அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


சென்னை கழகத் தோழர்களுக்கு அண்ணா அறிவுரை!

கடந்த 4.2.62 அன்று சென்னை லாயிட்ஸ் ரோடு எம்.ஜி.ஆர். அரங்கில் நடைபெற்ற ஆயிரம் விளக்குத் தொகுதி தேர்தல் நிதிச் சிறப்புக் கூட்டத்தில் அண்ணா அவர்கள்
பேசுகையில் குறிப்பிட்டதாவது

தம்பி மதியழகனை ஆதரித்து, ஆயிரம் விளக்குத் தொகுதி தோழர்கள் தேர்தல் செலவுக்கென நிதி திரட்டித் தந்ததற்காக என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு முன்னாலே பேசிய அப்துல் சமது அவர்களும், மனோகரனும், நல்ல பல கருத்துக்களை எடுத்துச் சொன்னார்கள். மதியழகன் பேசுகையில் தன்னைத் தாக்கவந்த கயவனின் வெறிச் செயலை இதய வேதனையோடு வெளியிட்டார்.

இங்கு நீங்கள் கட்டணம் செலுத்திவிட்டு இவ்வளவு பேரும் வந்து அமர்ந்திருக்கிறீர்கள். எதற்காக நீங்களெல்லாம் வந்திருக்கிறீர்கள்? என்ன புதிய கருத்தை நாங்கள் இங்குச் சொல்லப் போகிறோம்? அல்லது எந்தப் புதிய பேச்சாளர் இங்கு வந்திருக்கிறார்? நாள்தோறும் பேசிவரும் பேச்சைத்தான், நாள்தோறும் பேசிவருபவர்கள்தான், இங்கேயும் பேசுவார்கள் என்பது உங்களுக்கும் தெரியும். பின் ஏன் நீங்கள் கூடியிருக்கிறீர்கள் என்றால், தேர்தலுக்குப் பணம் கொடுப்பதற்காகத்தான். இதையெல்லாம் காணும் காங்கிரசுக்காரர் களுக்கு நம்மீது கோபம். கத்தியைக் காட்டி மிரட்டலாமா – கல் வீசிக் கலைக்கலாமா என்று அவர்களுக்குத் தோன்றுகிறது.

கத்தி ஏந்திய வெறியால் ஆபத்து வராது!

நான் இந்த நேரத்தில் உங்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். வெறியுணர்ச்சியடைந்த ஒருவன் கத்தியைத் தூக்கினால் அவனாலே குத்த முடியாது. கையிலே வலிமை இருந்தால்தான் குத்தமுடியுமே! கத்தியின் எந்தப் பக்கத்தைக் கையிலே பிடிப்பது – எந்தப் பக்கத்தைக் கையிலே பிடித்தால் தன் கையைத் தன் கத்தி அறுக்கும் – எதிரியின் மீதுஅது படாது! எனவே, வெறியுணர்ச்சியுள்ள அப்படிபட்டவர்களால் ஆபத்து ஒன்றும் விளையாது. வெறிகொண்டவர்களை ஏவி ஆபத்து விளைவிக்கலாம் என்று காங்கிரசார் கருதினால் அதிலும் அவர்கள் ஏமாற்றமடைவார்கள்.

‘தூக்குமேடைக்கு வா‘ என்று எங்களைப் பார்த்து அழையுங்கள், நாங்கள் வரத் தயங்கினால் எங்கள் மீது காறித்துப்புங்கள்! எங்களுடைய நீண்ட பயணத்தில் இப்படிப்பட்ட நிகழ்ச்சி ஒரு மைல் தான்! இன்னும் நெடுந்தொலைவுக்கு அப்பால் இருக்கிறது எங்கள் இலட்சியம்!

கண்ணீரைச் சிந்திக் கடும்வழி நடப்போம்!

எங்கள் நெடிய பயணத்தில் – வழியில் காட்டு மிருகங்கள் காணப்படலாம், கட்டுவிரியன்கள் இருக்கலாம், கடுவன்கள் இருக்கலாம், எங்களில் ஒருவர் கத்திக்குத்துக்குள்ளாகிப் பிணமாக விழுந்தால் கூட, வீழ்ந்த பணித்தை அடக்கம் செய்யக்கூட நேரமிருக்கிாது, செத்தவருக்கு இரண்டு சொட்டுக் கண்ணீரைச் சிந்தி விட்டு, எங்கள் பயணத்தைத் தொடர்ந்து நடத்துவோம் என்பதைக் காங்கிரசுக்காரர்களுக்குச் சொல்லிக் கொள்கிறோம்.

வீண் பீதியைக் கிளப்பிவிடுவதற்காக அங்குமிங்கும் சில காரியங்களைக் காங்கிரசுக்காரர்கள் செய்கிறார்கள். வேலூரில் நம்முடைய தோழர் புரட்சிபாபு என்பவரை நள்ளிரவில் கடத்திச் சென்றிருக்கிறார்கள், அதைப் பற்றி கண்டித்துப் பேசிய நமது தோழர்களையெல்லாம் போலீசார் கைது செய்து வழக்குத் தொடர்ந்திருப்பதாகக் கூடக் கேள்விப்பட்டேன்.

திறமையானவர்கள் சென்னைத் தோழர்கள்

இதையெல்லாம் கண்டு அஞ்சிவிடாமல், தேர்தல் வேலைகளைத் திறமையாகச் செய்யுமாறு நமது கழகத் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

நம்முடைய தோழர்கள், வாக்குச் சேகரிப்பில் நல்ல திறமையோடு ஈடூபட்டால் தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றி நிச்சயம் என்பதை இப்போதே எழுதி வைத்துக் கொள்ளலாம்.

வாக்குச் சேகரிக்கும் காரியத்தில் நாம் எப்படி எப்படி நடந்த கொள்ள வேண்டும் என்பதை நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை, தேர்தலில் செம்மையாகப் பயிற்சி பெற்றவர்கள் சென்னைத் தி.மு.க. தோழர்கள் என்பதைத் சென்ற மாநகராட்சியின் தேர்தலில் நீங்கள் நிரூபித்துக் காட்டியிருக்கிறீர்கள்.

வாக்காளரைச் சந்தியுங்கள்!

பிரச்சாரக் கூட்டங்கள் தேவைதான், அத்துடன், வாக்காளரைச் சந்திக்கும் பணிகளையும் சற்றுச் சுறுசுறுப்பாக நடத்த வேண்டுமென்று உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். கூட்டத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நாம் சொல்வதைக் காங்கிரசுக் கூட்டத்தில் எவரேனும் மறுத்துப் பேசினால் – அந்தக் கூட்டத்தில் மக்கள் இருந்தார்கள் என்றால் – அதற்காக நாம் மறுப்புக்கூட்டம் போட வேண்டியது தான். அப்படியில்லையென்றால் நமக்குக் கூட்டமே தேவையில்லை.

மேடையில் நாங்கள் சொல்லியதையெல்லாம் நீங்கள் எங்கள் தூதுவராகச் சென்று வாக்காளிடம் சொல்ல வேண்டும். சொல்லி ஓட்டுச் சேகரிக்க வேண்டும்.

எதற்காக அஞ்சுவது?

உங்கள் அக்காள் – தங்கை அண்ணன் – தம்பிகளிடம் காங்கரிசு ஆட்சியின் கேடுபாடுகளை எடுத்துச் சொல்லுங்கள்!

தொழிலாளரிடம் சென்று – அவர்கள் மாடாக உழைத்தும் ஓடாகத் தேய்வதற்கான காரணங்களைக் கூறுங்கள்!

விளைச்சல் அதிகமாகியிருப்பதாகக் கூறியும் விலைவாசி இறங்காத விசித்திர நிலையை – உழவர்களுக்கு உணர்த்துங்கள்!

நடைபாதையில் படுத்துறங்கும் ஏழை மக்களிடம் சென்று – நீங்களும் இந்த நாட்டுக்குச் சொந்தக்காரர்கள்தான் – என்று கூறுங்கள்.

நாம் ஆட்சியாளரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் ஏராளமாக இருக்கின்றன. மக்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு நாம் கூற வேண்டிய பதில்கள் நிரம்ப இருக்கின்றன. நாம் எதற்காக அஞ்ச வேண்டும்?

ஆறுபேர் கொண்ட குழு அமையுங்கள்!

எனவே, தெருவுக்குத் தெரு ஆறுபேர் கொண்ட குழு ஒன்றை அமைத்து, அவர்களிலே ஒருவரை விளம்பர அதிகாரியாக நியமித்து விளம்பரப் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்து – இப்படி ஒவ்வொரு பொறுப்பையும் ஒவ்வொருவரிடம் ஒப்படைத்துப் பணியாற்ற வேண்டும்.

காங்கிரசு ஆட்சியினி் ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றி, அதன் ஊழல்கள் பற்றி நாம் இன்னமும் மேடையில் பேசிக் கொண்டிருக்க வேண்டியதில்லை, அது அம்பலமாகி நெடுநாளாகிவிட்டது!

கூட்டம் நடத்துவது சாப்பாட்டுக்கு நெய் போன்றதாகும், சோறு குறைந்து நெய்மிகுந்தால் மந்தம் ஏற்படும். அதைப் போலத்தான் சென்னை நகரில் கூட்டங்கள் மிகுந்திருப்பதால் தேர்தல் வேலையில் மந்தம் ஏற்பட்டிருப்பதாக நான் அறிகிறேன்.

வெளியூர்களை விட இங்கு (சென்னையில்) வாக்காளர்களைச் சந்திப்பது என்பது எளிதானது – சுவையானது கூட! இங்கே செலவு கூடச் சற்றுக் குறைவாகச் செய்யலாம். கிராமங்களில் உள்ளவர்களைவிட இங்கு விவரமறிந்தவர்கள் இருக்கிறார்கள். விஷயத்தைச் சொன்னவுடன் புரிந்து கொள்ளும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. கிராமங்களில் அப்படியில்லை, அடிப்படையி்லிருந்து எல்லா விவரங்களையும் கூறவேண்டும்.

எனவே, சென்னையைப் பொறுத்தவரை, எல்லாம் பொன்னான தொகுதிகள்தான்.

பொன்னை உருக்கி நகை செய்க!

பொன்னை உருக்கி நகை செய்யத் தவறினால் இங்குள்ளவர்கட்கு வேலைத் திறமை இல்லை என்று பொருளே தவிர தங்கத்தில் எவ்விதக்குறையும் சொல்ல முடியாது.

(நம்நாடு - 8-2-62)