அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


அரிசி சாப்பிடுவோர் அறிவாளிகள் அல்லவா?

காங்கிரசுக் கட்சி இன்றைய தினம் எல்லா மாநிலங்களிலும் கொடி கட்டி ஆளலாம். கொடிகட்டி ஆளுகிற அளவுக்கு அந்தக் கட்சிக்கு வளர்ச்சி எப்பொழுது ஏற்பட்டது என்றால் அதற்கென்று ஒரு மகாத்மா கிடைத்து செயலாற்றுகிற பத்து இலட்சம் தொண்டர்கள் கிடைத்து, 60, 70 ஆண்டுகள் பணியாற்றிச் சொத்தையெல்லாம் இழந்து, செக்கிழுத்த சிதம்பரனார் கிடைத்து, திருப்பூர் குமரன் தடியடிப்பட்டுக் கடை வீதியில் பிணமாகி, இத்தனைக்கும் பிறகு அவர்கள் பெற்ற வளர்ச்சியை நாம் 11 ஆண்டுக் காலத்தில் பெற்றிருக்கிறோம்.

இந்தக் கணக்கு தெரியாதவர்கள்தான் இன்று அரசியல் புரியாமல் அண்ணாதுரையை நாலு கூட்டத்தில் திட்டிவிட்டால் தி.மு.கழகம் அழிந்துவிடும். சம்பத்தை இரண்டு கூட்டத்தில் திட்டிவிட்டால் தி.மு.கழகம் சரிந்துவிடும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்களே தவிர, இந்தக் கட்சி வளர்ச்சிக்கும் அந்தக் கட்சி வளர்ச்சிக்கும் ஒப்பிட்டுப் பார்த்து எந்தக் கட்சி வளர்கிறது என்பதையும், இந்த வளர்ச்சியை எப்படி இவ்வளவு குறுகிய காலத்தில் பெற முடிநத்து என்பதையும் எண்ணிப் பார்த்தால் இதை அழிக்க முடியாது என்பதையும் அவர்கள் அறிந்து கொள்வார்கள்.

நாகதாறி – வெள்ளைப்பூச்சி

நாம் இன்றைய தினம் காங்கிரசுக் கட்சிக்கு அடுத்தபடியாக இருப்பது மட்டுமல்ல, எந்தப் பக்கம் திரும்பினாலும் நம்மை அவர்கள் சந்திக்கிறார்கள். கூரை வீடுகள் நிரம்பிய கிராமமானலும் சரி, மாட மாளிகைகள் நிறைந்த சென்னை நகரமானாலும் சரி, எந்த இடத்திற்குப் போனாலும் காங்கிரசு என்று ஒன்று இருந்தால் அதற்கப் பக்கத்தில் தி.மு.கழகம் என்று ஒன்று இருக்கிறது. நாகதாறி இருக்கிற இடத்தில் அதை அழிக்கிற வெள்ளைப்பூச்சி இருப்பதைப்போல காங்கிரசு எந்த இடத்தில் இருக்கிறதோ அதை அழிக்கக் கழகமும் இரக்கிறது என்று பொதுச்செயலாளர் அண்ணா அவர்கள் சென்னை இராயப்பேட்டையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

அரிசி உணவு சாப்பிட்டால் சோம்பேறித்தனமும் சொரணையற்ற தன்மையும் ஏற்படும் என்று அண்மையில் பண்டித நேரு பேசியதற்குப் பதிலளிக்கும் வகையில் அண்ணா அவர்கள் குறிப்பிட்டதாவது.

அரிசி சோறு சாப்பிட்டால் அது மனிதன் மூளையில் எந்த வகையில் பாதிக்கிறது என்பது என்னுடைய வாழ்க்கையில் இன்னமும் புரியவில்லை. அது இன்னும் ஆறு மாதத்தில் புரியும்.

அரிசிச் சோறு சாப்பிட்டவர்கள்தான்

அரிசி சோறு சாப்பிட்டுத்தான் ஆற்காட்டு இராமசாமி முதலியார் ஐதாரபாத் நிஜாமை இந்தியாவுக்குக் கொண்டு வாங்கிக் கொடுக்க உங்கள் சார்பில் ஐக்கிய நாட்டுச் சபையில் பேசினார்.

அரிசி சோறு சாப்பிட்டுத்தான் சர்.சி.பி.இராமசாமி அய்யர் பெரிய திவான் ஆனார். அவரைப் போல் யாரும் ஆங்கிலத்தில் பேசக்கூடியவர்கள் இல்லையென்று அனைவரும் கொண்டாடுகிற அளவுக்கு இருக்கிறார்.

“அரிசி சாப்பிட்டுத்தான் வ.உ.சி. கப்பல் ஓட்டினார்.

“இவ்வளவு ஏன்? கட்டபொம்மன் காலத்திலிருந்து கட்டபொம்மனுக்குக் கலைமெருகு கொடுத்த கணேசன் காலம் வரையில் அரிசி சாப்பிட்டுத்தான் வந்திருக்கிறார்கள். யாரும் கோதுமை சாப்பிட்டு அறிவாளியாக வில்லை“.

“அவ்வளவு ஏன்? படிக்காத மேதையென்று பெரியார் பாராட்டுகிறாரே, அந்தக் காமராசரும் அரிசி சாப்பிடுபவர் தான்!

“திருவாசகத்திற்க உருகாதார், ஒரு வாசகத்திற்கம் உருவார்“ என்று போற்றப்படும் மாணிக்கவாசகரும் அரிசி சாப்பிட்டவர்தான்.

காங்கிரசாரின் பொறுமைக்குப் பாராட்டு
“ஆகவே, அரிசி சாப்பிட்டால் சோம்பேறிகளாக ஆகி விடுவார்கள், மூளை வேலை செய்யாது என்று நம்மையும் இங்கே இருக்கும் காங்கிரஸ்காரர்களையும் சேர்த்து வடக்கே இருப்பவர்கள் கேவலப்படுத்திப் பேசுகிறார்கள். இருந்தாலும் பரவாயில்லை என்று எண்ணிக் கொள்கிற இங்கே இருக்கிற காங்கிரசு நண்பர்களின் பொறுமைக் குணத்தை நான் பாராட்டுகிறேன்.

சென்னை 60ஆவது வட்டம் !இராயப்பேட்டை) முத்தமிழ் முன்னேற்ற மன்றத்தின் சார்பில் நேற்று மாலை 6 மணிக்குத் தோழர் ஆ.பக்தவத்சலம் அவர்கள் தலைமையில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தலைவர் மன்றத்தின் பணிகளையும் தி.மு.கழகக் கொள்கையையும் விளக்கிப் பேசினார்.

பின், தோழர்கள் என்.டி.சுப்பிரமணியம், சுகுமாரன், மு.கண்ணபிரான், பொ.சண்முகம், கோ.இளவரசு, எம்.சி.ஆகியோர் தென்னகம் ஐந்தாண்டுத் திட்டங்களில் எந்த அளவுக்கு வஞ்சிக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தக்க சான்றுகளுடன் விளக்கிப் பேசினர்.

அடாது மழை பெய்தாலும்...

இறுதியாக அண்ணா அவர்கள் பேசியதாவது

“இன்று காலையிலிருந்து பெரு மழை பெய்து கொண்டிருந்த போதிலும் நாடகக்காரகர்கள் விளம்பரப்படுத்துவார்களே, ‘அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்தப்படும்‘ என்று, அதைப்போல நீங்கள் இந்தக் கூட்டத்தை மழையையும் பொருட்படுத்தாமல் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் – நானும் இந்தக் கூட்டத்தில் பேசுகிறேன்.

நாடகக்காரர்கள் என்று சொன்னவுடன் கூட்டத்தில் ஓரமாக நின்று கொண்டிருக்கக்கூடிய காங்கிரசுக்காரர்கள், ஆமாம்! நீங்கள் நாடகக்காரர்கள் தானே? என்று சொல்லக்கூடும். ஆமாம், நாம் நாடகக்காரர்களாகத்தான் இருக்கிறோம். ஆனால், காங்கிரசுக்காரர்கள் மற்றும் காங்கிரசுத் தலைவர்கள் சர்க்கசுக்காரர்களாக இருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு நமது முதலமைச்சர் அவர்களைச் சர்க்கசுக்காரராகச் சித்தரித்து, ‘மெயில்‘ பத்திரிகையில் ஒரு கார்டூன் வெளியிட்டதிலிருந்து இதை நான் தெரிந்து கொள்ள முடிந்தது.

காங்கிரஸ் சர்க்கஸ் – மரணம்

“நாடகக்காரர்கள் நாடகப்பணி முடிந்ததும் வாழ்வார்கள். ஆனால் சர்க்கசுக்காரர்களுக்குக் கடைசியில் சர்க்கசில் மரணம்! அதுதான் காங்கிரசு.

திராவிட முன்னேற்றக் கழகம் இவ்வளவு பொறுமை உணர்ச்சியோடு பெருமழை பெய்தாலும் மக்களைச் சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இத்தகைய கூட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலை கண்டு நான் உள்ளபடியே மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.. இந்தக் கூட்டம் இன்று நடைபெறாது என்று எண்ணிக் கொண்டுதான் வந்தேன். ஆனால் இங்கே கூட்டம் நடப்பது மட்டுமல்ல – கூட்டததில் சேற்றிலேயும் சகதியிலேயும் சில பொறுமைசாலிகள் உட்கார்ந்து கொண்டும் தந்திரச்சாலிகள் குத்துக்காலிட்டு நின்று கொண்டுமிருக்கிறார்கள். ஆனாலும் இந்தக் கூட்டம் தொடர்ந்து நடைபெறுவதும் அதிலே நண்பர் நாராயணசாமி பேசிக் கொண்டிருப்பதும் எனக்குத் தெரிந்தது. இந்த அளவுக்குப் பொறுமை உணர்ச்சியோடு இந்தக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிற தி.மு.கழகத்து நண்பர்களாகிய இந்த வட்டத்துத் தோழர்களை நான் பாராட்ட விரும்புகிறேன்.

திருப்பித் திருப்பி ஒரே விஷயம்

“திராவிட முன்னேற்றக் கழகம், நாள் தவறாமல் கூட்டம் போட்டு என்ன புதிய செய்தியைச் சொல்லிக் கொண்டு வருகிறது? நேற்று நாம் சொன்ன செய்திக்கும் இன்று நாம் சொல்கின்ற செய்திக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? இராயபுரத்தில் பேசிய செய்திக்கும் காஞ்சிபுரத்தில் பேசியதற்கும், கள்ளக்குறிச்சியில் பேசியதற்கும், திருநெல்வேலியில் பேசியதற்கும் திருவரங்கத்தில் பேசியதற்கும் ஏதாவது அடிப்படையில் வித்தியாசம் இருக்கின்றதா என்றால் பேசுகிற பாணியில் பயன்படுத்துகின்ற உவமையில் மாற்றம் இருக்குமே தவிர, எடுத்துச் சொல்கின்ற விஷயம் எந்த இடத்தில் பேசினாலும் ஒரே விதமாகத்தான் இருக்கும். என்ன அப்படி ஒரே ஒரு விஷயத்தைத் திருப்பித் திருப்பிச் சொல்ல வேண்டுமா? அந்த ஒரு விஷயம் முடிந்தால்தான் அதற்குப் பிறகு வேறு விஷயத்தைக் கவனிக்கலாம்.

“திருமணமாகாத இளைஞன் எல்லா விஷயத்திற்கும் திருமணமாகி விட்டால் தொல்லையில்லை‘ என்பான். தலைவலியால் தொல்லைப்படுபவரைப் பார்த்து என்னப்பா ஒரு மாதிரியாய் இருக்கிறாய்? என்று கேட்டால், ‘தலைவலிக்கிறது, இதை யார் கவனிக்கிறார்கள்? திருமணம் ஆகியிருந்தால் இந்தத் தொல்லை எல்லாம் இருக்காது‘ என்பார். வயிற்றுவலியால் அவதிப்படுபவரைப் பார்த்து கேட்டால், ‘ஒவ்வொரு நாளும் ஓட்டலில் சாப்பிட்டு இப்படி உடல்நிலை கெட்டுவிட்டது. கல்யாணம் ஆகியிருந்தால் இப்படி கவலைப்பட வேண்டியதில்லை என்பார்.

ஒரே பரிகாரம் விடுதலைதான்

“என்னடா இவன் திருப்பித் திருப்பி இதைப் பற்றித் தானா பேசவேண்டும்? உலகத்தில் வேறு செய்திகளே இல்லையா? கடலில் அலை அடிக்கிறதே, காற்றடிக்கிறதே, ஊர் ஊராகக் காமராசர் போய் வருகிறாரே இதைப் பற்றிப் பேசக்கூடாதா? என்று அரசியல்வாதிகள் பேசுவார்கள் திருப்பித் திருப்பி ஒரே பல்லவிதான் பாடுகிறானே‘ என்ற திருமணமானவர்கள் சொல்வார்கள். திருமணமாகாதவர்கள் உண்மையை உணருவார்கள்.

“அதைப் போலத்தான் தி.மு.கழகம் ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி் மட்டும் பன்னிப் பன்னி எடுத்துச் சொல்லிக் கொண்டு வருகிறது. நமக்கிருக்கும் எல்லா வகையான தொல்லைகளுக்கும் நம் சமுதாயத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒரே பரிகாரம் விடுதலைதான்.

“ஆகையால்தான் திராவிட நாடு திராவிடருக்கே!“ ஆகவேண்டும். வடநாட்டு ஏகாதிபத்தியப் பிடியிலிருந்து விடுபட்டு நமக்கென்று ஓர் அரசு வேண்டும். அந்த அரசு நல்ல அரசாக இருக்க வேண்டும் என்று எடுத்துச் சொல்கின்ற ஒரே விஷயத்தை மட்டும் இராயபுரக் கூட்டமானாலும் இராயப்பேட்டைக் கூட்டமானாலும நமது நண்பர்கள் எடுத்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

சுயராஜ்யம் வந்தால் தீரும்

“இப்படிப் பன்னிப் பேசுவதால் என்ன பயன் ஏற்படுகிறது என்பதை நான் செல்கிற பல கிராமங்களில் தெளிவாக என்னால் உணர முடிகிறது. 30, 40 ஆண்டகளாகக் காங்கிரசுக்காரர்கள் இப்படி ஒரே விஷயத்தைத்தான் பன்னிப் பன்னிப் பேசுகிறார்கள். எந்தப் பிரச்னையைப் பேசினாலும் அதற்குப் பரிகாரம் சொல்லிய பொழுது ‘இதெல்லாம் சுயராஜ்யம் வந்தால் சரியாய்ப் போய்விடும்‘ என்பார்கள். ‘லைட் அவுஸில் ஏன் லைட் கொஞ்சம் மங்கலாக எரிகிறது?‘ என்று கேட்டால் இங்கு வெள்ளைக்காரன் ஆட்சியல்லவா நடக்கிறது? அவன் எங்கே இதையெல்லாம் கவனிக்கப் போகிறான்? இதெல்லாம் சுயராஜ்யம் வந்தால்தான் தீரும்! என்று சொல்வார்கள்.

“நான் மாணவனாக இருந்தபொழுது எனக்குக்கூட அதைக்கேட்கிற நேரத்தில் முதலில் ஆச்சரியமாகத்தான் இருந்தது. அதே மாதிரியான ஆச்சரியம்தான் இன்றைய தினம் காங்கிரசில் இருப்பவர்களுக்கு நம்மைப்பற்றி எழுகிறது. ‘இவர்களுக்கு ஆதரவா?‘ என்று அவர்கள் அச்சப்படுகிறார்கள். ஆனால் பற்றுள்ள மக்கள் அதிலேயும் கிராமத்து மக்கள் முன்பு விஷயம் விளங்காமல் கேட்டக் கொண்டிருந்தார்கள். இப்போது புரிந்து கொண்டிருக்கிறார்கள். தெரிந்து கேட்கிறார்கள். இது எனக்கு எப்படி தெரியுமென்றால் படிப்படியாக அவர்களோடு பழகுவதால் தெரிகிறது. தொலைவில் இருக்கிறவர்களுக்குத் தெரியாது.

தாயைப் போல மகிழ்கிறோம்

“குழந்தை சிரித்தால் கன்னத்தில் ஒரு குழி விழும். அது எவ்வளவு அழகாக இருக்கிறது என்பது தாய்க்குத்தான் தெரியும். எதிர்வீட்டில் இருக்கும் பிள்ளையே பெறாத மலடி, ‘இதென்னடியம்மா குழந்தை சிரித்தால் கன்னத்தில் குழி விழுமாம், அது அழகாக இருக்குமாம். மழைக்காலத்தில் தெருவில் குழிவிழுவதைத்தான் நாம் பார்த்திருக்கிறோம் என்று சொல்லிவிட்டுப் போவாள்.

“அதைப்போல நான் கிராமத்தில் தி.மு.கழகத்தின இலட்சியம் நன்கு படிப்படியாக வளர்ச்சியடைந்து கொண்டு வருகிறது என்றேன் – குழந்தை சிரிப்பதால் ஏற்படும் கன்னத்தின் குழியை ஆவலோடு பார்த்து மகிழும் தாயைப் போல!

“தி.மு.க. இலட்சியத்திற்காகப் பாடுபட்ட நாங்கள் அதன் வளர்ச்சியைக் கண்டு பெருமையோடும் பூரிப்போடும் இருக்கிறோம். அதைப் பார்த்துப் பொறுக்காதவர்கள் அதைக்கண்டு சகிக்காதவர்கள் காண்பதற்கேற்ற கண் இருந்தும் காணாதவர்கள் இந்த வளர்ச்சியை ஒப்புக்கொள்ள மனமில்லாதவர்கள் சில பேர் இருக்கக்கூடும். அதைப் பற்றித்தான் நண்பர் நாராயணசாமி பேசினார். அதைப் பற்றி நீங்கள் எண்ணிப்பாருங்கள்.

காற்றாடி மேலே பறக்கிறது

நான் உங்களுக்குத் தெளிவாகவும் திட்டமாகவும் சொல்கிறேன், நாம் எடுத்துக் கொண்டிருக்கிற இலட்சியம் வளராவிட்டால் நாம் இந்த அளவுக்கு வேலை செய்ய மாட்டோம். நாம் ஒன்றும் பெரிய சீமான்கள் அல்ல, கப்பல் வியாபாரம் நடத்துகிறவர்களும் அல்ல. நாம் எடுத்துக் கொண்ட காரியம் படிப்படியாக முன்னேற்றமும் வெற்றியும் அடைவதால்தான் மகிழ்ச்சியும், தொடர்ந்து பணியாற்ற வேண்டுமென்ற ஆர்வமும் நமக்கு ஏற்படுகிறது. நாட்டு மக்கள் நம்முடைய பேச்சைக் கேட்கவில்லை, நம்முடைய இலட்சியத்தை ஆதரிக்கவில்லை என்ற எண்ணம் நமக்குத் தோன்றியிருந்தால் நாம் இப்படிப்பட்ட காரியத்தை அப்பொழுதே விட்டுவிட்டிருப்போம்.

“காற்றாடி மேல் போகப் போகக் காற்றாடி விடுபவரின் கையில் உள்ள நூல் உருண்டையும் குறையும். காற்றாடி மேலே போகவில்லையென்றால் நூல் உருண்டை கையில் பெரிதாக இருக்கும். கையில் இருக்கும் நூல் உருண்டைக்குச் சமம், காங்கிரசுக் கட்சியில் இருக்கும் பணம். நம்மிடத்தில் பணமில்லையென்றால் காற்றாடி மேலே பறக்கிறது என்று பொருள் நூல் உருண்டை நமக்கப் போதவில்லை. இன்னும் கொஞ்சம் நூல் உருண்டை இருந்தால் காற்றாடியைச் சுண்டி இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பறக்கவிடலாம்.

தமிழினிடத்தில் அன்பில்லை

“இதை நான் சொல்கிற நேரத்தில் ‘ஆமாம், அவர்கள் எல்லாம் காற்றாடி விடுகின்ற சிறுபிள்ளைகள்தானே‘ என்று காங்கிரசுக்காரர்கள் சொல்வார்கள். உவமையை எந்த அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென்று அவர்களுக்குத் தெரியவில்லை. காரணம் தமிழனிடத்தல் அவர்களுக்கு அதிகமாகத் தொடர்பு இல்லை. தொடர்பில்லையென்று சொல்வதால் தமிழறிவே அவர்களுக்கு இல்லையன்று எண்ணிவிடாதீர்கள்.

“தொடர்பு இல்லை என்று நான் குறிப்பிடுவது அவர்கள் தங்களுக்கு இருக்கின்ற அறிவைக் கொஞ்சம் இந்திக்கும் கொஞ்சம் ஆங்கிலத்திற்கும் ஆகப் பயன்படுத்துவதனால் நான் சொல்லுகிற உவமையை எந்த அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்களுக்குப் புரிவதில்லை என்பதைக் கூறுவதற்குத்தான்.

“ஒரு பெண்ணுக்குக் கண்கள் செந்தாமரைபோல் இருக்கிறது என்று நான் சொன்னால், உடனே அவர்கள் சேற்றை அள்ளிக் கொண்டு வந்து செந்தாமரை சேற்றில் தானே இருக்க வேண்டும்‘ என்று சொன்னால் என்ன அர்த்தம்? அதைப்போலத்தான் எந்த அளவுக்கு உவமையைக் கொண்டு போகலாம் என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

வளருகிற கட்சியா இல்லையா?

“இப்படித் தி.மு.கழகம் தன்னடைய சக்திக்கு ஏற்றாற்போல் காரியத்தில் வெற்றியைத் தேடி கொண்டு வருகிறது. அந்த வெற்றி நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.

“கழகம் எங்கே வளர்ந்திருக்கிறது என்று கேட்கும் காங்கிரசுக்காரர்கள் ஒரு காகிதத்தில் காங்கிரஸ் துவக்கப்பட்டதிலிருந்து அதனுடைய 11 ஆண்டுகால வளர்ச்சியையும் நம்முடைய 11 ஆண்டுகால வளர்ச்சியையும் எழுதி இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ‘இது வளருகிற கட்சி இல்லையா? என்பதை அப்பொழுதாவது அவர்கள் தெரிந்து கொள்வார்கள்.

“தி.மு.கழகத்தின் வளர்ச்சியைப் பார்த்து 50. 60 ஆண்டுகளாகப் பாடுபட்ட பெரிய கோடீசுவரர்கள் செய்ய முடியாததை இவர்கள் ஒரு பதினைந்து பேர் விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் செய்கிறார்கள், இவர்களுக்கு இருக்கம் மொத்தச் சொத்தைச் சேர்த்தால் கூட நம்முடைய கையிலிருக்கும் வைர மோதிரத்திற்கு ஈடாகாது. அப்படிப்பட்ட பயல்கள் ஒரு ஐந்தேகால் அடி உயரமுள்ள ஆளை வைத்துக் கொண்டு வளருவதா, இதை நாம் பார்த்துக் கொண்டிருப்பதா என்று அவர்களுக்கு ஆத்திரம் வருகிறது அந்த ஆத்திரத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அது இயற்கைதான். ஆகையால் நாம் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.

நமக்கு நட்டம் ஒன்றும் இல்லை

“ஒவ்வொரு மாவட்டத்திலும் சுற்றுப் பயணம் செய்யும் போது என்னுடைய மனத்திற்குத் தெம்பும் உற்சாகமும் புதியதொரு நம்பிக்கையும் ஏற்படுகிறது. ஆகையினால்தான் இந்தக் கழகத்தில் ஈடுபட்டிருக்கும் எல்லா வாலிபர்களும், தாங்கள் எடுத்துக் கொண்டுள்ள முயற்சி நல்ல முறையில் வளர்ச்சியடைந்து வருகிறது என்பதைத் தெளிவாகவும் திடமாகவும் தெரிந்து கொள்ளலாம் இல்லையானால் நானே சொல்லிவிடுவேன். நான் ஒன்றும் கடவுளால் அனுப்பப்பட்டவன் அல்ல – மனிதன்தான் நமக்கு வெற்றி கிடைக்கவில்லையென்றால் அதை வெளியில் சொல்வதில் ஏன் வெட்கப்படவேண்டும். அரசியலில் சில காரியம் முடிய வில்லை என்று சொல்வதற்கு யாரும் வெட்கப்படவோ, வேதனைப்படவோ தேவையில்லை. இப்படி முயற்சி செய்து முடியாமல் போனவர்கள் இல்லையா? பித்தாபுரம் மகாராஜா முயற்சி செய்து தோற்றார். ஆனால் நமக்கு வளர்ச்சியில்லை யென்று மற்றவர்கள் சொன்னால் அதனாலே நமக்கு லாபமே தவிர நட்டம் ஒன்றும் இல்லை.

“போன தடவை தேர்தல் நடந்தபோது நம்மிடம் எவ்வளவு பணம் இருந்தது? திருச்சி மாநாட்டில் மிச்சப்படுத்திய தொகை ஒரு லட்சம் இருந்தது. அப்பொழுது தேர்தலுக்குத் தேனீத் தொகுதியில் நின்ற இராசேந்திரன் இப்பொழுது இருக்கும் அளவுக்கு அப்பொழுது சினிமாவில் செல்வாக்குப் பெற்றவர் அல்ல. அப்பொழுது இராசேந்திரன் ‘தேர்தலுக்கப் பணம் கிடைக்குமா?‘ என்று என்னைத் தேடிக் கொண்டு வந்தார். நானும் சொன்னேன் – அனுப்புகிறேன் என்று. பணம் இல்லையென்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் ஓர் ஆசை வார்த்தையாவது சொல்வோம் என்றெண்ணி அனுப்புகிறேன் என்றேன். அப்படிப்பட்ட நிலைமையில்தான் போன தடவை தேர்தல் நடைபெற்றது. ஆனால் அதனுடைய முடிவு என்ன? தேர்தலில் யார் யார் போட்டி இட்டார்கள்? ஒரு பக்கத்தில் காங்கிரசுக்காரர்கள், இன்னொரு பக்கத்தில் கம்யூனிஸ்டுகள். மற்றும் சோஷலிஸ்டுகள், இன்னொரு பக்கத்தில் பெரியார் இராமசாமி இத்தனைக்குப் பிறகும் நமக்கு 17 லட்சம் மக்கள் வாக்களித்தார்கள். காங்கிரசுக் கட்சிக்கு கிடைத்த மொத்த ஓட்டு 50 லட்சம்தான். இந்தக் கணக்கு காங்கிரசுக்காரர்களுக்குக் கவனம் இருக்கவேண்டும். நமக்குக் கிடைத்தது போல ஏறக்குறைய மூன்று மடங்கு அவர்களுக்கு அதிகமான வாக்குகள் கிடைத்தன.

தேர்தல் இயந்திரச் சூழ்ச்சி

“ஆனால், இன்றைய தினம் தேர்தல் முறை எப்படி அமைந்திருக்கிறதென்றால் 17 லட்சம் வாக்குகள் பெற்ற நாம் 15 பேர்தான் வந்திருக்கிறோம். நம்மைவிட மூன்று மடங்கு அதிக ஓட்டு வாங்கியவர்களுக்கு 45 இடங்கள்தான் கிடைத்திருகக் வேண்டும். ஆனால் இப்பொழுது இருக்கிற தேர்தல் இயந்திரம் அந்த வகையில் இல்லாததால் அவர்கள் 45க்குப் பதிலாக 150 இடங்களைப் பிடித்தார்கள்.

“இந்தக் கணக்கையெல்லாம் பார்த்துத்தான் நாம் செயலாற்றுகிறோம். இது தெரியாமல் என்ன செய்து விடுவார்கள்? எப்படி வளர்ந்து விட்டார்கள்? எங்கே வளர்ந்து விட்டார்கள்? என்று கேள்வி கேட்கிறார்கள். அவர்கள் அரசியல் புரியாமல் பேசுகிறார்களே தவிர வேறு ஒன்றுமில்லை.

“சட்டசபையில் ஒன்றும் பேசத் தெரியவில்லை என்ற குற்றச்சாட்டு எங்களில் ஒருவர் பேரிலும் இல்லை. சுப்பிரமணியம் கூட என்னிடம் சொன்னார். கொள்கை விஷயமாக நீங்கள் மட்டும் பேசுங்கள் – மற்ற விஷயங்களை மற்றவர்கள் பேசட்டும். யார் எழுந்தாலும் எதைப் பேசினாலும் “இதை நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சொல்கிறேன்“ என்று குறிப்பிட்டா பேச வேண்டும்? என்று கேட்டார்.

நாங்கள் வந்திருப்பது விடுதலைக்காக

“ஐயா! நாங்கள் சட்டசபைக்கு வந்திருப்பது ஆற்காட்டு இராமசாமி முதலியாரைப் போல பெரிய மேதை என்று பெயரெடுக்க அல்ல. சி.பி.இராமசாமியைப் போல நிர்வாகத்தில் பெரிய நிபுணர் என்று காட்டி கொள்வதற்காகவும் அல்ல. டி.டி.கிருட்டிணமாச்சாரியாரைப் போல முன்னாள் அரசியல் இலாபத்தைக் காட்டவும் அல்ல. நாங்கள் இங்கே வந்திருப்பது ஒரு நாட்டின் விடுதலைக்காக அதைத்தான் நாங்கள் சொல்கின்றோம்‘ என்றேன்.

“அந்தக் காரியத்தில் பொது மக்கள் எங்களிடத்தில் வைத்த நம்பிக்கைக்குக் குந்தகம் ஏற்படாத வகையில் பணியாற்றுகிறோம். இராமசாமி !படையாச்சி)யைப் போல ஆளும் கட்சியிடத்தில் நாங்கள் எங்களை விற்றுவிடவில்லை. மாணிக்கவேலரைப் போல கொள்கையைவிட்டு விடவும் இல்லை. அல்லது வேறு சில காங்கிரசு எம்.எல்.ஏக்களைப் போல கொட்டாவி விடும் நேரத்தைத் தவிர மற்ற நேரமெல்லாம் வாயை மூடிக்கொண்டும் இருக்கவில்லை. பேச வேண்டிய நேரத்தில் பேச வேண்டிய பிரச்சனையை முறைப்படி பேச வேண்டிய கட்சியின் சார்பில் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை நாட்டு மகக்ள் அறிந்திருக்கிறார்கள். இன்னும் என்ன லட்சியம் வேண்டும்?

கிராமங்களில் வளர்ந்துள்ளோம்

“நண்பர் இராமசாமி சொன்னார் – “காங்கிரசுக் கட்சியினிடத்தில் பணம் இருக்கிறது. இருக்கிறது. அந்தப் பணம் பொதுமக்களுக்கு வந்து சேரட்டுமே. பணத்தை யார் வாங்கப் போகிறார்கள்? உங்கள் நண்பர்கள், அப்பா, சித்தப்பா, தங்கை, பாட்டி, பாட்டன் இப்படிப்பட்டவர்கள் ஏழையாக இருப்பவர்கள்தான். வாங்கப் போகிறார்கள். எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. ஆனால் போன தேர்தலில் இருந்த பணம்தான் இப்பொழுதும் அவர்களிடத்தில் இருக்கிறது.

“ஆனால் நம்மிடத்தில் போன தேர்தலின்போது 1,200 கிளைக் கழகங்கள் இருந்தன. இப்பொழுது 4,300 இருக்கின்றன. அப்பொழுது நமக்குக் கிராமங்களில் அதிகமான அளவுக்குச் செல்வாக்கில்லை. இப்பொழுது நகரத்திற்கு வருவதற்க நேரமில்லை. அந்த அளவுக்குக் கிராமங்களில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

“ஏதோ இங்கே காங்கிரசு அமைச்சர்கள் அதிகாரப் பலத்தைப் பார்த்துக் கொண்ட காங்கிரசு பலமாக உள்ளது என்கிறார்கள். காங்கிரசு வளர்ந்திருப்பது உண்மையானால் போன ஆண்டு ஒரு படி அரிசி ஒரு ரூபாய் என்றால் இந்த ஆண்டு ரூபாய்க்கு மூன்று படி அரிசி விற்க வேண்டும். ஆனால், இப்பொழுது என்ன பலன் இருக்கிறது என்றால், ‘அரிசி சோறு சாப்பிடாதே! அரிசி சாப்பிட்டால் சோம்பேறிகள் ஆகிறீர்கள்‘ என்று அகில இந்தியக் காங்கிரசுக் கமிட்டிக் கூட்டத்தில் நேரு பேசுகிற அளவுதான் இருக்கிறது.

தெருக்கூத்துக் கோமாளி

“நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்“ என்று காங்கிரசுக்காரர்கள் இருக்கிறார்கள்.

“தெருக்கூத்தில் கோமாளி வருவான். அவன் அங்கே இருப்பவர்களின் முகத்தில் கரியைப் பூசுவான். அவர்கள் அவனைக் கண்டிக்க மாட்டார்கள், அதுமட்டுமல்ல, மறுநாள் காலையில் ‘கோமாளி கரி பூசினான்‘ என்பதைத் தெருவைச் சுற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்கள். அதைப்போல காங்கிரசுக் காரர்கள் இருக்கிறார்கள். இதில் எனக்கொன்றும் வருத்தமில்லை.

“ஆனால், உண்மையில் இன்றைய தினம் நாட்டின் நிலைமை காங்கிரசுக்கு வலிவுடையதாக இல்லை“. அரிசி சோறு சாப்பிடக்கூட முடியாமல் இருக்கிறது. ஆகையினால் காங்கிரசுக் கட்சி வளர்ந்ததற்கு ஆதாரமில்லை.

“காங்கிரசுக்காரர்கள் எல்லா வகையான நம்பிக்கையோடும் பணியாற்றுங்கள். அடுத்த தேர்தலில் யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது என்கிறார்கள். இதையே பல பேர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

“திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு பெரிய பட்டாளத்தையே அடுத்த தேர்தலுக்குத் தயார் செய்து கொண்டிருக்கிறது. தேர்தலின்போது ஓட்டுக்குப் பணம் கொடுப்பவர்களையும் பணம் வாங்குபவர்களையும் பிடித்து அவ்வப்போது போலீசில் ஒப்படைக்கும். உடனுக்குடன் போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால் அதைப் படம் பிடித்து உலகத்து நாடுகளுக்குக் காட்டுவதற்கு நாங்கள் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம்.

நமது நண்பர்கள் கெட்டிக்காரர்கள்

“பணம் கொடுத்தால் அது எப்படிப் பயன்படும் என்பதும் எனக்குத் தெரியும். இதை நான் உங்களிடம் சொல்வதில் ஒன்றும் தவறில்லை போன தேர்தலில் என்னுடைய தொகுதியில் ஒரு கிராமத்தில் ஓட்டுக்குக் காங்கிரசுக்காரர்கள் பணம் கொடுத்தார்கள். அந்தப் பணத்தை வாங்கிய நம்முடைய நண்பர் தேர்தல் முடிந்ததும் அந்தக் கிராமத்தில் கழகத் துவக்க விழாவை அந்தப் பணத்திலே நடத்தினார். அந்த வகையிலும் நம்முடைய நண்பர்கள் கெட்டிக்காரர்கள். எனவே பணம் கொடுத்து ஓட்டு வாங்கி விடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள், இதுவும் இந்தத் தேர்தலில் நடைபெறாது.

“ஆகவே, நாம் எடுத்துக் கொண்டிருக்கிற காரியத்தில் நல்ல வெற்றி கிடைக்க வேண்டும் என்பதையும் நமது மூலாதார இலட்சியமான திராவிட நாடு திராவிடருக்கே ஆகவேண்டும், நண்பர்களுக்கு மேலும் அக்கறை அதிகம் இருக்க வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

(நம்நாடு - 3, 4.11.60)