அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


அமைச்சர்களுக்கு அண்ணா அறைகூவல்!

“திராவிட முன்னேற்றக் கழகம் மாநகராட்சித் தேர்தலில் நிற்பது, திராவிடநாடு திராவிடருக்கே என்று மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு சுவரிலும் தூணிலும் எழுதுவதற்காக அல்ல எங்களால் முடிந்தவரை – சட்டம் இடம் கொடுக்கும் வழிகளில்லாம் சட்டத்தில் ஏதேனும் சந்து இருந்தால் அதில் புகுந்தாவது – மக்களுக்கு நன்மை செய்யலாம் என்பதற்காகத் தான் தி.மு.கழகம் மாநகராட்சித் தேர்தலில் நிற்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக மாநகராட்சியில் உள்ள நமது தோழர்களின் நிர்வாகத்தைப் பற்றி நான் மெத்த பெருமைப்படுகிறேன், அவர்களைப் பாராட்டுகிறேன்.

உள்ளாட்சித் துறைக்கு அமைச்சராக உள்ள மஜீத் அவர்களே மாநகராட்சியில் காங்கிரசுக் கட்சித் தலைவராக உள்ள டாக்டர் சீனிவாசனோ அல்லது இவர்கள் எல்லோருக்கும் கண்கண்ட தெய்வமும் ஆட்டிப்படைக்கும் தேவதையுமான காமராசரோ பொதுவான ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து, மாநகராட்சியைத் தி.மு.க. ஏற்றதும் கடந்து மூன்றாண்டுகளில் இன்னின்ன கெடுதல்கள் நடந்தன என்று எடுத்துரைத்துப் பேசட்டும், அதே நேரத்தில் முன்னாள் மேயர்களான முனுசாமியும், அரசும், அப்துல்காதரும், இந்நாள் மேயர் குசேலரும தங்கள் சாதனைகளைப் புள்ளிவிவரங்களுடன் எடுத்துரைக்கட்டும், இரண்டு சாரார் சொல்லுவதையும் கேட்டு, மக்கள் நல்ல தீர்ப்பு அளிக்கட்டும். இப்படியொரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க, காமராசர் முன் வருவாரானால் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராயிருக்கிறோம் என்று நேற்று மாலை சென்னை 16வது வட்டத்தில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில், அண்ணா அவர்கள் பேசுகையில், அறைகூவல் விடுத்தார்கள்.

பாராட்டுக் கூட்டம்!

அண்மையில் நடந்த மாநகராட்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. கே. கோவிந்தசாமி அவர்களைப் பாராட்டவும், வாக்காளர்கட்கு நன்றி தெரிவிக்கவும், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கூட்டம் பிடாரியார் கோயில் தெருவில் முன்னாள் மேயரும், மாநகராட்சி தி.மு.க. கட்சித் தலைவருமான அ.பொ. அரசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திடீரென்று ஏற்பாடு செய்யப்பட்டு, போதிய விளம்பரமில்லாத நிலையிலும் கூட்டத்திற்கப் பல்லாயிரக்கணக்கான மக்கள், வந்து குழுமியிருந்தனர். கூட்டத்தில் முன்னாள் மேயர் வி.முனுசாமி, முன்னாள் துணை யேர் அ.செல்வராசன், மாவட்டச் செயலாளர் நீலநாராயணன், முஸ்லீம் லீக் தோழர் அ.க.அ. அப்துல் சமத் எம்.ஏ.எம்.சி., ஆகியோர் சொற்பொழிவாற்றினர்.

அண்ணா அவர்கட்கும், வெற்றி பெற்ற கழக வேட்பாளர் கோவிந்தசாமி அவர்கட்கும் ஏராளமான மலர் மாலைகளும் கைத்தறி ஆடைகளும் அணிவிக்கப்பட்டன.

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துத் திரு.கே.கோவிந்தசாமி பேசிய பின் அணண்ா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

எதிர்பார்த்தபடியே கிடைத்த வெற்றி!

இந்த வட்டாரத்தில், இடைத் தேர்தல் நேரத்தில் பிரச்சாரக் கூட்டத்திற்கு வரவேண்டும் என்று மாவட்டச் செயலாளர் நீலநாராயணனும், வேட்பாளர் கோவிந்தசாமியும் மெத்த ஆவலோடு வந்து என்னைக் கேட்ட நேரத்தில், எதிர்ப் பிரச்சாரம் பற்றி எடுத்துச் சொன்னார்கள். பெரிய பெரிய மந்திரிகளெல்லாம் வந்து பேசுகிறார்கள் என்றார்கள், எதிர்ப்பு மிகப் பலமாக இருப்பதாகக் கூறினார்கள். அவற்றையெல்லாம் கேட்டதும் நான், ‘பாராட்டுக் கூட்டத்திற்கு வருகிறேன் போங்கள்‘ என்று சொல்லி அனுப்பி விட்டேன். இருந்தாலும் நான் பயந்தேன், பாராட்டுக் கூட்டம் என்று சொல்லி விட்டோமே, வெற்றி கிடைக்குமா கிடைக்காதோ என ஐயப்பட்டேன், ஆனாலும எதிர்பார்த்தபடியே வெற்றி கிடைத்தது. பாராட்டுக் கூட்டத்தில் கலந்து கொள்கிற வாய்ப்புக் கிடைத்தமைக்காக மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த வெற்றிக்கு அரும்பணியாற்றிய முஸ்லீம் லீக் நண்பர்களும், மாவட்டக் கழகத் தோழர்கட்கும் பகுதிக் கழக தோழர்கட்கும், வாக்காளப் பெருமக்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.

எனக்கு முன்னாலே பேசிய நண்பர் அப்துல் சமத், தேர்தல் நேரத்தில் அமைச்சர்கள் வந்ததைப் பற்றிக் கூறினார்கள். அமைச்சர்கள் இப்படிப்பட்ட நேரத்தில் வருவதை வரவேற்கிறேன், ஏனெனில் தேர்தல் நேரத்திலாவது, மக்கள் அவர்களைப் பார்க்கின்ற வாய்ப்புக் கிடைக்கிறதே என்பதற்காகத்தான்.

தாராளமாக வந்து போகட்டும்!

அமைச்சர்கள் வருகின்ற காரணத்தால், அவர்களை மக்கள் பார்க்கிறார்கள் என்பதால், வாக்குகள் அவர்கள் பக்கம் சாய்ந்துவிடும், ஏற்கனவே செய்து வைத்திருக்கும் முடிவை வாக்காளர்கள் மாற்றிக் கொண்டு விடுவார்கள் என்று அமைச்சர்கள் கருதுவார்களேயானால், அவர்கள் தங்களைப் பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டியிருக்கிறார்கள் என்பதுதான் பொருள்.

இந்தப் பேட்டைக்கு அமைச்சர் வருகிறார் என்றால், வீட்டிலுள்ள ஒரு தாய், மந்திரி வந்திருக்கிறாராமே, அவர் எப்படி இருப்பார் பார்க்கலாம், புதிதாகப் பதவிக்கு வந்திருக்கிற மந்திரியாம் – கடையநல்லூரைச் சேர்ந்தவராம், இளைஞராம், எப்படி இருப்பார் பார்க்கலாம் என்று, அமைச்சரைக் காணச் செல்வார், இன்னொரு தாய், ‘ இவர்தான் அமைச்சரா? என்று கேட்பார், மற்றொரு தாய், ‘ஆமாம், இந்தக் காலத்தில் யார் யாரோ மந்திரியாகிறார்கள், அவர்களில் இவர் ஒருவர், என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டுப் போவார். இதனால் மந்திரியின் மதிப்பும் கெட்டுப் போகறிது. போட்ட கணக்கும் தவறாகி விடுகிறது. அமைச்சரின் கணக்குத்தான் தவறே தவிர, அவர் வந்ததில் ஒன்றும் தவறில்லை, தாராளமாக வந்து போகட்டும்.

இன்னொரு அமைச்சர் புதிதாகப் பதவி ஏற்றிருப்பவர் மந்திரிகளில் ஒருவர் கூட உல்லாசத்துக்காக உதகைக்கு வரவில்லை‘ என்று கூறி வந்த காரணத்தையும் விளக்கியிருக்கிறார்.

“மந்திரிகள் உதகைக்கு வந்தது பற்றி, காங்கிரசு ஊழியரே குறை கூறுவதற்காக வருந்துகிறேன், நாங்கள் உதகைக்கு ஏன் வந்தோம் தெரியுமா? என் உயிரையும் பொருட்படுத்தாமல் காட்டுமிருகங்கள் சஞ்சரிக்கம் காட்டுக்கள் நுழைந்து, கிராமம் ஒன்றைப் பார்வையிட்டு வந்தேன்“ என்று அவர் பேசியதைப் பத்திரிகையில் படித்தேன்.

புதிதாக மந்திரியாகியிருக்கும் அந்த இளைஞர், இன்னும் திருமணம் கூட ஆகாதவர் என்று கேள்விப்படுகிறேன். அவர் காட்டுப் பாதை வழியாகச் சென்று உயிர்தப்பித்து வந்ததற்காக ஆண்டவனுக்கு நன்றி செலுத்திக் கொள்கிறேன், காட்டுக்குச் சென்று, காயம் ஏதும் படாமல் வீட்டுக்குத் திரும்ப அந்த அமைச்சரைப் பாராட்டுகிறேன்.

இந்த ஆபத்தான பாதையின் வழியாகத்தான், இவர்கள் ஆட்சியில் அந்தக் கிராமத்திலுள்ள மக்கள் ஒவ்வொரு நாளும் வந்து போகிறார்கள் என்பதையும் அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மந்திரியாக இருப்பவர் ஒருநாள் அந்த காட்டு வழியில் போய்விட்டு வந்தவுடன் பத்திரிகை நிருபர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு, தாம் போன செய்தியைக் கூறுகிறார். உடனே நிருபர்கள் அப்படியா, காட்டுக்கா போனீர்கள்? காண்டா மிருகத்தைப் பார்த்தீர்களா? கரடியைப் பார்த்தீர்களா? இதைப் பார்த்தீர்களா என்றெல்லாம் கேட்கிறார்கள் ‘காட்டு மிருகங்களுக்கே அஞ்சாத நான் அண்ணாதுரைக்கா அஞ்சுவேன்‘ என்று அமைச்சர் பேசுவார். அவர் அமைச்சராக இருப்பதால் தான் இப்படியெல்லாம் நடக்கிறது.

யார் கவனிக்கப் போகிறார்கள்?

காஞ்சிபுரத்தில் இப்பொழுது திருவிழா நடைபெறுகிறது. திருவிழாக் காலத்தில் பெரிய பெரிய வாகனங்களில் சாமியை வைத்துக் தூக்கி வருவார்கள். அந்த வாகனங்களில் சில பார்ப்பனர்களும் ஏறி நின்று கொண்டு வருவார்கள். திருவிழா முடிந்ததும் அவர்கள் தரையில் நடக்கத்தான் போகிறார்கள் அதனைப் போல் மந்திரி பதவி நீங்கினால், இவர்களும் தரையில் நடந்துதானே தீரவேண்டும்? அபப்டி நடக்கும்போது இவர்களைப் பற்றி யார் கவனிக்கப் போகிறார்கள்?

எனவே, அமைச்சர்களாயினும், மற்றவர்களாயினும் இரண்டு காலத்தையும் எண்ணிப் பார்க்க வேண்டும். அரசியல் அந்தஸ்து கிடைத்துவிட்ட காரணத்தால் உயரத்தில் இருப்பவர்கள் வாகனத்தில் ஏறிய பார்ப்பனர் திருவிழா முடிந்ததும் கீழே இறங்கி நடப்பது போல், மீண்டும் தரையில் நடக்கத்தான் போகிறார்கள். உலகில் எப்படிப்பட்ட பெரிய மனிதர்களெல்லாம் எவ்வாறு கவிழ்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். காரில் போகும் போது, தரையில் நடந்த காலத்தையும், தரைிய்ல நடக்கும் போது காரில் செல்லும் வாய்ப்புக் கிடைத்ததையும் நினைவில் கொள்ள வேண்டும்.

நன்மை செய்வதுதான் நமது நோக்கம்!

இந்த இடைத் தேர்தலில் மிகக் கட்டுப்பாடாகப் பணியாற்றி எதிர்ப்புக்களையெல்லாம் சமாளித்து அரும்பாடுபட்டு வெற்றி பெற்றிருக்கிறோம். எழுபது வாக்குகளே நமக்கு அதிகமாகக் கிடைத்துள்ளது. இன்னும் அதிகம் கிடைத்திருக்க வேண்டும்., தேர்தல் அன்று பிற்பகலில், கலகம் விளைவிக்கப்பட்டதாால், வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கு வர அஞ்சி விட்டனர். அதனாலேதான் வாக்குகள் குறைந்துவிட்டன என்று கேள்விப் பட்டேன்.

இந்த இடைத் தேர்தல் எந்த நேரத்தில் நடந்தது என்பதுதான் இதற்குள்ள முக்கியம். அண்மையில் மாநகராட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. பாராளுமன்றத்திற்குப் போய் நான் பேசிவிட்டு வந்திருக்கிறேன். இத் தேர்தலில் நமது கோவிந்தசாமி தோற்றிருந்தால் அண்ணாதுரை பாராளுமன்றத்தில் அப்படிப் பேசினார். அதனால் தி.மு.க. தோற்றது‘ என்று கூறிக் கோவிந்தசாமிக்குக் கூட என்மீது வருத்தம் ஏற்படும்படிச் சொல்லுவார்கள். என் பேச்சிற்கும், இத் தேர்தலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனாலும் அப்படிப் பேசுவார்கள்.

மாநகராட்சியைப் பொறுத்தவரை அரசியல் மனப்பான்மையுடன் நாம்நடந்து கொள்ளவில்லை. நம்முடைய மூலக் கொள்கை திராவிட நாடு திராவிடருக்கே‘ என்பதுதான், நான் விடப்போவதில்லை. ஆனால் மாநகராட்சியில் போய் ஒவ்வொரு சுவரிலும் நமது இலட்சியத்தை எழுத வேண்டும் என்பதல்ல நமது நோக்கம், நகரமக்களுக்கு நம்மாலே என்னென்ன வழிகளில் நன்மை செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்ய வேண்டும் என்பதுதான் நாம் மாநகராட்சித் தேர்தலில் ஈடுபடுவதற்குக் காரணம்.

அதற்கும் இதற்கும் சம்பந்தப்படுத்தலாமா?

நான் திராவிடநாடு பற்றிப் பேசினால், ‘பேசுவது குற்றம்‘ என்கிறார்கள், நான் அப்படிப் பேசுவதை விரும்பவில்லை, அதனால் தான் அதற்கும் இதற்கும் சம்பந்தப்படுத்திப் பேசுகிறார்கள்.

தமிழகத்தி்ன் தலைநகரான இந்தச் சென்னையில் பெரிய பெரிய வழக்கறிஞர்கள், டாக்டர்கள், வணிகர்கள் நிரம்ப இருக்கிறார்கள். பல்கலைக் கழகமும் பல்வேறு கல்லூரிகளும் உயர் நிலைப் பள்ளிகளும் இருக்கின்றன. பேராசிரியர்களும் படித்த மக்க்ளும் ஏராளமாக இருக்கிறார்கள்.

தி.மு.கழகம் மீண்டும் மாநகராட்சி நிர்வாகத்தை ஏற்க இலாயக்குள்ளது தானா இல்லையா என்பதை நமது முன்னாள் மேயர் முனுசாமி புள்ளி விவரங்களுடன் நிரூபிக்கட்டும், அவருக்கு ஆதரவாக அரசு பேசட்டும், அப்துல் காதர் வாதாடட்டும், மேயர் குசேலர் இன்னின்ன சாதனைகளைப் புரிந்திருக்கிறோம் என்பதையும் சாதிக்க இருப்பதையும் கூறட்டும், நானோ, கருணாநிதியோ, அன்பழகனோ, நெடுஞ்செழியனோ மற்றப் பேச்சாளர்களோ வரவில்லை.

சாதனைகளை விளக்கிக் கூறுங்கள்!

தி.மு.கழக நிர்வாகத்தில் இருந்த வீடுகள் சரிந்தன. இந்த சாலைகள் குலைந்தன, எதிர்த்தரப்பில் எடுத்துச் செல்லட்டும். இந்த அறைகூவலை ஏற்றுக் கொள்கிறேன், அமைச்சர்கள் தயார்தானா? என்று கேட்கிறேன்.

நான் தயார் என்று சொன்னால், அது அண்ணாதுரைக்கு இருக்கின்ற தனிப்பட்ட தைரியத்தால் அல்ல, எனக்குப் பின்னாலே இருக்கின்றவர்கள் தைரியம்தான். அவர்கள் சாதித்துள்ள சாதனைகள்தான்.

மாநகராட்சியில்தி.மு.க. பதவியேற்ற பின்தான் வரி கொடுக்காமல் பதுங்கிய பணக்காரர்களையெல்லாம் பிடித்து இழுத்து வந்து வரியைப் பெற்றார்கள் மாநகராட்சியின் வருவாயை உயர்த்தினார்கள்.

நமது தோழர்கட்குக் கூட இந்த நேரத்தில் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் – தாம் செய்வதை நமது தோழர்கள் பொது மக்க்ளுக்குச் சொல்லத் தவறி விடுகிறார்கள். இப்போது இங்கே நமது முனுசாமி அவர்கள் கொத்தவால்சாவடி நிர்வாகம் பற்றிப் புள்ளி விவரங்களைக் கூறி விளக்கினார். இது எத்தனை பேருக்குத் தெரியும்? எனவே, ஒவ்வொரு வட்டத்திலும் – நமது தோழர்கள் வெற்றி பெற்ற வட்டமனானாலும் சரி, வெற்றி பெறாத வட்டமானாலும் சரி – அந்தந்த வட்டத்திலும் மாநகராட்சி புரிந்துள்ள சாதனைகளை விளக்கி மக்களுக்குக் கூற வேண்டும். அதற்கான கூட்டங்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.

சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்கள்!

நமது தோழர்கள் மாநகராட்சிக்கு வந்ததும் எப்படிப் பணியாற்றியிருக்கிறார்கள் என்பதற்கு ஒரு சிறிய உதாரணம் கூறுகிறேன். எங்கள் ஊர் நண்பர் அ.க. தங்கவேல் முதலியாருக்கு சென்னையிலும், மயிலாப்பூரிலும், தங்கசாலைத் தெருவிலும் ஜவுளிக் கடைகள் இருக்கின்றன. அவர் தம் கடைகளுக்கான விளம்பரப் பலகைகளை, நகரின் பல பகுதிகளில் எழுதி வைத்திருக்கிறார்.

கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக அந்த விளம்பரப் பலகைகள் இருக்கின்றன. ஆனால் ஆரம்பத்திலிருந்தே, அதற்காக, அவரிடம் வரி எதுவும் கேட்கப்படவில்லை. மாநகராட்சியில் நமது தோழர்கள் பொறுப்பேற்றுச் சில மாதங்கள் கழிந்தாலும் திடீரென்று ஒரு நாள், தங்கவேலர் அவர்கள் என்னிடம் வந்து, “பரவாயில்லை, நமது பிள்ளைகள் சுறுசுறுப்பாகத்தான் வேலை செய்கிறார்கள், எனக்கே வரி போடச் சொல்லி விட்டார்கள்“ என்றார். உடனே நான், எங்கே வரியை இரத்து செய்யச் சொல்லும்படிக் கேட்கப் போகிறாரோ என அஞ்சி முன்னெச்சரிக்கையாக, “உங்களுக்கு முதலில் வரி போட்டால்தான் மற்றவர்களும் வரி செலுத்துவார்கள் என்பதற்காக உங்களுக்கு முதலில் வரி போட்டிருக்கக்கூடும்“ என்றேன். அதற்க அவர் வரி போட்டதைப் பற்நி நான் எதுவும் சொல்ல்வில்லை, வரிப்பணம் கூடக் கட்டி விட்டேன், நமது பிள்ளைகள் சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்கள் என்பதைச் சொல்லத்தான் வந்தேன்“ என்றார்.

ஒரு நாளும் சிக்கிவிட மாட்டேன்!

பதுங்கிய பணக்காரர்களையெல்லாம் சந்திக்கு இழுத்து வந்த பெருமை, முன்னேற்றக் கழகத்தையே சாரும். மீண்டும் வேறொரு கட்சி, மாநகராட்சியில் ஆட்சிக்கு வந்தால், அவர்கள் பழையபடியே பணக்காரர்கட்குச் சலுகை கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள், அதனாலேதான், தேர்தலுக்கப் பத்தாயிரம் செலவு செய்வாயா – ஐயாயிரம் செலவு செய்வாயா? – என்றெல்லாம் அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் நிர்வாகத்தைப் பற்றிப் பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஒரு வாய்ப்பாகத்தான் ஈரசாராரும் பேசும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதுவும் வருகிற தேர்தலுக்குள் அப்படிச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்.

மாநகராட்சி இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த காங்கிரஸ் அமைச்சர்கள், மாநகராட்சி நிர்வாகம் பற்றிப் பேசாமல், “உனக்கும் லீக்குக்கும் கூட்டா? உனக்கும் ஆச்சாரியாருக்கும் உறவா?“ என்றெல்லாம் கேட்கிறார்கள். இப்படிக் கேட்பதால் நான் அதற்கு மறுப்பு சொல்லுவேன், அதனால் எங்களுக்குள் இருக்கும் உறவு குலைந்து விடும் என்று எண்ணுகிறார்கள். நான் இப்படிப்பட்ட பேச்சால் ஒரு நாளும் சிக்கிவிட மாட்டேன் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்திய அரசைக் கேட்க வேண்டியது தானே!

அமெரிக்கர் ஒருவர் வந்து என்னைச் சந்தித்தாராம், “சந்திக்கலாமா‘ என்று கேட்கிறார் ஒருவர். அமெரிக்கர் ஒருவர் என்ன, ஒன்பது அமெரிக்கர் கூடச் சந்திக்கலாம். இந்திய அரசு அவர்களை இங்கே அனுமதித்த போது, இஞ்சி தின்ற குரங்கு போல இருந்து விட்டு என்னைப் பார்த்துக் கேட்டால் என்ன அர்த்தம்? இந்திய அரசைப் பார்த்துக் கேட்டால் நீ ஒரு ஆண்மகன்“ என்று சொல்வேன்.

உண்மையில் எந்த அமெரிக்கரும் வரவில்லை, என்னைப் பார்க்கவுமில்லை. எனக்குள்ள வேலைகளில் அமெரிக்கரையும் ஆங்கிலேயரையும் பார்ககவா நேரம் இருக்கிறது?

நான் இங்கு ஒரு நாள், இன்னொரு ஊரில் ஒரு நாள், இப்படி அங்கும் இங்கும் செல்லவும் விஷயங்களை எடுத்துச் சொல்லவும் எனக்கு நேரமில்லை, நான் உங்களுக்கெல்லாம் சொல்ல வேண்டிய நிரம்ப இருக்கிறது. ஊருக்கு ஊர், கூட்டத்துக்கு கூட்டம், முடிந்தால் உங்களில் ஒவ்வொரு நண்பரிடமும் நிறையக் சொல்ல விரும்புகிறேன். அதற்கே நேரம் கிடைக்கவில்லை.

கொட்டாவி விட்டால் – என்ன ராகம்?

“இந்நிலையில் அமெரிக்கன் எங்கே இருக்கிறார், என்னைக் கண்டு பேச? உனக்கு இருக்கிறான் கடன் கொடுக்க.“

எனவே, யார் யாரோ எதை எதையோ சொல்லிவிட்டுப் போகட்டும், அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை, என்னைப் போல் நீங்களும் கவலைப்படக்கூடாது.

சங்கீத விதவான் கொட்டாவி விட்டு,கைச்சிட்டிகை போட்டால், உடனே அது என்ன ராகம்?‘ என்று அருகிலுள்ள சீடன் கேட்பான். அதைப்போல நாம் என்ன செய்தாலும், அதை அக்கறையோடு, கவனித்து ஆராய்கிறார்கள். வேறு எந்த அரசியல் கட்சியைப் பற்றியாவது இப்படிப் பேசுகிறார்களா?

நமது தோழர்கள் எப்போதாவது சில வேலைகளில் ஆங்கிலத்தில் பேசினால், பார்த்தீர்களா, தமிழை விட்டு ஆங்கிலத்தில் பேசுகிறார்கள், இவர்களுக்குத்தாய் மொழிப் பற்று இல்லை என்கிறார்கள். ஆங்கிலம் வேண்டாம் என்று தமிழில் பாராளுமன்றத்தில் போய் என்ன சாதிக்க முடியும் என்று கேட்கிறார்கள்.

“இப்படி நம்முடைய ஒவ்வொரு அசைவும் நாடடில் அதிர்ச்சினை ஏற்படுத்துகிறது! நாம் எதைச் செய்தாலும் அது சிலருககு உதிர்ச்சியைத் தருகிறது?“

ஆச்சாரியாரை ஏன் சந்தித்தார்?

சென்னைக்கு அண்மையில் வந்த முன்னாள் நிதியமைச்சரும் இந்நாள் இரும்பு அமைச்சருமான சுப்பிரமணியம், ஆச்சாரியாரிடம், சென்று, ‘ஐயனே, என்னைக் கொஞ்சம் ஆரிவதியுங்கள்! என்று கேட்க, ஆச்சாரியாரும், ‘பாலகா‘ பிழைத்துப்போ‘ என்று ஆசிர்வதித்திருக்கிறார்

தமக்கு அமைச்சர் பதவி கொடுத்து வைத்திருந்த காமராசரைச் சந்திக்காமல், அவரை அவசரமாக ஆச்சாரியாரை ஏன் அவர் சந்தித்தார்? இப்படி ஆராய்ச்சி நடக்கிறதா நாட்டில்? என்னுடைய கார் தப்பித் தவறி ஆச்சாரியார் வீடு இருக்கும் சாலைவழியாகச் செல்ல நேர்ந்தால், ‘உடனே அண்ணாதுரை ஆச்சாரியார் வீட்டுக்குப் போனார், வீட்டுத் திண்ணையிலிருந்தபடி, ஆச்சாரியார் கையைக் காட்டினார், அண்ணாதுரை கண்ணால் ஜாடைகாட்டிவிட்டுச் சென்றால். இருவரும் இப்படி செய்ததற்கு இன்னதுதான் பொருள்“ என்று கற்பித்துப் பேசுவார்கள், இதற்குக் காரணம் என்ன?

யார் வீட்டிலிருந்தாவது வைரநகை காணாமற் போனால் தெரு முழுவதும் பரபரப்பாக இருக்கும். விட்டின் அடுக்களையில் வைத்திருந்த இரண்டு மூன்று வெங்காயத்தை எலி இழுத்துக் கொண்டு போய்விட்டால் போலீசுக்கா அறிவிக்கிறோம்? எனவே விலை அதிகமான பொருளுக்குத்தான் பரபரப்பு அதிகம்.

தி.மு.கழகம் விலை உயர்ந்த சரக்கு!

திராவிட முன்னேற்றக் கழகம் விலை உயர்ந்த சரக்கு. மற்றக் கட்சிகள் எல்லாம் விலை போபாத சரக்கு. எனவே தான் இந்த விலைமதிப்புள்ள சரக்கு வீணாகிவிடு்மோ என்ற கவலையில் ‘ஐயோ‘, ஆச்சாரியார் வலையில் சிக்கிவிடாதீர்கள் – லீகுடன் கூடாதீர்கள் என்று கவலையுடன் கூறுகிறார்கள். நமது மதிப்பைத் தெரிந்து கொண்டால்தான் அப்படிப் பேசுகிறார்கள்.

முஸ்லீம் லீகுடன் நான் உறவு கொண்டிருப்பது இன்றுதானா? இங்குள்ள முஸ்லீம் சமுதாயத்தினரில் ஜின்னாவைப் பார்த்திராதவர்கள் பல்லாயிரக்கணக்கில் இருக்கக்கூடும். நான் ஜின்னாவைப் பார்த்திருக்கிறேன். பெரியாரைப் போல ஒரு காலத்தில் நேசத்தோடு இருந்து விட்டுத் திடீரென்று பிய்த்துக் கொண்டு போய்விடவில்லை நான். பெரியாருக்கு எதையும் பேச முடியும், மசூதி முன்பு மேளம் அடித்துக் கொண்டு போனால் என்ன செய்வார்கள் என்று அவர் திடீரென்று கேட்டார். முஸ்லீம்களுடன் எனக்குள்ள நட்பு திராவிடக் கழகத்தில் நான் இருந்த காலந்தொட்டு நீடித்து வருகிறது. இப்போது நடப்பன அந்த உறவில் 8 ஆவது அல்லது 9 ஆவது அத்தியாயமாகும்.

இனத்தில் திராவிடர்கள் மதத்தால் முஸ்லீம்கள்!

கேரளத்தில் கம்யூனிஸ்டு ஆட்சியை ஒழித்துக் காட்ட முஸ்லீம் லீக்குடன் கூட்டுச் சேர்ந்தார்களோ அப்படியா நாங்கள் சேர்ந்திருக்கிறோம்?

நான் பல ஆண்டுகளாக முஸ்லீம்களைப் பார்த்துச் சொல்லி வருவது, “நீங்கள் இனத்தால் திராவிடர்கள்? மதத்தால் முஸ்லீம்கள்“ என்பதுதான்.

(நம் நாடு - 24.05.1962)