அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


அறப்போருக்கு ஆயத்தமாவீர்!

அரியலூர் பொதுக்கூட்டத்தில் அண்ணா

“டெல்லி அரசு ஏராளமான வரிகளைப் போட்டுள்ளது அவைகளிலே கொடுமையான வரியையும் போட்டுள்ளனர். ‘புதிய வரியிலே கொடுமையான வரி என்ன? என்று கேட்கலாம், கைத்தறி நெசவாளரைப் பாதிக்கக்கூடிய நூல் எதிர் வரியையே குறிப்பிடுகிறேன்.

“கைத்தறி நூல்கள் மீது ஏற்கனவே இருந்த எதிர் வரிகள் நீக்கப்படவேண்டுமென்ற கோரிக்கை இருந்தது – கோரப்பட்டது, ஆனால் தற்போது, முன்பு வரி இல்லாத சில வகை நூல்களுக்கும் புதிதாக வரி போட்டிருக்கிறார்கள்.

“நூல் விலை ஏற ஏற, கைத்தறித் துணியின் விலை ஏறும், அதனால் துணி வாங்கும் ஏழைகளுக்கும் கஷ்டம் – கைத்தறித் துணி போதுமான அளவு விற்காவிட்டால் நெசவாளிக்கும் கஷ்டம்! உற்பத்தி குறைந்தால் வருமானம் குறையும், அதனால் பத்தாண்டுகளுக்கு முன்பு ஊர் ஊராகத் தொழிலின்றி அலைந்த நிலை ஏற்படலாம்.

கிளர்ச்சியை வெற்றிகரமாக நடத்துங்கள்!

“கைத்தறி நெசவாளர் வாழ்வைப் பாதிக்கக் கூடிய புதிய வரிகளை நீக்க சூன் திங்கள் 10ஆம் நாள் கண்டன ஊர்வலமும், பொதுக் கூட்டமும் நடத்துவதெனத் தி.மு.கழகம் தீர்மானித்துள்ளது. இவைகளுக்குப் பொதுமக்கள் நல்லாதரவு காட்ட வேண்டும். பொதுவாக உடையார்பாளையம் தாலுக்காவிலே சுமார் 400 கிளைக் கழகங்கள் இருப்பதைக் குறிப்பிட்டார்கள். மகிழ்கிறேன், இங்குள்ளவர்கள் இந்தக் கிளர்ச்சியைச் சிறப்புடன் நடத்த வேண்டும். என்னை இடையிலே திடீரென்று சிறைப்பிடித்தாலும் பிடிக்கலாம், அதனால்தான் மீண்டும் கூறுகிறேன் – ‘கிளர்ச்சியை வெற்றிகரமாக சிறப்புடன் நடத்துங்கள்‘ என்று!

“ஆர்வத்துடன், வீரத்துடன் கஷ்ட நஷ்டங்களை ஏற்கச் சித்தமாக ஏராளமான தோழர்கள் முன் வருவார்கள் என்பதை உணருவேன். உங்கள் வீட்டுத் தாய்மார்களையும் இல்லக் கிழத்தியர்களையும் இப்பணியில் ஈடுபடுத்த வேண்டும். அப்பொழுதுதான் ஆட்சியாளர்கள் நிலைமையை உணருவார்கள். “வேதனைப்படும் தோழர்கள் தங்களுடைய மனக் கொதிப்பை அமைதியான முறையில் – தெளிவான முறையில் அச்சப்படாமல் காட்ட வேண்டும்.

அரசுக்கு வழியுமில்லை – இடமுமில்லை!

இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் சிறைப்பிடிப்பார்களே?‘ என்று நினைக்காமல் கட்டுப்பாட்டுடன் கலந்து கொள்ள வேண்டும். ஆயிரமாயிரவர்களாக் கலந்து கொண்டால் இந்த அரசு நம்மைப் பிடிக்கக் கூட முயலாது, அந்த அளவுக்க இந்த அரசுக்கு வழியுமில்லை, இடமுமில்லை.

‘மறியலில் ஒரு ஐயாயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று அரசினர் நினைக்கக்கூடும், ஆனால் பத்தாயிரம் பேர் திரண்டு வந்தால் சிறைப்பிடிக்க நினைக்கவும் மாட்டார்கள். காலையிலேயிருந்து போலீசாரும் பாதுகாப்பிற்கு இருந்து மாலையிலே நம்மை வீட்டிலே கொண்டு போய் விட்டுவிட்டுப் போவார்கள்.

“போலீசாரிடம் நாம் எந்தவித விரோதமும் பாராட்டக்கூடாது. போலீசாருக்கம் விலைவாசிக் கொடுமை தெரியாமலா இருக்கிறது? எனவே, நமக்கும் – போலீசாருக்குமிடையே போட்டியில்லாதவாறு மறியலில் நடந்து கொள்ள வேண்டும்.

வட்டச் செயலாளர்கள் இப்பொழுதே பட்டியல்கள் தயாரிக்க வேண்டும். கிளர்ச்சியில் ஈடுபடக்கூடியவர்களின் பெயர்களைப் பதிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

“கட்டுப்பாட்டுடனும் கண்ணியத்துடனும் அமைதியான முறையில் கிளர்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றிபெறப் பாடுபட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.“

இந்த வட்டாரத்திலே கழகத் தோழர்களும், பொதுமக்களும், தி.மு.கழகம் மகத்தான வெற்றி பெறக் காரணமாக இருந்து பாடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

விழிப்புடன் பாடுபடுவீர்

பொதுவாக இந்த – வட்டாரத்திலே, அரியலூர், செயங்கொண்டம், த.பழுர் போன்ற பகுதிகளில் தி.மு.கழகம் கட்டுப்பாடான முறையில், வேகமாக வளர்கிறது. கழக வளர்ச்சிக்குக் காரணமாக வட்டச் செயலாளர் சேப்பெருமாளும், கழகத் தோழர்களும் ஆர்வ உணர்ச்சியுடன் பாடுபடுகிறார்கள் என்பதை அறிய தி.மு.கழகம் உண்மையான விடுதலை இயக்கம் என்பதை நாடறிய மேலும் மேலும் எழுச்சியுடன் விழிப்புணர்ச்சி கொண்டு பாடுபட வேண்டும்.

தேர்தலிலே வெற்றி பெற்ற சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவரும் இப்பகுதி வளர்ச்சிக்கும், நாடு நல்வாழ்வடையவும் தொகுதி மக்கள் அனைவருக்கும் கட்சி பேதமற்ற முறையிலும் பாடுபடவேண்டும். அடுத்துத் தோழர்களாக இருந்தாலும், தேர்தலிலே நமது வெற்றிக்கு இடைஞ்சலாக இருந்தவர்களானாலும் அவர்க்ளுக்கும் சேர்த்துத்தான் உறுப்பினர் என்பதை நமது சட்டமன்ற உறுப்பினர்கள் அறிய வேண்டும்.

வளமிருந்தும் வறட்சி!

தமிழகத்திலே வறண்ட பகுதி இந்த உடையார்பாளையம வட்டம் – பிற்போக்கான பூமியாக இருக்கிறது. ஆனாலும் காட்டு வளமும், மண்வளமும் சிறந்த முறையில் அமைந்துள்ளன, பாசன வசதி இல்லாத காரணத்தால் வறண்டு இருக்கிறது. அதனால் வாழ்க்கை வசதிபெற முடியாமல் – விவசாயம் செழிக்க முடியாமல் குறைந்த வருவாயுடன் மக்கள் வாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பகுதி செழிக்க இங்கு ‘ஜிப்சம்‘ தொழிலும், முந்திரித் தொழிலும் கவனிக்கப்பட வேண்டும்.

முந்திரித் தொழில் இங்கு வளர்ந்தால், பிற பல வசதிகளைப் பெற முடியும். முந்திரி காட்டுப் பயிர் மட்டுமல்ல – அந்நிய் செலவாணியையும் தேடித் தருகிறது.

முந்திரி எண்ணெய் பயன்படுகிறது! முந்திரித் தொழில் வளர்ச்சியை நாங்கள் பெரிதும் விரும்புகிறோம்.

1957இல் நடந்த பொதுத் தேர்தல் சமயத்தில் கூட, முந்திரித் தொழில் சிறக்கிறது வடக்கே! முந்திரித் தொழில்தேய்கிறது தெற்கே‘ – என்றோம். முந்திரியின் வளர்ச்சியின் அவசியம் பற்றிச் சட்டமன்றத்திலும எடுத்துக் கூறினோம். அப்பொழுது ஆளுங்கட்சியினிர், ‘சிந்திரி – முந்திரி‘ என்று அண்ணாதுரைக்கு அடுக்குமொழி பேசத்தான் தெரியும், காரியத்திற்குப் பயன்படாது என்றார்கள்.

இன்று அரசாங்கமும் பல இலட்சக்கணக்கான ஏக்கர்களில் முந்திரி வளர்க்க முன் வருகிறது. முந்திரி இன்று அமெரிக்கா நாட்டு டாலரைச் சம்பாதித்துத்தரப் பயன்படுகிறது. தி.மு.கழகம் சொல்வதை வேடிக்கையாக – ஏளனமாகப் பேசினாலும இன்று பயன்படுகிறது.

தொழிலை ஏற்படுத்தினாலும் இலாபம் யாருக்கு?

ஜிப்சம் சுண்ணாம்புப் படிவத்தால் பல்லாயிரம்மக்களுக்கு இப்பகுதியிலே வேலை தேடித்தரலாம். ஜிப்சம் தொழில் சிறக்க அனைவரும் இங்குப் பாடுபட வேண்டும்.

இது குறித்துப் பாராளுமன்றத்திலும் பேசப்படும் என்பதை அறிந்து அவசரமாக – இரகசியமாக இங்கு ஒரு ஏற்பாடு நடக்கிறது. ஜப்பான் நாட்டின் தொடர்புடன் ரூ.1 கோடி மூலதனத்தில் இந்தப் பகுதியிலே ஜிப்சம் தொழிற்சாலை ஏற்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

நாங்கள் சொல்வதெதல்லாம் – தொழிற்சாலைகளை அரசாங்கமே ஏற்று நடத்த வேண்டும், அதனால் உண்டாகும் இலாபம் மக்களுக்கு கிடைக்கும், என்பதுதான்.

நாங்கள், ஜிப்சம் தொழில் வளர வேண்டும் என்கிறோம் – ஆனால் தனியார் உயர அரசாங்கம் வழி காட்டுகிறது.

டால்மியா நடத்தம் சிமெண்டுத் தொழிற்சாலையின் இலாபம் டால்மியாவைச் சேருகிறது! டாட்டா இரும்புத் தொழிற்சாலையின் இலாபம் டாட்டாவுக்குக் கிடைக்கிறது! பிர்லா பருத்தி ஆலையின் இலாபம் பிர்லாவுக்குத்தான் கிடைக்கிறது! ஜிப்சம் தொழிலை அரசாங்கம் ஏற்று நடத்தினால் இலாபம் மக்களுக்குக் கிடைக்கும்.

தரத்தில் உயர்ந்தது இங்கே – தரக்குறைவானது அங்கே!

ஜிப்சம் பெரிய காரியங்களுக்கெல்லாம் கூடப் பயன்படுகிறது. வடக்கே சிந்திரியிலே எரு தயாரிக்கிறார்கள், நாடெங்கும் அதை அனுப்பி விற்கிறார்கள், அந்த எருவுக்கு ஜிப்சம் தேவை. ‘அங்கு உபயோகிக்கப்படும் ஜிப்சம் மட்டமானதாக – தரக்குறைவாக இருப்பதால் உற்பத்தி குறைவு‘ என்று ஆராய்ச்சிக் குழுவினர் கணக்கிட்டுள்ளார்கள். சிந்திரிக்குப் பாகிஸ்தானிலிருந்து ஜிப்சம் வர வழைக்கிறார்கள். அதுவும் மட்டமானது –தரக்குறைவானது.

நமது ஜிப்சம் தரத்தில் சிறந்தது. நமது நாட்டில் ஜிப்சம் தொழிற்சாலை திறந்தால் வேலை வாய்ப்புக் கிட்டும்.

உடையார்பாளையம் தாலுகாவிலே தி.மு.கழகத்தினர் வெற்றி பெற்று விட்டார்களே என்று கருதிப் பயனில்லை. வயிற்றெரிச்சல் பட்டால் சல்லிக் காசுக்குப் பயனில்லை. தொழில் வளம் பெருக கழக எம்.எல்.ஏக்களுடன் கட்சி வேற்றுமை கருதாமல் எல்லாக் கட்சித் தோழர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும். வீண் பேச்சால் – வெற்றுவாதத்தால் – சிறுபிள்ளைத்தனத்தால் – நாட்டுக்கு இலாபமில்லை.

நாற்காலியை விட்டு இறங்குங்கள்!

‘அண்ணாதுரை வருகிறார், 3 படி அரிசி போடுவார், என்று துண்டு அறிக்கைகள் வெளியிட்டுள்ளார்களாம், காங்கிரசுத் தோழர்கள்! அந்த அளவுக்கு அவர்கள் செய்தது கண்டு மகிழ்கிறேன். நாடாளும் முதலமைச்சர் காமராசர் ‘கையாலாகாதவர்‘ என்று கருதித்தான் என்னை அவர்கள் இப்படிக் கேட்கிறார்கள். ‘ஐயா 3 படி அரிசி போடுங்கள் என்று ஆளுங்கட்சி – காங்கிரசுக் கட்சி – ஆள்பவர் காமரசார்!‘ காமராசரால் சோறுபோட முடியாது, நீங்கள்தான் சோற்றுக்கு வழி காட்ட வேண்டும்‘ என்று அவர்கள் போர்டு தொங்கப் போட்டு இருக்கலாம்! பாவம்! 50 இடங்களைப் பிடித்து ஆட்சி அமைத்திருந்தால் நிச்சயம் போட்டிருப்போம் – முடியும். அவர்களும் !காங்கிரசார்) அள்ளிக் கொண்டு போயிருக்கலாம்.

ரூபாய்க்கு 3 படி அரிசி முதலில் வேண்டுமா? – சிந்தியுங்கள்! முடியுமா? முடியாதா? – கேட்டுப் பயனில்லை. வேண்டுமா வேண்டாமா? – வேண்டுமானாால், காமராசரிடம் கேளுங்கள்! காமராசரால் போட முடியாது என்றால் முடியாத காமராசரைச் சிறிது காலம் நாற்காலியைவிட்டு இறங்கச் சொல்லி அந்த நாற்காலியில் எங்களை கழகத்தவரை அமர வைத்துப் போடச் சொல்லுங்கள், போடுகிறோம். எங்களால் போட முடியாவிட்டால் நாற்காலியை விட்டு இறங்குகிறோம்.

குழந்தைப் பிள்ளை விளையாட்டு!

ஆளுங்கட்சி செய்ய வேண்டியதைச் செய்யச் சொல்லும் அளவுக்குத்தான் தி.மு.கழகம் பாடுபட முடியும், ஆனால், எதிர்க்கட்சியான எங்களை, 3 படி அரிசி போடுங்கள்‘ என்று கேட்பது வேடிக்கையாக அல்லவா இருக்கிறது? ஒன்றே கால் ரூபாய் செலவில் துண்டு அறிக்கைகள் அச்சிட்டுக் காமராசர் வெற்றி பெற்ற சாத்தூர் தொகுதியிலே கொடுக்க எங்களுக்குத் தெரியாதா? இந்தக் ‘குழந்தைப் பிள்ளை விளையாட்டை‘ அரசியலிலே நாங்கள் காண விரும்பவில்லை.

என் பையனுக்குத் திருமணம் செய்ய ஒரு பெண்ணைப் பார்ப்பதற்குப் போவதாக வைத்துக் கொள்வோம். பெண்ணின் பெற்றோர்கள் – பெண்ணுக்கு என்ன போடுவீர்கள்? என்ன வசதி செய்வீர்கள்? என்று கேட்க, நான் கூறுகிறேன் – ‘பெண்ணுக்கு கழுத்துக்குக் காசுமாலை, இடுப்புக்கு ஒட்டியாணம், கட்டிக் கொள்ள கண்டாங்கி சேலை வாங்கித் தருகிறோம், நிம்மதியாக வாழ இரண்டு காணி நிலம் தருகிறோம், குடியிருக்க வீடு அளிக்கிறேன்“ என்று கூற, என்ன காரணத்தாலோ அந்தப் பெண்ணை என் பையனுக்குத் தராமல், வேறு மாப்பிள்ளையைப் பார்த்து மணமாக்கிவிட்டு என்னைப் பார்த்து, ‘என் பெண்ணுக்குப்போடுவதாகச் சொன்ன காசுமாலை எங்கே? ஒட்டியாணம் எங்கே? 2 கண்டாங்கி சேலை எங்கே? நிலமும் வீடும் ஏன் எழுதி தரவில்லை? சீக்கிரம் செய்யுங்கள் என்றால்‘ என்ன நீதி?

ஆட்சி அமைத்திருப்பது காங்கிரசு! ஆட்சிப் பீடத்தில் முதலமைச்சராக இருப்பவர் காமராசர்! நிர்வாகக் காரியங்களைப் பார்ப்பவர் அவர், வரிவசூலிக்கும், உரிமை அவருக்கு! ஆனால் நாங்கள் அரிசி போடுவதாம்! வேண்டாம் அரசியலிலே ‘குழந்தைப் பிள்ளை விளையாட்டு!‘

காட்டத் தயாரா அவர்கள்?

தி.மு.கழகத் தேர்தல் அறிக்கை இதோ என் கையில் இருக்கிறது, இதன் விலை 25 காசு, காங்கிரசுக்காரர்களுக்கு 5 காசுக்குத் தருகிறேன். ரூபாய்க்கு 3 படி அரிசி தருகிறேன்‘ என்று எங்காவது இருக்கிறதா? வாங்கித் தேடிப் பாருங்கள். அப்படி இருந்தால், என் பெயரை மாற்றிக் கொள்கிறேன். கட்சியைக் கலைக்கவும் தயார்!

நாங்கள் சில இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறோம், மற்றும் பல இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருந்தால் தேர்தல் அறிக்கையிலே சொல்லி இருக்கிறோமோ,இல்லையோ அரிசி அப்படிப் போடுவோம்.

‘தேர்தல் அறிக்கையிலே எட்டாம் பக்கத்தி்லே நாலாம் பத்தியிலேகூறி இருக்கிறீர்கள் ‘ரூபாய்க்கு 3 படி போடுவதாக‘ என்று கூறி, காட்டத் தயாரா அவர்கள்?

இந்த 15 ஆண்டு காலத்தில் ஆண்டு தோறும் மாதந்தோறும், நாள் தோறும் பண்டங்களின் விலை ஏறிய வண்ணமிருக்கிறது. வாழ்க்கையை நிம்மதியாக நடத்த முடியாமல் பரிதவிக்க வேண்டியிருக்கிறது. எப்படியும் விலைவாசிகள் குறைந்தால்தான் நாட்டு மக்கள் நல்வாழ்வு காண முடியும். விலைவாசிகள் குறைய வேண்டுமென்பதால் உற்பத்தியாளர்களைப் பாதிக்கச் செய்ய வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. ஏற்றவகையில் பணியாற்ற வேண்டும் – உற்பத்திச் செலவைக் குறைக்க முயல வேண்டும்.

அரிசி நெல் விலைகள் மட்டும் குறைய வேண்டுமென்று நாங்கள் கூறவில்லை, அத்துடன் புளி மிளகாய் பருப்பு பயிறு வகைகள் அனைத்தும் குறைய வேண்டுமென்கிறோம். அதனால் விவசாயி பாதிக்கப்படமாட்டான்.

அரிசி நெல்விலை அதிகமாக விற்கிறது – காரணம்? உற்பத்தி செலவு அதிகமாகிறது. கொழு அதிக விலை! ஏர் கலப்பை செலவு, கூலி உயர், 35 ரூபாய், 40 ரூபாய்க்கு விற்ற மாடுகள் இப்போது ரூ.200 ரூ.300 ஆகின்றன. போதுமான எரு – நியாயமான விலைக்கு கிடைக்கவில்லை! உற்பத்தி செலவு அதிகமாகிறது! அதனால் தானிய விலை உயருகிறது. உற்பத்திச் செலவைக் குறைக்க ஆக்கரீதியாகப் பாடுபட வேண்டும்.

சிந்திக்காமல் ‘சீறுவதா‘?

‘நெல் கொள்முதல் செய்வதால் உண்டாகும் நட்டத்தை எப்படி அரசாங்கள் ஏற்க முடியும்? என்று கேட்கலாம்!

நம்முடைய நாட்டில் இன்று உற்பத்தியாகும் சர்க்கரையை டன் ஒன்றுக்கு சுமார் 880 ரூபாய்க்கு வாங்கி, அதை அமெரிக்க நாட்டினருக்கு இந்த ஆட்சயாளர் டன் ஒன்றுக்கு ரூ.400க்கு விற்கிறார்கள். அதனால் உண்டாகும் நட்டத்தை அரசாங்கம் ஏற்கிறது! அந்த நஷ்டத்தை, நமது வரிப் பணத்தை வைத்து ஈடுகட்டுகிறது அரசு. அதே போன்று பாடுபட்டதை ஏற்று – பொது மக்களின் நன்மையை முன்னிட்டு – விவசாயிகளை பாதிக்காமல் கேடு இல்லாமல் செய்யக் கூடாதா?

இவைகளையெல்லாம் அமைச்சர்கள் சிந்திப்பதில்லை, ‘விலைவாசிகள் குறைய வழி என்ன? – என்கிறார்கள். அரசாங்க ஒற்றர்கள் அனுப்பும் செய்திகளையாவது அவர்கள் படித்துப் பார்க்க வேண்டும். இதைச் செய்யாமல் ‘தி.மு.கழகத்தவர் திட்டி இருக்கிறார்களா? யார்மீது வழக்குப் போடலாம்? எந்த மாதிரி பேசினான்?‘ என்பதைத்தான் கவனிக்கிறார்கள்! விலைவாசிகள் குறைத் திட்டம் தந்தாலும் கவனிப்பதில்லை! உணவுப் பண்டங்களின் விலைவாசி குறைந்தால்தான் ஓரளவாவது மன நிம்மதியுடன் வாழ முடியும்.

எண்ணம் உருவாகாதா?

விலைவாசிகள் குறைய – வாடிய மக்கள் துயர் நீங்க அரசியலார் பாடுபட முன்வர வேண்டும். அவைகளைச் சுட்டிக் காட்ட சூலைத் திங்களில் தமிழகமெங்கும் கண்டன ஊர்வலமும், பொதுக்கூட்டங் களும் நடத்துவதென்று, திருச்சி பேட்டைவாய்த் தலையிலே கூடிய தி.மு.க. பொதுக் குழு, தீர்மானித்துள்ளது.

தக்க சமாதானம் ஆட்சியாளர் கூறாமலிருந்தால், சூலைத் திங்கள் 9ஆம் நாள் கலெக்டர், சப்கலெக்டர், தாசில்தார், துணைத்தாசில்தார் அலுவலகங்களில் கண்டன அடையாள மறியல் நடத்துவோம்.

“கண்டன மறியல் செய்தால் விலை குறைந்துவிடுமா? எனக் கேட்களலாம், குறையாவிட்டாலும் குறைக்க வேண்டுமென்ற எண்ணம் ஆட்சியாளருக்கு ஏற்படும்.

கசப்புணர்ச்சி கூடாது!

காங்கிரசார் அன்று !வெள்ளையன் காலத்தில்) உப்புச் சத்தியாக்கிரகம் செய்தார்கள், ஒரு நாள் மறியலும் நடத்தினார்கள், உப்பு வரியின் தீங்கை நாடு உணர்ந்தது. காங்கிரசு ஆட்சி அமைத்தது – உப்பு வரி ரத்து செய்யப்பட்டது.

அதைப்போன்ற விலைவாசிகள் குறைய வேண்டும் – அல்லல்படும் மக்கள் அவதி நீங்க வேண்டாம்‘ என்பததை ஆட்சிப் பீடத்தார் அறிய வேண்டும் என்பதற்காகவே அடையாள மறியல் செய்யப் போகிறோம். கசப்புணர்ச்சி ஏற்படாமல் கண்ணியத்துடன் – அமைதியான முறையில் மறியல் நடத்தப்பட வேண்டும். ஆடவர்களும், பெண்டிரும் இந்த அடையாள மறியலில் கலந்து கொள்ள வேண்டும்.

நிலை என்ன நாட்டில்?

இன்று நூற்றுக்கு எழுபது வீடுகளில் விலைவாசி ஏற்றத்தால் – பற்றாக் குறையால்தான் சண்டைகள் நடக்கின்றன. வீட்டிற்கு வருகிறான் கணவன், சாப்பி அமர்கிறான், மனைவி இருப்பதைக் கொண்டு சமைத்ததைப் பரிமாறுகிறாள், பிசைந்த சோற கையிலே ஒட்டிய வண்ணமிருக்கிறது, கொஞ்சம் சாப்பிட்டு ருசி பார்த்துக் கணவன் கேட்கிறான் – ‘இது என்ன இந்தக் குழம்பை மனிதன் சாப்பிட முடியுமா?‘ என்று! பேச்சு வளருகிறது – ஆத்திரம் கிளம்புகிறது, சண்டை விபரம் அறிகிறார்கள், இந்த குழம்பை பாருங்கள், இது குழம்பா?‘ என்கிறான் கணவன். எதிர் வீட்டுக்காரன் நாக்கில் குழம்பை ஊற்றிப் பார்த்துவிட்டு ‘எங்கள் வீட்டுக் குழம்புக்கு இது பாதகமில்லையே‘ என்கிறான். இந்த நிலைதான் நாடெங்கும்.

பெற்றெடுத்த குழந்தைக்குப் பட்டுச் சட்டை வாங்கிப் போட்டு மகிழ வேண்டுமென்றுதான் பெற்றோர்கள் நினைப்பார்கள், ஆனாலும், சொந்தக் குழந்தை சட்டை தைக்கச் சொல்லி அழுதால், அடிக்கத்தான் செய்கிறான் தந்தை, ‘உங்க அப்பன் என்ன தாசில்தாரா? – நினைத்ததும் சட்டை தைத்துத் தர‘ என்று அடிக்க முனைகிறான். இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டாமா?

விலைவாசி ஏற்றத்தால் நாட்டிலே ஏற்பட்டிருக்கும் நிலை குறித்து பேசவேண்டிய அளவு பேசிவிட்டோம், எழுத வேண்டிய அளவு எழுதிப் பார்த்துவிட்டோம், மாநாடுகளிலே தீர்மானங்கள் போட்டுப் பார்த்துவிட்டோம்.

இனிப் பொதுமக்களும் திரண்டு வந்து கண்டனம் செய்ய முனவ்ர வேண்டும்.

வீணாகப் பேசிப் பயனென்ன?

தி.மு.கழகம் வெற்றிபெற்ற இடங்களிலே ரூபாய்க்கு 3 படி அரிசி போடுவதுதானே? என்கிறார்கள். பெரிய காங்கிரசுத் தலைவர்களுக்கும் புதிய காங்கிரசுத் தலைவர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

“தி.மு.கழகம் வெற்றி பெற்ற 50 இடங்களிலும் வரிப்பணத்தை நாங்களே பெறச் சந்தர்ப்பம் அளியுங்கள் – அதிகாரம் கொடுங்கள். பதுக்கி வைத்துக் கொள்ளை இலாபமடித்துக் கொழுப்பவர்களிடம் இருக்கும் தானியங்களைக்கண்டு பிடிக்கப் போலீசு உதவி தாருங்கள்! ரூபாய்க்கு 3 படி என்ன – 6 படி தரவும் முயற்சி செய்கிறோம். அப்படிஇல்லாமல் வார்த்தை பேசிப் பயனில்லை.

வரி வாங்குவது அவர்கள்! கள்ள மார்க்கெட்காரர்களைக் கதர் சட்டைப் போடவைப்பது அவர்கள். நாங்கள் எப்படி விலை குறைத்து அரிசி போட முடியும். எரிகறி அடுப்பில்தானே கொதிக்க வைக்க முடியும்.

இதுதானே இலட்சணம்!

வெள்ளையன் காலத்தில் ரூபாய்க்கு 8 படி அரிசி விற்ற பொழுது விவசாயிகள் நல்வாழ்வு வாழவில்லையா, மூன்று நாள் திருமணம் செய்யவில்லையா? இன்று ஒரே நாளில் மூன்று பிள்ளைகளுக்கு அல்லவா திருமணம் நடத்துகிறார்கள்.

மாடு விலையும், சாமான்கள் விலையும், பண்டங்களின் விலையும் உயர உயர அதிக இலாபமடைபவர்கள் பெரும் வியாபாரிகளே.

இன்று பத்தாயிரம் ரூபாய் இருந்தால் அந்த முதலைக் கொண்டே ஐம்பதாயிரத்துக்கு நெல் வாங்க முடிகிறது! பாங்கிகள் நெல் அடமானத்தின் பேரில் பெரும் கடன் கொடுத்தப் பதுக்கி வைக்க உதவுகின்றன.

அருகிலிருக்கும்லால்குடிப் பகுதியிலே, தஞ்சைப் பகுதியிலே நெல் விளையாமலா இருக்கிறது, வியாபாரி ‘லால்குடிக்குப் போகிறேன்‘ என்கிறான், ஏன்?‘ என்றால் – ‘நெல்பிடிக்கப் போகிறேன்‘ என்கிறான் – காட்டுக்குப் போய் மிருகங்களைப் பிடிப்பது போல! நெல் வாங்க என்று கூடச் சொல்வது இல்லை.

விலையேறிய பிறகு விற்பனைக்கு வருகிறது

கண்ணுக்குக் கவர்ச்சிதரும் நிலையில் பச்சை பசுமையான நெய்பயிர்கள் தஞ்சை நிலங்களிலே செழித்து வளர்ந்திருக்கும் காட்சியை நாட்டிலே பார்க்கிறோம். பஞ்சம் நீங்கவில்லை, விலைவாசிகள் குறையவில்லை, நிலச்சுவான்தார்களிடமும் பெரும் பணக்காரர்களிடமும், நெல் தேங்குகிறது! விலை ஏறிய பிறகு விற்பனைக்கு வருகிறது.

சிதம்பரம் வட்டத்திலே, சீர்காழி வட்டத்திலே, தஞ்சைத் தரணியிலே நெல் மூட்டைகள், வசதி படைத்தோர்களிடம் தேங்கி இருக்கின்றன, விலை ஏற ஏறப் பணமாகிறது! ஆண்டுதோறும் அவர்கள் புது மாடல் மோட்டார் வாங்குகிறார்கள்! ஆண்டுக்கு நான்கு, ஐந்து தடவைகள் புத்தாடைகள் வாங்கி உடுத்துகிறார்கள் இருக்கும் வீடுகளை இடித்துப் புதிய புதிய விதமான வீடாகக் கட்டுகிறார்கள் – இரவும் பகலும் வேலை நடைபெறுகிறது!

உழைப்புக்குப் பலன் எங்கே?

உழைப்புக்கேற்ற பலன் எங்கே?

உழைப்புக்கேற்ற கூலியும் தேவைக் கேற்ற வசதியும் இன்றும் நாட்டு மக்களுக்குக் கிடைக்கவில்லை. குடி இருக்க வீடில்லை. உழுது பயிரிட்டு வாழப் பாட்டாளிக்கு நிலமில்லை. போதுமான நிலையில் வேலையும் கிடைக்கவில்லை! மிட்டாதாரர்கள், செல்வச் சீமான்கள் கொழுக்கிறார்கள் – மேலும், மேலும்.

தி.மு.கழகம் வெற்றி பெற்ற 50 தொகுதிகளிலும் வேண்டுமானால் அதிகாரம் தரட்டும். எந்த நேரத்திலும் பதுக்கி இருக்கும் நெல்லை எடுக்கவும், கள்ளத் தோணி மூலம் இலங்கை செல்லும் நெல்லைப் பிடிக்கவும் செய்கிறோம். ஓட்டையை அடைத்தால் தானே பாத்திரத்தில் தண்ணீர் தங்கும்?

(நம்நாடு - 9, 11-6-62)