அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


‘அரசியல்வாதிக்கு இருக்கும் உரிமை தொழிலாளிக்கு இல்லையா?

தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் முன்னேற்றக் கழகப் பொது மாநாட்டில் அண்ணா

‘தொழிலாளர்களுக்கு அரசியல் கூடாது என்று பேசுவது தொழிலாளரை ஏமாற்றுவதற்காகப் பேசப்படுகின்ற பேச்சாகும். அரசியலை நீக்கிவிட்டு எந்தத் தொழிற் சங்கமும் வளர முடியாது. அரசியலை நாடாமல் எந்தத் தொழிற்சங்கத்தையும் இயக்க முடியாது.

“நான் இப்படி சொல்வது, தொழிற்சங்க இலக்கணத்துக்கே விரோதம் என்று சிலர் சொல்லக்கூடும். ஆனாலும், தொழிற்சங்கம், அரசியல் தொடர்பின்றி இயங்க முடியாது என்பதைக் திட்டவட்டமாகச் சொல்லிக் கொள்கிறேன்.

“அரசியல் என்பது என்ன பாவக்காரியமா? தொழிலாளர் அரசியல் பேசினால் என்ன குஷ்டமா வந்துவிடும்? தொழிலாளர் அரசியல் பேசக்கூடாது என்று சொல்வது தொழிலாளரை ஏமாற்றும் மொழியாகும்.

தொழிலாளருக்கு உரிமை இல்லையா?
“அரசியல்வாதிகள் தொழிலாளரைப் பற்றி ஏடுத்துச் சொல்லும்போது, தொழிலாளர்கள் அரசியல் இன்ன முறையில் இருக்க வேண்டும் என்று சொல்ல ஏன் உரிமை இல்லை?

“தொழிலாளருக்கும் அரசியலுக்கும் நல்ல தொடர்பு இருந்து வருகிறது. அரசியல் கூடாது என்று தொழிலாளரை மயக்குவதற்காக யாராவது சொல்லுவார்களானால், அதை அருள் கூர்ந்து நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்“ என்று அண்ணா அவர்கள், நேற்றுச் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு சலவையாளர் முன்னேற்றக் கழகப் பொது மாநாட்டில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்கள்.

“சலவைத் தொழிலில் ஈடபட்டுள்ள தொழிலாளத் தோழர்கள் தங்களுக்கென்று ஓர் தனி அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு மிகச் சிறப்பாக இந்த மாநாட்டை நடத்துவது கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.

ஊருக்கு ஒரு குடும்பம்

“சலவையாளர் குடும்பம் ஊருக்கு ஒன்று இருந்தாலும், அவர்களெல்லாம் ஒன்றுகூடி, தங்கள் தொழிலை முன்னேற்றவும், செம்மையுள்ளதாக்கவும், தங்கள் தொழிலை யாரும் மதிப்புக் குறைவாகக் கருத முடியாதபடி நல்ல வருமானம் தரத்தக்கதாகச் செய்ய வேண்டும் என்கின்ற தன்மையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணையினையும் பெற்று இந்த மாநாட்டை இங்கே நடத்துகிறார்கள்.

தி.மு.க. தொழிற் சங்கச் செயலாளரான தோழர் ஏ.கோவிந்தசாமி இந்த மாநாட்டைத் துவக்கி வைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

மாநாட்டுக்குத் தலைமை வகித்திருக்கின்ற நண்பரும், இந்த அமைப்பை உருவாக்க அரும்பணிகள் ஆற்றியிருப்பதுடன் சங்கத்தை நடத்திச் செல்லத்தக்க நல்ல ஆற்றலையும் பெற்றிருக்கிறார்.

எனவே, இந்த சங்கத்தை நல்ல வலிவுள்ளதாக்க வேண்டும். இந்த சீரிய முயற்சிக்குத் தி.மு.க. உறுதுணையாக இருக்கும் என அவர்களும் நம்புகிறார்கள். நானும் இந்த நேரத்தில் இதை உறுதிப்படுத்துகிறேன்.

தன்மான உணர்வு பெற்றனர்

நமது நாட்டில், தொழில்கள் எவ்வளவுக்கெவ்வளவு கடுமையாக உழைக்கக் கூடியவையாக இருக்கின்றனவோ, அவ்வளவுக்கவ்வளவு அவற்றைச் செய்ய கூடியவர்களைச் சாதியில் மட்டமாகக் கருதும் நிலை இருந்து வந்திருக்கிறது. மேனாமினுக்கிகளாக இருப்பவர்கள், உயர்ந்த சாதியாக மதிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். சமுதாயத்தில் இப்படி ஒரு சாரார் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட முறை நெடுங்காலமாக இருந்து வருவதைப் போக்கவேண்டும் என்ற தன்மான உணர்ச்சி இப்போது ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சலவைத் தொழிலைச் செய்பவர்களை ஒரு சாதி என்று கருதாமல் சலவைத் தொழிலை ஒரு சாதியின் தொழிலாக எண்ணாமல் சலவைத் தொரிலும் மற்ற தொழில்களைப்போல் ஒரு தொழில் என்ற எண்ணம் ஏற்பட வேண்டும்.

அமைச்சரின் அனுபவம்

மற்ற நாடுகளிலெல்லாம், சலவைத் தொழில் மிக நன்றாக நடைபெறுகிறது. இநந்ாட்டில் உள்ள நடுத்தர, ஏழை மக்கள் துணி அதிகம் இல்லாத காரணத்தால், அதிகமாகச் சலவைக்குப் போடுவதில்லை. மேனாட்டினர் நம்மைவிட அதிகமாகத் துணிகளை உபயோகிக்கிறார்கள்.

நமது நிதியமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள், மேனாட்டுக்குப் புறப்பட்ட நேரத்தில் அவரைப் பார்த்து வரலாம் என்று நான் போயிருந்தேன். அப்போது அவர், எடுத்துச் செல்வதற்காக இரண்டே ஜதை சட்டைகளை வைத்திருந்தார். நான் அவரைப் பார்த்து, ‘இந்த உடைகள் போதுமா?‘ என்று கேட்டேன். அதற்கு அவர் ‘தாராளமாகப் போதும்‘ என்றார். மேனாடுகளிலெல்லாம் ஒரு நாள் முழுவதும் போட்டிருந்த சட்டையை மறுநாள் காலையில் சலவைக்கு அனுப்பினால், குளித்துவிட்டு வெளியிலே புறப்படும் நேரத்துக்குள் – பத்துமணிக்கெல்லாம் சலவை செய்யப்பட்டு வந்துவிடும்‘ என்று அவர் சொன்னார்.

மதிப்பளிப்பதன் மூலம் தொழில் வளரச் செய்யட்டும்!

நான்கூட முன்பெல்லாம் நினைத்ததுண்டு. தூத்துக்குடி வரை சென்று வருவதென்றால் ஒரு நாலைந்து சட்டை வேட்டிகள் தேவைப்படுகின்றனவே, மேனாடுகளுக்குச் செல்வதென்றால் எவ்வளவு துணிகள் வேண்டியிருக்கும் என்று! ‘மேனாடு செல்பவர்கள் ஆங்காங்கே புதிது புதிதாகத் தைத்துப் போட்டக் கொள்வார்களோ‘ என்று கூட நான் எண்ணியதுண்டு, ஆனால் மேல்நாடுகளில் நான் நினைத்தது போன்ற நிலைமை இல்லை. அங்கெல்லாம் சலவைத் தொழில் மிக வேகமாக முன்னேறியிருக்கிறது. மணிக்கணக்கில் சலவை செய்து தரும் நிலைமை அங்கே ஏற்பட்டள்ளது. இங்கேயும் இத்தொழிலாளரை ஒரு ‘ஜாதி‘யாக கருதாமல் இருந்தால், இத்தொழிலுக்கு நல்ல மதிப்பளித்தால் இங்கும் அந்த நிலைமை நாளடைவில் வரும்.

நான்கில் ஒரு பங்கு அக்கறையைக் காட்டட்டும்

இங்கே சில பல தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள். இந்த மாநாட்டுக் கோரிக்கைகளை வரவேற்புரையில் குறிப்பிட்டிருந்ததையும் நான் காலையிலேயே படித்துப் பார்த்தேன். பல மாவட்டங்களிலும் சலவைத் துறைகள் கட்டுவதற்கு ஆண்டிற்கு ஒரு பத்து லட்ச ரூபாய் ஒதுக்க வேண்டுமென்றும், விஞ்ஞான முறையில் சலவை செய்யும் பயிற்சி பெற மேனாட்டுக்குச் சிலரை அனுப்பி வைக்க வேண்டுமென்றும், புறம்போக்கு நிலங்களைச் சலவைத் தொழிலாளர் குடியிருப்புக்கு ஒதுக்க வேண்டும் என்றும், தொழிலுக்கு தேவையான நிலம் மலிவான விலையில் வாங்கித்தர வேண்டும் என்றும்கேட்டிருப்பதை நிறைவேற்றுவது என்பது ஒன்றும் முடியாத காரியமல்ல, இதற்குப் பணம் ஒதுக்க முடியாது என்று சொல்வதற்கில்லை. மற்ற தொழிலாளர்களிடத்தில் காட்டும் அக்கறையில் நான்கில் ஒரு பங்கு அக்கறையைச் சலவைத் தொழிலாளர்களிடத்தில் அரசாங்கம் காட்டினாலும் போதும்.

ஆளும் கட்சியினர் அலைகின்ற நேரமிது!

சலவைத் தொழிலாளர்கள் இப்படி ஒரு மாநாட்டைக் கூட்டித் தங்கள் கோரிக்கையை எழுப்பியிருக்கும் நேரம் சரியான நேரமாகும். ஏனென்றால், ஆட்சியில் உள்ள கட்சியினர், பேசாதவர்களிடமெல்லாம் பேசி ஏறாத படிக்கட்டெல்லாம் ஏறி, பிடிக்காதவர்களையெல்லாம் பிடித்துத் தங்களுக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்ள அலை அலையாக அலைகின்ற நேரம் இது.

வெளுப்பதற்கு முன் வெள்ளாவி வைப்பதுபோல் நீங்கள் இப்போது இந்த மாநாட்டை வைத்திருக்கிறீர்கள். எனவே உங்கள் கோரிக்கை வெற்றி பெறும் என்று நம்புகிறேன். எங்களுடைய கழகமும், இக்கோரிக்கைகள் வெற்றி பெறப்பாடுபடும் என்ற உறுதியை அளிக்கிறேன்.

வளர்ச்சி ஏற்பட்டால்தான் தொழில் வளரும்

சமுதாயத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டால் தான் தொழில் வளரும். தண்ணீர் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவுக்குத் தாமரைத் தண்டு இருப்பதுபோல் சமுதாயப் பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தே தொழிலின் வளர்ச்சியும் இருக்கிறது. சமுதயாத்தில் நல்ல வருமானம் இருக்குமானால், சலவைக்கு வரும் துணிகளும் நிறைய இருக்கும். கையிலே காசு இல்லை என்றால், வேட்டி அழுக்காக இருந்தாலும் அதே வேட்டியைத் திருப்பி அப்படியும் இப்படியும் மடித்துக் கொண்டே நான்கு நாட்களைக் கழித்து விடலாம் என்று சிலர் நினைப்பதுண்டு.

இன்றைய நிலை இப்படி

வருவாய் அதிகரித்தால் தினம் ஒரு சலவைத் துணி கட்டலாம் என்று தோன்றும்.

எனவே, பொருளாதார ஏற்றத்தாழ்வை ஒட்டித் தொழிலாளியின் வாழ்விருக்கிறது, அதே போல், அரசியலை ஒட்டியும் தொழிலாளி இருக்கிறான்.

இதைச் சொன்னவுடன், ‘அரசியல் வேறு – தொழிற் சங்கம் வேறு‘ என்று கருதும் தொழிற்சங்க மேதைகள் தொழிற்சங்க இலக்கணத்திற்கு இது முரணாயிற்றே‘ என்று ஆயாசப்படலாம்.

அவர்களுடைய இலக்கணம் சரியாக இருக்கலாம், ஆனால், இன்றைய நிலை இப்படி இருக்கிறது.

அரசியலை நீக்கித் தொழிற்சங்கமா?

அரசியலை நீக்கித் தொழிற்சங்கத்தைப் பார்க்க முடியாது, அதேபோல், தொழிற்சங்கத்தை நீக்கி அரசியலைப் பார்க்க முடியாது, இன்னும் சொன்னால், அரசியலார் பார்த்துத் தொழிலின் நிலையை மாற்றிவிட முடியும்.

நல்ல அரசியல் கட்சி ஆட்சிப் பீடத்திற்கு வராமல் பிற்போக்குத் துரைத்தனம் வந்து, ‘சலவை செய்வோர் துவைப்பதால், பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுகிறது‘ என்று கூறி, காலை 8 மணியிலிருந்து 10 மணி வரை துவைக்கலாம், அதற்கு மேல் துவைத்தால் தண்டனை‘ என்று சட்டம் போட்டுவிட்டால் சலவைத் தொழில் என்ன ஆகும்? இப்படிச் சட்டம் போடமாட்டார்கள் என்பதற்கு என்ன உறுதியிருக்கிறது?

இப்போது போடவில்லையா சட்டம், ‘இரவு 10 மணிக்கு மேல் பேசக் கூடாது என்று! 11 மணிக்கு மேல் துவைக்க கூடாது என்று, 12 மணிக்கு மேல் சமைக்கக் கூடாது‘ என்று சட்டம் போட மாட்டார்களா என்ன?

அங்கெல்லாம் முடிந்ததே...
‘மலயா நாட்டிலே சலவைத் தொழில் நன்றாக நடக்கிறது, ஆயிரம் ரூபாய் மாத வருமானம் கிடைக்கிறது‘ என்று அங்குச் சென்று வந்த நண்பர்கள் கூறுகிறார்கள்.

அங்கு எப்படி அது முடிந்தது? மேனாட்டு முறையில் கருவிகளைப் பயன்படுத்தி அந்தத் தொழிலைச் சிறக்க வைத்தார்கள்.

நல்ல ஆட்சியாக இருந்தால் தொழிலைச் சிறக்க வைக்கும் வைதீக ஆட்சி வந்தால்...?

வைதீகம் என்ன சொல்கிறது? ‘அவனவன் துணியை அவனவன் துவைத்துக் கொள்ள வேண்டும், அதைக் காய வைப்பது வெயிலில் கூட அல்ல – நிழலில் காய வைத்துச் செங்காவி ஏறச் செய்ய வேண்டும் – இந்த எண்ணம் கொண்டவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும்?

இன்றைய விசித்திரம் இதுதான்!

இப்படி வைதீக முறைப்படி நடப்பவர்கள் இங்கு யாரும் இல்லை. ஆனால் இந்த வைதீகத்தைப் பேசுபவர்கள் அரசியலில் நிறைய இருக்கிறார்கள். இதுதான் இன்றைய விசித்திரம்.

எனவே, அரசியலைத் தொழிலிலிருந்து பிரித்துவிட முடியாது. ‘அரசியலைத் தொழிற்சங்கத்தில் நுழைக்காதே‘ என இப்போது மட்டுமே கூறுபவர்கள், சூதான கருததைச் சொல்கிறார்கள் என்று பொருள்.

அரசியல் என்ன – பாவகாரியமா? அரசியல்வாதி என்ன சமுதயாத்திலே குட்டம் பிடித்தவனா?

தொழிலைப் பற்றி, தொழிற்சங்கத்தைப் பற்றி எப்படி ஓர் அரசியல்வாதி பேசலாமோ, அப்படி ஒரு தொழிலாளி அரசியலைப் பற்றியும் பேசலாம்.

ஏமாந்து போகாதீர்!

துணியைக் கொண்டு போய்க் கொடுத்தபோது, துணியைப் பிரித்துப் பார்த்து, ‘ஏன் இப்படி கஞ்சி போட்டாய்? கிழிந்து விடுமே‘ என்று அரசியல்வாதி கேட்க மாட்டானா? அவனுக்கு என்ன தெரியும் சலவைத் தொழிலைப் பற்றி என்று நாம் கேட்கிறோமா?

எனவே, அரசியலும் தொழிலும் இணைந்தவை, ஆனால் அவை கலக்கக்கூடாதவை என்று பேசுவதைக் கேட்டு அருள் கூர்ந்து ஏமாந்து போய்விடாதீர்கள். நல்ல அரசியல் நடக்கும்போதுதான் நல்ல தொழில் இருக்கும்.

நல்ல சர்க்கார் அமைந்தால்...

ஒரு துணிக்கு நாலணா என்ற தீர்மானத்தை நீங்கள் போடுவதாக வைத்துக் கொண்டால், அது பொருளாதார வளத்திற்கு ஏற்றவகையில் இருக்க வேண்டும். பொருளாதார வளம் இருந்தால் தான் தொழிலாளர் நிலை உயரும், தொழிலாளர் நிலை உயர நல்ல சர்க்கார் அமைய வேண்டும், நல்ல சர்க்கார் அமைந்தால்தான் பொருளாதார நிலை உயரும்.

வாய்க்கால் ஆழமாக இருந்தால்தான் நீர் அதிகமாக ஓடும், நீர் அதிகமாக ஓடினால்தான் செந்நெல்மணி கிடைக்கும், செந்நெல் கிடைத்தால்தான் நிரம்பச் சாப்பிடலாம், நிரம்பச் சாப்பிட்டால்தான் ஆழமாக வாய்க்கால் வெட்ட முடியும், வாய்க்கால் ஆழமாக இருந்தால் தான் நீர் அதிகமாக ஓடும்.

இதைப்போன்ற ஒரு கோர்வை ஒரு வட்டத்தில் பொருளாதார அமைப்பே இருக்கிறது.

நெற்றிக்கு மட்டும் பொட்டிடுவது போல் – மார்புக்கு மட்டும் சந்தனம் பூசுவது போல் – இந்தப் பொருளாதார வட்டத்தில் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு வளமூட்டுவது இயலாது, அப்படிக் கூறுபவர்கள் ‘இந்த நாட்டிலே ஓட்டு வந்தால் போதும்‘ என்று கருதபவர்களாகத் தான் இருப்பார்கள்.

‘காங்கிரசய்யா‘வைக் கேட்கச் சொல்லுங்கள்

ஆகவே, சலவையர் இநத் நிலையை உணர்ந்து, தங்களுக்கு நன்மையுரியும் ஆட்சியை அமைப்பது சிறந்தது.

அது எப்படி முடியும் என்று கேட்பீர்கள், சலவை செய்ததால், வேட்டி கிழிந்து விடுகிறது. “என்னப்பா வேட்டியைக் கிழித்துவிட்டாய்’ என்று வேட்டிக்கு உரியவர் கேட்டால், அந்த இடத்திலே நீங்கள் ஐந்து நிமிடம் பிரச்சாரம் செய்யலாம்.

‘என்ன செய்வது, முன்பெல்லாம் துணி அழுத்தமாக நெய்யப்பட்டிருந்தது, இந்த ஆட்சி வந்தது – துணியும் கெட்டு‘ பலமிழந்து நெய்யப்படுகிறது, எப்படி வேட்டி கிழியாமல் இருக்கும்?‘ என்று கேட்கலாம்.

“என்னப்பா, நீலம் இப்படி கறுப்பாகக் கலந்திருக்கிறதே‘ என்று கேட்டால், ‘அந்தக் காலத்தில், நீலத்தை அப்படியே தூவினால் போதும், தூர இருந்து பார்த்தாலே ஆடை பளபளக்கும், இப்போது சரக்குக் கெட்டுவிட்டது, சலவையும் சரியில்லை‘ என்று கூறலாம். ‘இதற்கு யாரய்யா காரணம்?‘ என்று கேட்டால், ‘காங்கிரசய்யா‘வைக் கேளுங்கள்‘ என்று கூறிவிடலாம்.

நியாயமான கோரிக்கைகள்

சலவைத் தொழிலாளர்கள் ஒரு பொருளையும் உற்பத்தி செய்வதில்லை, நெசவாளரிடம் நூலைத்தந்தால், ஆடை என்னும் உற்பத்திப் பொருளைத் தருகிறார், கொத்தனாரிடம் கல்லையும், மண்ணையும் தந்தால் வீட்டைக் கட்டித்தருகிறார், ஆனால் சலவையாளர் அப்படியல்ல!

பயன்படாதது – அழுக்கடைந்து விட்டது எனக் கருதப்பட்டு ஒதுக்கப்பட்ட பொருளை, ‘இல்லை, இல்லை, மீண்டும் நல்ல பொருளாக்கித் தருகிறேன்‘ என்று தூய்மைப்படுத்தி தருபவர்கள் சலவையாளர்கள்.

பயய்னபடாத பொருளைப் புதுப்பிப்பதன் மூலம், உற்பத்தி செய்ய வேண்டிய அவசியத்தைக் குறைப்பவர்கள் பணி நல்ல பணியாகும். அத்தகைய பணியைச் செய்பவர்கள் சலவையாளர்கள். அவர்களது கோரிக்கைகள் நியாயமானவை அவற்றை நிறைவேற்ற வேண்டும்.

சக்தியைப் பயன்படுத்துக!

சலவையாளர்கள் என்ன – சாமானியர்கள் என்று நினைத்துவிடக்கூடாது, பெரிய பெரிய அரசாங்கங்களையே கவிழ்ந்திருப்பதாக ‘இராமாயணம்‘ கூறுகிறது.
சலவையாளர்களுக்குக் கழகத்தின் தோழமையும், தொண்டும் என்னென்றைக்கும் உண்டு.

சலவையாளர்கள் தங்களைச் சமுதாய முறையிலும் உயர்த்திக் கொள்ள நல்லாட்சி ஏற்படுகிற வகையில் குறைந்த அளவு தட்டிக் கேட்கும் பலமான நல்ல எதிர்கட்டசியை அமைக்கும் வகையிலாவது தங்கள் சக்தி முழுவதையும் பயன்படுத்த வேண்டும்“.

(நம்நாடு - 25, 29.9.61)