அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


திராவிடத்தை மீட்போம்!

“தி.மு.கழகத்தின் நோக்கம், கண்ணியமானது, நோக்கம் மட்டுமல்ல. அதை அடைய வகுக்கப்படும் வழிமுறைகளும், கண்ணியமானவைகளேயாகும்.

வழக்கு, எங்கள் மீதுதான் என்றாலும், எங்களுக்கும், தி.மு.கழகத்துக்கும் இருக்கும் தொடர்பு காரணமாக, இந்த வழக்கின் விளைவுகள், எங்களை மட்டுமல்ல – தி.மு.கழகத்தையும் பாதிக்கும். எனவே, உங்கள் முன்னிலையில் எல்லா விவரங்களையும் கூற விரும்புகிறேன் சட்டத்தின் – தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள அல்ல – திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருப் பெயருக்கு – மாசு ஏற்படாமலிருப்பதற்காக.

“வடநாட்டு ஆதிக்கப் பிடியிலிருந்து, எங்கள் தாயகத்தை மீட்கும் உன்னத நோக்கமே எங்களுடைய அரசியல் இலட்சியம். இந்த உயரிய இலட்சியத்திற்காகவே பாடுபடுவோம். வீம்புக்காக அல்ல – மனித வரலாற்றின் சுவை மிகுந்த அத்தியாயமாகிய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட எல்லோருக்கும், எத்தகைய மனோவேகம் இருந்ததோ, அத்தகைய மனோவேகத்துடன்!

‘மக்கள் குரலே – மகேசுவரன் குரல்‘

“நம்முடைய முதலமைச்சரை – பக்திமான், கடவுளுக்குப் பயந்தவர் – என்றெல்லாம் கூறுகிறார்கள். ஆனால், அவரோ மனிதனையும் மதிக்கவில்லை, கடவுளையும் மதிக்கவில்லை. ‘மக்கள் குரலே, மகேசுவரன் குரல்‘, என்று, ஓர் அரசியல் மொழி உண்டு, இதனை எவரும் அலட்சியம் செய்ய முடியாது. ஆனால், தெய்வத்திற்குப் பயந்தவர் – பக்திமான் – நம்முடைய முதலமைச்சர். மக்க குரலைக் கேட்க மறுக்கிறார்! அதனால், மகேசுவரனின் குரலையும் அவர் மதிக்கவில்லை!!

இந்த வாக்கு மூலத்தைப் பதிவு செய்யும்படியான சந்தர்ப்பம் கிடைத்தமைக்கு என்னுடைய நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதன்மூலம், என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுக்கவோ – வாதிடவோ, அல்ல, நான் விரும்புவது தங்களது நீதி உணர்ச்சியிலும், நேர்மை எண்ணத்திலும் முழு நம்பிக்கை வைத்திருக்கும் நான், எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பலவிதமாக குற்றச்சாட்டுகளுக்குக் காரணமான – இயற்கையானதும், உண்டாக்கப்பட்டதுமான சூழ்நிலைகளை விளக்க விரும்புகிறேன்.

எங்களைப் பொறுத்தவரையில் இந்த வழக்கு ஒரு சாதாரணச் சம்பவமல்ல, நாங்கள் ஈடுபட்டிருக்கும் இயக்கத்தின் வரலாற்றில் குறிப்பிடத்தக்கதோர் சம்பவமாகும். எனவே, விரிவாகவும், விளக்கமாகவும், இந்த வாக்குமூலம் இருக்க வேண்டியிருக்கிறது.

‘நீதி ஏடுகளில் நிரம்ப இடம் உண்டு‘

இந்த வழக்கு சம்பந்தமான சில முக்கிய அம்சங்களை – மேன்மை தங்கிய நீதிபதி அவர்களே! - உங்கள் முன் வைக்க, அனுமதியுங்கள். பலதரப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளோம் – சட்ட மொழியிலே கூற வேண்டுமானால், சில குறிப்பிட்ட குற்றங்களைச் செய்யத் தூண்டினோம் என்று இங்கே நிறுத்தப்பட்டிருக்கிறோம்.

குற்றம் சாட்டப்பட்டவன், தன்னுடைய சூழ்நிலைகளையும் சற்றுச் சார்புகளையும் – தண்டனையிலிருந்து தப்புவதற்காக, அல்ல, நீதிமன்றத்தின் முன்பும் அதன்மூலம் மக்கள் மன்றத்துக்கும் விளக்கி விவகாரங்களின் உண்மை நிலையை உணர்த்துவதற்கும், சட்ட ஏடுகளில் இடமுண்டா என்பது எனக்குத் தெரியாது – ஏனெனில், சட்ட ஏடுகளைக் கற்றவனல்ல! - ஆனால், நீதி ஏடுகளில் நிரம்ப இடமுண்டு என்று உறுதியாக நம்புகிறேன்.

சர்க்கார் தரப்பு முதல் சாட்சி கூறியபடி. லட்சத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருப்பதும். சிற்றூர்களிலும் பேரூர்களிலும் ஏராளமான கிளைகளுடன் தமிழகமெங்கும் பரவியிருப்பதுமான, ஜனநாயக அமைப்பு – திராவிட முன்னேற்றக் கழகம். அதன் பொதுச் செயலாளன், நான். மற்ற நால்வரும், அதனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு, எனக்குத் துணை நிற்கும், தோழர்கள்.

எந்த இயக்கமும் பெற முடியாத செல்வாக்கும் சிறப்பும் பெற்று விளங்குகிறது, திராவிட முன்னேற்றக் கழகம். நேரமும் சந்தர்ப்பமும் கிடைத்தால், ஜனநாயக முறைகளுக்குட்பட்டு. ஆளும் கட்சியை அகற்றி. ஆட்சிப் பொறுப்பை ஏற்கக்கூடிய வலிமையும் வாய்ப்பும் பெற்று உன்னதமான அமைப்பாகும். இதனை, நான் குறிப்பிடுவது – திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றிய விரிவான விளக்கத்தைத் தருவதற்காக அல்ல, தனிப்பட்ட முறையிலும், கூட்டாகவும் எத்தகைய மகத்தான பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளோம் என்பதை எடுத்துக்காட்டவேயாகும்.

வலிமையும் வாய்ப்பும் பெற்ற அமைப்பு தி.மு.க.

ஆயிலனும், இங்கே, நிறுத்தப்பட்டிருக்கிறோம் – ‘குற்றம் செய்யத் தூண்டினோம்‘, என்பதாக!

வழக்கு, எங்கள் மீதுதான் என்றாலும், எங்களுக்கும் தி.மு.க.வுக்கும் இருக்கும் தொடர்பு காரணமாக இந்த வழக்கின் விளைவுகள் எங்களை மட்டுமல்ல – தி.மு.க.வையும் பாதிக்கும். எனவே, உங்கள் முன்னிலையில் எல்லா விபரங்களையும் கூற விரும்புகிறேன். சட்டத்தின் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள அல்ல – திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருப்பெயருக்கு மாசு ஏற்படாமலிருப்பதற்காக.

திராவிட முன்னேற்றக் கழகம் – திராவிட நாட்டின் விடுதலைக்குப் பாடுபடுவதாகும். ஆந்திரம், கன்னடம், கேரளம், தமிழகம் ஆகிய மொழிவாரிப் பிரதேசங்களைக் கொண்ட, ‘திராவிட நாடு‘ எனும் சுதந்திரத் தனி அரசை ஏற்படுத்தி, உலக நாடுகளின் மத்தியில் உன்னதமான நிலையில் திகழும்படிச் செய்ய வேண்டுமெனும், உயர்ந்த லட்சியத்தைக் கொண்டதாகும், இந்த உயர்ந்த லட்சியத்துக்காக, இலட்சக் கணக்கான திராவிட மக்கள் தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள். அவர்கள் வழங்கும் வலிமையும் சக்தியையும் கொண்டு நாங்கள் ஐவரும், பாடுபட்டு வருகிறோம்.

வடநாட்டு ஆதிக்கப் பிடியிலிருந்து, எங்கள் தாயகத்தை மீட்கும் உன்னத நோக்கமே – எங்களுடைய அரசியல் லட்சியம் இந்த உயரிய லட்சியத்துக்காக, எங்களை அர்ப்பணித்து விட்டோம். எது நேரினும், இதற்காகவே பாடுபடுவோம். வீம்புக்காக அல்ல, மனித வரலாற்றின் சுவை மிகுந்த அத்தியாயமாகிய சுதந்திரப் போராட்டத்தில், ஈடுபட்ட எல்லோருக்கும் எத்தகைய மனோவேகம் இருந்தததோ, அத்தகைய மனோவேகத்துடன்.

வீம்புக்காக அல்ல, மனோவேகத்துடன்...!

தி.மு.க.வின், நோக்கம் கண்ணியமானது, நோக்கம் மட்டுமல்ல, இதை அடைய வகுக்கப்படும் வழி முறைகளும் கண்ணியமானவை களேயாகும். சொல்லாலோ, செயலாலோ பலாத்காரத்துக்கு இடமளிக்காத வகையில், அமைதியான – சட்ட வரம்புக்குட்பட்ட – கண்ணியமான முறையில் பணிபுரிவதே தி.மு.க.வி.ன திட்டமாகும் என்பதை, சர்க்கார் தரப்புச் சாட்சியங்களும், அவர்கள் சமர்ப்பித்த ஆதாரங்களும். தெள்ளத் தெளிவாகி இருக்கின்றன. உணர்ச்சியும் ஆர்வமும் நிரம்பிய அறப்போராட்டங்களின்போது கூட, அமைதி – கண்ணியம் – கட்டுப்பாடு என்பதே எங்களது மூலாதார முழக்கமாகும்.

அரசியல் துறையில் மட்டுமல்ல, சமுதாயத் துறையிலும், ஜாதி வகுப்பு பேதங்கள் ஒழிக்கப்பட்டு, சமுதாயத்தை திருத்தியமைக்க வேண்டுமென்று கூறும் நாங்கள், அமைதி கெடா வகையிலும், கண்ணியத்தோடும் பணியாற்றி வருகிறோம். இவ்வண்ணமே, பொருளாதாரத் துறையிலும் பணிபுரிந்து வருகிறோம்.

பலாத்காரம் – ஜனநாயகத்துக்குச் சாவு மணி!

தி.மு.க.வின் வரலாற்றைப் பார்த்தால் உள்ளத் தூய்மையோடும், கண்ணியத்தோடும் அது பணிபுரிந்து வருவது விளங்கும். இந்த உண்மையைத் தெள்ளத் தெளிவாக விளக்கிய சர்க்கார் தரப்புக்கு என்னுடைய நன்றி.

பலாத்காரம் – மனிதப் பண்புக்கு ஏற்றதல்ல, ஜனநாயகத்துக்குச் சாவு மணி அடிப்பதாகும், என்பதே எமது கருத்தாகும்.

வகுப்பு வேற்றமையையோ, மனமாச்சரியத்தையோ உண்டு பண்ண, என்றும் நாங்கள் எண்ணியதில்லை. இன்னும் சொல்ல வேண்டுமானால் தாயகத்தின் விடுதலைக்குப் பணிபுரியுமாறு, பார்ப்பனார் உட்பட எல்லா வகுப்பினரையும் இரு கையேந்தி வரவேற்கிறோம்.

எப்படி, இவ்வளவு அமைதியும் சாந்தமும் ஏற்படுத்த முடிந்தது என்பதை எண்ணினால், எங்களுக்கே வியப்பாயிருக்கிறது.

சட்டத்தை மதிப்பது கோழைத்தனம் அல்ல!

ஏனெனில் நாட்டிலே திராவிடச் சமுதாயத்துக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளும், அக்கிரமங்களும் யாரையும் எளிதிலே ஆத்திரமூட்டக் கூடியவனவாகவே உள்ளன. நாடாண்ட சமுதாயம், இன்று, நாலாம் ஜாதி, ஐந்தாம் ஜாதி என்ற இழி நிலையில் வைக்கப்பட்டுப் பாழ்படுத்தப்படுகிறது. பண்புகள் பரிகசிக்கப்பட்டு, நிலைகுலைக்கப்பட்டு, திராவிடச் சமுதாயம் சீர்குலைக்கப்பட்டு வருகிறது. அரசியல் துறையிலே அடிமைகளாக்கப்பட்டு, திராவிடர்கள், அவதிக்குள்ளாக்கப்படுகின்றனர். பொருளாதாரத் துறையிலே திராவிடப் பெருங்குடி மக்கள் தரித்திரர்களாக நலிகிறார்கள். சொந்த நாட்டினின்றும் துரத்தியடிக்கப்பட்டு ஒரு கவளம் சோற்றுக்காக, வேற்று நாடுகள் சென்று, மானமிழந்து, மரியாதை இழந்து, அந்த நாடுகளின் அடக்கு முறைகளுக்கு ஆட்பட்டு, அவதியுறுகிறார்கள். இந்தக் கொடுமைகளை நிரந்தரமாக்கிவிடும் பயங்கர முயற்சியும் இடைவிடாது நடைபெறுகிறது. அந்த நிலையில் திராவிட மக்கள் சட்டங்களை மீறியும் பலாத்காரத்திற்க உட்பட்டும் செயல்பல புரிவதைத் தடுத்து நிறுத்தி – அமைதியும், அறிவும் கொண்டதும், கண்ணியமும் கட்டுப்பாடும் நிரம்பியதும் ஆன நடவடிக்கைகளில் திராவிட முன்னேற்றக் கழகம், ஈடுபட்டுச் செயல்பட்டு வருகிறது ஏனென்றால், சட்டத்தின் மாண்பை மதிப்பது கோழைத்தனமல்ல, என்று தி.மு.கழகம் மனதார நம்புகிறது. இப்படிப்பட்டதுதான் எங்கள் வரலாறு – இருந்தும், நாங்கள் சட்டத்தை மீறியவர்களென்று குற்றம் சாட்டப்பட்டு, நிறுத்தப்பட்டிருக்கிறோம்.

(நம்நாடு - 17.8.1952)