அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


சென்னை நகருக்குக் குடிநீர் வசதி

சட்டமன்றத்தில் அண்ணா, அன்பழகன் கேள்விகள்

சென்னை, மார்ச் 17 நிலவள ஆராயச்சித்துறையினர் சென்னை அருகில் மீஞ்சூரில் நிலத்தைக் குடைந்து ஆராய்ச்சி செய்ததில் அங்குத் தண்ணீர் கிடைக்கம் என்று தெரிவித்துள்ளனர். சென்னை நகருக்குக் குடிநீர் வழங்குவது நகர சபையின் பொறுப்பு ஆகும். நகரக் குடிநீர் வசதிக்கு, நிலத்துக்கு அடியிலுள்ள தண்ணீரை மட்டும் நம்பிப் பயனில்லை என்ற நகரசபை ஆணையாளர் தெரிவித்திருக்கிறார் என்ற நலத்துறை அமைச்சர் மாணிக்கவேலர் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில் கூறினார்.

க. அன்பழகன் – இந்நிலத்திற்கு அடியில் உள்ள தண்ணீர் குறைவான அளவு கிடைக்கிற காரணத்தால் அது சென்னைக்கு மிகுதியாகப் பயன்படாது என்ற கருதியிருந்தாலும் நகரத்தில் 71.2 இலட்சம் மக்களுக்குத் தண்ணீர் வசதி செய்வதற்காக முன்பு செய்த ஏற்பாடுகளைக் கொண்டு இப்போது 22 இலட்சம் மக்களுக்குத் தண்ணீர் வழங்கமுடியாது இருப்பதனால் சென்னை மாநகராட்சி மன்றம் வேறு பெரிய மாற்றுத் திட்டத்திற்கு விண்ணப்பத்துக் கொள்கிற காலத்தில் அதற்குச் சர்க்கார் உடனடியாக அனுமதியளித்திருக்கிறார்களா?

அமைச்சர் – பெரிய திட்டம் என்றால் வடக்கே உள்ள நதியிலிருந்து தண்ணீர் கெண்டு வரக்கூடிய திட்டமாக இருந்தால்தான் ஏராமாகக் கிடைக்கம். அதோடு இஸ்ரேல் நாட்டில் கடல் தண்ணீரைக் கூடச் சுத்தம் செய்து குடி தண்ணீராக உபயோகிக்க முடியும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அதையும் கொஞ்சம் பொறுத்திருந்து பார்த்தால் சௌகரியமாகப் போய்விடும்.

அண்ணா – சேத்தியா தோப்புக்கு அருகில் இருக்கிற வீராணத்து ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டுவரும்படியான ஒரு திட்டத்தை சென்னைச் சர்க்காருக்கு அனுப்பியிருக்கிறதா?

அமைச்சர் – அதுபற்றி என்னிடம் தகவல் இல்லை.
க. அன்பழகன் – சென்னை நகரத்துக்கு வழங்கப்படுகிற தண்ணீர் 10 மில்லியன் காலன் மெக்கானிக்குள் பில்டர் மூலம் வடிகட்டப்பட்டு வருகிறது. இதை 30 மில்லியன் காலன் அளவிற்கு வடிகட்டி வழங்குவதற்கப் புதிய இயந்திரம் அமைக்க அரசாங்கத்திடம் அனுமதி கேட்கப்பட்டதா? அதற்கு அரசாங்கம் ஆதரவு அளிக்கிறதா?

அமைச்சர் – இதுபற்றி தனிக் கேள்வி போடலாம்.

(நம்நாடு - 21.3.60)