அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


ஏழை மக்களின் வாக்கு! முதலாளிகள் நட்புறவுக்கா?

“இந்தியப் பேரரசு கையாண்டு வருகின்ற நிதிக் கொள்கையானது, திட்டத்தின் பெயரால் மக்களை அறவே சுரண்டுவதாக அமைந்திருக்கிறது. புதிய வரிகளின் இன்றியமையாமை குறித்து எத்தகைய வாதங்களைக் கூறுவதாக இருந்திட்ட போதிலும், வரிச்சமையை மேலும் தாங்கிக் கொள்வதற்கு, மக்களின் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களும் தயாராக இல்லை.

“திட்டம் நிறைவேற்றப்பட்டாக வேண்டும், எனவே, அதற்குத் தேவைப்படக்கூடிய நிதிச்சுமை அவ்வளவையும் மக்கள் தாங்கிக் கொண்டே தீர வேண்டும் – எனக் கூறப்பட்டு வருவது ஒன்றைத் தவிர்த்து, தான் செய்ததனாலும் செய்யாமல் விடுத்ததனாலும் ஏற்பட்ட விளைவுகளுக்கும், தனக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய பெரும் கேடுபாடுகளுக்கும், தக்கதோர் விளக்கத்தைத் தர அரசால் இயலவில்லை.“

இக்கருத்துக்களை, மாநிலங்கள் அவையில் நிதிநிலை அறிக்கை மீது தாம் உரையாற்றிய பொழுது அண்ணா அவர்கள் எடுத்துக் கூறினார்கள்.

குறைபாட்டின் காரணம் அறிக!

“திட்டத்தை நிறைவேற்றுவதில், கலப்புப் பொருளாதாரத்தைக் கை கொண்டு செயல்பட்டு வருகிறது, அரசு கலப்படம் குற்றமாகும், பொருளியல் கோட்பாடுகளில் கலப்படம் செய்வதானது பெருங்குற்றமாகும். இதன் விளைவாக, இந்தத் தலைமுறையும் எதிர்காலத் தலைமுறையும் மிகுதியான விலை கொடுத்தாக வேண்டும்.

“எனவே, பொருளியல் விதிகளுக்கு ஒத்த நடைமுறைகளை அரசு மேற்கொள்ள முன்வர வேண்டும். பொருளியல் இலட்சியத்தை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கக்கூடிய குறிப்பிட்ட ஒரு த்துவத்தை அரசு பெற்றில்லாததே இக்குறைபாட்டிற்கான முழுக்காரணமாகும். இத்துணைக் கண்டத்தில் இயங்கிவரக்கூடிய ஒவ்வொரு அரசியல் கட்சியினுடைய மூல முழக்கங்களையும்தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளுவதையே பேரரசு விரும்புகிறது.

மக்கள் வறுமைக் கோட்டின் கீழே...!

“விதிக்கப்பட்டிருக்கும் வரிச்சுமையின் பெரும் அளவைப்பணம் படைத்த பகுதியினர்தான் தாங்கி வருகின்றனர், ஏற்பட்டிருக்கின்ற தொழில் வளர்ச்சியினால் படிப்படியாக ஏழைமக்கள் பலன் பெற்று வருகின்றனர் – என நிதி நிலை அறிக்கையின் மீது பேசிய பொழுது, நிதி அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், இக்கருத்துக்கு முழுதும் மாறுபட்ட நிலையில், இன்று அமைச்சராகவும் காங்கிரசுக் கட்சியைச் சார்ந்த குறிப்பிடத்தக்கவராகவும் இருந்து வருகின்ற டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் அவர்கள், அரசு கையாண்டு வரக்கூடிய நிதிக் கொள்கையின் விளைவாக ரூபாயின் மதிப்பு குறைந்து விட்டிருக்கிறது, 95 சதவிகித மக்கள் வறுமையின் எல்லையிலும் அதனிலும் சரி பகுதியினர் தாழ்ந்த நிலையிலும் வாட்ட முற்றுக் கிடக்கின்றனர்“ எனக்கு குறிப்பிட்டிருக்கிறார்.

முதலாளிகளின் நட்புறவையும் ஏழை மக்களின் வாக்குகளையும் பெற்று, ஒரே அரசியல் கட்சயிால் 15 ஆண்டுக் காலமாக ஆட்சி புரியப்பட்டு வருகின்ற இத்துணைக் கண்டத்தில் இந்த முரண்பட்ட நிலைதான் இன்று நிலவி வருகிறது.

இலஞ்சமும் ஊழலும் உச்சம் பெற்றன!

“வசூலிக்கப்படாமல் நிலுவையாக இருந்து வரக்கூடிய ரூ.118 கோடி வருமான வரித் தொகையில் சரிபகுதியை வசூல் செய்வதற்குரிய தக்க முறைகளை அரசு மேற்கொண்டிருக்கும் பட்சத்தில், மக்கள் மீது மேலும் புது வரிகளை விதிக்க வேண்டிய தேவை அரசுக்கு ஏற்பட்டிருக்க முடியாது. இலஞ்சமும் ஊழலும், உறவினர்களுக்குப் பதவி தேடித் தருவதும் அரசு நிர்வாகத்தில் உச்சம் பெற்றிருக்கின்றன.

“நர்மதைப் பள்ளத்தாக்கு நிறுவனத்தில், முந்திரா, ஊழல் விவகாரத்தில் குற்றவாளி எனக் கூறப்பட்ட எச்.எம்.பட்டேல் அவர்கள், கொழுத்த சம்பளம் பெறக்கூடிய ஒரு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருப்பதைக் கொண்டு, இந்த அரசைக் குறித்து மக்கள் எப்படி மதிப்பிட்டுக் கொள்வார்கள்?

“தென்னாட்டைத் தொழில் மயமாக்குவதில், அரசாங்கம் ஏற்றத் தாழ்வுக் கொள்கையைக் கடைபிடித்து வருகிறது, வட்டார ஏற்றத் தாழ்வைப் போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்திய அரசியலில் வேதனை தரும் கூரிய முள்ளாகவே அது இருந்து வரும்.

“வேளாண்மை வளர்ச்சி, மீன் தொழில் முன்னேற்றம் போக்குவரத்து வசதி ஏற்பாடுகள் ஆகியவற்றைப் பொறுத்தவரையில், திட்டமிட்டவர்கள் தென்னகத்தை முற்றிலும் புறக்கணித்து விட்டார்கள்.“

(நம்நாடு - 22-5-1962)