அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


அடக்கமும் பொறுமையும் அவசியம் தேவை

கழகத் தோழர்களுக்கு அண்ணா தரும் அறிவுரை

14-4-60இல் நடைபெற்ற சென்னை 2ஆவது வட்டக் கே.வி.கே.சாமி பாசறை இரண்டாவது ஆண்டு நிறைவு விழாப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அண்ணா அவர்கள் ஆற்றிய உரை இங்குத் தரப்படுகிறது.

மறைந்த மாவீரன் பெயரால் அமைக்கப்பட்டிருக்கிற இந்த மன்றத்தின் ஆண்டுவிழாக் கூட்டத்தில் நானும் கலந்து கொள்ளுகிற ஒரு வாய்ப்பளித்தற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வட்டாரத்தில் இப்படிப்பட்டி துணைக் கழகங்களைத் துவக்கித் திராவிட முன்னேற்றக் கழகக் கருத்துக்கள் எல்லோரிடத்திலும் பரவுவதற்காக இதுபோன்ற கூட்டங்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். நமது கழகக் கருத்துக்களைக் கேட்க வேண்டுமென்று பெருந்திரளாக – ஏராளமான – அதிலும் குறிப்பாகவும், சிறப்பாகவும், நிறைய தாய்மார்கள் இதிலே கலந்து கொண்டிருப்பதைக் கண்டு நான் மெத்த மகிழ்ச்சியடைகிறேன். தாய்மார்களுக்கெல்லாம் நமது கருத்துக்களைக் கேட்க வேண்டுமென்று ஆர்வம் ஏற்பட்டிருப்பது உண்மையிலேயே வரவேற்கத்தக்கதாகும்.

திட்டுவதால்தான் நமக்குப் பெருமை

நல்ல வீணையைச் செய்து அதிலே தேவையில்லாத பாட்டை வாசித்துக் காட்டுவது போல, மாற்றுக் கட்சிக்காரர்கள் நம்மைத் திட்டுவதைப் பற்றி இந்த மேடையில் பேசாமல் இருந்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். அவர்கள் திட்டுவதை நான் சகித்துக் கொள்கிறேன் என்பது மட்டுமல்ல. நான் சகித்துக் கொள்வதால் தான் இயக்கத்திற்குப் பெருமை இருக்கிறது என்று மனதார நம்புகிறேன். இன்று நாட்டில் மிக நம்பகமாக நான் வளர்த்துக் கொண்டு வருகிற பண்பாடு இதுதான். இதுவரை வளர்ந்து வந்தது கெட்டுவிடாதபடி நண்பர்களெல்லாம் பார்த்துக் கொள்ளவேண்டுமே தவிர மாற்றார்கள் இப்படித் திட்டுகிறார்கள் என்பதனால் நீங்கள் என்ன செய்ய எண்ணுகிறீர்கள் என்றால் நாங்களும் அவர்களைத் தாறுமாறாகப் பேசிவிட்டு, அண்ணா உங்களை அவர்கள் திட்டினார்கள், அதனால் நாங்களும் இப்படித் திட்டினோம் என்று சொல்வதைக் கேட்டு நான் உங்களையே சந்தேகப்படுகிறேன்.

நமக்கு வேண்டிய ஒரு நண்பர் இரயிலில் வருகிறார் என்றால் நாம் அந்த நண்பருக்க உதவி செய்ய வேண்டுமென்று கருதிப் பக்கத்தில் இருக்கும் வேறு ஒருவரைப் பார்த்து “ஐயா, கொஞ்சம் இடம் கொடுங்கள்“ என்று கேட்போம். அவர் இடம் கொடுக்க முடியாது என்று சொன்னவுடன் இவர் யார் தெரியுமா? மிகவும் பெரிய மனிதர், எம்.ஏ., படித்தவர் என்று சொன்னதும் அவர் யாராக இருந்தால் எனக்கென்ன? இங்கு இடம் இல்லை போ என்று சொல்லுவார்.

இதைப் போலத்தான், அவர்கள் பேச்சுக்கு மறுப்பு சொன்னால் திட்டுவது நின்றுவிடாது. ஆகையினால்தான் – நண்பர் கல்யாணசுந்தரம் சொன்னதைப்போல – நமக்கு அடக்க உணர்ச்சியும் பொறுமை உணர்ச்சியும் இருக்க வேண்டுமே தவிர, பதில் சொல்லிக் கொண்டிருக்கக்கூடாது. அதனாலே நாம் ஆத்திரமடையக்கூடாது.

போராட்டம் என்றதும் பயந்துவிட்டீர்களா?

இப்பொழுது நமது நண்பர் ஒருவரே என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார் – சர்வக் கட்சிக் கூட்டத்தில் சர்க்கரை ஆலைத் தொழிலாளர் பிரச்சினை பற்றிப் பேச வேண்டிய கூட்டத்தில் நீங்களும் கருணாநிதியும் கலந்து கொள்ளாதது ஏன்? போராட்டம் என்றதும் பயந்து விட்டீர்களா? இது பற்றித் தங்கள் கருத்தென்ன? என்று! இந்தக் கேள்வி கேட்ட நண்பர் கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால் பேட்டைவாய்த்தலைப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று நண்பர் கல்யாணசுந்தரமும் கருணாநிதியும் சேர்ந்துவிடும் அறிக்கை நாளை வெளிவருவதைப் பார்த்திருக்கலாம்.

இதைப் போலத்தான் மாற்றுக்கட்சிக்காரர்கள் திட்டுவதை ஒரு நாள் – இரண்டு நாள் பொறுத்துக் கொண்டிருந்தால் போதும் பிறகு அவர்களுக்கே விளங்கிவிடும்.

இப்பொழுது அவர்கள் நாடகம் போட்டுத் திட்டுகிறார்கள் என்று நண்பர்கள் சொன்னார்கள். அதிலேகூட என்ன திட்டினார்கள்? நீங்கள் அறிஞர் என்று மட்டும் சொல்லுகிறீர்கள்? அவர்கள் அறிஞர் அடுக்குமொழியார் என்ற சொல்லுகிறார்கள். இதிலே ஒன்றும் தவறு இல்லை. அதிலே என்னைத் தாக்குகிறார்கள் என்று நீங்கள் கருதுவீர்களேயானால் அது தவறு. ஆகையினால் காங்கிரசு நண்பர்கள் திட்டுகிறார்கள் என்பதைப் பற்றி நாம் கவலைப்படாமல் இருந்தால்தான் கழகம் வளரும்.

அவர்கள் என்னதான் பேசுவார்கள்?

நீங்கள் சென்னையில் பஸ்கள் ஓடுவதைப் பார்க்கிறீர்கள். அதில் பெட்ரோல் எண்ணெயில் ஓடும் வண்டியில் சிறிது புகை குறைவாக வரும். டீசல் எண்ணெயில் ஓடும் காரில் புகை அதிகமாக வரும். அதிலும் உள்ளே இருக்கிற சாமான் கெட்டுவிட்டால், புகை அதிகமாகத்தான் வரும். உள்ளே இருக்கும் சாமான்கள் பழுதுபடாமல் இருந்தால் புகை அதிகம் வராது.

இதைப் போல் வண்டியில் இருக்கும் பழுதைப் பார்க்காமல் டீசலுக்குப் பதில் பெட்ரோல் மாற்றாமல், அய்யய்யோ! புகை அதிகமாக வருகிறதே! என்று ஊரெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால் புகை நின்றாவிடும்? ஆகவே அவர்கள் திட்டுகிறார்கள் என்று நாங்களும் திட்டினால், மறுநாள் அவர்கள் மேடை போட்டு இன்றம் அதிகமாகத்தான் திட்டுவார்கள்.

நானும் எண்ணிப் பார்த்தேன் – ஏன் இவர்கள் இப்படித் திட்டுகிறார்கள்? என்று. எனக்கே ஒரு சமாதானம் கிடைத்தது, வேறு என்னதான் அவர்கள் பேசுவார்கள்.

நமக்கு இருக்கும் பிரச்சினைகளைத்தான் நாம் கவித்தாக வேண்டும். நாடு பிரிய வேண்டும் எனக்கோரி வருகிறோம். வடக்கு வாழ்கிறது – தெற்கு தேய்கிறது, எல்லாத் தொழிலையும் வடக்கே நிறுவுகிறார்கள் என்பதையும் தெற்கே இருக்கும் தொழிற் சாலைகளையும் ஒப்பிட்டுக் காட்டி, தெற்கில் தொழில் தேய்ந்து கொண்டிருப்பதால் உண்மையில் நாமும் வாழுவதற்கு வழியிருக்கிறதா? அப்படியானால் அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதையெல்லாம் நாம் மக்களுக்குக் சொல்ல வேண்டியிருக்கிறது.

இலட்சியத்தில் ஒரு படி முன்னேறலாம்

ஆனால் அவர்களிடத்தில் என்ன விஷயம் இருக்கிறது? இராமாயணத்தைப் பற்றித் தெரியாதவனிடம், இராமனின் பெருமையைப் பற்றி பேசச் சொன்னால் அவன் என்ன செய்வான்? பாரதத்தைப் படிக்காதவனிடம் பாஞ்சாலிக்கு எத்தனை கணவன்? என்று கேட்டால் அவன் என்ன சொல்லுவான்? அதைப் போல காங்கிரசுக்காரர்களுக்குப் பேசுவதற்கு விஷயம் இல்லை. கையில் சரக்கு இல்லாத காரணத்தால் அவர்கள் இப்படிப் பேசுகிறார்கள். அவர்களுக்குத் திட்டம் இருந்தால் பிரச்சினை வேறுவிதமாக இருக்கும்.

நமது நண்பர்கள் பேசும்போது, சென்னையில் மற்றக் கூட்டங்களில் சொல்லாத ஒரு பொதுப் பிரச்சினையை இந்த இடத்தில் எடுத்துச் சொன்னார்கள். இதுபோன்ற கருத்துக்களை எடுத்து நாளுக்கு நாள், மணிக்கு மணி, ஆளுக்கு ஆள் சொல்ல வேண்டியிருக்கிறது. பேசுவதற்கு நமக்கு விஷயம் இருப்பதால் நாம் திட்டிப் பேச வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்குப் பேசுவதற்கு விஷயம் இல்லாததால் மேடை ஏறியதும் அண்ணாதுரை இப்படி, சம்பத் இப்படி, அன்பழகன் எப்படி? என்று ஏதாவது ஆட்களைப் பற்றித்தான் பேசி முடிக்கிறார்களே தவிர, பிரச்சினையைப் பேசவில்லை, என்று நீங்கள் கோபித்துக் கொள்வதில் பயனில்லை. எனவே நான் வருகிற மேடையிலாவது நமது நண்பர்கள், மாற்றார்கள் ஏசுகிறார்கள் என்று சொல்ல வேண்டாமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து அந்தப் பழக்கத்தை விட்டுவிடுங்கள். அவர்கள் திட்டினால் நீங்கள் கேட்டுக் கொண்டு இருந்துவிட்டு ஆகா எவ்வளளவு நன்றாகத் திட்டுகிறார்கள்? இவர்களெல்லாம் நம்மிடத்தில் வந்தால் எவ்வளவு சாமர்த்தியமாக பேசுக்கூடும்? என்று ஒவ்வொருவரும் எண்ண வேண்டும். அப்படி நீங்கள் எண்ணுவீர்களேயானால், நாம் நமது இலட்சியத்தில் ஒருபடி முன்னேறுகிறோம் என்று பொருள்.

கொடுத்தால் வாங்கிக் கொள்!

நான் இன்னுமொரு நிகழ்ச்சியை உங்களுக்கு நினைவுட்ட விரும்புகிறேன்? திருப்பூர் என்று கருதுகிறேன் – பெரியார் அவர்கள் சுயமரியாதைக் கருத்தோடு பொதுவுடைமைப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நேரம் மேடையில் பெரியார் அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பக்கத்தில் அவருடைய துணைவியார் உட்கார்ந்திருக்கிறார்கள். அந்தக் கூட்டத்திலிருந்த ஒரு குறும்புக்கார வாலிபன் தைரியமாகக் கேட்டான். என்ன, எல்லாம் பொதுவுடைமை என்று பேசுகிறீர்களே, அப்படியானால் உங்கள் பக்கத்தில் இருப்பவர்களும் பொதுவுடைமையா? என்று கேட்டான். அந்தக் கேள்வியை மைக்கின் முன்னால் படித்துக்காட்டிவிட்டு அவனுக்குப் பதில் சொன்னார்கள். வந்து பார், வந்தால் அழைத்துப் போ, கொடுத்தால் வாங்கிக் கொள் என்றார்கள். அந்தப் பாசறையில் வளர்ந்தவன் நான். அதனால் என் உடம்பு மரத்துவிட்டது. திட்டிப் பேசவேண்டுமென்று ஆசைப்படுபவர்கள், என்னைத் திட்டிப் பழக்கப்படுத்திக் கொள்ளட்டும், அதற்கு நான் அனுமதியளிக்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் நாட்டிலே இன்றைய தினம் நமக்கென்று ஒரு தனியரசு வேண்டுமென்று கேட்கிறது. தங்களை இன்றைய தினம் பிடித்துக் கொண்டிருக்கிற வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய இவைகள் அத்தனையும் நீக்கப்படவேண்டும். இவைகளுக்கென்று ஒரு தனியரசு ஏற்படவேண்டுமென்ற மூலாதாரக் கொள்கையைத்தான் நாட்டிலே இன்றையதினம் திராவிட முன்னேற்றக் கழகம் பரப்புகிறது.

இந்தியா ஒரு நாடு அல்ல!

காங்கிரசுக் கட்சியைக் கண்டிக்கின்ற கட்சியினர் கூட நம்முடைய கழகத்தின் பேரில் சில வேலைகளில் பாய்கிறார்கள், தாக்குகிறார்கள் என்றால் அதற்கு முக்கியமான காரணம், நம்முடைய கவனம் வேறு எந்தக் கட்சியும் சொல்லாத அரிய திட்டத்தை அதனுடைய இலட்சியமாக வைத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான். காங்கிரசுக் கட்சிக்கும், இந்த நாட்டிலுள்ள மற்றும் பல கட்சிகளுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் அடிப்படையில் என்ன பேதம் இருக்கிறது என்றால், மற்ற எல்லாக் கட்சியினரும் இந்தியா ஒரே நாடு என்று வாதாடுகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகம்தான் இந்தியா ஒரு நாடு அல்ல. இது பல நாடுகள் கொண்ட ஒரு துணைக் கண்டம் என்று சொல்லுவது.

நாங்கள் சொல்லுவதையும் காங்கிரசுக்காரர்கள் சொல்லுவதையும் ஆராய்ந்து பார்த்துப் பொதுமக்கள் ஒரு முடிவுக்கு வரவேண்டும். அதை விட்டுவிட்டு நாங்கள் ஒரு மூலையில் இந்தியா ஒரு நாடு அல்லவென்று பேசுவதையும், மற்றொரு மூலையில் காங்கிரசுக்காரர்கள் இந்தியா ஒருநாடுதான் என்று பேசுவதையும் கேட்டுவிட்டு இவனுக்குத் தெரிந்ததை இவன் பேசுகிறான், அவனக்குத் தெரிந்ததை அவன் பேசுகிறான் என்று நினைக்கிற அலட்சியப் போக்கு மிக விரைவில் நீக்கப்படவேண்டும். ஆகையினால்தான், திராவிட முன்னேற்றக் கழகம் ஒவ்வொரு நாளும் பொதுமக்களைச் சந்திக்கிறது.

நாம் கேட்கும் திராவிடநாடு திராவிடருக்கே என்பதற்கு அண்மையில் முதலமைச்சர் காமராசர் ஒரு சமாதானத்தைச் சொன்னார். அது என்ன சமாதானம் என்றால், திராவிடநாடு என்று பேசுகிறார்களே இது இவர்கள் சொந்தச் சரக்கல்ல. பெரியார் இராமசாமி சொன்னதைத்தான் இவர்கள் இப்பொழுது சொல்லுகிறார்கள், என்றார். ஆமாம், இப்படிச் சொல்வதில் நான் வெட்கப்படவில்லை. அனைவரும் சிந்தித்துப் பார்த்து ஏற்படுத்திய திட்டம்தான் திராவிடநாடு திராவிடருக்கே என்பது. இந்தத் திட்டம் யாரிடத்தில் இருந்து வந்தது, இப்பொழுது யாரால் பேசப்படுகிறது என்பது பிரச்சனையல்ல.

ஆபத்து இருக்கிறது – யாருக்கு?

என்னுடைய நண்பர் ஒருவர் டெல்லிப் பத்திரிகை ஒன்று எழுதியிருப்பதைச் சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் நமது கட்சி வளருவது ஆபத்து என்று அந்தப் பத்திரிகை எழுதியிருப்பதைப் படித்துக் காட்டினார். அந்தப் பத்திரிகை குறிப்பிட்டது போல் ஆபத்து இருக்கிறது. நான் என்னுடைய பேச்சில் அதைத்தான் விளக்க விரும்புகிறேன். நிச்சயமாக ஆபத்து இருக்கிறது. ஆனால் யாருக்கு ஆபத்து?

தூங்கிக் கொண்டிருக்கும் வீட்டுக்காரர்களைப் பார்த்தால் திருடன் சந்தோஷப்படுவான். ஆனால் 12 அல்லது 1 மணி வரையில் அவர்கள் விழித்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் பக்கத்தில் இருந்து கேட்டுக் கொண்டிருக்கும் கள்வன், இந்தப் பாவிகளுக்கு இன்னுமா தூக்கம் வரவில்லை? என்று வாய்க்கு வராத வார்த்தைகளையெல்லாம் சொல்லித் திட்டிக் கொண்டிருப்பான். அவன் தி்ட்டுவதற்குக் காரணம், அவனுக்குத் திருடுவதற்கு வாய்ப்பு இல்லையே என்பதுதான்.

அந்த வகையில், இதிலே ஆபத்து இருக்கிறது என்று சொல்லுகிறார்கள் என்றால் யாருக்கு ஆபத்து இருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும். இதைத்தான் நான் எடுத்துச் சொல்ல விரும்புகிறேன்.

நிச்சயமாக ஆபத்து இருக்கிறது. இந்தி ஆதிக்கக்காரர்களுக்கு ஆபத்து இருக்கிறது. ஏக இந்தியா என்று பேசித் தமிழகத்தை வடநாட்டினுடைய இலாப வேட்டைக்காடாக ஆக்கிக் கொண்டிருப்பவர்களுக்கு ஆபத்து இருக்கிறது. வட்டிக் கடைக்காரர்களுக்கும், மார்வாடிகளுக்கும் கோமான்களுக்கும், பூமான்களுக்கும், கனதனவான்களுக்கும் நிச்சயமாக ஆபத்து இருக்கிறது.

ஒருவேளைச் சோற்றுக்குத் திண்டாட்டம்!

ஆனால், இங்கே அமர்ந்திருக்கிற நீங்களெல்லாம் வட்டிக்கடை வைத்திருக்கிறீர்களா? நீங்கள் நூறு ரூபாய் நோட்டை மொத்தமாக பார்த்திருக்கமாட்டீர்கள். அப்படிப்பட்டவர்களை நம்முடைய கூட்டத்தில் நான் பார்க்கவில்லை. இங்கே உட்கார்ந்திருப்பவர்கள் சிலர் நாளைக் காலையில் அரிவாள் எடுக்கக்கூடும். இன்னும் சிலர் கோடாரி எடுக்கக்கூடும். மற்றும் சிலர் தராசு பிடிக்கக்கூடும். அதைவிட மிகச் சிலர் அலுவலகங்களில் வேலை பார்க்கக்கூடும். இதில் யாரும் மார்வாடிகளை போல் வட்டிக்கடை வைத்திருப்பவர்களல்ல.

நான் இங்கே வந்திருக்கும் தாய்மார்களையும் அவர்கள் பெற்றெடுத்த செல்வங்களையும் உற்றுப் பார்க்கிறேன். அந்தத் தாய்மார்களின் உடலில் சிறு குண்டுமணி அளவுக்குக்கூடத் தங்கம் இல்லை. அந்தக் குழந்தைகள் சிரிக்கும்போது தெரியும் பல்வரிசைதான் அவர்களுக்கு முத்தாரம். இந்த அளவிலே நம்முடைய தாய்மார்கள் இருக்கிறார்கள்.

நமக்கு இருக்க இடம் இல்லை, இரண்டு வேளை வயிராற சாப்பிடுவதற்கு உணவு இல்லை. இந்த நிலையில் இருப்பதற்கு இவர்கள் யாருக்கு என்ன கெடுதல் செய்தார்கள். இவர்கள் எந்தத் தெய்வத்தைக் கும்பிடாமல் இருந்தார்கள்? சுவரில் சினிமாப்படம் ஒட்டியிருந்தால் கூட அதையும் கடவுள் என்று நம்பிக் கன்னத்தில் போட்டுக் கொள்ளுபவர்கள் இந்த 1960-லும் இருக்கிறார்கள். இருந்தும் உழைக்காமல் இருக்கிறார்களா என்றால் இல்லையே. இப்படிப்பட்ட உழைப்பாளர் கூட்டம் நம்முடைய நாட்டிலே ஒரு வேளைச் சோற்றுக்குத் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அதிகாரம் இல்லாத அமைச்சர்கள்

நமது நாட்டில் வாலிபர்கள் நல்ல திடமுடன் இருக்கிறார்களா என்றால் இல்லை. இந்த அளவுக்கு தேய்ந்து வருகிறார்கள், இதைத்தான் தென்னாடு தேய்கிறது என்று நாம் சொல்லும்போது கண்ணுக்குத் தெரிகிற உண்மையை எடுத்துச் சொல்லுகிறோம். இதைப் போக்க ஒரு நல்ல அரசு ஏற்பட்டால் தான் நமக்கு வாழ்வு கிடைக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கைதான் எங்களை நாட்டைப் பற்பி் பேச வைக்கிறது.

இவையெல்லாம் கிடைப்பதற்கான அதிகாரம் இன்ற நம்மிடத்தில் இல்லை. நமது நாடு நமதாகுமானால் இந்த அதிகாரமெல்லாம் அன்றைய தினம் நம்மிடத்தில் இருக்கும்.

இங்கே இருக்கிற அமைச்சர்கள் எவ்வளவு ஆற்றல் உள்ளவர்களாக இருந்தாலும் இங்கே தேவைப்படுகிற எந்தக் காரியத்தையும் தாங்களாகவே செய்வதற்கு இவர்களுக்கு அதிகாரம் இல்லை. மாநிலத்தில் ஒரு உணவு அமைச்சர் இருக்கிறார். ஆனால் உணவு வேண்டுமென்றால் மத்தியச் சர்க்காரில் இருக்கும் உணவு அமைச்சரிடம் போய்தான் உத்தரவு கேட்டுக் கொண்டு வர வேண்டுமே தவிர இவருக்கு அதற்கென எந்த அதிகாரமும் இல்லை.

இங்கே ஒரு தொழில் அமைச்சர் இருக்கிறார். இந்த நாட்டு மக்களுக்கு ஒரு தொழிற்சாலை கட்டுங்கள் என்று நாம் கேட்டால் இவர் வடக்கே போய், அங்கே இருக்கும் தொழிலமைச்சரைப் பார்த்துத் தெற்கே ஒரு தொழிற்சாலை கட்டுங்கள் என்று கேட்க வேண்டியவராக இருக்கிறார்.

வேறு நன்மை ஏதும் இல்லை!

இப்படிப்பட்ட மானக்கேடான நிலைமையில் இப்படிப் பட்ட தன்மானமற்ற ஆட்சி தங்களுக்கு வேண்டுமா என்று காங்கிரசுக்காரர்கள் சிந்தித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். வீணே எங்கள் பேரில் கோபித்துக் கொள்வதால் மனதிலே இருந்த எரிச்சல் வேண்டுமானால் தணியலாம் – வேறு நன்மை ஒன்றும் இல்லை.

நான் இந்த முறை சட்டசபையில் பேசியதற்குத் தொழில் அமைச்சர் வெங்கடராமன் அவர்கள் மிக்க அரசியல் பண்பாட்டோடு பதில் சொன்னார். அண்ணாதுரை போன்றவர்கள் தமிழ்நாடு வேண்டுமென்றும், திராவிடநாடு வேண்டுமென்றும் கேட்கிறார்கள். அதிலே சில நன்மையும் உண்டு. தீமையும் உண்டு, நாங்கள் கேடுகளைச் சொன்னோம் அவர் நன்மையைச் சொல்லுகிறார் என்று அழகாக வாதாடினார்.

தனியரசு கேட்கிற நாம் என்ன நன்மைகளைப் பெற விரும்புகிறோம்? இது வரையில் எந்தக் காங்கிரசு தலைவராவது நாம் காட்டும் புள்ளி விவரங்கள், குற்றம் குறைகள் உளதென்றும் எடுத்துக்காட்டுகிற வரலாற்றுச் சான்றுககை மறுத்தும் பேசியிருக்கிறார்களா என்றால் இல்லை.

அதைப்போலவே, இந்தியாவோடு ஒன்றாக இருப்பதால் நமக்கு என்ன நன்மைகள் இருக்கின்றன என்பதையும் அவர்கள் விளக்கிச் சொல்லவில்லை.

இயற்கை வளத்தைப் பொறுத்துத்தான் திட்டம்

ஆகையால், இந்தியாவோடு தமிழ்நாடு சேர்ந்திருப்பதால் என்ன இலாபம்? பிரிந்து வந்துவிட்டால் என்ன நட்டம்? என்று எங்களை கேட்டால் நாங்கள் தெளிவாகச் சொல்லுகிறோம்.

இந்தியாவிலிருந்து விடுபட்டு மத்திய அரசிலிருந்து பிரிந்து ஒரு தனி நாடாக நாம் விளங்கினால் நம்முடைய வேலை என்ன என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க முடியும். எதை எப்படி எப்படிச் செய்து கொள்வது என்று திட்டம் போட்டுக் கொள்ளமுடியும்.

எதிர்வீட்டில் சுடும் பலகார வாசனையைப் பார்த்துக் கொண்டிருப்பதால் என்ன இலாபம். அதைப் போல, டெல்லியில் அதிகாரத்தைக் கொடுத்துவிட்டு நமக்குப் பதில் சொல்லுவதில் இவர்கள் திறமையாக இருக்கிறார்கள்.

இப்படிப் பேசிவிட்டால் மட்டும் காரியம் நடக்காது நமக்கென்று ஒரு திட்டம் வேண்டும். அப்படிப்பட்ட திட்டத்தை வகுத்துக் கொள்ளவேண்டுமானால் இந்தியாவில் இப்பொழுது இருக்கிற அரசியல் சட்டம் இதற்கு இடம் கொடுக்காது.

உதாரணத்துக்கு நான் சொல்லுவேன் – நான் குட்டை எனது நண்பர் நெட்டை என்ற சிலர் பேசுவதைப் பார்க்கிறோம். அதேபோல, ஆட்களைப் போலத்தான் நாடு. அந்தந்த நாடுகளுக்கு இருக்கிற இயற்கை வளங்களைப் பொறுத்துத்தான் திட்டங்கள் இருக்கமுடியும்.

நாம் திட்டம் தீட்டினால், நம்முடைய நாட்டின் மூன்று பக்கங்களிலும் உள்ள கடற்படையை நம்முடைய நாட்டுக்குச் சொந்தமாக்கிக் கொள்ளமுடியும்.

நம்முடைய மாநிலத்தில்தான் நல்ல காடுகள் இருக்கின்றன. அதில் இருந்த மயில்களின் தோகை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன.

பினாங்கிற்குப் போவதா பெருமை?

ரோம்நகரிலே, கிரேக்க நாட்டிலே அன்று நாம் சீரும் சிறப்புமாக வாணிபம் நடத்தனோம்.

கோவலனும், மாதவியும் அணிந்திருந்த முத்தாரங்கள் சந்தனம், அகில், தேக்கு இவையெல்லாம் இன்றும் இருக்கின்றன.

இப்படிப்பட்ட பெருமையுடன் வாழ்ந்த தமிழப் பெருங்குடிமக்கள் சாக்கடைப் பக்கத்தில் இன்றைய தினம் வாழ்கின்ற நிலையில் இருக்கிறோம்.

இன்று பிழைப்புக்கு வழியில்லாமல், சிலோனுக்கும், பினாங்கிற்கும் நாம் செல்லுகிறோம்.

நமது குழந்தைகள் இளமையில் பொலிவோடு இருக்கின்றன. ஆனால் ஒரு பத்து அல்லது பனிரெண்டு வயதானவுடன் பார்த்தால் உருமாறியிருக்கின்ற நிலையைக் காணுகின்றோம்.

ஐந்தாண்டுத் திட்டங்களா நமக்கு வழி?

இப்படிப்பட்ட நிலைமைகளையெல்லாம் போக்க நாம் தனிநாடு வேண்டுமென்கிறோம். காங்கிரசுக்காரர்கள், இவற்றினைப் போக்க வழி ஐந்தாண்டுத் திட்டம் என்கிறார்கள். அப்படியும் இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களை நாம் பார்த்தோம்.

முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தார்கள். அடுத்த ஐந்தாண்டுத் திட்டத்தில் 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டார்கள். இப்பொழுது மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்க இருக்கிறார்கள்.

இந்தக் கேடுகளை நாம் எடுத்துச் சொல்லி செலவிட்டார்கள். திட்டங்கள் நிறைவேற்றினார்கள், ஆனால், அத்தனைத் திட்டங்களும் வடக்கே ஏற்பட்டதே தவிர, தெற்கே இல்லை. நமக்கத் தொழிற்சாலைகள் இருந்தால் நம்முடைய மக்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கும். இந்தக் குடிசை வீடுகளையெல்லாம் மாடி வீடுகளாக மாற்றமுடியும்.

வருவாய் இருந்து விலைவாசிகள் கட்டுப்பட்டிருந்தால் நமது மக்களின் வாழ்க்கை தட்டுப்பாடு இல்லாமல் நடைபெறமுடியும்.

வசதி செய்கிறதா துரைத்தனம்?

எனவே, நாம் சொல்லும் இந்த இலட்சியம் தவறு என்று யாராவது வாதிடுவார்களானால், அவர்களைத் தமிழன் என்று யாரும் சொல்லமாட்டார்கள், தமிழன் என்று மட்டுமல்ல மனிதன் என்று கூட நான் சொல்லமாட்டேன்.

இங்குத் துரைத்தனம் எதற்கான இருக்கிறது? மக்களுக்கு வசதி செய்து தர, செய்து தருகிறதா துரைத்தனம்.

காட்டிலே மிருகங்கள் கிடைத்த உணவைத் தின்று, தூங்கி, சீரணித்து, விழித்து மறுபடியும் இரைதேடிக் கொண்டிருக்கின்றன. ஆனால் நாம் இருக்கிற நிலைமை அபப்டியல்ல, உழைக்கிறோம். நன்கு உழைப்பதற்காக மட்டுமல்ல மற்றவர்கள் வாழ்வுக்கு தன்னுடைய மனைவி, பெற்றோர்கள், குழந்தைகளுக்கு, வேலை செய்த நேரம் போக மிஞ்சியிருக்கின்ற நேரத்தில் உடலில் வலிவு இருக்கவேண்டும். அப்படிப்பட்ட வகையில் இன்றைய தினம் குடும்பத்தைச் சீராக நடத்திடத்தக்க அளவில் வசதி கிடைக்கவில்லை என்பதைக் காங்கிரசுக்காரக்ள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

நமக்குத் தொழில் வளரவேண்டும் வளருவதற்கு துரைத்தனம் வழி செய்யவேண்டும். அப்படிப்பட்ட ஒரு துரைத்தனம் வேண்டியது அவசியம், அது எது என்று நமக்குத் தெரியும். தெருவில் பால்காரன் வருகிறான் என்றால், வீட்டில் உள்ள நாய் குழந்தையிடம், பால் வாங்கி வா என்றுதான் சொல்லுவாள். ஆனால், அந்தக் குழந்தை, பாத்திரத்தை எடுத்துக் கொண்டுபோகாமல், பால்காரனிடம் சென்று, பால் கொடு என்ற கேட்டால் எப்படிப் பால் கிடைக்கும்? இதைப் போலத்தான் பாத்திரம் இல்லாத குழந்தையைப் போலத்தான் பாத்திரம் இல்லாத குழந்தையைப் போலத்தான் நமது அமைச்சர்கள் இருக்கிறார்கள். இப்படி இருந்தால் நாம் எப்படிப் பொருளாதாரத்தில் விடுதலை பெற முடியும்?

பாகிஸ்தானைக் கொடுத்தவர்கள்தான் இவர்கள்

திராவிடநாடு பிரிந்து இன்று இருக்கும் அமைச்சர்கள் வயது முதிர்ந்த நிலையில் தனது பேரன் பேத்தியிடம் பேசி்க் கொண்டிருக்கையில், அவர்கள் இப்பொழுது நடைபெறும் நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்டி, இப்படிப்பட்ட இழிகுணம் படைத்தவர்களா நீங்கள்? என்று பழிப்பர். காங்கிரசுக்காரக்ள் இப்படிப்பட்ட இழிபெயரை எடுக்க வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன்.

ஜின்னா, பாகிஸ்தான் கேட்ட நேரத்தில் இந்தக் காங்கிரசுக்காரக்ள் என்ன சொன்னார்கள்? முடியாது. பாகிஸ்தான் தரமாட்டோம் என்றார்கள். ஜின்னாவின் முயற்சி, முஸ்லீம்களின் ஒற்றுமை ஆகியவைகளைக் கண்டு எந்தெந்த இடம் உங்களுக்குத் தேவை? என்று காந்தியார் கேட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட இடம் வேண்டாம். டாக்டர் அம்பேத்கார் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கின்ற முஸ்லீம்கள் அதிகமாக வாழும் பகுதிகளைப் பிரித்துக் கொடுங்கள் என்று கேட்டுப் பிரித்துக் கொண்டு இன்று தனிநாடாகப் பாகிஸ்தான் வாழுகிறது.

பாகிஸ்தானைக் கொடுத்தவர்கள்தான் இந்தக் காங்கிரசுக்காரங்கள். இப்பொழுது பேசுகிறார்கள், நாங்கள் திராவிட நாடு தரமாட்டோம் என்று.

இல்லை என்று சொல்லக் காரணம் என்ன?

நாம் ஜின்னா அவர்களின் அளவுக்கு முஸ்லீம்கள் அளவுக்கு வளரமாட்டோம் என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தானைப் பிரித்துக் கொடுத்தவர்க்ளுக்குத் திராவிடநாடு இல்லை என்று சொல்லுவதற்கு என்ன நியாயம் இருக்கிறது? என்ன நீதி இருக்கிறது? என்ன அரசியல் காரணம் காட்டுகிறார்கள்?

ஒரு நாடு, தனி நாடாக வேண்டுமென்று கேட்கிறார்கள், என்றால், மூன்று விஷயங்களை அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இயற்கை வளம், மக்கள் தொகை, நிலப்பரப்பு இவைகள் நமது திராவிட நாட்டுக்குக் குறைவின்றி இருக்கின்றன. இதைப்புரிந்து கொள்ளாமல், நீங்கள் அமைதியாகக் கேட்டால் தரமாட்டோம். கேட்கிற முறையில் கேட்டால் கொடுக்க்றிாம் என்று எங்களைத் தூண்டுகிறார்கள். தி.மு.கழகத்தின் சக்திக்கு மீறிப் பலாத்காரத்தில் ஈடுபடுவதற்கு முன்னாலே கொஞ்சம் புத்திசாலித்தனமாகக் காங்கிரசுத் தலைவர்கள் நடந்து கொள்ளவேண்டும்.

நேரு பண்டிதரின் கொள்கையை நம்பி இருக்கும் காங்கிரசுத் தலைவர்கள் ஏமாற்றம் அடைய வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன்.

அரசு அமைப்பது வேறு – ஆளுவது வேறு

இதுபற்றி இரண்டு மூன்று விஷயங்களைக் கவனப்படுத்த விரும்புகிறேன். பம்பாய் மாநிலம் ஒன்றாக இருப்பதைப் பிரிக்க முடியாது என்றால் நேரு, மராட்டியர்கள் கொதித்தனர், இப்பொழுது பிரித்துவிட்டார் நேரு.

இந்தி விவகாரத்தில் இப்படித்தான் முதலில் பிடிவாதம் பிடித்தார். பிறகு எதிர்ப்பைக் கண்டு அஞ்சி, இப்பொழுது கொள்கையை மாற்றிக் கொண்டார். இப்படிப்பட்ட நேருவை நம்பித்தான் இங்கிருப்பவர்கள், தரமாட்டோம் திராவிடநாடு என்கிறார்கள். வீடு இல்லாதவர்களிடம் நாடு கேட்கிறோம். இதை நான் அடுக்குமொழிக்காகச் சொல்லவில்லை. இவர்கள் தங்களுடைய ஊழியர்களுக்கே, வீடு கட்டிக் கொடுக்காதவர்கள் இவர்களிடம் நாடு ஏது?

நாங்கள் எங்கள் மக்களைக் கூட்டி வைத்து உங்கள் நாட்டைக் கேளுங்கள் என்கிறோம். நாம் வாழ்ந்த சிறப்பை எடுத்துச் சொல்லி. நேருவிடம் திராவிடநாடு கேட்கச் சொல்லுகிறோம்.

நம்முடைய தோழர்கள் அரசு ஆளவேண்டுமென்று விரும்பவில்லை. நாங்கள் அரசு அமைக்க விரும்புகிறோம். அரசு ஆளுவது வேறு. அரசு அமைப்பது வேறு.

நமது அமைச்சர்கள் வாடகை வீட்டுக்காரர்கள்

வீட்டுக்குப் போகிறேன் என்று சொல்லுவதற்கும், என்னுடைய வீட்டிற்குப் போகிறேன் என்று சொல்லுவதற்கும் வித்தயாசம் இருக்கிறது. ஒருவன் வாடகை வீட்டில் குடி இருந்து இரவு பத்து மணிக்கு வந்தால் ஒரு தடவைக்குப் பத்து தடவை கதவைத் தட்ட வேண்டும். வீட்டின் முன்கட்டில் குடியிருப்பவன், “ஏனய்யா, உனக்கு வேறுவேலை இல்லையா? என்று கோபித்துக் கொள்ளுவான். ஆனால், சொந்த வீட்டில் குடியிருப்பவனாக இருந்தால், தனது வீடு கண்ணுக்குத் தெரிந்ததும், வயது முதிர்ந்த நிலையுடையவராக இருந்தாலும் அவர் உடம்பில் ஒரு புது தெம்பு இருக்கும். அவர் வீட்டில் பாசத்தோடும், உரிமையோடும், நுழைவார். சொந்த வீட்டில் வாழுகிறவர்கள்தான் எகிப்து, சைபரஸ், ஸ்வீடன், நார்வே, இதைப்போன்ற பல நாடுகள் ஆனால் நமது அமைச்சர்கள் வாடகை வீட்டில் இருப்பவர்கள்.

நாம் தனி ஆட்சி அமைத்து நடத்தினால், நம்முடைய இயற்கை வளத்தை மற்றவர்கள் சுரண்டாமல் இருந்தால் நாம் பிசியில்லாமல், பட்டினியல்லாமல், பேதமில்லாமல் வாழ்வதுதான் தனியாட்சி அமைத்து ஆள்வது என்று பொருள். இந்த வித்தியாசத்தை அருள் கூர்ந்து நிதியமைச்சர் ஒரு இரண்டு நிமிடம் எண்ணிப் பார்க்கவேண்டும்.

என்ன பொருள் இந்த நாட்டில் இல்லை?

இப்படி அமையுமானால், இங்குச் சமதர்ம அரசியலில் வாழ்வுக்கு வளம் இருக்குமா? என்று கேட்டால் இருக்கிறது என்று கூறிவோம். பூமிக்கு அடியில் உள்ள ஏராளமான வளங்கள் உங்களை வாழ்விக்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றன.

நிலக்கரி, இரும்பு, தோரியம், பெட்ரோல், தங்கள் இன்னும் என்ன பொருள் இந்த நாட்டில் இல்லை?

ஒரு நாடு தனி நாடாக வேண்டுமானால் என்னென்ன தகுதி அந்த நாட்டுக்கு இருக்கவேண்டும். அதையாவது சொல்லுங்கள்.

இப்படி நாங்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல், எங்களை அலட்சியப்படுத்துவீர்களானால் ஐக்கிய நாட்டுச் சபையில் நேரு அவமானப்படும் நாள் விரைவில் வரும்.

ஐக்கிய நாட்டுச் சபையில் நேருவைப் பார்த்து உங்கள் ஆட்சியின் கீழ் இருக்கும் தமிழக மக்களின் கோரிக்கையை ஏன் இதுவரை சொல்லவில்லை? நீங்கள் உங்கள் நாட்டில் குழப்பத்தை வைத்துக் கொண்டு, அவர்களின் நியாயத்தைப் புறக்கணித்து விட்டு, பிறநாட்டு நீதி, அநீதிகளைப் பற்றிப் பேச என்ன தகுதியிருக்கிறது? என்று கேட்கப்படும் நாள் விரைவில் வரும்.

ஆகவே, நான் உங்களையெல்லாம் கேட்டுக் கொள்வேன், திராவிட நாட்டுப் பிரிவினையைப் பலப்படுத்துங்கள் என்று. அதைப் பிறருக்கும் சொல்லுங்கள். விடுதலைப் பெற வேண்டும் என்பதை உறுதிப்படுத்துங்கள்.

(நம்நாடு - 16, 18, 19-4-60)