அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


டாக்டர்களாய் இருக்கிறோம்!

“மற்றக் கட்சிகளெல்லாம் மக்களை, இந்திரனே! சந்திரனே! என்று புகழ்ந்து பேசி மகிழ்விப்பார்கள், நாங்களோ, இந்திரன் ரிஷி பத்தினியைக் கெடுத்தவன் சந்திரன் குரு பத்தினியைக் கெடுத்தவன் என்று கூறி, அந்தத் தேவர்களையே கண்டித்துப் பேசுபவர்கள். நாங்கள் மக்களை மகிழச் செய்வதறக்காக, அவர்களைப் பாராட்டிப் பேசிவிட்டுப் போகிறவர்கள் அல்ல, உள்ள குறைபாடுகளை எடுத்துக் காட்டுபவர்கள்.“

“நாட்டு மக்கள் நாலாயிரம் சாதிகளாய்ச் சிதறுண்டு கிடப்பதையும், மதமாச்சரியங்களில், மூட மௌடீக நம்பிக்கைகளில் சிக்கிச் சீரழிந்து போவதையும், அந்த மதங்களும், அவை போதிக்கும் கடவுளர்களும் இந்த நாட்டில் உண்டு பண்ணிய வறுமையையும், அந்த வறுமையினால் – மக்களிடை ஏற்பட்ட வாட்டத்தையும், அந்த வாட்டத்தைப் போக்க வழி இல்லாத அட்டகாச அரசாங்கத்தையும், அந்த அரசாங்கத்தை அனுமதித்த மக்களின் அரசியல் அறியாமையையும் இடித்துக் காட்டி, மக்களிடை உள்ள குறைபாடுகளையும் எடு்த்துக்காட்டி, டாக்டர்களாய் – எச்சரிக்கைக்காரர்களாய்த் திராவிடர் இயக்கத்தவரான நாங்கள் இருக்கிறோம். இந்தக் குறைகள் களையப்பட, பரிகாரம் காணுமாறு மக்களை வேண்டுகிறோம்“ என்று தாம்பரத்தில் 8.8.1954 மாலை நடைபெற்ற, தாம்பரம் தி.மு.கழகப் பொதுக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுப் பேசினார்.

8.8.1954இல் தாம்பரம் தி.மு.கழகச் சார்பில் ஒரு மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

தாம்பரம் தி.மு.கழகச் செயலாளர் முனுஆதி அனைவரையும் வரவேற்றார்.

தோழர் சி.வி.எம். அண்ணாமலை அவர்கள் தலைமை ஏற்று நீண்டதொரு சொற்பொழிவாற்றினார்.

பின்னர் தோழர் சி.வி.இராசகோபால் சிறிது நேரம் பேசினார்.

இறுதியாக தி.மு.கழகப் பொதுச் செயலாளர் அண்ணாதுரை அவர்கள் சீரிய கருத்துக்களை மிகச் சிறந்த முறையில் விளக்கி ஒன்றரை மணிநேரம் கருத்துரையாற்றினார்கள்.

இலட்சிய விளக்கச் சொற்பொழிவு!

கூட்டம், சென்னைத் தாம்பரத்தைச் சார்ந்த ராமசாமிப் பெரியார் நகர், துரைசாமி மார்க்கம் மைதானத்தில் நடைபெற்றது. பல்லாயிரக்கணகக்கான மக்கள் ஆர்வத்தோடு கூடி நின்றனர். பொதுச் செயலாளரின் லட்சிய விளக்கச் சொற்பொழிவு கூடியிருந்தவர்க்கு வழிகாட்டும் ஒளிவிளக்காய் அமைந்தது என்றால் அது மிகையல்ல!

தலைவர் முடிவுரை கூற கூட்டம் இனிது கலைந்தது. கூட்டத் துவக்கத்தில் பலர் இயக்கப் பண் பாடினர். பொதுச் செயலாளருக்குப் பல மன்றங்கள், தொழிலாளர் சங்கங்கள், கழகங்கள் ஆகியவைகளால் மலர் மாலைகளும் கைத்தறி ஆடையும் அணிவிக்கப்பட்டன. தொடர்ந்து பொதுச் செயலாளர் அண்ணாதுரை அவர்கள் பேசியதாவது.

தாம்பரத்தின் இப்பகுதிக்கு நான் நெடுநாட்களுக்குப் பிறகு இன்று வந்துள்ளேன். இந்தப் பகுதிக்குச் செங்கற்பட்டு மாவட்டக் கழகத்தார், ‘பெரியார் ராமசாமி நகர்‘ எனப் பெயரிட்ட வைபவத்துக்கு ஒருமுறை இங்கு வந்திருந்தேன். அன்றிருந்த நிலையிலிருந்து உருவமாறி வளர்ந்துள்ள இன்றைய நிலையில் இரண்டாம் முறையாக வந்துள்ளேன். இந்த வாய்ப்ப் கிடைத்தமைக்கும் பெரிதும் மகிழ்கிறேன்.

நாங்கள் எச்சரிப்பவர்கள்!

பல்லாயிரக்கணக்கில் இங்கு, கூடியுள்ள மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், இதர கட்சியினருக்கம் உள்ள ஒரு அடிப்படை வித்தியாசத்தை எண்ணிப் பார்க்க வேண்டும்.

மற்ற கட்சியினரெல்லாம் மக்களைப் புகிழ்ந்து பேசுவார்கள், பாராட்டுவார்கள், மக்களை எல்லாம் தெரிந்தவர்கள் என ஏற்றிப் போற்றுவார்கள், ஞானவான்கள் என்றும் புகழ்வார்கள்.

ஆனால், திராவிடர் இயக்கத்தவராகிய நாங்கள்தான் மக்களின் குறைபாடுகளை, அவர்களைக் கப்பிக் கொண்டிருக்கும் அறியாமையை, அவர்களை மூடிக் கிடக்கும் மூடமௌடீக மத நம்பிக்கைகளை எடுத்துக் காட்டி அவர்களிடையே உள்ள குற்றம் குறைகளை விளக்கி எச்சரிப்பவர்கள்!

ஒரு நண்பர் இன்னொரு நண்பரைப் பார்க்கும் போது அவர் மாநிறத்தவரானாலும் “நீ தங்க நிறமாயிற்றே“ என்று புகழ்ந்து கூறினால், அந்த நண்பர் மனமகிழ் கொள்ளாமலிக்க மாட்டார்!

தவறுகளைக் காட்டுகிறோம்!

ஆனால், அதே மனிதரை நாடியைப் பிடித்துப் பார்த்து, காசநோய் வரக்கூடும் என்றும், கண்களை விரித்துப் பார்த்து மஞ்சள் காமாலை வரலாம் என்றும், கால்களைத் தடவி வீக்கம் இருப்பதைக் கண்டு வாதசுரம் வரலாம் என்றும் கூறும் டாக்டர் மீது கோபப்படமாட்டாரா இந்த மனிதர்?

அதைப் போலவேதான். மற்ற கட்சியினர் மக்களைப் பாராட்டிப் பேசிவிட்டுப் போகிறார்கள், நாங்கள் டாக்டரைப் போல, மக்களிடை படிப்பு வளரவில்லை, பகுத்தறிவும் தெளிவு பெறவில்லை, ஆராயும் திறன் அறவே இல்லை, தரித்திரம் நாட்டில் தலைவிரித்தாடுகிறது என்றெல்லாம் குறை கூறுகிறோம், எச்சரிக்கிறோம், தவறுகளை எடுத்துக் காட்டுகிறோம்!

உண்மைகளை நாங்கள் சொல்லும்போது உங்களுக்குக் கசப்பாகத்தான் இருக்கும். உடலில் உள்ள நோய்களைச் சுட்டிக் காட்டி வைத்தியம் செய்யும் டாக்டர்கள் போலவே சமுதாயத்தில் உள்ள சீரழிவுகளை, சீர்கேடுகளை எடுத்துக்காட்டி இவைகளைக் களைய வேண்டும் என்று கூறுகிறோம் நாங்கள்.

எந்த நாட்டிலாவது உண்டா?

இந்த நாட்டுச் சமுதாயத்திலே மலிந்து கிடக்கிற இழிவுகள்போல் வேறெந்த நாட்டிலும் உண்டா? சாதி வழக்குகளும், மத மூட நம்பிக்கைகளும், உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவு இந்த நாட்டிலேதானே அதிகம்? என்று பொதுச் செயலாளர் அவர்கள் திராவிடச் சமுதாயம், சீர்திருத்தப்பட வேண்டிய சீரழிந்த நிலையில் இருப்பதையும், அவற்றை யார்தான் சீர்திருத்துவது என்பதையும் விளக்கிவிட்டு நாட்டு முன்னேற்றம் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்தால்தான் ஏற்பட முடியும் என்பதையும் விளக்கிவிட்டுத் தொடர்ந்து பேசியதாவது.

இந்ா நாட்டவரைப் போல் உழைப்பவர் வேறெங்கணும் இல்லை, என்றாலும் இந்த நாட்டைப் போல் தரித்திரம் தலை விரித்தாடுவதும் வெறங்கணும் இல்லை, ஏன்?

உலகத்தின் உள்ள வேறெல்லா நாட்டவரும், இந்த நாட்டு மக்களைக் காட்டிலும் குறைவாக உழைக்கிறார்கள், என்றாலும் அவர்கள் வாழ்கிறார்கள். நாம் அதிகமாக உழைத்தும் வாழ முடியவில்லை, ஏன் – இந்த கேள்விக்கு நியாயமான விடை தராத எந்தக் கட்சியினரும் மக்கள் மன்றத்தில் நல்ல கட்சிக்காரனாகி விட முடியாது.

பாடுபட்டும் பலன் காணாத பாட்டாளி!

பாடுபட்டும் பலன் காணாத பாட்டாளியை, ‘ஏனப்பா உன்னால் வாழ முடியவில்லை‘ என்று கேட்டால், அவன் “ஆட்டுக்குட்டிக்கும் ஆண்டவன் அளந்துதானே வால் வைத்தான், அதைப்போல என்கும் இவ்வளவுதான் வாழ்வு என்று தலையில் அவன் எழுதிவிட்டானே! என்ன செய்ய?” என்று தானே சொல்லுகிறான்?

கொஞ்சம் தெளிவு பெற்றவனைக் கேட்டால் அவன் சொல்கிறான்,“விலைவாசிகள் ஏறிப்போயிருக்கின்றன, கிடைக்கிற ஊதியத்தைக் கொண்டு ஏறியுள்ள அகவிலைகளைச் சமாளித்து....“ என்று கொஞ்சம் தெளிவாகப் பேசுகிறான்.

இன்னும் கொஞ்சம் தெளிவுபெற்ற தேசியவாதிகள் சொன்னார்கள் – நமது வறுமைக்கக் காரணம் எல்லாம் நாம் உழைக்கிறோம் – நம் உழைப்பை வெள்ளையன் சுரண்டுகிறான் அதுதான்!“ என்று சொன்னார்கள்.

அடுத்தபடியாகச் சுயமரியாதைக்காரன்தான் உண்மை நிலைகளை விளக்கமாகச் சொல்கிறான்.

“பலம் பொருந்திய யானையானாலும் சேற்றில் இறங்கிவிட்டால் சிறிய ஓநாயும் யானையைக் கடித்துவிடக் கூடும், சீறிப் பாயும் சிறுத்தையானாலும் குகைக்குள் சிக்கிவிட்டால் சுட்டு வீழ்த்தப்பட முடியும், அதைப்போலவே நாமும் எவ்வளவு பெரிய சமுதாயமானாலும் உலகம் வளர்ந்துள்ள அளவு வளராவிடின் வாழ்விப்பது நிச்சயம்“

வாழவில்லை – வாழ முடியவில்லை

“இன்ற நாம் வாழவில்லை, வாழ முடியவில்லை என்றால் அதற்குக் காரணம் நாம் இன்று அறிவுத் துறையில், விஞ்ஞானத் துறையில், அரசியல் துறையில் இவற்றில் எல்லாம் வேகமாக வளர்ந்துள்ள உலகத்தின் வளாச்சியையொட்டி நாம் வளரவில்லை என்பதுதான்“ என்று பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர், நாம் விஞ்ஞான அறிவுத் துறையில் பின்தங்கி இருக்கிற நிலைகளையெல்லாம் தெளிவாக விளக்கிவிட்டுத், தென்னாட்டு மக்கள் மானத்துடன் நிரந்தரமான தொரு நல்வாழ்வு பெற வடநாட்டு ஆதிக்கப் பிடியிலிருந்து விடுபட திராவிட நாடு திராவிடருக்காக வேண்டும் என்று கூறி, திராவிடத்திற்கான ஆதராங்களையும், வரலாற்று உண்மைகளையும் எடுத்துக் காட்டினார்.

திராவிடம் வடநாட்டிலிருந்து பிரிந்தாலன்றித் தென்னவர்க்கு வாழ்வில்லை. என்பதை அறுதியிட்டுக் கேட்டவர் உணரும் வண்ணம் பொதுச்செயலாளர் அவர்கள் லட்சிய விளக்கம் தந்தார்கள்.

(நம்நாடு - 9-8-1954)