அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


திராவிடம் தனித்தியங்க முடியும்

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சித்தூரில் அறிஞர் அண்ணா அவர்கட்கு அளிக்கப்பட்ட மாபெரும வரவேற்பையும் அண்ணா அவர்கள் ஆற்றிய உரையையும் சித்தூரிலிருந்து வெளிவரும் ‘தினமணி‘ இதழ் பின்வருமாறு வெளியிட்டுள்ளது.

சித்தூர் செப்.26.
திராவிட இனமொழி இராஜ்யங்களடங்கிய திராவிட நாடு பாத்திலிருந்து பிரிய வேண்டியதன் அவசியம் குறித்துத் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீ.சி.என்.அண்ணாதுரை இன்று மாலை சித்தூரில் நடைபெற்ற ஒரு மாபெரும் கூட்டத்தில் விளக்கினார்.

திராவிட நாடு தனித்து இயங்கக்கூடிய இயற்கை வளங்கள் கொண்டது என்றும், டில்லியின் மேலாதிக்கம் அவசியமற்றது என்றும் அவர் உதாரணங்களுடன் கூறினார்.

சித்தூரில் வீதிகளில் வளைவுகளும் பந்தல்களும் அமைத்து, அலங்கரித்த காரில் அண்ணாதுரையை அமர்த்தி உள்ளுர் தி.மு.க.வினர் நடத்திய ஊர்வலம், பொதுக்கூட்டத்துக்குப் பூர்வாங்கமாக நடைபெற்றது.

மண்டித்தெரு மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் துவக்கத்தில் ஸ்ரீ.சி.எம். அண்ணாமலை துவக்க உரையாற்றினார்.

ஸ்ரீ அண்ணாதுரைக்கு ஸ்தல தி.மு.கவினரும், மற்றும் பல ஸ்தாபனத்தினர்களும், கைத்தறி ஆடைகளும், மலர் மாலைகளும் அணிவித்துத் தேர்தல் நிதிக்குத் தொகையும் வழங்கினர்.

தமிழும் சிதைந்து, தெலுங்கும் திரிந்து, இரண்டும் கெட்ட நிலையில் உள்ள சித்தூர் வாசிகளின் பாதையைப் பற்றி அண்ணாதுரை ஆரம்பத்தில் குறிப்பிட்டார்.

ஆந்திர நாட்டில் குண்டூர், கடப்பை முதலிய ஜில்லாக்களில் தி.மு.க. கருத்துக்களுக்கு ஆதரவு இருப்பதாகவும் ஆந்திர அரசியல் தற்போது ஜாதி அடிப்படையில் அமைந்திருப்பதாகவும் இனமொழி ராஜ்யங்கள் கூட்டாக அமையும் திராவிடநாடு விரைவில் ஏற்பட வேண்டுவது அவசியம் என்றும், தமிழுக்கும் தெலுங்குக்கும் இடையே உள்ள தொடர்புகளையும் உதாரணங்களுடன் விளக்கினார்.

அவர் மேலும் பேசுகையில் குறிப்பிட்டதாவது –

“பிளவு துவேஷ சக்திகளை ஒடுக்கும் மசோதா சட்டமானால் நான் ஜெயிலுக்குப் போக நேரிடும். அப்போது தெலுங்கு பயின்று ஆந்திரத்தில் திராவிட நாடு பிரச்சாரம் செய்வேன். திராவிட நாட்டில் ஆந்திரர் தெலுங்கிலும், கன்னடியர் கன்னடத்திலும், தமிழர் தமிழிலும், கேரளர் மலையாளத்திலும் ஆட்சிநடத்தலாம். இவற்றுக்குள் மேலாதிக்கம் ஒருவருக்கும் இல்லை!“

“நமது கலாச்சாரத்துக்கும், வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்களுக்கும் முற்றிலும் மாறான வடநாட்டு ஆதிக்கத்தின் கீழ்த் திராவிட இன மொழியினரான நாம் அடங்கிக் கிடக்கிறோம்.

திராவிட இன மொழியினரிடையேயுள்ள தொடர்புக்கு உதாரணமாகக் கர்நாடக இசையைக் குறிப்பிட்டுத் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து தியாகையர் தெலுங்கில் பாடிய கீர்த்தனைகள் கன்னட, மலையாள நாடுகளிலும் வழங்கி வருவதை எடுத்துக் காட்டினார்.

வடவர்களுக்கும் திராவிட இன மக்களுக்குமிடையே உணவு, உடை, பண்டிகைகள், இசை, கோயில் அமைப்பு, அர்ச்சனை முறை ஷேத்திரப்பெயர் மற்றும் பல அம்சங்களிலும் உள்ள வேறுபாடுகளை அவர் விரிவாகக் கூறினார்.

மேலும் அவர் குறிப்பிட்டதாவது –
“வெள்ளையர் அமைத்த பட்டியில் அடைப்பட்டதாலே இந்தியா என்று ஓர் அமைப்பு ஏற்பட்டது. ஆங்கில ஆட்சி நீங்கிவிட்டது. இனத் தொடர்புள்ள மொழிகள் தனித்துப் பிரிவது இயல்பு. ஆங்கில ஆட்சி நீங்கி வடவர் ஆட்சி மேலாதிக்கம் பெற்றது. சீமைப்பொருள்கள் இறக்குமதி நின்று வடநாட்டுப் பொருள்கள், கவர்கனர்கள் மற்ற அதிகாரிகள் போன்றவை இங்கு ஆதிக்கம் பெற்றிருக்கின்றன. டில்லியில் மந்திரிகளும், துணை மந்திரிகளும் ஆக மொத்தம் 91 மந்திரிகள் நம்மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர். அவர்களுக்குச் சம்பளமும், அந்தஸ்தும் அதிகம். அதற்கு அவசியம் என்ன?”

“திராவிட நாட்டில் வன வளமும், கனி வளமும் நிறைந்திருக்கின்றன. நம்மவர்கள் வெளிநாடுகளில் கூலிகளாகவும் பிச்சைகக்ாரர்ககளாகவும் வாடுகின்றனர். பம்பாயில் கைவண்டிக்காரர்களாக உள்ள தமிழர்கள் இரவில் வண்டிகளையே வீடாகக் கொள்ளும் அவலநிலை இருக்கிறது.

‘குண்டூர்ப் புகையிலியும், நெய்வேலி நிலக்கரியும், கோலார்த் தங்கமும், கேரளத்து மிளகும் இப்படி பல வளங்களும் கொழித்திருக்க நாடு வறுமைப்படுவது வடவர் ஆதிக்கத்தில்தான்“.

அவர் முடிவாகக் கூறுகையில், பொருள்கள் நிறைந்த பெட்டி நம்மிடமும், அதன் சாவி டில்லியிடமும் இருப்பதாகக் கூறி அந்தச் சாவியைப் பெறப் போராட வேண்டும் என்றார்.

“நாடு பெரிதா, சிறிதா என்பது பொருளல்ல, தனியாட்சி நடத்தும் தகுதி இருக்கிறதா இல்லையா என்பதையே முக்கியம், திராவிடநாடு தனித்தியங்க முடியும். அதற்கு வேண்டிய வளம் நம்மிடம் உண்டு. அதை அடைவதற்காக வீரமும் தியாகமுமே நமக்கு வேண்டுவது“. என்று – அண்ணாதுரை நன்றியுடடன் கூறி உரையை முடித்துக் கொண்டனர்.

(நம்நாடு - 30.9.61)