அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


அமைச்சர்களுக்கு அண்ணா அறைகூவல்

“ஐந்தாண்டுத் திட்டங்களைக் காட்டிக் காங்கிரஸ்காரர்கள் உங்களிடம் ஓட்டுக் கேட்க வருவார்கள். இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களுக்கு அறைகூவல் விடுகிறேன். அவர்கள் இந்த ஐந்தாண்டுத் திட்டங்களை வைத்தே தேர்தலில் போட்டியிடட்டும், நாங்கள் அதனை எதிர்த்துப் போட்டியிடுகிறோம். ஒரே மேடையில் தனித் தனியாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொர் அமைச்சரும் ஐந்தாண்டுத் திட்டங்களில் சாதனைகளையும், அதனால் நாட்டு மக்களின் வாழ்வில் உண்டான உயர்வையும் எடுத்து விளக்கட்டும். அமைச்சர் பேசிய பிறகு அவைகளை மறுத்து நான் பேசுகிறேன், என் மறுப்புக்குப் பிறகு அவர்கள் பதில் அளிக்கட்டும். அதற்குப் பிறகு நாட்டு மக்கள் அவர்களுக்கே ஓட்டளித்தால் தாராளமாக அவர்களே ஆளட்டும் – நாங்கள் தடையாக இருக்க மாட்டோம்“ என்று 7.9.61இல் ஆவடி தி.மு.க. சார்பில் நடைபெற்ற தேர்தல் நிதியளிப்புக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அண்ணா அவர்கள் அறைகூவல் விடுத்தார்கள். அவர் ஆற்றிய உரையின் சுருக்கம் இங்கு தரப்படுகிறது.

இந்த வட்டத்தில் இவ்வளவு பெரிய கூட்டத்தை ஏற்பாடு செய்து கழகத்துக்குத் தேர்தல் நிதியளித்தும் எனக்கு மலர் மாலைகளும் கைத்தறி ஆடைகளும் அணிவித்தும் மகிழ்வித்த உங்களுக்கு என் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காலங் கழித்துவரக் காரணம் என்ன?

நான் வழக்கமாகவே கூட்டத்திற்குக் காலந்தாழ்த்தி வருகிறேன் என்ற தவறான கருத்து உங்களிடையே நிலவி வருகிறது என்பதை நான் அறிகிறேன். நான்கு நாட்களாக இராமநாதபுரம் மாவட்டத்திலும் சேலம்மாவட்டத்திலும் கடுமையான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு அலுத்து களைத்து, காஞ்சியும் வந்தேன். நேற்று ஒரு நாள்தான் ஓய்வு கிடைத்தது, ஓய்வு என்ற போதிலும் காலையிலும் திருமணம், மாலையிலும் திருமணம், இரவிலே ஹோம் லண்டு இதழுக்கும், ‘திராவிட நாடு‘ இதழுக்கும் எழுத வேண்டிய நிலை. என்ன எங்கே விடுகிறீர்கள்? கசக்கிச் சக்கையாக அல்லாவ பிழிகிறீர்கள்? அப்படியும் என் நண்பர் சி.வி.எம். அண்ணாமலை குறித்த காலத்தில் கூட்டத்திற்குப் போக வேண்டும் என்று கேட்டுக் கொண்டபடி 5.30 மணிக்கே நான் தயாராகிவிட்டேன். ஆனால் என்னுடைய கார் பழுதாகி இருந்தது. இன்னொருவரிடம் கார் கேட்டோம், அவர் காருக்கு என் காரில் ஏற்பட்டதைப் போன்றே பழுது ஏற்பட்டு இருந்தது. பிறகு என் முகத்தை அண்ணாமலையும், அண்ணாமலை முகத்தை நானும் பார்த்து, ‘எப்படிக் கூட்டத்திற்குப் போவது?‘ என்று யோசித்துக் கொண்டிருந்ததோம். 7 ஆகிவிட்டது. பிறகு வேறு ஒருவர் கார் தந்த உதவினார். கார் பழுதடைந்து விட்டது‘ என்பதை தவிர வேறு சாக்கு இல்லையா என்றுகூடச் சிலர் என்னைக் கேட்கலாம். ஒரு நல்ல மோட்டார் காரைக் கூட வைத்துக் கொள்ள முடியாத பஞ்ச நிலைமைதான் இதற்குக் காரணமே தவிர வேறில்லை. வேண்டுமென்றே காலம் தாழ்த்தி நான் வருவதில்லை. இவைகளை இதுவரையில் நான் வெட்ட வெளிச்சமாகச் சொன்னதில்லை. உங்களுக்குச் சொல்லித் தீரவேண்டுமே என்பதால் சொல்லிவிட்டேன்.

எனக்குத் தெரியாதா?

நான் என்ன மந்திரிகளைப் போல் மெருகு குறையாத காரும், அட்டவணையும் அதைப் பார்த்துச் சொல்ல ஆட்களுமா வைத்திருக்கிறேன், அவர்கள் ஓர் ஊருக்குப் போவதென்றால் அந்த மாவட்டக் கலெக்டரும், துணைக் கலெக்டரும், போலீஸ் அதிகாரிகளும் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டுத் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் அங்கு போனவுடன் அங்கே குறிப்பிட்ட வேலையைச் செய்துவிட்டு வேறு இடத்திற்குப் போகிறார்கள். எனவே தான் 10.30 மணிக்கு ஜமீன் பல்லாவரம் 10.34க்கு ஆலந்தூர் என்று அட்டவணை போடமுடிகிறது. அவர்களால்! அந்த அட்டவணையை என்னால் போட முடியாதா? ஆனால் நீங்கள் என்ன அந்த அட்டவணைப்படி நடக்க விடுவீர்களா?

நான் கூட்டத்திற்குத் தாமதமாக வருவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ஆனால் அதுவேதான் காரணம் என்பதல்ல. நான் முன்னதாக வந்தால் வேறு பலருடைய நல்ல பேசச்சுக்களைக் கூடக் கேட்க மறுக்கிறீர்கள். நாங்கள் தாமதமாக வந்தால் அவர்கள் பேச வேண்டியதையெல்லாம் பேசி முடிப்பார்கள். நான் நேரம் கழித்து வந்ததால்தான் உங்கள் ஊராட்சிமன்றத் தலைவர் கேசவன், உங்கள் ஊராட்சி மன்றச் சாதனைகளை நன்றாக விளக்க, அதை நீங்கள் கேட்டீர்கள். நண்பர் சி.வி.இராசகோபாலும், சி.வி.அண்ணாமலையும் நான் பேசாத பல நல்ல கருத்துக்களை எடுத்து விளக்கினர்.

ஆளும் வர்க்கமும் அவதிப்படும் வர்க்கமும்
இந்த நாட்டை யார் ஆளவேண்டும் என்பதை நிர்ணயிக்க வேண்டியவர்கள் இந்த நாட்டுப் பாட்டாளி மக்கள்தான். ஆனால் இந்த நாட்டு அரசியலில் உள்ள விசித்திரம் என்னவென்றால், படித்தவர்கள் பணக்காரர்கள் ஆகியவர்கள் கைகளிலே ஆட்சி சிக்கி, அதற்காக ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை ஏழைகளின் ஓட்டுகளும் அதற்குப் பயன்பட்டு வருகின்றன. படித்தவர்களும், பணக்காரர்களும் இங்கே இருக்கின்ற ஒளி விளக்குகள் போலாகி விடுகிறார்கள். இன்று தி.மு.க. கூட்டத்திற்கு ஒளி தருகின்ற இநத் மின் விளக்குகள் நாளைய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்திற்கும், நாளை காங்கிரஸ் கூட்டத்திற்கும், மற்றொரு நாள் பெரியபாளையத்தமன் திருவிழா விற்கும், பிறிதொரு நாள் கனவான் வீட்டுக் கல்யாணத்திற்கும் குறிப்பாக யார் யார் அதற்குரிய கட்டணத்தைத் தருகிறார்களோ அவர்களிடத்தி்லேயேல்லாம் அது ஒளி தரும், அதைப் போல பணக்காரர்களும் படித்தவர்க்ளும், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தங்கள் ஒத்துழைப்பைத் தந்து கொண்டு வருகிறார்கள்.

வெள்ளையர் ஆட்சியிலும் படித்தவர்கள் உத்தியோகம் பெற்றார்கள். இன்று காங்கிரஸ் ஆட்சியிலும் உத்தியோகம் பெறுகிறார்கள். அதே போல், பணக்காரர்கள் வெள்ளையர் ஆட்சியில் அவர்க்ளுடன் கைக்குலுக்கினார்கள், இன்று காங்கிரஸ் ஆட்சியிலும் காங்கிரசாருடன் கைக்குலுக்கிறார்கள். ஆனால் அந்த அந்நியன் ஆட்சியிலும் இந்த அந்நியன் ஆட்சியிலும் பாட்டாளி மக்களும், தொழிலாளத் தோழர்களும்தான் தொல்லைகளுக்கு ஆளாகித் தவிப்பவர்கள்.

ஏழை பெற்ற பலன்?

இந்த உத்தம புத்திரர்கள் ஆட்சியில் வேலை செய்வோர், தொழிற் சாலையில் பணிபுரிவோர், மரம் வெட்டுவோர், விறகு விற்போர், குப்பை கூட்டுபவர்கள், மலம் அகற்றுபவர்கள், கல்லுடைப்பவர்கள், பாரவண்டி இழுப்பவர்கள் நாயினும் கேடாய் நலிகிறார்கள்.

இந்தக் காங்கிரஸ்காரர்கள், ‘இதோ பார் ஐந்தாண்டுத் திட்டம்‘ என்று புள்ளி விவரங்களை அள்ளி வீசுகிறார்கள். இந்த ஐந்தாண்டுத் திட்டங்களால் ஏழை – பரம ஏழை யானான். லட்சாதிபதி கோடிசுவரனானான். நடுத்தர மக்களும், ஏழைகளும், விலைவாசிகள் விஷம்போல் ஏறியதால் பகல் பட்டினி, இராப்பட்டினிகளாய்க் காலம் கழிக்கிறார்கள்.

வெள்ளைக்காரரன் இந்த நாட்டை விட்டுச் செல்லும் போது கஜானாவைக் காலியாக்கி உங்களிடம் வெறும் சாவியை மட்டும் கொடுத்து விட்டுப் போகவில்லையே. அவன் சுரண்டியது போக – அவன் சேமித்து எடுத்துக் கொண்டது போக எஞ்சிய தொகையாக ரூ.1,178 கோடியைத் தங்கமாகவும், வெள்ளியாகவும், ஸ்டரிங்க பேலன்சாகவும் வைத்து விட்டுச் சென்றான்.

அவன் எழும்பூர் ரயில் நிலையத்தை இடித்துவிட்டுச் செல்லவில்லை, சென்ட்ரல் ரயில் நிலையத்தைத் தரை மட்டமாக்கி விட்டுச் செல்லவில்லை, துறைமுகங்களைத் தூர்த்துவிட்டுச் செல்லவில்லை, எல்லா அலுவலகங்களையும் அங்கங்கே செட்டாகவும், சீராகவும் வைத்து விட்டு் தான் சென்றான்.

வாட்டம் தீரவில்லையே

இவர்கள் ஆட்சிக்கு வந்த பல கோடி ரூபாயை மக்களை வாட்டி வதைத்து வரியாக வாங்கிய பிறகும், வெளிநாட்டிலிருந்து கடன் வாங்கிய ரூ.4,791 கோடியும் சேர்த்து – ஆகமொத்தம் ரூ.10,000 கோடிக்கு இந்த நாட்டு மக்க்ளிடம் இவர்கள் கணக்குக் காட்ட வேண்டியவர்களாவார்கள்.

இவ்வளவு தொகை செலவாகியும், ‘நாட்டு மக்களிடம் வாட்டம் தீரவில்லையே‘ என்று கேட்டால், ‘ இந்த அணண்ாதுரை பேச்சை நம்பாதீர்கள், அவனுக்கென்ன அரசியல் தெரியுமா? அவன் உயரம் நாலரை அடிதானே‘ என்று பேசித் தங்கள் மேதாவிலாசத்‘தைக் காட்டிக் கொள்வார்கள். புதிய காங்கிரஸ்காரர்கள். சற்று விவரம் தெரிந்த காங்கிரஸ்காரர்கள். ‘ஆமாம்‘, கடன்தான் வாங்கினோம், எங்கள் வீட்டுக்கா எடுத்துக் கொண்டு போய்விட்டோம். எல்லா உங்கள் இழவுக்குத்தான் அழுகிறோம்‘ என்று சற்றுக் காரசாரமாகப் பேசிவிட்டுச் சரியான பதில் தந்ததாகத் தங்கள் சகாக்களிடம் சபாஷ் பெறுவார்கள்.

மற்றவர் மடியையும் தடவுகின்றர்

இளமையிலேயே விதவையாகிவிட்ட ஒரு பெண்ணைக் கண்டு ‘குசலம்‘ விசாரிக்க வந்த பெரியவர், என்னம்மா சௌக்கியமா? உன் கணவர் இறந்து மூன்றாண்டுகள் ஆகின்றனவே, எப்படியம்மா வயிற்றைக் கழுவுகிறார்?‘ என்று பரிதாபப்பட்டு அவர் கேட்க, ‘அவர் இறந்த பிறகு எனக்கு மூன்று குழந்தைகள், என்று சொல்லிக் கொண்டே வாய் எடுத்தால், வந்தவர் அவள் கற்பைப் பற்றி என்ன கருதுவாரோ அதைப்போன்ற லட்சணத்தில்தான் காங்கிரஸ்காரர்கள் வெள்ளைக்காரன் வைத்துவிட்டுப் போன சொத்தையும், அழித்துவிட்டு மற்ற தட்டுக்காரர்களின் மடியையும் தடவி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கடன் வாங்கிய தொகையை இவர்கள் எடுத்துக் கொண்டார்களா அல்லவா என்பதல்ல பிரச்சனை அப்படி எடுத்துக் கொண்டாலும் சட்டம் அவர்களைச் சும்மா விடாது. அவர்கள் அப்படி எடுத்துக் கொண்டார்கள் என்று தப்புப் பிரச்சாரம் செய்கின்ற ஈனத்தனமாக அரசியலை நாங்கள் நடத்தவில்லை.

பத்திரிகைகளைப் படிக்கின்ற உங்களுக்கு நன்றாகத் தெரியும் – துருக்கி நாட்டு முன்னாள் முதலமைச்சர் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் வசூலித்த தொகையையும் கணக்குக்காட்ட வேண்டும் என்று சொல்லி, அவரைக் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தியுள்ள ஆயுள் தண்டனை விதித்திருக்கிறார்கள். இதைச் சொல்வதால் இந்த நாட்டு மந்திரிகளுக்கு அந்தநிலை வருவதை நாம் விரும்புவதாகத்தயவு செய்து யாரும் தவறாகக் கருதவேண்டாம்.

காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் கண்ட பலன் என்ன?

எங்கள் ஊரில் ஒரு பெரிய பணக்காரர் இருக்கிறார், அவர் வட்டிக்குக் கொடுப்பது வழக்கம், அவரிடம் சென்று யாராவது என் வீட்டின் பேரில் ஓர் ஆயிரம் ரூபாய் பணம் கொடுங்கள் என்று கேட்டால், அதற்கு உடனே பதில் சொல்லமாட்டார். ‘இன்று வீட்டிற்கு நானே வந்து பதில் சொல்கிறேன். என்று சொல்வார்கள். கடன் கேட்டவர் இவ்வளவு பெரியவர் நம் வீட்டுக்கு‘ வருகிறாரே என்று நினைத்து இரண்டு ரூபாய்க்குப் பலகாரம் வாங்கி வந்து வைத்திருப்பார், அந்தப் பணக்காரர், தான் சொன்னபடியே அவருடைய வீட்டிற்கு முன் காரில் வந்து இறங்குவார். கையில் உள்ள தடியால் தரையைக் குத்திப் பார்ப்பார். சுவரைக் குத்தி, மண் சுவரா, கல் சுவரா என்று பாரப்பார். கதவும், வாயிற்படியும் தேக்கா, வெண் தேக்கா, அல்லது காட்டுமரமா என்று பார்ப்பார். பிறகு வீட்டில் வயது வந்த உழைக்கக் கூடிய வாலிபர்கள் இருக்கிறார்களா என்றும் பார்ப்பார். இப்படி, ‘ஆயிரம் ரூபாய்க்கு தகுமா, தகாதா?‘ என்று பார்த்து, ‘தகாது‘ என்றால் அந்த வீட்டுக்காரனிடம், ‘ஏனப்பா, இவ்வளவு பணம் கேட்கிறாய்? நீதானே பின்னாலே திருப்பியடைக்க வேண்டும்? ரூ.300 போதாதா?‘ என்று சொல்ல, அவன் ரூ.400 ஆவது தேவை என்று கேட்டு, ‘சரி‘ என்று கொடுப்பார்.

வெளிநாட்டார் வருகையின் மர்மமும் அதுதானா?

அதைப்போல, அயல்நாட்டவர்கள் ஆண்டுக்கொருமுறை – ஏன், திங்களுக்கு ஓருமுறை கூட இந்தியாவுக்கு வந்த சுற்றிப் பார்க்கிறார்கள். இந்த நாட்டின் எழில், தொழில் வளத்தை, மக்கள் நலத்தைக் கண்டறிந்து போக அல்ல –கொடுத்த கடன் திரும்பி வருமா என்பதை உளவு அறிந்து போகத்தான் வருகிறார்கள். இல்லாவிட்டால் சவூதி மன்னரும், ரஷ்ய நாட்டுக் குருஷ்சேவும், ஆங்கில நாட்டு அரசியும் இங்கே வர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

மாமனார் வீட்டுக்கு மருமகன் அடிக்கடி வந்தால் மாமனால் மீது மருமகனுக்குக் காதல் என்றா பொருள்? மனைவி அங்கு இருக்கிறாள் – அவள் இல்லாமல் அவன்படும் அவதி அவனுக்குத்தான் தெரியும். எனவே மனைவியைச் சீக்கிரம் அனுப்பச் சொல்லி அவன் அங்கு அடிக்கடி சென்று வருகிறான் என்பதுதானே பொருள்? அதைப போலத்தான் கடன் கொடுத்துக் கொண்டிருக்கிற அயல்நாட்டவர்கள் நம் நாட்டிற்கு வந்த போய்க் கொண்டிருப்பதும்.

அவர்கள் நேருவை நம்பியோ, சுப்பிரமணியத்தை நம்பியோ, பக்தவச்சலத்தை நம்பியோ கடன் கொடுக்கவில்லை. உங்களையும், என்னையும் நம்பி, உங்கள் உழைப்பை நம்பி, உடலை நம்பி, உயிரை நம்பி, இந்த நாட்டை நம்பி காட்டை நம்பி, நம் வீட்டை நம்பித்தான் கடன் கொடுத்தார்கள்.

வட்டி செலுத்தவே வழி இல்லையே!

நாம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.143 கோடி வட்டி செலுத்த வேண்டும். நாம் ஆரம்பிக்கின்ற தொழில்களில் சுமார் ரூ.300 கோடியாவது ஆண்டுக்கு லாபம் வந்தால்தான் நம் வாழ்க்கைக்குப் பயன்பட்டது போக வட்டியையும், சிறிது அசலையும் திருப்பித் தரமுடியும். ஆனால்,நம் திட்டங்களின் வட்டியைத் திரும்பத் தரும்அளவுக்குக் கூட லாபம் வருவதில்லையே!

இதனை நான் சொன்னால், உடனே ஆளும் கட்சியினர் சொல்வார்கள் – இப்போதுதானே தொழில்களை ஆரம்பிக்கிறோம். இந்தத் தொழில்கள் வளர்ந்து, இறக்குமதி குறைந்து ஏற்றுமதி அதிகரித்தால் கடனை தீர்த்துவிடும் என்று. படித்த காங்கிரஸ் காரர்கள் சற்றுக் கோபமாக இருந்தால், ‘இந்த அண்ணாதுரைக்கு இந்த அடிப்படை பொருளாதாரம் கூடப் புரியவில்லையே‘ என அங்கலாயித்திருப்பார்கள், படிக்காத காங்கிரஸ்காரர்கள். ‘இந்த அண்ணாதுரை, தன்னுடைய வீட்டிலிருந்து கொண்டு வந்தா கடன் அடைக்கப் போகிறான்?‘ என்று கேட்டு, என்னை மட்க்கி விட்டதாகக் கருதி கைத்தட்டல் வாங்குவார்கள்.

எந்த அளவில் இருக்கிறோம்?

தொழில் வளர்ந்தால் ஊதியம் பெருகும், ஊதியம் பெருகினால் கடனை அடைக்க முடியும் என்ற பொருளாதார அரிச்சுவடியை அறியாதவன் அல்ல நான். நான் அவர்களுக்குச் சொல்லிக் கொள்வேன் – வாதத்திற்ககாகவே அவர்கள் கூற்றை எடுத்துக் கொண்டாலும், இந்தச் சைக்கிள் தொழிற்சாலை, மோட்டார் தொழிற் சாலை ஆகின்ற அளவுக்குத் தொழில் வளர வேண்டும். ஆனால் இப்போது நமக்கு இருக்கின்ற தொழில் திறமை வெளிநாட்டுச் சாமான்களை வரவழைத்து, மோட்டார்களாகப் பூட்டும் அளவுக்குத் தானே இருக்கிறது?

இதைச் சொல்வதால் நான் உங்கள் தொழில் திறமையைப் பழிப்பதாக யாரும் தவறாகக் கருதவேண்டாம். இன்றைக்கு இருக்கின்ற வாய்ப்பு வசதிகளைக் கொண்டு தொழில் துறையில் நாம் முன்னேறக் குறைந்தது 25 ஆண்டுகளாவது பிடிக்கும், அதற்குள் வட்டியோ, அசலைவிட அதிகமாகிவிடும்.

தொழில்களைத் தேசிய மயமாக்குகின்றோம் என்று வாய்ப்பாறை கொட்டும் காங்கிரசார் தனியார் துறைக்கு லாபம் தரத்தக்க சினிமாக் கொட்டகைகள், பல தொரில் நிலையங்கள், பஸ் தொழில்கள், பெரிய பெரிய ஓட்டல்கள், பெரிய பெரிய துணிக்கடைகள், நகைக்கடைகள் இவைகளையெல்லாம் தேசியமயமாக்காமல் தனியார் துறைக்கு விட்டுவிட்டு லாபம் தரமுடியாத தொழில்களை வைத்திருப்பதில் என்ன பயன்?

படமும் தெரியும் – பாடமும் கிடைக்கும்

இந்த ஐந்தாண்டுத் திட்டத்தினால் பொதுத் துறைக்கும் தனியார் துறைக்கும் உள்ள வித்தியாசத்தை, ஓர் உதாரணம் சொன்னால் உங்களுக்கு நன்றாகப் புரியும். நம் வீட்டுப் பசு விலை ரூ.200, அது தரும் பாலோ 1/8படி, எதிர் வீட்டில் இருப்பது சிந்து பசு, விலை ரூ400. அது தருகிற பாலோ 41/2 படி, நாம் எதிர் வீட்டுக்காரனுக்கு அவன் அந்தப் பசுவை வாங்குவதற்கு ரூ.200 கடன் வேறு கொடுத்திருக்கிறோம். பராமரிப்பு் சசெலவு போக அவனுக்கு மாதம் நிகர லாபம் ரூ.1500, நமக்குப் பராமரிப்பு செலவுக்கு நட்டம் ரூ.50 கறவை நின்றவுடன் சந்தைக்கு அம்மாட்டை விற்றுவிடுகிறோம். வீட்டில் மனைவியோ, இந்த சின்ன வியாபாரம் கூட செய்யத் தெரியவில்லையே, உங்களுக்கு? இதை வீட்டில் கட்டித் தீனி போட்டால் நமக்குத்தானே நட்டம்? எனவே அடுத்த சந்தையிலாவது விற்றுவிட்டு வந்துவிடுங்கள்‘ என்று சொல்கிறாள். அடுத்த வாரம் சந்தைக்கு ஓட்டிப் போகிறோம். 75 ரூபாய்க்குக் கேட்கிறார்கள். 200க்கு வாங்கிய மாடு ஆயிற்றே என்று விற்க மனமில்லாமல் மனைவி கோபித்தாலும பரவாயில்லை என்று வீட்டிற்கு ஓட்டி வருகிறோம். வந்தவுடனே மனைவி, ‘இந்த சனியனைத் தொலைத்து விட்டத்தான் இனி வீட்டிற்கு வரவேண்டும்‘ என்கிறாள். எனவே,அடுத்த வாரம் எப்படியாவது விற்றுத் தொலைக்க வேண்டும் என்று எண்ணி சந்தைக்கு ஓட்டி செல்கிறோம் ஆனால் சந்தையில் ‘இந்த மாடு வத்தலும் தொத்தலும் இருக்கிறது, இது அறுப்பதற்குத் தான் பயன்படும், இது தோல் தான் கிடைக்கும் எனவே ரூ.50க்குக்கொடு என்று கேட்கிறார்கள். வேறு வழியில்லாமல் நாமும் விற்று விடுகிறோம். எனவே அந்த பசு வாங்கி 6 மாதம் பராமரித்ததில் பராமரிப்பு செலவு நட்டம் ரூ.300, அசல் நட்டம் ரூ.50, ஆக மொத்தம் 450 நட்டம். அசலுக்கு வட்டி பார்த்தால் அது வேறு ஆகிறது, அதை வேண்டுமானால் விட்டு விடுங்கள் இந்த உவமையை மனதில் கொண்டு நம்முடைய பசுடவை பொதுத் துறைக்கம், சிந்து பசுவை தனியார் துறைக்கும் ஒப்பிட்டுப் பார்த்தால் படமும் தெரிவும் பாடமும் கிடைக்கும்.

எதனைச் செய்வோம்... எங்கே விற்போம்?

எனவே நாம், தொழில் துறையில் முன்னேறி, அமெரிக்காவைவிடச் சிறந்த இயந்திரங்களையா செய்து அனுப்ப போகிறோம்? ரஷ்யாவை விடச் சறிந்த ராக்கெட்டுகளைச் செய்து அனுப்பப் போகிறோம்? ஜெர்மனியை விடச் சிறந்த மருந்துகளையா செய்து அனுப்பப் போகிறோம். சுவிட்சர்லாந்தைவிடச் சிறந்த கடிகாரங்களையா செய்து அனுப்பப் போகிறோம்? இங்கிலாந்தைவிடச் சிறந்த இயந்திரங்களையா செய்து அனுப்பப் போகிறோம்?

அப்படி அந்த நாட்டுப் பொருள்களைப் போல் செய்தாலும், நாம் உலக மார்க்கெட்டில் எங்கு விற்பது? அந்த நாடுகளைவிடத் தரக்குறைவாக செய்தால், வாங்குவதற்கு நம்மைவிடத் தாழ்ந்த நாடுகள் தான் கிடைக்கும் நம்மைவிடத் தாழ்ந்த நாட்டில் பணம் எங்கே இருக்கப் போகிறது?

பணத்தைப் பாழாக்குவதா?
எனது நண்பர் சி்வி.ராசகோபாலின் தந்தையார் நிறையச் சொத்து வைத்துவிட்டுப் போனார். அந்தச் சொத்தை இவர் அதிமாக்க, ‘அதோ தெரிகின்ற ஆறு அடுக்கு மாடி வீடு என்னுடையது, இதோ தெரிகிறதே இவ்வளவு வயல்களும் என்னுடையது, இரும்புப் பெட்டியில் உள்ள பணமோ குறையவில்லை என்று அவர் காட்டினால், அவரைக் கெட்டிக்காரர் என்று பாராட்டுவோம். அல்லது சொத்துக்களை நான் இழந்ததற்குக் காரணம் இந்தப் பள்ளியைக் கட்டினேன், அந்த மருத்துவமனையை உண்டாக்கினேன், நான் சம்பளம் கட்டிப் படிக்க வைத்த பையன் ஒருவன் துணைக் கலெக்டராக இருக்கிறான், இன்னொருவன் போலீஸ் அதிகாரியாக இருக்கிறான்‘ என்றுஅவர் சொன்னால், பாவம், ஏதோ நல்ல காரியங்களுக்குச் செலவு செய்து சொத்துக்களை அழித்துவிட்டார் என்று அனுதாபப்படுவோம். ஆனால் இதையெல்லாம் விட்டுவிட்டு, 10 ஆண்டு குதிரைப் பந்தயப் புத்தகங்களை நன்றாக பைண்டு செய்து வைத்துக்கொண்டு, என்னுடைய அத்தனைப் பணமும் இதிலேதான் இருக்கிறது‘ என்று காட்டினால், அவரைப் பைத்தியக்கார என்று மட்டுமல்ல சமூகத் துரோகி என்றுதான் சொல்வோம்.

நறுமணம் விளம்பரமாகாதா?
அதைப்போல, இந்த 15 ஆண்டு ஆட்சியில் வெள்ளைக்காரன் வைத்துவிட்டுப்போனது போக கடன் வாங்கியது போக இந்த நாட்டு மக்களுக்கு உருப்படியான காரியங்கள் செய்ததை எடுத்துச் சொன்னால், அவர்கள் இருக்கிற திக் நோக்கித் தெண்டனிடக் காத்துக் கிடக்கிறேன். அதை விட்டுவிட்டு, ‘அவன் பேச்சை நம்பாதே – இவன் பேச்சை நம்பாதே, அந்தக் கட்சி அப்படி-இந்தக் கட்சி இப்படி‘ என்று ஊர் ஊராக ஓடி அலைந்து சொல்லித்திரிவானேன்?

நாட்டு மக்களுக்கு நன்மை செய்திருந்தால், நீங்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யத் தேவையே இல்லையே. நல்ல சென்ட் கடையாக இருந்தால், அதற்கு ‘சென்ட் இங்கு விற்கப்படும் என்ற விளம்பரப் பலகை ஏன்? அதன் நறுமணமே விளம்பரமாகப் பயன்படாதா?

நாட்டுக்கு உதவாத் திட்டம்

ஒரு கதையில் தந்தை தன் பிள்ளைகளை அழைத்துப்பணம் கொடுத்து, ‘வீடு நிறைந்த பொருள்களை வாங்கி வையுங்கள்‘ என்று சொன்னாராம். மூத்தவன் சரி என்ற ஒப்புக் கொண்டு, அந்த ரூபாய்க்கு வைக்கோல் வாங்கி வீடு நிறைய அடைத்து வைத்தானார். ஆனால் இளையவன், வீட்டுக்கு வெள்ளையடித்துச் சுத்தப்படுத்தி ஊதுவத்தியை வாங்கி வைத்து, பழவகைகள் பலகார வகைகள் வாங்கி வைத்து, தந்தை வருகைக்குக் காத்திருந்தானாம். இந்த கதையிலே வரும் மூத்தவனைப் போல் ஆளவந்தவர்கள், நாட்டக்கு உதவாத் திட்டங்களைப் போட்டு நமக்குக் காட்டுகிறார்கள்.

இட்டுக்கட்டிக் கூறவில்லை

விதைப்பண்ணைகள் வைத்தீர்கள், விதைப் பண்ணைகள் வைத்ததில் நட்டமே ஒழிய லாபமில்லை. இதை அண்ணாதுரை இட்டுக்கட்டி கூறவில்லை – அவர்களே கொடுத்த புள்ளி விவரங்களை வைத்துக் கொண்டுதான் பேசுகிறேன்.

இதை விட்டு விடுங்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பெரிய நன்மைகளைச் செய்துவிட்டதாகப் பிரசாரம் செய்கிறார்கள் அல்லவா? இரண்டு தாழ்த்தப்பட்ட வகுப்பு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கேட்டார்கள் – என்னை வைத்துக் கொண்டு – மற்ற எதிர்கட்சித் தலைவர்களை வைத்துக் கொண்டு – வெட்ட வெளியில் அல்ல – சட்ட மன்றத்தில் கேட்டார்கள். இந்த ஆட்சியில் அரிசனங்களுக்கு ரூ.50 செலவில் வக்கீலை வைத்து நீதிமன்றங்களில் வாதாடச் சலுகை இருக்கிறது இருந்தும், இதுவரை எந்த ஓர் அரிசனனுக்கும் அப்படிச் செய்ததாகத் தெரியவில்லை என்று ஒருவரும், ‘அரிசனங்களுக்கு அதிக நன்மைகள் செய்வதாகச் சொல்கிறார்களே தவிர, அப்படி ஒன்றும் அவர்கள் செய்யவில்லை‘ என்று மற்றொருவரும் குற்றஞ்சாட்டினார்கள்.

எவ்வளவு காலம் உழைப்பது?
அருணாசலம் செட்டியார், தான் இறக்கும் தருவாயில் தன் ஒரே மகனை அழைத்து தன் மரணப்படுக்கை அருகே அமரச் செய்து, அவன் கையை பிடித்துத் தன் கண்களில் ஒத்திக்கொண்டு, ‘மகனே நான் சும்மா சாகவில்லை, சொத்தை வைத்துவிட்டுத்தான் சாகிறேன். நமக்கு இருக்கும் சொத்து ரூ.15000, ஆனால் கடனோ ரூ.17000 இருக்கிறது, யார் கையைப் பிடிப்பாயோ யார் காலில் விழுவாயோ, எப்படியாவது இந்த வீட்டையாவது மீட்டு உன் தாயும் நீயும் இந்த வீட்டில் இருங்கள்‘ என்று சொல்லிவிட்டுச் சாவதுபோல், இன்னும் ஐந்தாண்டுக் காலம் ஆட்சி புரிந்து, வாங்கக் கூடாத இடத்தில் எல்லாம் கடன் வாங்கி, கடன் சுமை அதிகமானவுடன் நாங்கள் கடன் வாங்கியது உண்மைதான், தொழில்கள் மூலமாக லாபம் கிடைக்கும் என்று நம்பிப் பணம் போட்டோம், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை, அப்போதே அண்ணாதுரைக் கூடச் சொன்னான், அவன் பேச்சை நாமா கேட்பது என்று இருந்துவிட்டோம், என்ன செய்வது? எப்படியாவது இந்தக் கடனை அடைத்து வி்டுங்கள், ‘வந்தே மாதரம்‘ ஜெய்ஹிந்த்‘ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டால், நீங்களும் நாமும் நம் சந்ததியாரும், எவ்வளவு காலம் உழைத்தால் வாங்கிய கடனை வட்டியுடன் அடைக்க முடியும்?

பலாபலன்களை ஆராய்வீர்!
எனவே, எனதருமை நண்பர்களே! அவர்கள் அப்படிச் செய்வது சரி என்று தோன்றினால், அவர்கள் ஆட்சியே மீண்டும் வர அவர்களுக்கு ஓட்டுப் போடுங்கள், உங்களை கையை யாரும் பிடித்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் ஒரே ஒரு வேண்டுகோள், பலமுறை இந்த ஆட்சியின் பலாபலன்களை ஆராய்ந்து பார்த்து இதுதான் உங்களுக்கு ஏற்றது என்று தெரிந்தால் உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள்.

(நம்நாடு - 14.9.61)