் தலைமையில் நடைபெறும் அணிவகுப்பில் அனைவரும் கலந்துகொள்ள வாரீர் என அழைக்கிறேன்.

(நம்நாடு - 25.9.61)