காரைக்குடிப் பாண்டியன் பகுத்தறிவுப்
படிப்பகமுதாலவது ஆண்டு விழா, 1.8.54 மாலை 4 மணிக்கு, படிப்பகத்தின்
முன்பு அமைக்கப் பெற்றிருந்த பந்தலில் தோழர் அ.பொன்னம்பலனார்
தலைமையில் நடைபெற்றது. படிப்பகத்தின் சார்பில், திரு.சு.ப.சிவஞானம்
எல்லோரையும் வரவேற்றார்.
தலைவர் பேசுகையில் குறிப்பிட்டதாவது:-
“சமுதாயச் சீர்த்திருத்தத்திற்கு அரும்பாடுபட்ட பாண்டியன்
பெயரால் பகுத்தறிவுப் படிப்பகம் தொடங்கி, அதுவும் கடந்த
ஓராண்டாக நல்ல பல பணிகள் புரிந்திருப்பது பாராட்டுதலுக்குரியது.
ஆண்டுதோறும் பாரதிவிழா கொண்டாடிப்விட்டுப் பின்னர் அவரது
கொள்கையை மறந்து விடுவதுபோல் இல்லாமல் நல்லதொரு பெயரில்
படிப்பகத்தின் மூலம் அருமையான பணிகள் புரிந்து வரும் இளைஞர்களைப்
பாராட்டுவதுடன் இன்னும் அவர்கள் அரிய பணிகள் பல செய்துவர
வேண்டுமென்றும் கூறினார்.
படிப்பகத்தின் முதலாவது ஆண்டு அறிக்கையை திரு.சுப.சிவஞானம்
வாசித்தார்.
பின்னர் பொதுச்செயலாளர் அண்ணாதுரை அவர்கள் பேசியதாவது:-
“பாண்டியன் பகுத்தறிவுப் படிப்பகம் கடந்த ஓராண்டாக அரிய
தொண்டுகள் செய்து இன்று அதனுடைய முதலாவது ஆண்டு விழாவைக்
கொண்டாடுகிறது. இளைஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து இம்மாதிரி
நல்ல பணி செய்து வருவதற்காக நாம் அவர்களைப் பாராட்ட வேண்டும்.
சௌந்திரபாண்டியன் பதிப்பகம்
இந்தப் படிப்பகம், சமுதாய வாழ்வில், அதன் சீர்திருத்தத்திற்காக
அரும்பெரும் பணியாற்றிய சௌந்திர பாண்டியன் பெயரில் ஏற்பட்டிருக்கிறது.
அவரது பெயரால் ஏற்பட்ட இந்தப் படிப்பகம், அவரது சிறந்த பண்புகளைப்
பரப்ப வேண்டும். அடுத்த ஆண்டு விழாக் கொண்டாடும் காலத்திற்குள்
இன்னும் நல்ல பல பணிகளை, குறிப்பாக ஆக்கவேலைகளை அவர்கள்
செய்து வர வேண்டும். இன்னும் ஏராளமான தோழர்கள் இதில் ஈடுபட்டு
நல்ல பல செயல்களைச் செய்வதுடன் அதன் மூலம் தங்கள் கழகத்திற்கும்,
சமுதாயத்திற்கும் நல்லபெயர் தேடித்தர வேண்டும். நாட்டில்
இம்மாதிரிப் படிப்பகங்கள் பல தோன்றவேண்டும். இவைகளினால்
நாம் ஏராளமான ஆக்க வேலைகளைச் செய்ய முடியும்.
இன்று நம் நாட்டில் கல்வியறிவுள்ளோர் தொகை மிகவும் குறைவு.
நூற்றுக்குப் பதின்மூன்று பேருக்கு மேல் கல்வி கற்றவர்கள்
கிடையாது. இது காங்கிரஸ் அரசாங்கமே மறுக்க முடியாத உண்மை.
புராணங்கள் சொல்லலாம்; ஏடுகள் படிக்கலாம்; ஆண்டவன் கதா
காலட்சேபங்கள் நடத்தலாம்; ஆனாலும், நம் நாட்டில் கல்வியறிவற்றவர்கள்
தொகையை இதன் மூலம் மறைத்துவிட முடியுமா?
பொது அறிவு அதிகம்
ஆனால் நாட்டில் கல்வியறிவு இல்லாவிட்டாலும் பொதுவாக அறிவு
இல்லாவிட்டாலும் பொது அறிவு அதிகம் என்கிறார்கள். இது எவ்வாறு
ஏற்பட்டது? இன்று நம் நாட்டில் பல அரசியல் கட்சிகள் மக்களைத்
தட்டிக்கொடுத்துப் புகழ்ந்து பேசி, அவர்கள் ஆதரவைத் தேடுகின்றன.
அதன் மூலம் ஒட்டு பெறுகின்றன. ஆனால் திராவிட முன்னேற்றக்
கழகமோ, நாட்டில் மக்களிடம் அவர்கள் மூடநம்பிக்கையைப் போக்கப்
பாடுபடுகிறது. அதனால் எங்களுக்கு ஆதரவு அதிகமில்லாதிருந்தது.
இன்று மக்கள் சமுதாயச்சீர்திருத்தம் பற்றிய அவசியத்தை உணர்ந்து
விட்டார்கள். அதனால், மூடநம்பிக்கைகளை வெறுக்கவும் செய்கிறார்கள்.
இவ்வாறு எங்கள் கொள்கைகள் இன்று மக்களிடையே தவிர்க்க முடியாத
ஒன்றாகிவிட்டது. அவ்வளவு தூரம் வளர்ந்துவிட்டது.
தற்குறி நிலையைப் போக்க வேண்டும்
உதாரணம் சொல்ல வேண்டுமானால், வழக்கமாக விபூதியணியும் வைதீகர்
ஒருவர் விபூதியணியாமல் வெளியில் சென்றால் நீர் என்ன திராவிட
முன்னேற்றக்கழகத்தில் சேர்ந்து விட்டீரோ? என்று கேட்கும்
நிலை ஏற்பட்டுவிட்டது. மடாதிபதிகள் முதல் காவி கட்டிய பண்டாரம்
வரை சீர்திருத்தவாதிகள் என்று கூறும் காலமாகிவிட்டது. கல்விக்கே
கடவுள் உள்ள நம் நாட்டில் பக்தர்கள் கல்விக் கடவுளான பார்வதியை
‘வெள்ளைக்கலையுடுத்துபவள்’ என்று புகழ் வதைபோல மக்களும்
வெள்ளையாகவே இருந்து வருகிறார்கள்.
இந்த நிலை மாறவேண்டும். இளைஞர்கள், நாட்டில் கல்வியறிவற்றவர்களைக்
கல்வி கற்கும்படிச் செய்ய வேண்டும். தொழில் காரணமாகப் படிப்பை
விட்டவர்களுக்கு நல்ல கருத்துகளைச்சொல்ல வேண்டும். தற்குறி
நிலையைப் போக்க வேண்டும். இன்று நாட்டில் மக்களிடையே உலவிவரும்
தவறான கருத்தைப் போக்க இளைஞர்கள் முன்வரவேண்டும்.
விநாயகரின் உருவம் எப்படி இருக்கும் என்று கேட்டால் எல்லோரும்
சொல்லி விடுவார்கள். ஆனால், ஆப்பிரிக்கக் கண்டம் எப்படியிருக்கும்
என்று கேட்டால் தெரியாது. அதற்கு, இம்மாதிரிப் படிப்பங்களில்
ஓய்வு நேரத்தில் உலகத்தை-உலகத்தின் உண்மையை அதன் வரலாற்றை,
அங்கு வாழ்ந்த உத்தமர்களை, உயர் வாழ்வு கொடுத்த உண்மை விஞ்ஞானிகளை,
புலவர்களை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அறிவுப் பிரச்சாரம் செய்ய வேண்டும்
இங்கு கம்பனையும் திருஞானசம்பந்தரையும், காரைக்கால் அம்மையாரையும்,
சில காலத்திற்கு நிறுத்தி வைத்து, நாம் வெளிநாட்டு வரலாற்றை
அறிந்து கொண்டால் தான் இன்னும் 10 ஆண்டுகளிலாவது நம்நாடு
முன்னேற முடியும்.
இதற்கான அறிவுப் பிரசாரங்களை இளைஞர்கள் இம்மாதிரி படிப்பகத்தின்
மூலம் செய்து வரவேண்டும்.
அநீதி அக்கிரமம் நடந்தாலும் இளைஞர்கள் அவைகளை எதிர்த்துப்
போராடவேண்டும். இது விஷயத்தில் கட்சி மனப்பான்மையின்றி
எல்லோரும் செயல்பட வேண்டும்.
பாண்டியன் பகுத்தறிவுப் படிப்பகம், மக்களிடையே இன்னும் அதிகத்
தொடர்பு கொண்டு, நல்ல நிலைமைகளை அவர்களுக்கு எடு“த்துச்சொல்லி
அறிவுத் தொண்டாற்றி வரவேண்டும்.
(நம்நாடு - 6.8.54)
|