சென்னை – தேனாம்பேட்டையில்
தமிழ் வளர்ச்சி மன்றத்தின் சார்பில் 23.12.61 அன்று நடந்த
கூட்டத்தில் கலந்துகொண்டு அண்ணா அவர்கள் ஆற்றிய உரையாவது:
“இந்த நாட்டு மக்களை ஒன்றும்
அறியாதவர்கள் என்று நினைத்துக்கொண்டு ‘தி.மு.கழகத்தினர்
என்ன செய்தார்கள்? என்ன செய்தார்கள் என்று கேட்கிறார்கள்.
ஆளும் கட்சியினரான காங்கிரசார் எதிர்க்கட்சியான தி.மு.கழகம்
என்ன செய்ய வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்?
கண் பார்க்கிறது, காது கேட்கிறது, கால் நடக்கிறது, வாய்
பேசுகிறது – பார்ப்பதும் கேட்பதும், அதற்குரிய கடமையாகும்.
எனவே, காலைப் பார்த்து. ‘எழுதத் தெரியுமா?‘ என்றும் எழுதுகிறகையைப்
பார்த்து, ‘நடக்கத் தெரியுமா?‘ என்றும் கேட்பது முறையாகாது.
அதைப்போல்தான் எதிர்க்கட்சியைப்
பார்த்து, ‘என்ன செய்தார்?‘ என்று கேட்பதும் சரியாகாது.
ஆளுகிற கட்சிக்குத்தான் வரி
வாங்குவது, அதிகாரிகளை நியமிப்பது என்பன போன்ற உரிமைகள்
இருக்கின்றன. ஆக, ஆளுகிற கட்சிதான். ‘நாங்கள் இன்னின்ன செய்தோம்.
ஆகவே எங்களுக்கு வாக்கு அளியுங்கள்‘ என்று சொல்லி வாக்குக்
கேட்க வேண்டும்.
தீர்ப்புக்குட்படுவோம்
நாங்கள் ஆளுங்கட்சியானால்,
என்னென்ன செய்வோம் என்று எங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறோம்.
அவை சரியெனப்பட்டால், எங்களை ஆளுங்கட்சியினராக அனுப்புங்கள்.
‘இல்லை, இல்லை, நீங்கள் எதிர்க்கட்சியாக
இருந்து நல்லது பொல்லாதது பார்த்துச் சொல்லுங்கள். அதுபோதும்
என்றால் அதையும் ஏற்றுக் கொள்கிறோம்.
பெண்ணுக்கு இடுப்பு வலிக்கிதென்றால்,
துணையாக இருந்து உதவ மருத்துவச்சியை அழைத்து வருகிறோம் மருத்துவச்சி
வந்தாலும், பிள்ளை பெறவேண்டியவள் கர்ப்பம் கொண்ட பெண்தான்!
மாறாக, மருத்துவச்சியைப் பார்த்து ‘நீ என்ன பிள்ளை பெற்றாய்?‘
என்பதுபோல் எதிர்ககட்சியைப் பார்த்து. ‘நீ என்ன செய்தார்?‘
என்று கேட்கிறார்களே!
இனி ஏமாற்ற இயலுமா?
நீங்கள் இன்னும் பத்தாண்டுக்
காலத்திற்குத்தான் மக்களை இப்படி ஏமாற்றிக் கொண்டிருக்க
முடியும். மக்களுக்கு இப்போதே பல விவரங்கள் தெரிந்துவிட்டன.
இன்னும் பத்தாண்டுகளுக்குள் எல்லா விவரங்களும் தெரிந்துவிடும்
அப்புறம் ஏமாற்ற முடியாது.
தி.மு.கழகம்தான் என்ன – அப்படி
ஒன்றுமே செய்யவில்லையா? இப்போது எட்டு அமைச்சர்களும் பம்பரமாய்ச்
சுற்றுகிறார்களே – அதற்குக் காரணம் என்ன?
காடுகரம்பெற்லலாம், வாய்க்கால்
வரப்பிலெல்லாம் அமைச்சர்கள் நடக்கிறார்களே – அது யாரால்?
நாம் எதிர்க்கட்சியாக வந்தபிறகு
தான் பகலென்று பாராமலும், இரவென்று பாராமலும் எந்த இடமென்று
கருதாமலும் அமைச்சர்கள் அலைகிறார்களே – அது யாரால் என்று
நினைக்கிறார்கள்?
எதிர்க்கட்சியாக நாங்கள் இருக்கின்றோம்.
எதிர்க் கட்சிக்கு இருக்க வேண்டிய இலட்சணங்கள் எங்களிடம்
இருக்கின்றனவா, என்பதைப் பாருங்கள்.
சான்றுகள் இருக்கின்றனவே!
அரசை – பாராட்ட வேண்டிய இடத்தில்
பாராட்டியிருக்கிறோம். கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்திருக்கிறோம்.
கைகொடுக்க வண்டிய இடத்தில் கைகொடுத்திருக்கிறோம். தட்டிக்
கேட்க வேண்டிய இடத்தில் தட்டிக் கேட்டிருக்கிறோம்.
எதிர்க்கட்சியாக இருந்து என்னென்ன
செய்ய வேண்டுமோ, அதற்கான இலட்சணங்களை நாங்கள் பெற்றிருக்கிறோம்.
இவை அத்தனைக்கும் சட்டமன்ற நடவடிக்கைகள் சான்றாக இருக்கின்றன.
கேரளத்தில் ஒரு பகுதியும்,
ஆந்திராவும் நம்மைவிட்டுப் பிரியாதிருந்த காலத்தில், நம்
மாநில மக்களுக்கு விதிக்கப்பட்ட வரி ரூ.16 கோடிதான். இன்று
ஆந்திரமும் தனியே போய்விட்டது, கேரளமும் தனியே போய்விட்டது.
என்றாலும் தமிழ்நாட்டிற்கு மட்டும் இப்போது விதிக்கப்படும்
வரி ஆறேழு மடங்கு உயர்ந்து விட்டது. ரூ.100 கோடியைப் நெருங்குமளவில்
ரூ.99 கோடி வரை தற்போது தமிழ்நாட்டில் வரி விதிக்கப்பட்டு
விட்டது. இன்னும் முழுவதுமாக 100 கோடியாகவில்லை!
நிதியமைச்சர் சுப்பிரமணியத்திற்குக்கூட
அதுதான் கவலை, தலையைத் தொட்டுப் பார்த்துவிட்டு, ‘இன்னும்
கொஞ்சம் இருக்கிறதே, மழுங்க அடிக்காமல் விட்டு விட்டேனே‘
என்பது போல சுப்பிரமணியம் கவலைப்படுகிறார் – ‘நூறு கோடியைக்
கடக்கவில்லையே‘ – என்று!
அவர்கள்கூட அப்படிக் கேட்கவில்லையே!
ரூ.16 கோடி வரிபோட்ட காலத்தில்
சில பள்ளிக் கூடங்கள் இருந்தன என்றால், ரூ.70 கோடியைத் தாண்டி
விட்ட காலத்தில் ஏழெட்டு மடங்கு பள்ளிகளின் எண்ணிக்கை உயர்ந்திருக்க
வேண்டும். அப்படி உயர்ந்திருந்தாலும், ‘பள்ளிக்கூடங்களைக்
கட்டியவன் நான் தான். அதனால் ஆட்சியை விட்டுப் போகமாட்டேன்‘
என்ற சொல்வது பொருத்தமற்றதாகும்.
‘இராமன் காலத்தில் இரயில்
இல்லை. தசரதன் காலத்திலே தபால் வசதி கிடையாது. அரிச்சந்திரன்
காலத்தில் ஆகாய விமானம் தெரியாது. இதையெல்லாம் காட்டிய எங்களையா
இரயில் போட்ட எங்களையா – தபால் வசதியைக் கொண்டுவந்த எங்களையா
– ஆகாய விமானத்தை ஓட்டிக் காட்டிய எங்களையா போகச் சொல்கிறீர்கள்?
என்றா கேட்டான் வெள்ளைகக்காரன்.
அவன் காட்டிய விமானத்திலேயே
மூட்டைக்கட்டி வஅனை அனுப்பி வைக்கவில்லையா? அவன் போட்ட இரயிலிலேயே
அவனை ஏற்றி அனுப்பி வைக்கவில்லையா?
ஏற்பவர்கள் எவரோ?
வெள்ளையன் என்ற ‘பேய்‘ பிடித்திருந்ததாகவே
வைத்துக் கொள்வோம் – பேய் என்று ஒன்று கிடையாது. நோய்தான்
பேய் ஆக்கப்பட்டுவிட்டது – வெள்ளையன் என்ற பேயை, காங்கிரசு
என்ற பூசாரி ஒட்டிவிட்டதாகவே வைத்துக் கொள்வோம்.
பேயை ஓட்டிவிட்டதற்காகப் பூசாரி
பெண்ணைப் கேட்டால் கொடுப்போமா? பிடித்த பேயை விரட்டிவிட்டேன்.
இனி நான் பிடித்துக் கொள்கிறோன்‘ என்று சொன்னால் பூசாரியின்
பேச்சை ஏற்பார் உண்டாகு?
அதனால்தான், பேய் ஓட்டிய உடனே
பூசாரி வீட்டுக்குப் போவதுபோல், காங்கிரசுக் கட்சி சுதந்திரம்
கிடைத்ததும் கலைக்கப்பட வேண்டும் என்றார் காந்தியார்!
தாய்மார்களுக்கு, இதை அடுக்களையையொட்டிச்ச
சொன்னால் புரியும் என எண்ணுகிறேன். சமையல் நேரத்திலே இருக்க
வேண்டிய நெருப்பை சாதாரண நேரத்தில் வைத்தால் ஊரே வேகும்.
சமையல் ஆகிவிட்டதும் நெருப்பை அனைத்துவிடுவது தாய்மார் வழக்கம்.
ஆனால் நெருப்பு அணைக்கப்பட்டவில்லை.
அதனால்தான், ‘நெருப்புதான் அணைக்கப்பட வில்லையே, நாம்தான்
போய்க் குளிர்காய்வோமே‘ என்று சண்டாளர்களெல்லாம் உள்ளே நுழைந்திருக்கிறார்கள்!
இன்றைய தினம் காங்கிரசின்
மூலம் பட்டம் பதவி பெற்றவர்கள் எல்லாம், அன்றைய தினம் அடிப்பட்டவர்களா?
அல்ல!
அவர்களா இவர்கள்?
நான் பச்சையப்பன் கல்லூரியிலே
படிக்கும்போது, சைனாபசாரிலே நடந்த வெளிநாட்டுத் துணிக்கடை
மறியலைப் பார்த்திருக்கிறேன். அன்றைய தினம் மறியல் செய்த
தொண்டர்களை போலீசார் கையைப் பிடித்துக்கூட இல்லை – காலைப்
பிடித்துப் பரபரவென்ற – இரத்தம் சொட்டச் சொட்ட – இழுத்துச்
சென்றதைப் பார்த்திருக்கிறேன். அப்படியெல்லாம் அடிஉதைபட்டுக்
கஷ்டப்பட்ட தொண்டர்களா இன்று காங்கிரசில் இருக்கிறார்கள்?
அவர்களிலே சிலர் செத்துவிட்டார்கள்.
சிலர் இன்றைய கொடுமைகளைப் பார்த்து, வேறிடங்களுக்குப் போய்விட்டார்கள்!
வேறுசில், ‘வெளியே சொன்னாலும் வெட்கக்கேடு. நினைத்தாலும்
துக்கக்கேடு‘ என்று மனதிற்குள்ளேயே எண்ணிப் பொருமிக் கொண்டிருக்கிறார்கள்!
இடையில் வந்தவர்கள்தான் இப்போது குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் உணவு உற்பத்தி
பெருகிவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் உணவு உற்பத்தி பெருகப்
பெருகப் பற்றாக் குறை ஏற்படுகிறது என்றால் என்ன பொருள்?
– அன்றைக்கு இருந்ததைவிட இன்றைக்கு உணவுப் பொருள் தான் விலைவாசி
உயர்ந்திருக்கிறதென்றால் என்ன பொருள்.
இது வெட்கக்கேடு
போர்க்காலத்திலவ்ட, அரிசி
படி பத்தணாவுக்கு விற்றது! இப்போது, ‘பாசனத் திட்டம் போட்டோம்.
உணவு உற்பத்தியைப் பெருக்கினோம்‘ என்று சொல்கிறார்கள். தமிழ்நாட்டில்
உணவு உற்பத்தி மிகவும் உயர்ந்துவிட்டதாகவும் அமைச்சர்கள்
சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் இப்படிச் சொல்கின்ற காலத்தில்
தான் அரிசி படி ரூபாய் ஒன்றேகால் என்று விற்கிறது.
உணவு உற்பத்தியைப் பெருக்கியும்
விலை அதிகமாயிருக்கிறது என்றால் என்ன பொருள்?
மருந்து கொடுக்கக் கொடுக்கச்
சுரம் உயர்ந்து கொண்டே போனால், மருந்து கொடுப்பவனுக்குப்
பெயர் மருத்துவனா?
இப்படி விலைவாசி உயர்ந்துவிட்டது
என்று கூலி உயர்வு கேட்டால், சென்னைத் துறைமுகதத்திலும்
வால்பாறை மலைத் தோட்டத்திலும் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.
இதற்குப் பெயர் ஆட்சியா?
ஏன் அப்படி கூறினோம்?
இப்படி விலைவாசிகள் – உணவுப்
பொருட்களின் விலைவாசிகளின் உயர்ந்துகொண்டே செல்வதற்கு, ‘பெரும்
பாங்கிகளும் ஒரு காரணம் ஆகும். எனவேதான் எங்கள் தேர்தல்
அறிக்கையில் ‘பாங்கிகளைத் தேசிய மயமாக்க வேண்டும்‘ என்று
கூறியிருக்கிறோம்.
வரிகள் குறையவேண்டுமானால்,
விலைவாசிகள் கட்டுப்படுத்தப்பட வேண்டுமானால், நல்வாழ்வு
மலர வேண்டுமானால், வரும் தேர்தலில் எங்களுக்கு வாக்களியுங்கள்.
(நம்நாடு
- 28.12.61)