அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


காங்கிரஸ் ஆட்சியில் மனிதன் மிருகநிலை அடைந்ததுதான் மிச்சம்

“இந்த வட்டத்தில் நல்ல தொண்டுள்ளம் கொண்டுள்ள பல இளைஞர்கள் சேர்ந்து நடத்தி வருகின்ற இந்த மக்கள் மன்றத்தில் பேசுவதற்கு வாய்ப்பு பெற்றமை குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். உற்சாகமும் ஊக்கமும் கொண்டு நல்ல முறையில் பல பணிகளை ஆற்றி வருகின்ற இந்த வட்டாரத்தில் உள்ள மக்கள் உற்சாகமளித்து ஊக்கப்படுத்தி நல்ல வளமான முறையில் மன்றத்தை வைத்துள்ளனர். இந்தக் கூட்டத்தில் இம்மன்றத்தின் விழாவாகவும், அதே நேரத்தில் மேயர் துணைமேயர் பாராட்டு விழாவாகவும் நடத்தவதைக் காண நான் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன்.

முதலாவது தமிழர் படை

“சென்னையில் உள்ள பகுதிகளில் எனக்கு மிகவும் பிடித்தமான பகுதி இந்தப் பெத்து நாய்க்கன்பேட்டைதான். அதிலும் குறிப்பாக காசி விசுவநாதர் கோயில் திடலும், இந்தப் பகுதியும்தான். நான் பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பகுதியிலே வசித்து வந்தேன். அக்காலங்களில் எத்தனையோ இரவுகளில் – நடு நிசியில் நானும் நண்பர் கணேசன் அவர்களும் மற்றும் பல நண்பர்களும் பேசிக் கொண்டு இந்த இடத்திற்குத்தான் வருவோம். அந்த நேரங்களில் எங்களைவிட மிக வேகமாகப் பல பெருச்சாளிகள் ஓர் இடத்தினின்று, மற்றொரு இடத்திற்கு ஓடும். அம்மாதிரி நாங்கள் சந்தித்து மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டு இருப்போம். அதுமட்டுமல்ல, முதலாவது தமிழர் படை காசி விசுவநாதர் ஆலயத்தின் அருகில் இருந்துதான் புறப்பட்டு, தொண்டை மண்டலம் உயர்நிலைப் பள்ளியில் இந்தி எதிர்ப்பு மறியல் செயய்ச் சென்றது. இப்படி இங்கிருந்துதான் நாள்தோறும் சென்றது. இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புடையதாக இப்பேட்டை இருந்து வருகிறது.

“எனக்கு முன்னால் பேசிய நண்பர் என்.வி.நடராசன் அவர்கள் இந்த ஆட்சியாளர்களின் ஆணவப் போக்கை உங்கள் முன் எடுத்துக் கூறினார். அதைப்போலவே, நம்முடைய மேயல் வி.முனுசாமி அவர்கள் நகரத்தின் நிலைமை உங்களிடத்திலே சொன்னார். இவர்கள் பேசியதற்கு மேல் புதியதாக நான் எதைச் சொல்லப் போகிறேன்?

நான் போகாமல் புரிந்துகொண்டேன்

நான் உங்களிடத்தில், உலகத்தில் உள்ள சின்னஞ்சிறு நாடுகள் எல்லாம் விடுதலை பெற்று எப்படி, எப்படி வாழ்கின்றன. நாம் எப்படி வதைப்படுகிறோம் என்பதை எடுத்துக் கூறலாம் என்று விரும்புகிறேன்.

“நம்முடைய நிதியமைச்சர் அவர்கள் சமீபத்தில் வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியதை நீங்கள் அறிவீர்கள். அவர் அங்குச் சென்று மீண்டவடன், ‘அங்குள்ள மக்கள் மிக அதிகமாக உழைக்கிறார்கள்‘ என்று கூறியிருக்கிறார். அவர் இந்த விஷயத்தைப் புரிந்து கொள்வதற்கு இங்கிருந்து போனார். அவர் இதை அங்குப் போக புரிந்து கொண்டார், நான் அங்கு போகவில்லை – ஆனால் புரிந்து கொண்டேன்.

“அவர் சென்று வந்த ஐரோப்பிய நாடுகள் எல்லாம் மிகக் குளிர்ந்த நாடுகள். மாறாக நமது நாடு மிக வெப்பமாக நாடு. அந்த நாடுகளில் காலை 8 மணி முதல் 9 மணி என்று கடிகாரம் காட்டும் போதுதான் சாதாரணமாகச் சூரியனுடைய வெளிச்சம் தெரியும். இரவு நேரங்களிலும் பகல் பொழுதிலும், எப்பொழுதும் குளிர் மிக அதிகமாக இருக்கும்.

நம் நாட்டிற்கு ஏற்றதல்ல

“மேல்நாடுகளில் உபசாரத்திற்காக ஒருவரை ஒருவர் உபசரிக்கும் வார்த்தையே, ‘வெப்பமான வரவேற்பு‘ என்று தான் சொல்லப்படுகிறது. நம்முடைய நாட்டிலே ‘குளிர்ந்த முகத்தோடு‘ என்றுதான் உபசாரத்தைக் கூறுவார்கள்.

“ஆகவே இங்குள்ள மக்கள் உழைத்தால் தங்களுடைய உழைப்பினால் மிக விரைவில் களைத்து விடுகிறார்கள். உடலும் இளைக்க ஆரம்பித்து உருக்குலைந்து போகிறார்கள்.

“ஒரு சிறைச்சாலையில் உள்ள கைதிகளை அங்குள்ள மேல் அதிகாரி. ‘உண்டு கொழுக்கிறாயே! நீ மிகக் கடுமையாக உழைக்க வேண்டும். அதைச் செய் – இதைச் செய்‘ என்று ஏசிடுவதைப் பார்க்கிறோம்.

“அதைப்போல நாட்டில் உள்ள மக்களைப் பார்த்து, ‘உழைப்பவர்களே மிகக் கடுமையாக உழையுங்கள்‘ என்று கூறுவது நாகரிகமும் அல்ல, அறிவுடைமையும் ஆகாது. இந்த நிலை நம்முடைய நாட்டிற்கும் ஏற்றதல்ல என்பதைக் கூறிக்கொள்கிறேன்.

“நம்முடைய நாட்டில், ஒரு பெண்ணை ஒருவன் கெடுத்தான் என்றால், அதைக் குறிப்பிட சாதாரணமாக ‘கையைப் பிடித்தான்‘ என்ற கூறுவார்கள். அதாவது கையைப் பிடித்தாலே ‘அவன் அவளுடைய உணர்ச்சியை தூண்டி விட்டான்‘ என்று பொருள். ஆனால் அந்த நாடுகளில் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் அனைத்தல், நடனமாடுதல் ஆகியவை சாதாரணமாகும். இதற்க அடிப்படைக் காரணமே இந்தத் தட்பவெப்ப நிலைதான்.

இந்த நிலைதான் அங்கும் இங்கும்

“உலகத்திலேயே அதிகக் கடினமாக உழைக்கின்ற மக்கள் நம்முடைய நாட்டு மக்கள்தான். உலகத்தில் எந்த நாட்டிலாவது மனிதன் கல்லுடைப்பதைக் கேட்டு இருக்கிறீர்களா? இங்குள்ள மனிதன் மரம் வெட்டுகிறான், மரம் அறுக்கிறான், மலம் வாருகிறான். புல்லை அறுத்துத் தலையிலே சுமந்து சுற்றியலைந்து விற்கிறான். இந்த வேலைகளை மற்ற நாடுகளில் இயந்திரம் செய்கிறது. இங்கு மனிதன் செய்கிறான். அங்கு அந்த இயந்திரங்களை எண்ணெய் ஊற்றித் தேய்ந்து போகாமல் சரியானபடி பாதுகாக்கிறார்கள். ஆனால் இங்கு, இத்தனை வேலைகளையும் மனிதனே செய்கிறான். அப்படிச் செய்தும் அவனுடைய பசிக்கு எதுவும் கிடைப்பதில்லை. இயந்திரத்துக்கு எண்ணெய் கிடைக்கிறது அங்கே, இங்கு மனிதனுக்கு புசிப்பதற்கே உணவில்லை. இந்த நிலைதான் அங்கும் – இங்கும்.

“ஒருமுறை பெர்னாட்ஷா அவர்களைப் பார்த்துச் சிலர் ‘மனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?‘ என்று கேள்வி எழுப்பியபோது, அவர் “மிருகம் கிடைத்ததைத் தின்னும் – மனிதன் தேவைப்பட்டதைத் தின்பான்“ என்று பதில் அளித்தார். மிருகங்கள் காட்டிலே தமக்குக் கிடைத்ததை உண்ணும் – மான் கிடைத்தாலும், மாடு கிடைத்தாலும், அழகிய மிருகமே கிடைத்தாலும் அனைத்தையும் அடித்துக் கொல்லும். ஆனால் நாமோ நமக்கு எது தேவையோ அதைத் தேடிப் பெற்று உண்டு மகிழ்ச்சியடைகிறோம்.

“மிருகங்களைப் போலவே, நாமும் இந்தப் பதின் மூன்று ஆண்டுக் கால ஆட்சியில் கிடைத்ததை உண்டு வருகிறோம்.

அன்றைய மன்னர்களின் சாதனை

“முன்னாலே மன்னர்கள் நாட்டை ஆண்டு வந்தார்கள். இன்று மன்னர்கள் கிடையாது. அன்றைய அரசுக்கும் – இன்றைய அரசுக்கும் வித்தியாசம் ஏராளமாக உண்டு. அன்றைய தினம் உள்ள மன்னர்க்ளுக்கு நாட்டைப் பகைவரிடமிருந்து காத்தல், நாட்டிலே காட்டு மிருகங்கள் வந்தால் அவற்றை வேட்டையாடச் செல்லுதல் ஆகியவற்றைத் தவிர அதிக வேலை கிடையாது.

“நீங்கள் சாதாரணமாக இவற்றை, தெருக்கூத்துகளில் பார்த்து இருக்கலாம். மன்னனிடம் பொதுமக்கள் ‘துஷ்ட மிருகங்கள் தொல்லை தாங்க முடியவில்லை“ என்று முறையிடுவார்கள். உடனே மன்னர் வாளெடுத்து ஈட்டியைக் கைகொண்டு தன்னுடைய அந்தப்புரத்திலே நுழைந்து அரசியிடம் அனுமதி கேட்டுப் பெற்றுக் கொண்டு காட்டிற்குச் சென்று வேட்டையாடுவார். இதுதான் அன்றைய மன்னர்களின் செயலும் சாதனையும்.

“ஆனால் இன்றைய அரசின் வேலை இதோடு நின்று விடவில்லை. இன்றைய அரசுக்கு ‘என்ன சாப்பிடலாம்‘ என்பதிலிருந்து ‘எத்தனை பிள்ளைகள் பெற்றுக் கொள்ளலாம்‘ என்பதுவரை அதிகாரம் உண்டு.

ஆட்சியிலிருந்து இறக்க வேண்டும்

“வருகிற ஆண்டு, நமக்கு ஒரு வாய்ப்பு வருகிறது. அந்த வாய்ப்பை நாம் இழந்துவிட்டால் அவர்கள் சொன்னதைத் தான் நாம் உண்ண வேண்டும். அவர்கள் பெறச் சொல்லும் அளவுதான் பிள்ளை பெற்றுத் தீரவேண்டும். இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்தி என்னென்ன முறைகள் உண்டோ அந்தந்த முறைகளைக் கையாண்டு நாம் அவர்களை ஆட்சியிலிருந்து இறக்க வேண்டும்.

“நேரு அவர்கள் அரிசி சோறு உண்பவர்களைப் பார்த்து, ‘அரிசிச் சோறு மிகச் சோம்பலை உண்டாக்கும். அது மூளையைப் பாதிக்கிறது‘ என்று கூறினார். இதை அவர் தனிமையில் கூறவில்லை. பக்கத்திலே நம்முடைய அமைச்சர்களான காமராசரையும், சுப்பிரமணியத்தையும் வைத்துக் கொண்டே சொன்னார். இவர்கள் அவரைத் தட்டிக் கேட்கவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஒருவருக்கு அது புரியாது, மற்றொருவருக்கு அது புரிந்தாலும் தட்டிக் கேட்பதற்கு தைரியம் கிடையாது.

“நம்முடைய முன்னோர்கள் இந்த அரிசிச்சோற்றை உண்டுதான் திருக்குளத்தை வட்டினார்கள் – திருக் கோயில் கட்டினார்கள் – ஆகமத்தைப் படைத்தார்கள் - தொல்காப்பியத்தைப் படைத்தார்கள் – திருக்குறளை எழுதினார்கள். அகத்தைக் கண்டார்கள் – புறத்தைப் படைத்தார்கள் என்று எவரும் எடுத்துச் சொல்லவில்லை, ஒருவருக்கு இது தெரியாது – மற்றவருக்குச் செல்ல முடியாது.

கோதுமை நமக்கு ஏற்றதல்ல

“நல்ல சங்கீதக் கச்சேரிக்குப் பல பக்கவாத்தியங்கள் தேவைப்படுவதைப் போல் கோதுமை உணவை உண்பதற்குப் பக்க உணவு தேவையாகும். அது இருந்தால்தான் அதை உண்ண முடியும். கோதுமை வளர்வதற்கு குளிர் தேவை. வெப்பப் பகுதியில் கோதுமை விளையாது. குளிர்ந்த பகுதிகளில்தான் கோதுமை உணவு ஏற்றது. அதனால் நம்முடைய மக்களுக்குக் கோதுமை உணவு எந்த வகையிலும் ஏற்றதல்ல.

“நேரு அவர்கள் இதைச் சாதாராணமாக சொல்லவில்லை. இதைக் குறித்து நம்முடைய நண்பர்க காஞ்சி கல்யாணசுந்தரம் அவர்கள் சில மாதங்களுக்கு முன்னர் கோதுமை ஏகாதிபத்தியம் என்றொறரு தலையங்கத்தை ‘நம் நாடு‘ இதழிலே எழுதினார்.

“தமிழகத்து மக்களுக்குக் கோதுமையை உணவாக்கி விட்டால் அரிசியை விளையாமல் செய்து, வடநாட்டுக் கோதுமையைத் தென்னகத்தில் இறக்கி மேலும் வடக்கை வாழ வைக்கலாம் என்ற மறைபொருளை மனதில் கொண்டே பண்டிதல் நேரு இவ்வாறு கூறினார்.

நேரு சொன்னது நினைவுக்கு வரவேண்டும்

“வருகிற 1962ஆம் ஆண்டில் தேர்தலில் நீங்கள் காங்கிரசுக்கு வாக்களித்தால் நேரு அரிசிச்சோறு உண்பவர்களைச் சோம்பேறிகள் என்று கூறியதை ஏற்றுக் கொண்டவர்கள் ஆவீர்கள். உங்கள் குழந்தைக்கு உணவை வைத்துக் கொண்டு ஊட்டும்பொழுது உங்களுக்கு நேரு சொன்னது நினைவுக்கு வரவேண்டும்.

“அடுத்த தேர்தலில் ஓட்டு கேட்கக் காங்கிரசுக்காரர்கள் வருவார்கள். அவர்கள் அப்படி வரும்பொழுது அவர்களைப் பார்த்து, “நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்?“ என்று கேட்க வேண்டும். அவர் சிரிப்பார். உங்கள் தலைவர் என்று சொன்னாரே, அதை நீங்கள் மறுத்துச் சொன்னீர்களா? என்று கேளுங்கள் அல்லது அவரையாவது மறுக்கச் சொன்னீர்களா?“ என்று கேளுங்கள்.

“இன்றைய ஆட்சியாளர்கள் எதைச் சொல்லி ஓட்டு வாங்க வக்கு இருக்கிறது.? அரிசி விலையைக் குறைத்து விட்டதாகக் கணக்கு காட்ட முடியுமா அல்லது துணி விலையைக் குறைத்து விட்டதாகக் கணக்கு காட்ட முடியுமா? எந்த விலையைக் குறைத்து மக்களை வாழ வைத்தார்கள்?

ஒரு வராகன் அரிசி

“நான் சிறுவனாக இருந்தபொழுது ஒரு வராகன் அரிசி !அதாவது ரூ.3-8-0) வாங்கினால் அதைப் பல பெரிய பானைகளில் கொட்டிப் பிறகு பல சிறிய பானைகளைத் தேடிக் கொட்டி வைக்க வேண்டும். இன்றைய தினம் அதே தொகைக்கு அரிசி வாங்கினால் ஒரு பானையில் கொட்டி வைத்து அதை எடுக்கக் குழந்தைகளைத் தேடி கையைவிட்டு எடுக்கச் சொல்லவேண்டும்.

“இந்தப் பானைகள் புகட்டாத அரசியலையா அண்ணாதுரை புகட்டிவிட முடியும்? இது போதிக்காத வற்றையா முன்னேற்றக் கழகம் போதிக்கும்?

“நம்முடைய தோழர்கள் எப்பொழுதுமே நிமிர்ந்து பேசியே பழக்கப்பட்டவர்கள். அவர்கள் சற்ற ஓட்டு வாங்கும் வித்தையைப் பயில் வேண்டும். இது ஒன்றும் அவ்வளவு பெரிய வித்தையும் அல்ல. சற்று வளைந்து கேட்க வேண்டும்.

முறைப்படி அணுகினால் வெற்றி கிடைக்கும்

“யாராவது ஒருவர் வைகுந்தவாசா என்று நம்முடைய தோழர்கள் எதிரில் கூறி்விட்டால் ‘எங்கே இருக்கிறான் அந்த வைகுந்தவாசன்?‘ என்று நிமிர்ந்து பேசிய பழக்கப்பட்டவர்கள் இவைகள் எல்லாம் நம்முடைய இயக்கம் வெறும் பிரச்சார இயக்கமாக இருந்த காலத்தில் பொருந்தும். பிரச்சார இயக்கமாக இருந்த காலத்தில் பொருந்ததும். ஆனால் இன்று நிலைமை வேறு. நாம் வாக்காளர்களைச் சந்தித்துப் பேசவேண்டிய முறைப்படி அவர்களிடம் பேசவேண்டும். நாம் கேட்க வேண்டிய முறைப்பட கேட்டால் தருவார்கள். ஆகவே நம்முடைய தோழர்கள் முறைப்படி அணுகினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

“பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பகுதியில் நான் இருந்தபொழுது இங்குள்ள தோழர் கணேசன் நானும் மற்றும் ரங்கநாதன் ஆகிய தோழர்களும் சுயமரியாதைச் சங்கம் நடத்தி வந்தோம். அப்பொழுது கூட்டம் நடத்துவது என்பது மிகச் சிரமமான காரியம். கூட்டத்திற்கு மேசை, நாற்காலி கிடைக்காது. அதற்காகச் சங்கத்திலிருந்து தூக்கி வருவோம். ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கையும் தேடிப் பிடித்துக்கொண்டு வருவோம். விளம்பரத்திற்கு எந்த அச்சகத்தாரும் நோட்டீசு போட்டுத் தரமாட்டார்கள். இதற்காக நமக்கு வேண்டிய அச்சுக் கோர்ப்பவரைப் பிடித்து ஓய்வு நேரத்தில் கோர்க்கச் செய்து, விளம்பரத் தாளை மிகச் சிரமப்பட்டு அச்சிட்டு வெளியிடுவோம். இவ்வளவு சிரமத்திற்கு இடையே நடத்துகின்ற கூட்டத்தில் அடி, உதைகள் கிடைத்தாலும் கிடைக்கும். இப்படி ஆரம்பித்த இயக்கம்தான் இது. நாம் சொல்லவேண்டிய முறைப்படி சொல்லி – பேசவேண்டிய முறைப்படி பேசியதன் விளைவுதான் இன்றைய தினம் நமக்குக் கிடைத்திருக்கிற இந்த ஆதரவு!

அகவிலையை எண்ணிப் பாருங்கள்

“காங்கிரசுக்காரர்கள் இந்த ஓராண்டில் மறந்து போனவர்களையெல்லாம் நினைவுக்குக் கொண்டு வருவார்கள். வரும் போதே ஓட்டர்களாய் இருந்தால் அவர்களைக் கண்டு சிரிப்பார்கள். இந்த ஓராண்டுக் காலத்திற்கு அவர்களுடைய கீழ்வாய் தான் திறந்தபடியே இருக்கம். சாலையில் வரும் போதே என்ன பையன் சுகமா? என்பார். இல்லை எனக்கு இருப்பது பெண்தானே? என்றால் ஓர் அசட்டுச் சிரிப்பு சிரித்தபடி, ஓ மறந்துவிட்டேன். பெண்ணுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? என்பார். அவருடைய குறையை ஆழ்ந்து கேட்பது போல் நடிப்பார். உடனே தனது டைரியை எடுத்து எழுதுவார். தன்னை வந்து சந்திக்குமாறு கூறுவார். ‘முடிந்ததைச் செய்வேன்‘ என்பார். இவைகள் எல்லாம் உங்களுடைய ஓட்டுக்களைப் பெறும்வரைதான். இப்படிப்பட்ட வலையில் நீங்கள் சிக்காது. வடக்கு வாழ்வதையும், தெற்கு தேய்வதையும், நினைவில் இருத்துங்கள். இன்றைய அகவிலையை எண்ணிப்பாருங்கள்.

“இரும்புத் தொழிற்சாலையா – இதோ நாங்களும் கொண்டு வந்து விட்டோமே என்பார்கள். ஆனால், வடக்கே உள்ள இரும்பாலைகள் எல்லாம் இரண்டு திட்டங்களில் வளர்ந்து பலனும் கொடுத்து வருகின்றன. நம்முடையது அப்படி அல்ல, நம்முடைய தாய்மார்கள் கூறும் வண்ணம் சொல்வதானால், ‘குழந்தை தலை முழுகாமல் இருக்கிறது‘ என்பார்கள். அதாவது ‘கர்ப்பமாய் இருக்கிறது‘ என்று பொருள். இந்த நிலையில்தான் நம்முடைய இரும்புத் தொழிற்சாலை இருக்கிறது. இந்தக் கர்ப்பம் சிதையாமல் வளர்ந்து குழந்தை பிறந்த பின்னரே வெளிச்சம். ஆனால் வடக்கே இருப்பவை குழந்தைகள் பெற்றக் குடியும் குடித்தனமாக இருக்கின்றன. இதை மறவாமல் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

விலைவாசியைக் குறைப்போர் யார்?

“நாட்டிலே விலைவாசிகள் ஏறி நிற்கின்றன. அமைச்சர்கள் கூறுகிறார்கள் – விலைவாசி ஏறிவிட்டது என்று. நாமும் இதைத்தான் எடுத்துச் சொல்கிறோம். பொதுமக்களும் விலைவாசி ஏறியிருக்கிறது என்று சொல்கிறார்கள். இப்படி நாட்டில் இந்த மூவருமே விலைவாசி ஏறிவிட்டது என்று கூறுகிறார்கள். இப்படி ஏறி இருக்கிற விலைவாசியைக் குறைப்பது யார்? ஆண்டவனா வந்து குறைப்பார். குறைக்க வேண்டியவர்கள் குறைக்க வேண்டும். பொறுப்பிலே இருக்கின்றவர்கள் இதைக் குறைக்க வேண்டும்.“

“சென்ற திங்களில் நம்முடைய அமைச்சர் – சாதாரண அமைச்சர் அல்ல, கல்விக்கு அமைச்சர் – நிதிக்கு அமைச்சர் – நீதிக்கும் அமைச்சரான சுப்பிரமணியம் இங்கிலாந்து சென்று வந்தவர். பல நாடுகளைச் சுற்றிப் பார்த்தவர் டி.டி.கிருஷ்ணமாச்சாரியை அழைத்துக் கொண்டு கடைக்குச் சென்றார். முதலில் ஓர் அரிசிக் கடைக்க்குச் சென்றார். விலைவாசியைக் கேட்டறிந்தார். உடனே பத்திரிகை நிருபர்களை அழைத்து விலைவாசிகள் ஏறிதான் இருக்கின்றன என்று சொன்னார்.

“வருகிற மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்திற்கு இப்பொழுதே ரூ.200 கோடிக்குப் புதிய வரிகள் விதிக்கப்படவேண்டும் என்று டில்லி இங்குள்ள அமைச்சர்க்ளுக்குக் காதுக்கு ‘சிமிட்டா‘ கொடுத்து அனுப்பியிருக்கிறது. இந்நிலையில் மேலும் பல புதிய வரிகள் வரும்.

எதிர்க்கட்சியாக மதிப்பதில்லை

“நாட்டிலே நல்ல எதிர்க்கட்சி வேண்டும் என்று கூறுகிறார்கள். “சரி சுதந்தரா கட்சிக்கு என்ன? என்றால் ‘அது கிழவர் கட்சி‘ என்று சொல்கிறார் நேரு, இவரை ஏதோ பதினாறு வயது வாலிபராக எண்ணிக் கொண்டு.

“கம்யூனிஸ்டுக் கட்சி என்றால் – அது சீனாக்காரனுக்கு வால் பிடிக்கும் ஐந்தாம் படைக்கட்சி என்கிறார்கள்.

“போகட்டும் – திராவிடர் கழகம் என்றால், ‘அது தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னும் தேர்தலுக்குப் பிறகு ஒரு மாதம் வரையும் மிக நல்ல கட்சி‘ என்பார்கள்.

“தி.மு.கழகம் என்றால், ‘அது ஒரு கட்சியா?‘ என்பார்கள். இப்படி எந்தக் கட்சியையும் எதிர்க்கட்சியாக மதிப்பதில்லை.

“கள்வர்கள் இரவு நேரங்களில் திருடுவதற்கு விளக்கு வெளிச்சம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்வார்கள். இருட்டாக இருந்தால்தான் அவர்களுக்குக் களவாட வாய்ப்பு. அதுபோல் அரசியல் திருடர்கள் நாட்டிலே அரசியல் ஒளி இல்லாமல் இருந்தால்தான் தங்கள் அரசியல் திருட்டை நடத்த முடியும். அதற்காகவே நாட்டில் அரசியல் ஒளி ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்கிறார்கள்.

பதவிகளை விட்டுவிட்டு வரட்டும்

“அதனால் இவர்களைத் தேர்தலில் ஈடுபட வேண்டாம் என்று சொல்லவில்லை. யார வரவேண்டாம் என்கிறார்கள்? வெறும் காமராசராக வெறும் சுப்பிரமணியமாக வரச் சொல்கிறோம். தேர்தலுக்கு ஆறு மாதத்துக்கு முன்னால் பதவிகளை இராஜினாமா செய்துவிட்டச் சாதாரண ஆட்களாகப் பொதுமக்களிடத்தி்லே ஓட்டு கேட்கட்டும். மந்திரிகளாக வந்தால் வழி தானாகத் திறக்கும். சாதாரண ஆட்களாக வந்து ஓட்டு கேட்டால் – கேட்டு பெற்றால் மக்கள் அவர்களுக்குத் தரும் மரியாதையாக அதை ஏற்போம். அமைச்சர்களாக வந்தால், கலெக்டர் வருகிறார் – போலீசார் வருகிறார்கள் – அவர் பரிவாரங்கள் அத்தனையும் உடன் வருகின்றன. அவர்கள் ‘மந்திரி வருகிறார்‘ என்று சொல்வார்கள். மக்களும் ‘நம்முடைய வீட்டிற்கு மந்திரியே வருகிறார்‘ என்று மயங்குவார்கள். இந்த நிலையில் ஓட்டுக் கேட்டால் எப்படி இருக்கும்?

“ஒரு கணவன் தன் மனைவியைப் பார்த்துத் தன் தாயும் தந்தையும் இருக்கும்போது ‘நல்ல மல்லிகைப் பூ வேண்டுமா? வாங்கி வரட்டுமா? என்று கேட்டால் வெட்கப்பட்டுக் கொண்டு வேண்டாம் என்றுதான் சொல்லுவாள்.

“இதைப்போல் அவர்கள் மந்திரிக் கூட்டமாகவும், நாம் மறுபக்கம் வெறும் கூட்டமாகவும் ஒட்டு கேட்டால் மக்கள் என்ன எண்ணுவார்கள்?

அரசியலுக்கு இந்த விதிகள் பொருந்தாதா?

“குதிரைப் பந்தயத்தில் நல்ல வலிவுள்ள குதிரைகளைப் பின்னாலும சற்ற வலிவு குறைந்தவற்றைச் சில அடிகள் முன்னும் நிற்க வைத்து ஓடவிடுவார்கள். சாதாரணப் போட்டிக்கே இந்த விதிகள் என்றால் அரசியலுக்கு இந்த விதிகள் பொருந்தாதா?

தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு பதவியை விட்டு விட்டுச் சாதாரண ஆட்களாக நாட்டு மக்களிடம் வந்து அவர்கள் செய்ததைச் சொல்லட்டும். அதில் உள்ள ஓட்டைகளை நாங்கள் சொல்கிறோம். அவர்கள் செய்ய போவதைச் சொல்லட்டும் – நாங்கள் அவர்கள் செய்யப் போவதாகச் சொல்வதில் உள்ள குறைகளைச் சொல்கிறோம். இதுதான் அரசியலில் கையாளவேண்டிய நாணயமான செயல். இப்படிச் செய்து மக்கள் அவர்களுக்கே வாக்களித்தால் அவர்களை மக்கள் மதிக்கிறார்கள் என்று பொருள். அவர்கள் பதவிகளை விட்டுச் சாதாரண ஆட்களாக ஓட்டுக் கேட்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

(நம்நாடு - 24.1.61)

y