அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


எதிர்க்கட்சிகளை அலட்சியப்படுத்தினால் சனநாயகம் பிழைக்காது!

ஓய்.எம்.சி.ஏ கூட்டத்தில் அண்ணா தந்த விளக்கம்
கடந்த 28.3.60 அன்று சென்னை மயிலாப்பூர் ஒய்.எம்.சி.ஏ சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் “மக்களாட்சி” என்ற தலைப்பில் அண்ணா அவர்கள் ஆற்றிய உரையின் பிற்பகுதி (நேற்றைய இதழின் தொடர்ச்சி) இங்குத் தரப்படுகிறது.

இங்கிலாந்து நாட்டிலுள்ள கன்சர்வேடிவ் கட்சிக்கும் லிபரல் கட்சிக்கும் உள்ள பல வேறுபாடுகளைப் பற்றி நிபுணர்கள்தான் சொல்ல முடியும். சாதாரண மக்களால் அவ்வேறுபாடுகளைச் சொல்லமுடியும்.

கன்சர்வேடிவ் கட்சியைப் பார்த்து “உங்களுடைய நோக்கம் எது? என்றால் மக்களுக்கு வேலை தேடித்தருவதே என்கிறார்கள். லிபரல் கட்சியைக் கேட்டால் எங்கள் நோக்கமும் அதுதான் என்கிறார்கள்.
கன்சர்வேடிவ் கட்சிக்கும் தொழில் கட்சிக்கும் அடிப்படையில் சில அரசியல் கருத்து மாறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் அவ்விருக்கட்சிகளும் ஒரு எதிர்க்கட்சியை அருவறுப்பாக நடத்துவது இல்லை.

ஆனால் துரதிருஷ்டவசமாக நம்முடைய நாட்டில் ஆளும் கட்சியோடு எதிர்க்கட்சியை ஒப்பிட்டுப் பார்க்க கூடிய வாய்ப்பில்லை.

சனநாயகத்திற்கு இருக்கும் முறை
கேரளத்தில் அவ்வாறு ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு வழி இருக்கிறது. முன்பு கம்யூனிஸ்டுகள் ஆட்சியிலிருந்த போது செய்வதை இப்போது மக்கள் மத்தியில் சொல்லுகிறார்கள். கம்யூனிஸ்டுகள் செய்யாததை இப்பொழுது ஆட்சிக்கு வந்திருப்பவர்கள் மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லுகிறார்கள். அமெரிக்க நாட்டிலும் அந்த வாய்ப்பு இருக்கிறது. அதனால் அங்கிருக்கும் அமைச்சர்களுக்கு அடக்க உணர்ச்சி இருக்கிறது.

அது போன்ற அடக்க உணர்ச்சி இங்கிருக்கும் அமைச்சர்களுக்கு இல்லாததற்குக் காரணம் ஆளும் கட்சியோடு எதிர்க்கட்சிகளை அவர்கள் ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை. ஆளும்கட்சியில் இருக்கும் குறைகளை நான் சொன்னால் நான் என்ன செய்திருக்கிறேன் என்பது மக்களுக்குத் தெரிந்திருந்தால் இரண்டினையும் ஒப்பிட்டுப் பார்த்து நீதி வழங்குபவர்கள் மக்கள். ஆனால் என்னுடைய கணக்கைப் பொறுத்தவரையில் இன்னும் 10 ஆண்டுகள் வரையில் இந்த ஆட்சியைப் பொறுப்பிலிருந்து இறக்க முடியாது. காரணம் மக்கள் இன்னும் பக்குவப்படவில்லை. எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் எதைச் சொன்னாலும் இவன் சும்மா சொல்லுகிறான் என்றுதான் மக்கள் கருதுவார்கள். இது எங்களுக்கு இருக்கிற குறை என்பதற்காக இதனை நான் சொல்லவில்லை. இது சனநாயகத்திற்கு இருக்கிற குறை என்பதற்காகத்தான் இதைக் குறிப்பிட்டேன்.

பார்த்தேன்-கொடுத்தேன்-வென்றேன்!
இருபது நாட்களுக்கு முன்னால் நானும் அமைச்சர் கக்கன் அவர்களும் ஒரு ஆசிரியர் கூட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்பொழுது அவர் “என்னுடைய ஆட்சி எங்களுடைய ஆட்சி கல்விக்காகச் செய்த நன்மையைப் போல் வேறு யாரும் இதே அளவுக்கு அதிகமாகச் செய்யமுடியாது என்று சொன்னார். நான் பிறகு பேசும்போது செய்ததச் சொல்லுவது நன்றியின் பாற்பட்டது. ஆனால் செய்ய வேண்டியதைச் சுட்டிக்காட்டுவது தமிழனுடைய கடமை என்று சொல்லி வேறு ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால் கல்விக்காக நீங்கள் செலவழித்ததைக் கட்டாயம் குறைக்கமாட்டார்கள். இப்பொழுது இருக்கும் பள்ளிக்கூடத்தைப் பாதியாகக் குறைத்து மூடிவிட மாட்டார்கள். ஆகையால் தயவு செய்து நீங்கள் இதுபோன்ற கருத்தை நாட்டிலே பரப்பாதீர்கள் என்று சொன்னேன். அதற்கு அவர் என்மீது இருக்கும் அன்பின் காரணமாகவோ என்னவோ பின்னால் இதற்கு எதுவும் பதில் சொல்லாமல் சும்மா இருந்துவிட்டார்.

நான் செய்கிறேன், நான் செய்கிறேன் என்று மன்னர்கள் சொன்னார்கள். நான் தான் செய்வேன், என்னைத் தவிர வேறு யார் செய்வார்கள்? என்று ஜூலியஸ் சீசர் சொன்னான் அதே பிரச்சாரம் செய்கிறார்கள்.

ஜூலியஸ் சீசர் கூட நான் சென்றேன். கண்டேன், வென்றேன் என்றுதான் அவனுடைய வெற்றிச் செய்தியைச் சொன்னான். ஆனால் நமது அமைச்சர்கள் தேர்தல் காலத்தில் நான் சென் சென்றேன். பார்க்க வேண்டியவர்களைப் பார்த்தேன். கொடுக்க வேண்டியதைக் கொடுத்தேன். பின் வென்றேன் என்றுதான் சொல்லுகிறார்கள்.

அதுதான் சனநாயகத்தின் வழி!
இதை நான் சொல்லுவதால் அமைச்சர்கள் அச்சப்படத் தேவையில்லை. அவர்கள் சர்வாதிகார முறையை நோக்கிச் செல்கிறார்கள். நாங்கள்தான் செய்வோம் மற்றவர்களால் செய்ய முடியாது என்று பேசினால் சனநாயகம் வளராது. நாங்கள் அதைச் செய்தோம். இவர்கள் வந்தால் என்ன செய்வார்கள்? என்று கேட்டால் தான் சனநாயகம் வளரும். இதிலே நான் எந்தப் பக்கத்திலேயும் இந்த இடத்தில் சேரவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நிலங்களை எல்லாம் கூட்டுறவுப் பண்ணை முறையில் கொண்டுவரமாட்டோம் என்று சுதந்தரா கட்சி சொல்லுகிறது. இன்னொரு கட்சி கூட்டுறவு முறை வேண்டும் என்று சொல்லுகிறது. எனவே மற்றவர்கள் சொல்வதை ஆட்சியாளர்கள் ஏற்காத வரையில் இங்கு அரசியல் தெளிவு ஏற்படாது.

மற்ற நாடுகளில் ஒரு கட்சி ஒரு திட்டத்தைச் சொன்னால் யார் சொல்லி இருக்கிறார்கள் என்று பார்க்க மாட்டார்கள். திட்டம் எப்படிப்பட்டது என்றுதான் பார்ப்பார்கள். அதுதான் சனநாயகத்தின் வழி.

நாங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் இவர்கள் தைரியமாக அறிவித்துவிடவேண்டும். நாங்கள் 5 ஐந்தாண்டுத் திட்டங்கள் போட்டிருக்கிறோம். அவற்றை நிறைவேற்றவேண்டும். அதனால் இங்குக் கட்சிகள் வேண்டாம். ஐந்தாண்டிற்கு ஒருமுறை தேர்தல் வேண்டாம் என்று வெளிப்படையாகச் சொல்லிவிட வேண்டும்.

எதிர்க்கட்சிகளை அழிப்பார்களாம்!
எதிர்க்கட்சி வேண்டுமென்று பேசுகிறார்கள், எதிர்க்கட்சி சொல்லுவதை ஏற்றுக்கொள்வதில்லை. பிரஜா சோஷலிஸ்டு கட்சி, கம்யூனிஸ்டு கட்சி, சுதந்தரா கட்சி இது போன்ற எல்லாக்கட்சிகளையும் ஏற்றுக்கொள்வதில்லை. எதிர்க்கட்சிகளை அழிப்போம் என்றுதான் பேசியிருக்கிறார்கள். காரணம் அவர்களைப் போல நாம் சம எடை இல்லாததே இப்படி இருந்தால் சனநாயகம் வளராது.

கட்சிகள் நம்முடைய நாட்டில் வளர வேண்டும். கொள்கை யைப் பார்க்கவேண்டுமே தவிர ஆளைப் பார்க்கக்கூடாது. இதை எண்ணிப் பார்க்க வேண்டிய பொறுப்பு மக்களைச் சார்ந்ததாகும்.
இதனால்தான் நான“ துவக்கத்தில் சொன்னதுபோல் மிருகத்திற்கு வாய் இருக்கின்றன. ஆனால் அது பேசாது. மனிதன் பேசுவான். சிந்திப்பான், கேட்பான். ஆகையால் மக்களை மிருகமாக்க வேண்டாமென்று இந்தச் சனநாயக ஆட்சியை நான் கேட்டுக்கொள்கிறேன்.

யாருக்கும் அதிகாரம் இல்லை
இதை அரசியல் கட்சிக் கூட்டத்தில் சொல்லாமல் இங்கே வந்து சொல்லக் காரணம் இப்பொழுது நமது சட்டசபையில் 1960-61 ஆம் ஆண்டு வரவு செலவுக்காக ரூ.80 கோடி ஒதுக்கி யிருக்கிறார்கள். இதை எப்படிச் செலவழிக்கப் போகிறார்கள் என்பது மக்களுக்குத் தெரியாது. இந்த விவாதத்தில் நாங்கள் நூறுபேர் கலந்து கொண்டோம். கட்சித் தலைவர்களுக்கும் இதைப் பற்றிப் பேச அரைமணி நேரம் ஒதுக்கப்பட்டது. மற்ற உறுப்பினர்களுக்கு 10 நிமிடம் தரப்பட்டது.

நீங்கள் இதனை எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வளவு குறுகிய நேரத்தில் இந்தத் திட்டங்களைப் பற்றி என்ன செய்வது? இந்த நிலையில்தான் இந்தத்திட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டது. இதில் அரைரூபாய் குறைக்க வேண்டுமென்றாலும் யாருக்கும் அதிகாரம் இல்லை.

ஆகையால் உங்கள் உறுப்பினர் வழியாக அந்தத் திட்டத்தை வாங்கிப் பார்த்து, அது என்னென்ன வகையில் செலவழிக்கப்பட இருக்கிறது என்பதை அறிந்து, அதில் உள்ள குறைகளையும் திருத்தங்களையும் அரசாங்கத்திற்குச் சொல்லவேண்டும்.

அதேபோல், என்னைக் கேட்ட நேரத்தில், நான் ஆயிரம் கோடி ரூபாய்க்குத் திட்டம் சொன்னேன். ஆனால் அமைச்சர்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள். அதை உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன். அதை நீங்கள் பரிசீலித்து உங்கள் முடிவை அரசினருக்குத் தெரிவிக்க வேண்டும்.

சனநாயகம் பிழைக்க வழி
இது போன்ற மன்றங்களிலுள்ளவர்கள் அமைச்சரையும் அழைக்க வேண்டும். அப்போது என்னையும் அழைக்கவேண்டும். திட்டத்தைப் பற்றி நாங்கள் இருவரும் பேசுகிறோம். அடுத்தநாள் நீங்கள் உங்கள் தீர்ப்பைச் சொல்லுங்கள். அப்பொழுதுதான் இப்பொழுதிருக்கும் ஆளும் கட்சிக்கு ஒரு அச்சம் வரும். அப்படி இல்லையேல் சனநாயகம் பிழைக்காது.

எதிர்க்கட்சியில் 50 பேர் என்றும் ஆளும் கட்சியில் 150 பேர் என்றும் இருந்தால் சனநாயகம் எப்படி வளரும். சனநாயகம் வளர வேண்டுமானால் ஆளும் கட்சிக்கும்-எதிர்க்கட்சிக்கும் மிடையே சம எடை இருக்கவேண்டும். அப்பொழுதுதான் ஆளும் கட்சியில் இருப்பவர்கள் அடக்க உணர்ச்சியோடு பேசுவார்கள். ஆனால் இப்பொழுது இருக்கும நிலைமையிருந்தால் எப்படி அமைச்சர்களுக்கு அடக்க உணர்ச்சி வரும்? ஆகையால் தான் அமைச்சர்கள் அடக்க உணர்ச்சியுடன் பேசமாட்டேன் என்கிறார்கள்.

அமைச்சர்கள் எங்களைப் பார்த்துப் புள்ளி விவரத்தைப் படித்து விட்டு வந்து பேசுங்கள் என்கிறார்கள். அவர்களுக்கு இது போன்ற மன்றங்களில் இருப்பவர்கள் குறைகளை எடுத்துக்காண்பித்தால் தான் சனநாயகம் வளரும் ஆகையினால்தான் அரசியல் பிரச்சனையில் நாம் கூர்ந்து அக்கறை காட்டவேண்டும்.

அரசியலில் அக்கறை காட்டுங்கள்
இப்பொழுது அரசியல் தெருவோடு நின்று விடவில்லை. வீட்டிற்குள்ளேயும் வந்துவிட்டது. ஆகையால் அரசியலில் நீங்கள் அக்கறை காட்ட வேண்டும் என்று வற்புறுத்துகிறேன். ஒவ்வொரு சாமானும், என்ன விலை விற்க வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் எத்தனைக் குழந்தைகள் பெறலாம் என்பது வரை அரசியல் அக்கறை காட்டவேண்டும் என்று வற்புறுத்துகிறேன்.

இப்பொழுது மாணவர்களைப் பார்க்கிற நேரத்தில் அவர்களை அரசியலில் கலந்து கொள்ளாதீர்கள் என்கிறோம். அதேபோல் வணிகர்கள், தொழிலாளர்கள், மாநில அரசாங்க ஊழியர்கள், இரயில்வே ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆக எல்லோரையும் அரசியலில் கலந்து கொள்ளாதீர்கள் என்று சொல்லுகிறோம்.

ஆனால் இதற்குப் பிறகு அரசியல் யாருக்காக இருக்கிறது என்பதனை எண்ணிப் பார்க்கவேண“டும். இந்நிலைமை வளர்ந்தால் எப்படி அரசியலில் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளுவது? காற்றடிக்கிற நேரத்தில் தூற்றிக்கொள்ள வேண்டும் என்பது போல இவ்வளவு இக்கட்டான நிலையில் எல்லோரும் அரசியலை அறிந்திருப்பது அவசியம். இல்லையேல் அவர்களுக்கு இருக்கின்ற மெஜாரிட்டி பலத்தை வைத்துக்கொண்டு இனி அரிசியில் சத்தில்லை ஆகவே தவிடு சாப்பிடுங்கள் என்று சொன்னால்-அதையும் சட்டமாக்கிவிட்டால், நாம் கதறி அழுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் என்னை விட்டுச் சட்டசபையில் இது பற்றி நீங்கள் கேட்கச் சொல்லலாம். அவர்கள் 150 பேராகவும் நாங்கள் 15 பேராகவும் இருந்தால் எப்படி நியாயம் நிலைக்கும். நிலைக்காது சனநாயகமும் பிழைக்காது.

எனவே முன்பு நான் சொன்னபடி நான் கேட்டுள்ள திட்டத்தை இதுபோன்ற மன்றங்களில் பரிசீலித்து, சர்க்காருக்குத் தெரிவிக்க வேண்டும். குறையிருந்தால் தாட்சண்யமில்லாமல் என்னையும் கண்டிக்கிற உரிமையை நான் உங்களுக்கு அளிக்கிறேன். இதை நீங்கள் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

(நம்நாடு - 31.3.60)