அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


அண்ணா அழைக்கின்றார்!

1968 சூலைத் திங்கள் 20 ம் நாள் சென்னையில் நடைபெற்ற தமிழரசுக் கழக 5 வது மாநில மாநாட்டினையொட்டி, ஏற்பாடு செய்யப்பட்ட மாநில சுயாட்சி கருத்தரங்கில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் தலைமையில் மாநில சுயாட்சிக் கொள்கையின் இன்றியமையாமை பற்றி பேரறிஞர் அண்ணா, காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப், (இந்திய முஸ்லீம் லீக் தலைவர்) திரு. ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாத் (பொது உடமைக் கட்சி, அன்றைய கேரள முதல்வர்), திரு.கல்யாணசுந்தரம் (பொது உடைமைக் கட்சி) ஆகியோர் சொற்பொழிவாற்றினர்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் கருத்துரை:
மாநில சுயாட்சி வேண்டும் என்று நாம் கேட்கிறபோது காமராசரும், சுப்பிரமணியமும் இப்படிப் பேசுவது மத்திய அரசைக் குலைப்பதாகும். நாட்டுக்குப் பெரும் ஆபத்து வரும் என்று கூறுகின்றனர். இது பற்றிய எனது விளக்கத்தைக் கூறுமுன்பு அவர்களிடம் பணிவன்போடும் உறுதியோடும் கேட்டுக் கொள்வேன். நாட்டுக்கு ஆபத்து வரும் என்று அறிந்து கூறவும், நாட்டை வலிமையுள்ளதாக ஆக்கும் உரிமையும், வழிகாட்டும் உரிமையும் உங்களைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்று நினைத்துப் பேசிட முழு உரிமை யாரால், எந்தக் காரணத்தால், எப்போது உங்களுக்கு அளிக்கப்பட்டது?

குழந்தை தெருவில் சென்றால் கார் வந்து மோதிவிடும். அதற்கு ஆபத்து வரும் என்று உணர்ந்து அந்தக் குழந்தையைக் காப்பாற்றிட எல்லோருக்கும் உரிமை உண்டு; தேவையுண்டு ஏதோ நாங்கள் பாதை தவறியவர்கள் போலவும் அவர்கள் தான் காப்பாற்றும் உரிமை படைத்த பாதுகாவலர் போலவும் பேசுவது ஏன்?

காங்கிரஸ் தலைவர்கள் இப்படிப் பேசுவது 15 ஆண்டுகளுக்கு முன் அனுமதிக்கப்பட்ட தவறாக இருக்கலாம். இருபது ஆண்டுகளுக்கு முன் மக்களுக்கு இவையெல்லாம் புரியாத காரணத்தால் சரி என்று கூட ஏற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால் விழிப்படைந்த இந்தக் காலத்தில் கூட அப்படிப் பேசுவது ஆணவத்திற்கு எடுத்துக்காட்டு என்றுதான் உலகம் கருதும்! நாட்டுக்கு ஆபத்து என்பதை உணரும் சக்தி எங்களை விட சுப்பிரமணியத்துக்குத்தான் உண்டு எனக் கூறுவது எந்த நியாயத்தின் அடிப்பைடியல் எழுந்தது?

நாட்டைக் கட்டிக் காப்பதில் மா.பொ.சிவஞானத்திற்கு உள்ள உறுதியைவிட காமராசருக்கு உறுதி அதிகம் என்பது எந்த நியாயத்தின் பாற்பட்டது?

காங்கிரஸ்காரர்களைத் தவிர நாட்டின் மீது மற்றவர்களுக்கு அக்கறை இல்லை என்பது பொருளற்றது; பொருத்தமற்றது; ஒதுக்கித் தள்ளப்படவேண்டியது.

பலமான மத்திய அரசு வேண்டும் என்று கூறுகின்றார்கள். மத்திய அரசுக்கு பலம் எதற்காக? அந்தப் பலம் யாருக்கு எதிராக என்பதையும் நாம் சிந்தித்துப் பார்த்திடவேண்டும்.

வலிவு தேடித்தரத் தயார்!
பலம் என்பது தனிப்பட்ட ஆளுக்கு இருக்கலாம்; தனிப்பட்ட அமைப்புக்கு இருக்காலம்; மாநில துரைத்தனத்திற்கு இருக்கலாம், மத்திய துரைத்தனத்திற்கு இருக்கலாம். ஆனால் அந்தப் பலம் யாருக்காக எதற்காக ஏற்படுத்துவது என்பது பற்றி விளங்கிக் கொள்ளாமலும் விளக்கிச் சொல்லாமலும், பேசிக் கொண்டிருக்கின்றனர்.

சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக மத்திய அரசுக்கு வலிவு தேவை என்றால் ஒரு துளியும் தயக்கமில்லாமல் அந்த வலிமைத் தரத் தயார்! பாகிஸ்தான் படையெடுப்பை அடக்க மத்திய அரசுக்கு வலிவு தேவை என்றால் நிச்சயம் அந்த வலியைத் தேடித்தரத் தயார்!

ஆனால், மத்திய அரசின் வலிவு அசாமிற்கு அச்சத்தைத் தர தமிழ்நாடு தத்தளிக்க, கேரளத்திற்குக் கலக்கம் தருவதற்குத்தான் என்றால், நமது சிந்தனையைச் சிறுகச் சிறுக அழித்து, சிந்திக்கும் திறனே இல்லாமல் ஆக்குவதற்குத்தான் என்றால், நமது கூட்டுச் சக்தியின் மூலம் நம்மில் ஒவ்வொருவருடைய வலுவையும் கொண்டு, அந்த அக்ரம வலிவை சிறுகச் சிறுகக் குறைப்பதுதான் எங்கள் கடமையாக இருக்கும்.

உள்ளபடியே பலமான மத்திய அரசு இருந்தால் காங்கிரஸ் காரர்களாவது காப்பாற்றப்படுவார்களா என்பதை அவர்கள் கொஞ்சம் நிதானத்துடன் சிந்திக்கவேண்டும்.

சரிந்த சாம்ராஜ்யங்கள்:
மத்திய அரசு பலமாக இருந்தும் குப்த சாம்ராஜ்யத்தில்! மத்திய அரசு பலமாக இருந்தது மொகலாய சாம்ராஜ்யத்தில்! மத்திய அரசு பலமாக இருந்தது பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில்! ஆனால் இன்று அந்த சாம்ராஜ்யங்கள் எங்கே?

சரிந்த சாம்ராஜ்யங்களுடன் இப்போது இருக்கின்ற சாம்ராஜ்யத்தை ஒப்பிடுவதற்கு உள்ளபடியே வருத்தப்படுகிறேன். அந்த சாம்ராஜ்யவாதிகள் தமது சாம்ராஜ்யங்களுக்கு அதிகமான வலிவு தேட முயற்சி செய்த ஒவ்வொரு நேரத்திலும் சரிவுதான் ஏற்பட்டது என்பதை சரித்திரமுணர்ந்தவர்கள் அறிவார்கள்.

ஔரங்கசீப் காலத்தின் வலிவான மத்திய ஆட்சிக்கு ஒப்பான மத்திய ஆட்சியை சரித்திரத்தில் காணமுடியாது. ஆனால், அந்த சாம்ராஜ்யம் என்ன ஆயிற்று என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். நமக்கிருக்கிற கவலை எல்லாம் தூக்க முடியாத பாரத்தை மத்திய ஆட்சியினர் விரும்புகிறார்களே என்பதுதான்!

மத்திய அரசின் வலிவு என்பது மாநிலங்கள் ஒவ்வொன்றின் தனித்தனி வலிவையும் கூட்டியதால் ஏற்பட்ட மொத்த வலிவுதான் என்றால் வாதத்திற்கும் ஏற்றது; அரசியலுக்கும் நல்லது; காரியத்திற்கும் உகந்தது.

மாநில அதிகாரங்களை எல்லாம் எடுத்து மத்திய அரசு குவித்து வைத்துக் கொள்வதால்; மாநிலங்கள் பலகீனமடையும் என்பது மட்டுமல்ல; மத்திய அரசுக்கென்று புதிய வலிவு ஏதும் ஏற்பட்டுவிடாது.

உனக்கு வலிவு வேண்டாம், என்னிடமே இருக்கட்டும்; உனக்கு எது தேவையோ அதை என்னிடம் கேள் என்று மத்திய அரசு கூறுவது 80 வயதான பிறகும் பெட்டிச் சாவியை வெள்ளி அரைஞாண் கயிற்றில் கட்டிக்கொண்டும், படுக்கும்போது கையை சாவிக் கொத்தில் வைத்துக்கொண்டு திரும்பித் திரும்பிப் படுத்து, சாவி நம்மிடம் இருப்பதால் பிள்ளைகள் பெட்டியைத் திறக்க மாட்டார்கள் என்று தவறாக எண்ணும் வயோதிகரின் நினைப்பைப் போன்றதுதான்!

எல்லா அதிகாரங்களையும் தாங்கள் தாங்கக்கூடியவர்கள் என்ற நம்பிக்கை இருந்தாலாவது அவர்களிடம் எல்லா அதிகாரங்களையும் தரலாம். ஆனால் வஞ்சகத்திற்கு இடமில்லாமல் நெஞ்சில் கைவைக்காது, காங்கிரஸ்காரர்கள் கூறட்டும்! இந்தியா முழுவதும் ஒப்புக்கொள்ளப்பட்டவர்-எல்லா இடங்களிலும் தனது செல்வாக்கைச் செலுத்தக்கூடிய நேரு போன்ற அகில இந்திய தலைவர்கள் எத்தனைபேர் காங்கிரசில் இருக்கிறார்கள்! இப்படிக் கேட்பது காங்கிரஸ்காரர்களுக்கு வருத்தமாகக் கூட இருக்கும்! கோபம் கூட வரலாம்; உண்மையைச் சொல்லுகிறேன் என்று!

நேருவுக்குப் பிறகு இந்தியா முழுமையும் கட்டி ஆளும் திறன் படைத்தவர்கள் என்ற நம்பிக்கையை இந்த நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்படுத்தியவர், அவரைப் போல் ஒருவர் இப்போது இருக்கிறாரா என்று காங்கிரஸ்காரர்கள் கூறட்டும்! அவர்கள் எந்தப் பெயரைச் சொன்னாலும் அதை நம்புவதற்கு அவர்களிலேயே சிலர் தயாராக இல்லை.

நேரு அதிக அதிகாரங்களைக் கேட்பது தவறாக இருந்தாலும் அவர் தாங்கக்கூடியவர் என்ற நினைப்பில் அதிக அதிகாரங்களை மக்கள் தரத் தயாராக இருந்தார்கள். ஆனால், அவ்விதம் தாங்கக் கூடியவர்கள் இல்லாத இந்த நேரத்தில் எப்படி அதிக அதிகாரங்களைத் தர முடியும்?
அதிகார வலிவு என்பது செய்யும் வேலைக்கேற்ற வலிவாக இருக்கவேண்டுமே தவிர, பாங்கியில் போடப்பட்ட பணம் போல் கருதக்கூடாது.

நாட்டுப் பாதுகாப்புத் தவிர, மற்ற அதிகாரங்கள் அனைத்தும் பற்றிச் சிந்திப்போம்; மாநிலங்களுக்குத் தேவையான அதிகாரங்களை மாநிலங்கள் எடுத்துக்கொள்ளட்டும். பின்னர் மாநிலங்கள் விரும்பித் தருகின்ற மீதியுள்ள அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக் கொள்ளட்டும்.

தற்பொழுதுள்ள அரசியல் சட்டத்தை ஆராய்ந்து மாநில மத்திய அரசுகளுக்கான அதிகாரப் பங்கீடுகளை மாற்றி அதிக அதிகாரங்களை மாநிலங்களுக்குத் தரவேண்டும். அதற்கென ஒரு குழு நியமித்து ஆராயவேண்டும் என்று நிருவாகச் சீர்திருத்தக் குழுவிடம் நான் யோசனை தெரிவித்துள்ளேன்.

அவர்கள் அவ்விதம் ஒரு குழு நியமிக்காவிடினும் தமிழரசுக் கழகம் அதிகாரப் பற்றற்ற ஒரு குழுவை அமைக்கலாம். சட்ட வல்லுநர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், மாணவர் பிரதிநிதிகள், தொழிலாளர் பிரதிநிதிகள், தொழில் வித்தகர்கள் போன்ற எல்லா தரப்பினரும் அதில் இடம்பெற வேண்டும். அந்தக்குழு அரசியல் சட்டத்தை ஆராய்வதோடு வெளிமாநிலங்களுக்கும் சென்று அவர்களது அனுபவங்களையும் கேட்டறிந்து எவ்விதம் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது என்ற விரிவான அறிக்கையைத் தயாரித்து அடுத்த மாநாட்டிற்குள் சமர்ப்பிக்க வேண்டுகிறேன்.

இன்றைய தினம் மாநில அரசுக்குள் வேலை என்ன? மக்களுக்குச் சோறு போடுவது, வேலை வாய்ப்புத் தருவது தொழில் நீதியை நிலைநாட்டுவது, சுகாதாரத்தைப் பேணுவது, கல்விச் செல்வத்தை வளர்ப்பது போன்ற எண்ணற்ற வேலைகளைச் செய்யவேண்டியது மாநில அரசு. ஆனால் மத்திய அரசின் வேலை என்ன? நாடக மேடையில் வரும் ராஜா, மந்திரியை அழைத்து, மந்திரி! நமது மாநகர் தன்னில் மாதம் மும்மாரி பொழிகின்றதா? என்று கேட்பானாம். அதுபோல் மாதம் ஒருமுறை மாநில மந்திரிகளை மத்திய மந்திரி டில்லியில் கூட்டி பள்ளிக்கூடங்களில் கல்வி எப்படி இருக்கின்றது? காலரா நோய் தடுக்கப்பட்டுவிட்டதா? என்று கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

இப்படி தர்பார் பேச்சுப் பேசும் பொறுப்புத்தான் டில்லிக்கு இருக்கிறதே தவிர வேறு ஒன்றுமில்லை. மக்களின் சுகதுக்கத்தோடு பின்னிப் பிணைந்திருப்பது மாநில அரசு தானே தவிர, மத்திய அரசு அல்ல! மக்களின் மீது அக்கறை இருக்கலாம் மத்திய அரசுக்கு அது எப்படிப்பட்ட அக்கறை? குடிசைப்பகுதியில் தீப்பற்றியதும் மூன்று மாடியிலுள்ள சீமான் ஏதோ கரும்புகை தெரிகின்றதே! பெரும் தீ விபத்துப்போல் இருக்கின்றதே! என்று கூறுவானே அதைப்போன்ற அக்கறைதான் அது! ஆனால் குடிசையில் தீப்பற்றியதும் பதறித் துடிப்பது யார்? அந்தக் குடிசைக்குப் பக்கத்தில் உள்ள குடிசைவாசிகள் தான்! அதைப்போல மாநில அரசினர்தான். மக்களின் குறைகளை நேருக்கு நேர் சந்திக்க வேண்டியவர்கள்.

நாளைய தினம் கேரளத்து ரேஷன் கடையில் அரிசி இல்லை என்றால் பதில் சொல்ல வேண்டியவர் நம்பூதிரிபாடே தவிர ஜெகஜீவன்ராம் (அன்றைய மத்திய உணவு அமைச்சர்) அல்ல. ஜெகஜீவன்ராமின் பெயரை உரிமையுடன் சொல்லுவதற்குக் காரணம் அவர்மீது எங்களுக்கு பெருமதிப்பு உண்டு. எங்கள் மீது அவருக்கு அன்பு உண்டு.

ரயில்வே பயர்மேன்கள் ஸ்டிரைக் நடந்தது. அது கண்டு பதறியது யார்? நானும் நம்பூதிரிப்பாடும்தான். ஆனால் அப்போது டில்லி அமைச்சர்கள் எங்களைச் சந்தித்தபோது வெகு அலட்சியமாக என்ன ஆயிற்று அந்த பயர்மேன் ஸ்டிரைக்? என்று கேட்டார்கள். ஏனெனில் அதனால் பாதிக்கப்படுபவர்கள் நாங்கள் இன்னும் நான்கு நாட்கள் பயர்மேன் ஸ்டிரைக் நடைபெற்றிருந்தால் நம்பூதிரிபாட் சென்னை ஓட்டலுக்கு வந்துதான் சாப்பிட வேண்டி வந்திருக்கும்.

அவர்கள்தான் குற்றவாளிகள்!
அதிகாரம்-தேவைக்கு அதிகமாக குவிந்துவிட்டால் என்ன நடக்கிறது? நான் அண்மையில் டில்லி உணவு அமைச்சகத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். எனக்கு தொலைபேசி யில் கேட்கும் சக்தி அதிகம் இல்லாததால் எனது நண்பரை விட்டு பேசச் சொன்னேன். உணவு அமைச்சர் ஜெகஜீவன்ராம் ஊரில் இல்லாததால், துணை அமைச்சர் ஷிண்டே என்பவர் பேசினார். கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலையிலிருந்து சர்க்கரையை வெளிக்கொணரும் உத்தரவு டில்லியிலிருந்து வராததால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்ற விஷயத்தை அவருக்குக் கூற முயன்றேன். ‘கள்ளக்குறிச்சி’ என்ற பெயரைப் புரிந்துகொள்ளவே 15 நிமிடமாயிற்று. பெயரைப் புரிந்துகொள்ள முடியாததற்காக அவர்மீது நான் குற்றம் சாட்டவில்லை. சர்க்கரை ஆலை இருப்பதோ தமிழ்நாட்டில் அதைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் டில்லியில் என்று அதிகாரத்தைப் பிரித்துக் கொடுத்தார்களே அவர்கள் தான் குற்றவாளிகள்!

இப்படி கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆளையிலிருந்து காட்பாடி சிறு தொழிற்சாலை வரை எல்லாவிதமான சிறு விஷயங்களிலும் அதிக அதிகாரத்தை வைத்துக் கொண்டிருப்பதின் விளைவு பெரிய விஷயங்களில் அதிக கவனம் செலுத்த முடியாமல் போய்விடும் என்பதால்தான் அதிகாரங்கள் டில்லியில் குவிக்கப்படக்கூடாது என்கிறோம்.

நம்பூதிரிபாட் பேசுகையில் வலிமையான மத்திய அரசு இருந்தபோது காஷ்மீர் பிரச்சினையைத் தீர்த்தார்களா என்று கேட்டார். நான்கூட வேடிக்கையாக ஒரு கருத்தை டில்லி மந்திரிகளிடம் கூறினேன். காஷ்மீருக்கு இத்தனை ஆண்டு காலமாகச் செலவழித்த பணத்தில் பாதி இருந்தாலே போதும் ஒரு நாட்டையே விலைக்கு வாங்கி விடலாம் என்று!

ஆகவே வலிவான மத்திய அரசுதான் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்பது தவறு.

மாநில சுயாட்சி தரத் தயக்கம் காட்டுவார்களானால் அளவுக்கு மீறிய அதிகாரங்களைத் தாங்கித் தாங்கி, பாதுகாப்பு போன் பெரிய விஷயங்களில் சோடை போய்விடுவார்களோ என்பதுதான் எங்கள் சந்தேகம்.

இன்னொரு விஷயத்தையும் நான் கேட்க விரும்புகிறேன். இதைச் சொல்வதன் மூலம் அண்ணாதுரை பழைய பிரிவினை வாதத்திற்கு வந்துவிட்டான் என்று தயவுசெய்து கருதவேண்டாம்; பிரிவினை கேட்போம் என்பதற்கு ஒரு துளியும் இடமில்லை. என் கழகத்தைச் சார்ந்தவர்கள் பிரிவினைக் கோரிக்கையைப் புதுப்பிக்கமாட்டார்கள்.

யாருமே அந்தக் கோரிக்கையைப் புதுப்பிக்க மாட்டார்கள் என்று நான் கூற முடியாது. என் கழகத்தைச் சார்ந்தவர்கள் புதுப்பிக்க மாட்டார்கள் என்ற அளவில்தான் கூறுகிறேன். ஏனெனில் எல்லோருடைய மனதையும் பூட்டி, என் கையில் சாவியை நான் வைத்துக் கொண்டிருக்கவில்லை.

ஆகவே, என்னைப் பற்றி டில்லி அரசுக்குத் தெரியும். காங்கிரஸ் தலைவர்கள் அங்கே என்னைப் பற்றி கலக மூட்டி நிச்சயம் கெடுக்க முடியாது. டில்லி கூட்டங்களில் என்னைவிட பிரம்மானந்த செட்டிதான் (அன்றைய ஆந்திர முதல்வர்) காரசாரமாகப் பேசுவார்கள். டில்லி அமைச்சர்கள் அனைவருமே “அண்ணாதுரை நியாயமான மனிதர்” என்றுதான் என்னைப்பற்றிக் கூறுவார்கள். என்னைப்பற்றி அங்கே கசப்பு மூட்டுவது காங்கிரஸ் காரர்களுக்கு இனிப்பாக இருக்கலாம். அது பலிக்காதபோது அதுவே அவர்களுக்குக் கசப்பாகவும் முடியலாம். அப்படியே எங்களுக்கள் விரோதமூட்டி, எங்களைப் பதவியிலிருந்து விலக்கிவிட்டால் நாங்கள் வலிவற்றவர்களாகவா போய்விடுவோம்? பதவிக்கு வந்ததால், இருக்கின்ற வலிவை இழந்தோமே என்று எண்ணுபவர்கள் நாங்கள்.

உள் மனம் “பதவியை விட்டுப் போ” என்கிறது. கடமை “இரு” என்கிறது ஆகவே, பதவி துறந்தால் வலிவற்றுப் போய்விடுவோம் என்று எண்ணவேண்டாம்!

என்ன நியாயம்?
இன்றைய தினம் கல்விப் பொறுப்பு மாநில அரசுக்குரியது என்று அரசியல் சட்டம் கூறுகிறது. ஆனால், மத்திய கல்வி அமைச்சர் அண்மையில் கல்விக்கொள்கை என்றும், கல்வித் திட்டம் என்றும் ஏதோ வகுத்து, மாநிலங்கள் இப்படி, இப்படி நடக்கவேண்டும் என்று கூறியிருக்கின்றார். மாநில அரசுக்குரியது கல்விப் பொறுப்பு என்று வரையறுத்த பிறகும், மத்திய அமைச்சர் என்று ஒருவர் இருந்துகொண்டு மேலதிகாரம் செய்கிறார். மாமியாருக்கு மருமகள் அடங்கி நடக்க வேண்டியதுதான். அதற்காக அந்தத் தெருவிலுள்ள எல்லா மாமியார்களுக்கும் அடங்கி நடக்கவேண்டும் என்பது என்ன நியாயம்?

தந்திரமான அதிகாரப் பிரிப்பு!
தொழில் அமைப்பு மாநில அதிகாரத்திற்கு உட்பட்டது தான். ஆனால், தொழில்கள் அமைக்க பிற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளும் அதிகாரம் இங்கே இல்லை. இயந்திரம் வாங்கும் வசதியும் இங்கே இல்லை.

தொழில் அமைப்பு மாநில அரசுக்குரியது. தொழிலுக்கு லைசென்ஸ் தருவது மத்திய அரசுக்கு உரியது என்று தந்திரமாக பிரித்து வைத்திருக்கிறார்கள்!

போக்குவரத்து மாநில அரசுக்குரியது, எனினும் எந்தப் போக்குவரத்து? பஸ் போக்குவரத்து, லாரி போக்குவரத்துதான். ஆனால், கப்பல் போக்குவரத்தும், ஆகாய விமானப் போக்குவரத்தும் துறைமுகப் பராமரிப்பும் மத்திய அரசினுடையது.

மாநில சுயாட்சித் தத்துவம் பிறந்தது!
இவ்விதம் தொடர்பு அதிகாரங்களின் மேலதிகாரம் அனைத்தும் டில்லியில் இருப்பதை மாற்றிடத்தான் மாநில சுயாட்சித் தத்துவம் பிறந்தது! மாநில சுயாட்சி என்பது தேவையின் அடிப்படையில் எழுந்த அரசியல் கோரிக்கையை தவிர; அரசியல் கட்சிக் கோரிக்கை அல்ல.
மாநில சுயாட்சி வந்தால் சிவஞானத்திற்கு வெற்றி எனக் கருதாமல்; அரசியல் தெரிந்த அனைவருக்கும் அவர் விடுத்த அழைப்பு எனக்கருதி ஒத்துழைப்பு நல்கவேண்டும்.
திராவிட நாடு ஏட்டில் அண்ணா எழுதிய கருத்துக்களில் சில...

திட்டங்களைத் தீட்டும் அதிகாரம்:

நான் ஒன்றை மட்டும் வலியுறுத்திக் கூற முடியும். மத்திய சர்க்காரிடம் அதிகாரங்கள் குவிந்திருக்கும் வரையில் கோடிக்கணக்கில் செலவு செய்து நிறைவேற்றப்படும் திட்டங்கள் பலனளிக்கப் போவதில்லை. திட்டங்கள் டில்லியிலே தீட்டப்படுவது நிறுத்தப்பட்டு, மாநிலங்களில் திட்டங்கள் வகுக்கப்படவேண்டும். டில்லி சர்க்கார ஒரு மாநிலத்திற்கும் இன்னொரு மாநிலத்திற்கும் தொடர்பு ஏற்படுத்துகின்ற வகையில் இயங்க வேண்டுமே தவிர, திட்டங்களைப் போடுவதற்கும் நிதியைப் பங்கிட்டுக் கொடுப்பதற்கும் அதிகாரங்கள் இருக்கக்கூடாது; மாநிலங்களுக்கு திட்டங்களைத் தீட்ட அனுமதி கொடுத்தால் தான் பலன் தரத்தக்க வகையில் திட்டங்கள் அமையும்.
-11.1.59 திராவிட நாடு

அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும்!
ஆகையால் தான், பல தடவை எடுத்துச் சொன்னதுபோல், இந்த முறையும் எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். எப்படி தனிப்பட்ட அங்கத்தினர்கள் அமைச்சர்களைப் பார்த்து “இந்த ஏரிக்கரையை உயர்த்திக் கொடுங்கள், அமோனியம் சல்பேட் கொடுங்கள்” என்று கேட்கிறார்களோ, அதைப் போல், இங்கே (மாநிலத்தில்) இருக்கும் அமைச்சர்கள் அங்கே (மத்திய அரசில்) சென்று எங்களுக்கு இன்னது தேவை என்று கேட்கிற நிலை இருக்கிறதே தவிர, பொருளாதாரப் பிரச்னைகளைத் தீர்“க்கத்தக்க அளவுக்கு இந்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை... திரும்பத் திரும்பச் சொல்லுகிறேன்; இந்த மாநில அரசுக்குப் பொருளாதாரத் துறையைச் செம்மைப்படுத்தக்க அதிகாரம் இல்லாத காரணத்தால் தான், எவ்வளவு திட்டங்கள் தீட்டினாலும் அதை நிறைவேற்றிச் செல்வதிலே ஏற்படக்கூடிய சாதக பாதகம் அத்தனையும், மத்திய சர்க்கார் எப்படி நடக்கிறார்களோ அதைப் பொறுத்திருக்கிறது... இந்த மாநிலத்துக்குத் தேவையானது அத்தனையும் நிறைவேற்றுவதற்கான அதிகாரங்களை நீங்கள் மத்திய சர்க்காரிடம் கேட்டுப் பெறவேண்டுமென்று நான் கூறுகிறேன்.

ஆகையால் தான் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றி நான் சொல்லுகிற முதல் கருத்து, அதை நிறைவேற்றுவதற்கு ஏற்ற ஆற்றல், அதிகார பலத்தை நம்மிடத்திலே ஒப்படைக்காமல் வேறு இடத்தில் குவிக்கப்பட்டிருக்கின்றது.

முதலிலே, குவிக்கப்பட்டிருக்கும் அதிகாரம் பரவலாக்கப் பட்டாலொழிய, அப்படிப்பட்ட திட்டங்களை நிறைவேற்றுவதற் கில்லை என்பதை நான் எடுத்துச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

-மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் மீது பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற பேச்சு... 9/60, திராவிட நாடு ஏட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

பொன் விலங்கு:
யார் ஆட்சி பீடத்தில் அமர்ந்தால் என்ன? காங்கிரசைத் தவிர, ஆட்சி பீடத்தில் அமர்த்தப்படுகின்ற எந்தக் கட்சியும் தனது கொள்கை கோட்பாட்டின் வழி ஆட்சி மாற்றி அமைத்திடவும் ஊழல்களைப் போக்கிடவும் நல்லாட்சியை ஏற்படுத்தவும் இயலாது என்ற ஓர் பரிதாபகரமான பயங்கரமான நிலை மாநிலங்களுக்கு இருக்கும்போது, காங்கிரசை ஆட்சி பீடத்திலிருந்து இறக்கிவிட்டு, அந்த இடத்தில் வேறோர் கட்சி அமர்வதிலே என்ன பயன் விளைந்துவிடப் போகிறது? அதிகாரமில்லாத ஆட்சியின் பொறுப்பினை அடைந்தென்ன! அடையாமல் இருந்தென்ன!

தேர்தல் களத்திலே கிடைக்கக்கூடிய வெற்றி ஆட்சி பீடத்திலே அவர்களை அமர்த்திட அங்ஙனம் அமர்த்தப்பட்டவர்கள் ஏதும் செய்ய இயலாத நிலையில் தமது கரங்கள் கட்டப்பட்டிருக்கின்றன என“பதை உணரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். கேலிக்குரியவர்களாவார்கள்! “வென்றவர் தோற்றார்” என்று வரலாற்றிலே பொறிக்கப்படும் அவர்களைப்பற்றி.

ஆட்சி பீடத்திலே அமர்த்தப்பட்டாலும், அவர்களாலும், அவர்களைப் போன்ற மற்ற ஆட்சியினராலும், அவர்கட்கு ஆதரவு தந்த மக்களுக்கு எந்தவித உருப்படியான நன்மையையும் செய்து தர முடியாத நிலை இருக்கின்றதென்று நாம் கூறுவதற்குக் காரணம் இந்த துணைக்கண்டத்து அரசியலமைப்பில் மாநிலங்களுக்கு இருக்கின்ற அதிகார வரம்புகள் மிகக்குறைவு என்பதாலேதான்.

இந்திய அரசியலமைப்பு என்ற ஒரு பொன்விலங்கு பூட்டப்பட்டிருக்கின்றது மாநிலங்களின் கரங்களில்.

அதனாலே மாநிலங்களிலே ஆட்சி பீடத்திலே அமர்த்தப் படுகிற எவரும், டில்லி மூலவரின் ஆணைக்குக் கட்டுப்பட்டு அவர்கள் கிழிக்கின்ற கோட்டைத் தாண்ட முடியாத வகையில் நடந்தாக வேண்டும்.

எஜமானனாக இருந்து டில்லி அவர்களை ஆட்டிப் படைக்கும். எடுபிடிகளாக இருந்து குற்றேவல் புரிந்தாகவேண்டும் இவர்கள்! அடிக்கொரு முறை காவடி எடுத்து ஐயனே! மெய்யனே! என்று அகவல் பாடி, தேவைகளை நேரம் பார்த்து பக்குவமாக எடுத்துக்கூறி கிடைத்ததைப் பெற்று, இயன்றால் மகிழ்ந்து, இல்லையானால் மனக்குமுறலை மிக ஜாக்கிரதையாக மூடி மறைத்து, போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற ‘திருப்தி’யை வரவழைத்துக் கொள்ளவேண்டும்.
-18.3.1959 திராவிட நாடு ஏட்டில் அண்ணனின் கட்டுரை

என் லட்சிய பூமி:
என் நெஞ்சத்தில் நிரம்ப இடம் இருக்கின்றது. அது திருட்டுப் போய்விடுமோ என்று அஞ்சவேண்டியதில்லை! என் இதயக் கதவுகள் என“றும் திறந்தே இருக்கின்றன. எவருக்கும் அதில் இடமுண்டு.
என் இதயத்தில் ஒருமுறை இடம் பெற்றவர்களை வெளியே போகவிட மாட்டேன். என்னை விட்டுப்போன ஒரு சிலரும் என் இதயத்தில் ஓட்டை போட்டுக்கொண்டு போனார்களே தவிர வாசல் வழியாக வெளியே போகவில்லை.
எல்லோரும் இன்புற்று வாழும் இடம்தான் என் லட்சியபூமி. ஒருவரை ஒருவர் அழுத்தாமல், ஒருவரை ஒருவர் சுரண்டாமல், “எல்லோருக்காகவும் நான்; எனக்காக எல்லோரும்” என்ற முறையில் சமூகம் அமையுமானால் அது தான் என் இலட்சிய பூமி.

அரசியல் முறையில் அதை, “திமீபீமீக்ஷீணீறீவீˆனீ” “கூட்டாட்சி” என்று சொல்லலாம். பொருளாதாரத் துறையில் “ஷிஷீநீவீணீறீவீˆனீ” சமதர்மம் என்று சொல்லலாம். அரசியல் அமைப்பு முறைப்படி அதை, “ஞிமீனீஷீநீக்ஷீணீநீஹ்” சனநாயகம் என்று சொல்லலாம். இலக்கியத் துறையில் அதை “மிபீமீணீறீவீˆனீ” என்று கூறலாம். எல்லோரும் இன்புற்றிருக்கும் அந்தப் பூமிதான் என் லட்சிய பூமி!

...எனக்குக் கிடைத்திருக்கிற படைக்கருவிகள் தூய்மையாக இருக்கின்றன. கூர்மையாக இருக்கின்றன. தோழமை கட்சிகள் துணை நிற்க, வெற்றிப் பாதையில் நடைபோட்டு, உறுதியாகச் செயல்பட்டு, இறுதியாக இலட்சிய பூமியை அடைவோம்!
-1.1.67 விருகம்பாக்கம் மாநாட்டில் முடிவுரை

அண்ணா அழைக்கின்றார்!

... ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும்; அமைச்சரவை ஏற்க வேண்டும் என்பதுதான் கழகத்தின் இறுதி முடிவு என்று யாரும் கருதிவிடக் கூடாது. அதுதான் இலட்சியம் என்றால், பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து; கொடுக்கவேண்டியவைகளைக் கொடுத்து, அழைக்க வேண்டியவர்களை அழைத்து பதவியைப் பெற முடியாது என்பது முடியாத காரியமல்ல.

தமிழ் மொழியைக் காத்தாகவேண்டும்; தமிழ் இனத்தை, தமிழ்ப் பண்பாட்டைக் காத்திடவேண்டும். இதற்கு இன“னும் ஐம்பது ஆண்டுகளாவது தொடர்ந்து உத்வேகத்துடன் பாடுபட்டால்தான் உலக வரலாற்றில் நாங்கள் தமிழர்கள் என்று தலை நிமிர்ந்து கூறக்கூடிய நிலை ஏற்படும்! எனவே புதிய வரலாற்றில் சிறப்பான அத்தியாயத்தைத் தோற்றுவிக்க வேண்டும். அந்த இலட்சியத்தை அடைய நான் மேற்கொள்ளும் பணியில் நீங்கள் பங்கு கொள்ள அழைக்கின்றேன். அண்ணனின் இந்த அழைப்பை அலட்சியப் படுத்தமாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும்; நம்முன் இருப்பது மகத்தான பணி.

-30.12.66 விருகம்பாக்கம் மாநாட்டில் அண்ணாவின் தலைமையுரை.
வெளியீடு: நண்பர்கள் கழகம், சென்னை, பதிப்பு: 1974