அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


தில்லி மேல்சபையில் திராவிடநாடு முழக்கம்

நான் திராவிட இன வழி வந்தவன், நான் என்னைத் திராவிடன் எனக் கூறி கொள்ளுவதில் பெருமிதம் கொள்ளுகிறேன். இவ்வாறு கூறிக் கொள்ளுவதானது, வங்காளியர் குசராத்தியர், மராட்டியார் முதலியவர்களுக்கு நான் எதிராக இருப்பவன் எனப் பொருள்படாது.

திராவிடர்கள் தேசியம்!

ஏதோ தனிச்சிறப்பு – ஏதோ மாறுபாடு கொண்டு விளங்கி வரும் ஒரு தனித் தேசியத் தன்மை கொண்டிருப்பவர்கள் திராவிடர்கள் என நான் கொள்ளுகிறேன் என்ற ஒரே ஒரு பொருளை மட்டுமே இது குறித்திடும் நாங்கள் விழைவது அனைத்தும் சுயநிர்ணய உரிமையே ஆகும்.

இவ்வாறு அண்ணா அவர்கள், பாராளுமன்ற மேலவையில் குடியரசுத் தலைவர் உரையின் மீது நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்கள் தொடர்ந்து பேசுகையில் அவர் கூறியதாவது,

“சுதந்திரம் பெற்ற பதினைந்தாண்டுக் காலத்துக்குப் பின்னர் தேசிய ஒருமைப்பாடு குறித்துப் பேசுவது வியப்புக்குரியதாகும் இத்துறையில் சுதந்திரம் பெற்ற நாள் தொட்டு அதிகாரத்தைச் செலுத்தி வரும் ஆட்சியும், தேசீயத் தலைவர்களும் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் நற்பயன் விளைவிக்கவில்லை என் நாம் கொள்ளலாமா?

தேசிய ஒருமைப்பாடு – வறுமையின் சின்னம்!

“ஆங்கிலமொழி அறிந்த உறுப்பினர்கள் இந்தியில் கேள்வி எழுப்பி விடை பெறுகின்ற போக்கினை, ஒருமைப்பாட்டுக்கான முயற்சி என்பதா?“

“தேசிய ஒருமைப்பாடு என்பதே முரண்பாட்டை உள்ளடக்கிக் கொண்டிருப்பதாகும். ஒருமைப்பாடு பெற்றிருக்கின்ற மக்கள் குறிப்பிட்ட தேசியத் தன்மை பெறுகின்றனர், அவர்கள், குறிப்பிட்ட தேசியத் தன்மையைப் பெற்றுவிட்ட பின்னர், அவர்களிடையே ஒருமைப்பாடு பற்றிய பிரச்சனை எழுதுவதற்கு இடமேது? ‘தேசிய ஒருமைப்பாடு‘ என்ற சொற்றொடரானது இத்துணை ஆண்டுகாலமாக நம் அனைவரையும் ஆளாக்கிக் கொண்டிருந்த கருத்தின் வலிமையைக் காட்டுவதாகும்“.

அண்ணா அவர்கள் மேலும் குறிப்பிட்டதாவது, “சனநாயக உணர்வுடைய நேரு அவர்களிடம் இன்னும் பழைய உரிமைத் தீ சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. அவரை நான் வேண்டிக் கொள்கிறேன். ‘எ‘ங்கள் திராவிட நாடு கோரிக்கையில் தாராள மனப்பான்மை காட்டுங்கள்‘ என்று.

இந்தியா ஒரே ஒரு அமைப்பு – பிரிக்க முடியாத அமைப்பு என்பதை மறந்து, மொழி வட்டார அடிப்படையில் எழுந்த பல கோரிக்கைகள் ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. எனவே கோரிக்கையை அதற்குரிய முறையில் அணுகி, நான் உறவு கொண்டிருக்கும் திராவிட இனவழிப் பகுதியில் சுயநிர்ணய உரிமையை மறுக்காமல் இருக்க வேண்டுகிறேன்.

நன்கு இணைந்து, ஒன்றோடு ஒன்று கலந்து, ஒற்றுமைப்பட்டு, ஒத்த உள்ளப்பாங்கு அமைந்த மக்களைக் கொண்ட ஒரு சிறிய தேசிய இனத்துக்குத் தனது பொருளாதார, மறுமலர்ச்சியை இணையற்ற முறையில் செயல்படுத்துவதும், சமுதாய அளவில் நல்ல விளைவுகளைக் காண்பதும் எளிதாகும். நான் வாதிடுவது ஒரு தேசியக் கோரிக்கைக்கு அல்லாது குறுகிய பாளையங்கோட்பாட்டிற்காக அல்ல.

தேசியக் கோரிக்கைக்கே வாதாடுகிறேன்!

தலைகாட்டி வரும் இப்புதிய தேசிய எழுச்சி குறித்துத் தமது உரையில் குடியரசுத்தலைவர் அவர்கள் குறிப்பிடாதது குறித்து நான் வருந்துகிறேன்.

“சனநாயகம் திரித்துக் கூறப்படுகிறது – சமதர்மமம் உருக்குலைக்கப்டுகிறது – தேசியம் தவறாகப் பொருள் படுத்தப்படுகிறது.

‘திராவிட இனவழி வந்த எங்களுக்குச் சுயநிர்ணய உரிமை வேண்டும். இதன் விளைவாக எங்கள் கலாச்சாரத் தனித்தன்மையைக் கொப்ப, எங்களால் இயன்ற அளவு அனைத்து உலகச் சிறப்புக்கு வழங்க இயலும். ஏதோ பகை உணர்வின் விளைவாக நாங்கள் தனித்திருத்தலைக் கோருகிறோம் என எவரும் கருதக்கூடாது. இதுவுமின்றி நாங்கள் கோரக்கூடிய தனித்திருத்தல், பிரிவினையிலிருந்து மாறுபட்டிருப்பதாகும். இதன் விளைவாக, மக்கள் இருப்பிடத்தை விட்டுப் பெயர்தல் என்ற பிரச்சினை எழாதென்று உறுதி கூறுகிறேன். “தட்சிண பீடபூமி“ என இன்று அழைக்கப்பட்டு வரும் நலிநூல் அமைப்பத்ததான் நாங்கள் தனி அரசாக நிறுவ விழைகிறோம்.

அதிருப்தியுடனான இந்தியா!

“நாங்கள் கோரக் கூடிய தனித்திருத்தல் ஏற்பட்டால், இந்தியத் துணைக் கண்டத்திற்கு ஏற்படக்கூடிய இழப்பு எதுவுமில்லை. அதற்கு மாறாக, அதிருப்தியுடன் கூடிய அமைப்புகள் கொண்ட இந்தியாவாகத் திகழ்ந்திடச் செய்யும்“.

இவ்வாறு அண்ணா அவர்கள் மக்கள் சபையில் மேலவையில், குடியரசுத் தலைவர் உரையின் மீது நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்கள்.

“இந்தியத் துணைக்கண்டம் அரசியல் சுதந்திரம் பெற்ற நாள் தொட்டு, ஆளும் காங்கிரசுக் கட்சி செயல்பட்டு வந்திருப்பதன் காரணமாக, சனநாயக உள்ளடக்கத்தைப் பற்றித் திரும்பச் சிந்திக்கவும், தேசியத்தைக் குறித்து மறு ஆய்வுக்குள்ளாகக்கவும் நாம் துணிய வேண்டியது இன்றியமையாததாகிறது. சமதர்மத்தைப் பொறுத்தவரையில், அந்தத் தத்துவத்திற்கு ஆளும் காங்கிரசுக் கட்சி தரும விளக்கமும், அது செயல்பட்டு வருகின்ற முறையும் உண்மையான சமதர்மத்தை நோக்கி நாட்டை அழைத்துக் செல்வதாக அமைந்திருக்கவில்லை.

தென்னாடு புறக்கணிப்பு!

“திட்டமிட்ட பொருளாதார ஆக்கப் பணிக்கு நான் எதிராக இருப்பவனல்ல. அரசுத்துறை ஏற்பாடே எனக்கு உடன்பாட்ானது ஆனால், அரசுத்துறைப் பணகிளானவை தேவையற்ற இழப்பு, ஊழல் நிர்வாகம், ஒழுக்கக் குறைவு முதலியன இல்லாமல் நடைபெற வேண்டும் என்பதே எனது விருப்பம்.

“தொழில்துறையில் தென்னாடு புறக்கணிக்கப்பட்டு வருகிறது. ஓர் உருக்காலை இல்லை – ஒரு புதிய புகை வண்டிப் பாதை இல்லை. எண்ணெய்த் துப்புரவுத் தொழிற்சாலை இல்லை – குறிப்பிடத்தக்க வேறு பெருந்தொழிற்சாலைகள் தென்னாட்டுக்கு ஒதுக்கப்டவில்லை. ஆனால், ஓர் உருக்காலை நிர்மாணிக்கப்படுவதற்குப் பதிலாக, எம் அமைச்சர்களில் ஒருவருக்கு பெருந்தொழில் துறை பொறுப்பு தரப்பட்டிருக்கிறது. இது அரசுத் திறமா? தொலை நோக்கா? அல்லது அரசியல் தன்னலக் குறியா? பிரித்து ஆளும் சூழ்ச்சியைத்தான் ஆங்கில அரசும் இங்குக் கையாண்டு வந்தது“.

(நம்நாடு - 2, 3-5-1962)