அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


‘என் கடன் பணி செய்து கிடப்பதே’
என்ற தமிழர் பண்புக்கேற்ற இடம் செஞ்சிலுவைச் சங்கமே!

யுத்த காலத்தில் கொடுமைகள் ஏன் நடக்கின்றன? ‘மக்கள் நன்றாக வாழவில்லை’ என்றுதான் அதற்குப்பொருள்; ஏன் நன்றாக வாழவில்லை? நம்மை நன்றாக வாழ வைக்க வில்லை என்று பொருள்; வாழ வைக்காதவர்கள் யார்? யாரிடத்தில் வாழ வைக்கும் அந்தப் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறோமோ அவர்கள், வாழ வைக்கவில்லை. அதற்குக் காரணம் என்ன? யாரிடத்திலே பாதுகாப்பு கிடைக்கும் என்ற தெளிவு ஏற்படுத்தப்படவில்லை. தெளிவு ஏற்பட முடியாததற்குக் காரணம் என்ன? குழப்பத்தில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஒரு சிலர் இருக்கிறார்கள்.

“குரோத உணர்ச்சிகளை நீங்கச் செய்ய, சிற்சில வேலைகளில் மனிதர்களுக்குத் தேவநாமப் போதனைகள் செய்வது மட்டும் போதாது. அதனால், மனிதனின் உள்ளத்திலே எழும் மிருக உணர்ச்சி போகாது. ஆகவே, செஞ்சிலுவைச் சங்கம் உடலிலே ஏற்படும் தழும்பை மட்டும் ஆற்ற உதவுவதோடன்றி, உள்ளத்திலே ஏற்படும் தழும்பை புண்ணைப் போக்க முயல வேண்டும்.”

இவ்வாறு நேற்று மாலை சென்னை பூங்காநகர் மெமோரியல் மண்டபத்தில் செஞ்சிலுவைச் சங்க நிதி திரட்டும் இயக்கத்தை அண்ணா அவர்கள் துவக்கி வைத்துப் பேசுகையில் குறிப்பிட்டார்கள்.

சிறப்பான நிகழ்ச்சிகள்
இந்த விழாவுக்கு, டாக்டர் சி.பி.இராமசமி ஐயர் தலைமை வகித்தார். திரு.எஸ்.அனந்தராமகிருஷ்ணன் அவர்கள் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார்.
அண்ணா அவர்களின் துவக்க உரைக்குப் பிறகு திருமதி இராஜம் இராமசாமி ஆண்டறிக்கை வாசித்தார்.

செஞ்சிலுவைச் சங்கப் பணிகளில் சிறப்புக்குரிய முறையில் ஈடுபட்ட சில பெண்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இறுதியில், செஞ்சிலுவைச் சங்கச் சென்னை மாநிலக்கிளையின் செயலாளர் திரு.சி.அமிர்தகணேசன் அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.

மண்டபத்தின் உள்ளும் புறமும் கட்டுக்கடங்காத முறையில் ஏராளமான மக்கள் குழுமியிருந்தனர்.

மக்களுக்குதவும் சங்கம்
அண்ணா அவர்கள் மேலும் பேசுகையில் குறிப்பிட்டதாவது:
செஞ்சிலுவைச் சங்கத்தில் ‘சிலுவை’ இருப்பதால், அந்தச் சங்கம் ஏதோ கிருத்துவர்களின் பொழுதுபோக்குக் குரிய சங்கம் என்ற தவான கருத்து மாணவப் பருவத்திலேயே எனக்கிருந்ததுண்டு. நாடு விடுதலையடைவதற்கு முன்னால், பெரும்பாலும் ஆங்கிலேயர்களும் ஆங்கில ஆட்சியுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தவர்களும் தான் இந்தச் செஞ்சிலுவைச் சங்கத்தில் ஈடுபட்டிருந்ததால், இந்தச் சங்கம் இந்த நாட்டுக்குத் தேவைப்படாத ஒன்று என்ற எண்ணமும் பல பேரிடையே நிலவியது. இந்த இரண்டு கருத்தும் தவறானவை என்று மக்களிடையே தெளிவாகப் பிரச்சாரம் செய்யப்பட்டால், இந்த நாட்டு மக்கள் இந்தச் செஞ்சிலுவைச் சங்கத்துக்கு நிச்சயம் ஆதரவு காட்டுவார்கள் என்பதை இங்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

“சிலுவை, கிருத்துவர்களுக்கு மட்டும் உரியதல்ல. அது கிருத்துமார்க்கத்தோடு இணைக்கப்பட்டிருப்பது உண்மைதான். கொடுமைகளிலிருந்து மனிதர்களைக் காப்பாற்றுவதற்காக ஒரு மனிதர் தன்னைத்தானே ஈடுபடுத்திக் கொண்டு கொடுமைகளான நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் மனிதாபிமான அறிகுறிதான் சிலுவை!

எல்லாரும் நல்லவர்களாக...
“சிலுவை, உண்மைக் கிருத்துவர்களுடைய சின்னமாகும்” வாரம் ஒரு முறை மண்டியிட்டு, பரமண்டலத்திலுள்ள பிதாவைப் பிரார்த்திப்பதனால் மட்டும் ஒருவர் நல்ல கிருத்துவராகிவிட முடியாது. நல்ல கிருத்துவர் என்போர் நல்ல கருணையுள்ளமும், நடவடிக்கைகளிலே தூய்மையும் கொண்டவர்களாக இருக்க வேண“டும்” என்று கிருத்துவமார்க்கம் கூறுகிறது. “இஸ்லாம் மதம் கூறுவதும் அதுதான்” என்கிறார்கள். ‘இந்து மதமும் அதைத்தான் கூறுகிறது’ என்று சொல்லப்படுகிறது. இந்தத் தத்துவங்களுக்கு அடிப்படையில் வேறு பொருள் கூறுபவர்களும் இருக்கக்கூடும். பொதுவில், கிருத்துவர்கள் நல்ல கிருத்துவர்களாகவும், இஸ்லாமியர்கள் நல்ல இஸ்லாமியர்களாகவும், இந்துக்கள் நல்ல இந்துக்களாகவும் எல்லோருமே தங்களை நல்லவர்களாக ஆக்கிக் கொள்ளச் சிறந்த பண்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

“இந்தச் செஞ்சிலுவைச் சங்கம், போர்க்காலத்தில் மட்டுமின்றி, சமாதானகாலங்களிலும் மக்களுக்குத் தொண்டாற்றும் மாபெரும் இயக்கமாக உலகில் ஓங்கி வளர்ந்திருக்கிறது.

கருணை கொண்டவர்களின் இயக்கம்
“இந்தச் சங்கம். சாதி, மத, இன உணர்வுகளைவிட்டுக் கொடுத்து நாட்டின் எல்லைக் கோட்டையும் மறந்து, கொடுமைகள் எங்கெங்கு நடக்கின்றனவோ, அங்கெல்லாம் பணியாற்றி, கொடுமைகளிலிருந்து மனிதர்களை விடுவிக்கும் கருணையுள்ளம் கொண்டவர்களின் இயக்கம்.

“மனிதச் சமுதாயத்தில் இன்றுள்ள பூசல், பொறாமை போன்ற கீழான எண்ணங்கள் அகற்றப்பட வேண்டும். இதைச்செய்ய இத்தகைய செஞ்சிலுவைச் சங்கம் ஒன்றினால்தான் முடியும். இந்த நாட்டுப் பேரறிஞர்களெல்லாம் இதில் பங்கு கொண்டு பணியாற்ற வேண்டுவது மகத்தான கடமையாகும்.

“செஞ்சிலுவைச் சங்கம் இன்று ஆற்றிவரும் பணியினை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் ஆற்றியிருக்கிறார்கள். தமிழன், அன“றே செஞ்சிலுவைச் சங்கம் கண்டான் என்பதற்குப் பல ஆதாரங்கள் இருக்கின்றன.

தக்க இடம் செஞ்சிலுவைச் சங்கம்
“என் கடன் பணி செய்து கிடப்பதே” என்பதை வாழ்க்கையின் வழிமுறையாகக் கொள்ள, செஞ்சிலுவைச் சங்கம் நல்ல ஊன்றுகோலாக அமையும். வள்ளுவர் கருத்தும், தாயுமானவர் கருத்தும் நடைமுறை ஆக்கப்பட வேண்டுமென்றால் அதற்கு நல்ல ஏற்றதோர் இடம் செஞ்சிலுவைச் சங்கம். நலிந்தோரைக் கைதூக்கிவிட்டு வாழ்விக்கும் நல்ல காரியத்தைச் செய்ய குரோத உணர்ச்சிகளை நீக்கிக்கொள்ள தக்கதோர் இடம் செஞ்சிலுவைச் சங்கமாகும்.

“டாக்டர் சி.பி.இராமசாமி ஐயர் அவர்களும், திரு.அனந்த ராமகிருஷ்ணன் அவர்களும், நானும் ஒருசேர இந்த விழாவில் கலந்து கொள்வதே செஞ்சிலுவைச் சங்கத்திற்கு எல்லோரும் ஆதரவு தந்து, அதை வளர்க்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதற்கு எடுத்துக்காட்டாகும்.

“இதில் அரசியல் தொடர்புபடுத்த வேண்டிய அவசியமில்லை. எந்த நாட்டுக்கும் இதிலே சேர உரிமை இருக்கிறது. நாட்டின் எல்லைகளையெல்லாம் மறந்து செயலாற்றும் இயக்கம் இது. மனித உள்ளத்தை மிருக உணர்ச்சிக்கு அப்பால் இட்டுச் செல்லும் ஒரு மாபெரும் இயக்கம்.

களத்திலே கண்ட கஷ்டம்
“களத்திலே பட்ட கஷ்டங்களைக் கண்டு, ஒரு வாலிபனின் கருணை உள்ளத்திலே தோன்றிய எண்ணம்தான் உலகிலே இன்று இப்படிப்பட்ட ஓர் இயக்கமாக ஓங்கி வளர்ந்து தழைத்து வருகிறது.

“களத்திலே கண்ட கஷ்டங்களைக் களைய சாதி, மத, தேச உணர்வுகளை விட்டுக்கொடுத்து, மனிதச் சமுதாயத்தில் யார் யார் இன்னல்களுக்காளாகிறார்களோ, அவர்களுக்கெல்லாம் உதவி செய்ய வேண்டுமென்ற எண்ணம் தனித்து அந்த வாலிபனின் கருணையுள்ளத்திலே எப்படி உதித்தது?

“மனிதன் ஏன் சிற்சில வேளைகளில் கருணையுள்ளங் கொண்டு வாழ்க்கையை நல்ல முறையிலே நடத்துகிறான்? சில நேரங்களில் சில காரியங்களில் கருணையற்றவனாய்த் தீய காரியங்களில் ஈடுபடுகிறான். யாருக்கும் இந்த எண்ணம் தான் தோன்றுகிறது. போர்க்களத்தில் மட்டுமல்ல சமாதானக் காலங்களில் கூடப் போர்க் காலத்தை விடக் கொடுமைகள் நடக்கும்படியாக அமைந்து விடுகின்றன.

எந்தக் கட்சியும் சேரலாம்
“சாதி-மதங்களை மறந்து நாட்டு எல்லைக்கோட்டையும் மறந்து உலகில் எங்குக் கொடுமைகள் நடந்தாலும் அங்குச் சென்று பணியாற்றக் கூடியது இந்தச் செஞ்சிலுவைச் சங்கம். குறிப்பிட்ட எந்த ஓர் அரசியல் கட்சிக்கும் இதில் தொடர்பில்லை. இதிலே எந்தக் கட்சியும் ஈடுபடலாம்; எந்தக் கட்சிக்கும் சேர உரிமையுண்டு.

“மனிதன் எப்போது கொடுமைகளைக் கூசாமல் செய்கிறான்? எந்த நேரத்தில் அந்தக் கொடுமைகள் கூடாது என்று நினைக்கிறான்? இதற்கு, ‘மனிதன் கெட்டவனா, நல்லவனா’ என்ற ஆராய்ச்சியிலே நான் இறங்கச் சொல்லவில்லை. நல்லவர்களும் சில நேரங்களில் கெட்டவைகளைச் செய்கிறார்கள். தேவநாமப் பஜனை செய்பவர்களும், சில நேரங்களில் மிருகங்களோடு போட்டியிட்டு வீழ்த்தக் கூடிய அளவுக்கு வெறி கொள்கிறார்கள்.
“உலகம் பூராவிலும் ஏன் இந்த நிலை இருக்கிறது? மார்க்கங்கள் பல இருக்கின்றன; இருந்தும் பயன்படவில்லை. போட்டி, பூசல், பொறாமை இவைதான் மனிதனைக் கெட்டவனாக்குகின்றன. மனிதன் நல்லவனாகத்தான் இருக்கிறான்; சில வேளைகளில் விரோத உணர்ச்சி மேலிட்டுக் கெட்ட காரியங்களைச் செய்ய அவனைத் தூண்டுகிறது.

அல்லா-ஆண்டவன் இரண்டும் ஒன்று
“நான் ஏதோ அரசியல் பிரச்னையைக் குறிப்பிட்டுப் பேசுவதாக எண்ணிவிட வேண்டாம் என்று முதலில் கேட்டுக்கொள்கிறேன். இந்தியத் துணைக்கண்டத்தில் இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் திடீரென விரோதம் மூண்டு-குரோதம் சூழ்ந்து ஒருவருக்கொருவர் போரிட்டுக்கொண்டதைப் பார்த்தோம். குழந்தைகள் என்றுகூடப் பார்க்காமல் வெட்டி, குத்திக் கொடுமைகள் புரிந்தார்கள்; இருதரப்பிலும் சேதம் ஏற்பட்டது. அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு நல்லவைகளைக் காணவில்லை. அவர்களெல்லாம் பக்திமிக்கவர்கள்தான்; “அல்லா, ஆண்டவன் இரண்டும் ஒன்றுதான்” என்று அழுத்தி அழுத்திப் பேசியவர்கள்தான்; ‘இந்துவும்-முஸ்லீமும் ஒன்றுதான்; இஸ்லாமியரும் கிருத்துவரும் ஒன்றுதான்’ என்று தத்துவங்களை எடுத்துச் சொன்னவர்கள்தான்.

உள்ள எரிமலையை அடக்க வேண்டும்
“உள்ளத்தில் எழும் எரிமலையை அடக்க முடிந“தால் தான் நிரந்தரமான நன்மை ஏற்படும். அதற்கான காரியங்களை இந்தச் செஞ்சிலுவைச் சங்கம் செய்ய முயன்றால் நல்லபலன் ஏற்படுமென்று கருதுகிறேன். கொடுமைகளை விட இந்த உள்ள எரிமலையை அடக்குவதுதான் சிரமமான காரியம்.

“குரோதத்தை அடக்க முயற்சி எடுத்தால், ஓரளவு அடக்குவதற்கு ஏற்ற திறமை உலகில் உள்ள பல்வேறு வகுப்பினரைவிடத் தமிழ் இனத்துக்குத்தான் இருக்கிறது. நாம் தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நான் இதைச் சொல்லவில்லை; வரலாற்று உண்மை இது.
“பாரதக் கதையில் கௌரவர்களுக்கும் -பாண்டவர்களுக்கும் உரிமைக்காகச் சண்டை நடந்தது. கௌரவர்களைத் தாக்கினால் அவர்கள் பக்கமுள்ள பல ஆச்சாரியார்களையும் குருமார்களையும் தாக்க வேண்டி நேரிடுமே; பல பாவங்களைச் செய்தவர்களாவோமே’ என்று அர்ச்சுனன் தயங்கினான்; அந்த நேரத்தில் ‘ஆண்டவன் அவதாரமான’ கிருஷ்ணபகவான், அர்ச்சுனனுக்குத் தைரியம் கொடுத்தார். நீ தயங்காமல் போரிடு. அதனால் யாரேனும் இறந்தால் அதற்குக் காரணம் நான்தான். நீயல்ல; என்மீது அந்தப் பாரத்தைப் போட்டுவிட்டுப் போரிடு என்று உபதேசம் புரிந்தாராம்.

அன்றே சோறு போட்ட தமிழன்
“இதற்கு, பேரரறிவு படைத்தவர்களெல்லாம் ஏதேதோ தத்துவங்களைக் கற்பித்துப் பேசுவார்கள். உண்மையில் இருதரப்பிலும் வெட்டிக் கொண்டு சண்டையில் பலர் மாண்டனர். அந்த நேரத்தில் அந்த யுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்குச் சோறு போடும் பேறு பெற்றவன் ஒரு தமிழ் மன்னன் என்று பாரதத்திலேயே கூறப்படுகிறது.

“சோறுபோடும் பணியை ஏற்றுக்கொண்ட தமிழர்கள், சோறு யாருக்குப் போடலாம். பாண்டவர்களுக்குப் போடலாமா, கௌரவர்களுக்குப் போடலாமா என்று யோசிக்கவில்லை. களத்திலே யார் யார் கஷ்டத்துக்கு உள்ளானார்களோ, அவர்கள் அத்தனை பேருக்கும் சோறு படைத்தார்கள் தமிழர்கள். அன்றைய தினமே முதல் செஞ்சிலுவைச் சங்கத்தைத் துவக்கினான் தமிழன் என்று கூறலாம். அந்த நல்ல பண்பாடு நல்லவேளையாகச் சிதைந்து போய் விடாமல் இன்றும் தமிழர்களிடமிருந்து வருகிறது. சிதைய ஆரம்பித்து வந்தது ஆனாலும் முழுதும் சிதைந்து விடாமல் பாதுகாத்து வருகிறார்கள் தமிழர்கள். எனவே செஞ்சிலுவைச் சங்கம் இந்த நாட்டில் நல்ல முறையில் அறிமுகப்படுத்தப் படுமானால், அது நன்றாகத் தழைக்க முடியும். அதை நிலைக்க வைக்க முடியும் என்பதை இந்த நேரத்திலே சொல்லிக்கொள்கிறேன்.

அரசியல் தொடர்பற்ற அமைப்பு தேவை
“சண்டைக் காலத்தில் மட்டுமன்றி, சமாதானக் காலத்திலும் நம் நாட்டுக்குச் செஞ்சிலுவைச் சங்கம் தேவை. அப்படிப்பட்ட அரசியல் தொடர்பற்ற அமைப்பு மிக மிகத் தேவை.

“அரசியல் தொடர்பு இல்லாதவர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொள்வதைச் சிலர் கௌரவமாக நினைக்கிறார்கள். அவர்கள் அரசியலைத் தீண்டாவிட்டாலும் அரசியல் அவர்களை விடுவதில்லை. இன்றைக்கு நாட்டை ஆளுபவர்கள் அரசியல்வாதிகள் தான்; நாடு முழுவதற்குமான சட்டங்களைத் தீட்டுபவர்கள் அரசியல்வாதிகள்தான்; அந்தச் சட்டம் எல்லோரையும்தான் கட்டுப்படுத்துகிறது; அரசியல்வாதியல்லாத வர்களையும் சட்டம் கட்டுப்படுத்தத்தான் செய்கிறது. எனவே, அரசியல்வாதியல்லாதவர்ளுக்கும் அரசியலில் அக்கறை இல்லாமல் இருக்க முடியாது. இருக்கக் கூடாது.

இப்போது சமுதாயத்திலே குரோதமும், அமளியும் ஏற்படக் காரணம் என்ன? நீங்கள் அமளியை உண்டாக்குவீர்கள்; நாங்கள் அதை வந்து அடக்க வேண்டுமா? என்று சில அரசியல் சார்பற்ற அனுபவப் பேரறிஞர்கள் கேட்கக்கூடும். அமளி தீர்வதற்கான மார்க்கத்தை-மனிதப் பண்பாட்டின் விளைவுகளை அறிந்த அனுபவமுள்ளவர்கள் தங்கு தடையின்றித் தரவேண்டும்.

அனுபவ உலையில் அடித்த காந்தம்
“இங்கு நீங்கள் இவ்வளவு பெருவாரியாக வந்து கூடியிருப்பதற்குக் காரணம், ‘காந்த சக்தி படைத்த அண்ணா துரைதான்’ என்று டாக்டர் சி.பி.இராமசாமி (ஐயர்) அவர்கள் குறிப்பிட்டார்கள். நான் காந்த சக்தியாக இருந்தாலும், டாக்டர் சி.பி.இராமசாமி ஐயர் அவர்களைப் போன்ற அனுபவ உலையில் வைத்து அடித்தால்தான் காந்தம் சக்தி பெறும் என்பதைக் கூறிக்கொள்கிறேன்.

“சமாதானக் காலங்களிலும் மக்கள் தொல்லைகளைத் தாங்கிக் கொள்ள நேருகிறதே, ஏன்? தொல்லைகளைக் கண்டும் கழிவிரக்கம் கொள்ளவில்லையே ஆட்சியாளர்கள், ஏன்? சமாதானக் காலத்திலும் ஏன் செஞ்சிலுவைச் சங்கத்தின் பணி தேவைப்படுகிறது?

“தமிழர்கள் தங்கள் வீரத்தைக் காட்டும் வாய்ப்பு வரும்போது என்றுமே தயங்கியதில்லை. கலிங்கத்திலும், கடாரத்திலும், இலங்கையிலும், யவனத்திலும் வெற்றிக்கொடி நாட்டியவன்தான் தமிழன். வெற்றியையே குறிக்கோளாகக் கொண்ட நேரத்தில் போர் நடத்திய தமிழன் சமாதானக் காலத்தில் மக்கள் நோயற்று, வளமுற்று, வாழ்வதையே பெருமைக்குரியதாக எண்ணினான்.

“சங்க இலக்கியத்திலே, தமிழ் மன்னன் ஒருவன் பெரும்புலவர் ஒருவரைப் பார்த்து ‘வயதாகியும் தலை நரை திரை இல்லாமல் இருக்கிறதே. அது எப்படி? என்று கேட்கிறான்.

அதனால்தான் தலை நரைக்கவில்லை
“அதற்கு அந்தப்புலவர் மன்னனைப் பார்த்து, ‘தாங்கள் ஆளும் நாட்டிலே நரை, திரை, மூப்பு இல்லை. அத்தனை நல்ல ஆட்சி இது. கவலையற்றிருக்கிறேன். அதனால் தலைநரைக்கவில்லை” என்றாராம்.

இராமாயணத்திலே ஒரு கட்டம்-தசரசன், கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தபோது தலையிலே நரை கண்டிருப்பதைப் பார்த்தானாம். அப்பொழுதுதான் தனக்கு வயதாகிவிட்டது. இராமனுக்குப் பட்டம் சூட்டவேண்டும் என்று நினைத்தானாம். இது புராணக்கூற்று.

“புலவர் கூற்றையும் சொன்னேன்-புராணக் கூற்றையும் சொன்னேன். நான் புராணத்தை ஏற்றுக்கொள்ளாதவன்-புராணக் கருத்துக்கு சர்.சி.பி.போன்றவர்கள் வேறொரு தத்துவத்தைக் கற்பித்துக் கூறக்கூடும். சங்க இலக்கியத்துக்கும் புராணத்துக்கும் வேறுபாடு உண்டு.
“தமிழன் உயர்ந்த பண்புள்ள வீரன், மனிதனை நன்றாக வாழ வைப்பதைத் தன் உயர்ந்த பண்பாகக் கருதியவன்.

துரதிருஷ்டவசமான வேலை
“இந்த நாட்டில் சாதிப் பாகுபாடுகளை நீக்குவதற்கு எல்லாப் பேரறிஞர்களும் ஒன்று சேர்ந்து அதற்கான மார்க்கத்தைக் காண முயலவேண்டும். ‘துரதிருஷ்டவசமாக’ இந்த நாட்டில் ஒரு குறிப்பிட்ட மக்களிடம் ஒரு குறிப்பிட்ட கட்சியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது அந்தச் சாதி ஒழிப்பு வேலை.

“நான் வலியுறுத்திக் கூறுவதெல்லம் ஒரு குறிப்பிட்ட கூட்டத்தார்தான் அந்த வேலையைச் செய்ய வேண்டுமென்றால் அவர்கள் மட்டுமே ஒருபுறம் அந்த வேலையைச் செய்து கொண்டிருந்தது, மற்றவர்கள் ஒதுங்கியிருந்து விட்டால் இருசாராருக்கிடையில் துவேஷம் ஏற்படத்தான் செய்யும். அந்தத் துவேஷம் காரணமாகத் தங்களுக்கு என்ன சாதகம் கிடைக்குமென ஆராயும் அரசியல் கட்சிகளும் இருக்கத்தான் செய்கின்றன. நல்ல வேளையாக மக்களிடையே குரோத உணர்ச்சி ஒழிய வேண்டுமென விரும்புபவர்களும் இன்றும் இருக்கிறார்கள். அவர்களை யெல்லாம் நாம் இந்த நல்ல காரியத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சாதி ஒழிப்பு வேலை முதல் வேலை
“அரசியல் கட்சியையும் கடந்த பேரறிவாளர்கள் கூடி, இந்தத் தலைமுறையிலேயே செய்ய வேண்டியுள்ள ஒன்று இந்தச் சாதி ஒழிப்பு வேலைதான்.

“குலத்திலே பல வேறுபாடுகள்; ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடுகள், முதலாளி தொழிலாளி என்ற வேற்றுமை; ஒரே ஊரிலே கிழக்குத் தெருவிலிருப்பவருக்கும் மேற்குத் தெருவிலிருப்பவருக்கும் பகை இவற்றையெல்லாம் இன்று ஏட்டிலே காண முடியவில்லை; நாட்டிலே காண முடிகிறது.

“தீயினால் உடலிலே சுட்ட புண் ஆறிவிடும். ஆனால், நாவினால் உள்ளத்தைச் சுட்ட வடு ஆறாது” என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார். செஞ்சிலுவைச் சங்கம், மக்களின் உடலில் மட்டுமல்ல; உள்ளத்தில் ஏற்பட்டுள்ள புண்ணையும் போக்க முயல வேண்டும். சாதியின் காரணமாக உள்ளத்தில் ஏற்படும் தழும்பை அகற்ற வேண்டும். உள்ளத்தில் ஏற்பட்டுள்ள இந்தப் புண் நம்மை மட்டுமல்ல, நம் குழந்தைகளையும் பாதிக்கக் கூடியவை.

“நாமாவது உலகம் காணாதவர்கள். உலக மேதாவிகள் என்பவர்கள் கூட, ‘இரண்டு சைனாக்களிலே எந்தச் சைனா நல்ல சைனா? என“ற பிரச்னையிலே தலையிட்டு, குழப்பம் விளைவித்து வருவதைக் காண்கிறோம். டில்லியிலே நடந்த செஞ்சிலுவைச் சங்கமாநாட்டில் இந்தக் கருத்தைக் கிளப்பி வெளிநடப்புச் செய்து குழப்பம் உண்டாக்க முயன்றதைக் கண்டோம்.

மேலே போயும் தாழ்வு போகாமல்...
“இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், ஒருவன் கீழிருந்து மேல்நிலைக்குப் போவதனால், அவனிடமிருந்து வந்த தாழ்வான கருத்து போய்விடுவதாக இல்லை. அவன் அந்த தாழ்வான கருத்தோடுதான் மேலே போயிருக்கிறான் என்று பொருள்.

“ஒரு வீட்டின் மாடிக்கு நகை வியாபாரி போனால் நகைகளோடு போவான்; மருத்துவன் கையில் மருத்துகளோடு போவான்; கள்ளன் போனால் கையில் கன்னக்கோலோடுதான் போவான்; அதைப்போல, உலகிலேயே மிக மேல்நிலையில் இருந்தாலும் மிருக உணர்ச்சியை விட்டுவிட்டதாகப் பொருளில்லை.

“நான் சில தினங்களுக்கு முன் பத்திரிகையிலே செய்தியொன்று படித்தேன். அமெரிக்காவில் ஏழு நீக்ரோ மாணவர்கள் பாதுகாப்பு இல்லாமல் பள்ளிக்குப்போய் வந்தார்கள் என்பதுதான் அந்தச் செய்தி. நீக்ரோ மாணவர்கள் பாதுகாப்பு இல்லாமல் பள்ளிக்குப் போய் வருவது உலக அதிசயமாக இருக்கிறது. ‘இன்றுதான் போலீஸ் பாதுகாப்பில்லாமல் நீக்ரோ மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வந்தார்கள்’ என்று பத்திரிகைகளெல்லாம் அதிசயச் செய்தியாக இதை வெளியிட்டிருந்தன. ஆனால் இன்னொரு செய்தியும் அதிலே இருந்தது. ‘அந்த மாணவர்கள் பள்ளிக்குப் போகும்போதும், வரும்போதும் போலீசார் தொலைவிலிருந்த படியே அவர்களுக்கு ஏதேனும் ஆபத்து நேராத வகையிலே கண்காணித்துக் கொண்டிருந்தனர் என்று அந்தச் செய்தி கூறுகிறது.

அமெரிக்கர்கள் காட்டுமிராண்டிகளா?
“நாம் ஏதோ ‘காட்டு மிராண்டிகள்’ தான் அமெரிக்காவில் இருப்பதாக எண்ணக்கூடாது. நாம் அமெரிக்கா காட்டு மிராண்டித்தனமாக நடக்கிறது என்று எண்ணுகிறபோது, அமெரிக்கர்கள் இந்தியாவில் உள்ளவர்களைக் காட்டு மிராண்டிகள் என்று எண்ணுகிறார்கள்.

“இன்னும் சிலர் யார் யாரையோ பார்த்துக் காட்டுமிராண்டிகள் என“று கூறுகிறார்கள். அவரவர் உள்ளம் போல்தான் பார்வையும், எண்ணங்களும் இருக்கும்.

“எங்கு எது நடந்தாலும், அது காட்டுமிராண்டித்தனமாக இருந்தாலும் நாகரிகத்தால் அதைப் போக்க முடியவில்லை. நாதனைத் தொழுதோ, போதனை புரிந்தோ போக்கமுடியவில்லை. அதை அழிக்கக்கூடிய பொருள் மனிதனின் ஆய்ந்த அறிவுதான்.

“பேரறிஞன் பிளாட்டோவும் தன் நாட்டுக்கும் பிற நாட்டுக்கும் இடையே, பேதத்தையே சட்ட ரீதியாக அமைத்தான். ஏதென்ஸ் நகரத்துக்குள்ளே வேறொருவருக்கு உரிமையில்லை. ரோம் இப்படியே! இதேபோல, பல நாட்டுக்குள்ளே ஏதோ ஒரு பாகுபாடு இருக்கத்தான் செய்து வருகிறது, நெடுநாளாக.

துவேஷ மணிகளையே அணிகறோம்
“ஆரணங்குகள் அணிகிற மணிமாலைகளைப் போல துவேஷ மணிகளையே கோர்த்து மாலையாகத் தொடர்ந்து அணிந்து கொண்டிருக்கிறார்கள் பல நாட்டினரும். இப்பொழுது காலம் மாறுகிறது. இன்னமும் குரோதம் நீக்கப்படவில்லை.

‘செஞ்சிலுவைச் சங்கம் இளம் உள்ளங்களிலே நல்ல உணர்வை ஊட்டக்கூடிய வகையிலே பணியாற்றுமேயானால் பெருவாரியாக இதிலே பலர் சேர்ந்து பழக்கப்படுவார்கள் என்று கருதுகிறேன். இத்தகைய எல்லோரும் ஒன்றுபடக்கூடிய அமைப்பு இப்பொழுது தேவை. அரசியல் தொடர்புடையவர்களும் இதிலே சேர்வது சிறப்புடையது என்றே கருதுகிறேன். அப்படிச் சேருபவர்களைக் கண்டு பெருமைப்படுவேன்.

(நம்நாடு - 5,10.12.57)