அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


திராவிடர் திருநாள்

சென்னை மாவட்டத் தி.மு.கழக ஆதரவில் வண்ணைத் தியாகராயர் மண்டபத்தில், ‘திராவிடர் திருநாள்’ 14.4.54 இல் கொண்டாடப்பட்டது. தோழர் என்.வி.நடராசன் தலைமை தாங்கினார்.

12 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியரின் பேச்சுப் போட்டியுடன் விழா தொடங்கியது. சிலம்பு விளையாட்டு, மல்யுத்தம், இன்னிசை நாட்டியம் ஆகியவையும் நடைபெற்றன. இதில் கலந்து கொண்டவர்களுக்கு தோழர் இரா.நெடுஞ்செழியன் பரிசுகள் வழங்கினார்.

பொங்கல் விழா
தோழர் நடராசன் தலைமையுரையில், ‘பொங்கல் விழா, யாவருக்கும் பொதுவானதொரு பண்டிகை’ என்று குறிப்பிட்டு விட்டு, “காங்கிரஸ் ஆட்சியில் வடநாடுதான் முன்னேறியிருக்கிறது தென்னாடு பின்னோக்கியே போய்க்கொண்டிருக்கிறது” என்றார்.
அடுத்து, தோழர் பொன்னம்பலனார் பேசுகையில் தி.மு.கழகம், தனது நாட்டு மக்களுக்குச் செய்துவரும் சேவைகளை விளக்கிவிட்டுப் பேசுகையில், “நாட்டில், பசி, பட்டினி தாண்டவமாடுகின்றன. நாமெல்லோரும் பாரதத்தாயின் அருமை மக்கள் என்று கூறுவதை விட்டுவிட்டு, திராவிட நாடு வடநாட்டின் பிடியிலிருந்து விடுபடுவதற்கு, மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்” என்றார்.

திராவிட நாடு
பின்னர், ‘தோழர் காஞ்சி கல்யாணசுந்தரம் பேசுகையில், ‘திராவிட நாட்டை அடைந்தாலன்றி நாம் ஓய்வு பெற இயலாது’ என்று கூறிவிட்டு, ‘உலகத்தில், எதை நாட்டு மக்களையும் தமிழன் சுரண்டவில்லை; தென் ஆப்பிரிக்காவில் மலான் நடத்தி வரும் நிறபேதக் கொள்கைக்கு, வடநாட்டிலிருந்து அங்குச் சென்றிருப்போரின் சுரண்டல் கொள்கையே காரணம்” என்றார்.

அடுத்து தோழர் மதியழகன் பேசுகையில், விழா கொண்டாட திரளான மக்கள் குழுமியிருப்பது கண்டு மகிழ்ச்சியடைவதாகக் கூறிவிட்டு, “ஆனால் திராவிட மக்கள் முழு மகிழ்ச்சியுடன் இந்த நாளைக் கொண்டாட முடியவில்லை. அரசினர், கழகத்தின் நடவடிக்கைகளில் பங்கெடுத்துக் கொண்டோரின் எண்ணிக்கையைக் கூற மறுக்கும் அளவுக்குப் பொதுமக்கள், தி.மு.க. கட்சிக்கு ஆதரவளித்து வருகின்றனர்” என்று குறிப்பிட்டார்.

நடிகமணி தோழர் டி.வி.நாராயணசாமி பேசுகையில், பொங்கல் பண்டிகை பகுத்தறிவுக்கேற்ற நாள் என்று குறிப்பிட்டுவிட்டு, “வெகு சீக்கிரத்தில் நாட்டு அரசுரிமை தங்கள் கையில் வந்துவிடும் என்பதில் ஐயமில்லை” என்றார்.

தமிழர் திருநாள்
பின்னர், தோழர் நெடுஞ்செழியன் பேசுகையில் கூறியதாவது: “பொங்கல் பண்டிகை ஒன்றுதான் தமிழர் திருநாளாகும்; மற்ற விழாக்களின் பெயர்களைப் படித்த மாத்திரத்திலேயே, அவை, தமிழரது திருவிழா அல்ல என்று கூறிவிடலாம். தமிழ்நாட்டின் பண்டைய நூல்களில், பொங்கல் பண்டிகையைத் தவிர, வேறு பண்டிகை எதைப்பற்றியும் குறிப்பிடவில்லை” என்றார்.

பின்னர், பொதுச்செயலாளர் தோழர் அண்ணாதுரை அவர்கள் பேசினார். அவர் குறிப்பிட்டதாவது:-
“பொங்கல் பண்டிகைக்கும் நாட்டில் கொண்டாடப்படுகின்ற மற்றைய பண்டிகைகளுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு, ‘மற்ற பண்டிகைகள் இந்த உலகத்திலில்லாது, இறந்த பிறகு போவதாகக் கூறப்படும் ஓர் உலகத்தில் வாழ்வதைச் செய்வதாகச் சொல்கையில், பொங்கற் புதுநாளோ, இந்த உலகத்திலேயே மனிதன் நன்கு, களிப்புடன் வாழுவதற்கு வகை செய்வதாக அமைந்துள்ளது” என்றார்.

தமிழ்த் திருநாள்
தொடர்ந்து அவர் பேசினார். “தி.மு.கழகத்தினர், விழாக்கள் எதையுமே ரசிக்கத் தெரியாதவர்களோ என்று சிலர் ஐயப்படுகின்றனர். அந்த ஐயப்பாட்டைத் தீர்ப்பதற்கே நாங்கள் சில ஆண்டுகளாகப் பொங்கல் புதுநாளை விமரிசையாகக் கொண்டாடி வருகிறோம். காலஞ்சென்ற தமிழ்ப் புலவர் கா.நமசிவாயனார் ‘தமிழ்த் திருநாள்’ என்று பொங்கல் விழாவைத் தொடங்கினார். சென்ற ஆண்டு இவ்விழாவைக் கொண்டாடிய போது தஞ்சை மாவட்டத்தில் புயலினால் பலர் வருந்தினார்கள்; இவ்வாண்டும், அடக்கு முறைப் புயலினால் மக்கள் அவதியுறுகிறார்கள். இரண்டு புயல்களையும், கழகத் தோழர்கள் தைரியத்துடன் எதிர்த்து நின்று சமாளித்து விட்டனர்.

பொங்கல் விழா கொண்டாடும் சமயம், தூத்துக்குடிச் சம்பவங்கள் சம்பந்தமாகச் சிறையில் அவதியுறும் 10 தோழர்கள் நிலையையும் நினைவில் கொண்டு அவர்களை விடுதலை செய்ய மக்கள் முயற்சி செய்ய வேண்டும்.”

(நம்மாடு - 18.1.54)