ஜனவரி 6ஆம் தேதி, பண்டித
நேரு சென்னை வருகிறபோது, தமிழக மக்கள் மனம் புண்பட்டிருப்பதை
அவருக்கு உணர்த்தும் நோக்குடன், அமைதியான முறையில், கறுப்புக்
கொடி காட்டுவது என்று முடிவு செய்யப்பட்டதை அனைவரும் அறிவர்.
அந்தக் கறுப்புக் கொடி காட்டும் நிகழ்ச்சி அமைதி, கண்ணியம்,
ஒழுங்கு, கட்டுப்பாட்டுடன் நடைபெற வேண்டுமென்பதைக் கழகத்
தோழர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் எடுத்துக்கூற
ஜனவரி 3ஆம் தேதி மாலை 5.30 மணிக்க, திருவல்லிக்கேணி கடற்கரையில்
பொதுக்கூட்டம் நடந்திட அனுமதி, முறைப்படி கேட்கப்பட்டது.
பேச்சுரிமைக்கு மறுப்பு!
பொதுக்கூட்டம் நடத்த அதிகாரிகள்
அனுமதி தர மறுத்து விட்டனர் – இன்று பிற்பகல் 2 மணி வரை)
காரணமற்று, இந்தவிதமாக, பேச்சுரிமையை
மறுப்பதை, எவரும் கண்டிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
கறுப்புக் கொடி காட்டும் நிகழ்ச்சி,
மிக அமைதியான – கண்ணியமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்பதை
நான், இந்த நேரத்தில் மக்களுக்கு எடுத்துக் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.
இதைத் தடுப்பதை சகிக்க முடியாத
சர்வாதிகாரப் போக்கு என்று நான் கருதுகிறேன்.
தி.மு.க. இதுபோல், பேச்சுரிமை,
வேண்டுமென்றே சர்க்காரால் மறுக்கப்படுகிறபோது, அத்தகைய தடை
உத்தரவுகளை மீறி, மக்களின் அடிப்படை உரிமையைக் காத்திட வேண்டும்
என்று தீர்மானித்திருக்கிறது.
தடையை மீறிப் பேசுகிறேன்!
எனவே, போலீஸ் அனுமதி கிடைக்காவிட்டாலும்,
ஜனவனரி 3 மாலை 5.30 மணிக்குத் திருவல்லிக்கேணி கடற்கரையில்
பொதுக்கூட்டத்தில் பேசுவது என்று நான் முடிவு செய்துவிட்டேன்,
பொதுச் செயலாளரின் ஒப்பமும் பெற்று விட்டேன்.
அன்று, தடைப்படுத்தப்பட்டாலும்,
கூட்டம் நடத்தியாக வேண்டும் என்ற இந்த என் முடிவுக்குப்
பல்லாயிரக்கணக்கானவர்கள் சம்மதமும் மகிழ்ச்சியும் தெரிவிப்பார்கள்
என்று நம்புகிறேன். என்ன நேரிடுவதாக இருப்பினும் அன்றைய
கூட்டம், மிக மிக அமைதியான முறையில் – ஒரு துளியும் பலாத்காரம்,
அருவருக்கத்தக்க செயல் இன்றியும் நடைபெற வேண்டும். நமது
அடிப்படை உரிமைக்காகவே, இந்த முடிவு எடுக்க நேரிடுகிறது.
வன்முறையல்ல வழி நமக்கு!
எவ்வித அடக்குமுறை நடவடிக்கை
எடுக்கப்பட்டாலும் கழகத் தோழர்கள், மனம் பதராமலும் கொதிப்படையாமலும்,
அமைதியும், ஒழுங்கும் பாதிக்கப்படாமலும் நடந்து கொள்ள வேண்டும்.
ஜனவரி 6இல், கறுப்புக் கொடி
காட்டுவது, மிக மிக கண்ணியமான முறையில் நடக்க வேண்டும்.
பண்டித நேரு, பண்பிழந்து ஏசுகிறார்
என்று, கண்டனம் காட்டும் நாம், பண்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
அவ்வப்போதுதான், தமிழகத்தின் தனிச்சிறப்பு திகழும். அருவறுக்கத்தக்க
ஒலிகள் ஆர்ப்பாட்டங்கள் அறவே ஆகாது. பொதுச் செயலாளர் குறிப்பிடும்
‘கண்டன ஒலிகள்‘ மட்டுமே கூறப்பட வேண்டும்.
கறுப்புக் கொடி காட்டப்படும்
இடத்தில் அதிகாரிகள் காட்டும் கட்டுகளை மீறுவதும், ‘காலித்தனம்‘
என்று எவரேனும் கூறத்தக்க வகையில் நடந்து கொள்வதும் அறவே
கூடாது. ஜனவரி 6 – நேரு பண்டிதர் பண்பிழந்து பேசினார் என்பதைக்
கண்டிக்க மட்டுமல்ல – எத்தகைய இன்னல் வரினும், தமிழர் நமது
உளத்திண்மையை – பண்பை – அமைதியை – ஒழுங்கைக் குலைத்துக்
கொள்ளமாட்டார்கள் என்பதை. உலகறியச் செய்யும். எனவே, செயலிலே
சீரியத் தன்மை இருத்தல் வேண்டும்.
கண்ணியம் காப்போம்!
இவைகளெல்லாம் எடுத்துக் கூறவே,
ஜனவரி 3இல் கடற்கரைப் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டேன்
– கிடைக்கவில்லை.
எனினும், என் கடமையை நான்
செய்தாக வேண்டும். ஜனவரி 3 மாலை 5.30 மணிக்கு, திருவல்லிக்கேணிக்
கடற்கரையில் உங்களைக் கண்டு பேச வருகிறேன். பொதுக்கூட்டம்
நடைறபெறும் அனைவரும் வருக.
(நம்நாடு - 02-01-1958)