அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


‘திராவிட நாடு – இலட்சியப் பயணம்!‘

திராவிடநாடு கோரிக்கையில் பொதிந்திருக்கக்கூடிய நியாயத்தை வலியுறுத்துவதற்காக, வடக்கிற்கும் தெற்கிற்கும் தொழில் துறையில் இருந்து வரக்கூடிய ஏற்றத் தாழ்வை நான் எடுத்துக் கூறவில்லை. வேறு காரணங்களை உள்ளடக்கமாகக் கொண்டிருப்பது திராவிட நாடு கோரிக்கை.

இவ்வாறு அறிஞர் அண்ணா அவர்கள், மாநிலங்கள் அவையில் நிதிநிலை அறிக்கையின் மீது உரையாற்றுகின்ற பொழுது, திராவிடநாடு இலட்சியத்தில் நமக்கிருந்துவரக்கூடிய உறுதிப்பாட்டினை அழுத்தந்திருத்தமாக அறிவித்தார்.

நிதி அறிக்கைப் பற்றி நமது கருத்தினை அண்ணா அவர்கள் வெளியிட்ட நேரத்தில், தொழில் துறையில் இருந்து வருகின்ற வட்டார ஏற்றத் தாழ்வைச் சுட்டிக் காட்டி, இந்த ‘ஏற்றத்தாழ்வு உடனடியாகக் களையப்படுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்‘ என வலியுறுத்தினார். இதை ஒரு புகாராகக் கொண்டு, பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பூபேஷ் குப்தா அவர்கள் குறுக்கிட்டுத் தம் ஒத்துழைப்புக்கான பின் வரும் நிபந்தனையை வெளியிட்டடார் அது,இது.

ஆணித்தரமாக அறிவிக்கிறேன்!

“திராவிடநாடு கோரிக்கையை நீங்கள் கை விட்டு விடுங்கள், தமிழகத்திற்கு மேலும் பல தொழில்களைப் பெற்றுத்தர நாங்கள் உங்களுக்குத் துணை புரிகிறோம்“.

வட்டார ஏற்றத் தாழ்வு களைப்பட்டுத் தொழில் துறையில் தென்னகம் வடநாடு போல் ஒத்த நிலை பெற ஒத்துழைப்புத் தருவதாகத் தன்னிச்சையாகப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் முன் வந்தமைக்கு அண்ணா அவர்கள் தன்னடக்கத்துடன் நன்றி தெரிவித்துவிட்டு, அவ்வொத்துழைப்புக்கு அந்தத்தலைவர் விதித்த நிபந்தனையை ஒதுக்கித்தள்ளும் கருத்துடன், திராவிட நாடு இலட்சியத்தில் தமக்குள்ள உறுதிப்பாட்டினைத் திட்டவட்டமாக வெளியிட்டார்.

“திராவிட நாடு கோரிக்கையிலிருந்து நான் பின் வாங்குவதோ அல்லது என்னையே ஆளாக்கிக் கொண்டிருக்கக் கூடிய அந்தப் புனிதமான இலட்சியப் பயணத்திலிருந்து என்னை அச்சுறுத்தித் தடுத்து நிறுத்தி விடுவது என்பதோ அறவே இல்லை என்பதை ஐயத்திற்குத் துளியுமிடமின்றி ஆணித்தரமாக அறிவித்துக் கொள்கிறேன்“.

(நம் நாடு - 22-6-62)