அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


சென்னையை மேலும் எழில் நகராக்க முடியும்

“சென்னை நகரில் கூவம் ஆறு ஓடுகிறது. லண்டன் நகரில் தேம்ஸ் ஆறு ஓடுகிறது. அந்தத் தேம்ஸ் ஆறு இங்கே ஓடினால் சில ஆண்டுகளில் கூவம் ஆறாகிவிடும். கூவம் ஆறு அங்கே ஓடினால் சில ஆண்டுகளில் தேம்ஸ் நதி ஆகிவிடும். ஆகவே, நாற்றம் அடிக்கும் கூவம் ஆற்றை தேம்ஸ் ஆறுபோல் ஆக்கி, அந்த ஆற்றங்கரையில் பாதைகள், பூங்காக்கள், சிறுசிறு கடைகள் ஆகியவைகளை அமைத்து உல்லாசப் படகுகள் ஊர்ந்து செல்லத்தக்க ஆறு எனும்படி ஆக்கத்தக்க நல்லவர்கள் பலர் மாநகராட்சியில் இருக்கிறார்கள். எனவே, அரசாங்கம், போதிய பணம் உதவி. அந்தத்திட்டத்தைத் திறமை மிகுந்த மாநகராட்சியிடம் தந்தால் மிகப் பொறுப்போடு ந‘றைவேற்றுவார்கள்.”

இல்லறமே நல்லறம்
“இல்லறத்திலே நான் மிகுந்த நம்பிக்கையுள்ளவன்; இல்லத்தில்தான் அன்புள்ளம். பொறுமை, விட்டுக்கொடுப்பது, தியாகம், உபசரிப்பது போன்ற உயர் பண்புகள் கிடைக்கும். இதையேதான் வள்ளுவன் ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன், ‘இல்லறமே நல்லறம்’ என்று எழுதி வைத்தான்.”
“அந்த இல்லறம் துவங்கும் எழில்மாடங்களை இந்தத் தமிழகத்தில் கட்டுவது மிகப் பொருத்தமாகும். சிறந்ததோர் பணியுமாகும். அதை மாநகராட்சி செய்து முடிப்பது மிகமிகப் பொருத்தமாகும்” என்று அண்ணா அவர்கள், 25.11.61 இல் சென்னை 88 ஆவது வட்டம் புளியந்தோப்பு பெசண்ட் நகரில் அமைக்கப்படவிருக்கும் மாநராட்சி மன்றச் சமூகநல நிலையத்திற்கு (திருமணக்கூடம்) கால்கோள் விழாவன்று கையில் ஆட்சியினருக்கும் மாநகராட்சி உறுப்பினர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

அண்ணா அவர்கள் தம் உரையில் குறிப்பிட்டதாவது
“நிதிக்குறைவு இருந்தாலும் நல்ல பல திட்டங்களை, அதிகாரிகளின் அரவணைப்புடனும் உறுப்பினர்களின் ஒத்துழைப்புடனும் மற்ற மாநிலங்களும் பின்பற்றும் வகையிலும், ‘மாநகராட்சி என்றால் இப்படித்தான் நடத்தப்படவேண்டும்’ என்பதற்கு இலக்கணமாகவும் சென்னை மாநகராட்சி இன்றைய தினம் செயல்படுத்தித் திகழ்ந்து வருகிறது.

திருமண மண்டபங்கள் ஏன்?
ஏற்கெனவே வேறொரு திருமண மண்டபம் மாநகராட்சியால் கட்டப்பட்டுத் திறக்கப்பட்டிருக்கிறது. ஏழை எளியவர்களும் பாட்டாளி மக்களும் தொழிலாளத்தோழர்களும், நடுத்தரக் குடும்பங்களும் வசிக்கின்ற இந்த வட்டாரத்தில், மாநகராட்சி உறுபபினர் நல்லதம்பி அவர்கள் மெத்த ஆர்வத்தோடு பணியாற்றி, ஒரு திருமண மண்டபம் கட்ட ஏற்பாடு செய்திருக்கிறார்; அவருடைய ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன்.

மேயர் அவர்கள் திருமண மண்டபத்தைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், ‘திருமணமண்டபங்களைக் கட்டுவதில் முனைந்து நின்று அதில் வெற்றி பெற்றவர் இப்பகுதி. உறுப்பினர்’ என்று குறிப்பிட்டார்கள். அந்த நேரத்தில் எனக்கு அருகே அமர்ந்திருந்த நல்லதம்பியைப் பார்த்து, ‘உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?’ என்று கேட்டேன். அவர், ‘இன“னும் இல்லை அண்ணா’ என்றார். எனவே, இந்தத் திருமணமண்டபம் கட்டி முடிக்கப்பட்டு அதில் நடக்கும் முதல் திருமணம் நல்லதம்பியின் திருமணமாக இருக்கவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.

திருமண மண்டபங்களைக் கட்டுவதில் நமது தோழர்களுக்கு ஆர்வமும் அக்கறையும் ஏற்படுவதற்குக் காரணம் என்ன? திருமணமாகாதவரால் ஆளப்படும் மாநிலத்தில், திருமண மண்டபங்கள் கட்டுவது ஏன்? என்றெல்லாம் நான் எண்ணியதுண்டு.

நாட்டை ஆண்டவர்களின் கடமை என்ன?
நமது மாநகராட்சியில் திருமணமாகாதவர்களும், திருமணமாகி அதன் சுவை குன்றாதவர்களும், உறுப்பினர்களாக இருக்கிறார்கள். திருமணமானவர்கள், தங்கள் திருமணக்காலத்தில் இடம் கிடைக்காமல் பட்ட அல்லலை திருமணம் செய்வதிலுள்ள கஷ்டநஷ்டங்களை உணர்ந்ததால் இம்மாதிரியான திருமண மண்டபங்களை எழுப்ப முயலுகிறார்கள்.

இம்மாதிரி திருமண மண்டபங்கள் கட்டப்படுவதால், நமது மாநகராட்சிக்கு, ஏற்றம் ஏற்படுகிறது.

மாநகராட்சி வரி வசூலிக்கும் நிறுவனமாக மட்டும் இல்லாமல், வருகின்ற வருவாயைக் கொண்டு செட்டாக சீராகக் காரியங்களைச் செய்து வருகிறது. எனவே, நாட்டை ஆளுபவர்கள் குறைந்த வருமானத்தை வைத்துக் கொண்டே மாநகராட்சி இவ்வளவு செட்டாக சீராகச் செலவழித்து நல்ல பல காரியங்களை ஆற்றி வருகிறதே என்ற அளவுடன், ‘பஞ்ச நிலையிலேயே அது இருக்கட்டும்’ என்ற நிலையுடன் நின்றுவிடாமல், பணஉதவியும் மாநகராட்சிக்குத் தரவேண்டும்.

பொறுப்பை உணர்ந்து செயலாற்ற வேண்டும்
மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள், விளையாட்டு அரங்குகள், பூங்காக்கள் ஆகியவைகள் ஏற்படுகின்ற நேரத்தில், அதை ஒரு விழாவைப்போல் மாநகராட்சி நடத்துவதும், அதற்கு வாலிபவர்களும், பெரியவர்களும், தாய்மார்களும் வருவதும் ஊர்மக்களின் அன்பையும் ஆதரவையும் எடுத்துக்காட்டுவதாகும்.

பொதுமக்கள், மாநகராட்சியின் நடவடிக்கைகளைக் கூர்மையாகக் கவனிப்பதால் காரியங்களைச் சரியாகச் செய்தால் பாராட்டுவார்கள். தவறாகச் செய்தால் கண்டிப்பார்கள். எனவே, பொறுப்போடு நடந்து கொள்வது மாநகராட்சியின் கடமையாகும். பொறுப்புணர்ச்சியும், செயலாற்றும் பக்குவமும் கிடைத்துவிட்டால் அதைவிட நமக்கு மகிழ்ச்சி வேறில்லை.

நம் நாட்டில் கால்கோள் விழாக்கள் அதிகம்; கட்டிடத் திறப்பு விழாக்கள் குறைவு. இந்த நிலை மாறி, இத்திருமண மண்டபத்தை பொறியியல் துறையினரின் ஒத்துழைப்புடனும், அலுவலர்களின் அரவணைப்புடனும், மற்றவர்களின் உறுதுணையுடனும் விரைவில் கட்டி முடித்துத் தரவேண்டும் என்று விரும்பி வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

எடுத்துக்காட்டாக அமையட்டும்
சென்னையில் பூங்காக்கள் குறைந்து கூட்டங்கள் மிகுந்து வருவதைக் காண்கிறோம். பெங்களூரைப்போல் பூந்தோட்ட நகரமாகச் சென்னை நகரம் ஆக்கப்பட்ட வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும் வகையில் எல்லோரும் பணிபுரிய வேண்டும். சென்னை நகருக்குள் இருக்கும் பல தொழிற்சாலைகள், சென்னையை அடுத்துள்ள பகுதிகளுக்கு மாற்றப்படவேண்டும். நகரின் நடுவே பூங்காக்கள் அமைவதும், விளையாட்டு அரங்குகள் தோன்றுவதும் மாநகராட்சியின் மகத்தான பணிக்கு எடுத்துக்காட்டு மட்டுமல்ல சென்னையின் எழிலுக்கும் மக்களின் சுகாதாரத்துக்கும் எடுத்துக்காட்டு!

இந்தியத் துணைக்கண்டத்திலேயே சென்னைக்கு இருக்கும் வாழ்க்கை வசதிகள் மற்ற மாநிலங்ளுக்குக் கிடையாது. சென்னையைப் போல் பெங்களூரில் வாழ இரண்டு மடங்கு செலவழிக்க வேண்டும். பம்பாயில் வாழநான்கு மடங்கு செலவழிக்க வேண்டும். கல்கத்தாவில் ஆறு மடங்கு செலவழித்தாலும் வாழ இயலாது.

ஆனால், நம் சிங்காரச் சென்னையில் எழிலும் இருக்கிறது எளிமையும் இருக்கிறது.

இதோ ஓர் அறிவுரை
தொடர்ந்து பணியாற்றும் அலுவலர்களுக்கு உறுப்பினர்களிடம் சிலவேளை மனக்கசப்பு ஏற்படக்கூடும். அதையெல்லாம் கருதாமல் பொதுப்பணி என்ற முறையில் அவர்களும் பாடுபட்டு வருகிறார்கள். இந்த மாநகராட்சியில் ஆணையாளர்களாக இருந்தவர்கள் இன்று டில்லிப் பேரரசில் பெரிய பெரிய பதவிகளை வகிக்கிறார்கள். அதைப்போல இவர்களும் வகிக்கவேண்டும் என்று நான் மெத்தவும் ஆசைப்படுகிறேன்.

சென்னை மாநகராட்சிக்கு ஆணையாளராக வருபவர்கள் எந்தக்கட்சி சார்புடையவர்களானாலும், மாநகராட்சியில் பல கட்சி உறுப்பினர்களைச் சந்தித்து அவர்களுடனும் கலந்து பேசுவதால், ஒரு கட்சி சார்பு என்ற உணர்ச்சி அற்றுப்போய், ‘எல்லாக் கட்சியும் ஒன்று’ என்ற தழும்பு ஏற்பட்டுவிடுவதால் தலைநகரமான டில்லிக்குச் சென்றாலும், சண்டைக்களமான பெர்லினுக்குச் சென்றாலும் அவர்களால் சமாளித்துக் கொள்ள முடியும்.

ஆற்றலின் எதிரொலி!
மாநகராட்சியினர அந்தக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட தண்ணீர் வழங்கும் திட்டத்தை வைத்துக்கொண்டே எதிர் பார்த்ததற்கு மேல் பல மடங்கு மக்கள்தொகை பெருகியுள்ள இந்தக் காலத்திலும் ஒரு முழுங்கு தண்ணீரையும், மூன்று முழுங்கு நல்லெண்ணத்தையும் கொடுத்து எப்படியோ ஒருவாறு தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்த்து வருகிறார்கள்.

அந்தக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சாக்கடைத் திட்டத்தை வைத்துக்கொண்டே எதிர்பார்த்ததற்கு மேல் பல இலட்சம் பெருகியுள்ள இந்தக் காலத்திலும் ஒருவாறு சுகாதாரத்தைக் காப்பாற்றி வருகிறார்கள்.

ஏழை மக்கள் தங்கள் இல்லத்தில், இருப்பதை வைத்துக்கொண்டு வாழ்வதுபோல் இவ்வளவு பஞ்ச நிலைமையிலும் கூட மாநகராட்சி தன்னாலானதைச் செய்துகொண்டே வருகிறது.

ஏன் செய்ய இயலாது?
உலகத்திலேயே இரண்டாவது சிறந்த கடற்கரை இங்கு தான் இருக்கிறது. இதனுடன் ஒப்புவமை கூறக்கூடிய முதல் கடற்கரை தென் அமெரிக்காவில் ‘ரியோடி ஜெனிரோ’வில் இருக்கிறது என்று சொல்கிறார்கள். நான் பம்பாய்க்குச் சென்றிருந்தேன். கடல் அரிப்பால் அழகற்றுக் கிடக்கும் நம்முடைய இராயபுரம் கட்கரையே அதனை விடப் பெரியது எனலாம். அந்தக் கடற்கரையிலேயே சிறுசிறு கடைகள், குளிப்பதற்கு அறைகள் அனைத்தும் இருக்கின்றன. நாம் சிலபல இலட்சங்கள் செலவு செய்தால் நம் கடற்கரையை அயல்நாட்டு உல்லாசப் பயணிகள் இங்கேயே தங்கிப் போகின்ற அளவுக்கு நல்ல நவீன வசதிகளைச் செய்து தந்தால் கடற்கரைக்கு அழகும் அதிகமாகும். அவர்களும் இங்கேயே தங்குவர் மாநகராட்சியின் வருமானமும் உயரும்.
இந்த நிலையை உருவாக்காதீர்!

திருமண மண்டபம் என்றால் பெண்ணும் பெண்வீட்டாரும் ஆணும் ஆண் வீட்டாரும், நண்பர்களும், உறவினர்களும் உலாவுகின்ற இடமாக இருக்கவேண்டும்.

ஆனால், விடியற்காலைத் தூக்க மயக்கத்தில் பெண்ணுக்குப் பதிலாகத் தோழிப் பெண்ணையும், தோழிப்பெண்ணுக்குப் பதிலாக மணப்பெண்ணையும், மாப்பிள்ளைக்குப் பதில் மைத்துனனையும், புரோகிதனுக்குப் பதில் சமையற்காரனையும் எழுப்பியவர்களை நான் சத்திரத்தில் பார்த்திருக்கிறேன்.

கால்கோள் விழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்து என்னை அழைத்த நகரமன்ற உறுப்பினர்களுக்கும், மேயர், துணை மேயர் ஆகியோருக்கும் மீண்டும் நன்றி கூறிக்கொள்கிறேன்.

(நம்நாடு - 28.11.61)