அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


ஏடாக உள்ளவையெல்லாம் இலக்கியங்களாக மாட்டா!

24.2.95 மாலை, சென்னைக் கீழ்ப்பாக்கம் அரசினர் இணைப்பு மருத்துவக்கல்லூரி பனகல் மண்டபத்தில், தோழர் ப.ஜீவானந்தம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கலை, இலக்கியக் கழக ஆண்டு விழாவில் அண்ணா அவர்கள் ஆற்றிய சொற்பொழிவின் சுருக்கம் இங்குத் தரப்படுகிறது:-

மாணவர்கள் பிற்காலத்தில் எப்படிப்பட்ட துறைகளில் ஈடுபட்டாலும், மருத்துவரானாலும், பிற அலுவல்களில் ஈடுபட்டாலும், இலக்கியத்தின் உண்மைப் பயனை அடைய வேண்டும்.

வல்லான் வகுத்த வாய்க்கால்
இலக்கியத் துறையிலே இந்நாட்டுக்கும், பிற நாடுகளுக்கும் மகத்தான மாறுபாடுகள் இருக்கின்றன. பிற நாடுகளிலேயெல்லாம் இலக்கியங்கள், வரலாற்று நூல்கள், மத ஏடுகள் எனத்தனியாக வகுத்துத் தொகுத்து வைக்கப் பட்டுள்ளன. ஆனால் இந்த நாட்டிலோ ‘வல்லான் வகுத்ததே வாய்க்கால்’ என்பதுபோல, ஏடாக உள்ளவை எல்லாம் இலக்கியங்கள் என்பவையாக இதிகாசத்திற்கும் இலக்கியத்திற்கும் வேறுபாடில்லாமல் இருக்கின்றன.

நம்மிடமுள்ள ஏடுகளில் நம் முன்னோர்கள் தந்த கருத்துக் கருவூலங்களில் எவை எவை நாம் படிக்கத் தக்கவை, எவை எவை படிக்க வேண்டியவை என்று பகுத்துப்பார்த்துப் படிக்கவேண்டும். அப்படிப் பகுத்துப் பார்த்தாலொழிய பயன்தரத்தக்கவை எவை என்பது புரியாது. எதையெடுத்தாலும் இலக்கியம் என்று கருதினால் அது பயன் தராது.

எனக்கு முன்பு பேசிய நண்பர் ஜீவானந்தம் அவர்கள் இயற்கையான கவிதா சக்தி படைத்த கவ இக்பாலைப் பற்றி உங்களிடத்திலே எடுத்துச் சொன்னார். ‘கவி இக்பால், உலக விடுதலையைத் தேசபொதுவாகக் கருதி, சமதர்மக் கருத்துகளைப் பாடினார் என்று சொன்னார்.

இறவாப் புகழ்பெறும்
கவி இக்பால், உலகக் கண்ணோட்டத்துடன் பாடிய வரானாலும், முஸ்லீம்களுக்கென ஒரு தனிநாடு-பாகிஸ்தான் அமைய அவருடைய கவிகள்தான் உதவியாக இருந்தன. தன்னுடைய தாய்நாட்டைப் பற்றிப் பாடுவது குறுகிய மனப்பான்மை ஆகாது.
கிரேக்கர்களுக்கு உரிமையுள்ள சைப்ரஸ் நாடு, பிரிட்டனிடம் அடிமைப்பட்டிருந்தது. இப்பொழுது விடுதலை பெற்றுவிட்டதால், அந்த நாட்டிலே சிறைப்பட்டிருந்த புரட்சிக் கவிஞர்கள் பலர் சிறையிலிருந்து வெளிவந்துள்ளனர் என்ற செய்தியை இன்று நான் பத்திரிகையிலே பார்த்தேன். அவர்கள் பாடிய கருத்துகள் பிற்காலத்தில் தான் உலகுக்கு அறிவிக்கப்படும். அவர்கள் தங்கள் சொந்த நாட்டைப் பற்றிப் பாடிய பாட்டுகள் அவற்றிலே இலக்கியச் செறிவு இருந்தாலும் இல்லாவிட்டாலும் பிற்காலத்திலே இறவாப் புகழ்பெறும்.

வளம் பெற்ற நாடுகள்
நீண்ட நெடுங்காலம் நிலைத்து நிற்பது இலக்கியம்; அவ்வப்போது மனதுக்குத் திருப்தி தருவது ஏடுகள், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திலும் நல்ல இலக்கிய வளத்தைப் பெற்றிருந்த நாடுகள் உலகில் நான்கு, ஐந்துதாம் அவை, கிரேக்கம், ரோம், எகிப்து, சீனம், தமிழகம் ஆகியவைதான்.

அண்மையிலே நம் நாட்டுக்கு வந்து போன கணாநாட்டுப் பிரதமர் நெக்ரூமாவைப் பார்“த்து, ‘உங்கள் நாட்டு இலக்கியங்கள் என்னென்ன? என்று கேட்டால் அவர் என்ன பதில் சொல்வார். ‘எங்கள் நாட்டுக்கு இலக்கியம் நான்தான்’ என்பார். வேறு எதைச் சொல்ல முடியும்? இதைப் போல இன்னும் பல்வேறு நாடுகளுக்கும் இலக்கியம் இல்லை.
“மற்ற மற்ற நாடுகளெல்லாம் மொழிவளம், இலக்கிய வளம் பெறாத காலத்திலேயே, நம்நாடு மிக்க இலக்கியவளம் பெற்றுத் திகழ்ந்தது. அவ்விலக்கியத்தின் முழுப் பொருளையும் தெரிந்து கொண்டு படித்தால்தான் நல்ல அறிவுத் தெளிவு ஏற்படும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கம் எப்படி இருந்தது? ரோமும், சீனமும் எப்படியிருந்தன என்பதை அந்நாட்டு இலக்கியங்கள்தான் எடுத்துரைக்கின்றன.

நிம்மதி வேண்டும்
அந்த நாடுகளெல்லாம் எப்படி இருந்தன என்று பார்த்தால், எந்த மண்ணில் எந்தச் செடி வளமும் என்று தெரியும். அந்த நாடுகளில் விடுதலையும், வீரமும், நிறைந்த வளமும் இருப்பதால்தான் வாழ்க்கையில் நிம்மதி ஏற்பட்டுள்ளது. வருவாய் நிறைய இருந்தால்தான் செலவிலே நாட்டம் ஏற்படும்.

இன்று நம் நாட்டில் புலவர்களுக்குப் பஞ்சமில்லை என்று சொல்லக்கூடிய நிலை இருந்தும்கூட, எழுதப் படுகின்ற ஏடுகள் எத்தனை ஆண்டுகள் நிலைக்கும் என்று ஐயப்படத்தக்க நிலையில்தான் பல ஏடுகள் ஆக்கப் படுகின்றன. நல்ல இலக்கிய வளம் ஏற்பட வேண்டுமானால், மக்கள் வாழ்க்கையிலே நிம்மதி நிலவவேண்டும். செங்கிஸ்கானின் வீரத்தைப் பாராட்டிப் புலவன் பாடமுடியாது; அலெக்சாண்டர் பாஞ்சாலத்திலே படையெடுத்த போது அவன் ஏறிவந்த குதிரையின் குளம்படிச் சப்தத்தை வர்ணித்துப் புலவன் பாட முடியாது.

இடைவெளிக்குள் போக வேண்டும்
நல்ல கருத்துச் செறிவுள்ள பல இலக்கியங்களை ஆக்க வேண்டுமானால் வாழ்க்கையிலே நிம்மதி இருக்க வேண்டும். நல்ல இலக்கியங்கள் தமிழிலே இருக்கின்றன, ஆகையினால், அந்தக் காலத்திலே தமிழ்நாட்டு மக்கள் வாழ்க்கையிலே நிம்மதி இருந்திருக்கின்றது என்பதை அறியலாம்.
நண்பர் ஜீவானந்தம் அவர்கள் பேசுகையல் எத்தனைப் புலவர்களைச் சாட்சிக்கு அழைத்தார். அவர் இத்தனைப் பாடல்களை மேற்கோள் காட்டக் காரணம் என்ன? தான் சொல்லும் கருத்தை மக்கள் ஏற்காமல் விட்டு விடுவார்களோ என்ற ஐயப்பாடுதான் காரணம். இலக்கியக் கருத்துக்கும், நாம் நம்பும் கருத்துக்கும் உள்ள இடைவெளியை ஆராயப் பலர் பயப்படுகிறார்கள். அந்த இடைவெளிக்குள் போனால் மீளமுடியுமா என்ற அச்சம் பலருக்கு ஏற்படுகிறது. அதில் போனால்தான், தமிழ் இலக்கியத்தின் பலனைப் பெறமுடியும்.

ஒரு காலத்தில் கற்பனைக் கதைகள் நம்நாட்டில் ஏற்பட்டன. அந்தக் கதைகளைப் படிப்பதற்கு முன் தேங்காய் உடைத்துக் கற்பூரம் கொளுத்திக் காட்டி அதன் பிறகு படித்தார்கள். இடைக்காலத்தில் ஏற்பட்ட அந்தக் கற்பனைகள் பல நம் இலக்கியத்திலே இடம்பெற்றுவிட்டன. இப்பொழுது கூட ஐம்பது, அறுபது வயதுள்ள ஒருவரை அவர் மருத்துவத் துறையில் ஈடுபட்டுள்ளவரானாலும் சரி-அவரை இலக்கியத்தைப் பற்றிக் கேட்டால், பாரதத்தையும், கந்தர் அனுபூதியையும் இலக்கியம் என்று காட்டுவதைப் பார்க்கலாம். தமிழில் எழுதப்பட்டவை யெல்லாம் இலக்கியம் என்று சொல்லப்படும் நிலை இடைக்காலத்திலே ஏற்பட்டுவிட்டது. புராணங்கள் சில, நம்பிக்கைக்காக சிலவற்றை நம்பவேண்டும் என்று வற்புறுத்துவதற்காக ஏற்பட்டன. இலக்கியங்கள் சில எண்ணத்துக்காக மனத்திலே ஏற்படுகின்ற எண்ணத்தை எடுத்துரைப்பதற்காக ஏற்பட்டன.

வால்மீகி இராமாயணம், இராமன் பிறப்பதற்கு முன்னாலேயே எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. பகவான் அவதிர்பபார்; அரக்கர்கள் அழியப்போகிறார்கள்; இதை நம்பவேண்டும் என்பதற்காக அது எழுதப்பட்டது. இதைப் படித்தால் இன்ன பலனுண்டு என்று ஒரு பரிசைக் காட்டி, அந்தப் பரிசுக்காகத் தீட்டப்பட்டது புராண இதிகாசம்.

மனிதனுக்காக எழுதப்பட்டது இலக்கியம்
இலக்கியம் அப்படிப்பட்டதல்ல, இலக்கியத்தைப் படிக்கத்தான் வேண்டும் என்பதில்லை. படித்தால் படிக்கப் படிக்க, இலக்கிய எண்ணம் ஊற்றெடுத்துவரும். மனிதனுக்காக மனிதனால் எழுதப்பட்டது இலக்கியம்; மகேசனால் எழுதப்பட்டதாகக் கூறப்படுவது இதிகாசம்.

இங்கே இந்த உலகத்துக்குத் தேவையானது இலக்கியம்; அந்த உலகத்துக்கு வழிகாட்டுவது அந்த உலகத்தைப் பற்றிச் சிந்திக்க வைப்பது இதிகாசம்; மனிதனுக்குத் தேவையானது இலக்கியம்; மகேசனுக்குத் தேவையானது இதிகாசம். தமிழ் இலக்கியத்திற்கும், கிரேக்க, ஆங்கில இலக்கியங்களுக்கும் ஒருபெரிய வித்தியாசம் உண்டு. ஆங்கில, கிரேக்க இலக்கியங்களிலெல்லாம் அந்த நாட்டுப் புராண இதிகாசக் கருத்துகள் ஏராளம் இருக்கின்றன. ஆங்கிலக் கவிஞர் ஷேக்ஸ்பியரின் கவிதைகளில் பல உவமைகள் புராணக் கருத்துள்ளவையாக இருப்பதைக் காணலாம். ஆனால் தமிழ்ச் சங்க இலக்கியங்களில் புராண உவமைகள் மிகமிகக் குறைவு.

நோக்கம் வேண்டும்-பலன் கிட்டும்
இலக்கியத்தைப் படிக்குமுன், அதனாலே பெறப் போகும் பயன் என்ன என்பதை அறிந்து படித்தால், பெறத்தக்க பலன் நிச்சயம் கிட்டும். உங்களுக்கென ஒரு நோக்கம் வேண்டும்.
உதாரணமாக, மருத்துவத்துறைச் சம்பந்தமான ஒரு ஏட்டை என்னிடம் கொடு“த்தால் எனக்கு என்ன தோன்றும்? அதைப் புரட்டியதும் அது எத்தனை பக்கம், அதன் விலை என்ன, இந்த விலை இதற்குத் தகுமா என்பதைத்தான் கவனிப்பேனே தவிர, அதிலே இருக்கிற கருத்தைப் பயன்படுத்துகின்ற அளவு பயிற்சி எனக்கில்லை. எதை, எதற்காக நாடுகிறோம் என்ற தெளிவு முதலில் ஏற்பட வேண்டும்.

மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்களின் கருத்தை நம் இலக்கியங்களோடு மோதவிடுவதா, சேர்த்துக் கொள்வதா, விட்டுவிடுவதா என்ற ஐயப்பாடு இருந்து வருகிறது.

இலக்கியத்தை வெறும் இலக்கிய ரசனைக்காக மட்டும் பார்க்கும் நோக்கத்தோடு பார்த்தால் பலனில்லை. சமுதாயத்தைத் திருத்த ஏதேனும் அதில் வழி இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். எங்களையெல்லாம், ‘பலன் கருதி பயிற்சி பெறுபவர்கள்’ (யூடிலைடேரியன்ஸ்) என்று சொல்வார்கள்.

இன்று சமுதாயத்துக்கு என்ன தேவை என்பதைப் பார்த்து அதற்குப் பரிகாரம் தேடுபவர்கள் நாங்கள் மருத்துவர் மருந்து எழுதிக் கொடு“த்தால் நோய் தீர்ந்துவிடாது; நோயை அறிந்து அதற்கான மருந்தை அளவறிந்து முறையறிந்து கொடுக்க வேண்டும். அதைப்போலச் சமுதாயத்துக்கேற்ற கருத்தை நாம் பெற்றுத்தர வேண்டும்.

பொதுவான நோயைப் பாருங்கள்
இப்பொழுது சமுதாயத்துக்கு என்ன நோய்? ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு நோயைக் காட்டுகிறது. எல்லாக்கட்சிகளும் சேர்ந்து சொல்கின்ற பொதுவான நோய் என்ன? அதை மட்டும் கவனியுங்கள்; மற்ற நோய்களைக் காலம் கவனித்துக் கொள்ளும்.

பொதுவான இந்தச் சமுதாயத்திற்குள் ஒற்றுமையில்லை. ஒற்றுமையில்லாததற்குக் காரணம் என்ன? சாதி, மத, குலபேதங்கள்தான் காரணம். நாம் ஒரு நாட்டுக்கு ஒரு மொழிக்கு பண்பாட்டுக்குச் சொந்தமானவர்கள் என்பதை மறந்துவிட்டிருக் கிறோம்.
இந்தச் சாதிமத பேதம் என்னும் நோய் தீர்ந்தால்தான் சமுதாய ஒற்றுமை ஏற்படும் என்று காங்கிரஸ்காரர்களும் சொல்கிறார்கள், கம்யூனிஸ்டுகளும் சொல்கிறார்கள்; நாங்களும் சொல்கிறோம்; மற்றக் கட்சிகளும் சொல்கின்றன.

அந்த நோயைத் தீர்க்கும் மாமருந்து நம் சங்க இலக்கியத்தில் இருக்கின்றன. இலக்கியத்தை ஒரு நோக்கத்தோடு பார்த்தால் அதன் பலன்கிட்டும்; இலக்கியத்தில் கிடைக்கும் மாமருந்தைச் சமுதாயத்திற்கு எடுத்துக்கொடுக்க வேண்டும். ‘சமுதாயத்தில் பேதம் நீங்கக் கடவுள்தான் வழி’ என்கின்றனர் ஒரு சாரார்; நல்ல பகுத்தறிவாளர் என்பவர்கள், ‘அதற்கு நம் சங்க இலக்கியமே போதும்’ என்பார்கள்.

சங்கப் பாட்டில் அறிவியல் கருத்து
சங்க இலக்கியத்திலும் பாரதப் போரைப் பற்றியும், யாகயோகங்கள் பற்றியும் இருப்பதாக ஆதாரம் காட்டுவது தங்களுக்கும் சங்க இலக்கியப் பாட்டுக்கள் தெரியும் என்று காட்டிக் கொள்ளத்தான் உதவுமே தவிர, சமுதாயத்துக்குப் பயன்படாது.

சங்க இலக்கியத்தில் ஒரு பாடல் வருகிறது. ஒரு புலவன் மன்னனைப் பார்த்து, ‘நீங்கள் ஏன் அவைக்கு வரவில்லை?’ என்று கேட்டு, சூரியனை மற்றக் கோள்களெல்லாம் சுற்றிவருவது போல, மன்னனைப் புலவர்களெல்லாம் சுற்றிக்கொண்டிருப்பதாக ஒரு பாட்டுப் பாடியதாக சங்க இலக்கியத்திலே இருக்கிறது. இப்பாடல் பெரியதொரு விஞ்ஞானக்கருத்தை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறது.

‘சூரியன் நிலைத்து ஓர் இடத்திலேயே நிற்கிறது; பூமியும் மற்றக் கோள்களும்தான் சூரியனைச் சுற்றுகின்றன’ என்ற கருத்தை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் சொல்லி வைத்திருக்கிறான்.

உயர்ந்த நோக்கம் வேண்டும்
அதே சூரியனைப் பற்றிப் பதினென் புராணங்கள் என்ன சொல்கின்றன என்றால், ‘சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய ஒற்றைச் சக்கர இரதத்தில் ஏறிக்கொண்டு காலையில் கிழக்கில் வந்து மாலையில் மேற்கில் மறைகிறான்’ என்று சொல்கின்றன. கல்லை உடைத்தால் அது பாதை அமைக்கவும் உதவும் கூட்டத்தைக் கலைக்கவும் உதவும். அதுபோல, இலக்கியம் பயன்படுத்தப்படுவது உயர்ந்த நோக்கத்துக்கு இருக்க வேண்டும்.

தமிழர்கள், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், கற்பனைக் கடவுளையும், கடவுட் கதைகளையும் ஏற்றுக்கொள்ளாமலே நல்ல பகுத்தறிவோடு வாழ்ந்திருக்கின்றனர்.

தமிழர்கள் நல்ல இலக்கியங்களை, நல்ல உவமையழகு, அணியழகு, கருத்தழகுடன் வடித்தெடுத்துள்ளனர். தமிழ் இலக்கியங்களில் உள்ள உவமைகளெல்லாம் விளங்கக் கூடியதைக் கொண்டு விளங்காததை விளங்க வைப்பவையாகும்.

மற்றப் புராணங்களில், விளங்காததைக் கொண்டு விளங்காததை விளக்குவதாக இருக்கும். ஒரு வீட்டில் குழந்தை அழுவதைக் கேட்டு ஒரு பிறவிக்குருடன், ‘குழந்தை ஏன் அழுகிறது?’ என்று கேட்டான். ‘பால் இல்லாமல் அழுகிறது’ என்று அவனுக்கு மற்றொருவன் பதில் சொன்னான். ‘பால் எப்படி இருக்கும்?’ என்று திருடன் கேட்டான். ‘பால் கொக்கு போல் வெண்மையாக இருக்கும்’ என்றான் மற்றவன். ‘கொக்கு எப்படி இருக்கும்?’ என்று குருடன் கேட்டான். உடனே அவன், தன்னையை கொக்கு போல் வளைத்துக் காட்டினான். அந்தக் கையை குருடன் தடவிப் பார்த்துவிட்டு, ‘அடேயப்பா, இவ்வளவு பெரிய பொருள் குழந்தை வயிற்றுக்குள் போனால் என்ன ஆவது?’ என்று கேட்டானாம். இப்படி, புரியாதவர்களுக்குப் புரியாததைக் காட்டிப் புரிய வைக்க முயல்வதுதான் புராண உவமைகள், சங்க இலங்கியங்களில் அப்படிப்பட்ட உவமைகளைக் காண முடியாது.

தமிழில் பயன்தரும் நல்ல இலக்கியங்கள்
கொடையில் ‘கர்ணன்’ என்றால், என்ன பொருள்?’ ‘கர்ணன்’ என்பவன் யார் என்று முதலில் பார்க்க வேண்டும்; அதற்குப் பாரதக் கதையைத் தேடவேண்டும்; ‘கர்ணன் பஞ்சபாண்டவரைச் சேர்ந்தவன்’ என்று ஒருவர் சொல்வார்; ‘பஞ்சபாண்டவர் ஐந்து பேர் சரியாக இருக்கிறார்களே; பிறகு கர்ணன் எப்படி அவர்களுடன் சேர முடியும்?’ என்று மற்றொருவர் கேட்பார். பின்னர் அதற்கு விளக்கும் சொல்ல வேண்டும்.

இத்தகைய குறைபாடுகள் எல்லாம் இல்லாமல் சுவையிலும் பயனிலும் வேறு எதில் பார்த்தாலும் சரி-நல்ல இலக்கியங்கள் தமிழிலே இருக்கின்றன. அவற்றையெல்லாம் மருத்துவக் கல்லூரி மாணவர்களாகிய நீங்கள் பயின்று, அதை நல்ல முறையிலே நாட்டுக்குப் பயன்படுத்த வேண்டுமமெனக் கேட்டுக் கொள்கிறேன்.”

(நம்நாடு - 2.3.59)