அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


அடக்கு முறை கண்டு அஞ்சோம்!

சைதைப் பொதுக்கூட்டத்தில் அண்ணா அன்பழைப்பு

“நாட்டுப் பிரிவினை கோருவோரை மூன்றாண்டு சிறையில் தள்ளும் வகையில் இயற்றப்பட்டுள்ள சட்டம் சட்டப்பூர்வமான சட்டமல்ல. அது அரசியல் சட்டத்துக்கு முரணானது என்று கருதுகிறேன். நான் ஒரு சட்ட நிபுணர் அல்லன், எனக்குச் சட்டத்தில் உள்ள சிக்கல்கள் தெரியாது. ஆனாலும், சாதாரணக் குடிமகன் என்ற முறையிலேயே எனக்கு இது புரிகிறது.

“இந்த சட்டமற்ற சட்டத்தை எதிர்த்து, ‘இச்சட்டம் செல்லாது‘ என்று வாதாட எனக்குக் கொஞ்சம் பணம் கிடைக்குமானால், நீங்கள் கொடுத்து உதவுவீர்களேயானால் நான் சுப்ரீம் கோர்ட்வரை போகலாம் என்றிருக்கிறேன்.

‘இந்தச் சட்டத்தை இப்போது பயன்படுத்துவார்கள் என்பதே சந்தேகம் தான்! ‘இப்போது இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, தி.மு.கழகத்தின் முக்கியத் தலைவர்களை பிடித்து உள்ளே போட்டுவிட்டால். நம் பெட்டி காலியாகவே கிடக்கும், கழகத்தவர் பெட்டியில் தான் ஓட்டுகள் நிரம்பும்‘ என்று ஓர் அமைச்சர் சொல்கிறாராம், இன்னொரு அமைச்சர், தேர்தலுக்கு முன்பே அவர்களைப் பிடித்து உள்ளே போட்டு விட வேண்டும்‘ என்று துடிக்கிறாராம்.

ஆசையிருந்தால் தாராளமாகச் செய்யட்டும்

“என்னையோ, நெடுஞ்செழியனையோ, அன்பழகனையோ, கருணாநிதியையோ, மதியழகனையோ, மனோகரனையோ இங்கே உள்ள அண்ணாமலையையோ வழக்கு மன்றத்தில் நிறுத்தித் தண்டனை அளித்துச் சிறையில் தள்ளுவார்களேயானால்,இங்கே இப்போது கூடியிருக்கும் மக்களைப்போல் 4 – 5 மடங்கு சிறைக்கு வந்து நிரம்பிவிடுவார்கள். அந்தக் காட்சியைப் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருந்தால், தாராளமாகச் செய்யட்டும்“ என்று அண்ணா அவர்கள் நேற்று மாலை சைதையில் நடந்த சென்னை 97வது வட்டம் கே.வி.கே. சாமி மன்றப் பொதுக் கூட்டத்தில் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டுவிட்டு, மேலும் பேசுகையில் சுட்டிக்காட்டியதாவது.

“வீ்ட்டிலே இருக்கும்போது மட்டும் நாங்கள் என்ன நிம்மதியாகவா இருக்கிறோம்? எங்கள் வீடுகளில் ஒரு பக்கம் மனைவியும் மற்றொரு பக்கம் குழந்தைகளும் இருந்து கொஞ்ச, ஒரு பக்கம் பழத்தட்டும் மற்றொரு பக்கம் பூத்தட்டும் அலங்கரிக்க, ரேடியோ பாட, அதைக் கேட்டுக் குழந்தைகள் ஆட – இப்படிப்பட்ட நிலையிலோ நாங்கள் வாழ்க்கை நடத்துகிறோம்? நாங்களெல்லாம் வீட்டை விட்டுப் புறப்படும் போது மனைவியைப் பார்த்து 4 விரல்களைக் காட்டிவிட்டுப் புறப்படுவோம். அப்படியென்றால், ‘திரும்பிவர 4 நாட்கள் ஆகும்‘ என்று பொருள். எங்களுக்கு வீட்டுக்கும் சிறைக்கும் வித்தியாசம் தெரியாது. எங்களைச் சிறையில் தள்ளுவதால் நாங்கள் ஓய்ந்து விடுவோம் என்று கருதுபவர்கள் நிச்சயம் ஏமாற்றம் அடைவார்கள்.

வாருங்கள் போகாலாம்

“எங்களுக்குச் சிறை வாழ்க்கை கிடைத்தால் ஒரு நாளைக்கு 4, 5 கூட்டங்கள் பேச வேண்டிய நிலையிலிருந்து ஓய்வு கிடைக்கும், மணியடித்தால் சோறு கிடைக்கும் வெளியிலேதான் என்ன வாழ்கிறது? நாற்றம் பிடித்த அரிசியைச் சாப்பிட்டு, உடல்நலம் கெட்டு, மருத்துவமனைக்குப் போனால் டாக்டர் இருக்கமாட்டார், டாக்டர் இருந்தால் மருந்து இருக்காது. இநத் நிலையிலிருப்பதை விட உள்ளே செல்வதே மேல். எங்களோடு நீங்களும்தான் வாருங்களேன் போகலாம். வெளியிலே நமக்கு வீடு என்ன வாழ்கிறது? மாளிகைபோல் சிறையைக் கட்டி வைத்திருக்கிறார்கள். அது நம்மையெல்லாம் வா, வா, என அழைக்கிறது. வாருங்கள் போகலாம்“.

அண்ணா அவர்கள் மேலும் பேசியதாவது-
“கோயில் திருவிழாக்களில் நேரிலே பல்வேறு உருவங்களை வைத்து அலங்கரிப்பார்கள். ஒரு பக்கம் துவாரபாலகரும் இன்னொரு பக்கம் குதிரைகளும் மற்றொரு பக்கம் சிங்கங்களும் அடுத்த பக்கம் யானையும் – இப்படிப் பல உருவங்கள் நேரில் இருக்கும். இவையெல்லாம் தேர் ஓடி நிலைக்கு வருமவரை தான் இருக்கும். நிலைக்கு வந்ததும் அப்புறப்படுத்தப்படும்.

கப்பல் தலைவன்போல் காப்பேன்

“அதைப்போல, திராவிட முன்னேற்றக் கழகம் அடக்கு முறைகளை எதிர்பார்க்கும் கட்டத்தில், தேரில் பொம்மை இருப்பதுபோல் இருந்தவர்கள் என்னைவிட புத்திசாலிகள் யூகசாலிகள் வெளியேறி விட்டார்கள்.

“கப்பல் கவிழும் முன், கப்பலில் உள்ள எலிகளெல்லாம் ஓடிவிடும் என்று சொல்லுவார்கள். எலிகள் ஓடிவிடுவது கப்பல் கவிழுவதற்கு அறிகுறியாகும். கப்பல் விழுகிற நிலைமை ஏற்படுமானால், கப்பலின் தலைவனாக இருப்பவன், கப்பலில் இருக்கும் எல்லோரையும் படகு மூலம் ஏற்றிக் கரைகள் அனுப்பிவிட்டுப் பிறகு தான் தன்னைப்பற்றி யோசிப்பான். கடைசியில் அவனே கப்பலோடு அழுந்தி விடவும் நேரலாம்.

“அதைப்போல நான் இறுதிவரை கப்பல் தலைவனைப் போல இருந்து, கப்பலோடு மூழ்கினாலும் மூழ்குவேனே தவிர, கப்பல் கவிழும் போது தப்பி ஓடிவிடும் ஜந்துவைப் போல் ஓடிவிடமாட்டேன்.

மிகப்பெரிய கூட்டம் ஏற்பாடு செய்து தேர்தல் நிதிக்கு 200 ரூபாய் கொடுப்பதாகச் சொல்லி நமது தோழர்கள் என்னை இங்கே அழைத்து வந்திருக்கிறார்கள். இங்கே வேறு பல நண்பர்களும் தனித் தனியாக தேர்தல் நிதியும் அளித்து, மாலைகளும் அணிவித்து, தி.மு.கழகத் கருத்துகளை ஆதரிப்பதற்கான அறிகுறியைத் தெரிவித்து் ககொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் என் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன்

நான், பல இடங்களுக்குப் பல ஆண்டுக்கொருமுறை தான் போகிறேன். ஆனால், என்ன காரணத்தாலோ இந்தச் சைதாப்பேட்டைக்கு மட்டும் அடிக்கடி வருகிற வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது. இநத்க் கூட்டம் கூட, இந்த இடத்தில் நடக்கும் என்று நான் எண்ணவில்லை. வேறு வட்டத்தில் நடக்கும் என்றிருந்தேன். இங்கு வந்தவுடன்தான், இங்கே கூட்டம் நடப்பது தெரிந்தது. இதே இடத்தில் நான் பலமுறை வந்து பேசியிருக்கிறேன். அப்போது இருந்த உற்சாகமும், எழுச்சியும் இப்போது மேலும் அதிகப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. ‘இதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்‘ என்று கூறினாலே, மாற்றார் மருட்சியடைவார்கள் என்பது அதிலே தொக்கி நிற்கிறது.

“இந்த நல்ல வளர்ச்சி, சில பல ஆண்டுகளுக்குமுன் வரை, ‘ஏதோ பட்டணத்திலே உள்ளவர்களிடத்திலும், படித்த சிலரிடத்திலேயும் இருக்கும். கிராமப் பகுதிகளிலே பரவாது‘ என்று பல பேர் காங்கிரஸ்காரர்கள் எண்ணியிருந்தார்கள். நான் இப்போது பத்து ஊர்களுக்குச் சென்றால், அவற்றில் எட்டு ஊர்கள் கிராமங்களாகவே இருக்கின்றன, இரண்டுதான் பட்டணமாக இருக்கும்.

விடியற்காலை 4 மணிக்கும் கூட்டம் நடைபெற்றது!

நான் சென்ற வாரம் சேலம் மாவட்டத்திற்குப்போயிருந்தேதன். அங்கே ஆட்டையம்பட்டிக்கு அருகிலுள்ள வேலநத்தம் என்னும் கிராமத்தில் நான் பேசும்போது நான் சொல்வதை மாற்றுக் கட்சியினர் நம்புகிறார்களோ, இல்லையோ-விடியற்காலை நாலரை மணி. நான்கூட எண்ணினேன்-அவ்வூர் மக்களெல்லாம் தூங்கியிருப்பார்கள், கூட்டம் நடக்காது‘ என்று. அதற்கு மாறாக, பெரிய கூட்டம் நடந்தது. அதற்குப் பிறகு மங்களாபுரம் என்ற ஊருக்கு அழைத்தார்கள். காரை விட்டுக்கூட இறங்க வேண்டியதில்லை. ஊருக்கு வந்தால் போதும், தேர்தல் நிதி 200 ரூபாய் திரட்டி வைத்திருக்கிறோம். அதைக் காரில் இருந்தபடியே பெற்றுக் கொள்ளலாம் என்று கூறினார்கள். அதற்கு ஒப்புக் கொண்டு போனேன். அங்கேபோனதும் ஒருவர் சாப்பிடக் கூப்பிட்டார். மற்றொருவர் பழங்களைக் கொண்டு வந்து தின்னச் சொன்னார், அவ்வூர் மலைப்பகுதியில் இருப்பதால் அங்கு மலைத்தேன் கிடைக்கும். எனவே, மலைத்தேனைப் பழத்தில் ஊற்றிச் தின்னச் சொன்னார்கள். நானும் அவர்கள் கொடுத்ததையெல்லாம் சாப்பிட்டேன். அப்பொழுது மணி 5. அந்த நேரத்தில் என்னைச் சாப்பிடச் சொன்னார்கள் என்றால் அதுவரை நான் சாப்பிடாதிருந்தேன் என்று பொருள்.

மலைத்தேனை வாழைப்பழத்துடன் சேர்த்தோ, பலாச்சுளையுடன் சேரத்தோ சாப்பிட்டுப் பார்த்திருக்கிறோம், ஆனால் அவர்கள் எனக்கு கொடுத்ததோ மாதுளம் பழம். மாதுளம் பழத்தில் தேனை ஊற்றியதும், மாதுளம் பழத்தின் சுவையும் கெட்டு தேனும் கெட்டு, அதைச் சாப்பிட நேர்ந்தது. நன்றி தெரிவித்துவிட்டுச் சேலத்துக்குப் புறப்படுகையில் மணி 5.30.

நெருப்புக் கோழி இயல்பினர்

இந்த அளவு கழகம் வளர்ந்திருக்கிறது. நெருப்புக்கோழி தன்னை உலகம் தெரிந்து கொள்ளாமல் இருக்க வேண்டும்என்று நினைத்துத் தனது தலையை மண்ணுக்குள் மறைத்துக் கொள்ளும் என்று சொல்கிறார்களே – அதுபோல் சிலர் நமது வளர்ச்சியை மறைத்து விடலாம் என்று கருதி, ‘கழகம் வளரவில்லை‘ அந்தக் கட்சியே அழிந்துவிட்டது – ஒழிந்துவிட்டது அங்கே அது போய்விட்டது என்றெல்லாம் சொல்கிறார்கள்.

போன வாரம் பாராளுமன்றத்தில்,அமைச்சர் தத்தார், ஒரு சட்டத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றியிருக்கிறார். சாதி, மதம் ஆகியவைகளின் பேரால் தேர்தலில் ஓட்டு கேட்பது குற்றம் என்று அந்தச் சட்டம் கூறுகிறது. நமக்கும் சாதி, மதங்களில் நம்பிக்கை இல்லை. ஆகையினாலே சட்டத்தின் அந்தப் பகுதியை வரவேற்கிறோம்.

அந்தச் சட்டம் அத்துடன் நிற்கவில்லை. ‘நாட்டுப் பிரிவினை கேட்பதே – பிரிவினை மனப்பான்மையே சட்டப்படிக் குற்றம்‘ என்று அந்தச் சட்டம் கூறுகிறது. அந்தச் சட்டத்தைக் கண்டு நாம் அஞ்சவில்லை, மாறாக, தேர்தலில் நாம் வெற்றி பெற்று மந்திரி சபை அமைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியடைவோமோ, அதைப்போல இரட்டிப்பு மகிழ்ச்சி எனக்கு ஏற்படுகிறது.

நாட்டுப் பிரிவினை கற்பனையா?

நாம் கேட்கும் நாட்டுப்பிரிவினை, ‘கவைக்குதவாது என்றார்கள். வெறும் ‘காட்டுக் கூச்சல்‘ என்றும், ‘பகற்கனவு என்றும் கேலி பேசினார்கள். இப்போது, ‘இது வெறும்‘ கற்பனையல்ல, கனவு அல்ல, திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு புரட்சி இயக்கம், அது வளர்ந்தால் நமக்கு ஆபத்து, நம் ஆதிக்கம் குறைந்து விடும்‘ என்னும் உணர்ச்சி டில்லியில் உள்ள மூலவர்களுக்கு ஏற்பட்டு – சின்னதுகளும் சில்லறைகளும் நம்மைப் பற்றி என்ன பேசினாலும் – சட்டமியற்றியிருக்கிறார்கள். இதையெல்லாம் நான் பேசுவதே, இந்தச் சட்டப்படிக் குற்றம் மூன்றாண்டுத் தண்டனைக்குரிய குற்றத்தைத்தான் நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன்.

சக்தி உள்ளவரை எதிர்ப்பேன்

என் உடலில் உயிரும், பேசும் சக்தியும் இருக்கும்வரை நான் இக்குற்றத்தைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பேன்.

அடுப்பிலே நெருப்புக்குப் பயந்தால், சமையல் நடக்காது, தம்புராவில் நரம்பைத் தடவாமல் சுருதி சேராது, திருமணத்தில் புகைக்குப் பயந்தால் தாலிகட்ட முடியாது.

டாட்டாவின் பாதுகாப்பிலும்,டால்மியாவின் அரவணைப்பிலும், பஜாஜால் ஆதரிக்கப்பட்டும் வளர்ந்த காங்கிரஸ் கட்சியின் பிடியிலுள்ள நாட்டை – நம் தாய் நாட்டை – நம் மூதாதையர் ஆண்ட நம் சொந்த நாட்டைப் பிரித்துத் தரவேண்டும் என்ற நாம் கேட்கிறோம். இதைக் குற்றம் என்று கூறுகிற சட்டம் சொத்தையான சட்டம்! சப்பைக்கட்டுக் கட்டப்பட வேண்டிய சட்டம்!

சட்டம் வருமுன்பே விலகி விட்டார்களே!

பாராளுமன்றத்தில் பெற்ற அனுபவத்தாலோ, தோட்டக் கச்சேரிகளுக்குச் சென்று வந்ததின் விளைவாகவோ, வேறு காரணங்களாலோ முன் கூட்டியே இந்தச் சட்டம் வருவதைத் தெரிந்து கொண்டவர்கள். சட்டம் வருமுன்பே விலகி விட்டார்கள். வாழ்க அந்த வீரர்கள்.

எவரையும் விட்டு விடாது!

திராவிடத் தேசியம் என்றாலும் சரி – தமித் தேசியம் என்றாலும் சரி – டில்லியில் உள்ளவர்களுக்கு எந்த ‘ஈயத்திலும் நம்பிக்கை இல்லை. தூய தமிர்த் தேசியம் பேசினாலும், நானானாலும், ‘தமிழ் நாடு மட்டும் போதும்‘ என்று பேசும் தமைமையாளரானாலும், அப்படிப் பேசுவது சட்டப்படி குற்றம்தான்.

என்னைக் கைது செய்து ஆறாம் நம்பர் அறையில் கொண்டு வந்த பூட்டினால் வளையாமல், நெளியாமல் தமிழ்த் தேசியம் பேசும் தம்பியும் ஏழாம் நம்பர் அறைக்கு வந்துதான் ஆகவேண்டும்.

தமிழ் நாடு தமிழருக்குத்தான், ஆனால், தமிழ்நாடு இந்தியாவுக்கு என்று திட்டவட்டமாக வலியுறுத்துவார்களேயானாலும், சட்டத்தின் கோரப்பற்களில் சிக்கித்தான் ஆகவேண்டும். ஏனென்றால், முதலில் ‘தமிழ்நாடு பிரிய வேண்டும்‘ என்று பேசுவதே குற்றம்.

கொதி தாங்கும் அரிசியும் கூழாகும் அரிசியும்!

இந்தச் சட்டம் வருவதற்கு முன்பு தேர்தல்தான் எனக்கு முக்கியமாகப் பட்டது. அனதால்தான் நான், யாவராவது போய் விடுகிறேன் என்றால், அவர்களின் முகவாய்க் கட்டையைப் பிடித்து, ‘போகவேண்டாம்‘ என்று கேட்டுக் கொண்டேன். ஆனால், இனி போகாமல் இருப்பவர்கள்தான் வீரரர்கள். ஓட்டுத்தான் முக்கியம் என்றால் ஆண்டியப்பனிடம் இருப்பதும் ஒரு ஓட்டுதான் – அருணாசலத்திடம் இருப்பதும் ஒரு ஓட்டுதான்.

நம்மிடம் இருப்பதில், எது கொதி தாங்கும் அரிசி – எது கூழாகும் அரிசி என்பதை அறிந்த கொள்ள இந்தச் சட்டம் பயன்படும்.

(நம்நாடு - 11.9.61)