அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


எதையும் சாதிக்க இயலும்!

இன்று நடைபெற்ற ஊர்வலத்தில் உயரமான ஒரு பீடத்தில் என்னை அமரவைத்து, நீங்கள் காட்டி வந்த ஆர்வத்தையும் உற்சாகத்தையும் பார்த்தேன்.

நான் பல இடங்களில் பல கூட்டங்களில் பேசி வருவதைப் பார்க்கும் போது, பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் கூறியிருப்பதுதான் என் நினைவுக்கு வந்தது. “இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்?“ என்ற அவரது சொல்லில் எனக்குத் தளராத நம்பிக்கை இருக்கிறது.

உங்களது திறமையால் ஆற்றலால் எதையும் சாதிக்க முடியும் – என்று திடமுடன் நம்புகிறேன்-பிப்ரவரி திங்களில் நடைபெறும் தேர்தலில் நாம் நல்ல வெற்றியைக் காண்போம் என்பதில் சந்தேகமே இல்லை.

பெறவேண்டியதைப் பெறுக!

உங்களுக்கு நான் கூறுவதெல்லாம் இந்தத் தேர்தலில் காட்ட வேண்டியதைக் காட்டுங்கள், பெறவேண்டியதைப் பெறுங்கள் என்பது தான்.

இப்படிக் கூறுவதால் நமது மாற்றார் இதைத் திருத்திக் கூறமுடியும் – ‘பார் பார்‘ இந்த அண்ணாதுரை காட்ட வேண்டியதைக்காட்டு என்கிறார் – என்ற பேச முடியும்.

சென்னை மாநகராட்சி மேயர் தேர்தல் பற்றி நான் ஒரு கூட்டத்தில் பேசும்போது கொடுக்க வேண்டியதைக் கொடுத்துப் பெற வேண்டியதைப் பெற்றேன்‘ என்று கூறினேன். இதை வைத்துக்கொண்டு, ‘கொடுக்க வேண்டியது என்றால் பணத்தைக் கொடுத்து ஓட்டு பெற்றிருக்கிறார்கள் என்பதை அணண்ாதுரையே ஒப்புக் கொள்கிறார்‘ என்று பேசுகிறார்கள். இது அவர்களுக்கு இருக்கும் பஞ்சப்புத்தியைத்தான் காட்டுகிறது!

ந்லெண்ணத்தைப் பெற்றிருக்கிக் கூடாதா?

கொடுக்க வேண்டியது என்றால் பணம் ‘கொடுப்பதைக் குறிக்கிறதா? வேறு எதையும் குறிப்பிடவில்லையா? குறிப்பிடாதா?

ஏன் – எனது நல்லெண்ணத்தையும், நல்ல அன்பையும் கொடுத்திருக்க மாட்டேனா?

அவர்கள் எப்போதும் பணத்தைப் பற்றித்தான் நினைக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் பணத்தில் புரளுகிறவர்கள் அல்லவா?

இன்று நம்மைப் பற்றி தினம் தினம் தவறான முறையிலும் இழிவான முறையிலும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதற்குக் காரணம். நமது வளர்ச்சிதான்! நாம் இந்த அளவு வளர்ச்சி அடைவோம் என்று அவர்கள் எண்ணவில்லை! எப்படியாவது மக்கள் மனதில் தவறான எண்ணத்தைப் பரப்ப வேண்டுமென்ற நோக்கத்தோடேயே பேசிவருகிறார்கள்.

இந்தத் தேர்தலில் ஆச்சாரியாருடனும் கம்யூனிஸ்டுகளுடனும் உறவு கொண்டுவிட்டேன் என்று அவர்கள் பேச வருகிறார்கள்.

காலையில் சுதந்திராக் கட்சியுடனும், மாலையில் கம்யூனிஸ்டுக் கட்சியுடனும், இரவில் சோஷலிஸ்டுக் கட்சியுடனும் அளவளாவி வருவதாகப் பேசி வருகிறார்கள்.

பார்த்தேனா, பேசினேனா?

நான் உங்களிடம் உறுதியாக இன்று கூறுகிறேன் – நான் தேர்தல் சம்பந்தமாக இதுவரை ஆச்சாரியரைப் பார்க்கவில்லை, அவருடன் எந்தப் பேச்சும் பேசவில்லை இன்றும் கூறுகிறேன் – ஆச்சாரியாரை இதுவரை பார்க்கவே இல்லை – உறவு கொள்ளவும் இல்லை.

அவர்களுக்குச் சொல்லுகிறேன், நிலைமை இப்படி இருக்கும்போதே – நீ இப்படி நடுங்குகிறாயே! நாங்கள் பார்த்துப் பேசி இருந்தால் எவ்வளவு நடுக்கம் கொண்டீருப்பாய்? ஏன் இப்படி கற்பனை செய்து பிரச்சாரம் செய்ய வருகிறாய்?

ஒரு அரசியல் தலைவர், மற்றொரு அரசியல் தலைவரைப் பார்க்கக் கூடாதா? அப்படிப் பார்ப்பதால் அரசியல் கருத்துக்களை மாற்றிக் கொள்வார்களா?

நடந்தது இதுதான்!

நான் முஸ்லீம் லீக் தலைவர் இஸ்மாயில் அவர்களைச் சந்தித்தேன். அதுவும் சென்னையில் சந்திக்கவில்லை குரோம்பேட்டையிலுள்ள அவரது இல்லத்தில் நானும், நமது நண்பர் கருணாநிதியும் சந்தித்தோம். எந்த அரசியல் நோக்கம் கொண்டும் சந்திக்கவில்லை. முஸ்லீம் லீக் தலைவர் இஸ்மாயில் எனது பழைய நண்பர்களில் ஒருவர். அவர் வடநாட்டிலுள்ள மத்தியப் பிரதேசத்திற்குச் செல்லுகிறார் என்று கேள்விப்பட்டு, நான் காஞ்சிபுரம் செல்லும்போது, வழியிலுள்ள குரோம்பேட்டையில் அவருடைய வீட்டில் அவரைக் காணச் சென்றேன். எங்களுடைய பேச்சை எந்த அரசியலையும் முன்னணியாக வைத்து நடத்தவில்லை ஆனால் எங்கள் பேச்சில் அரசியல் அலைமோதவே செய்தது!

எங்கள் சந்திப்பு எந்த அரசியல் நோக்கமும் கொண்டதல்ல! இரண்டு அரசியல் தலைவர்களும் எந்த நோக்கத்தை வைத்தும் சந்திக்கவில்லை, என்றாலும், இடையிடையே அரசியல் கலக்காமலும் இல்லை. ஆனால் எந்த உள்நோக்கத்தை வைத்தும் எங்கள் சந்திப்பு இல்லையென்று உறுதி கூறுகிறேன்.

வீட்டில் புகுந்துவிட்ட திருடனைத் துரத்த...

நான் இன்னும் கூற ஆசைப்படுகிறேன் – சுதந்திராக் கட்சியோடு பேசச் சந்தர்ப்பம் கிடைத்தால் பேசவும் செய்வேன்.

என் வீட்டில் ஒரு திருடன் திடீரென்று புகுந்துவிட்டால், அவனை அடிக்க எந்தத் தடி அகப்பட்டாலும்அதையெடுத்து அடிப்பேன். அப்போது, சுதந்திரா தடியென்றோ, கம்யூனிஸ்டு தடியென்றோ பார்க்கமாட்டேன். எல்லாத் தடிகளையும் உபயோகிப்பேன்.

காங்கிரசை ஒழிக்க எல்லாக் கட்சிகளுடனும் பேசுவோம். அப்படிப் பேசுவதால் நம்முடைய இலட்சியத்தை மாற்றிக் கொள்ளமாட்டோம்.

பொது எதிரியை அடிப்பதற்கு சுதந்திராக் கட்சித் தடி கம்யுனிஸ்டுத் தடி, சோஷலிஸ்டுக் கட்சித் தடி என்று பார்க்க மாட்டேன். கைக்கு எந்தத் தடி கிடைக்கிறதோ அதை உபயோகிப்பேன்.

சர்வாதிகாரத் தன்மையில் நடந்துவரும் காங்கிரசை ஒழித்துக்கட்ட 1962ஆம் ஆண்டுத் தேர்தலில் நாம் மிகவும் ஒற்றுமையாகப் பாடுபட வேண்டும்.
இன்று காங்கிரசுக்கட்சி களைத்து, இளைத்துப்போய் இருக்கிறது.

அதை வீழ்த்துவதற்காக மற்றக் கட்சிகளுடன் உடன்பாடு செய்து கொள்வது தவறாகாது.

கூட்டுச் சேருவது தவறா?

நான் இரண்டு மூன்று நாட்களுக்கு முன் ஜெயப்பிரகாஷ் அவர்கள் எழுதிய ஒரு புத்தகத்தைப் படிக்கும் நிலை ஏற்பட்டது. அதில் அவர் எழுதியுள்ள ஒரு கருத்தை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

“அரசியல் கட்சிகள் தேர்தலில் கூட்டுச் சேருவதால் தங்களது அடிப்படைக் கொள்கைகளை விட்டுக்கொடுத்து விடவேண்டுமென்ற தேவையில்லை. அப்படி எதிர்பார்ப்பது, எதிர்பார்ப்பவரின் அரசியல் முதிர்ச்சியற்ற நிலையையே காட்டுவதாகும். கூட்டுச் சேருவதால், கூட்டுச் சேருகின்ற கட்சிகளின் அடிப்படைக் கொள்கைகள் பாதிக்கப்பட்டுவிடா“ என்று அவர் எழுதியிருக்கிறார். இவ்வாறு அவர் எழுதியிருப்பது 1953ஆம் ஆண்டில்!

நான் அடிக்கடி கூறுவதுபோல் இன்றும் கூற ஆசைப்படுகிறேன். நாம் இன்று எந்தக் கட்சிகளுடனும் கூட்டுச் சேர்ந்து தேர்தலில் ஈடுபட வேண்டுமென்று கூறவில்லை. தொகுதி உடன்பாடுகள் செய்துகொள்ள வேண்டுமென்றே கூறுகிறோம். ‘எதிர்கட்சிகளின் ஓட்டுகள் பிரிந்து சிதறிப் போகக் கூடாது. இதில் எல்லாக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து காங்கிரசசை ஒழிக்கவேண்டும்‘ என்று கூறுகிறோம்.

நாம் ஒன்றுசேராது, போட்டிபோட்டுக் கொண்டிருந்தால் நமது ஓட்டுக்கள் பிரிந்து இந்த நாட்டைச் சர்வாதிகார ஆட்சி புரிந்துவரும் காங்கிரசே மீண்டும் ஆட்சிக்கு வர வழிவகுத்துவிடும். இதைத் தடுக்கவே தொகுதி உடன்பாடுகள் செய்ய வேண்டுமென்று நான் கூறுகிறேன். இது எப்படிக் கூட்டுச் சேருவதாகும்?

உதாரணத்திற்கு ஒன்று நான் உங்களுக்கு உதாரணம் ஒன்று கூற ஆசைப்படுகிறேன். காட்பாடி தொகுதியில் கம்யூனிஸ்டுகள் நிற்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அங்கு நமது கழகமும் போட்டியிடுகிறது என்று வைத்துக் கொள்வோம். கம்யூனிஸ்டுக்கட்சி அந்தத் தொகுதியில் தங்களுக்குத்தான் வாய்ப்பு இருக்கிறது என்று கூறலாம். அதுபோலவே நமது கழகத்துக்கும் வாய்ப்பு இருப்பதாகக் கூறலாம். இதை இரண்டு கட்சிகளும் ஒன்று சேர்ந்து பேசி, ஒரு முடிவுக்கு வந்து ஒரே ஒரு கட்சியை அங்கு நிற்க வசதி காண்பது. இதுதான் தொகுதி உடன்பாடு. இதனால் எப்படி இரண்டு கட்சிகளும் ஒன்று சேருவதாகும்?

1962ஆம் ஆண்டுத் தேர்தலில் இந்த உடன்பாட்டில் ஈடுபடவேண்டுமென்று நான் முயற்சித்து வருகிறேன். இதில் என் வெற்றி பெறுவேன் என்றும் நினைக்கிறேன்.

முடிச்சுப் போடுவதற்க முயலுகின்றனர்!

இந்த உடன்பாடு எங்கே ஏற்பட்டுவிடுமோ என்ற அஞ்சும் ஆளும் கட்சியினர், எதிர்க்கட்சிகளுக்குள் முடிச்சுப் போடப் பார்க்கிறார்கள்!

“அண்ணாதுரை இந்த நாட்டைப் பிரிக்க வேண்டுமென்று கூறுகிறார். அப்படிப்பட்டவருடன் இந்தியா ஒன்று என்று கூறும் ஆச்சாரியார் எப்படிச் சேரலாம்?“ என்று ஆச்சாரியாரிடம் கேட்கிறார்கள்.

அதுபோலவேதான் நம்மிடம், “நாட்டுப் பிரிவினை கேட்கும் தி.மு.கழகம் ‘ஏக இந்தியா‘ என்று பேசிவரும் ஆச்சாரியார் கட்சியாருடன் கூட்டு சேரலாமா?“ என்று கேட்கிறார்கள்.

“எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால் கட்சிகள் அழிந்து விடும“ என்றும் கூறி வருகிறார்கள். அது தவறு. இந்தத் தொகுதி உடன்பாட்டால் எந்தக் கட்சியும் அழிந்துவிடாது.

துணிவு, நம்பிக்கை உண்டு

இன்னும் துணிந்து கூறுகிறேன் – கொள்கையில் பற்றும் இலட்சியத்தில் வலுவும் இருப்பவர்கள் யாருடன் சேர்ந்தாலும் அழிந்துவிட மாட்டார்கள். இதில் எனக்குத் துணிவும் நம்பிக்கையும் இருந்து வருகிறது.

இந்த நேரத்தில் உங்களுக்கெல்லாம் ஒன்று கூற ஆசைப்படுகிறேன். எது ஏற்பட்டாலும் சரி, ஏற்படாவிட்டாலும் சரி உங்களுடைய கடமையிலிருந்து நீங்கள் நழுவிவிடக்கூடாது. 1962 தேர்தலில் நமக்குத்தான் அதிகப்பொறுப்பு இருக்கிறது. அதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

இந்தத் தேர்தலுக்குப்பின் திராவிட முன்னேற்றக் கழகம், மகத்தான நிலையில் வரப்போகிறது.

பம்பாயிலும் ‘பாசறை‘கள்!

நான் சமீபத்தில் பம்பாய்க்குப் போயிருந்தேன். அங்கு நமது கழகம் வளர்ந்திருப்பதை கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டுவிட்டேன்.

நான் பம்பாயில் இருந்த நான்கு நாட்களும் தென்னகத்தில் இருந்தது போலவே எண்ணித் திரும்பி வந்தேன்.

முன்பு பம்பாயில் தாராவிப் பகுதியில் மட்டும் நம் கொள்கைகள் பரவி இருந்தன. அங்குதான் நமது கழகங்களும் இருந்து வந்தன.

இன்று பம்பாய்ப் பகுதிகளெங்கணும் நமது கொள்கைகள் பரவி, அதைச் சுற்றியுள்ள இடங்களில் எல்லாம் நமது கழகங்கள் இருந்து வருகின்றன. இங்கு நமது கொடிகள் பறப்பது போலவே அங்கும் நமது கொடிகள் பறந்து கொண்டிருக்கின்றன! அதனைக் கண்டு நானே ஆச்சரியப்பட்டு விட்டேன்.

தென்னகத்தில் பிழைக்க முடியாத தமிழர்கள் இன்று தாராவிக்குச் சென்று பிழைத்து வருகிறார்கள். அவர்கள்தான் அங்கு நமது கழகப் பிரச்சாரத்தைச் செய்து வந்தார்கள். இன்று மாதுங்காவிலும் நமது கழகம் பரவி அங்குதான் முதலில் எனது கூட்டமும் நடைபெற்றது.

இங்கு எப்படிக் கூட்டங்களுக்கு அலங்காரம் செய்யப்படுகிறதோ அதபோல், ‘உதயசூரியன் சின்னங்களைக் கட்டி அங்கும் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

அவர்களின் நம்பிக்கை வீண்போகக்கூடாது

நீங்கள் ஒன்றை மட்டும் மறந்துவிடக்கூடாது. தென்னகத்திலிருந்து பிழைப்பதற்காக வெளியிடங்களுக்குச் சென்றிருப்பவர்கள் நமது கழகத்தைத்தான் நம்பி இருக்கிறார்கள். நமது கழகத்தால்தான் அவர்கள் வாழ்வு மலரும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே அவர்களுடைய நம்பிக்கை வீண்போகாத முறையில் நாம் பாடபடவேண்டும்.

தேர்தலில் நாம் வெற்றி பெற்று, நமது திராவிடநாடு இலட்சியம் உருவானால் அவர்களையெல்லாம் இங்கு அழைத்து வந்து, அவர்களுடைய வாழ்க்கையைச் மலரச் செய்யலாம்.

இலங்கை, மலாயா, பர்மா முதலியா இடங்களில் வாழும் தமிழர்களும், நாம் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று, நமது கழகம் ஆட்சிக்கு வரவேண்டுமென்று விரும்புகிறார்கள். ஆகவே நாம் இந்தத் தேர்தலில் மிகவும் கவனமாகப் பாடுபட வேண்டும்.

(நம்நாடு - 19.12.61)