ஆட்சியாளருக்கு அண்ணா
வேண்டுகோள்
சென்னை, தபால்-தந்த இலாகாவில்
பணியாற்றி ஓய்வு பெறும் பி.என். கோபாலகிருட்டிணன் அவர்களுக்குப்
பாராட்டு விழா 5.3.60 மாலை 6 மணியளவில் மவுண்ட்ரோடு அஞ்சலகத்
திறந்த வெளியரங்கில் திரு.ஏ.பி.துளசிராம் அவர்கள் தலைமையில்
நடைபெற்றது. தோழர் இலட்சுமணன் அனைவரையும் வரவேற்றார்.
தோழர்கள் பி.எம்.கிருட்டிணன்,
கே.இராமமூர்த்தி, ஏ.எஸ்.இராசன் எம.ஏ., வி.ஆர். சௌந்திரராசன்,
சி.எம்.பரிபூரணம். அப்துல்காதர். மாணிக்கவாசகம், அப்துல்சத்தார்
ஆகியோர், திரு.பி.என்.கோபாலகிருட்டிணன் அவர்களின் தொண்டினைப்
பாராட்டித் தொழிற்சங்கத்தில் அவர் பல ஆண்டுகள் தொடர்ந்திருந்து
ஊழியர்களின் உயர்வுக்காக உழைத்ததை எடுத்துக்காட்டி, அவர்
வழி நாமெல்லலாம் செல்லுவதற்கு இவ்விழா வழியாக அமைய வேண்டுமென்றும்,
பாராட்டுதல் பெறுவதற்க அவர் மிகவும் தகுதியுடையவர் என்பதைச்
சுட்டிக்காட்டியும் பேசினர்.
தோழல் டி.செங்கல்வராயன் அவர்கள்
கோபாலகிருட்டிணன் அவர்களின் தொண்டினை வெகுவாகப் பாராட்டிப்
பேசினார்.
இறுதியில் அண்ணா அவர்கள் திரு.கோபாலகிருட்டிணனார்
அவர்க்ளுக்குப் பொன்னாடை போர்த்திப் பேசியதாவது –
இந்த விழாவில் நானும் கலந்து
கொள்வதற்கு அஞ்சல் அலுவலகத்தினர் வழியமைத்துத் தந்தமைக்காக
நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நீண்ட நாளைய நண்பர்்
தபால்-தந்தி துறையில் நீண்ட
பல ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறுகின்ற ஒருவருக்குப் பொன்னாடை
போர்த்திப் பாராட்டும் விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென்று
என்னை நண்பர்கள் அழைத்தபோது பாராட்டு பெறுபவர் யார் என்று
நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர்கள் சொல்லவில்லை. ஆனால்
இங்கு வந்து பார்த்த பிறகு என்னுடைய நீண்டநாள் நண்பர் கோபாலகிருட்டிணன்தான்
அவர் என்று அறிந்ததும், அந்தப் பணியினை மிக்க மகிழ்ச்சியோடு
நிறைவேற்றினேன்.
நான் பொன்னாடை போர்த்த வேண்டும்
என்ற நண்பர்கள் என்னிடம் சொன்னபோது, அப்பணியினைச் செய்வதற்கு
நான் பொருத்தமுடையவன்தானா என்று எண்ணியிருந்தேன். ஆனால்
இப்போது வேறு எவரேனும் அப்பணியினைச் செய்வதாக இருந்தாலும்
அவரின் அனுமதியைப் பெற்று நானேதான் இப்பணியைச் செய்திருப்பேன்.
ஏனெனில் அவர் தலைசிறந்த நல்லெண்ணத்தையும், ஊழியர்களிடத்தில்
நல்ல ஆதரவையும் பெற்றிருப்பவராகும்.
இந்த இலாகாவைப் சேர்ந்தவர்கள்
பேசுகிற நேரத்தில் நாங்கள் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவர்கள்
அல்ல என்று குறிப்பிட்டார்கள். அப்படி இருப்பதைக் குறித்து
நான் பெருமைப்படுகிறேன். அவர்கள் அப்படிச் சொல்லுகிறார்கள்
– உண்மை அப்படியல்ல. அவர்கள் எல்லாக் கட்சிகளிலும் ஈடுபட்டுத்தான்
இருக்கிறார்கள்.
இப்படிப்பட்டவர் நம்மிடம்
இல்லையே
நண்பர் டி. செங்கல்வராயன்
அவர்கள் பேசுகையில், சென்னையை ‘ஏ‘ நகரமாக்குவதற்குத் தன்னை,
டெல்லிக்கு அனுப்பவில்லையென்று குறைபட்டுக் கொண்டார்கள்.
நான் நண்பர் செங்கல்வராயனுக்குச் சொல்லிக் கொள்வேன், நாளையே
என்னிடத்தில் வந்து சேருங்கள், மறுதினமே நான் உங்களை டில்லிக்க
அனுப்பிவைக்கிறேன் என்று!
நண்பர்கள் எல்லோரும் பேசுகிற
நேரத்தில் “நாங்கள் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை“ என்று
சொன்னார்கள். நான் அவர்களுக்குச் சொல்வேன் – கட்சி ரீதியாக
நீங்கள் அரசியலில் இருக்க வேண்டாம். ஆனால் நீங்கள் அரசியலைக்
கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். என்று!
நல்ல எண்ணம் இருக்க வேண்டும்
நண்பர் செங்கல்வராயனைச் சேர்ந்தவர்களுக்கு,
அவரை டில்லிக்கு அனுப்பிவைக்க வேண்டுமென்ற நல்லெண்ணம் இருக்க
வேண்டுமென்ற இந்த நேரத்தில் வலியுறுத்திச் சொல்கிறேன்.
எந்தக் கட்சியின் சார்பில்
ஒருவர் உறுப்பினர் ஆகிறார் என்பது முக்கியமான பிரச்சினை
அல்ல. அவர் எந்தப் பிரச்சினைக்காக உறுப்பினர் ஆகியிருக்கிறார்
என்பதுதான் பிரச்சினை! எனவே தபால்-தந்தி இலாகாவைச் சேர்ந்தவர்கள்
அவர்களுக்கென ஒரு பிரதிநிதியைக் கீழ்ச் சபைக்கு இல்லாவிட்டாலும்
மேல்சபைக்காவது கட்டாயம் அனுப்பிவைக்க வேண்டும். இப்படிப்பட்டவர்கள்
அப்படிப்பட்ட இடங்களில் இருக்கவேண்டும்.
நாட்டினுடைய நலத்தில் நல்ல
எண்ணம் படைத்தவர்கள் அப்படிப்பட்ட இடங்களில் இல்லை. எனவே
உங்களுடைய பிரச்சினை கவனிக்கப்படாமலே போய்விடுகிறது. எனவே
நீங்கள் மேல்சபையில் இடம்பெற வேண்டுமென்பதை நான் பணிவன்போடு
தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்போது நடப்பது மக்களாட்சி
– ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசியல் கட்சிகள் முதலில்
தங்களுக்குள்ளாகவே மோதிக்கொண்டு அதில் சில தப்பிப் பிழைத்து
அவர்கள் நடத்துவதான் மக்களாட்சி என்று கருதினால், குறைகள்
நீடித்துக் கொண்டேதான் போகும்.
அரசியல் சட்டம் திருத்தப்படவேண்டும்
மக்களாட்சி உண்மையான மக்களாட்சியாக
இருக்க வேண்டும். நல்ல முறையில் மக்களிடத்தில் ஓட்டு பெற்று
மக்கள் மன்றத்தில் ஒரு சிலராவது அனுப்பப்படவேண்டும். அந்த
உரிமையைப் பெறத் தபால் தந்தி துறையினர் பாடுபடவேண்டும்.
இந்தியாவில் இதுபோன்ற இலாகாவில்
பணியாற்றுகிறவர்கள் அரசியல் மன்றங்களில் இடம் பெறுவதற்கு
அரசியல் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள்
அங்கே வந்து குறைகளை எடுத்துச் சொல்லுவதற்கு வசதியாக இருக்கும்.
எனவே, இதுபோன்ற அலுவலகங்களில்
வேலை செய்பவர்கள் உடனடியாக அரசியல் மன்றங்களில் இடம் பெறுவதற்க
முயற்சி எடுத்துக் கொள்ளவேண்டும். அப்படி எடுத்துக் கொண்டால்
நானும், நான் சார்ந்திருக்கும் கட்சியும் உங்களை முழு அளவில்
ஆதரிப்போம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதுபோலவே இன்னும் மற்ற துறையினரும்
அரசியல் மன்றங்களில் இடம்பெற வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.
கொடுத்தால் என்ன கெட்டுவிடும்?
இப்பொழுது கலைஞர்களுக்கும்,
ஆசிரியர்களுக்கும், பட்டதாரிகளுக்கும் இன்னும் பிறருக்கும்
அரசியல் மன்றங்களில் இடம் கொடுத்திருக்கும் போது, இது போன்ற
அலுவலகத்தில் பணியாற்றுகின்ற ஊழியர்களுக்காக ஒரு பிரதிநிதித்துவம்
ஏன் அரசாங்கம் கொடுக்கக்கூடாது? கொடுத்தால் என்ன கெட்டுவிடும்?
அப்படி இந்த அலுவலகங்களில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி ஓய்வுபெறுபவர்கள்
அரசியல் மன்றங்களுக்கு வந்தால் அவர்கள் பிரச்சினையைத் தெளிவாக
விளக்கமுடியும்.
எனவே நீங்கள் தயவு செய்து
இந்த அரசியலை ஏற்றுக் கொள்ளுங்கள் கட்சி அரசியல் வேண்டாம்,
என்ற எண்ணத்தை நீங்கள் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லுகையில்
அலுவலகங்களில் வேலை செய்பவர்களுக்கு ஒரு பிரதிநித்துவம்
அரசியல் மன்றங்களில் கிடைப்பதற்கு நீங்கள் முயற்சி செய்யவேண்டும்.
குறிப்பாக இரயில்வே தொழிலாளர்களுக்காகவும், பாங்கித் தொழிலாளர்களுக்காகவும்
தபால்-தந்தித் தொழிலாளர்களுக்காகவும் மன்றங்களில் இடம் அளிப்பது
அவசியம்.
அரசாங்கம் அச்சப்படும்
ஏனென்றால் அவர்கள் அங்கே வந்த
பேசினால் பிரச்சினையில் உயிரோட்டமிருக்கும் வெறும் அரசியல்வாதிகள்
பேசினால் பிரச்சினையில் உயிரோட்டமிருக்காது. அதைவிட விறுவிறுப்பு
இருக்கும் மற்ற கட்சியில் இருப்பவர்கள், இலாகாவைப் பொறுத்தவரை
அதிக அனுபவம் பெற்றிருப்பது இயலாது.
எனவே, இதை எப்படி நீங்கள்
நிறைவேற்றிக் கொள்வது என்பதையும் நான் இந்த நேரத்திலே தெரிவிக்க
விரும்புகிறேன். நீங்கள் கேட்டால் அரசாங்கங்கள் உங்களிடத்தில்
சற்றுப் பயபக்தியோடு நடந்து கொள்ளும். அமைச்சர்க்ளும், தொழிலாளர்களாகிய
உங்கள் பிரச்சினைக்காக இணங்கி வருதல் கூடும். ஏனென்றால்
இப்பொழுது இருக்கிறது அங்கத்தினர்கள் சட்டசபையில் எல்லாப்
பிரச்சினை பற்றியும் பேசுதல் என்பது இயலாது.
உதாரணத்திற்கு ஒன்று சொல்லுவேன்.
சென்ற ஆண்டு சட்டசபையில் பட்ஜெட் விவாதம் நடந்தபோது கட்சித்
தலைவர் என்ற முறையில் இருப்பவர்களுக்கு 30லிருந்து 35 நிமிடம்
வரையிலும், அங்கத்தினர்களுக்கு 10லிருந்து 15 நிமிடம் வரையிலும்
நேரம் ஒதுக்கப்பட்ட விவாதத்துக்காக ஒதுக்கியிருந்த நாள்
5 நாள் இருக்கின்ற உறுப்பினர்கள் 205 பேர். இந்த விவாதத்தில்
கலந்து கொண்டவர்கள் 100 பேர், ஒவ்வொருவரும் பேச ஆரம்பித்தவுடனே
அவர் வெற்றி பெற்று வந்த தொகுதியைப் பற்றி 5 நிமிடம் பேசுகிறார்.
எதிர்க்கட்சியைப் பற்றி 5 நிமிடம் பேசுகிறார் – எதிர்க்கட்சியைப்
பற்றி பேசுவதில்லை என்றால் அவருக்கு மன எரிச்சல் தீருவதில்லை.
மிகுதி இருக்கின்ற இரண்டு மூன்று நிமிடத்தில் எதைப்பற்றியும்
அவர் பேச முடியாமல் உட்கார்ந்து விடுகிறார். 5 நாட்களில்
விவாதித்து அது அமலாக்கப்படவேண்டு மென்று சட்டம் இருக்கிறது.
எனவே எல்லாத்துறைகள் பற்றியும் நாங்கள் பேச முடியுமென்று
நீங்கள் நம்புகிறீர்களா? அது முடிகிற காரியமா? ஆகையால் யாராவது
ஒருவர் அஞ்சல் இலாகாவிலிருந்து சட்டமன்றத்திற்கு வந்தால்,
குறிப்பிட்ட நேரத்தில் பிரச்சினையை அவர்கள் தெளிவாக விளக்கிப்பேச
முடியும். எனவே இப்படிப்பட்ட இடங்களில் நீங்கள் இருக்கவேண்டும்
என்பதை நான் உணர்கிறேன்.
எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கிறார்களா?
இதே போலத்தான் மக்கள் சபையிலும்
இருக்கிறது. அங்கு 500 பேர் இருக்கிறார்கள். அவர்களிலே யாராவது
ஒருவர் தபால் தந்தி இலாகாவைப் பற்றிப் பேச எழுந்தால், அந்த
இலாகா அமைச்சர் “அந்த இலாகாவைப் பற்றி உமக்குத் தெரியாது“
என்று சொல்லி அவரைப் பேச முடியாமல் செய்துவிடுகிறார். நீங்கள்
என்னைக் கேட்கக்கூடும் அமைச்சர்கள் மட்டும் எல்லா இலாகாவைப்
பற்றியும் தெரிந்து வைத்து இருக்கிறார்களா? என்று அவ்வாறு
அவர் தெரிந்த கொண்டிருக்கவில்லை. ஆனால் தெரிந்ததாக நடிக்கிறார்கள்.
மக்கள் நம்பாவிட்டால் அதிகாரத்தால் அதனை நம்பச் செய்கிறார்கள்.
ஆகையால் இன்றுள்ள அரசியல்
– தலைவர்களுக்கு இதுபோன்ற பிரச்சினையைப் புரிந்து கொள்வதற்கு
ஓய்வு கிடைக்குமா என்றால் கிடைக்காது. ஆகவே உங்களில் ஒருவராவது
ஆட்சி மன்றங்களில் இருக்க வேண்டும் என்பதை நான் வலியுறுத்த
விரும்புகிறேன்.
ஆனால் அரசியல் கட்சிகளின்
ஆதரவை எதற்காக நீங்கள் தே வேண்டுமென்றால், உங்களுடைய பிரச்சினையை
மக்களிடத்தில் சொல்வதற்கும், மக்களுடைய ஆதரவை உங்களுக்கு
வாங்கித் தருவதற்கும் மட்டமே அரசியல் கட்சிகளின் ஆதரவை நீங்கள்
கோர வேண்டும்.
சட்டமன்றம் வாருங்கள்!
இப்பொழுது அரசாங்கப் பாங்கியிலுள்ள
ஒரு அதிகாரி கொடுக்கின்ற அறிக்கையைப் படித்தேன். மாநிலத்திலுள்ள
சில பாங்கிகள் கடனில் வேலை செய்கின்றன என்றும், இந்நிலையில்
ஊழியர்கள் ஊதிய உயர்வு கோருவது நியாயமா என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
இதைப்பார்த்தவுடனே யாருக்கும் என்ன இந்த ஊழியர்கள் நியாயமில்லாமல்
நடந்து கொள்கிறார்களே? என்றுதான் தோன்றும். ஆனால், அதில்
எவ்வளவு லாபம் வருகிறது எந்தெந்தத் துறையில் வருகிறது என்று
விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் பாங்கியில் நீண்ட பல ஆண்டுகள்
பணியாற்றி அனுபவம் பெற்ற ஒருவர் இந்த உண்மைகளை எல்லாம் சட்டமன்றத்தில்
எடுத்துச் சொல்ல முடியும். ஆகவே அவர்களும் சட்டமன்றத்தில்
உறுப்பினராக வந்து பணியாற்றுவதற்கு முயற்சி எடுத்துக் கொள்ளவேண்டும்.
மக்களாட்சி எப்படி இருக்கவேண்டும்
என்று சொல்லுகையில், எல்லா அலுவலகத்திலும் பணியாற்றுபவர்களுக்கென
ஒரு பிரதிநிதி ஆட்சி மன்றத்தில் இருக்கவேண்டும் என்ற சொல்லப்பட்டிருக்கிறது.
அந்த முறையில் துரைத்தனத்தார் வழியமைத்துத் தரவேண்டுமென
நான் இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.
மனத்திருப்தியே இளமைக்குக்
காரணம்
நண்பர் கோபாலகிருஷ்ணன் நல்ல
இளமையோடு இருக்கிறார் என்பதை நாம் பார்க்கிறோம். அதற்குக்
காரணம் அவர் செய்த தொண்டில் அவருக்கு மனத்திருப்தி இருப்பதே
காரணமாகும்.
நமது தமிழகத்தில் ஒரு மன்னன்,
“தலைமுடி நரைத்துவிட்டதே, இதற்குக் காரணம் என்ன? என்று அமைச்சரிடம்
கேட்டான். அமைச்சர், “மன்னா உங்களுக்குக் கவலை அதிகம் இருக்கிறது.
அதனால்தான் தலைமுடி நரைத்துவிட்டது“ என்றான். இதேபோல் கம்இராமாயணத்தில்
தலைமுடி நரைத்துவிட்டது என்று தெரிந்ததும் “ஓகோ வயதாகிவிட்டது“
என்று உணருகிறான் தசரதன். நான் இதை அரசியலுக்காகச் சொல்லவில்லை
மனப்பான்மைக்காகச் சொன்னேன்.
எனவே எத்தொழிலில் ஈடுபட்டவர்களுக்கும்
மனத்திருப்தி இருக்க வேண்டும். அது இப்போது நமது நாட்டிலுள்ள
அலுவலங்களலி் பணியாற்றுவர்களுக்கு இல்லை. குறிப்பாக ரெவினியூ
இலாகாவை எடுத்துக் கொண்டால் அங்கு ஒரு தாசில்தார் இருப்பார்.
அவரைப் பார்ப்பதற்கு ஒரு கிராம முன்சீப் வருவார். ஆனால்
அவருக்கு உட்காருவதற்குக் கூட நாற்காலி கொடுக்காமல் அவரைப்
பேசவும் விடாமல் சற்றுக் கோபமாகவே பேசித்திருப்பி அனுப்பிவிடுவார்.
இது போன்ற நிலைமை இந்த சனநாயக ஆட்சியில் இருக்கிறது என்பதை
நண்பர் செங்கல்வராயன் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களுக்காகப் பணியாற்றுகிறோம்
நான் அதிகாரிகளைக் குறை சொல்லுகிறேன்
என்று எண்ணவேண்டாம் அவர்கள் மனத் திருப்தியில்லாமல் வேலை
செய்கிறார்கள். நாம் மக்களுக்காகப் பணியாற்றுகிறோம் என்ற
எண்ணம் அவர்கிடத்தில் இல்லை. ஆகையால் தான் அவர்கள் அப்படி
நடந்து கொள்கிறார்கள்.
எனவே நல்ல திறமை படைத்த நண்பர்
கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள், நான் முன்பு சொன்னது போல சட்ட
மன்றங்களில் இடம் பெறுவதற்கு இந்த விழாவில் நீங்கள் எல்லாம்
முடிவெடுத்துக் கொள்ளவேண்டும்.
உங்களுடைய நியாயமான குறைகளையும், கோரிக்கைகளையும் துரைத்தனத்தார்
உடனுக்குடன் கவனித்து ஆவன செய்ய வேண்டுமென்று அவர்களுக்கு
வலியுறுத்திச் சொல்லிக் கொள்வேன்.
திரு.கோபாலகிருட்டிணன் அவர்கள்
நன்றி தெரிவித்துப் பேசுகையில் தான் ஓய்வு பெற்ற போதிலும்
கூட ஊழியர்களின் முன்னேற்றத்துக்காகத் தொழிற்சங்கத்திலிருந்து
பணியாற்றுவதாகத் தெரிவித்துக் கொண்டார்.
(நம்நாடு - 24.4.60)