அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


அடக்குமுறையை வளரவிடுவது நமது தன்மானத்திற்கு அழகல்ல!

சென்னைக் கூட்டத்தில் அண்ணா முழக்கம்

ஐந்தாம் தேதியன்று இந்தியச் தேசப் படத்தை எரித்து நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல உணர்ச்சியை ஊட்டவேண்டும் என்று பெரியார் இராமசாமி அவர்கள் போராட்டம் துவக்கியிருக்கிறார்.

“காமராசர் பச்சைத் தமிழர், அவர் வெற்றிதான் என் வெற்றி“ என்கிறார் பெரியார். பெரியார்தான் நல்ல தலைவர், அவரைவிட நல்ல தலைவர் கிடையாது என்கிறார் காமராசர். அவ்வளவு நல்ல தொடர்பு அவர்களிருவருக்குமிடையே இருக்கிறது. இந்த நேரத்தில் பெரியார் அவர்கள் பட எரிப்புப் போராட்டம் நடத்த ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு ஊர்வலமாகச் செல்லக்கூடாது, என்று காமராசர் அரசாங்கம் தடையுத்தரவு போட்டிருக்கிறது. ஊர்வலங்களைத் தடைப்படுத்துகிறோம் என்று உத்தரவு போட்டிருக்கிறார்கள்.

அப்படி ஊர்வலத்தில் என்ன், காமராசர் ஆட்சியைக் கவிழ்க்கப் போகிறோம் என்றா முழக்கமிடப் போகிறார்கள்? இல்லை ஊர்வலத்தில் “பெரியார் வாழ்க! தமிழ்நாடு தமிழருக்கே, ஆதித்தனால் வாழ்க“ என்றுதான் முழக்கமிடுவார்கள். இது என்ன தவறா? வேண்டுமானால் திராவிடர் கழகத்துத் தோழர்கள் “காமராசர் வாழ்க“ என்று கூடச் சொல்லக்கூடும்.

நம்முடைய தன்மானத்திற்கு அழகல்ல!

இப்படிப்பட்ட இந்த ஊர்வலத்திற்கே தடையுத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள். காமராசரை வாழ்த்தினாலும் அடக்குமுறை உண்டு என்பதைத்தான் இன்றைய காமராசர் ஆட்சி காட்டுகிறது. அதற்காக என்ன செய்யவேண்டுமென்பதைத் தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு திராவிடர் கழக நண்பர்களைச் சேர்ந்தது. ஆனால், இந்த அடக்குமுறையை இப்படியே வளர விட்டுவிடுவது நம்முடைய தன்மானத்திற்க அழகல்ல. அடக்குமுறையை மீறுவதுதான் தன்மானம் என்று அண்ணா அவர்கள், நேற்று சென்னை மீர்சாகிப் பேட்டையில் நடந்த இளைஞர் பகுத்தறிவு மன்ற ஆண்டு விழாவில் பேசுகையில் குறிப்பிட்டார்கள். அவர் ஆற்றிய உரையின் ஒரு பகுதி வருமாறு,

இந்தப் போராட்டத்திற்குப் பெரியார் அவர்கள் முறைப்படி நமக்கு அழைப்பு அனுப்பியிருந்தால் நாம் செயற்குழுவையோ, பொதுக் குழுவையோ கூட்டி இதைப் பற்றித் தீர்மானம் செய்திருக்க முடியும். நான் இப்படிச் சொன்னதும் இவன் அடுத்த வீட்டுப் பிள்ளையை விட்டு ஆழம் பார்க்கிறான் என்று பெரியார் பேசக்கூடும். ஆனால் நாங்கள் அப்படியல்ல.

விட்ட குறை தொட்ட குறை

நேருவுக்குக் கறுப்புக் கொடி காட்டவேண்டும் என்று நாங்கள் முடிவு செய்த நேரத்தில் அதை நாட்டு மக்களுக்கு விளக்கிச் சொல்வதற்காகக் கடற்கரையில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசுவதற்கான அனுமதியைச் சர்க்கார் தர மறுத்த நேரத்தில் தடையுத்தரவு போட்ட நேரத்தில் நாங்கள் அந்தத் தடையை மீறினோம். அதனால் ஏற்பட்ட தொல்லைகளையும் அனுபவித்தோம்.

ஆகையால்தான் சொல்லுகிறேன். குழந்தையைப் பெற்றவள்தான் மருத்துவம் சொல்கிறாளே தவிர, குழந்தையைப் பெற்றாதவள் மருத்துவம் சொல்லவில்லை என்பதை நம்முடைய திராவிடர் கழகத் தோழர்கள் எண்ணிப் பார்த்து, ஒன்று காமராசருக்கும், பெரியாருக்கும் இருக்கும் தொடர்பினால் இந்தத் தடையை நீக்க வேண்டும்.

இல்லையேல் நமது வழியில் நாம் செல்லவேண்டும். ஏதோ விட்ட குறை தொட்டகுறைக்காக இதைச் சொல்லவேண்டும் போல் தோன்றியது. சொல்லிவிட்டேன்.

பெரியார் அவர்கள் நாட்டுப் பிரிவினையை அறவே விட்டுவிட்டார், அண்ணாதுரைதான் விட மறுக்கிறார் என்று காமராசர் பேசி வருகிறார். பெரியார் நாட்டுப் பிரிவினையை விடவில்லை. “விடவில்லை“ என்பது மட்டுமல்ல – என்னைவிடத் தீவிரமாகக் களத்தில் இறங்கியிருக்கிறார். அதற்கான அறிவிப்புதான் 5ஆம் தேதி பட எரிப்புப் போராட்டம். இதைத் தெரிந்தாவது, அந்த அபத்தமான பேச்சை காமராசர் வெளியிலே பேசாமல் இருக்கவேண்டுமென்று நான் எதிர்பார்க்கிறேன்.

தங்களுக்கு இருக்கின்ற எண்ணிக்கை பலத்தினாலும் அது தருகிற இறுமாப்பு – ஆணவம் – மண்டைக்கனம் ஆகியவைகளினாலும் எந்தக் கட்சியையும் மதிக்க மாட்டோம் கிளர்ச்சி என்றால் தடைப்படுத்துவோம். ஊர்வலத்தைத் தடுப்போம் என்கிறது நமது மாநிலத் துரைத்தனம். அந்த அடக்குமுறைக்கு எதிராகச், செல்லும் பேறும் இப்பொழுது திராவிடக் கழகத்திற்கு மட்டுமல்ல – முற்போக்குக் கட்சிகள் அத்தனைக்கும் இருக்கிறது என்பதை நான் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஊர்வலங்களையும், கூட்டங்களையும் அவர்கள் தடுப்பதால் மக்க்ளுடைய தன்மானம் பறிக்கப்படுகிறது. ஆகவே இப்படிப்பட்ட ஒரு உணர்ச்சி ஆட்சியாளருக்கு ஏற்படாமல் இருக்க வேண்டுமென இந்தக் கூட்டத்தின் மூலம் எச்சரிக்கிறேன்.

தடையுத்தரவு போடுவது அழகல்ல

பக்கத்து வீட்டுக்காரன் கருவாடு வறுக்கிறான். அதனுடைய வாடை அடுத்த வீட்டுக்காரனுக்குப் பிடிக்கவில்லை என்றால் அவர்தான் வறுப்பதைப் பக்கத்து வீட்டுக்காரன் நிறுத்திக் கொள்ளமாட்டான்.

அதைப்போல் நான் ஆட்சியில் இருக்கிறேன். என்னுடைய ஆட்சியிலே கிளர்ச்சி நடக்கலாமா? ஊர்வலங்கள் போகலாமா? கூட்டங்களைப் போடலாமா? இது என்னுடைய ஆட்சிக்குப் பாதகம் இல்லையா? என்றால் அவர்தான் ஆட்சியைவிட்டு விட்டு வெளியே போக வேண்டுமே தவிர ஊர்வலங்களுக்கும், கூட்டங்களுக்கும் தடை உத்தரவு போடுவது அழகல்ல.

அனுபவத்தில் ஆற்றலில் காமராசரை விட அதிகத் திறமையைப் பெற்றிருக்கின்ற ஜப்பான் நாட்டுப் பிரதமர் கிஷி அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்ததைக் செய்துகொண்டது அந்த நாட்டு மக்களுக்குப் பிடிக்கவில்லை. குறிப்பாக மாணவர்களுக்குப் பிடிக்கவில்லை. நான்தான் மெஜாரிடியாக இருக்கிறேன். ஆகையால் இந்த உடன்படிக்கையைக் கட்டாயம் நடத்துவேன் என்றார். ஆனால் அங்கு இப்பொழுது நிலைமை எப்படியிருக்கிறது? அதைப்போல இங்கே காமராசர் சர்க்கார் கர்ச்சனை செய்கிறது.

ஜனநாயகத்தில் இது வரவேற்கத்தக்கதா?

இப்பொழுது ஜப்பான் நாட்டுப் பாராளுமன்றத்திற்கு 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாலிபத்தோழர்கள் ஊர்வலமாகச் சென்று இந்த ஒப்பந்ததை நாங்கள் மறுக்கிறோம். இது ஜப்பான் நாட்டை அமெரிக்காவிடத்தில் அடகு வைப்பதால் எதிர்காலத்தில் ஜப்பான் நாட்டின் வாழ்வைப் பாதிப்பதாகும். ஜப்பான் நாட்டின் தன்மானத்தை தரமட்டமாக்குவதாகும். “ஆகவே திருட்டுத்தனமாக – குருட்டுத்தனமாக இருட்டிலே தீர்மானத்தை நிறைவேற்றாதீர்கள். மக்கள் முன்னாலே வாருங்கள் என்று முழக்கமிட்டுப் பிரதமர் கிஷியை வெளியிலே மாணவர்கள் அழைக்க அவர் உள்ளேயே இருக்க போலீசார் நீங்கள் கூச்சல் போடுங்கள், அவர் அங்கேயே இருக்கட்டும், நாங்கள் இரண்டிற்கும் நடுவிலேயே இருக்கிறோம் என்றுதான் பார்த்துக் கொண்டார்களே தவிர ஜப்பான் நாட்டிலே, இதைப் போல் ஊர்வலங்களையோ, கூட்டங்களையோ தடுக்கவில்லை.

கல்யாணம் செய்து கொண்டுட ஒருவன் அடுத்தவர்களைப் பார்த்துக் ‘கல்யாணமே செய்து கொள்ளவேண்டாம்‘ என்று தடுப்பதைப் போல மக்களாட்சி என்று சொல்லிக் கொண்டு அதன் போக்குக்கு இந்த ஆட்சி தடங்கல் செய்கிறது, என்று சொன்னால் நியாயப்புத்தி உள்ளவர்கள், நேர்மை உள்ளம் உடையவர்கள் இதனைச் சிந்தி்துப் பார்க்க வேண்டாமா? ஜனநாயகத்தில் இது வரவேற்கத்தக்கதுதானா என்று நான் அறிய விரும்புகிறேன்.

இராணுவக் கிளர்ச்சி ஏற்படும்!

ஜப்பான் நாட்டில் உள்ள வாலிபர்களுக்கு் இருக்கும் தன்மானமும், தைரியமும், வீர உணர்ச்சியும் நமது தமிழகத்து வாலிபர்களிடம் இல்லை என்று தப்புக்கணக்கு போட்டு வைத்திருக்கிறார்கள். கிளர்ச்சியா செய்யாதே, பிரச்சாரமா செய்யாதே, ஜனநாயகமா – பேசாதே, பணமா கொடு என்று காமராசர் சொல்லுகிறார். இப்படிப்பட்ட ஒரு ஆட்சியை நல்ல ஆட்சி, நம்முடைய ஆட்சி என்ற எத்தனைக் காலத்திற்குச் சொல்லிக் கொண்டு இருப்பது என்பதை நான் இந்த நேரத்தில் அறிந்து கொள்ளவிரும்புகிறேன்.

ஆகையினால் நம்முடைய நாட்டில் உண்மையான ஜனநாயக ஆட்சி நடைபெறுகிறது என்று சொன்னால் பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கோ, ஊர்வலங்கள் ந்டத்துவதற்கோ தங்கு தடை இருக்கக்கூடாது. பேசுவோர் தவறாகப் பேசினால் இந்த செக்ஷன்படி இந்தத் தண்டனை என்று உண்மையோடு தாருங்கள், ஆண்மையோடு ஏற்றுக்கொள்கிறோம்.

ஆனால் பொதுமக்கள் கூடுகிறத இதுபோன்ற கூட்டங்களுக்குத் தடைவிதித்துச் சர்வாதிகாரம் நடத்தினால் பாகிஸ்தானிலும் துருக்கியிலும் ஏற்பட்ட இராணுவக் கிளர்ச்சி இங்கேயும் ஏற்படலாம். பிரெஞ்சு நாட்டில் எப்படி டீகால் ஆட்சிக்கு வந்தார் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

எதுவும் இங்கு நடக்கவில்லையே!

இப்பொழுது இருக்கின்ற பிரச்சினையெல்லாம் நமக்கு ஜனநாயகம் வேண்டுமா – வேண்டாமா என்பதாகும். ஜனநாயகம் நமக்குத் தேவை. அதில் எதிர்க்கட்சி வாழ வகையிருக்க வேண்டும்.

வீட்டுக்குள்ளே திருடன் புகுந்தால் முதலில் வீட்டுக்காரனின் வாயைக் கட்டிவிடுவான். வீட்டுக்காரன் சத்தம் போட்டு மக்களைச் கூட்டிவிட்டால் திருடமுடியாது என்கின்ற பயத்தினால்.

அதுபோல்தான் ஆட்சியாளர்கள் கூட்டங்களுக்குத் தடைவிதிக்கிறார்கள். எதிர்க்கட்சியினரைப் பேசவிடாமல் தடுக்கிறார்கள் எதிர்கட்சியை எதுவும் பேசவிடாமல் நாச ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

எதிர்கட்சிக்காரர்கள் என்ன – வரி கொடுக்க வேண்டாம் என்று சொல்லுகிறார்களா? சட்டத்தை மீறுங்கள் என்று சொல்லுகிறார்களா? சட்ட சபையில் கலகம் விளைவிக்கிறார்களா? பலாத்காரத்தைத் தூண்டி விடுகிறார்களா? எதுவும் தமிழகத்தில் நடைபெறவில்லையே. ஆனால் இவர்கள் எதிலும் பிடிவாதம் காட்டுவார்கள். பிறகு பணிந்து போவார்கள்.

தி.மு.க. தலைநிமிர்ந்து நிற்கிறது!

பாகிஸ்தான், பம்பாய், ஆந்திரா இவைகளைப் பிரிப்பதற்கு முதலிலே நேரு மறுத்தார். பிறகு கிளர்ச்சிகள் வலுவடைவதாகக் கண்டவுடன் அவரே வந்து பம்பாயையும், ஆந்திரத்தையும் பிரித்துக் கொடுத்தார். அப்படிப்பட்ட நேருவைத்தான் காங்கிரசுக்காரர்கள் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

அவரே வந்து திராவிடத்தைப் பிரித்துக் கொடுக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை. திராவிட முன்னேற்றக்கழகம் சட்டசபைக்குப் போவதற்கு மட்டுமல்ல, தடை உத்தரவை மீறுவதற்கும், போராட்டங்களை நடத்துவதற்கும், தலைநிமிர்ந்து நிற்கிறது என்பதை ஆட்சியாளர்கள் மறைமுகமாக ஒத்துக் கொள்கிறார்கள்.

நம்முடைய கோரிக்கை நியாயமானது. கானா நாட்டுக்கு எப்படிச் சுதந்திரம் அவசியமோ அப்படி நமது நாட்டுக்கும் சுதந்திரம் தேவை. சுதந்திரம் நமது பிறப்புரிமை.

“இந்த வட்டாரத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் நம்முடைய நண்பர்கள், சென்னை மாநகராட்சி மன்றத்தைத் திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திச் செல்லுகிற பாங்கினையும் நகர மக்களுடைய நலனுக்காக என்னென்ன திட்டங்களைத் துரைத்தனத்தார் இன்னமும் நிறைவேற்றவில்லை என்பது பற்றியும், விளக்கிப் பேசினார்கள். குறிப்பாகவும் சிறப்பாகவும் உருவாக்கப்பட்டிருக்கின்ற குடிதண்ணீர் திட்டத்தைப் பற்றியும் நம்முடைய நண்பர் வி.முனுசாமி அவர்கள் நம்மிடத்தில் மிக விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள்.

“மாநகராட்சி மன்றத்தில் இந்தத் திராவிட முன்னேற்றக் கழகத்தார் எதைச் சாதித்துவிட்டார்கள். என்ன நல்ல திட்டங்களைத் தீட்டிவிட்டார்கள். என்று காங்கிரசுக்காரர்கள் பலவிதமாகப் பேசிக் கொண்டு வருவதாலேயே நம்முடைய நண்பர்கள், தாங்கள் செய்திருக்கின்ற நன்மைகளையும்திட்டங்களையும் எடுத்து விளக்குகிறார்கள். இப்படிப்பட்ட கூட்டங்களுக்கு வருகிற நானே கூட சில புதிய உண்மைகளை அறிந்து கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது.

தெருத்தெருவாகச் சென்று சொல்லுங்கள்!

“நம்முடைய கழகத் தோழர்கள், எப்படித் தேர்தல் காலத்தில், ஓட்டுக்களைச் சேகரிப்பதிலே அதிக அக்கறையோடு தெரு தெருவாகப் போனார்களோ, அதைப்போலவே நாம் மாநகராட்சி மன்றத்திற்கு வந்தவுடன் எதையெல்லாம் செய்திருக்கிறோம் எவற்றினையெல்லாம் செய்யவிருக்கிறோம் என்பவைகளை விளக்கிச் சொல்ல முன்வரவேண்டும்.

இதற்கென்று ஒரு கிழமையை குறிப்பிட்டு்க் கொண்டு தெருதெருவாகச் சென்று அங்கேயுள்ள ஒரு வீட்டில் உட்கார்ந்து கொண்டு, அந்தத் தெருவிலுள்ள பெரியவர்களையும், மாணவர்களையும் அழைத்து, இதுவரையில் மாநகராட்சி மன்றத்தில் செய்திருக்கும் பணிகளையும் ஒவ்வொரு தெருவிலேயும் நம்முடைய நண்பர்கள் இதுவரையில் செய்திருக்கிற காரியங்களையும் விளக்குவதன் மூலம், நாடு முழுவதும் உள்ள மக்கள் நமது திட்டங்களை அறிய வாய்ப்பு ஏற்படும். பொதுக் கூட்டங்களில் இவற்றினை எடுத்துச் சொல்லுகிற நேரத்தில், மாற்றுக் கட்சியினர் செய்யாதவைகளைப் பற்றியெல்லாம் எடுத்துக் கூற முக்கால் மணிநேரமும் பிறகு உலகச் செய்திகள் பற்றிச் சொல்வதற்குக் கால்மணிநேரமும், ஆக ஒரு மணி நேரந்தான் கிடைக்கும். ஆகையினால் நான் சொல்லுகிற இந்த முறையை, நம்முடைய கழகத் தோழர்கள், ஒவ்வொரு தெருவிலேயேயும் ஒரு வீட்டிலே அமர்ந்து, பெரிய மனிதர்களையும், மாணவர்களையும் அழைத்து, இதுவரையில் தி.மு.கழகம் மாநகராட்சியின் வருவாய்த் துறையில் வருவாய் அதிகரிப்பதற்கு என்னென்ன செய்தது, குடி தண்ணீருக்காக என்னென்ன திட்டம் வகுத்தது, நகரத்தை எப்படி எப்படியெல்லாம் சீர்படுத்த முனைந்தது, ஏழைகளுக்கு வரிக் குறைப்பு செய்தது போன்ற விபரங்களையெல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டுமென்று நம்முடைய தோழர்களை நான் பெரிதும் விரும்பி வேண்டிக்கேட்டுக் கொள்ளுகிறேன்.

நம்பிக்கையும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது

ஏனென்றால் அவர்கள் செய்திருக்கும் காரியங்களை எண்ணிப் பார்க்கும்பொழுது எனக்கு மெத்த பெருமையும், நல்ல நம்பிக்கையும், மிக்க மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. இதைச் செய், அதைச் செய் என்று கேட்டுக் கொள்ளுகின்றவர்களாகவும், ஆளும் கட்சியினரின் குறைபாடுகளையெல்லாம் எடுத்துக் காட்டுபவர்களாகவும்தான் நாம் முன்பு இருந்தோம். ஆனால் நம்முடைய கழகத் தோழர்கள் நாற்பத்தைந்து பேர் மாநகராட்சி மனற்த்திற்குச் சென்று நல்ல வகையில் நாட்டுக்குத் தேவையான காரியங்களை நடத்திக் கொண்டு வருகிறார்கள். அதிலே மிக்க நகைச்சுவையும் இருக்கிறது. நண்பர் வி.முனுசாமி அவர்கள் அவருடைய வட்டத்தில் ஒரு திருமண மண்டபத்தைக் கட்டுவதற்கு திருமணமே ஆகாத காமராசரைக் கொண்டு கால்கோள்விழா செய்திருப்பது அவருடைய நகைச்சுசையைக் காட்டுகிறது. இதுபோன்ற பல நல்ல நல்ல காரியங்களைச் செய்திருக்கிறார்கள். அவைகளெல்லாம் மக்களுக்குத் தெரிய வேண்டுமானால் இப்படிப்பட்ட பொதுக்கூட்டங் களில் நாம் சொல்வதைவிட வீதிகள் தோறும் கழகத் தோழர்கள் சென்று அவற்றினை விளக்கிச் சொல்ல வேண்டுமென்பதையே நான் பெரிதும் விரும்புகிறேன்.

பேச வேண்டியதை எவ்வளவோ இருக்கின்றன

‘நம்முடைய கூட்டங்களில், மாநகராட்சி மன்றப் பணிகளைப் பற்றிப் பேசுவதா, அல்லது மாநிலச் சர்க்கார் சொல்பவைகளுக்குப் பதில் சொல்வதா, அல்லது மாநிலச் சர்க்கார் செய்கின்ற காரியங்களிலுள்ள கேடுபாடுகளை எடுத்து விளக்குவதா, அல்லது அவர்கள் செய்யத் தவறியதை எடுத்துச் சொல்லுவதா, அல்லது மாநில சர்க்காருக்கும் மத்தியச் சர்க்காருக்கும் இடையிலே இருக்கும் இந்தத் தொடர்பு இருக்க வேண்டுமா குறைக்கப்படவேண்டுமா – எடுக்கப்பட வேண்டுமா, அப்படி எடுக்கப்பட வேண்டுமானால் எந்த முறையில் எடுக்கப்படுவது – குறைக்கப்படுவது – நீக்கப்படுவது என்ற இந்த வகையினைப் பேசுவதா அல்லது உலகத்தில் என்னென்ன நாடுகள் விடுதலை அடைந்திருக்கின்றன என்பதையெல்லாம் எடுத்துப் பேசவதா இப்படிப்பட்ட எண்ணங்களெல்லாம் வந்தவுடனே நம்முடைய மனதிலே அலைமோதும், எதை எந்த நேரத்தில் எப்படிப் சொல்வது என்பது தெரியாமல் நம்முடைய கழகத் தோழர்கள் திண்டாடுகிறார்கள். நமக்குப் பேச வேண்டிய பிரச்சினைகள் எல்லாம் இவ்வளவு இருக்கின்றன.

திருமண ஏற்பாடு போல் தவிக்கிறோம்!

“ஏறக்குறைய ஒரு திருமண வீட்டில் எத்தனைப் பிரச்சினைகள் இருக்குமோ, அவ்வளவு நமக்கு இருக்கின்றன. திருமண வீட்டில் மாப்பிள்ளை 4 மணி வண்டியில்தான் வருகிறார் என்றால், இரயில் நிலையத்திற்கு வண்டி கொண்ட போகச் சொல்லுவார் மாமனார், தன்னுடைய மூத்த மகள் வேலூரிலிருந்து இரயிலில் வருகிறாளா, காரில் வருகிறாளா என்று அறிவிக்காததால், உடனே டெலிபோன் செய்து ‘எந்த வண்டியில் வருகிறாய்? என்று கேட்க வேண்டும் போல் தோன்றுகிறது. “மாப்பிள்ளை புதிய சட்டை தைக்க வேண்டுமென்றார். அதுவும் ஒரு குறிப்பிட்ட கடையில்தான் தைக்க வேண்டுமென்றார். துணியை வாங்கிக் கொள்ளும்போது காட்டிய அவசரத்தைத் தைத்துக் கொடுப்பதில் தையற்காரர் காட்டவில்லை. எனவே அவசரப்படுத்திக் குறித்த காலத்தில் துணியை வாங்கி வரவேண்டும். அதே நேரத்தில் சமையலுக்கு யாரை ஏற்பாடு செய்வது? அடுத்த தெருவிலுள்ள சமையற்காரன் பக்கத்து வீட்டுக்காரர் திருமணத்தின் போது நன்றாகத்தான் சமைத்தான். ஆனால் உப்பைப் கொஞ்சம் அதிகமாகக் கொடுத்துவிட்ட காரணத்தால், அவன் சமையலில் உப்பை அதிகமாகப் போட்டு விட்டான். ஆகவே வேறு ஆளை நியமிக்கவேண்டும். இரண்டாவது மகள் ‘எனக்குப் பெங்களூர் வளையல் வேண்டும்! என்றாள். அது எந்தக் கடையில் இருக்கிறது என்று பார்த்து வாங்கவேண்டும். ஆச்சாரியார் இன்னும் தாலிச்சரடு கொண்டுவந்து கொடுக்கவில்லை – இப்படி ஆயிரம் பிரச்சனைகள் பெற்றோர்களுக்கு இருக்கும்.

சாவு வீடாக இருந்தால் தொல்லை இல்லை

அதைப்போலத் திராவிட முன்னேற்றக்கழகம் இன்று தவியாய் தவிக்கிறது. எதைச் செய்வது, எதை விடுவது எப்படி செய்வது? இந்தி வருகிறதே – அதை எதிர்த்தாக வேண்டாமா? தேர்தலில் கழகம் கலந்து கொள்ளுவதற்கு ஆயத்தமாக வேண்டாமா? கார்ப்பரேஷனில் நிறைவேற்றிய தீர்மானங்களை மாநிலச் சர்க்கார் நிறைவேற்றவில்லையே – மாநிலச் சர்க்கார் நல்ல திட்டங்களைக் கொண்டு வரவில்லைவே உச்ச வரம்புச் சட்டம் வந்திருக்கிறதே அதைப் பற்றிப் பேச வேண்டாமா? அடுத்து கார்பபரேஷனில் நடைபெற்றது குறித்து சட்டசபையில் ஒழுங்குப் பிரச்சினை வந்து அது ஆலோசனையில் இருக்கிறதே அது என்ன ஆகுமென்று பார்க்க வேண்டாமா? இவைகளையெல்லாம் எண்ணிப் பார்க்கிற நேரத்தில் நமக்கு ஒரே பரபரப்பாக இருக்கிறது.

“சாவு வீடாக இருந்தால் இந்தத் தொல்லைகள் எல்லாம் இல்லை“.

“ஒரு கல்யாண வீடாக இருந்தால் நல்ல நிலைமையில் சில பிரச்சினைகள் இருக்கும்“.

“ஏன் நான் இதைச் சொல்லுகிறேன் என்றால் – கம்யூனிசத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். சோஷலிசத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். உச்ச வரம்பு பற்றிப் பேசுகிறார்கள். மாநிலச் சர்க்காரைப் பற்றிப் பேசுகிறார்கள்.

மத்தியச் சர்க்காரைப் பற்றி பேசுகிறார்கள். உலகத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். நாட்டைப் பிரிக்க வேண்டுமென்கிறார்கள். இப்படிப் போய்க் கொண்டிருக்கிறார்களே, எப்படி இவர்களை நம்பி இவர்கள் பின்னால் போவது என்று எண்ணுகிற ஒரு சிக்கல் மக்களிடையே இருக்கிறது. காங்கிரசுக்கட்சிக்கு அந்தச் சிக்கல் இல்லை. நாங்கள்தான் ஆளுகிறோம். ஆகவே எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள், நாங்கள் தான் செய்வோம் – செய்து வருகிறோம் – வந்தே மாதரம்‘ என்ற நாலு வார்த்தைகள் பேசிவிட்டு அவர்கள் போய்விடுவார்கள்.

“ஆனால், நாம் எடுத்துக் கொண்டிருக்கிற பிரச்சினைகள் பலதரப்பட்ட பிரச்சினைகளாக இருக்கின்றன.

அலட்சியப்படுத்துவது உகந்ததல்ல

“நாட்டில் இன்றைய தினம் எல்லாக் கட்சியினரும் அவருகளுக்கு இருக்கும் வாய்ப்புக்கும் வசதிக்கும் தக்க விதத்தில் மத்தியச் சர்க்காரில் அதிகாரம் குவிந்திருப்பதை எதிர்க்கிறார்கள். சிவஞான கிராமணியாரை அவர் தூங்கி்க் கொண்டிருக்கும்போது எழுப்பிக் கேட்டால்கூட, ஆமாம் மத்தியச் சர்க்காரில் இருக்கும் அதிகாரம் குறைக்கப்படுவது அவசியம் என்பார். எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஆதித்தனாரைக் கேட்டால், அதுதானே நாட்டுக்குத் தேவை! அதைத் தானே நான் இப்பொழுது செய்து கொண்டிருக்கிறேன் என்பார். கம்யூனிஸ்டுகளைக் கேட்டால் மத்தியச் சர்க்காருக்கம் மாநிலச் சர்க்காருக்கும் இருக்கும் பிணைப்புகள் துண்டிக்கப்படவேண்டும் என்று சொல்லுகிறார்கள். சோசலிஸ்டுக் கட்சியினரும் அதையே பேசுகிறார்கள். நாமும் நமது மாநிலத்திற்க முழுச் சுதந்திரம் வரவேண்டும். அதற்கான முறையில் கிளர்ச்சி இருக்கவேண்டும். மத்தியச் சர்க்காரிலிருக்கும் அதிகாரம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். மட்டுப்படுத்தப்படவேண்டும் – குறைக்கப்பட வேண்டும் என்று சொல்லுகிறோம். ஆச்சாரியார் கூட, ‘கேவலம் ஒரு பஞ்சாயத்து போர்டிற்கு இருக்கும் அதிகாரம்கூட இநத் மாநிலச் சர்க்காருக்கு இல்லை‘ என்கிறார். ஆக அத்தனைக் கட்சிக்காரர்களும், ஒரேவிதமான நோக்கத்தை ஒரே விதமான கருத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், இப்படிப்பட்ட ஒரு பிரச்சினையை அலட்சியப்படுத்தவா நான் கவனிக்கமாட்டேன் என்று சொல்லுவது – நேரு பண்டிதருடைய சனநாயக உணர்ச்சிக்கு உகந்ததல்ல என்பதை அவருக்கு இந்த மாநிலச் சர்க்கார் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நான் பெரிதும் விரும்புகிறேன்.

டெல்லி சர்க்கார் நல்ல சர்க்கார் அல்ல

“நாட்டில் இன்றைய தினம் இந்த விஷயத்தில் மட்டுமல்ல – இதைப் போலவே கட்டாய இந்தியை எதிர்த்து ஒரு நல்ல ஒருமித்த கருத்து உருவாகிக் கொண்டு வருகிறது.

“இதைப் பற்றி நான் சொல்லுகின்ற நேரத்தில் எல்லாக் கட்சிகளும் ஒன்றாகி, அவரவர்கள் தங்கள் இலட்சியங்களை வி்ட்டுவிட்டு ஒரே முகாமில் வந்துவிட வேண்டுமென்று பேசுவதாக யாரும் எண்ணிட வேண்டாம்.

இதற்காகக் கழகத் தோழர்கள் ஆசைப்படவும் வேண்டாம்.

இப்படிப்பட்ட ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் எல்லாக் கட்சிகளுக்கும் வடக்கே இருக்கிற சர்க்கார் – டெல்லி சர்க்கார் நல்ல சர்க்கார் அல்ல என்ற எண்ணம் இருக்கிறது.

இந்தப் பிரச்சினையை இந்தச் சர்க்கார் கவனிக்க மறுக்கிறது. இதிலிருந்து நமக்கு எனக்கு புரிகிறது என்றால் நான் தனியாக கேட்டாலும் எல்லோரும் ஒன்றாகக் கூடிக்கேட்டாலும் அவர்கள் நம்மை மதிப்பதாகத் தெரியவில்லை என்பதுதான்.

ஆகவே அந்தந்தக் கட்சியும் அரசாங்கத்திடம் தங்கள் கோரிக்கைகளை எந்த வகையில் கேட்க வேண்டும், எந்த முறையில் கேட்க வேண்டும் என்பது பற்றி முடிவு செய்திருக்கிறார்கள்.

நாட்டுப் பிரிவினையை வலியுறுத்துகிறோம்!

அந்த வகையில் சிந்தித்ததில் நம்முடைய கழகம் ஒரு முடிவை எடுத்தது, திருச்சி மாநில மாநாட்டில் சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் சென்று நம்முடைய மூலாதாரக் கொள்கையாகிய நாட்டுப்பிரிவினையை வற்புறுத்திச் சொல்ல வேண்டும், என்ற முடிவுக்கு வந்து அதன்படி செய்து கொண்டிருக்கிறோம். இதனால் நாட்டை ஆளுகிற தலைவர்களாலும், அமைச்சர்களானாலும் நம்மை அலட்சியப்படுத்தக் கூடாது என்பதுதான் சனநாயகம்.

ஆகையினால் இந்தத் திட்டத்திற்கும், பிரச்சனைக்கும், கொள்கைகளுக்கும் இப்பொழுது இருப்பதைவிட நல்ல மதிப்பும், ஊராட்சி மன்றத்தில் இடமும், நகராட்சியில் இடமும் பெற்றிருக்கிறோம்.

சென்னை மாநராட்சியை நாம் ஆட்சி செய்து கொண்டு வருகிறோம். சட்டசபையில் எதிர்க்கட்சியாக மிக்கப் பொறுப்போடு நடந்து கொள்ளுகிறோம்.

நீங்கள் பத்திரிக்கை படிப்பவர்களாதலால் தயவு செய்து பழைய பத்திரிக்கைகளைப் படித்துப் பாருங்கள். சட்டசபையில் அமளி நடத்திய எதிர்க்கட்சிகளைப் பார்க்கலாம். சபாநாயகர் ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டு இன்று நான்தான் சபாநாயகர் என்று சொன்ன நிகழ்ச்சிகளும், துப்பாக்கி இல்லாததால் குண்டுகளுக்குப் பதில் புத்தகங்களை வீசிக்கொண்ட நிகழ்ச்சிகளும் பல மாநிலச் சட்டமன்றங்களில் நடைபெற்றிருப்பதைக் காணலாம்.

அவர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள்

இப்படிக் காலித்தனத்தில் மற்ற மாநிலச் சட்டமன்றங்களில் எல்லாம் எதிர்க்கட்சிகள் இறங்கியிருக்கின்றன. நம்முடைய சென்னை மாநிலத்தைப் பொறுத்தமட்டில் 15 பேர்களாக இருக்கும் தி.மு.கழகம் எவ்வளவு பொறுப்போடு மக்களாட்சிக்குக் கட்டுப்பட்டு மரியாதையாக நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

ஆனால் இதற்கு மாறாக என்றாவது ஒருநாள் சட்டமன்றத்தில் கலகம் விளைவித்திருக்கிறார்களா என்று அவர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள்.

சட்டசபையில் எதிர்க்கட்சியாகவும், மாநகராட்சி மன்றத்தில் ஆளுங்கட்சியாகவும் இருக்கிறோம்.

மருமகளாக இருந்த நேரத்தில் மாமியாரிடத்தில் மரியாதையாக நடந்து கொண்டும், மாமியாரானதும் மருமகளை அன்பாக நடத்துகிறோம் என்றும் சொல்லத்தக்க அளவுக்கு இரண்டு இடத்திற்கும் இயல்புகெடாமல், பண்பு பாழாகாமல் நடத்திக் காட்டியிருக்கிறோம்.

இப்பொழுது நாம் தீர்மானிக்கவேண்டியத இதுவே நமக்கு போதுமா? இன்னும் ஏதாவது நமக்குத் தேவையா? என்பதுதான்.

நாம் அடிமைப்பட்டுக் கிடப்பதா?

விடுதலை கேட்டபவன் நொண்டியாக இருந்தால் – கண்ணில்லாதவனாக இருந்தால் – ஊமையாக இருந்தால் நொண்டியாக இல்லாதவனிடத்தில் அதைக் கொடுங்கள். கோவிலுள்ள துவாரப்பாலகர் சிலையைப் போல் இருக்கும். காமராசர் கக்கன் போன்றவர்களிடத்தில் கொடுங்கள் அதில் எனக்கு அட்டியில்லை தயக்கமில்லை வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் “எங்களிடத்தில் கொடுங்கள்“ என்று நாங்கள் கேட்கவில்லையே.

திராவிட நாட்டைக் கொடுத்துவிட்டால் டில்லியின் மீது படையெடுப்பார்கள் என்றா பொருள். டில்லியின் சுதந்திரம் அவர்கள் கையிலேதான் இருக்கும். இரண்டு பேருக்கும் இடையிலே நேரம் இருக்குமே தவிர அடிமைத்தனம் இருக்காது.

இப்படிப்பட்ட சுதந்திரத் தன்மானத்துடன் வாழத்தான் திராவிடர்கள் விரும்புகிறார்கள், அதற்காக நாங்கள் கழகத்தில் திட்டங்களை அவ்வப்போது தீட்டி மக்கள் மன்றத்திலே வைத்து அவர்கள் உள்ளத்தில் நல்ல உணர்ச்சியை எழச் செய்திருக்கிறோம். இந்த முறையில் திராவிட முன்னேற்றக் கழகம் நாட்டிலே இயங்கி வருகிறது. வண்டிகள் போகமுடியாத ஊருக்குக் கூட நாங்கள் செல்லுகிறோம். மக்களைச் சந்திக்கிறோம். நாட்டுப்பிரிவினைப் பற்றி எடுத்துச் சொல்லுகிறோம். தமிழ் நாட்டுத் தங்கம் தமிழ் மக்களுக்குப் பயன்படவில்லை, எனச் சுட்டிக் காட்டுகிறோம். முன்னோர்கள் வரலாறு சேரன் – செங்குட்டுவனுடைய வீரம் இவைகளை எடுத்துச் சொல்லுகிறோம்.

உள்ளத்தில் பதிய வைத்தால் வெற்றி நிச்சயம்

இவைகளையெல்லாம் கேட்கிறவர்கள் உடலை ஒரு கணம் தடவிப் பார்த்து நமக்கும் மானம் இருக்கிறதா – வலிவு இருக்கிறதா – அதை இவர்களெல்லாம் சொல்லுகிறார்களே சேரன் செங்குட்டுவன் வழியில் தோன்றியவர்கள்தானா நாம் என்றெல்லாம் சிந்திக்கிறார்கள். ஒரு காலத்தில் கடாரத்தை வென்றவன், இன்று டில்லிக்கு அடிமையாக இருப்பதா என்பதையெல்லாம் மனக்கண்முன் கொண்டு வந்து பார்க்கிறார்கள். வீர உணர்ச்சி பெறுகிறார்கள்.

கூட்டம் முடிந்து நாம் திரும்புகிற நேரத்தில் “எல்லாம் சரிதான் அண்ணா, அதற்கான போராட்டம் எப்போது?“ என்று கேட்கிறார்கள். உங்களடைய முகத்தையெல்லாம் நான் மறந்துவிட்டேன் என்று யாரும் ‘தப்பாக நினைத்துவிடாதீர்கள். அப்படிப்பட்ட வகையில் போராட்டத்தை நடத்தித் தென்னாட்டு விடுதலையைப் பெறுவதற்காக நான் யோசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். மக்களிடத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த ஆர்வத்தை நான் பெரிதும் வரவேற்கிறேன். நமது தோழர்கள் ஒவ்வொருவரும் இதை உள்ளத்திலே பதிய வைத்துக் கொண்டால் விடுதலை நிச்சயம் அதைத்தான் நாம் நடத்தும் எண்ணற்ற கூட்டங்கள் மெய்ப்பிக்கின்றன. கூட்டங்கள் விடுதலை உணர்ச்சி பெறுவதற்குப் பெரிதும் பயன்படுகின்றன, என்கிற முறையில் மேலும் மேலும் விடுதலைக்காக உழைக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

(நம்நாடு - 4, 6, 7-6-60)