அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


காங்கிரசார் துருப்புச் சீட்டு தேர்தலில் செல்லாது

வாலாசாபாத்திற்கு அடுத்துள்ள தென்னேரி தி.மு.கழகத் துவக்க விழா 7.4.61இல் நடைபெற்றபோது விழாவில் கலந்து கொண்ட அண்ணா அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம் இங்குத் தரப்படுகிறது.

‘நான் பல தடவை இந்த ஊர் பக்கமாகச் செல்வதுண்டு. ஆனால் இன்றுதான் இங்கு வந்திருக்கிறேன். இளம் பிராயத்தில் தெப்பம் பார்க்க வந்திருக்கிறேன். !செங்கற்பட்டு மாவட்டத்திலுள்ள ஏரிகளில் ஒன்று தென்னேரி ஏரி. ஏரியில் ஆண்டுதோறும் காஞ்சி வரதர் தெப்பம் நடைபெறுகிறது). இந்த ஊரில் என்னைக் கொண்டு கழகம் துவக்குவது என்று ஓராண்டுக் காலத்திற்கு மேலாகவே தோழர்கள் கேட்டு வந்தார்கள். நானும் காலத்தைத் தள்ளி வைத்துக் கொண்டே இருந்தேன். தோழர்கள் மெத்த ஆர்வம் காட்டி என்னை இங்கு அழைத்திருக்கிறார்கள். அவர்களை நான் பாராட்டுவதோடு என் நன்றியறிதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாற்றத்தால் தொந்தரவு வராது

நான் காலம் தாழ்த்தியதற்குக் காரணம் தோழர்கள் மேலும் மேலும் ஆர்வம் காட்டுகிறார்களா என்பதற்காகவே தான். ஏனென்றால் மற்ற மாவட்டங்களை விடச் செங்கற்பட்டு மாவட்டம் அரசியல் விழிப்புணர்ச்சியி் பின் தங்கிய மாவட்டமாகும். அதற்குக் காரணம் செங்கற்பட்டு மாவட்டம், முன்பு பத்து அல்லது பன்னிரெண்ட ஜமீன்தாரிகளைக் கொண்டிருந்தத. ஜமீன்தாரர்கள் தேர்தல் காலத்தில் கிராமங்களில் உள்ள மக்களைப் பார்த்து இன்னாருக்கு வேலை !தேர்தல் வேலை) செய்யவேண்டும். இன்னாருக்கு ஓட்டு அளிக்க வேண்டும் என்று கட்டளையிட்டு விடுவார்கள். கிராமவாகி களும் ‘எதற்கு ஏன்?‘ என்று கேட்க முடியாமல் இருந்து வந்தார்கள். ஆனால் இப்பொழுது நிலைமை மாறி இருக்கிறது. தென்னேரியிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மாற்றம் ஏற்பட்டிருப்பதால் தொந்தரவுகள் வராது.

காங்கிரசுக் கட்சி அல்ல, கவர்ன்மெண்ட் கட்சி

இன்ற காங்கிரசிலே இருப்பவர் தாமரை இலையில் உள்ள தண்ணீர் போல இருக்கிறார்கள். அவர்கள் ‘காங்கிரசுக் கட்சி‘ என்று சொல்வது கிடையாது. ‘கவர்ன்மெண்ட் கட்சி‘ என்று சொல்கிறார்கள்.

அதேபோல், அரசியல் தன்னுடைய சொந்தத்திற்கக் கிடைத்தது என்று கருதுபவர் பக்தவச்சலம்! மாணிக்க வேலருக்கு ‘அரசியல் மார்க்கெட்டில்‘ கிராக்கி இருக்கிறது. ஆனால் கழகம் அப்படி அல்ல.

இன்று இங்குக் கழகம் துவக்கப்படுவதால் வாலிபர்கள் உங்களுக்கு எவரும் தொல்லை கொடுக்க மாட்டார்களென எண்ணுகிறேன். அவர்கள் அடக்க உணர்ச்சியை் பெரிதும் கடைப்பிடிக்க வேண்டும். கோபித்துக் கொள்ளாமல் பொறுமையுடன் கழகத்தைக் கட்டிக் காப்பாற்ற வேண்டும். தற்பொழுதுள்ள சிறிய மண் கட்டிடத்தைக் கல் கட்டிடமாக மாற்ற வேண்டும். புத்தகங்கள், பத்திரிகைகள், வாங்கி எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு விளக்க வேண்டும். இன்று நம்மிடம் நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள். நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி அவர்களின் பெயரால் படிப்பகம் இயங்குவது பற்றி மிக்க மகிழச்சி அடைகிறேன்.

விளங்காததை விளக்குவதே கடமையெனக் கொள்வீர்

நம் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை ஏராளம் அவர்களுக்குப் ‘பொத்தானைத் தட்டினால் விளக்கு எரியும்‘ என்று தெரியும். ஆனால் விளக்கு எப்படி எரிகிறது, எவ்விதம் எரிகிறது என்று தெரியாது. இம் மாதிரியான படிப்பகங்கள் மூலம்தான் அவர்களுக்கு ‘அமெரிக்கர்கள் இந்தியாவுக்கு ஏன் கடன் தருகிறார்கள்? வட்டி என்ன கேட்கிறார்கள்?‘ என்பதை வாலிபர்கள் விளக்க முடியும்.

நண்பர் சி.வி.எம். அண்ணாமலை அவர்கள் குறிப்பிட்டதுபோல், கடவுள் இல்லாத கட்சி அல்ல எங்கள் கட்சி, ஏழைகளிடத்தில்தான் கடவுள் இருக்கிறார் பணக்காரர்களிடத்தில் இல்லை. இன்றைய தினம் சாமான்கள் அகவிலையில் விற்கப்படுகின்றன. கடவுளை மறந்துதான் அவ்விதம் விற்கிறார்கள். அக்கிரமங்களைச் செய்கிறார்கள். நாத்திகத்திற்கு ஓட்டா?‘ என்றார்கள்! ஆனால் நான் இதுவரை இடித்த கோயில்கள் எத்தனை?

துருப்புச் சீட்டைப் பயன்படுத்துவாரா?

பெரியார் இராமசாமி அவர்கள் முன்பு பக்தர்களின் மனம் புண்படும்படி நடுத்தெருவில் பிள்ளையார் உடைப்புப் போராட்டம் நடத்தியவர். அவர் இன்று சொல்கிறார் – ‘காங்கிரசை ஆதரியுங்கள் என்று அவர் சொல்வதை மக்கள் எவ்விதம் ஆதரிக்கலாம்? எப்படி நம்பலாம்?‘ இனி அந்த ‘அரசியல் துருப்புச் சீட்டை‘ உப்யோகிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

போலீஸ் பாதுகாப்புடனா ஓட்டு வாங்கிறோம்

போலீஸ் பாதுகாப்புடன் வெறம் ஓட்டு வாங்குகிற கட்சி அல்ல தி.மு.கழகம். மக்களுடன் எப்பொழுதும் பழகிக் கொண்டிருக்கும் கட்சி எங்கள் கட்சி. நாங்கள் தேர்தலுக்கு நிற்கப்போவது, பதவி மீதுள்ள அற்ப ஆசைக்காக அல்ல.

நம் தரித்திரம் நீங்க வேண்டும். உழைப்புக்கேற்ற ஊதியம் பெற வேண்டும். உயர்ந்த நிலையில் வாழ வேண்டும். அதற்கு அதிகாரம் நம்மிடம் இருக்கவேண்டும் – அதுதான் ‘திராவிட நாடு திராவிடருக்கே‘ என்பதாகும். அதை அடைய நிங்களெல்லாம் பாடுபடுங்கள் என்று கூறி விடைபெறுகிறேன்.

(நம்நாடு - 15.4.61)