அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


திராவிடநாடு விடுதலை வாரம்

தலைமைக் கழக அறிக்கை

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படைக் கொள்கையும், திராவிடப் பெருங்குடி மக்கள் நல்வாழ்வு பெறுவதற்கு உறுதுணையாய் அமைவதுமான ‘திராவிடநாடு திராவிடருக்கே‘ என்னும் நமது உரிமையை டில்லிப் பேரரசுக்கு நினைவூட்டவும் திராவிட மக்களின் ஆதரவை மென்மேலும் திரட்டவும், கழகம் கண்ட நாளை ஆண்டு தோறும் திராவிட நாடு விடுதலை வாரமாகக் கொண்டாடி வந்திருக்கிறோம்.

சுதந்திரத் திராவிடம் அமைவதே நமது வாழ்வின் இலட்சியம் என்ற மகத்தான கொள்கைக்கு நாடெங்கும் நாள்தோறும் பெருகிவரும் ஆதரவினைக் கண்ட டில்லிப் பேரரசு, தன்னிடமுள்ள அதிகாரப் பலத்தாலும் அவசரச் சட்டங்களாலும் உரிமையைப் பறித்து விடலாம் என்று திட்டமிட்டு வருகிறது.

ஆளவந்தாரின் இவ்வித அடக்குமுறைகளுக்கும் அல்லது மாற்றாரின் இழி செயல்களுக்கும் அஞ்சி, திராவிட மக்களுக்குத் தன்மாக வாழ்வைத் தரும் மகத்தான திட்டமான சுதந்திரத் திராவிடத்தைப் பெறும் நமது பணியிலிருந்து ஒரு சிறிதும் தளர்ச்சியடையமாட்டோம். அப்பணியில் மேலும் நம்மைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்வோம் என்ற உறுதிப்பாட்டினை உலகுக்கு எடுத்துக் காட்டும் வகையில், இந்த ஆண்டு திராவிட நாடு விடுதலை வாரத்தை செப்டம்பர் திங்கள் 17 ஆம் நாளிலிருந்து 24ஆம் நாள் வரை சீரும் சிறப்புமாக கொண்டாட வேண்டியது நாடெங்குமுள்ள கழகத் தோழர்கள் ஒவ்வொருவரின் நீங்காக் கடமையாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே, திராவிட நாடு விடுதலை வாரத்தை (செப்டம்பர் 17 முதல் 24 வரை) ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் ஆகியவைகளைச் சீரிய முறையில், அமைதியாக நடத்தி, தக்க ஆதாரங்களுடன் நமது கொள்கையை விளக்கிக்காட்டிக் கொண்டாடுமாறு திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களையும், ஆதரவாளர்களையும், அலுவலாளர்களையும் மனமார விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

அறிவகம் அண்ணாதுரை
பொதுச் செயலாளர், தி.மு.க.
சென்னை-13.