“நாட்டு விடுதலைக்காகச் செக்கிழுத்தார்
சிதம்பரனார் என்றால், செக்குக்கா மாலை போடுவோம்? அதைப்போல்
உண்மையான காங்கிரஸை ஆதரிக்கலாமே தவிர, இருக்கிற ‘செக்‘கையா
ஆதரிப்பது? நான் ‘செக்‘ என்று கூறுவது பணத்தைத்தான்!“ என்று
அண்ணா அவர்கள் சென்னை 5 ஆவது வட்டம் வ.உ.சி. மன்றச் சார்பில்
கடந்த டிச.30 இல் நடைபெற்றக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்
குறிப்பிட்டார். அவர் ஆற்றிய உரையின் சுருக்கமாவது.
“வ.உ.சிதம்பரனார் பெயராலே
அமைந்த இந்த மன்றம், கழக வேட்பாளர் வெற்றிபெற ஆதரவு கோரும்
பிரசாரத்தை நடத்துவது உள்ளபடியே வரவேற்கத்தக்கதாகும். இந்த
மன்றச் சார்பில் நான் பேசுவது மிகப் பொருத்தம் என்றே கருதுகிறேன்.
உண்மையான காங்கிரஸ்?
இந்தப் பகுதியிலே உண்மையான
காங்கிரசுக்காரர்கள் பலர் இருக்கிறாாகள். தூய்மையான நாட்டு
விடுதலையை இலட்சியமாகக் கொண்ட அந்தக் காலக் காங்கிரசை ஏற்றுக்
கொண்ட சில உண்மையான காங்கிரசுக்காரர்க் எனக்கு நன்றாக அறிமுகமானவர்கள்கூட
இருக்கிறார்கள். காங்கிரசு கட்சி தூய்மையான கட்சி. எனவே,
அவர்களுக்குத்தான் ஓட்டளிக்க வேண்டும் என்று அந்த உண்மையான
காங்கிரசுக்காரர்கள் தங்கள் ஓட்டுக்களைத் தி.மு.கழகத்திற்குப்
போட்டு, தோழர்கள் மதியழகனையும் மனோகரனையும் ஆதரிக்க வேண்டுமெனக்
கேட்டுக் கொள்கிறேன்.
‘இது என்ன அண்ணா உண்மையான
காங்கிரசுக்காரர்கள் அவர்களிடம் ஆதரவு தாரீர் என்த் துணிந்து
கேட்கிறீர்களே இது எப்படிப் பொருந்தும்?‘ என்று நீங்கள்
ஆச்சரியப்படுவீர்கள்.
உண்மையான காங்கிரசுக்காரர்கள்
காங்கிரஸிடம் வைத்துள்ள மதிப்பு, மாண்பு இப்போதுள்ள காங்கிரசில்
கிடையாது. அடிப்படையில்கூட வித்தியாசம் அநேகம் இருக்கிறது.
அதை உதாரணம் மூலம் எடுத்துக்காட்டினால் விளங்கும் என்று
எண்ணுகிறேன்.
பின்னப்பட்ட பிள்ளையார்!
பிள்ளையார் சதுர்த்தி வரும்பொழுது,
‘நாமும் பிள்ளையார் செய்ய வேண்டும்‘ என்று எல்லா வீட்டிலும்
களிமண் கொண்டு வந்த உருண்டையாகப் பிடித்து வயிறு இப்படியும்,
நீளமாகப் பிடித்து தும்பிக்கை இப்படியும், கொஞ்சம் மண்ணைக்
கிள்ளி கைவைத்தும், கொஞ்சம் மண்ணைக் கிள்ளித் துதிக்கையில்
ஒட்டி தந்தம் என்றும் வைத்துப்பிடித்துப் பார்த்து முடியாமற்
போய் அது வேறு உருவமாக ஆகியும்கூட பிள்ளையார் என வைப்பதைப்போல்,
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்து சரிவர நடத்த முடியாத இன்றைய
நிலையிலும் அதனை ஆட்சியிலே மீண்டும் வைத்திருக்க இயலுமா?
‘ஏதோ பிள்ளையார் என்றிருக்கட்டும்’ என்று எண்ணுவதைப் போன்றதல்லவா
அது, பின்னப்பட்டுவிட்ட பிள்ளையார் வீட்டில் இருக்கக் கூடாதல்லவா?
ஏனெனில் இந்த உருவத்தைப் பார்த்துக் குழந்தைகள் பயப்படுவார்கள்.
தாய்மார்கள் வருத்தப்படுவார்கள். பக்தர்கள் மனம் புண்படும்.
எனவே, அது தூக்கி எறியப்பட வேண்டியதாக இருக்கிறது.
குடிநீர் குடிக்க ‘டீ‘ கடைக்குப்
போய் ‘டீ‘ கேட்டதும் கடைக்காரன், புதிய தேயிலையாய்ப் போட்டு
கொதிநீரை கலந்து டீயாகத் தருகிறான். அதை வாங்கிக் குடித்ததும்,
உண்மையிலேயே ஒரு சுறுசுறுப்பு – விறுவிறுப்பு ஏற்படுகிறது.
பாட நினைப்பவர்களைப் பாடத் தூண்டுகிறது. எழுத நினைப்பவர்களைத்
எழுதத் தூண்டுகிறது. இன்னும் சிலர் தூக்கத்தில் நோக்கம்
உள்ளவர்கள் – அந்த டீயைக் குடித்துத் தூங்கவும் செய்கிறார்கள்.
இது முதல் டீயின் பலன்.
காங்கிரஸ் ஐந்தாவது டீ
மூன்றாவது வந்து டீயைக் குடிப்பவன்
அதில் ருசி இருக்காததைக் காண்பான். அதில் ஒரு முடக்குக்
குடித்து வி்ட்டு ‘இது டீயா‘? என்று இவன் கேட்க, ‘நீ கொடுக்கும்
காசைக் குப்பையிலே போடு‘ என்று அவன் சொல்ல, இப்படி மூன்றாவது
டீயிலேயே சண்டை வந்துவிடும்.
நான்காவது, ஐந்தவாது டீயில்
சுவையே இருக்காது – சக்கைதான் இருக்கும். குப்பையில் கொண்டு
போய்க் கொட்டக் கூடியதாக இருக்குமே ஒழிய குடிப்பதற்கு ஏற்றதாகாது.
அப்படியெல்லாம் கணக்குப் பார்த்தால் இன்றைய காங்கிரசு ஐந்தாவது
டீயைப் போன்றதாகும்.
குப்பைக்குப் போக வேண்டும்!
முதல் கப் டீ காந்தியார் தயாரித்து
அதைப் பருகியதும் மோதிலால் நேருவுக்கு நாட்டு விடுதலை மீது
நாட்டம் வந்தது. வ.உ.சிதம்பரனாருக்குச் செக்கிழுக்கத் தோன்றியது.
திருப்பூர் குமரனுக்குக் கொடிக்காக உயிர்விட உறுதி வந்தது.
இரண்டாவது கப் டீயைக் காங்கிரஸ்
தயாரித்தபோதுத, மயிலை சீனிவாச அய்யங்கார், கோபாலரத்தினம்,
சத்தியமூர்த்தி அருந்திப் பணியாற்றினார்.
மூன்றாவது கப் டீ தயாரித்தபோது,
சில சில நேரங்களில் மட்டும் தியாகம் செய்யக்கூடியவர்களே
உண்டானார்கள்.
நான்காவது கப் டீ தயாரிக்கப்பட்ட
நேரத்தில் கட்சிக் கூட்டங்களுக்குக் கதர்ச் சட்டையும், விருந்து
வைபவத்திற்கு சில்க் சட்டயும் ஆக இரண்டுவிதச் சட்டைகளை வைத்துக்
கொண்டிருப்பவர்கள் காங்கிரசில் நேர்ந்தார்கள்.
ஐந்தாவது கப் டீயாகிய இன்றைய
காங்கிரசுது சத்து போய் – சாறு போய் – குப்பைக்கு போக வண்டிய
நிலையில் இருக்கிறது.
தரமான டீ வேண்டுமா?
உங்களுக்குப் புதிதாக இலைபோட்ட
சுவையோடு கலந்து நல்ல முதல் தரமான டீ வேண்டுமென்றால் (மதியழகன்
மனோகரனைக் காட்டி) இங்கு வாருங்கள். ‘இல்லை சத்தற்ற டீதான்
வேண்டும்‘ என்றால் அங்கேயே செல்லுங்கள். ஆனால், இந்த டீ
விற்காமல் போகாது.
ஆளுங்கட்சி வரி வாங்குகிறது
– எதிர்க்கட்சி கணக்குக் கேட்கிறது.
ஆளுங்கட்சி வாய்க்கால் வெட்டுகிறது
‘ஆழமாக‘ அகலமாக, கரை சரிந்து விடாமல் வெட்டு‘ என்று கூறுகிறது
எதிர்க்கட்சி.
‘ஓட்டு கேட்கிறானே அண்ணாதுரை
என்ன செய்தான்? என்று கேட்கிறார்கள். என்ன செய்ய முடியும்?
ஒருவனிடத்தில்பிடில் கொடுத்துவிட்டு, மிருதங்கமா அடிக்கச்
சொல்வது? ஒருவனிடத்தில் மிருதங்கத்தைக் கொடுத்துவிட்டு,
பிடில் வாசி என்றால் முடியுமா?
ஈர விறகு, புழுங்கல் அரியைத்
தாய்மார்களிடம் கொடுத்துவிட்டு ஐந்து நிமிடத்தில் சமையல்
ஆகவேண்டும் என்றால் தரமுடியுமா?
வெற்றி வேண்டும்
தோழர் மனோகரன் நாஞ்சில் வட்டத்தைச்
சேர்ந்தவர். பச்சையப்பன் கல்லூரியில் படித்தவர். அன்று முதல்
இன்றுவரை கழகத்தில் உள்ளவர்.
நல்ல தமிழைப் பயின்றவர், ஆங்கிலத்தில்
அழகாகப் பேசக்கூடிய ஆற்றல் மிக்கவர், பாராளுமன்ற நடவடிக்கைகளை
நன்றாக அணுகிப் பார்ப்பவர்.
ஆத்திரமூட்டக்கூடிய அளவில்
மாற்றுக் கட்சியினர் நம்மைத் தூற்றிப் பேசினாலும் கழகத்
தோழர்கள் அதனைப் பொருட்படுத்தாது, அயராது பணிபுரிந்து வெற்றி
தேடித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
(நம்நாடு
- 1.2.62)