அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


ஆத்திரம் வேண்டாம், அனுதாபப்படுவோம்

கடந்த 15.11.61 அன்று சென்னை வியாசர்பாடியில் நடைபெற்ற கழகப் பொதுக்கூட்டத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு

“பாட்டாளி மக்கள் பெருமளவு வாழ்கின்ற இப்பகுதியில் தி.மு.க. ஏற்பாடு செய்துள்ள இந்தக் கூட்டத்தைத் தேர்தல் விழாபோல கொண்டாடிக் களிக்கிறீர்கள்.

எனக்கு முன் பேசிய நமது சட்டமனற் உறுப்பினர் சத்தியவாணிமுத்து அம்மையார் அவர்களும், நிதியமைச்சர் ஏதோ என்னைத் தாக்கிப் பேசிவிட்டதாக வருத்தப்பட்டுக் கொண்டார்கள். நிதியமைச்சர் பேசியதில் எனக்கு வருத்தமே இல்லை. எனக்கு 10 நாட்களாகச் சளிபிடித்திருக்கிறது. சளியை இருமி இருமி வெளியே கொண்டுவர வேண்டியிருக்கிறது. மூன்று அல்லது நான்கு தடவை இருமினால்தான் சளி வெளியே வருகிறது. இப்பொழுது யாராவது பேசினால் காரணமில்லாமல் அதிகக் கோபமும் வருகிறது.

அமைச்சருக்குத் தேர்தல் சளி

இதைப்போலத்தான் அமைச்சர் சுப்பிரமணியத்திற்கும் தேர்தல் சளி பிடித்துக் கொண்டிருக்கிறது. தேர்தல் சுரம்வேறு கண்டிருக்கிறது. எனவேதான் சட்டமன்றத்தில் இருமிக்கொண்டிருந்தார். இத்தகைய இருமல்களை – தும்மல்களை என் 25 ஆண்டுக்கால அரசியல் வாழ்க்கையில் எவ்வளவோ பார்த்திருக்கிறேன். எனவே இதற்கு நாம் வருத்தப்படத் தேவையில்லை.

சட்டசபையில் மட்டுமல்ல – வெளியில் நடக்கும் பொதுக்கூட்டங்களிலும் அமைச்சர்கள் தாறுமாறாக நம்மைத் தாக்கிப் பேசுகிறார்களே என்று நம் தோழர்கள் வருத்தப்பட்டுக் கொண்டார்கள் கோபமும் கொள்கிறார்கள்.

எனக்குக் கோபமே வருவதில்லை. ஓர் அரசியல் கட்சி வளராதபோது அதை அலட்சியப்படுத்துவார்கள். ஆனால், அது வளர ஆரம்பித்தால் தாக்குவார்கள் – தூற்றுவார்கள் – அருவருப்பு அடைவார்கள்.

நம் வீட்டுத் தோட்டத்தில் மல்லிகைச் செடி பயிரிட்டால் பூவை யார் பறித்துவிடுகிறார்களோ? என்று அடிக்கடி பார்ப்போம். ஆனால், அதே தோட்டத்திற்குப் பக்கத்தில் எருக்கஞ்செடியில் பூப் பூத்திருந்தால் அதைப்பற்றி நாம் கவலைப்பட மாட்டோம்.

கப்பல் தலைவனைப்போல்...

நடுக்கடலில் கப்பல் செல்லும்போது புயல் ஏற்பட்டுக் கரையே தெரியாமல் கப்பல் அலைமோத, கப்பலில் உள்ள பிரயாணிகள் திகைத்து நிற்க, கப்பல் ஓட்டுபவனுக்கேகூடத் தண்ணீர் மட்டுமே தெரிந்து, கரை இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது என்பதை அறிய முடியாமல் கப்பலில் மேல் தளத்துக்குச் சென்று அவன் தவியாய்த் தவிக்கும்போது, ஒரு பூங்கொத்து அவன்மேலே விழுந்தால், முதலில் அவனுக்கு ஆச்சரியமாக இருக்கும். பிறகு, கரை அருகாமையில் இருக்க வேண்டும். எனவேதான் கரையோரத்தில் உள்ள செடிகளிலிருந்து இந்தப் பூங்கொத்து காற்றின் வேகத்தால் இங்கு வந்து வீழ்ந்திருக்க வேண்டும் என்று உணர்ந்து, கவலைப்படாதீர்கள், கரை அருகாமையில்தான் இருக்கிறது. கட்டாயம் உங்களைக் கரையில் சேர்ப்பேன் என்று பிரயாணிகளுக்குச் சொல்லும் கப்பல் தலைவனைப்போல், காங்கிரசுக்காரர்கள் தூற்றும் போதெல்லாம் அவைகளைப் பூங்கொத்து என நான் நினைப்பதால் இலட்சியம் வேகமாக வளருகிறது. விடுதலை விரைவில் கிடைக்கப்போகிறது என்று எண்ணுவதால் – வருத்தம் தெரிவதில்லை.

அவர்கள் நம்மீது வீசுவது சாணியாக இருக்கலாம். மலமாக இருக்கலாம். ஆனால் எனக்கிருக்கிற வருத்தமெல்லாம், அவைகளை நம்மீது வீசுவதற்கமுன் அவர்கள் சாணியிலும் மலத்திலும் கைவைக்கிறார்களே என்பதுதான்.

அமைச்சர் சுப்பிரமணியம் அவசரத்தில் அனாவசியமான விவாதத்தில் ஈடுபடுகிறார். எனவேதான் நான் அவரை ஓய்வெடுத்துக் கொள்ளச் சொன்னேன்.

பொறுமையாக இருப்போம்!

காளி பூசை செய்யும்போது புதிதுபுதிதாக ஆவேசம் வருவதுபோல், தேர்தல் நெருங்குகின்ற இந்தக் காலத்தில் புதுப்புதுத் தேபக்தர்கள் தோன்றுவார்கள். ஓங்காரக் கூச்சலிடுவார்கள். அவர்கள் ஆடி ஆடி ஆவேசம் அடங்கி மலையேறுகிற வரையில் நாம் பொறுமையாக இருந்தால் போதும்.

நாம் மக்களுக்குச் சொல்லவேண்டியதெல்லாம் ஓட்டு கேட்கும் யோக்கியதை காங்கிரசுக்கு இருக்கிறதா? என்பதுதான்.

இந்தப் பகுதியில் உள்ள ஒரு பெண்ணைச் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஒருவருக்கு மணமுடித்து வைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். திருமணமான ஆறு மாதத்திற்கெல்லாம் அப்பெண்ணின் காதிலிருப்பதும், கழுத்திலிருப்பதும், கையிலிருப்பதும் போய் கன்னங்களும் வீங்கிவிட்ட நிலையில், தாய் வீட்டுக்கு வந்து, என்னை போயும் போயும் அவருக்குக் கொடுத்தீர்களே, பாழும் கிணற்றிலாவது என்னைத் தள்ளியிருக்கக் கூடாதா? என்று அழுதால். அந்தப் பெண்ணின் தந்தை, உனக்கு இப்போது நேரம் சரியில்லை. நம்முடைய வீட்டிலேயே இரு, பயல் தானாக ஓடிவருவான். பிறகு பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்வார். இந்த நிலையில் அவருடைய மஇரண்டாவது பெண் திருமணத்திற்குத் தகுதியாக இருக்கிறாள் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பெண்ணைப் பார்க்க வருகிறவர்களைக் கூடத்திலேபாய் விரித்து உட்காரச் சொல்லி, பலகாரம் கொடுத்து உண்ணச் சொல்லி, காப்பி கொடுத்துக் குடிக்கச் சொல்லி, வெற்றிலைப் பாக்குக் கொடுத்துப் போட்டுக் கொள்ளச் சொல்லி, நீங்கள் எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்? என்று கேட்பின், அவர்கள் சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து என்று சொன்னால் பெற்ற மனம் மகிழ்ச்சியா அடையும்? மாறாக, பற்றித்தானே எரியும்? வீட்டில் உள் தங்களுடைய முதல் பெண்ணை நினைத்து, இனி சிந்தாதிரிப்பேட்டை யிலுள்ளவர்களுக்கா பெண் தருவது? என்றெண்ணி, பெண் வீட்டிலேயே இருந்தாலும் பரவாயில்லை என்று துணிந்து, பெண் தருவதற்கில்லை என்று சொல்வார்கள் நான் இதைக் கதைக்காகச் சொன்னேன். சிந்தாதிரிப்பேட்டை நண்பர்கள் இங்கு வந்திருந்தால் என்மேல் கோபிக்க வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

யாருக்குப் போடுவீர் ஓட்டு?

இதைப்போல் பதினான்கு வருடக் காங்கிரசு ஆட்சியில் நன்மைகள் ஏற்பட்டிருந்தால் அவர்களுக்கு ஓட்டுப் போடுங்கள். தீமைகள் ஏற்பட்டிருந்தால் அவர்களுக்கு ஓட்டுப் போடாதீர்கள்.

வேலையில்லாத் திண்டாட்டம் தீர்ந்திருந்தால் காங்கிரசுக்கு ஓட்டுப் போடுங்கள். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருந்தால் தி.மு.க.வுக்கு ஓட்டுப் போடுங்கள். பண்டங்களின் விலைவாசிகள் விஷம்போல் ஏறியிருந்தால் அவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள். அப்படியிருந்தால் தி.மு.கழகத்திற்கு ஓட்டுப் போடுங்கள்.

ஒன்றை மட்டும் உங்களுக்குச் சொல்லிக் கொள்வோன். ஓட்டுப்போடுவதற்கு முன் ஒருமுறை கன்னத்தைத் தடவிப் பார்த்து, கழுத்தைத் தடவிப்பார்த்து, கன்னம் கதகதப்பாக இருந்தால், காங்கிரசுக்கு ஓட்டு அளியுங்கள். இந்த நிலைமை இல்லாவிட்டால் காங்கிரசுக்கு ஓட்டளித்து என்ன பயன்?

வரி தரத் தயாரா?

இப்பொழு நான் உங்களுக்கு ஓர் உண்மையைப் சொல்லப்போகிறேன். வருகின்ற பொதுத்தேர்தல் முடிந்து காங்கிரஸ் கட்சி பெருவாரியான உறுப்பினர்கள் பெற்று ஆளும் கட்சியாகச் சட்டமன்றத்தில் அமர்ந்தால் ஆண்டு ஒன்றுக்கு ஏழு கோடி ரூபாய் வரி போட இருக்கிறார்கள்.

இதை நான் இட்டுக்கட்டிக் கூறவில்லை. டெல்லி சர்க்கார் இம்மாநிலச் சர்க்காருக்கு உத்தரவிட்டிருக்கிறது என்று அமைச்சர் பக்தவச்சலம் அண்மையில் மேல்சபையில் கூறியிருக்கிறார்.

மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் நிறைவேறுவதற்கு வருகின்ற ஐந்தாண்டுகளில் வரியாக மட்டும் ரூ.35 கோடி வேண்டுமென்று திட்டமிட்டிருக்கிறார்கள். எனவே காங்கிரஸ்கட்சி பெருவாாரியாக வந்தால் ஆண்டிற்கு ரூ.7 கோடி வீதம் ஐந்தாண்டுகளுக்குத் தொடர்ந்து வரி போட்டு வாட்டி வதைப்பார்கள்.

அந்த வரி ஏழைகள் தலையில் விழாமல் இருக்க வேண்டுமானால் எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள். அதிகப் பணம் இருக்கிறது என்றால் காங்கிரசுக்கு முதலில் ஓட்டுப் போடுங்கள். பிறகு வரியும் கட்டுங்கள். நீங்கள் சட்டமன்றத்திற்கு போனால் மட்டும் வரி போடமாட்டீர்களா என்று நீங்கள் கேட்கலாம். நாங்கள் சட்டமன்றத்திற்குப் போனாலும் வரி போடத்தான் செய்வோம். ஆனால் அந்த வரிகள் ஏழை மக்களைப் பாதிக்காது. பெரும் பணக்காரர்கள், ஆலை அரசர்கள், தொழிலதிபர்கள், பஸ் முதலாளிகள், பெரும் பெரும் வியாபாரிகள், மிட்டாமிராசுகள் ஆகியவர்களுக்கு வரி விதிக்கத் தயங்க மாட்டோம்( பாட்டாளி பன்னீர் செல்வமும், ஏழை ஏகாம்பரமும் தொழிலாளி துரையும், பாதையிலே வாழுகின்ற பாண்டுரங்கனும் அவ்வரியினால் பாதிக்கப்படமாட்டார்கள்.

சொல்ல இயலாதே!

இவ்வளவு நாங்கள் எடுத்துக்காட்டிய பிறகும், நாங்கள் காங்கிரசுக்குத் தான் ஓட்டுப் போடுவோம் என்று நீங்கள் சொன்னால் திருப்பதி உண்டியலில் பக்தர்கள் காணிக்கை போடுவது போல் தாராளமாகக் காங்கிரசுக்கு ஓட்டுப்போடுங்கள் நான் வேண்டாம் என்று சொல்லவில்லை.

காங்கிரசுக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் போடுகின்ற வரி. நீங்கள் வேகவைக்கின்ற பருப்பின் தலையில் விழுமோ? அரைக்கின்ற மிளகாய் தலைமேல் விழுமோ? தாளிக்கின்ற எண்ணெய் தலையில் விழுமோ? போடுகின்ற உப்பு தலையில் விழுமோ? சொல்ல முடியாது.

தப்ப முடியாது அவர்கள்!

நாங்கள் பெருவாரியாகப் போனால் நவநாகரிக நாரிமணிகள் உடுத்தும் நைலான் சேலைக்கு வரிபோடச் சொல்வோம். அவர்கள் ஏறிச்செல்லும் மெருகு குலையாத மோட்டார் வண்டிக்கு வரி போடச் சொல்வோம். அவர்கள் உல்லாசமாக எடுத்துச் செல்லும் டிரான்சிஸ்டர்களுக்கு வரி போடச் சொல்வோம். வசதியுள்ளவர்கள் தங்கள் வீட்டில் கேட்கும் ரேடியோவிற்கு வரி போடச் சொல்வோம்.

பிறக்கின்ற குழந்தைகளின் கன்னங்கள் தளதள என்று பிறந்தவுடன் மிக அழகாக இருக்கின்றன. ஆனால் வயது ஏறஏற நல்ல உணவு (போஷாக்கு) இல்லாத காரணத்தால் இளைத்துப் போகின்றன. நல்ல சத்துள்ள உணவைக் குழந்தைகளுக்குத் தருகின்ற சக்தி – நல்ல வசதி தொழிலாளிகளுக்கு இல்லாத காரணத்தால் தங்க விக்கிரகம் போல் பிறந்த குழந்தை இரண்டு மூன்று வயதானவுடன் பித்தளைகளைப் பாத்திரம் போல ஆகி 12 வயது தாண்டியவுடன் தகரக் குவளைபோல் ஆகிவிடுகிறது.

பழங்குடி மக்கள் வாழ்கின்ற சேரிகளுக்கு எப்போதோ ஒருநாள் சமூகநல ஊழியர்கள் வந்து, குழந்தைகளைச் சீவி சிங்காரித்துக் குளிப்பாட்டி, தினமும் இப்படியே இருக்க வேண்டும் என்று உபதேசம் செய்து செல்வார்கள். இப்படிக் குழந்தைகளை வளர்ப்பதற்குக் தங்களுக்கு வசதியில்லை என்ற தாய்மார்கள் சொன்னால், தலைக்கு எண்ணெய் கூடவா தடவக்கூடாது? என்று கேட்பார்கள். நம் வீட்டில் என்ன குடம் குடமாகவா எண்ணெய் வைத்திருக்கிறோம். நம் குழந்தைகளைவிடவா நமக்கு எண்ணெய் பெரிது.

தங்கம் என்பதில்தான் திருப்தி

நம்மிலே எத்தனையோ பேர்களுக்குக் குழந்தைகளுக்குப் பட்டுச் சட்டை தைத்துப்போடவேண்டும். பவுனில் நகை போட்டிருப்பதைக் கண்ணாரகக் கண்டு மகிழ வேண்டும் என்று ஆசையிருக்கிறது. ஆனால் அது நம்மால் முடியவில்லை. இந்தியாவில் இருக்கும் தங்கத்தின் மதிப்பு மட்டும் ரூ.5,500 கோடி. ஆனால், அதனால் நமக்கு ஏதாவது பயன் உண்டா என்றால் நிச்சயம் இல்லை. தங்கம் அரும்பொருளாக இருப்பதால் நம் குழந்தைகளுக்குத் தங்கம் என்று பெயர் வைத்துப் பலமுறை தங்கம், தங்கம் என்று கூப்பிட்டுத் திருப்திப்பட்டுக் கொள்கிறேன்.

நமக்குக் கிடைக்காத மாணிக்கம் – நம்மால் வாங்க முடியாத முத்து – நம்மால் பெறமுடியாது மரகதம் இவைகளை நம் குழந்தைகளுக்குப் பெயராகச் சூட்டி மகிழ்வதை விட வேறு என்ன பலன் கண்டோம். இவர்களாட்சியில்!

எனவே, ஏழைகள் மீது அக்கறையற்ற காங்கிரசு ஆட்சியை நீக்கி வைக்க வேண்டியது உங்களுடைய கடமையாகும். ஏழைகளுக்காக இருக்கும் ஒரே கட்சி தி.மு.கழகம் ஒன்றுதான்.

கேலி பேசுகிறார் நேரு!

நாம் உணவுக்கும் உடைக்கும் வீட்டுக்கும் அல்லல்படுகிறோம். பண்டித நேரு அவர்கள் வயிற்றை இறுக்கிக் கட்டுங்கள் என்று கூறுகிறார். அண்மையில் சென்னை கிண்டியில் பேசிய நேரு பண்டிதல் இந்நாட்டு மக்கள் வயிறு புடைக்கத் தின்கிறார்கள். அதனால்தான் நோய் வருகிறது என்று கூறியிருக்கிறார். இதை நீங்கள் மட்டுமல்ல, கழகப் பேச்சாளர்கள்கூட மறந்து விட்டிருக்கிறார்கள்.

இங்குப் பாட்டாளிகள் தொழிலாளிகள், உழவர்கள், பெரியவர்கள், ஆடவர், பெண்கள், குழந்தைகள், எல்லோரும் கூடியிருக்கிறீர்கள். உங்களால் ஒரே நிலையில் 5 நிமிடம் உட்கார முடியவில்லை. ஒரு தடவை காலை ஒரு பக்கம் போட்டு, பிறகு அந்தக் காலைத் தடவி மறுகாலை இன்னொரு பக்கம் போடுகிறீர்கள். இது உங்களுக்கு மட்டுமல்ல – எனக்கும் கூடத்தான். இதற்குக் காரணம். நமக்குச் சத்துள்ள உணவு உண்ண முடியாததுதான். இநத் நிலையில், எசமான் தன் அடிமையைப் பார்த்துக் கேலி பேசுவதைப்போல் படி சோறு தின்கிறாயே, இந்த மூட்டையைத் தூக்கக்கூடாதா? வயிறு புடைக்கத் தின்கிறாயே வயலுக்குப் போகக் கூடாதா? வேளைக்குப் படி அரிசி தின்கிறாயே உனக்கு என்ன கேடு? என்பதுபோல நேரு கேட்டிருக்கிறார்.

இன்னமும் சொல்வார்!

ஏன் இப்படிச் சொல்லமாட்டார் நேரு? பதினான்கு ஆண்டுக்காலம் அவரைத் தன் இஷ்டப்படி நாம் விட்டு வைத்தோமே அதற்கு அவர் இதையும் சொல்வார், இன்னமும் சொல்வார்.

இரயில் பிரயாணம் இரவுக் காலத்தில் செய்யும்போது உட்கார்ந்து தூங்கிக்கொண்டிருப்பவர்களின் தொடையில் தலைவைத்து இன்னொருவர் தூங்கிவிடுவார். உட்கார்ந்திருப்பவர் விழித்து, என்ன ஐயா, இப்படிச் செய்கிறீர்கள்? எழுந்திருங்கள் என்றால், அப்பப்பா என்ன தொல்லை? தூங்கவிடமாட்டேன் என்கிறாரே என்பதைப் போலவும், தூங்கினவன் தொடையில் திரித்தவரை இலாபம் என்ற முறையிலும் நேரு பேசிவருகிறார்.

நாம் மறந்துவிட்டாலும் நாடு மறக்கவில்லை

அவர் தமிழ்நாட்டக்கு வந்தபோதெல்லாம் நம்மை அரிச்சித்ததை எல்லாம் நாம் மறந்தாலும் நாடு மறக்கவில்லை. அவர் பெரியாரைச் சொன்னார் – ராஜாஜியைச் சொன்னார். மா.பொ.சியைச் சொனன்ார். நமக்கு என்ன? என்று மக்கள் இருந்துவிட்டதால். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து வீட்டுக்கே வந்த புலியைப் போல் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, அதிகமாகத் தின்பது இந்தியாவின் கெட்ட பழக்கம் என்று கூறிவருகிறார்.

அப்படி அதிகமாகத் தின்பவர்கள் காங்கிரசுக்கு ஓட்டுப் போடுங்கள். ஒட்டிய வயிறு உள்ளவர்கள் உதயசூரியனை ஆதரியுங்கள்.

அதிகமாக உண்பது இந்தியாவின் கெட்டப்பழக்கம் என்று நேருவே சொல்கிறாரே. நான்கூட ஆராய்ந்து பார்த்தேன். நேரு ஆங்கிலத்தில் சொன்னார். அதற்குத் தமிழில், வயிற்றை ஈரத் துணியால் இறுக்கிக் கட்டுங்கள் என்று பொருள். இங்கு இராப்பட்டினி பகல் பட்டினி கிடக்கிறோம். நம்மைக் கேலி செய்வது போல் நம் மக்களை அவமானப்படுத்துகிறார் நேரு.

அவர்களே அமைத்த சுகாதாரக்குழு, இன்னின்ன பொருள்களை இந்த இந்த அளவுக்குச் சாப்பிட வேண்டும் என்று வரையறுத்துக் காட்டியிருக்கிறது.

14 அவுன்ஸ் தானியம் அல்லது அரிசி, 3 அவுன்ஸ் நவதானியம், 4 அவுன்ஸ் கிழங்கு (பனங்கிழங்கு அல்ல) 3 அவுன்ஸ் பழம். 10 அவுன்ஸ் பால், 2 அவுன்ஸ் சர்க்கரை அல்லது வெல்லம், 3 அவுன்ஸ் நெய் அல்லது எண்ணெய், ஒரு முட்டை.

இவைகளை ஒரு சராசரி மனிதன் சாப்பிட வேண்டுமெனப்து சர்க்கார் கணக்கு. நீங்கள் தினம் முட்டை சாப்பிடுகிறீர்களா? பாலும் பழமும் சாப்பிடாமல் படுக்கைக்குச் செல்வதில்லையா? நெய் ஊற்றிக் கொள்ளாமல் சோறே தின்பதில்லையா? இருந்தாலும் இப்படி அவர்கள் பேசுகிறார்கள்.

நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். வேலையிலிருந்து அலுத்துக் களைத்து வீட்டுக்கு வந்தவுடன், உங்கள் மனைவியைப் பார்த்து, சாப்பிடு போடு, போடு, என்கிறீர்கள். சாப்பாடு போட்டவுடனே ரசம் ஊற்றிக் கொண்டு ஊறுகாய் எங்கே, எங்கே? என்று கேட்கிறீர்கள். உடனே உங்கள் மனைவி புத்திசாலியாக இருந்தால் உள்ளே போவார்கள். நீங்கள் பசியின் காரணமாக ஊறுகாய் என்று கேட்டுக்கொண்டு சாப்பிட்டு விடுவீர்கள். இப்போது வருகிறாயே என்று நீங்கள் கேட்டால், நீங்கள்தான் அதற்குள் சாப்பிட்டுவிட்டீர்களே, இன்னும் ஊறுகாய் ஏன்? என்று சொல்வார்கள் நிலைமை உணர்ந்தவர்கள். உன் இழவுக்கு ஊறுகாய் வேறு கேடா? என்று கடிந்து கொள்வார்கள் – அடி வேண்டியவர்கள், உதைபடி வேண்டியவர்கள்.

அந்தக் கணக்கு உண்மையா?

ஐ.நா. சபையிலே அத்தனை நாட்டு உணவுக் கணக்கும் தரப்பட்டிருக்கிறது. அவைகளில் இந்தியாதான் பஞ்சத்தில் அடிப்பட்டதைப்போல் குறைந்த கணக்கு தந்திருக்கிறது. சர்க்கார் கொடுத்திருக்கிற உணவுக்கணக்கு, மற்ற நாட்டு உணவுக் கணக்கை விட மிகவும் குறைந்தது. நாம் உண்பதோ சர்க்கார் கொடுத்திருக்கும் கணக்கைவிட மிகமிகக் குறைந்தது. என்றாலும் நேரு அதிகம் சாப்பிடுபவர்கள் என்று கேலி பேசுகிறார்.

நீங்கள் வயிறாரத் தின்று அதனால் நோய் வந்தவர்கள் என்றால், காங்கிரசுக் கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள். அந்தக் கூற்று தவறு என்பதை நிரூபிக்க விரும்பினால் தி.மு.கழகத்திற்கு ஓட்டுப் போடுங்கள்.

அரிசிச் சோறு சாப்பிடாதீர் என்கிறார் நேரு. காங்கிரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அரிசிச் சோறு சாப்பிடக்கூடாது என்று சட்டம்கூட வரும். இதற்குக் கூடவா சட்டம் வரும்? என்று நீங்கள் கேட்கலாம். நேருவின் ஆட்சியில் எதற்குத்தான் சட்டம் வரவில்லை?

தட்டிக்கேட்டுத் தடுத்து நிறுத்த வேண்டாமா?

எனவே, எங்களை ஆட்சிப் பீடத்தில் அமர்த்த மனமில்லை என்றாலும் எனக்குக் கவலையில்லை. இந்தத் தேர்தல் இல்லாவிட்டால் இன்னொரு தேர்தல். ஆனால் வலிவான எதிர்க்கட்சியாகவாவது அனுப்பினால்தான் தீதான் – தீமை பயக்கத் தக்க கொடுங்கோன்மைக்கு வழி செய்யக்கூடிய சட்டங்களை ஆட்சியாளர்கள் கொண்டுவரும்போது தட்டிக் கேட்டுத் தடுத்து நிறுத்த முடியும். சட்டம் வராது என்பதற்கு என்ன அத்தாட்சி?

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ் என்ற அந்தக் காலம் எங்கே மூன்று குழந்தைகள் பெற்றவுடன் தெருத்திண்ணைக்குப் போ என்று சொல்லும் இந்தக்காலம் எங்கே? அதிகக் குழந்தைகள் தேவையா இல்லையா என்பது வேறு பிரச்சினை அதைப் பற்றிய கருத்து வேறு.

கோதுமை உண்பதற்குப் பழக வேண்டும் என்று சொல்கிறார்கள். இது கோதுமையைத்திணிக்கச் செய்யப்படும் சூழ்ச்சி. உணவுப் பொருளுக்குக்கூட வடநாட்டை நோக்கி எங்கும் நிலைமையை உண்டாக்கச் செய்யும் சதி. வடவரின் கோதுமை ஏகாதிபத்தியத்திற்குத் தென்னகத்தின் பணத்தைக் கொட்டிக் கொடுப்பதன் மூலம் கொஞ்சம் நஞ்சம் உள்ள தென்னகத்தின் பொருளாதாரமும் பாழ்பட்டுவிடச் செய்கின்ற செயல்.

பாடம் கற்பிக்க வேண்டாமா?

அரிசிச் சாதம் சாப்பிட்டால் சோம்பேறியாகிவிடுவீர்கள் என்று ஓர் இனத்தையே தரக்குறைவாகத் தாக்கிப் பேசியிருக்கிறார் நேரு. அவருக்குப் பாடம் கற்பிக்க வேண்டாமா? எனவே உதயசூரியனுக்கே உங்கள் ஓட்டை அளியுங்கள்.

மீண்டும் காங்கிரசு ஆட்சிக்கு வந்தால் நீங்கள் உண்ணும் அரிசிக்கு ஆபத்து, செய்யும் உழவுக்கு ஆபத்து, படிக்கும் தமிழுக்கு ஆபத்து.

அரிசியை ஒழிப்பார்கள், கோதுமையையைச் சாப்பிடச் சொல்லி, வயலை அழிப்பார்கள், கோதுமை உண்ணச் சொல்லி.

எனவே, இந்த அழிவகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் தி.மு.க.விற்கு ஓட்டளியுங்கள்.
நீங்கள் அதிகத் தீனி தின்பவர்களாக இருந்தால் – அரிசித் சாதத்தை வேண்டாதவர்களாக இருந்தால் – இந்தி மொழியை மட்டுமே ஏற்றுக் கொள்பவர்களாக இருந்தால் ஆண்டு ஒன்றுக்குப் பலகோடி புதிய வரிகளையும் தாங்கிக் கொள்பவர்களான இருந்தால் – தயவு செய்து காங்கிரசுக்கே ஓட்டளியுங்கள். நான் வேண்டாம் என்ற சொல்லவில்லை.

சிந்தித்துச் செய்யுங்கள்!

வரப்போகின்ற ஆபத்துக்களை முன்கூட்டியே சொல்லிவிட்டேன். எனவே, ஆடவரும் பெண்டிரும் வயதானவர்களும், வாலிபர்களும் காங்கிரஸ் கட்சியின் கேடுபாடுகளையும் வரவிருக்கின்ற ஆபத்துக்களையும் எண்ணிப் பார்த்து, ஓட்டுச் சாவடிக்குப் போகுமுன் நன்றாகச் சிந்தித்து உங்கள் விருப்பப்படி ஓட்டளியுங்கள் என்று கூறி விடைபெறுகிறேன்.

(நம்நாடு - 27.11.61)