அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


அன்றைய மன்னர்களின் அஞ்சாநெஞ்சம் நமக்குத் தேவை

சென்னை-பிப்ரவரி-10, கோகலே மண்டபத்தில், மணவழகர் மன்றச் சார்பில் நடைபெற்ற முத்தமிழ்க் கலைவிழாவின் முதள் நாள் விழாவில் அண்ணா அவர்கள் ஆற்றிய உரையின் முக்கியப் பகுதிகள் இங்குத் தரப்படுகின்றன.

மணவழகர் (திரு.வி.க) பெயராலே மன்றம் அமைத்து அந்த மன்றத்தின் மூலமாக நல்ல பணிகள் ஆற்றி வருவதைச்சென்னை நகர் மட்டுமன்றித் தமிழகத்திலேயும் அறிவார்கள். இப்படி நல்ல பல பணிகள் ஆற்றிவரும் நண்பர்களை நான் பாராட்டுகிறேன்.

பாராட்டுதல் என்று நான் சொன்னால் அந்தப் பாராட்டுதல் அவர்களுக்கு மட்டுமே உரித்தானது என்பதற்கல்ல. இப்படி நாம் பாராட்டி விடுவதால் அவர்கள் வாழ்கிறார்கள் வளர்ந்து வருகிறார்கள் என்பது அல்ல. நாம் இவர்களை வாழ்த்துவதன் மூலம், மேலும் இப்படிப்பட்ட மன்றங்கள் பலவற்றைத் துவக்கி நடத்த வேண்டும் என்கின்ற எண்ணத்தைத் தூண்டவேயாகும்.

“நண்பர் நெடுஞ்செழியன் அவர்களுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் ‘நடமாடும் பல்கலைக் கழகம்’ என்ற பட்டம் அ‘த்தேன். ‘அப்படிப் பட்டம் அளிப்பதே தவறு’ என்றனர் சிலர். அந்தப் பட்டம் பொருந்துமா? என்றவர்களும் உண்டு. நான் அவருக்கு அளித்த பட்டம் பொருந்தும் என்று அறிந்திருக்கிறேன். இப்பொழுதும் அறிவேன். நான் சொன்னது சரியென்று நிமிர்ந்து நின்றேன்.

இவ்வளவு சிறப்பாக இலக்கிய வளங்களை எடுத்துப் பேசும் நெடுங்செழியன், அரசியல் இலட்சியங்களை அதிக நேரம் பேசிவருவதால், இப்படிப்பட்ட அரிய இலக்கியச் சொற்பொழிவுகளை ஆற்றமுடியவில்லை. இடையிடையே இப்படிப்பட்ட சொற்பொழிவுகளை ஆற்றவேண்டும் என்று உங்கள் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.

நெடுஞ்செழியன் அவர்கள் காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றிக் கூறும்போது நானும் காவிரிப்பூம்பட்டினத்தில் உலாவினேன். மன்னர்களைப் புலவர்கள் இடித்துக் கூறிய காட்சிகளை அவர் எடுத்து இயம்பியபோது எனக்கும் புலவனைப்போல் ‘பிரமை’ ஏற்பட்டது.

வளர்க்கப்பட்ட இடமும் வாழ்க்கைப்பட்ட இடமும்
எனக்குத் தலைப்பு எதுவும் இங்குப் பேசுவதற்கு அளிக்கவில்லை. நான் தலைப்புக்களுக்குக் கட்டுப்பட மாட்டேன் என்றோ அல்லது அந்தத் தலைப்பு அளித்தாலும் அதில் நான் சொல்வதைச் சொல்லியே தீருவேன் என்று கருதியோ என்னவோ எனக்குத் தலைப்பு தரவில்லை. இது இன்று மட்டும் அல்ல என்றும் நான் வளர்க்கப்பட்ட இடமும், வாழ்ந்து வருகிற இடமும் இப்படிப்பட்டது தான். பழந்தமிழகக் காட்சிகளை நாவலர் இங்கு எடுத்துக்கூறினார். மற்ற நாடுகள் கழனிகளைக் காணாத நாட்களில், தமிழர்கள் கழனிகள் கண்டு வரப்பமைத்து வாழ்ந்தார்கள். மற்ற நாடுகள் சமுதாயமாக அமையாத காலத்தில் இங்குச் சமுதாயத்திற்குச் சட்டம் அமைத்து, சட்டமன்றத்திற்கும் சமுதாயத்திற்கும் இருக்க வேண்டிய தொடர்புகளை வரையறுத்துக் கூறினார்கள். போர் முறைகளை மற்றவர்கள் அறியாத நாட்களில் போர் முறைகளை வகுத்து அவற்றை நல்ல நூல்களாக்கி வைத்திருக்கிறார்கள்.

நல்ல பல இலக்கியச் செல்வங்களை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அமைத்து வைத்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நூல்களைப் படிப்பதில் பயன் என்ன? இதைப்பற்றிய சொற்பொழிவுகளைக் கேட்பதால் நாம் செய்யப் போவது என்ன? செய்வது என்ன? இப்படிப்பட்ட காட்சிகளைப் படிக்கும் போதும“ கேட்கும் போதும் அத்தனையும் உண்மை என்றுதான் நாம் அறிகிறோம். இதைக்கேட்டு அடையவேண்டிய பயன் என்ன?

பேரனிடமுள்ள கோலியைத் தாத்தா வாங்கி, அதை அடிக்கும்போது, பேரன் ‘தாத்தா உனக்குக் கோலி அடிக்கத் தெரியவில்லை’ என்று சொன்னால், உடனே தாத்தா “நான் அந்தக் காலத்தில் இதைவிடப் பெரிய கோலியை அதோ அங்கே இருக்கிற மாந்தோப்பு அருகே பெரிய குழிகளை வைத்து ஆடியிருக்கிறேன் உனக்குத் தெரியாது” என்று அந்தப் பாட்டனாரைப்போல் பேசிவிட்டுப் போவதற்குத்தானா நாம் இருக்கிறோம்?

நெஞ்சார சிந்திக்க வேண்டும்
மாலை நேர வகுப்புக்காகச் சுவைமிக்க காட்சிகளை ரசிப்பது மட்டும் பயன் இல்லை. நெஞ்சார சிந்தித்து, ‘இப்படி இருந்த நாம் இன்று ஏன் இந்தக் கீழ் நிலைக்குத் தள்ளப் பட்டோம்?’ என்பதையும் ‘அந்த நாளிலே அரசோச்சிய நாம் இன்று ஏன் இவ்விழிநிலைக்கு வந“தோம்? என்பதையும் உணரவேண்டும்.

புலவர்கள் அன்றுபோல் இன்றும் தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்களுடைய திறமை பயன்படுத்தப்படவில்லை. திறமை திருத்தி அமைக்கப்பட்டால் நாட்டிற்கு வழி பிறக்கும்.
பண்டைத் தமிழகத்தில் போட்டி உணர்ச்சி இருந்தது; பொறாமை இல்லை. திறமையை அறிந்து பாராட்டினார்கள். சாதிகளும் இல்லை பிளவுகளும் இல்லை. இப்படிப்பட்ட நிலையை நாம் என்றென்றும் மேற்கொள்ளலாம். இன்றும் கொள்ளலாம். அவரவர்கள் ஆற்றலைத் திறமைக்குத் தக்கபடி வளர்த்துக் கொண்டு போவோமானால் நம்முடைய நாடும் முன்னேறும் நாமும் முன்னேறுவோம்.

அக்கால மன்னர்கள் நால்வகையாகப் படையைப் பிரித்து வைத்து இருந்தனர். நான், மன்னர்கள் என்று குறிப்பிட்டவுடன் நான் ஏதோ மன்னர்களை ஆதரிக்க கிளம்பிவிட்டேன் என்று நீங்கள் எண்ணமாட்டீர்கள். நான் காப்பாற்ற வேண்டிய அளவுக்கு எந்த ராஜ்யமும் எனக்குக் கிடையாது. என்னுடைய தலையில் முடியும் நிற்காது. நான் அக்காலத்தில் இருந்ததை உங்களுக்குச் சொல்கிறேன்.

நால்வகைப் படைப் பயிற்சி
நால்வகைப் படைப்பயிற்சி அந்நாளில் இருந்தது. அதிலே கரிப்படை ஒன்று. வெறும் கரிப்படை மட்டும் இருந்தால், அதைக் கொண்டு எதிரிகளை விரைந்து தாக்க முடியாது. விரைந்து தப்பி ஓடவும் முடியாது. அடர்ந்து நிற்கிற எதிரிகளைத் தாக்க கரிப்படையும் விரைந்து சென்று தாக்கி மீள குதிரைப்படையும் சுற்றி வளைத்துத் தாக்கக் காலாட்படையும் என்று பிரித்து வைத்திருந்தார்கள். இவற்றைப் பிரித்து வைத்துத் தனித் தனியாக எதிரிகளைத் தாக்கப் பயன்படுத்தவில்லை. எல்லாப் படைகளையும் ஒன்று திரட்டி அனுப்பியே போர் புரிந்தார்கள் வெற்றியும் பெற்றார்கள்.

தமிழ்மொழியை மூன்றாகப் பிரித்ததாக நாவலர் குறிப்பிட்டார். இயல், இசை, நாடகம் என்று மூன்றாகப் பிரித்தது மொழி என்பதற்கல்ல; தமிழ் என்பதற்குச் சுவை என்ற பொருளும் உண்டு. இதை மனத்தில் கொண்டுதானோ என்னவோ இயற்சுவை, இசைச்சுவை, நாடகச்சுவை என்று பிரித்திருக்கக்கூடும். இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் நம்முடைய முன்னோர்கள் பலவற்றிற்குக் குறிப்பெழுதித் தரவில்லை.

சமீபத்தில், நான் ஓர் ஆங்கிலப் புத்தகம் படித்தேன். அதில் ஒரு மன்னன் போருக்குச் சென்றபோது, வெற்றி விருந்தில் எத்தனை கோழிகள் பயன்படுத்தப்பட்டன. என்ன உணவு சமைக்கப்பட்டது எத்தனை பேர் உண்டனர் என்பது முதல் எல்லா விஷயங்களையும் தொகுத்துக் குறிப்பெழுதி வைத்துள்ளதைப் படித்தேன். நான்கூடப் புத்தகங்களைப் படிக்கிறேன் என்பதைக் கேட்க உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம்; நூல்களைப் படிக்கிறேன் அப்பொழுது பயன்படுத்திய பொருள்கள்-அவற்றின் அப்பொழுதைய விலை இன்றைய தினம் உள்ள விலைப்படி உள்ள மாறுபாடு அத்தனையும் அதில் எழுதப்பட்டிருந்தது.

வரலாறும் குறிப்பும் நம்மிடம் இல்லாத நிலை ஏன்?
நான் சிறையிலே இருக்கும்போது, மற்றோர் ஆங்கில நூலைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அது 18-19 ஆம் நூறறாண்டின் லண்டன் நகர அமைப்பைப் பற்றி விளக்குகின்ற நூலாகும். அதில் லண்டன் நகர அமைப்பு. தெருக்களின் பெயர், தெருக்களில் அமைந்திருந்த கட்டடங்களின் அமைப்பு முறை, டீக்கடைகள் யார் யார் இல்லங்கள் எந்தெந்தத்தெருக்களில் இருந்தன. கடன்காரனைக் கண்டு கோல்ட்ஸ்மித் ஓடி ஒளிந்து கொண்ட இடம் ஆகிய இத்தனையும் தொகுத்து எழுதப்பட்டிருப்பதைப் படித்தேன்.

நம்முடைய இயக்கத்தின் முதல்வரான தியாகராயரின் வரலாறு இன்று நம்மிடம் இல்லை. நீதிக்கட்சியைக் கட்டிக் காத்த டாக்டர் நாயர் வரலாறு இன்று இல்லை. நீதிக்கட்சி இந்நாட்டை ஆண்டபொழுது, அவர்கள் இயற்றிய சட்டங்கள், சாதனைகள் ஆகியவற்றைப் பற்றி அறிவதற்குக் குறிப்பு இல்லை.

நல்லவேளையாகத் திரு.வி.க.அவர்கள் தமது வாழ்க்கையைத் தாமே குறிப்பெழுதி வைத்துச் சென்றிருக்கிறார். அதை அவர் செய்த விட்டுச் செல்லாமலிருந்தால், நாமும் திரு.வி.க. அவர்களைப் பற்றி ‘நடமாடும் தமிழ்ப் பண்பாடு’ என்று பேசிக்கொண்டிருக்கக்கூடும்.
இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளுக்கே நாம் குறிப்புகளைச் சரிவரச் சேர்த்து எழுதி வைக்கவில்லை என்றால் பண்டைக்கால வரலாற்று நிலையைப் பற்றிக் கூறவே வேண்டியதில்லை. எழுதி வைத்திருக்கிற நூல்களில் தமிழ்ப் புலவர்கள் இரண்டு வரிகளுக்கிடையே கெல்லி எடுக்க வேண்டிய நிலைதான் இருக்கிறது.

மாற்றார்கள் மாறிக்கொண்டு வருகிறார்கள்
நம்முடைய வலிவை அறிவது மட்டும் முக்கியம் அல்ல; பண்டைத் தமிழர்கள் தம் வலிவை மட்டுமன்றி மற்றார் வலிமை என்ன என்பதையும் ஆராய்வது மிக முக்கியம் என்று கருதினார்கள். குறள்கூட இதை வற்புறுத்தியிருக்கிறது. நாமும் மாற்றார் வலிவைக் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் நமது வலிமையை மதிப்பிட வேண்டும். மாற்றார் என்று குறிக்கும்பொழுது நாம் அவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று ‘தமிழுக்கு மாற்றார்கள்’ மற்றொன்று ‘தமிழர் ஆட்சிக்கு மாற்றார்கள்.’

தமிழுக்கு மாற்றார்கள் மலைமலை அடிகள் காலத்திற்குப் பின் நாளடைவில் குறைந்து தேய்ந்து வருகிறார்கள். சமீபத்திலே நான் பத்திரிகையிலே படித்தேன். அரியக்குடி இராமானுஜ (ஐயர்) தமிழிசை மாநாட்டில் பேசியதாக ஒரு பேச்சு. அதில் அவர் தமிழிசைக்கும் மற்ற இசைக்கும் நிரம்ப வித்தியாசம் இருக்கிறது என்று பேசியிருக்கிறார். இதே அரியக்குடியார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன், செட்டிநாட்டு வேந்தர் ஆதரவில் நடைபெற்ற தமிழிசை விழா மாநாட்டில் ‘தமிழில் ஏது இசை? தமிழில் இசை என்பதே கிடையாது. தெலுங்கில் அல்லவா இசை இருக்கிறது?’ என்று வாதாடினார். அவரேதான் இன்று இப்படிப் பேசுகிறார். ஆகவே தமிழில் மாற்றார்கள் மாறிக்கொண்டு வருகிறார்கள். குறைந்து கொண்டு வருகிறார்கள்.

தமிழர் அரசியல் முறையைக் குறை கூறுபவர்கள் யார்?

தமிழர் ஆட்சிக்கு மாற்றார்களைக் கவனிப்போம். அன்றைய தமிழர்களின் ஆட்சி முறையைப் பற்றி நாம் பேசும் பொழுது சிலர், அன்றைய தினம் தமிழகத்தின் மக்கள் தொகை சில லட்சங்கள். இன்றைய தமிழர்கள் எண்ணிக்கை சில கோடிகள் என்று கூறி, மக்கள் எண்ணிக்கையை எடுத்துக்காட்டி, தமிழர் அரசியல் முறையைக் குறை கூறுகிறார்கள்.

இப்படிப் பேசுபவர்கள் இருவகைப்படுவர். ஒருவகையினர் தெரிந்திருந்தும் பேசுபவர்கள்; மற்றொரு வகையினர் பிறரால் தெரிவிக்கப்பட்டுப் பேசுபவர்கள். தெரிந்திருந்தும் வேண்டுமென்றே பேசுபவர்களைப் பற்றி நாம் கவலைப்படவில்லை; தெரிவிக்கப்பட்டுப் பேசுகிறார்கள் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

அதுபோல் தமிழன் ஆட்சி நிலை அமைய வேண்டுமென்று நாம் கூறினால், உடனே அவர்கள் கண்களுக்குத் தெரிவதெல்லாம் மன்னர், மன்னனுடைய ஆடை, மீசை, கோட்டை, கொத்தளம், படை, குடவோலை ஆகியவைகள் தான். இவைகள்தான் வேண்டும் என்று நாம் சொல்வதாக எண்ணுகிறார்கள்.

ஆற்றிய வீரம்-அஞ்சா நெஞ்சம்
‘முகத்தைக் கழுவி, பொட்டு வைத்துக்கொள்’ என்று நாம் எட்டு வயதுச் சிறுமியைக் கூறுகிறோம். பதினாறு வயதுப் பெண்ணையும் ‘முகத்தை கழுவி பொட்டு வைத்துக்கொள்’ என்றுதான் சொல்கிறோம். எண்பது வயது பாட்டியைப் பார்த்தும் சொல்கிறோம். அவர்கள் சுமங்கலியாக் இருந்தால்- ‘முகத்தைக் கழுவி பொட்டு வைத்துக்கொள்’ என்று. மூவரும் பருவத்திலே வித்தியாசம் கொண்டவர்களாக இருந்தாலும் கழுவ வேண்டியது முகத்தை வைக்க வேண்டியது பொட்டைத்தான். ஆனால் வயதுக் கேற்ப இடமும் அளவும் மாறலாம்.

அதைப்போல, மன்னர்கள் கையாண்ட வில்லும், வாளும், ஈட்டியும், கேடயமும் அல்ல; கவனிக்கப்பட வேண்டியவை-அதைக்கொண்டு அவர்கள் ‘ஆற்றிய வீரம்’ ‘அஞ்சா நெஞ்சம்’ ஆகியவைதான்.

அக்கால மன்னர்கள் பிறவுயிரைக் காத்தார்கள். ‘அப்படிக் காக்கின்ற பண்பு வேண்டும்’ என்றுதான் பொருள். அக்கால மக்கள் அறநெறியில் செல்வம் ஈட்டினார்கள். ஈட்டிய செல்வத்தைச் சமூகத்திற்காகப் பயன்படச் செய்தார்கள். அக்காலத்தில் சந்தனக் கட்டைகள், முத்து, தங்கம் என்று இப்படிப் பல வகையான செல்வங்கள் இருந்திருக்கலாம். இக்காலத்தில் செல்வம் என்பது வேறாக இருக்கலாம். ஆனால் அதை ஈட்டும் முறை மாறவில்லை. அப்படியே அது, பயன்பட வேண்டிய விதத்திலும் பயன்படுத்த வேண்டும்.

தமிழ் இலக்கியங்களில் மிகப்பெரிய எழுச்சியை எனக்கு ஊட்டுவது இலக்கியங்களில் அமைந்திருக்கிற உவமைகள் தான். நம்முடைய தமிழ்ப்புலவர்கள் இவ்வுவமைகளைக் கையாண்டிருக்கிற முறை நாம் படிக்கும் போதும், கேட்கும் போதும் எண்ணி எண்ணி வியக்கத்தக்கதாகும். அவர்கள் காட்சிப் பொருளுக்குக் கையாண்டிருக்கும் உவமை மிகமிகச் சிறப்புக்குரிய ஒன்றாகும். விளக்கத் தெரிந்த பொருளைக் கொண்டு தெரியாத பொருளை விளக்குவதுதான் உவமையாகும். யானையைப் பார்த்தறியாத ஒருவனுக்கு அவன் குன்றைப் பார்த்திருப்பான். விளக்கிக் கூறக் ‘குன்றுபோல் இருக்கும்’ என்று கூறுவார்கள். இதுதான் உவமை!
இப்படிப்பட்ட உவமை நயங்களை நாவலர் எடுத்துக்கூற நான் கேட்கவேண்டும் என்ற ஆவல் எனக்குண்டு. இந்தத்தொடர்க் கூட்டங்களில் ஒன்றில் அவர் அப்படிப்பட்ட சிறந்த சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்த வேண்டுமென்று என் சார்பாகவும் உங்கள் சார்பாகவும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

பொறுமைசாலி நமக்குக் கிடைத்திருப்பாரா?
நான் பல ஆண்டுகளுக்கு முன்னால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் என்னுடைய அன்பு வலையை வீசினேன். அப்பொழுது அங்கு அன்பழகனும் படித்துக்கொண்டு இருந்தார். நெடுஞ்செழியனும் படித்துக்கொண்டிருந்தார். என்னை அங்குக் கூட்டத்தில் பேச ஏற்பாடு செய்து வரவேற்றுப் பேசியவர் நெடுஞ்செழியன் தான் என்றாலும் என் அன்பு வலையில் சிக்கியவர் முதலில் இவரல்ல! அப்பொழுது அங்கு படிக்கும் பொழுதே அவர் நல்ல புலமையோடு விளங்கினார். படித்துவிட்டுப் பல்கலைக்கழகத்தில் தமிழாராய்ந்து கொண்டு இருக்க வேண்டியவர்-பலர் பார்த்து மெச்சத்தக்க வாழ்க்கை நிலையில் இருக்க வேண்டியவர்- ‘அதோ போகிறாரே அவர்தான் இன்னார்’ என்று அவர் புகழைப் பற்றிப் பேச வேண்டிய நிலைமையில் இருக்க வேண்டியவரை நான் தான் இந்த நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்திவிட்டேன். அவர் இந்நிலையில் வாழ்வில் அல்லல்படுவாரானால், அருள் கூர்ந்து என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.

அன்று அவர் தமிழகப் புலவர்களைப்போல, தாடியுடன் காட்சியளித்தார். அந்தத் தாடியை எடுக்க வைக்க நான் மெத்தவும் சிரமப்பட்டேன். சொல்ல வேண்டிய முறைப்படி சொல்லியும் அவர் கேட்கவில்லை. கடைசியாக மதுரைக்கு அழைத்துச் சென்று தாடியை எடுக்க வைத்தேன்.

நான் அவரை இங்குக் கொண்டு வந்து சேர்த்திருக்காவிட்டால் தமிழகப் புலவர் வரிசையில் ஒரு சிறந்தவர் கிடைத்திருப்பார். ஆனால் நம்முடைய இயக்கத்துக்கு இவ்வளவு பெரிய பொறுமைசாலி கிடைத்திருக்க மாட்டார்.

பயன்படாத உவமை!
ஓர் அழகிய மங்கையைப் பார்த்து ‘இவள் எப்படி இருக்கிறான்? என்று மற்றொருவரைக் கேட்டால் அவர், ‘இவள் மேனகையைப் போல் இருக்கிறாள்’ என்றுகூற, ‘மேனகை எப்படி இருப்பாள்?’ என்று கேட்டால், ‘தேவலோக மங்கையைப்போல் இருப்பாள்’ என்று சொல்ல, ‘அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? நான் அவர்களைப் பார்க்க வேண்டும் என்று கேட்டால், ‘செத்த பிறகு பார்க்கலாம்’ என்று கூறினால், செத்தவர் போவதும் உறுதியில்லை செத்த பின் மீண்டும் திரும்புவதும் முடியாது? இது பயன்படா உவமையாகும்.

சுவையும், பயனும் இணைந்திருக்கிற தனித்தன்மையை உவமை எடுத்துக்காட்டுகிறது. ‘அன்று வாழ்ந்த புலவர்கள் மட்டுமே இப்படிப்பட்ட உவமைகளை அமைத்துக் காட்ட முடியும்’ என்று கருதுவது தவறு. இன்றுள்ள புலவர்களாலும் அமைத்துக்காட்ட முடியும். தற்காலப் புலவர்களுக்கு வாய்ப்பும் வசதியும் அளிக்கப்பட்டால் இயற்கைக் காட்சிகளை எழிலுற எடுத்துக் காட்டியிருக்க முடியும். அவர்கள் அன்றாட வாழ்க்கைக்கே திண்டாடிக் கொண்டிருக்கும் பொழுது மலைகளை, அருவிகளை, இயற்கைக் காட்சிகளை எங்கு சென்று பார்க்க முடியும்?

அவர் புலமைக்கும் நஷ்டம்
வாய்ப்பும் வசதியும் அளிக்கப்பட்டால் திறமை துவங்கும். திறமை தட்டுப்படாத காரணத்தாலேயே இல்லையென்று பொருளில்லை.

நான் நண்பர் பாரதிதாசன் அவர்களுக்கு ரூ.25,000 பண முடிப்பு அளித்தபொழுது அவர் என்னிடம் கேட்டார் ‘இந்தப் பெருந்தொகையை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது? என்று நான் அவருக்குச் சொன்ன தெல்லாம் இத்தொகையை எடுத்துக்கொண்டு இமய முதல் குமரி வரை சுற்றி வாருங்கள். ‘நல்ல நல்ல இயற்கைக் காட்சிகளைப் பாருங்கள். நீங்கள் கண்ட காட்சிகளை நல்ல கவிதைகளாக ஆக்கித்தாருங்கள். அதுவே, நீங்கள் தமிழகத்துக்குச் செய்யும் சிறப்பு’ என்றேன். அவர் அதைச் செய்யவில்லை. அதனால் நமக்கும் நஷ்டம் நாட்டுக்கும் நஷ்டம் அவருடைய புலமைக்கும் நஷ்டம்.

வாங்கக் காசுக்கு எங்கே போவது?
நான் எழுதிய ‘ரொட்டித் துண்டு’ என்ற கதையை உங்களில் பலர் படித்திருப்பீர்கள். அக்கதையில் பணக்கார வாலிபன் ஒருவன் ‘ரொட்டித் துண்டு’ என்ற கவிதையை எழுதினான். அவனை ஊரெல்லாம் பாராட்டியது. அவனைப் பாராட்ட விழா ஒன்று நடைபெற்றது. விழாவிற்கு அவருடைய தமிழாசிரியப் புலவர் தலைமை வகித்தார். கூட்டத்தில் அகவற்பாபாடினார். பாராட்டினார். கூட்டம் முடிந்து வாலிபன் காரில் ஏறச்சென்ற பொழுது அந்தப்புலவர், வாலிபனை நெருங்கி ‘தயவு செய்து நீ எழுதிய நூலின் பிரதியொன்று தரவேண்டும்’ என்று கேட்டார். வாலிபன் அவரை நோக்கி ‘என்னுடைய நூலைப் படிக்காமலேயா என்னைப பாராட்டினீர்கள்?’ என்று கேட்டான் ஆசிரியர் சொன்னார்: ‘மற்றவர்கள் கூறியதைக் கேட்டு நான் பாராட்டினேன். அந்நூலை விலைகொடுத்து வாங்கக் காசுக்கு நான் எங்கே போவேன்?’ என்றார்.

தமிழ்ப் புலவர்களுடைய வாழ்க்கை வசதிகள் பெருக்கித் தரப்பட வேண்டும். பிறமொழி கற்றவர்களுக்கு அளிக்கப்படும் அளவு ஊதியம் வழங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் தமிழ்ப் புலவர்கள் தான் கல்லூரி முதல்வராக இருக்க வேண்டும். இந“நிலை இன்னும் ஐந்தாறு ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட வேண்டும்.

மரபு காத்தனர்
அக்காலத்தில் புலவர்கள்-கல்லூரிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றியவர்கள், வகுப்பு அறைக்குள் குனிந்து குன்றி, இப்புறம் அப்புறம் பார்த்துக்கொண்டு வகுப்புக்குள் நுழைவார்கள். இன்று நிலை அப்படி அல்ல; நான் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கின்ற பொழுது நான் தமிழ் கற்றது திரு.மணி திருநாவுக்கரசு, மோசூர் கந்தசாமி ஆகியவர்களிடம்தான். இவர்கள் இருவருமே நிமிர்ந்து நின்றவர்கள். இவர்களிடம் பாடம் கேட்ட காரணத்தாலேயே நானும் நிமிர்ந்து நின்று சமாளிக்கிறேன். மணி திருநாவுக்கரசு அவர்களிடம் நான் கேட்ட முதல் பாடமே ‘உங்களை நான்’ சுடர் என்றுதான் அழைப்பேன். அதற்காக நீங்கள் வருந்தக்கூடாது; ‘அவர்’, ‘இவர்’ என்று அழைத்தால் பேதமை உணர்ச்சியை ஊட்டும். ‘அது’, ‘இது’ என்று அழைத்தால் அஃறிணைப் பொருளை உணர்த்தும். ஆகவே அன்பின் சின்னமாக உங்களையெல்லாம் நான் ‘சுடர்’ என்றுதான் அழைப்பேன் என்றார். அவருக்குப் பின் மோசூர் கந்தசாமி அவர்கள் வகுப்பில் ஆங்கிலப் பாடங்களை தமிழ் இலக்கியத்தோடு ஒப்புநோக்கிக் காட்டி எங்களுக்குப் பாடம் போதிப்பார். இப்படித் தமிழ் புலவர்கள் வழிவழியாக மரபு காத்து வருகிறார்கள்.

மொழிப்பற்று வளருவதன் மூலம் நாட்டுப்பற்று வளரும். நாட்டுப்பற்று வளருவதன் மூலம் நம்மிடமே நமக்கு நம்பிக்கை வளரும்.

பலசாலி என்று பொருளல்ல!
ஒரு பழைய டப்பாவை எடுத்துத் திறக்க முயன்று திறக்க முடியாமல் அடுத்தவரிடம் கொடுத்துத் திறக்கச் சொல்லி அதைத் திறக்க முடியாமல் மூன்றாவது ஒருவரிடம் தந்து அவர் அதைத் திறப்பதாக வைத்துக் கொள்வோம். இப்படி அவர் அதைத் திறந்துவிட்ட காரணத்தினாலேயே மற்ற மூவரையும்விட இவர் பலசாலி என்று பொருள் அல்ல. அவர் பலசாலியாகக்கூட இருக்கலாம். இது மட்டும் உண்மையாகிவிடாது. அந்த டப்பாவின் மூடியை மூன்று பேர் இழுத்து இழுத்து செலுத்திய வலிவுதான் நான்காம் நபரை திறக்க வைத்தது.

இந்நிலையில்தான் மூடப்பட்டிருந்த தமிழனுடைய மனதை இந்தி எதிர்ப்புக் காலத்திலிருந்து பலர் கொஞ்சம் கொஞ்சமாகத் திறக்க முயன்றனர். கொஞ்சம் கொஞ்சமாகத் திறக்கப்பட்டது.

முதலில் மறைமலையடிகள் முயன்றார். பின்னர் திரு.வி.க. அவர்கள் இந“தப்பக்கம் நின்று திறப்பதைவிட சற்று அந்தப்பக்கமாக நின்று திறந்தால் சுலபம் என்று கருதினார். கடைசியாகப் பெரியார் அவர்கள், ‘டப்பாவை எதன் மேலாவது அடித்துத் திறக்க வேண்டும் என்று சொன்னார். அப்பொழுது பக்கத்திலிருந்த நான் இப்படி மோதுவதால் டப்பாவுக்கும் மோதுகின்ற பொருளால் சேதம் ஏற்படும். ஆகவே, சேதமில்லாமல் அதை தட்டித் திறக்க வேண“டும் என்று கூறினேன்.

மூன்றாம் மாதம் இல்லாமல் பத்தாம் மாதம் இல்லை
இப்படி நான் கூறியதால் ‘இவன் மூடியையே திறக்க மாட்டான்’ என்றும் சிலர் எண்ணலாம். விரைவில் மூடியைத் திறக்கும் ஆளாக நீங்களே ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். அப்படித் தேர்ந்தெடுக்கப்படுபவர் திறக்கவும் செய்யலாம். ஆனால் ஒன்றை மட்டும் கூறுவேன். ‘மூன்றாம் மாதம் இல்லாமல் பத்தாம் மாதம் இல்லை.’

திரு.வி.க. அவர்கள் முதலில் தமிழ் அழகை உணர்ந்தார். பிறகே தமிழர்கள் அவரை உணர்ந்தனர். முதன்முதல் தமிழில் சிறுசிறு வாக்கியங்களை அமைத்துக்காட்ட முடியும் என்று அமைத்துக் காட்டியவர். தனித்தமிழ் நடையில் தேன் சொட்டச் சொட்ட எழுதியும் பேசியும் காட்டினார்கள். இவ்வளவு அழகிய நடையைக் கையாண்டவர்கள் திரு.வி.க அவர்களுக்கு முன்னால் யாரும் இல்லை. அவருக்குப் பின்னும் அதிகம் பேர் இல்லை. தமிழில் உள்ள ‘ழ’கரத்தை சொற்களில் அமைத்துக்காட்டி நெஞ்சை நெகிழச் செய்தவர்.

கண்ணீரைக் காணிக்கையாக்க முடியவில்லை
இப்படிப்பட்டவர் இறக்கும் காலத்தில், உடனிருந்து கண்ணீரைக் காணிக்கையாக்க என்னால் முடியாமல் போய் விட்டது. அப்பொழுது நான் சிறையில் இருந்தேன். சிறைக்காவலாளி எனக்குத் தகவல் சொன்னார். அப்பொழுது சிறையில் நான் சிட்னிலெப் என்பவர் எழுதியிருந்த ‘தொழிலாளர் இயக்க வரலாறு’ என்ற நூலைப் படித்துக் கொண்டிருந்தேன். சிறைக்காவலாளி கூறியதைக் கேட்டதும் அதை, ‘திரு.வி.க. அவர்கள் இன்று காலமானார்’ என்று அந்த நூலிலேயே குறித்து வைத்தேன். திரு.வி.க.அவர்கள் தனக்காக வாழாது தமிழுக்காக வாழ்ந்து தமிழருக்காக அளித்துச் சென்றார்.

(நம்மாடு - 15.2.61)