அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


எதிர்காலச் சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர் உருக்குலையா?

கல்வித்துறையின் குறைகளைய அண்ணாதரும் அரிய யோசனைகள்

“இன்று எல்லா நாட்டவரும்-ஒவ்வொரு மக்களும் நன்கு உணர்ந்திருக்கும் பணி ஆசிரியர் பணியாகும். அவர்கள்தான் இந்தச் சமுதாயத்தை உருவாக்கி இருக்கிறார்கள் உருவாக்க வேண்டும். அந்தச் சிலாக்கிய வேலையில் அவர்களுக்கு முட்டுப்பாடு இல்லாத தன்மையை ஏற்படுத்த வேண்டும், மற்றவர் கள் எடுத்துச் சொல்லுவதற்கு முன்னால் துரைத்தனத்தாரே அவ்வப்பொழுது அவர்களின் குறைகளை நீக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” என்று அண்ணா அவர்கள், சென்னையில் நடைபெற்ற விழாவொன்றில் பேசுகையில் குறிப்பிட்டார்.

சென்னை அரசினர் ஆசிரியப் பயிற்சிப் பள்ளி உணவு விடுதி மாணவர்களால் விடுதி விழா 15.3.60 மாலை 6 மணியளவில் கொண்டாடப்பட்டது.

பயிற்சிப் பள்ளித் தலைமையாசிரியர் திரு.ரெஜி சாமிக்கண்ணு பி.ஏ. எல்.டி அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

நல்ல சேவை செய்ய வேண்டும்
விழாவிற்கு அமைச்சர் கக்கன் அவர்கள் தலைமையேற்று மாணவர்களுக்குப் பாராட்டும் நன“றியும் தெரிவித்தார். ஆசிரியர் களின் குறைகளை ஓரளவுக்கு அரசாங்கம் நீக்கி வருகிறது என்றும் கல்விக்காக மாநில அரசு அதிகமாகச் செலவிடுகிறது என்றும் குறிப்பிட்டார்.
மாணவர்கள் படித்து ஆசிரியர் பொறுப்பை ஏற்று நாட்டுக்கு நல்ல சேவை செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

மாணவத் தோழர் கோபால் அவர்கள் ஆண்டறிக்கையைப் படித்தார். அதையொட்டி மாணவத் தோழர் ஒருவர் குழலிசை இசைத்தார்.

இறுதியாக அண்ணா அவர்கள் பேசியதாவது:
இந்த ஓய்வு விடுதி ஆண்டு விழாவினை மிகச் சிறப்பான முறையிலே கொண்டாடி நீங்கள் பெறுகின்ற இந்த மகிழ்ச்சியிலே எங்களையும் பங்கு கொள்ளச் செய்ததைப் பாராட்டுகிறேன்.

வசதியின்மைக்கு உடனடிப் பரிகாரம்
இந்த விழாவிற்கு ஏழை மக்களிடத்திலே அதிகத் தொடர்பு கொண்டுள்ள அமைச்சர் கக்கன் அவர்கள் அவைத்தலைமை யேற்றிருப்பது உண்மையிலேயே பெருமைக்குரியதாகும். அவர்கள் அவைத் தலைமை ஏற்றதினாலே மாணவர்களின் விடுதி வசதியின்மைக்கு உடனடியாகப் பரிகாரம் காணும் முயற்சியில் ஈடுபடுவதாக வாக்களித்திருக்கிறார்கள். அவர்கள் வாக்களித்து விட்டால் அது நடைபெறும் என்பதற்குச் சான்றாக அவர் மற்றொரு கல்லூரிக்குச் சென்றபொழுது அங்கே மாணவர்கள் படுகின்ற இடர்பாட்டினைப் பார்த்து அதை தடுக்க ஓரளவு வழிவகை ஏற்பட்டதை அவர்கள் தெரிவிப்பதிலிருந்து வழக்கமாக இப்படிப்பட்ட விழாக்களில் மற்றவர்கள் கலந்து கொண்டு சொல்லிச் சொல்வதைப் போல் இருந்து விடாமல் இதை நிறை வேற்றி வைப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

நான் இங்கு வந்து இந்த அழகான திடலைப் பார்த்ததும் ஆசிரிய மாணவர்களை இந்தத் திடல் உங்கள் விடுதிக்குச் சொந்தமானதுதானா? என்று கேட்டேன். அவர்கள் இது விடுதிக்குச் சொந்தமல்ல மற்றொரு கூடத்திற்குச் சொந்தம் என்று அறிவித்தார்கள்.

நானும் ஆசிரியனாய் இருந்துள்ளேன்.
அமைச்சர் அவர்கள் இந்தக்கூட்டத்தில் நீங்களும் நானும் அறியாத ஒன்றைச் சொன்னார்கள். தாமும் ஆசிரியர் பணியில் சில காலம் இருந்ததாக நீங்கள் அறியாமற்றொன்று நானும் ஒரு ஆறு திங்கள் ஆசிரியனாக இருந்திருக்கிறேன் என்பது! எம்.ஏ. படித்து முடித்தவுடன் நான், இந்தச் சென்னையிலுள்ள ஒரு பள்ளியில், ஒரு புதிய பாடமுறையைப் புகுத்தினார்கள். அப்பொழுது எனக்கு உற்ற நண்பர் ஒருவர், என்னிடத்தில் நீ ஆசிரியனாக இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். நானும் ஆறு திங்கள் பணியாற்றினேன்.

அமைச்சர் அவர்கள், தான் மிகவும் கஷ்டப்பட்டுப் படித்ததாகச் சொன்னார்கள், நான் அவருக்குச் சொல்லி கொள்கிறேன். நானும் படிப்பின் இறுதிவரை உபகாரச் சம்பளம் பெற்றே படித்தவன் என்று.

எனவே நாங்கள் இருவரும் வேறு வகையில் மாறுபட்டு இருந்தாலும் இந்த வகையில் இருவரும் ஒற்றுமைப் பட்டிருக்கிறோம். நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், நான் சொல்லுகிற கருத்துக்களில் மாறுபாடு இருக்கும் என்பதைக் கவனமூட்டிக் கொள்ள விரும்புகிறேன். இதிலிருந்து நான் ஏதோ குறை சொல்லப் போவதாக அமைச்சரும் நீங்களும் கருதிவிடக் கூடாது. செய்யப்பட்ட காரியங்களுக்கு நன்றி தெரிவிப்பது நன்றியின்பாற்பட்டு செய்யப்பட்ட வேண்டியதைக் கவனமூட்டு வது கடமையின்பாற்பட்டது.

கடமையின்பாற்பட்டது
அமைச்சர் அவர்கள் அரசாங்கம் செய்திருக்கின்ற நல்ல பல காரியங்களை எடுத்துச் சொன்னார்கள். செய்யப்பட வேண்டியதைக் கவனமூட்டுவது கடமையின்பாற்பட்டதே தவிர, செய்ததை மறுப்பது மனித சுபாவத்தில் ஒட்டிவருவதும் அல்ல.

நீங்கள் நல்ல வசதி பெறுவதற்குச் சர்க்காருடைய வருவாய் அதிகரிக்க வேண்டும் என்கிறேன். வரி என்று மட்டும் நான் சொல்லவில்லை. நான் சொல்லும் வருவாயில் வரியும், இன்னும் சில இனங்களும் சேர்ந்து இருக்கின்றன. இன்றைய தினம் தனிப்பட்டவர்களுக்குச் சில பல துறைகள் மூலம் நிறைய வருவாய் கிடைக்கிறது. அத்துறைகளை எல்லாம் அரசாங்கம் ஏற்று நடத்தினால் வருவாய் அதிகம் கிடைக்கும். இந்த வகையில் அதனைச் செய்ய வேண்டுமென்று இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

ஆசிரிய மாணவர்களுக்கும், கல்வித் துறைக்கும், பொதுவாக அமைச்சரவை அதிகமான அளவுக்கு அக்கறை காட்டுவதாக அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள். அது அவர்களின் நல்லெண்ணத்தைக் காட்டுவதாகும்.

இது கிடைத்தற்கரிய செல்வம்
ஆனால் சனநாயக ஆட்சியில் இவைகளைச் செய்யாமல் ஒரு அமைச்சரவை இருக்க முடியாது. பொதுத் தொண்டில் இதுதான் கிடைத்தற்கரிய செல்வம்.

அமைச்சர் அவர்கள் ஆசிரியத் தொழில் மிக்க சிலாக்கியமானது என்று கூறினார். இதையே நானும் சொல்லிவிட்டுப் போவதில் எனக்கு ஒரு சங்கடமும் இருக்காது. ஆனால் இப்படிப் பட்ட நேரத்தில் ஆசிரியர்களுக்கு இருக்கிற சில சிக்கல்களையும் நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.

இன்றைய தினம் ஆசிரியர்கள் வாழ்க்கையை நடத்த போதுமான ஊதியம் கிடைக்காமல் மிகக் கஷ்டப்படுகிறார்கள். இதனால் வேறு தொழில்களில் அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். வேண்டுமானால் ஆசிரியத் தொழில் சிலாக்கியமானது என்று சொல்லலாம்.

ஒரு வீட்டில் இரண்டு சகோதரர்கள் இருந்தால், ஒருவர் ஆசிரியராகவும், ஒருவர் காண்டிராக்டர் ஆகவும் இருந்தால் இரண்டு பேர் மனைவியும் பேசுகிற நேரத்தில், ஆசிரியரின் மனைவி சற்று பெருமையாக வேண்டுமானால் பேசலாம். உங்கள் கணவர் மாதம் ரூ.800 சம்பாதித்தாலும் என் கணவர்தான் வருங்காலச் சமுதாயத்தை உருவாக்குபவர் என்று சொல்லலாமே தவிர உண்மையில் அவர்களின் வாழ்க்கை நிலையை ஆராய்ந்தால் அவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை நாம் அறிய முடிகிறது.

எனவே ஆசிரியர்களின் வாழ்க்கைத் தரம் உயர முட்டுப்பாடு இல்லாத அளவுக்கு நாம் அவர்களை இந்தத் தொழிலில் வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆசிரியர்கள் தொழிலினுடைய சிலாக்கியத்தை உலகம் காண முடியும்.

பெட்டிக்கடை வைத்திருந்தாலும்...
இப்பொழுது பொதுவான குறை இருக்கிறது. பலர் ஆசிரியர் தொழிலுக்கு வர அஞ்சுகிறார்கள். ஒரு ஆசிரியர் மாநாட்டில் ஆசிரியரொருவர் பேசியதாகப் பத்திரிக்கையில் வந்தது. எங்காவது தெருக்கோடியில் பெட்டிக்கடை வைத்தாலும் அதிக வருமானம் வரும் என்று அவர் பேசியிருக்கிறார். இதை இங்கு நான் குறிப்பிடுவதற்குக் காரணம் இது சட்டசபையல்ல என்பதாலும், அரசியல் பூசல் இங்கு இராது என்பதாலும்தான்.

மற்றொன்றை ஓரளவுக்கு அமைச்சர் அவர்கள் உணர்ந்து சொன்னார்கள். கிராமப்புறங்களிலுள்ள ஆரம்ப ஆசிரியர்கள் நல்ல முறையில் உழைக்க வேண்டும் என்று! அப்படி அவர் சொல்லுகிற பொழுது எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. மூன்று திங்களுக்கு முன்னாலே நான் ஒரு சிற்றூருக்குச் சென்றிருந்தேன். அங்கிருந்த பள்ளிக்கூடத்திற்குச் சென்று ஆசிரியர் எங்கே? என்று நான் கேட்டேன், மாணவர்கள், ஆசிரியர் மாட்டுத் தொழுவத்திற்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். நான் ஆச்சரியப்பட்டேன். உடனே அங்கிருந்த பெரியவரைக் கேட்டேன். அவர், ஆசிரியர் சில மாடுகள் வைத்திருக்கிறார் என்றும், அதைப் பாதுகாத்துப் பால் கரந்து பக்கத்தில் இருக்கும் நகரத்தில் கொண்டு போய் விற்பனை செய்கிறார் என்றும் சொன்னார். இப்படிச் செய்வது தவறு என்று நான் சொல்லவில்லை. எல்லோரும் துணை வருவாய் தேடிக்கொள்ளலாம் என்று சர்க்காரே சொல்லுகிறது. அது குறையுடையதுமல்ல! நிலைமை என்ன என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகத்தான் நான் அதைக் குறிப்பிட்டேன்.

வாழ்க்கைத்தரம் உயர...
எனவே அவர்களின் ஊதியத்தை உயர்த்துவது மட்டும் போதாது; வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு வேண்டிய நிலைமையை ஏற்படுத்த வேண்டும்.

நகரத்தை விட கிராமம் எந்த வகையிலும் குறைவாக இருக்கக் கூடாது. 10 வயதுப் பையனுக்கும் 40 வயதுள்ளவருக்கும் வளர்ச்சியில் வேண்டுமானால் மாறுதல் இருக்கலாமே தவிர அவயங்களில் குறைவு இருப்பதில்லை. நகரத்தைப் போல் கிராமத்தில் கப்பி ரோடாவது போடவேண்டும். இதையெல்லாம் உடனடியாகச் செய்யவேண்டும்.

நம்முடைய நாட்டுக்கல்வி முறையில் சில திருத்தங்கள் ஏற்படவேண்டும். எப்படிப்பட்ட திருத்தங்கள் என்றால்-திருவள்ளுவர் சொன்னது போல, கற்கக் கசடறக் கற்பவை, கற்றபின் நிற்க அதற்குத் தக, என்ற முறையில் கல்விப் பாடத்திட்டம் திருத்தி அமைக்கப்படவேண்டும்.
எந்த ஆசிரியராவது தனது பிள்ளையை ஆசிரியர் தொழிலில் ஈடுபடுத்த சம்மதிக்கிறார்களா என்றால் இல்லை! நான் பட்டதொல்லையை என் பிள்ளையும் ஏன் படவேண்டும் என்கிறார்கள்.

குமாஸ்தாவாக வேண்டுமானால்...
தமிழகத்தில் ஆசிரியர் தொழிலில் இருப்பவர்கள் மிகக் குறைவு ஒவ்வொருவரும் சாதாரணமாக தாசில்தார் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேண்டுமானால் போகலாம்; இந்த ஆசிரியர் வேலையே வேண்டாம் என்கிறார்கள்! அந்த இலாகாவில் சம்பளம் மட்டுமல்ல-வேறுவகையும் உண்டு.

ஆகையினால்தான் ஒவ்வொருவரும் ஆசிரியர் தொழிலுக்கு வர வேண்டுமானால் அவர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தும் பெரும் பொறுப்பு அரசாங்கத்தைச் சார்ந்ததாகும்.
அமைச்சர் அவர்கள் கல்விக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் பெருந்தொகை செலவிடுவதாகச் சொன்னார்கள். இதே நேரத்தில் வேறு எந்த எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கல்விக்காக இன்னும் அதிகமாகச் செலவு செய்வார்களே தவிர குறைவாகச் செய்யமாட்டார்கள். ஏனென்றால் அவ்வளவுக்கவ்வளவு-நாளுக்கு நாள் மக்களுக்குக் கல்வியில் இருக்கும் ஆர்வம் வளர்ந்து கொண்டிருக்கிறது. எனவே இதுபோன்ற பிரச்சாரத்தை அமைச்சர் அவர்கள் பரப்ப வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன்.

அரசாங்கம் கல்வித்துறைக்குச் செலவிடும் பணம் பயன் தருகிறதா என்று அவ்வப்பொழுது பார்க்க வேண்டும். உதாரணத்துக்குச் சொல்லுவேன். படிப்பவர் ஒருவர், பணத்தையும், நேரத்தையும் செலவிட்டுப் படித்துச் சில ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிவிட்டு வேறு வேலைக்குச் சென்றுவிடுகிறார் என்றால் இதுவரையில் இவர் பெற்ற அனுபவம் விரயமாகி புதிய தொழிலுக்கு அனுபவம் பெற நேரத்தைச் செலவழிக்க வேண்டியிருக்கிறது. கல்வியிலே இதை நாம் கணக்கெடுத்தாக வேண்டும்.

வேதனை தரும் செய்தி
இன்னும் ஒருவர் பல ஆயிரம் ரூபாயையும், பல வருடங்களையும் செலவிட்டு வைத்தியத் தொழிலுக்குப் படிக்கிறார். சில ஆண்டுகள் கழித்து வைத்தியத் தொழிலைவிடப் பலசரக்குக் கடை வைத்தால் வருவாய் அதிகம் வரும் என்று பிறர் சொல்ல இவர் வைத்தியத் தொழிலைவிட்டு, பல சரக்குக் கடை வைக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதுவரை அவர் செலவழித்த பணம், நேரம், அறிவு, ஆற்றல் எல்லாம் விரயமாகிறது. இதை நீங்கள் ஆரம்பப் பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையையும் பின் பல்கலைக் கழகத்திற்கோ உயர்நிலைப் பள்ளிக்கோ வந்து சேரும் மாணவர்களின் எண்ணிக்கையையும் பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். இதனால் எவ்வளவோ, பணமும் நேரமும் அறிவும் ஆற்றலும் விரயமாகிறது.

வெளிநாடுகளில் எல்லாம் பள்ளிகள் மேலும் பெருகி வரும் இந்நாளில், தமிழகத்தில் பள்ளிகள் மூடப்படும் என்ற செய்தி வேதனையைத் தருகிறது. வேறு யார் ஆட்சிக்கு வந்தாலும் பள்ளிகளை மூடமாட்டார்கள்.

ஆசிரியர் தொழிலில் அறுவறுக்கத்தக்க நிலை, இந்தச் சனநாயக நாட்டில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஏற்பட்டுக் கொண்டே வருகிறது.

மாற்று வழி என்ன இருக்கிறது?
படித்தவர்களுக்கே வேலை கிடைக்கவில்லை என்பதால் மற்றவர்கள் படிக்காமலே இருப்பது நல்லது என்று கருதுகிறார்கள். எங்கள் ஊரில் எனது நண்பர் ஒருவர் இரண்டு மூன்று லாரிகள் வைத்திருக்கிறார். அவரிடம் வேலை பார்க்கும் கணக்குப் பிள்ளை ஒரு பி.எஸ்.சி. படித்த மாணவர். எந்த வேலையும் கிடைக்காததால் அவர் இந்த வேலைக்கு வந்ததாகச் சொன்னார். இப்படிப்பட்ட மனப்பான்மையை எப்படி மாற்றப் போகிறோம்? மாற்றுவதற்கு வழி எங்கே இருக்கிறது?

இப்பொழுது கல்லூரியில் மாணவர்கள் குறைந்து கொண்டு வருகிறார்கள். கல்லூரியில் இடம் கிடைப்பது கடினமாக இருந்தநிலை மாறி ஆசிரியர்கள், தங்கள் தங்கள் கல்லூரிக்கு மாணவர்களைத் தேடி சேர்க்கும் நிலை இப்பொழுது இருக்கிறது.

கல்வித்துறையில் திருத்தம் வேண்டும். அதைப் பாடக்குழு அமல்செய்வதில், பாடம் இன்னின்ன முறையில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யவேண்டும்.

ஆசிரியர்களுக்கு அவர்களின் அறிவு மேலும் மேலும் வளருவதற்குத் தக்க வகையில் நூல்நிலையங்கள் கிராமங்களிலும் இருக்கவேண்டும்.

ஆசிரியர்கள் மனநிறைவோடு பணியாற்றும் வாய்ப்பைத் துரைத்தனத்தார் உடனடியாக உருவாக்கவேண்டும்.

ரொட்டித்துண்டுக் கதையில்...
இவையெல்லாம் அரசியல் காரணமாக நான் பேசவில்லை. கட்சியில் சம்பந்தப்படாத நாளிலேயே நான் “ரொட்டித் துண்டு” என்ற சிறுகதையில் ஆசிரியரின் நிலையையும் அவர் பணம் கொடுத்துப் புத்தகம் வாங்கிப் படிக்க முடியாத நிலையினையும் குறிப்பிட்டுள்ளேன். ஏன் நான் இதைக் குறிப்பிடுகிறேன் என்றால் அரசியல் இதில் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகத் தான்.
அமைச்சர் அவர்கள் பேசுகையில் சிலர் வரியும் உயரக் கூடாது என்பார்கள். உங்களிடம் வந்து சம்பளத்தையும் கூட்டிக் கேளுங்கள் என்பார்கள் என்று கூறினார். அவர் அப்படிச் சொல்லும்போது இப்படியும் கூறும் ஒரு பைத்தியக்காரன் இருக்கிறானோ? என்று நானே கேட்டுக் கொண்டேன்.
வரி இல்லாமல் நாட்டை ஆள்வது கடினம். வரி கூடாது என்று சொல்பவர்கள் வேறு இடத்தில் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் என்னுடைய கூடாரத்தில் இல்லை என்பதை நான் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

ஆகவே நான் கூறியதைத் துரைத்தனத்தார் கவனித்து ஆவன செய்வார்கள் என்று நம்புகிறேன்.

(நம்நாடு - 23.3.60)