அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


அரசு ஊழியர் பிரச்சினையை ஊறுகாய் பானையில் போடாதீர்!

சட்ட மன்றத்தில் அண்ணா கோரிக்கை

சென்னை, மார்ச் 17 – நேற்றுச் சட்டமன்றத்தில் அண்ணா அவர்கள் உரையாற்றும் போது, என்.ஜி.ஓக்கள் ஊதியப் பிரச்சினை குறித்துக் குறிப்பிட்டதாவது –

என்.ஜி.ஓக்களுக்கு ஊதிய உயர்வு தருவது பற்றி இந்த அவையில் நீண்டகாலமாகப் பேசப்பட்டு வந்து இருக்கிறது. அந்தப் பிரச்சினை, ஊறுகாய்ப் பேசப்பட்டு வந்து இருக்கிறது. அந்தப் பிரச்சினை, ஊறுகாய்ப் பானையில் போடப்பட்டு விட்டது. ஊறுகாய்ப் பானை என்று நான் வெறும் சொல்லலங் காரத்துக்காகக் சொல்லவில்லை. ஊறுகாய்ப் பானையில் எண்ணெய் வற்றிவிட்டால் ஊறுகாயின் சுவையும் வற்றிவிடும். செய்ய வேண்டியதைக் காலாகாலத்தில் செய்தால்தான் பயன் கிடைக்கம். தந்த வாக்குறுதியைக் காலாகாலத்தில் நிறைவேற்றி இருந்தால் பக்குவப்படுத்திய ஊறுகாய் போல் பயன்பட்டிருக்கும். அதைவிட்டு என்.ஜி.ஓக்கள் கிளர்ச்சி செய்தால் அவர்களைக் கண்டிப்பதும் அவர்கள் பக்கம் நிற்கும் எதிர்க்கட்சிகளைத் தாக்குவதுமான நிலைதான் இருக்கிறதே தவிர வேறு ஒன்றுமில்லை. காலங்கடத்து ஒரு ஐந்து ரூபாய் அவர்களுக்கு நிவாரணமாகத் தந்தால் அந்தப் பணமும் பயன்படுத்தவதில்லை – அந்த நேரத்தில் விலைவாசிகள் மேலும் ஏறிவிடுகிறது.

ஒத்திப் போடுவது சரியல்ல

நம்முடைய மாநிலத்திலுள்ள அரசாங்க ஊழியர்கள் திறமையைப் பற்றி நம்முடைய மந்திரிகள் ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக் கொண்டு பாராட்டுகின்றனர். எதிர்க்கட்சியினராகிய எங்களுடைய பாராட்டைவிட அவர்களுடைய பாராட்டுத்தான் தேவை. ஆனால் அப்படிப்பட்ட ஊழியர்கள் தங்களுக்குத் தேவையான ஊதியத்தைக் கேட்கின்ற போதுதர மறுக்கிறார்கள். அவர்கள் எங்களுக்கு இவ்வளவு அதிகமான அளவு ஊதியம் கிடைக்கிறது என்று சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்வதற்காக ஊதிய உயர்வு கேட்கவில்லை. இந்த அளவாவது கிடைத்தால் தான் வாழமுடியும் என்று கேட்கிறார்கள். அவர்கள் தேவையை நிறைவேற்றாமல் ஒத்திப் போட்டுக் கொண்டு போவது சரியல்ல.

என்.ஜி.ஓக்கள் பற்றி நான் பேசினால் நாங்கள் அவர்களைத் தூண்டி விடுவதாகவோ எங்களுடன் அவர்கள் சேர்ந்து விட்டதாகவோ பழி சுமத்துகிறீர்கள். மாணவர்களிடம் சென்று “நீங்கள் அரசியலில் ஈடுபடாதீர்கள்“ என்கிறீர்கள். தொழிலாளர்களுக்கு அரசியல் கூடாது என்கிறீர்கள். முதலாளிகள் அதிகமாக உங்களிடத்திலே இருக்கிறார்கள். ஆகையினாலே மற்ற முதலாளிகளிடம் அரசியல் கூடாது என்கிறீர்கள். சர்க்கார் உத்தியோகஸ்தர்களே அரசியலில் சிக்காதீர்கள் என்கிறீர்கள்.

பிரச்சினையிலிருந்து தப்பித்துக் கொள்ளாதீர்!

நான் கள்ளங்கபடமற்றுத் தெளிவாகச் சொல்கிறேன். சர்க்காருக்குச் சங்கடம் கொடுக்க வேண்டுமென்று நாங்கள் விரும்பவில்லை. நீங்கள் 150 பேராக இருந்து நாங்கள் 140 பேராக இருந்தால் அந்த நப்பாசை எங்களுக்கு ஏற்படலாம். நீங்கள் பிரம்மாண்டமான மெஜாரிட்டி பலத்தால் எதிர்க்கட்சியினரைக் குறைத்துப் பேசி, பிரச்சினையிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டாம் என்ற கேட்டுக் கொள்கிறேன்.

(நம்நாடு - 17.3.1960)