அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


“ஆற்றலுண்டு – அவசரப்படமாட்டேன்“

18.10.61 அன்று இரவு சிதம்பரம் டவுன் ஆல் மைதானத்தில் வழக்கறிஞர் வி.வி.சாமிநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் அண்ணா அவர்கள் ஆற்றிய உரையின் முழு விவரம் வருமாறு.

“தில்லைநகர் தி.மு.கழகத் தோழர்கள் இன்று மிகப் பிரம்மாண்டமான அளவிற்கு ஊர்வலத்தை நடத்தி. அதிலே என்னைக் கலந்துகொள்ளச் செய்து, நான் வெட்கப்படத்தக்க அளவிற்கு நிகழ்ச்சிகளை அமைத்திருக்கிறார்கள். நான் சாதாரணமாக ஊர்வலங்களில் கலந்து கொள்வதில்லை என்றாலும், எனக்கு வயது ஆக ஆக என்னை வலியுறுத்தி, எவ்வளவு ஆட்டிவைக்க வேண்டுமோ அப்படியெல்லாம் செய்கிறார்கள்.

தம்பி வில்லாளன், அடுத்த ஆண்டு எனது ஆண்டு விழாவினை இங்குக் கொண்டாட நான் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவர் வக்கீல் வேலையில் இருப்பதால் – சாட்சியை வைத்து வழக்கை நடத்துவதைப் போல உங்களையெல்லாம் விட்டு, நான் வந்து கலந்துகொள்ள வேண்டும் – என்று குரல் எழுப்பச் சொன்னார். அடுத்த ஆண்டு நிச்சயமாக வெளியிலே இருந்தால் இங்கு வந்து கலந்து கொள்வேன்.

இப்பொழுதெல்லாம் யார் என்னைக் கூட்டத்திற்கு அழைத்தாலும் நான் தட்டாமல் தயங்காமல் கலந்த கொள்வதற்கு உண்மையான காரணம் என்னவென்றால் இன்றைய தினம் வெளியே இருக்கிறோம் நண்பர்களைப் பார்க்கலாம். கருத்தை வெளியிடலாம். ஆனால் நாளைய தினம் எங்கே இருக்கிறோமோ என்ற எண்ணத்தினால்தான்.

பீதி கொள்வோர் அங்கே

சமீபத்தில் டெல்லியில் நிறைவேற்றப்பட்ட சட்டப்படி, நாம் நடத்திய ஊர்வல ஒலிகளும் குற்றத்தின் பாற்பட்டதாகும். திராவிட நாடு திராவிடருக்கே‘ என்ற குரல் ஏப்பினால் அது சட்டப்படி குற்றமாகும். நம்மையெல்லாம் கண்டிப்பதற்கேற்ற சட்டத்தை நிறைவேற்றித் தயாராக ஆகுமோ?‘ என்ற பீதியினால்தான் நம்மை விட்ட வைத்திருக்கிறார்களே தவிர, வேறல்ல, அடுத்த ஆண்டு விழாவில் நான்வெளியிலே இருந்தால் இங்கு வந்து கலந்துகொள்கிறேன். இங்குப் பகிரங்கமாகச் செய்து கொள்ளும் ஒப்பந்தம், பலர் அறிய செய்து கொள்ளுகின்ற ஒப்பந்தம். பன்னிரண்டு ஆண்டுகள் கழித்துச் செயல்படுகின்ற ஒப்பந்தமல்ல. வெட்ட வெளியிலே திட்டவட்டமாக அறிவித்துவிட்டுச் செய்து கொள்ளுகின்ற ஒப்பந்தம்( அடுத்த ஆண்டு நான் வெளியிலே இருந்தால் இங்கே வருகிறேன். உள்ளே இருந்தால் நீங்கள் அங்கு வாருங்கள்.

சிந்தித்துக் காணும் கனவு

தாய்த் திருநாட்டை மீட்பது என்ற ஒரு முடிவெடுத்தோம். தாய்த் திருநாட்டை மீட்பதற்குக் காரணம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

பஞ்சவர்ணக் கிளியைப் பிடித்துத் தங்கக் கூண்டிலே அடைத்து வெள்ளித் தட்டில் பாலும் பழமும் கொடுத்தாலும் அது உள்ளே இருக்க விரும்பாது. சாதாரணக் கிளிக்கு இருக்கின்ற உரிமைகூட நமக்கு இல்லாமல் போகாது.

ஆனால், நம் விடுதலையை வலியுறுத்துகிற நேரத்தில் சிலபேர் கேலி பேச முற்பட்டார்கள். நம்மிடையே இல்லாதவர்கள் ஆனாலும் இருந்து பிரிந்தவர்கள் ஆனாலும் ‘திராவிட நாடு‘ என்பது கனவு என்கிறார்கள். ‘பகற்கனவு‘ என்கிறார்கள்.

ஆனால், உண்மையில் திராவிட நாடு பகலிலே காண்கின்ற கனவு தூங்குகின்றபோது காணுகின்ற கனவு அல்ல. விழித்துக் கொண்டிருக்கின்றபோது சிந்தித்துக் கொண்டே காண்கின்ற கனவு.

கனவு நனவாகிறதே

சந்திரனை விஞ்ஞானிகள் ஆராய முற்பட்டபோது ஒரு காலத்தில் கேலி பேசப்பட்டது. ஆனால் இன்றைய தினம் அவர்கள், சந்திரமண்டலம் நோக்கி விண்வெளிப்பயணம் நடத்துவதைப் பார்க்கிறோம். அவர்களுடைய அன்றைய கனவு இன்று நனவானதும் பார்க்கிறோம்.

நாம் காணுகினற் கனவு இரவிலே தூங்குகின்றபோது காண்கின்ற கனவல்ல. பட்டப்பகலிலே – வெட்டவெளியிலே காண்கின்ற கனவு. இது வீட்டுக்கான கனவல்ல – சொந்த நாட்டுக்கனவு.

உங்களது வீடு எனது வீடு. உங்களுடைய இதயம் என்னுடையது. இது ஊமையன் கண்ட கனவானால் ஊருக்கு அது தெரியாது. நாம் காண்கின்ற கனவு இன்றைக்கு நாடே பேசுகின்ற அளவிற்கு வலிவு பெற்றிருக்கிறது.

இப்படை தோற்கின்?
இன்றைய தினம் ஊர்வலத்திலே நான் கண்டேன் – பல்லாயிரக்கணக்கான தோழர்கள் ‘திராவிட நாடு‘ திராவிடருக்கே‘ என்று குரல் எழுப்பியதையும், 153 சட்டத்தை உடைப்போம்‘ என்று முழக்கமிட்டதையும் பார்த்தேன். இத்தனையையும் பார்த்த பிறகு. ‘இது கனவு‘ என்று சொல்லிவிட்டால் போதுமா?

நம்முடைய தோழர்கள் குரல் எழுப்பிப் பவனி வந்ததைப் போல் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

நான் சமீபத்தில் கோவை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்தேன். நீலகிரிக்கும் – குன்னூருக்கும், மங்களூருக்கும் சென்றிருந்தேன். இவை எல்லாம் குன்றுகள் உள்ள இடம். அவர்கள் கன்னடம் பேசுகின்றவர்கள். நானும் ஓரளவு தெரிந்ததனால் புரிந்து கொண்டேன். நீங்கள் கேட்டால் மகிழ்ச்சி அடைவீர்கள். மாற்றார் கேட்டால் மருட்சி அடைவார்கள்? அங்கெல்லாம் நமது கழகத்தின் செயலாளர்களாகக் கன்னட மொழி பேசுகின்றவர்கள் இருக்கிறார்கள்.

அதைப்போல ஆந்திர மாநிலங்களுக்குப் போயிருந்தோம். அங்கேயும் இதுபோன்ற வளர்ச்சியினைக் கண்டேன். அவர்கள் செல்லுவதெல்லாம், ‘அண்ணா நீங்கள் தமிழ் நாட்டிலேயே அதிகமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். இங்கும் வந்து பணியாற்றினால் அதிகம் வளருவோம்‘ என்பதுதான்.

ஆதரவைப் பிரித்துவிட முடியுமா?

அதுபோல, மைசூர் மாநிலத்து மேடப்பா அவர்கள், இங்கு வந்து பிரச்சாரம் செய்யுங்கள். பெங்களூர்த் தேர்தல்களில் ஈடுபடுங்கள். நன்றாக வளரலாம் என்று செய்தி சொல்லி அனுப்பியிள்ளார்கள்.

இப்படிப் பிற மாநிலங்களிலும் திராவிட நாடு கருத்துக்கு ஆதரவு பெருகி வருவதனைப் பார்க்கிறோம்.

ஆனால் இந்த இலட்சியத்தைவிட்டு நீங்கினால் சில லட்சம் கிடைக்கும் என்று விலகியவர்களும் இருக்கிறார்கள். இதனை நான் இதுவரையில் குறிப்பிட்டது கிடையாது. இப்போதுதான் முதல் முறையாகக் கூறுகிறேன்.

ஆறுகள் எல்லாம் ஓடிவந்து கடலிலே கலந்துவிட்டால் கடலிலிருந்து நீரை, ஆறு எடுத்துக் கொள்ள முடியாது. அதுபோல சென்றவர்கள் ஆற்றிய பணியும், தொண்டும் நம்முடன் கலந்துவிட்டது. அதனை அவர்கள் எடுத்துச் செல்ல முடியாது.

ஆற்றுத் தண்ணீர் கடலிலே கலப்பதைப்போல, அரைத்த சந்தனம் கட்டையில் ஏறாததுபோல அவர்கள் நம்மோடு இருந்து ஆற்றிய பணி நம்மிடமே இருக்கும்.

குறைத்தா மதிப்பிட்டார் நேர பண்டிதர்?

அ.இ.கா.க. கூட்டத்தில் பண்டித நேரு எதனைப் பற்றிப் பேசினார் – இந்தப் பகற்கனவைப் பற்றித்தான். வடகிழக்கு எல்லைப்புறத்திலே பல சதுரமைல் பரப்பளவைப் பிடித்து வைத்துள்ளானே சீனாக்காரன், அதைப்பற்றி அல்ல. காஷ்மிர்ப் பகுதியில் டாங்கிகளையும், பீரங்கிகளையும் நிறுத்தியுள்ளதே பாகிஸ்தான் – அதைப்பற்றிப் பேசவில்லை கோவா பற்றிப் பேசவில்லை. நம்மைப் பற்றித்தான் நேரு பண்டிதர் பேசுகிறார் என்றால், திராவிட நாடு இலட்சியம் வளராதது என்றா பொருள்? கைகூடாதது என்றா பொருள்? அவர்களிலே பலர்போய் விட்டார்களே என்பதற்காகப் சொல்லப் போனால் அவர்கள் இருந்த போது பேசியதைவிட இப்போது அல்லவா அதிகம் அவர் பேசியுள்ளார்?

சாதாரணமாக, நம்மால் அடிக்கடி முடிந்த ஆளை நாமே அடித்துவிடுவோம். தங்களால் முடியாவிட்டால், பக்கத்தில் உள்ள முரடனைவிட்டு அடிக்கச் சொல்லி, கோர்ட்டிலே பார்த்துக் கொள்கிறேன் என்பார்கள். அதைப்போல நாம் சாதாரணமானவர்களாக இருந்திருந்தால் காமராசரிடம் விட்டிருக்கலாம். ‘சண்டப்பிரசண்டர்‘ என அவர்களாலேயே பேசப்படும் சுப்பிரமணியத்திடம் விட்டிருக்கலாம். ஆனால் நேரு அவர்கள் நம்மைப் பற்றிப் பேசுகிறார். ‘உள் பிரிவினையை ஏற்றுக் கொள்ளமாட்டேன்‘ என்கிறார்.

ஆற்றல், திறமை எங்கே?

‘திராவிட நாடு திராவிடருக்கே‘ என்பதற்குப் புள்ளி விவரங்களையும், வரலாற்றுச் சான்றுகளையும் எடுத்துச் சொன்னால் கேலி பேசிய இவர்களது திறமை எங்கே? ஆற்றல் எங்கே?

கருத்திற்குக் கருத்து, எண்ணத்திற்கு எண்ணம், பேச்சிற்குப் பேச்சு என்ற முறைகளாலேயே அடக்கிவிட முடியாது என்று தெரிந்து தெளிந்த பின்னர்தான், டெல்லி அமைச்சர், தந்தார், 153 ஆவது சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார். இந்திய உபகண்டத்திலிருந்து எந்தப் பகுதியாவது பிரிந்து போக வேண்டும் என்று சொன்னால் 3 ஆண்டுச் சிறைதண்டனை என்பதுதான் அந்தச் சட்டத்தின் விதியாகும். இது தெரிந்த பிறகும் நாம் பிரிவினைக் கோரிக்கையைக் குறைத்துப் பேசுகிறோமா? மேலும் வலியுறுத்திச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம். சட்டத்திற்குப் பயந்து தப்பிச் சென்றவர்களைப் பற்றி நமக்குக் கவலையில்லை.

இனி இதிலிருந்து தப்பவேண்டும் என்று யாரேனும் கருதினால் அதற்கும் வழி சொல்கிறேன். ‘திராவிட நாடு திராவிடருக்கே‘ என்றால்தான் குற்றம். ஆனால், ‘திராவிட நாடு திராவிடருக்கும்‘ என்றால் அது குற்றமில்லை என்று கருதுகிறேன். காரணம் ‘திராவிட நாடு திராவிடருக்கும்‘ என்றால், திராவிட நாடு மார்வாடி களுக்கும் உண்டு. அதைப்போல, திராவிடருக்கும் உண்டு எனப் பொருள் கொள்ளலாம். எனவே, இது குற்றமாகாது எனக் கருதுகிறேன். இதுபற்றிச் சட்ட நுணுக்கம் தெரிந்தவர்கள்தான் ஆராய வேண்டும். ஆகவேதான், இப்படியும் கூறி அவர்கள் தப்பித்துக் கொள்ளலாம்.

குரல் கேட்கும் அங்கு

ஆனால், இதற்காக ஒரு பத்தாயிரம் பேர் தயாரானால் அதனை எதிர்க்கும் துணிவு இவர்களுக்கு இல்லை. பத்துபேர் பிணமானால் பிறகு என்ன நடக்கும்? ஐக்கிய நாடுகள் சபையில் இதுபற்றிப் பேசப்படும். ‘திராவிட நாடு தேவை எனக் கேட்டதால் 10-12 பேரைச் சுட்டீர்களாமே. 10,000 பேர்களைச் சிறையில் தள்ளியிருக்கிறீர்களாமே‘ என்று அம்மன்றத்தில் கேட்பார்கள். இதனை, காங்கிரஸ்காரர்களை மிரட்டுவதற்காக நான் குறிப்பிடவில்லை. நடக்கப் போவதைத்தான் சொல்கிறேன்.

நேரு பண்டிதர், ‘உள்நாட்டு யுத்தமே வந்தாலும் சரி, நான் நாட்டுப் பிரிவினையை ஒத்துக் கொள்ளமாட்டேன்‘ என்று சொன்னதிலிருந்து அவரிடத்திலிருந்த மதிப்பு எனக்கு 50 சதவிகிதம் குறைந்துவிட்டது. நாங்கள் ‘யுத்தம் செய்வோம்‘ என்கிறோமா? அல்லது, அதே முறைகளை அமைத்துக் கொண்டிருக்கிறோமா?

சவாலை ஏற்கிறேன்

சட்டமனற்த்தில் நாம் பெரும்பான்மை இடத்தைப் பிடித்து ‘ஆண்டுதோறும் ஒரு லட்சம் ரூபாயை விழுங்கும் கவர்னர் எங்களுக்கு வேண்டாம்‘ என்று தீர்மானம் போட்டு டெல்லிக்கு அனுப்பி அவர்கள் ஒத்துக் கொள்ளாமல் மறுதேர்தல் நடத்தி அதிலும் நாம் வெற்றி பெற்று மீண்டும் தீர்மானம் போடுகின்ற அந்த நிலைமையில், உள்நாட்டு யுத்தத்திற்குத் தயாரா?‘ என்கின்ற முறையில் நேரு பேசியிருக்கிறார். நான் அந்தச் சவாலை ஏற்றுக் கொள்கிறேன்.

நேருவுக்குச் சொல்கிறேன் – ஒளிவு மறைவு இல்லாமல் சொல்கிறேன். இதனை நினைவிலே வைத்துக் கொள்ளுங்கள். நான் கட்டளையிட்டால் இரயிலே ஓடாது. தி.மு.கழகம் அனுமதி அளித்தால் தண்டவாளமே இருக்காது. ஓடுகின்ற இரயிலின் முன்னால் சில பேர் பிணமானால் மற்றவர்கள் ஓடிப்போய் விடமாட்டார்கள். அஞ்சல் நிலையங்கள் இயங்காது. இந்த நிலைமைகள் வளர்ந்துவிட்டால் எப்போது அதனை அடக்கலாம் என்றால், எங்களையெல்லாம் இப்போது வாணவேடிக்கை விட்டார்களே அதைப்போல் – சுட்டுப் பொசுக்கினால்தான் அது நடக்கும். அந்த அளவிற்கு ஆற்றலைத் தேக்கி வைத்துள்ளவன் நான். ஆனால் நான் இரத்தம் சிந்துவதை விரும்பாதவன். பிணம் விழுவதை வேண்டாதவன். எனவே, நாங்கள் இந்த முறைகளை அமைத்துக் கொள்ளவில்லை.

பழுக்கக் காய்ச்சினால்தான் பலனுண்டு

பழுக்கக் காய்ச்சப்படுகின்ற இரும்பைக் கண்டு ‘இவ்வளவு பழுத்துவிட்டதே இன்னும் ஏன் காய்ச்சுகிறார்கள்?‘ என்று எண்ணுவோம். ஆனால் காய்ச்சுபவருக்குத் தெரியும் அதிலே ஓடுகின்ற கருப்பு – இது நன்கு பழுத்தால்தான் அதிலிருந்து பல கருவிகளும் அப்போதுதான் செய்ய முடியும்.

அதைப்போல, சிவந்துவிட்ட நிலைமையைப் பார்த்து விட்டுச் சில நண்பர்கள், ‘கருவியைக் கொடு‘என்றார்கள். நான் ‘பொறுங்கள்‘ என்றேன். ‘ஆகா, இவனுக்கு எதுவுமே செய்யத் தெரியாது‘ என்றுக குளிர் தேடி. உலையின் சூட்டிலிருந்து தப்பித்து ஓடிவிட்டார்கள். ஆனால் எனக்குத் தெரியும் எப்போது பழுத்துப் பக்குவத்திற்கு வருகிறது என்பது.

தாய்நாட்டை மீட்பதற்காக இறுதியில் தன் மகனையே களத்திற்கு அனுப்பிய தாயின் வரலாறு சங்க இலக்கியத்தில் இருக்கிறது. அந்தத் தாய் பிறந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள் நாம். ஆகையால்தான், செத்தாகிலும் இந்தநாட்டை வாழ்விக்க வேண்டும் என்ற உங்களைக் கேட்டுக் கொள்ள வந்திருக்கிறேன்.

அது அவருக்குப் பழக்கமானது

‘உள்நாட்டு யுத்தமே வந்தாலும் சரி நாட்டுப் பிரிவினையை ஒத்துக் கொள்ளமாட்டேன்‘ என்று பண்டித நேரு பேசினார். அது அவருக்குப் பழக்கமானது. ‘பாகிஸ்தான் பிரிவினையை ஒத்துக் கொள்ள மாட்டேன். உள்நாட்டு யுத்தமே வந்தாலும் ஒத்துக்கொள்ள மாட்டேன்‘ என்றுதான் அன்றும் கூறினார். அதற்குப் பிறகு ‘பிரிவதானால் பிரிந்து தொலையட்டும். ஆனால் பாதுகாப்பிற்கு என்ன செய்வார்கள்? என்றார். பாகிஸ்தான் பிரிந்ததுடன் மட்டுமல்ல, இப்போது அதன் பாதுகாப்பிற்கு அமெரிக்காவின் ஆயுதங்கள் நிறையக் கிடைத்திருக்கிறது என்று அதே பண்டிதல் பாராளுமன்றத்தில் குறிப்பிடுகிறார்.

பண்டித நேரு உரத்த குரலில், ‘உள்நாட்டு யுத்தம் வந்தாலும் சரி‘ என்று பேசினாலும், பாகிஸ்தான் பிரிவினையைக் கோரியவர்கள் வாதாடி, பிறகு போராடி வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

‘பார், பார்( அண்ணாதுரை தன்னை ஜின்னா என்று நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பார்கள். ஆனால், ஜின்னாவைப்போல் அறிவிலோ ஆற்றலிலோ நான் சிறந்தவன் அல்ல என்றாலும் நான்தான் இந்த இலட்சியத்திற்குக் கிடைத்திருக்கிறேன்.

நிதியமைச்சர் நிலை இந்த மட்டுந்தான்!

சில நாட்களுக்கு முன்பு நிதியமைச்சர் சுப்பிரமணியம் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ‘மாநில அரசின் விவகாரஙக்ளில் மத்திய அரசு தலையிடுகிறது. இது சரியல்ல‘ என்று. தேசிய ஒருமைப்பாடு வேண்டும் என்பதிலே அழுத்தமான நம்பிக்கை சுப்பிரமணியத்திற்கு இருக்குமானால், இந்த எண்ணம் அவருக்குஏற்படக் கூடாது. ‘இந்தியா ஒன்று‘ என்றால், ‘இந்தியாவின் தொழில்கள் எங்கு இருந்தாலும் ஒன்றுதான்‘ என்ற எண்ணம் இருக்க வேண்டும். ஆனால், ‘இங்கு இரும்புத் தொழிற்சாலை வேண்டும்‘ என்று அமைச்சர் கேட்டதைப் பார்க்கிறோம். இது எப்படி ‘இந்திய ஒருமைப்பாட்டைக் குறிக்கும்?

நிதியமைச்சர் சுப்பிரமணியம், ‘இந்தியாவுக்கு‘ என்று இரைந்து கேட்டுவிட்ட மெல்ல, ‘நமக்கு என்ன?‘ என்று கேட்டுவிட்டுத்தான் வருகிறார்.

சிலபேர். அரசியலை மிக நுணுக்கமானதாக எண்ணிக்கொண்டு இந்தியாவிலே இருக்கலாம். ஆனால் நமக்கு எல்லா அதிகாரங்களும் இருக்க வேண்டும்‘ என்கிறார்கள். பைத்தியக்காரர்களா வடவர்கள்? அதிகாரத்தையெல்லாம் கொடுத்து விட்டால், அவர்கள் ஏன் ஒன்றாக இருப்பதை ஒத்துக் கொள்ளப் போகிறார்கள்?

தென்னாட்டைச் சுரண்ட...

‘இந்தியா ஒன்றாக இருகக் வேண்டும்‘ என்று வடவர்கள் சொல்வது, தென்னாட்டைச் சுரண்ட. நம் நாட்டை ஆள. ஆகவே, அதிகாரத்தைக் கொடுத்துவிட்டு, ‘இந்தியா ஒன்றாக இருக்கலாம்‘ என்பது ‘பாகத்தைப் பிரித்துக் கொண்டு ஒரே வீட்டில் வாழலாம்‘ என்பதைப் போலத்தான். ‘திராவிட நாடு வேண்டாம். தமிழ்நாடு போதும். திராவிட நாட்டிற்கு ஆந்திரத்தில் உள்ளவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை கன்னடத்தில் ஆதரவில்லை. கேரளத்தில் கவனிக்க வில்லை. எனவே, தமிழ்நாட்டை மட்டும் நாங்கள் தனியாகக் பிரித்துக்கொள்கிறோம்‘ என்று கூறுபவர்களின் விவேகத்தைப் பாராட்டவிட்டாலும் வீரத்தையாவது நான் மதிக்கிறேன்.

காங்கிரசுக்காரர்களிடம் பணம் இருக்கிறது. நம்மிடத்திலே பண்பு இருக்கிறது. இன்றைக்கு நடத்திய ஊர்வலத்தைக் காங்கிரசுக்காரர் கள் நடத்தினால் ரூ.25000 செலவாகும். பணத்தை நம்பித்தான் அவர்கள் எதிலும் ஈடுபடுகிறார்கள். புதுவைக்குப் போய்விட்டுத் திரும்பும் சிலர், ‘செண்டு‘ போட்டக் கொண்டிருப்பார்கள். காரணம், உள்ள இருக்கிற நாற்றம் தெரியாமல் இருப்பதற்குத்தான்.

ஏமாற்றந்தான் மிஞ்சும்!

அதுபோல காங்கிரசுக்காரர்கள் நோட்டைக் காட்டுகிறார்கள். நோட்டு கொடுத்து ஓட்டு வாங்கலாம் என்று அவர்கள் நினைத்திருப்பார்களானால் ஏமாற்றந்தான் அடைவார்கள். ஏனென்றால், ‘அது என்ன நோட்டா – நல்ல நோட்டா, கோயம்புத்தூர் நோட்டா‘ என்று பொதுமக்கள் பயப்படுவார்கள். எனவே, வெள்ளிக் காசுகளாகத்தான் கொடுக்க வேண்டும். கொடுத்தால் என்ன செய்வது என்றால் கிடைத்தால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இப்போதே காங்கிரசுக்காரர்கள் கடந்த 3 மாதங்களாகத் தேர்தல் காரியத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். தேர்தல் காரியத்தில் அவர்களுக்கு இருக்கிற திறமை, ஆற்றல் நிச்சயம் நமக்கில்லை. இதனை ஒளிவு மறைவு இல்லாமல் ஒப்புக்கொள்ள வேண்டும்.

குனிந்து கேட்கிற சுபாவம் – நெளிந்து கேட்கிற சுபாவம் வளைந்து கேட்கிற சுபாவம் நமக்கில்லை. அந்த நாளிலிருந்து நமக்கு நிமிர்ந்து பழக்கம். ஆனால் நமக்கும் அந்தப் பழக்கம் வந்துவிட்டால் நிச்சயமாக நான் சொல்கிறேன். அவர்கள் எத்தனை இலட்சம் செலவிட்டாலும் வெற்றி நமக்குத்தான்.

தேர்தல் காலம் வரையில் காங்கிரசுக்காரர்கள் சிரித்துக் கொண்டே இருப்பார்கள். ‘மேல வீதியிலே எத்தனை ஓட்டு?‘ கேட்டால் அதிலே எத்தனை ஓட்டுக்கள் – எப்படி என்ற கணக்கு அவர்களுக்குத்தான் தெரியும். ஜனநாயகத்தில் நாம் ஈடுபட்டுவிட்ட பிறகு அதில் உள்ள நெளிவு சுளிவுகளிலெல்லாம் நாம் ஈடுபடத்தான் வேண்டும்.

இறுமாப்புத்தான் காரணம்

இந்தத் தடவை காங்கிரசை முறியடிக்காவிட்டால் அடுத்த 15 ஆண்டுகளுக்குக் காங்கிரசை வீழ்த்த முடியாது. எங்களைத் தவிர வேறு யார் ஆளமுடியும்? என்று அவர்கள் கேட்கிறார்கள். பதினான்கு ஆண்டுகள் அவர்களை ஆளவிட்டு பயன் அவர்களுக்கு இவ்வளவு இறுமாப்பு வந்துவிட்டது. 150 ஆண்டுகள் வெள்ளைக்காரனை ஆளவிட்டதற்குப் பிறகு அவர்களுக்கு இருந்த இறுமாப்பு இவர்களுக்கு 15 ஆண்டகளில் இருக்கிறது. இருக்கின்ற ஆச்சரியமெல்லாம் ‘இவர்களும் ஆளுகிறார்கள்‘ என்பது தவிர. ஆளுவதற்கு வேறு யாருமில்லை என்பதல்ல.

கேரளத்தில் ஒரு தடவை காங்கிரஸ் ஆண்டது. அடுத்து பி.சோ. ஆண்டது. அதன் பிறகு கம்யூனிஸ்டுகள் ஆண்டார்கள். இன்று மீண்டும் காங்கிரசுக்காரர்கள் ஆளுகிறார்கள். அங்குள்ள பொதுமக்களுக்கு ‘யார் ஆட்சி தேவலை‘ என்று இன்று எடைபோட்டுப் பார்க்க முடியும். ஆனால் இங்கே எடைபோட்டுப் பார்க்க முடியும். ஆனால் இங்கே 14 ஆண்டுகளாக இவர்களே அமர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
மேட்டுர் அணையைவிட இவர்கள் என் சாதித்து விட்டார்கள்? கோலார் தங்கச் சுரங்கத்தைவிட என்ன செய்துவிட்டார்கள்?

எடுத்தேன் கவிழ்த்தேன் என்பதா?

இன்னும் 10. 15 ஆண்டு காலத்திற்கு இவர்களை ஆள அனுமதித்தால் சுப்பிரமணியம் குடும்பமே ஆளவேண்டும். லூர்தம்மாள் குடுமப்மே ஆளவேண்டும் என்பார்கள்.

மக்களாட்சி முறை வந்தபிறகு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சியை மாற்றுகின்ற உரிமை இருக்கின்றபோது, ‘எங்களைத் தவிர வேறு யார் ஆளமுடியும்‘? என்று எடுத்தேன் கவிழ்த்தேன்‘ என்றா பேசுவது?

இவர்கள் எந்தக் கட்சிக்காரர்களைத்தான் ஒப்புக் கொள்கிறார்கள்? கம்யூனிஸ்ட்டா – அது ரஷ்யாவுக்கு வால் பிடிக்கும் கட்சி. பி.சோ.வா. அது கேரளத்தில் பரவாயில்லை. மற்ற இடங்களில் மிக மோசம். சோஷலிஸ்டு கட்சியா? அதுவும் சரியில்லை. ஆச்சாரியார் கட்சியா? படுமோசம் என்றுதானே சொல்கிறார்கள்? முன்னேற்றக் கழகத்தைப் பற்றிக் கேளுங்கள் அதுவா... கட்சியா? என்றுதான் இழுப்பார்கள்.

இப்படி எல்லாக் கட்சிகளையும் இழித்துப் பேசி, தான் தான் எல்லாவற்றிற்கும் என்ற சர்வாதிகார எண்ணம் படைத்திருக்கிறார்கள். எனவே, அதனை வீழ்த்துவதற்கும், திராவிட நாட்டைப் பெறுவதற்கும் பெறமுடியும் என்று காட்டுவதற்கும் வருகின்ற பொதுத்தேர்தலில் கழகத்திற்கு ஆதரவு தாருங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

(நம்நாடு - 1.11.61)