அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


சேலம் உருக்காலை மற்றும்
தூத்துக்குடி ஆழ்கடல் திட்டம் சம்பந்தமாக
எழுச்சித் நாள் கூட்டம்

தாய்மார்களே, நண்பர்களே, இன்றைய தினம் தமிழகமெங்கும் நடத்தபடுகின்ற எழுச்சி நாள் நிகழ்ச்சியில் நான் சிவகங்கையிலே அந்த நிகழ்ச்சியிலே கலந்துகொள்வதில் உள்ளபடி மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். சிவகங்கை சீமையில் திராவிடர் கழகத் தோழர்கள் இதிலே கலந்துகொள்வதிலே நான் தனி மகிழ்ச்சி அடைகிறேன். திராவிடர் கழகத் தோழர்களுக்கு வேண்டுமானால் தங்களைத் தனியான ஒரு கழகம் என்று எண்ணிக்கொண்டிருப்பார்கள். என்னைப் பொறுத்தவரையில் அதையும் நான் என்னுடைய கழகம் என்று கருதுகின்றவனே தவிர அது வேறாவது ஒரு கழகம் என்று கருதுகிறவன் அல்ல.அந்தக் கழகத்திற்குப் பெயர் வைத்தவனும் அதற்குக் கொடி அமைத்துக் கொடுத்தவனும் நான் என்ற முறையில் அவர்களும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நானும் வேறுவேறாக அரசியலிலே முகாமிட்டாலும் அவர்களையும் நான் என்னுடைய கழகம் என்றுதான் கருதிக்கொள்வது வாடிக்கை. அதை அவர்கள் மெய்ப்பிக்கின்ற வகையில் இங்கே திராவிடர் கழகத் தோழர்களும் இந்த எழுச்சி நாளிலே பங்குகொள்வதில் நான் மிகுந்த பெருமைப்படுகிறேன்.

இப்படி எல்லா கட்சித் தோழர்களும் இந்த நாளைக் குறிப்பிட்டு சேலம் உருக்காலை, தூத்துக்குடி ஆழ்கடல் திட்டம் ஆகிய இந்த நாளை எழுச்சி நாள் என்று கொண்டாடுவது பற்றி ஒரு அரசு நடத்துகின்றவர்கள் இப்படிக் கொண்டாடலாமா? என்று கேட்கின்றார்கள். ஒருவன் பல்லக்கிலே சவாரி செய்யலாம். ஆனால் பல்லக்கிலே அவன் சவாரி செய்துகொண்டிருக்கின்ற நேரத்தில், பாதை ஓரத்தில் ஒரு அழகான குழந்தையை அடித்துக்கொல்வதற்காக ஒரு ஓநாய் வருமானால், நான்தான் பல்லக்கிலே போகிறேனே;அந்தக் குழந்தையை ஓநாய் அடித்தாலென்ன; வேங்கை அடித்தாலென்ன;நான் பல்லக்கிலே இருக்கிறவன் என்று அவன் கருதுவானானால் அவனுக்குப் பல்லக்குக் கொடுத்ததே பாதகங்களிலே ஒன்று என்று உலகம் தீர்மானிக்கும். அவன் பல்லக்கிலே ஏறிச்சென்றாலும் பாதை ஓரத்திலே பாதகம் நடப்பதைப் பார்த்தால், பழி நடத்தப்படுவதைப் பார்த்தால,; அக்கிரமம் நடத்தப்படுவதைப் பார்த்தால் அநியாயம் புகுத்தப்படுவதைப் பார்த்தால், அவன் ஏறியிருக்கிற இடத்திலேயிருந்து தாவிக் கீழே குதித்து அந்த அக்கிரமத்தை எதிர்த்துப் போராடுவதற்கு அவன் ஒருப்படாவிட்டால் அவன் ஏறிய உயரம் உயரமல்ல; அவனை ஏற்றிவிட்டவர்கள் நல்ல காரியம் செய்யவில்லை என்று உலகம் தூற்றும். ஆகையால்தான் அரசுக் கட்டிலிலே ஏறினாலும் அரசாளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டாலும் தூத்துக்குடி துறைமுகம், சேலம் உருக்காலைத் திட்டம் ஆகிய இந்தத் திட்டங்களில் மத்திய சர்க்கார் அக்கிரமமாக, அநீதியாக நியாயத்திற்கு ஒவ்வாத முறையில் அவர்கள் நடந்துகொள்கிற நேரத்தில் அரசு அமைத்துவிட்டோம் என்ற எண்ணத்தினாலே அவைகளை நான் கண்டிக்கத் தவறினால் ஏதோ நடந்துவிட்டுப்போகட்டும். ஐந்து வருடம் அமைச்சராக இருந்தால் போதும் என்று நான் எண்ணுவேனானால் என்னைவிட அற்பன் உலகத்திலே வேறு யாரும் இருக்க முடியாது. ஆகையால்தான் இந்த எழுச்சி நாளிலே நாங்கள் கலந்துகொள்கிற நேரத்தில் அமைச்சர்கள் ஆகிவிட்டாலும் அக்கிரமங்களைத் தடுக்கின்ற நேரத்தில் அநீதிகளை நீக்குகிற நேரத்தில் அமைச்சர் பதவி இதற்குக் குறுக்கே நிற்கக்கூடாது என்றத் துணிவோடும் முடிவோடும் இந்த எழுச்சிநாளில் அமைச்சர்களெல்லாம் கலந்துகொள்கிறார்கள்.

இந்த நாளை நான் எந்த ஊரிலே கலந்துகொள்ளவேண்டும் என்று ஒருவார காலம் வரையில் நண்பர்களெல்லாம் என்னிடத்திலே கலந்து பேசினார்கள். தொழில் நிரம்பிய இடம் கோவை அங்கு வாருங்கள் என்று அழைத்தார்கள். சேலம் திட்டம் என்றவுடன் சேலத்திற்கு வரவேண்டும் என்று அங்கே சொன்னார்கள். தூத்துக்குடி ஆழ்கடல் துறைமுகத் திட்டத்தை தூத்துக்குடியில் வந்து பேசுங்கள் என்று சொன்னார்கள். தமிழகத்திற்குத் தலைநகரம் சென்னை அங்கு பேசலாம் என்றார்கள். தமிழகத்திற்கு மையமான இடம் திருச்சி அங்கு வந்து பேசுங்கள் என்றார்கள்.ஆனால் நான் ஒரு கணம் எண்ணிப் பார்த்து சிவகங்கைச் சீமையை நான் போகவேண்டிய ஊராக தேர்ந்தெடுத்தேன். ஏன் அப்படி நான் தேர்ந்தெடுத்தேன் என்ற விபரத்தைச் சொல்லி மற்ற ஊர்க்காரர்களுக்கு உங்கள் பெயரிலே பொறாமை வரும்படியாக செய்ய விரும்பவில்லை. ஆனால் உங்களை நாடி வந்தேன். இந்த ஊரைத் தேடி வந்தேன். காரணம் என்ன என்றால் சிவகங்கைச் சீமையும் அதைச் சுற்றியுள்ள இடமும் வீரத்திற்கு விளைநிலம். உறுதிக்குப் பெயர்பெற்ற இடம்.நல்லக் காரியத்திற்கு துணைநிற்கும் இடம். ஆகையினால் நம்முடைய நியாயத்தை முதலிலே சிவகங்கைச் சீமையிலே சொல்லலாம் என்ற முறையில் நியாயத்தைச் சொல்வதற்கு உங்களை நான் நாடி வந்திருக்கின்றேன்.

இந்த நாளுக்கு நாங்கள் கிளர்ச்சி நாள் என்று பெயர் வைக்கவில்லை. கிளர்ச்சி செய்து பழக்கம் இல்லாததால் அல்ல. கிளர்ச்சி செய்யவேண்டிய கட்டம் வரவில்லை என்பதாலே. இந்த நாளுக்கு கண்டன நாள் என்றுகூட பெயர் வைக்கவில்லை. மக்களுக்கு விபரத்தைச் சொல்லாமல் கண்டிப்பது அரசியல் பேதமை என்பதாலே இதற்கு கண்டன நாள் என்று பெயர் வைக்கவில்லை. இதற்கு நாங்கள் வைத்திருக்கின்ற பெயர் எழுச்சி நாள் என்றப் பெயராகும். திராவிட முன்னேற்றக் கழகம் ஒவ்வொன்றுக்கும் பெயர் வைக்கிற நேரத்தில் பொருத்தம் அறியாமல் பெயர் வைக்கின்ற வாடிக்கை இல்லை. கண்டனத்தைத் தெரிவிக்கவேண்டிய நாளை கண்டனநாள் என்று அழைக்கும். இந்த நாளை எழுச்சி நாள் என்று பெயரிட்டதற்குக் காரணம் வடக்கே உள்ள இந்தியப் பேரரசு சேலம் உருக்காலை தூத்துக்குடி துறைமுகத் திட்டம் ஆகிய இரண்டும் யாரோ பத்து அரசியல்வாதிகள் பேசிக்கொண்டிருக்கிற பிரச்சினையே தவிர ஏதோ சில அரசியல் கட்சிகள் இதைப் பற்றி பேசுகினறனவே தவிர தமிழ்நாட்டு மக்களுக்கு சேலம் உருக்காலையைப் பற்றி தூத்துக்குடி துறைமுகத்தைப் பற்றி அக்கறை இல்லை என்று தவறாக எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள். இல்லை இல்லை இது அரசியல்வாதிகளின் வேலை அல்ல. அரசியல் கட்சிகளின் பொழுதுபோக்கல்ல. இது மக்கள் மனதிலே எழுந்திருக்கின்ற எழுச்சித் திட்டங்கள் என்பதை பேரரசு உணரவேண்டுமானால் ஒரு எழுச்சி நாள் நடாத்தி அதிலே இலட்சக்கணக்கான மக்கள் தமிழகத்திலே கலந்துகொண்டு இது முன்னேற்றக் கழகத்தின் திட்டமல்ல; இது வலதுசாரி கம்யூனிஸ்ட்டுகளின் திட்டமல்ல; இது இடதுசாரிகளின் திட்டமல்ல; இது சுதந்திராக் கட்சியின் திட்டமல்ல. இது இத்தனைக் கட்சிகளையும் உள்ளடக்கிய பொதுமக்களுடைய திட்டம். பொதுமக்கள் இதைப்பற்றி எழுச்சியோடு இருக்கிறார்கள்; மனதிலே அதிகமான அளவுக்கு அவர்களுக்கு அந்தத் திட்டங்களைப் பற்றி எழுச்சி இருக்கிறது என்பதை பேரரசிற்கு உணர்த்துவதற்காக இந்த எழுச்சி நாளை நடத்தவேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் கருதிற்று. அதை தமிழக்தின் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்ற முறையில் சட்டமன்றத்திலேயும் நான் அறிவித்தேன்.

ஆகையினால் இந்த எழுச்சி நாள் என்பது கிளர்ச்சி நாள் அல்ல. போராட்ட நாள் அல்ல. மோதுதலை உண்டாக்குகிற நாள் அல்ல. இன்னமும் சொல்லப்போனால் இந்தியப் பேரரசுக்கும் மாநில அரசுக்கும் மோதுதலை உண்டாக்குவதற்கு இது தூதுவிடுகின்ற நாள் அல்ல.

மத்திய அரசைப் பற்றி எண்ணிப்பார்க்கிற நேரத்தில் எனக்குக் கோபத்தைவிட பரிதாபம்தான் நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டு வருகிறது. அதற்குப் பெயர் மத்திய அரசு. அதற்கு சிறப்பான பெயர் இந்தியப் பேரரசு. அதை நடத்துகின்ற கட்சி காங்கிரஸ் கட்சி. ஆனால் அந்தக் காங்கிரஸ் கட்சியின் ஆளுகையிலே இருந்து, காங்கிரஸ் கட்சியின் பிடியிலே இருந்து இந்தியாவிலே பெரும்பகுதி 1967 ஆம் ஆண்டு தேர்தலில் தன்னைத்தானே விடுவித்துக்கொண்டிருக்கிறது. இன்று இந்தியப் பேரரசை நடத்துவது காங்கிரஸ் கட்சியே தவிர இந்திய முழுவதையும் பல மாநிலங்களாக பிரித்திருக்கின்ற தன்மையில் அந்த மாநில அரசுகளை நீங்கள் எடுத்துகொள்வீர்களானால் பெரும்பாலான அரசுகள் காங்கிரஸ் அரசு அல்ல. நம்முடைய அண்டை நாடான கேரளம் காங்கிரஸ் அரசிடத்திலே இல்லை. நம்முடைய தமிழகம் காங்கிரஸ் அரசிடத்திலே இல்லை. பக்கத்திலே உள்ள ஆந்திரமும் அதைத் தொட்டுக்கொண்டிருக்கின்ற மைசூரும் அதை ஒட்டிக்கொண்டிருக்கின்ற மராட்டியமும் இந்த மூன்று இடங்கள் மட்டும்தான் காங்கிரசினுடைய அரசு என்று பெரிய அளவிலே சொல்லப்பட முடியும். சிறிய அளவிலே இமாச்சலப் பிரதேசமும், விந்தியப் பிரதேசமும் இருக்கின்றன. இராஜஸ்தானம் காங்கிரஸ் அரசிடத்திலே காங்கிரஸிலே உள்ளவர்கள் செய்த தந்திரம் காரணமாக இராஜஸ்தானத்து அரசு காங்கிரஸ் அரசாகியிருக்கிறது. பக்கத்திலேயும் எடுத்துக்கொள்வீர்களானால் கேரளம், தமிழ்நாடு, ஒரிசா, பீகார், பஞ்சாப், ஹரியானா, மேற்கு வங்காளம், உத்திரப் பிரதேசம் ஆகிய இத்தனை மாநிலங்கள் இன்றையதினம் காங்கிரஸ் ஆட்சியிலே இல்லை. மாணவ நண்பர் சொன்னபடி இந்த மாநிலங்களெல்லாம் சாதாரண மாநிலங்கள் அல்ல. பீகார் மாநிலம் இராஜேந்திர பிரசாதை நாட்டுக்குத் தந்த மாநிலம். உத்திரப்பிரதேசம் மோதிலால் நேருவையும், ஜவகர்லால் நேருவையும் இந்தியப் பிரதமராக இருக்கின்ற இந்திரா நேருவையும் இடையிலே லால்பகதூர் சாஸ்திரி அவர்களையும் அளித்த மாநிலமாகும். வங்காள மாநிலம் சுபாஷ் சந்திரபோஸைக் கொடுத்து அதன் மூலம் இந்தியாவின் வீரத்தை உலகம் அறிந்துகொள்ளும்படியாக வரலாற்றிலே பொறித்துக்கொடுத்த மாநிலமாகும். இவை அத்தனையும் இன்றைய தினம் காங்கிரஸ் ஆட்சியிலே இல்லை. ஆகையினால் இந்தியப் பேரரசை நடத்துகின்ற காங்கிரஸ் கட்சி கேரளத்தை இழந்து, தமிழகத்தை இழந்து, ஒரிசாவை இழந்து, பீகாரை இழந்து, மத்தியப்பிரதேசத்தை இழந்துகொண்டிருப்பதாக சொல்கிறார்கள்; இழக்கவிடமாட்டோம் என்று பேசுகிறார்கள்; ஆனால் அவை அத்தனையும் பெரிய டாக்டர் வந்து ஊசிபோடவேண்டிய நிலையிலே உள்ள நோயாளி நிலையிலே இருப்பது யாரும் மறுப்பதற்கில்லை; அந்த மத்தியபிரதேசத்தையும் இழந்து, இராஜஸ்தானத்தை இழந்து, ஹரியானாவை இழந்து, பஞ்சாபை இழந்து, உத்திரப்பிரதேசத்தை இழந்து, மேற்கு வங்காளத்தை இழந்து இத்தனை போக இந்தியப் பேரரசை நாங்கள் நடத்துகிறோம் என்று சொல்லிக்கொள்ளத்தக்க நிலையிலே இருக்கிறது. காதிலிருந்தது போய், கழுத்திலிருந்தது போய், கையிலிருந்தது போய், தாலியிலே கட்டியிருந்த பொன் பொட்டும் போய் ஒரு மஞ்சளைக் கட்டிவைத்திருக்கின்ற உத்தமியைப்போல இன்றையதினம் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. நான் நல்லபடி சொல்கிறேன். இவ்வளவு நொந்துபோனவர்களை மேலும் நோகச் செய்யவேண்டாம் என்பதற்காக அவர்களை நான் நல்லபடியாகவே சொல்கிறேன். ஆனால் இதை சொல்வதற்குக் காரணம் இவ்வளவு இழந்துவிட்ட பிறகு அந்த இந்தியப் பேரரசுக்கு தன்னடக்கம் வந்திருக்கவேண்டும். நாம் யாருக்குப் பிரதிநிதிகள்; இந்த இந்தியாவிலே எந்தப் பகுதி நம்மிடத்திலே இருக்கிறது; என்ற அடக்க உணர்ச்சியை அவர்கள் பெற்றிருப்பார்களானால் மாநிலங்கள் எழுப்புகின்ற கோரிக்கையை, மாநிலங்கள் விடுக்கின்ற வேண்டுகோளை ஏதோ இந்தியா முழுவதும் தங்கள் ஆளுகையிலே இருப்பதைப்போல எண்ணிக்கொண்டு ஆணவ அரசு நடத்தினார்களே 57-ல், 62-ல் அதே நிலைதான் இப்போதும் இருப்பதாக எண்ணிக்கொண்டிராமல் இந்தியாவிலே பல பகுதிகள் பல மாநிலங்கள் காங்கிரசிடத்திலே இல்லை; நாம் இத்தனை இழந்துவிட்டிருக்கிறோம்; இவ்வளவு இழந்துவிட்ட பிறகாகிலும் இனி இருப்பதையும் இழக்காமல் இருக்கவேண்டுமானால் உண்மையை உணர்ந்துகொள்ளவேண்டும்; அடக்க உணர்ச்சி பெறவேண்டும்; கலந்து ஆலோசிக்கவேண்டும்; பேரரசு சிற்றரசு என்று நாம் பாகுபாட்டை மனதிலே அதிகமாக வளர்த்துக்கொள்ளக் கூடாது என்று இந்தியப் பேரரசு எண்ணியிருந்திருக்கவேண்டும். அப்படிப்பட்ட எண்ணம் அவர்களுக்கு இருந்திருக்குமானால் சேலம் உருக்காலை திட்டத்தையும், தூத்துக்குடி ஆழ்கடல் திட்டத்தையும் அவர்கள் முகலாய சாம்ராஜ்யத்தை ஆண்டுகொண்டிருந்த சக்கரவர்த்திகள் பாஷையில் இப்பொழுது இல்லை இப்பொழுது இல்லை என்று அவர்கள் கையாட்டிக்கொண்டிருப்பது துளிகூட பொருத்தமாக இருக்கமுடியாது. ஆகையால்தான் இந்த எழுச்சிநாளில் தூத்துக்குடி துறைமுகத் திட்டத்திற்கும், சேலம் உருக்காலை திட்டத்திற்கும் தமிழகத்து மக்கள் அவ்வளவு பேரும் அவர்கள் எந்தக் கட்சிகளிலே ஈடுபட்டிருந்தாலும் கட்சியின் கட்டுகளையெல்லாம் அவர்கள் மீறி அல்லது பொருட்படுத்தாமல் ஒன்று திறண்டு எங்களுக்கு சேலம் உருக்காலை வேண்டும், தூத்துக்குடி துறைமுகத் திட்டம் வேண்டும் என்று பலவற்றை இழந்திருக்கிற இந்தியப் பேரரசிடத்தில் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள். வைத்தியத்திற்கு செல்கின்ற நோயாளி டாக்டர் இருமிக்கொண்டிருந்தால் மருந்து வாங்குகின்றபொழுதே அவருக்கும் ஒரு மிளகுக் கஷாயம் போட்டு சாப்பிடுங்கள் என்று வைத்தியம் சொல்லிவிட்டு வருவதுண்டு. என்னுடைய சிற்றன்னை அடிக்கடி இருமிக்கொண்டிருந்தார். என்னுடைய சிற்றன்னை டாக்டர் கொடுத்த மருந்தை வாங்கிக்கொண்டு இதை சாப்பிடுகிறேன்; ஆனால் தம்பி நீ வந்ததிலே இருந்து பார்க்கிறேன் இருமிக்கொண்டே இருக்கிறாய், வீட்டிலே சொல்லி மிளகுக் கஷாயம் போட்டு சாப்பிடு, அது குறையும் என்று சொன்னார்கள். அவருடைய மகன் என்ற முறையில் நமக்கு எத்தனையோ தொல்லை இருந்தாலும் நான் டெல்லி பேரரசுக்கும் கொஞ்சம் மிளகுக் கஷாயம் சாப்பிட்டு நோயைக் குறைத்துக்கொள்ளுங்கள் என்பதைப்போல நீங்கள் எந்த நிலைக்கு இளைத்து இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள் என்று இந்தியப் பேரரசுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். ஆளுகின்றவர்களுக்கும் ஆளப்படுகின்றவர்களுக்கும் இடையில் ஒரு பள்ளம் ஏற்பட்டுவிட்டால் அதற்குப் பெயர் மக்களாட்சி ஆகாது. ஆகையினால் தமிழக அரசை ஏற்றுக்கொண்டிருக்கிற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தற்காப்பின் அடிப்படையில் எங்களுக்குத் தோன்றியிருக்கிற பிரச்சினையை மக்களிடத்திலே எடுத்துச்சொல்லி இதைப்பற்றி நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? என்ன செய்யச் சொல்லுகிறீர்கள்? எந்த வழியைக் காட்டுகிறீர்கள்? என்ன கட்டளை பிறப்பிக்கின்றீர்கள்? என்ன ஆணையிடுகிறீர்கள்? என்று கேட்கவேண்டிய பொறுப்பு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கிறது. அந்தப் பொறுப்புணர்ச்சியின் அடிப்படையில் உங்களை சந்தித்து இந்தப் பிரச்சினைகளைச் சொல்கிறோம்.

இந்தப் பிரச்சினைகளை சொல்வதற்கு முன்னாலே நான் அவர்களுக்கும் நமக்கும்; பேரரசுக்கும் நமக்கும் ஒரு மோதுதலை உண்டாக்குவதற்காக இதிலே ஈடுபடவில்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டேன். இரண்டாவது நான் தெளிவுபடுத்த விரும்புவது பிரச்சினைகள் தேவைதானா? சேலம் பிரச்சினை தேவையா? தூத்துக்குடி பிரச்சினை தேவையா? இதுதானா இப்போது நாட்டுக்குத் தேவை? வேறு பிரச்சினைகள் இல்லையா? என்று உங்களிலே சில பேருக்கு கேட்கத் தோன்றும். வேறு பல பிரச்சினைகள் தமிழகத்து மக்களை வாட்டி வதைக்கக்கூடியப் பிரச்சினைகள் நிரம்ப இருக்கின்றன. எல்லோரையும் வாட்டிவதைக்கத் தக்கதும், மிரட்டத்தக்கதுமான உணவுப் பிரச்சினை தமிழக மக்களிடத்திலே இருக்கிறது. அதை விட்டுவிட்டு நாங்கள் சேலம் பிரச்சினைக்கு வரவில்லை. அதை மறந்துவிட்டு சேலம் பிரச்சினைக்கு வரவில்லை. அதை அற்பமானது என்று சொல்லிவிட்டு இந்தப் பிரச்சினைக்கு வரவில்லை. அந்த உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகமும் அதை நடத்துகின்ற தமிழக அரசும் தன்னாலான முயற்சிகளை எடுத்துக்கொண்டு ஓரளவிற்கு அதனை சீர்திருத்திவிட்டு அதற்கு அடுத்தக் கட்டமாகத்தான் சேலம் பிரச்சினைக்கு வந்திருக்கிறோம். நாங்கள் முதல்முதல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நேரத்தில் அதற்கு முன்னாலே இருந்த அரசு சென்னைக்கும், கோவைக்கும் வேறுபல ஊர்களுக்கும் பங்கீட்டு முறையில் அரிசி தருவதாக வாக்களித்திருந்தார்களே தவிர அதற்குத் தேவையான அரிசியை சேர்த்துவைக்காமல் அவர்கள் அரசுப்பொறுப்பிலே இருந்து விலகிவிட்டார்கள். அதைப் பார்த்தவுடன் சேலத்தைப் பின்னாலே பார்த்துக்கொள்ளலாம், தூத்துக்குடியை சற்று பின்னாலே கவனிக்கலாம். முதலிலே நம் நாட்டு மக்களுடைய உணவு நெருக்கடிப் பிரச்சினையை கவனிக்கவேண்டும் என்ற முறையில் இந்த இரண்டு மூன்று மாதகாலம் அந்தப் பிரச்சினையிலே அக்கறை காட்டி வெளிமாநிலங்களுக்கு நம்முடைய நாட்டு உணவுப்பொருள் கள்ளத்தனமாக எடுத்துச்செல்லப்படாமல் எல்லைகளுக்கெல்லாம் தக்கப் பாதுகாப்புத் தேடி, உள்நாட்டிலேயே பதுக்கல்காரர்களும், கள்ளமார்க்கட்காரர்களும் உணவுப் பொருளைப் பதுக்கிவிடாமல் பார்த்துக்கொள்வதில் கண்ணுங்கருத்துமாக இருந்து கொள்முதலை துரிதப்படுத்தி அக்டோபர் மாதம் வரையில் நமக்குத் தேவைப்படுகின்ற அரிசியை சேமித்து சர்க்காரினுடைய களஞ்சியத்திலே தயாராக வைத்துவிட்டு அதற்குப் பிறகுதான் சேலம் பிரச்சினையைப் பற்றி கவனம் செலுத்தியிருக்கிறோம். ஆகையினால் காங்கிரஸ்காரர்கள் உணவுப் பிரச்சினையைக் கவனிக்காமல் தொழில் பிரச்சினையைக் கவனிக்காமல் சேலம்தானா முக்கியம், தூத்துக்குடிதானா முக்கியம் என்று பேசுவார்களானால்; அவ்வளவு தெளிவாக யாரும் பேசுவதில்லை; யாராகிலும் தப்பித் தவறி அங்கு காங்கிரசிலே உள்ளவர்கள் அப்படிப் பேசுவார்களானால் அதற்கு விளக்கமளிப்பதற்காகத்தான் நாங்கள் கவனிக்கவேண்டியப் பிரச்சினைகளை முதலிலே கவனித்துவிட்டு இரண்டாவது கட்டமாக இந்தப் பிரச்சினைக்கு வந்தோம்.

இந்தப் பிரச்சினைக்குக்கூட இப்பொழுது ஏன் வந்தோம் என்று நீங்கள் கேட்பீர்களானால் நாலாவது ஐந்தாவது திட்டம் இந்த இரண்டு வருடத்திற்கு முன்னாலேயே நாலாவது ஐந்தாண்டு திட்டம் பூர்த்தியாகியிருக்கவேண்டும்; எழுத்துவடிவத்திலாகிலும். ஆனால் நாலாவது ஐந்தாண்டு திட்டம் போடவேண்டும் என்று பேசி வருடம் இரண்டு ஆகிவிட்டது . இனி மிச்சம் இருப்பது மூன்று வருடங்கள்தான். பெயர் வேண்டுமானால் நாலாவது ஐந்தாண்டு திட்டம் என்று இருக்கலாமே தவிர ஐந்து ஆண்டுகள் இப்போது இல்லை. அதிலே இரண்டு ஆண்டுகள் திட்டமில்லாமலே போய்விட்டது. இதை சுதந்திராக் கட்சியினுடைய கர்த்தாவான ராஜாஜி அவர்கள் சொன்னபொழுது இதை காங்கிரஸ் தலைவர்களுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அவர் தெளிவாகச் சொன்னார் ”ஐந்தாண்டு திட்டங்களினாலே உங்களுக்கு ஏற்பட்ட அலுப்பு நாட்டுக்கு ஏற்பட்ட களைப்பு இதை நீக்கிக்கொள்வதற்கு ஒரு வருடம் இரண்டு வருடம் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் 'hழடனையல' விடுமுறை விடுங்கள். அதற்குப்பிறகு ஐந்தாண்டுத் திட்டத்தை கவனிக்கலாம்” என்று அவர்கள் சொன்ன நேரத்தில் அதிதீவிரமாகத் திட்டங்களிலே தங்களை ஈடுபடுத்திக்கொண்ட காங்கிரஸ் தலைவர்கள் ராஜாஜியைப் பார்த்துச் சொன்னார்கள் 'இந்தக் கிழவனுக்கு என்ன தெரியும். நாங்கள் திட்டத்திற்கு ஓய்வளிக்கமாட்டோம். விடுமுறை விடமாட்டோம்' என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் இன்றையதினம் விடுமுறை எடுத்துக்கொள்ளாமலே இரண்டு வருடங்கள் உருண்டோடிவிட்டன. மீதியிருப்பது மூன்று வருடங்கள். இந்த மூன்று வருடங்களில் ஐந்தாண்டுத் திட்டத்தை அவர்கள் தீட்டுகிற நேரத்தில் சேலம் இரும்பாலையைப் பற்றியும், தூத்துக்குடி துறைமுகத்தைப் பற்றியும் நாட்டு மக்களெல்லாம் ஒன்றுபட்டு எழுச்சிநாள் நடத்தி மத்திய சர்க்காருக்குத் தெரிவித்தால் இந்த மிச்சமிருக்கிற மூன்றாண்டினுடைய ஐந்தாண்டு திட்டத்திலாகிலும் இதை இணைக்கமாட்டார்காளா என்ற எண்ணத்தினாலே இப்போது இந்த நாளை நாம் தெரிவித்திருக்கிறோம்.

இன்னமும் நாலாவது ஐந்தாண்டு திட்டத்தினுடைய முடிவான வடிவம் தரப்படவில்லை. முடிவான வடிவம் தரப்படுகிற நேரத்தில் இன்றையதினம் நடத்தப்படுகின்ற எழுச்சிநாளைப்பற்றி இந்தியப் பேரரசு நல்லமுறையிலே உணர்ச்சி பெற்று இந்த நாலாவது ஐந்தாண்டு திட்டத்தில் சேலம் உருக்காலையும், தூத்துக்குடி துறைமுகத் திட்டமும் சந்தேகத்திற்கு இடமில்லாத முறையில் இடம்பெறும் என்று அறிவிக்கவேண்டும். அப்படி அவர்கள் அறிவிக்கும்படியாக வலியுருத்துவதற்காக வற்புறுத்துவதற்காக இந்த எழுச்சிநாளை இன்றையதினம் கொண்டாடுகிறோம். ஆகையினால் இது தேவையில்லாத நாளல்ல. அதைப்போலவே இந்த இரண்டு திட்டங்களும் தேவையில்லாத திட்டங்களல்ல.

நம்முடைய பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் அவர்கள் சேலம் திட்டத்தைப் பற்றி உங்களிடத்திலே கோடிட்டுக் காட்டினார்கள். சேலம் உருக்காலை திட்டத்தைப் பற்றி சில விபரங்களை மட்டும் நான் தரவேண்டும் என்று எண்ணுகிறேன். சேலம் மாவட்டம் கஞ்சமலை என்ற பகுதியில் கனிவளம் நிறம்ப இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நெடுங்காலமாக சொல்லிக்கொண்டு வருகிறார்கள். அந்தக் கஞ்சமலைப்பகுதியில் கிடைக்கக்கூடிய இரும்பு இருநூறு வருடங்களுக்கல்ல இருநூறு வருடங்களுக்கு மேலும் வெட்டவெட்ட குறையாமல் எடுக்க எடுக்க குறையாமல் கிடைக்கக்கூடிய அளவிற்கு கஞ்சமலையிலே இரும்பும் தாதுப்பொருளும் இருப்பதாக ஆராய்ச்சியார்கள் இன்றல்ல நேற்றல்ல பத்தாண்டுகளுக்கு முன்பல்ல இருபது ஆண்டுகளுக்கு முன்பல்ல இருநூறு ஆண்டுகளாக ஏடுகளிலே எழுதிக் காட்டியிருக்கிறார்கள். வௌ;ளைக்காரர்கள் இந்த நாட்டை ஆண்டகாலத்தில் அந்தக் கஞ்சமலை இரும்பை எடுத்து தென்னாற்காடு மாவட்டத்தில் போத்தலோவா என்ற இடத்தில் ஒரு சின்ன உலைக்களத்தை வைத்து அதிலிருந்து உருக்குத் தயாரித்து அந்த உருக்கை இங்கிலாந்துக்கு அனுப்பி இங்கிலாந்திலே ஒரு ஆற்றுக்குப் பாலத்தையே அமைத்திருப்பதாக அதைப்பற்றி ஏட்டிலே எழுதியிருக்கிறார்கள். அதை ஒரு தடவை சட்டமன்றத்தில் சேலத்து இரும்பை எடுத்து பாலம் அமைத்தார்களாம் சீமையில், உண்மைதானா? என்று கேட்டபோது அப்பொழுது தொழில் அமைச்சராக இருந்த வெங்கட்ராமன் அவர்கள் வேடிக்கை பேசுவதாக எண்ணிக்கொண்டு தனக்கு விபரம் தெரியவில்லை என்பதை விளக்கிக்கொள்கின்ற முறையில் அது இந்த சேலம் அல்ல, அமெரிக்காவிலே சேலம் என்ற ஒரு இடம் இருக்கிறது அதுவாக இருக்கலாம் என்று அவர் பேசினார். அது நகைச்சுவையாக இருந்தால் பொருளற்ற நகைச்சுவை அது. உண்மையிலேயே அவர் நம்பிக்கொண்டு அப்படி சொல்லியிருப்பாரென்றால் இவ்வளவு விபரம் அறியாதவர் நாட்டை ஆண்டாரே என்று நாம் பரிதாபப்படவேண்டும். மறுதினம் அதே சட்டமன்றத்தில் இந்த சேலம் இரும்பைப்பற்றி அவர்களே எழுதி சர்க்காரே எழுதி சட்டமன்றத்தினுடைய படிப்பகத்திலேயே டiடிசயசல-யிலேயே வைத்திருந்த ஒரு புத்தகத்தை நான் சான்றுக்கு எடுத்து அதை படித்துக் காட்டினேன். இந்த சேலம்தான் என்று. இந்த சேலத்து இரும்பா என்றார்கள். அது எப்படியோ போகட்டும்.ஆனால் சேலத்திலே கிடைக்கிற கஞ்சமலை இரும்பை எடுத்து உருக்காக்கி சீமைக்கு அனுப்பியிருக்கிறார்கள். புரத்தலோவிலே அப்பொழுது கலெட்கடராக இருந்த ஒரு வௌ;ளைக்காரப் பெருமகன் அந்தக் காரியத்தைச் செய்தான். ஆனால் ஏராளமான அளவில் உருக்கு ஏற்படவேண்டும் என்றால் கஞ்சமலை இரும்பை விஞ்ஞான முறைப்படி வெட்டியெடுக்கவேண்டும். அப்படி வெட்டியெடுக்கின்ற இரும்பை உருக்கவேண்டும். அப்படி உருக்கவேண்டுமானால் அவர்களுடைய காலத்திலே உருக்கியது வெறும் விறகைப்போட்டு. விறகினுடைய வெப்பத்தில் அதை உருக்கமுடியாது என்பதாலே விறகைவிட வெப்பம் தரத்தக்க முறையில் நிலக்கரி கிடைக்கட்டும் என்று சில காலம் காத்துக்கொண்டிருந்தார்கள். நிலக்கரி கிடைத்தது. இங்கே அல்ல, வடக்கே கிடைத்தது. அப்படி வடக்கே இருக்கும் நிலக்கரியைக் கொண்டுவந்து சேலத்து இரும்பை உருக்காக்கலாமா? என்று கேட்ட நேரத்தில் ஏ..அப்பா! இங்கேயிருந்து எங்கே நிலக்கரியை கொண்டுவருவது! எவ்வளவு செலவாகும்! என்று கணக்குச் சொன்னார்கள். ஆனால் இவர்களே ஆரம்பித்திருக்கிற வேறுபல உருக்கு ஆலைகளில் பக்கத்திலே நிலக்கரி இல்லை. நூறு மைல் இருநூறு மைல் தொலைவிலே இருந்து நிலக்கரியைத் தருவித்துத்தான் உருக்காலை அமைத்திருக்கிறார்கள். என்றாலும் பெரியவர்கள் சொல்கிறார்கள். கேட்டுக்கொள்ளலாம் என்ற முறையில் நிலக்கரி கிடைக்கவில்லை ஆகையினால் உருக்காலை இப்போது இல்லை என்று தமிழ்நாட்டு மக்கள் தாங்கிக்கொண்டார்கள்.

அதற்குப் பிறகு தென்னாற்காட்டிலே நெய்வேலியிலே நிலக்கரி கிடைத்தது நம்முடைய சேலத்து இரும்பும் நெய்வேலி நிலக்கரியும் போகாத நாடில்லை. பழைய காலத்திலே அரசர்கள் திக்விஜயம் செய்வார்களே அதைப்போல் உலகத்திலே எல்லா பகுதிக்கும் சேலத்து இரும்பும் நெய்வேலி நிலக்கரியும் போய்வந்திருக்கின்றன. ஜெர்மனியிலே போய் அந்த நிபுணர்களும் இரு உருக்காலைக்கு ஏற்றதுதான் என்று அறிவித்தார்கள். அதற்குப் பிறகாகிலும் உருக்காலை ஏற்பட்டதா என்றால் ஏற்படவில்லை. சட்டமன்றத்திலே அமைச்சர் எழுந்து நின்று இது கிழக்கு ஜெர்மனியிலே பரிட்சை பார்த்தோம், இனி மேற்கு ஜெர்மனியிலே பரிட்சை பார்க்கவேண்டும் என்று மேற்கு ஜெர்மனியிலே பரிட்சை பார்த்தார்கள். மேற்கு ஜெர்மனி ஆராய்ச்சியாளர்களும் இது தகுந்த திட்டம்தாள் என்று ஒப்புதல் அளித்தார்கள். அதற்குப் பிறகும் சேலம் உருக்காலை வரவில்லை. ஏன் என்று கேட்டதற்கு அமெரிக்காவில் கட்டையும் போடாமல், கரியும் போடாமல் மின்சாரத்தாலேயே இரும்பை உருக்குகிறார்களாம்; அதைப்போய் பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி தொழில் அமைச்சராக இருந்த வெங்கட்ராமன் அவர்கள் அமெரிக்காவுக்குச் சென்றார்கள். அமெரிக்காவை சுற்றிப் பார்த்துவிட்டு அகமகிழ்ச்சியோடு வந்தார்கள். இந்த இரும்பு உருக்காலை நிச்சயம் வரும். அதற்கான விபரமெல்லாம் நான் சேமித்துக்கொண்டு வந்துவிட்டேன் என்று அறிவித்தார்கள். அதற்குப் பிறகும் வந்ததா என்றால் அதற்குப் பிறகும் வரவில்லை. ஏனென்றால் இந்த இரும்பையும் இந்த நிலக்கரியையும் எடுத்துக்கொண்டு ஜப்பான் நாட்டுக்கு சென்றார். ஜப்பான் நாட்டிலே உள்ள நிபுணர்கள் அதைப் பரீட்சை செய்து பார்த்து இது தரமானது உருக்காலைக்கு ஏற்றது இந்தியாவிலே உள்ள மற்ற எந்த உருக்காலையும் எந்த விலைக்கு இதை தயாரிக்க முடியுமோ அதைவிட குறைவான விலைக்கு சேலத்திலே தயாரிக்கலாம் மற்ற இடத்திலே கிடைப்பதைவிட சேலத்து உருக்காலையில் மலிவாகத் தயாரிக்க முடியும். ஆதாயம் அதிகம் கிடைக்கும். இதற்கு வேண்டுமானால் நாங்களேகூட உதவி செய்கிறோம் என்று சொன்னார்கள். இப்போது நான் 1957லிருந்து 1965 வரையில் வேகவேகமாக நடைபோட்டுக் காட்டியிருக்கிறேன். இந்த 57லிருந்து 65 வரையில் மாறி மாறி காங்கிரஸ் கட்சிதான் நாடாண்டிருக்கிறது. இங்கே மட்டுமல்ல டெல்லியிலேயும் சேர்த்து. ஆக இன்றையதினம் நான் பேசுவதெல்லாம் அவர்கள் சொன்னதை மறந்ததாலே, சொன்னதை செய்யாமல் விட்டதாலே, வாக்களித்தபடி நடக்காததாலே நான் அவர்கள் சொன்னதை நிறைவேற்றுகின்ற முறையில் அவர்கள் வாக்களித்ததை அவர்கள் செய்யத் தவறினாலும் நாமாகிலும் செய்யலாம் என்ற பொறுப்புணர்ச்சியோடு இந்த எழுச்சிநாள் கொண்டாடப்படுகிறது.

இதிலே காங்கிரசுக்கு ஏன் வருத்தம் என்றால் இந்தப் பழைக விபரமெல்லாம் வெளியே வருமே என்பதிலே அவர்களுக்கு வருத்தம். அவர்கள்  வந்து எங்களோடு கலந்துகொண்டிருந்தால் இதைக்கூட நான் சொல்லியிருந்திருக்கமாட்டேன். அவர்கள் வராததால்தான் ஏன் வரவில்லை என்பது எனக்கு செய்யவேண்டும்போல தோன்றிற்று. அதிலேகூட நான் அவர்களைக் கடுமையாகத் தாக்கவேண்டும் என்று எண்ணவில்லை. ஏனென்றால் தொழிலமைச்சராக இருந்த வெங்கட்ராமன் அவர்களுக்கு இந்தப் பிரச்சினையிலே முழுக்க முழுக்க அக்கறை உண்டு என்பதை அவருடைய நண்பன் என்ற முறையில் நான் நன்றாக அறிந்திருக்கிறேன். அவர்கள் முயற்சி எடுத்துக்கொண்டார். ஆனார் அவர்கள் செய்த தவறு என்றால், அந்தத் தவறுதான் நான் செய்யக் கூடாது என்று ஜாக்கிரதையாக இருக்கிறேன்.அவர்கள் எந்த தவறு செய்தார்கள் என்றால் சர்க்காருக்கு சர்க்கார் கடிதம் எழுதிக்கொண்டார்கள். மாநில சர்க்கார் மத்திய சர்க்காரைக் கேட்பது. மத்திய சர்க்கார் போடுகிற தபாலை மாநில சர்க்கார் படிப்பது. அதை சட்டமன்றத்திலே எதிர்க்கட்சி கேள்வி கேட்டால் எதிர்க்கட்சியின் வாயை அடக்குவதற்காக எதையாவது சொல்வது. இப்படி அவர்கள் மூடிபோட்டு வைத்தார்கள். நான் அந்த மூடியைத் திறக்கிறேன். நடைபெற்றது இது.

இப்படி நடைபெற்றிருக்கின்ற இப்பபிரச்சினையில் கடைசியாக என்ன வந்ததென்றால் தொழிலமைச்சரான வெங்கட்ராமன் டெல்லி சர்க்காருக்கு ஒரு மனுபோட்டார்; 1965ல். என்னைக் கேட்கிறார்களே காங்கிரஸ்காரர்கள், நீ முதலமைச்சரான பிறகும் எழுச்சி நாள் கொண்டாடலாமா? என்று கேட்கிறார்கள். அதற்குக் காரணம் என்ன எண்ணுகிறார்கள் என்றால், முதலமைச்சர் பதவி அவ்வளவு பெரிது, எழுச்சிநாள் என்பது சாதாரண ஆள் நடத்துவது, நீ அதை விட்டுவிட்டு இதற்கு வருகிறாயே என்று கேட்கிறார்கள். என்னிடத்திலே அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை. அதற்காக நான் அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும். ஆனால் அவர்கள் செய்த தவறு என்ன என்றால் அமைச்சர்கள் ஆகிவிட்டதாலே உண்மையை மக்களுக்கு சொல்லவேண்டாம் என்று மூடிபோட்டு வைத்தார்கள். அப்பொழுதே அவர்கள் மக்களைக் கூட்டி எல்லா கட்சிகளையும் ஒன்றாக இணைத்து இதைப்போல எழுச்சி நாள் நடத்தி சேலம் இரும்பாலை வரவில்லை என்றால் எங்கள் மக்கள் திருப்தி அடையமாட்டார்கள் அவர்கள் கொதித்தெழுவார்கள் என்பதை இந்தியப் பேரரசு உணரும்படியாகச் செய்திருந்தால் 1960ல் இந்தத் திட்டம் வெற்றிகரமாக துவக்கப்பட்டிருக்கும். அப்படி துவக்கப்படும் என்ற எண்ணத்தில் கிட்டத்தட்ட 25000 ஏக்கர் நிலம் கஞ்ச மலையைச் சுற்றி விவசாயத்திலே இருந்த நிலத்தைக்கூட சர்க்கார் எடுத்துக்கொண்டு அதை சர்க்காரினுடைய உடமையாக்கிக்கொண்டிருக்கிறது. அதற்காக ஒரு தனி இலாக்கா ஏற்படுத்தி அதிகாரிகளைப் போட்டு பல லட்ச ரூபாய்களை செலவழித்திருக்கிறது. இவ்வளவு செய்தும் மத்திய சர்க்கார் ஒவ்வொரு திட்டமாக அடுத்த திட்டத்திலே பார்க்கலாம், அதற்கு அடுத்த திட்டத்திலே பார்க்கலாம் என்று சொல்லிக்கொண்டே வந்த நேரத்தில் ஆகட்டும் ஆகட்டும் என்று அவர்கள் ஒப்புக்கொண்டதாலே இன்றையதினம் பிரச்சினை இவ்வளவு சிக்கலுள்ளதாகிவிட்டது.

பணக்கஷ்டம் என்கிறார்கள். 57லே பணக்கஷ்டமா? 60லே பணக்கஷ்டமா?  அந்நியச் செலாவனி கஷ்டம் என்கிறார்கள் (கழசநபைn நஒஉhயபெந) 57லே அந்தக்கஷ்டமிருந்ததா? 60லே அந்தக்கஷ்டமிருந்ததா? 62லே அந்தக்கஷ்டமிருந்ததா? இல்லை. இப்போதுதான் அந்தக் கஷ்டம் வந்திருக்கிறது. ஒருவன் கொலை செய்துவிட்டானாம். அவனை கையும் பிடியுமாகப் பிடித்து வழக்குமன்றத்திலே நிறுத்தினார்கள். அவன் யாரைக் கொலை செய்தானென்றால், தன்னைப்பெற்றத் தகப்பனையும், தாயையும். தாயையும் தகப்பனையும் கொலைசெய்துவிட்ட கொடியவன் வழக்கு மன்றத்திலே நிறுத்தப்பட்டபொழுது அவனுக்குத் தூக்குத்தண்டனை விதித்தாராம் வழக்குமன்றத்தின் அதிபர். அவன் கோவென்று அழுது சொன்னானாம் அய்யா நான் அனாதை என்னைத் தூக்கிலே போடாதீர்கள் என்றானாம். என்னடா அனாதை என்று கேட்டதற்கு, எனக்குத்தான் தாயும் இல்லையே தகப்பனும் இல்லையே நான் அனாதை அல்லவா என்றானாம். எங்கே உன்னுடைய தாய்? நான்தான் தலையை சீவினேன். எங்கே உன்னுடைய தந்தை? நான்தான் கொன்றுவிட்டேன். என்று வாதாடியதாக உண்மையான கோர்ட்டிலே அல்ல, கதையிலே வருகிறது. அந்தக் கதையிலே வருவதையும் விஞ்சத்தக்க விதத்தில் அந்நியச் செலாவனித் துறையைக் கெடுத்தவர்கள்; ரூபாயின் மதிப்பைக் குறைத்தவர்கள்; வாங்கவேண்டிய அளவிற்குமேல் வெளிநாடுகளிலே கடன் வாங்கி அதை பயன்படுத்தவேண்டிய முறையிலே பயன்படுத்தாமல் பொருளாதார சீர்குலைவை உண்டாக்கிவிட்டவர்கள்; அதே காங்கிரஸ்காரர்கள் நம்மை பார்த்து கோர்ட்டிலே சொன்னானாமே நான் தாயுமற்றவன் தகப்பனுமற்றவன் அனாதை என்று. அதைப்போல் பணநெருக்கடி அன்னியச் செலாவனி சரியாக இல்லை. ஆகையால் சேலமில்லை என்று வாதாடுகிறார்கள். உள்ளபடி அப்படி அன்னிய செலாவணி நெருக்கடி ஏற்படாத காலத்தில் இதை ஆரம்பித்திருந்தார்களானால் சேலம் திட்டம் எண்பது கோடி ரூபாயிலே முடிந்திருக்கும். இப்போது அதை அதிகமாக ஓட்ட ஓட்ட இப்போது அதே திட்டம் நூறு கோடி ரூபாயிலே இருந்து நூற்றுபத்து கோடி ரூபாய் அல்லது நூற்று இருபது கோடி ரூபாய் தேவைப்படுகின்ற அளவுக்கு வளர்ந்துவிட்டது.

ஒரு திட்டத்தை இந்த வருடத்தில் ஐந்து லட்சத்திலே முடிக்கலாம் என்றால் அதை அப்படியே ஆறப்போட்டுவைத்தால் இரண்டு வருடத்திற்குப் பிறகு அதே திட்டத்திற்கு ஏழு லட்சம் ரூபாய் தேவைப்படும்.அதைப்போல எண்பது கோடி ரூபாய் அளவில் முடித்திருக்கக்கூடிய சேலம் திட்டம் இன்றையதினம் நூறு கோடி தேவை என்கிறார்கள், நூற்று இருபது கோடி தேவை என்கிறார்கள். அந்த அளவுக்கு விலைகளெல்லாம் ஏறிவிட்டன. யாராலே விலை ஏறிற்று? இந்தியப் பேரரசாலே ஏறிற்று. ஏன் பேரரசாலே ஏறிற்று? கண்மண் தெரியாமல் நோட்டுகளை அச்சடித்ததாலே ஏறிற்று. கண்மண் தெரியாமல் நோட்டுகளை ஏன் அச்சடித்தார்கள்? செலவழிப்பதற்கு அச்சடித்தார்கள். செலவழித்ததாலே என்ன ஏற்பட்டது? பொருளின் விலை ஏறிற்று. ஆக இவர்களே பொருளின் விலையை ஏற்றிவிட்டு இவர்களே சேலம் திட்டத்திற்கான திட்ட செலவை அதிகரித்துவிட்டு இன்றையதினம் விலை ஏறிவிட்டது ஆகையினாலே இதற்குப் பணம் இல்லை என்று கையை விரிப்பது உண்மையிலேயே நியாயமல்ல. அப்படியே பணம் இல்லை என்று வைத்துக்கொள்ளுங்கள்.  சேலம் உருக்காலை இந்த வருடம் ஆரம்பித்தால் நூறுகோடி ரூபாயுமா இந்த வருடம் செலவழிக்கப்போகிறார்கள்? அது முடிகிற காரியமல்ல. அந்தத் திட்டத்திற்கான மொத்த செலவு நூறுகோடி ரூபாயாக இருக்கலாம். ஆனால் துவக்க வருடத்தில் ஒரு பத்து கோடி செலவழிக்கவேண்டி வரலாம். அதற்கு அடுத்த வருடத்தில் பதினைந்து கோடி செலவழிக்கவேண்டி வரலாம். ஆகையினால் அது நூறுகோடி ரூபாயென்றால் இந்த ஒரு வருடத்திலேயே நூறுகோடி ரூபாய் தேவை என்று விபரம் தெரியாதவர்கள் பேசுவார்கள். விபரம் தெரிந்தவர்கள் அதனுடைய உண்மையை அறிந்துகொள்வார்கள். ஆகையால் பணமில்லை என்று மத்திய சர்க்கார் சொல்கிறபொழுது ஏதோ அவர்களை பிடித்துவைத்து கொண்டுவா நூறுகோடி என்று நான் வலியுறுத்துவதைப்போல சிலபேர் எண்ணிக்கொள்ளக்கூடும். அதற்காகத்தான் அந்த விபரத்தை சொல்கிறேன். அதனுடைய செலவு நூறுகோடி, நூற்று இருபது கோடி என்றாலும் அது அவ்வளவையும் இந்த வருடத்திலேயே செலவழிக்கவேண்டும் என்று யாரும் வற்புறுத்தவில்லை. அப்படி செலவழிக்கவும் முடியாது.அப்படி எந்தத் திட்டத்திலேயும் திட்டச் செலவு முழுவதும் ஒரே வருடத்திலே செலவாகாது. அவர்கள் ஒப்புக்கொள்வார்களானால் பணநெருக்கடி இருப்பதுதான் உண்மையான காரணமானால் இந்த வருடத்தில் சேலம் திட்டத்திற்காக ஒரு ஐம்பதுகோடி ரூபாய்தான் செலவழிக்க முடியும். அடுத்த வருடத்தில் வேண்டுமானால் இருபது கோடி ஒதுக்கிக்கொள்ளலாம் என்று சொல்லியிருப்பார்களானால் சேலத்தை ஆரம்பிக்காமல் அதை காலம் கடத்துவதற்கு பண நெருக்கடிதான் காரணம் என்று ஒப்புக்காவது உணர்ந்துகொள்ளலாம். ஆனால் அவர்கள் அதை சொல்லவில்லை. அதை சொல்லாதது மட்டுமல்ல விசாகப்பட்டினத்திலே கேட்கிறார்களே, அங்கு வேண்டாமா? ஓசூரிலே கேட்கிறார்களே அங்கு வேண்டாமா? ஐயா எனக்குப் பசிக்கிறது, ஒருவேளை சோறு போடு என்று ஒருவன் வீட்டிலே வந்தபொழுது, ஊரிலே பட்டிணி கிடப்பவன் ஒன்பதாயிரம் பேர் இருக்கிறான். போ போ என்று சொன்னால் அவனை நல்லவன் என்றா உலகம் சொல்லும்? அதைப்போல் சேலத்து இரும்பு உருக்காகவேண்டும் என்று நான் கேட்கிற நேரத்தில் விசாகப்பட்டினத்தைப் பார். ஓசூரைப் பார் என்றால் ஓசூருக்கு வேண்டாம், விசாகப்பட்டினத்திற்கு வேண்டாம் என்று நான் சொல்லவேண்டும். சொன்னவுடனே ஆந்திரர்கள் அதைப் பார்த்து பார்த்தீர்களா பார்த்தீர்களா அண்ணாதுரை சேலம்தான் கேட்கிறான். விசாகப்பட்டினம் வேண்டாம் என்கிறான் என்று அங்கே கலகம் மூட்டலாம். ஓசூருக்குச் சென்று உன் ஊருக்கு இரும்பாலை கூடாதாம் சேலத்திற்குத்தான் வேண்டுமாம் என்று மைசூர்காரரிடத்திலே மாச்சர்யத்தை உண்டாக்குவது என்ற இந்த சின்னப்புத்தி காரணமாக பெரிய இடத்திலே உள்ளவர்கள் விசாகப்பட்டினத்தைப் பார் ஓசூரைப் பார் என்றார்கள். நாங்கள் அப்போதும் சொன்னோம். சேலத்திலே ஆரம்பிப்பதைப்போல் விசாகப்பட்டினத்திலும் ஆரம்பியுங்கள். வாழ்த்துகிறோம். ஓசூரிலும் ஆரம்பியுங்கள் வரவேற்கிறோம். இந்த மூன்று இடத்திலேயும் பிரம்மாண்டமான அளவிலே ஆரம்பிக்க முடியாவிட்டாலும் கட்டுக்கு அடங்கக்கூடிய அளவிலே மூன்று இடத்திலும் ஆரம்பியுங்கள்.இந்த மூன்று இடத்தின் செலவையும் எடுப்பதற்காக பொக்காராவிலே ஆரம்பிப்பதற்காக இருக்கிற உருக்காலையை தற்காலிகமாக நிறுத்திவைத்து அதே பணத்தைக்கொண்டுபோய் முடக்கிப்போடாமல் அதை மூன்றாகப் பிரித்து மூன்று மாநிலத்திற்கும் தமிழகத்திற்கும், ஆந்திரத்திற்கும், கர்நாடகத்திற்கும் மூன்று மாநிலத்திற்கும்  நீங்கள் செய்து காட்டுங்கள் என்று கேட்டுப்பார்த்தோம்.

சேலத்திலே இரும்பாலை வராததற்குக் காரணம் விசாகப்பட்டினத்திலே கேள்வி பிறந்தது; ஓசூரிலே வற்புறுத்துகிறார்கள் என்பதுதான் உண்மையான காரணமானால் நாங்கள் சொன்ன இந்த யோசனையை அவர்கள் ஏற்றுக்கொண்டு மூன்று இடத்திலேயும் இதை அவர்கள் நிறுவியிருக்கவேண்டும். நாங்கள் சொன்னால் கேட்கமாட்டார்கள் எங்களைவிட பெரியவர்கள் சொல்லவேண்டும் என்று யாராகிலும் எண்ணுவார்களானால் இதே யோசனையை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் காமராஜரும் சொன்னார். என்னுடைய பேச்சுக்குக் கிடைத்த மதிப்புதான் அவருடைய பேச்சுக்கும் கிடைத்தது. எனக்குக் கிடைக்காதது அவருக்கு என்ன கிடைத்ததென்றால் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவி. அதுதான் கிடைத்ததே தவிர மற்ற மதிப்பைப் பொறுத்தவரையில் என்னுடைய பேச்சுக்கு இந்தியப் பேரரசு என்ன மதிப்பு கொடுத்ததோ அதே மதிப்பைத்தான் அவருடைய பேச்சுக்குக் கொடுத்திருக்கிறது. ஆகையினாலே இப்போது அவர்கள் பணம் இல்லை அந்நிய செலாவனி நெருக்கடி என்றக் காரணங்களைக் காட்டினால் விபரம் தெரிந்த தமிழ்நாட்டு மக்கள் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். ஒப்புக்கொள்ள மறுப்பது மட்டுமல்ல தமிழ்நாட்டிலே ஒரு பகுதியினர்அவர்கள் ஆரம்பிக்காவிட்டால் என்ன? நீங்களே ஆரம்பியுங்கள் என்று சொல்கிறார்கள்.

அப்படிப்பட்ட நிலைக்கு துரத்தப்பட்ட பிறகு வெங்கட்ராமன் அவர்கள் நான் முன்னாலே சொன்னபடி அவர் அமைச்சராக இருந்தபொழுதே டெல்லிக்கு மனு போட்டார். என்னைக் கேட்கிறார்களே அமைச்சராக இருந்து கொண்டு எழுச்சி நாள் கொண்டாடலாமா என்று. இதுவே கேவலம் என்று அவர்கள் கருதுவார்களானால் தொழிலமைச்சராக இருந்து கொண்டு சோனா.முனா.கந்தப்ப செட்டியாரும் வெங்கடேசத் தம்பிரானும் டெல்லிக்கு மனு போடுவார்களே எங்களுக்கு சிமிட்டி தொழிற்சாலை வைக்க அனுமதி கொடுங்கள். சர்க்கரை தொழிற்சாலை வைக்க அனுமதி கொடுங்கள் என்று தனிப்பட்ட முதலாளிகள் மனு போடுவதைபோல தொழிலமைச்சராக வெங்கட்ராமன் இருந்த நேரத்தில் டெல்லிக்கு மனு போட்டார். போடலாமா? ஒரு அமைச்சரா அப்படி போடுவது! ஒரு நாட்டை ஆளுகிற அமைச்சர் ஒரு தொழிற்சாலை கட்டவேண்டிய முதலாளியைப்போல 50 ரூபாய் அதற்குரிய ரெஜிஸ்டர் கட்டணம் கட்டி எல்லோரும் அனுப்புவதைப்போல அவர் மனு அனுப்பினார். என்ன மனு அது? சேலத்திலே உருக்காலை வைக்க எங்களுக்க அனுமதி கொடுங்கள். லைசன்ஸ் கொடுங்கள் என்று. தனிப்பட்ட முதலாளி மனு போட்டால் அடுத்த வாரமே ஏரோப்ளேன் ஏறி டெல்லிக்குச் சென்று பார்க்கவேண்டியவர்களைப் பார்த்து சிரிக்கவேண்டிய முறையிலே சிரித்து குலவவேண்டிய முறையிலே குலவி திரும்பி வருகிறபோது லைசன்சோடு வருவதாக ஊரிலே பேசிக்கொள்கிறார்கள்.ஆனால் நாட்டினுடைய அமைச்சராகிய வெங்கட்ராமன் அவர்கள் 1964 கடைசியில் மனு போட்டார். 65லே போட்டார். அவைக்கு நாளது வரையில் பதில்கூட வரவில்லை.நான் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு அவருடைய கடிதத்தையே குறிப்பிட்டு இப்போது நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன் அந்த மனு என்ன ஆயிற்று என்ன ஆயிற்று என்று. பதில் வரவில்லை. அந்த மனுவுக்கு பதில் வராதபோதாகிலும் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் இதைப்போல எழுச்சி நாள் நடத்தி, நாங்கள் மனு செய்தோம்; இந்தியப் பேரரசு அக்கறையற்றிருக்கிறது என்று தெரிவித்திருப்பார்களேயானால் இது மக்கள் பிரச்சினை என்பதை உணர்ந்து இந்தியப் பேரரசு அந்த மனுவுக்குத் தக்க சமாதானத்தை உரிய நேரத்திலே சொல்லியிருக்கும். இவர்கள் விபரம் தெரியக்கூடாது என்று மூடிவைத்துவிட்டார்கள். கொச்சையாகத் தாய்மார்கள் பேசிக்கொள்வார்கள். எனக்கு அவர் அடித்ததிலேகூட அப்பொழுது அழவரவில்லை. அண்டை வீட்டுக்காரி பார்த்துவிட்டால், அதிலேதான் பொங்கிப் பொங்கி அழுதேன் என்பார்கள். அதைப்போல இவர்களுக்கு டெல்லி சர்க்கார் குட்டுகிறபோதெல்லாம் எரிச்சல் வந்தது. ஆனால் எரிகிறதே என்று சொன்னால் நான் கேட்பேனல்லவா, எவ்வளவப்பா எரிகிறது எத்தனைபேர் குட்டினார்கள் என்று. அதற்காக அண்டைவீட்டுக்காரிக்குத் தெரியாமல் கதவைத் தாழ்போட்டுக்கொண்டு விம்மி விம்மி அழுவதைப்போல அவர்களே கூடிக்கூடிப் பேசினார்கள். இன்னும் பதில் வரவில்லையே இன்னும் பதில் வரவில்லையே என்று. அவர்களுடைய தலைவர் இருக்கிறாரே காமராஜர் அவரைப்பற்றித்தான் நாடு முழுவதற்கும் தெரியுமே. அவர் என்ன பதில் சொல்லியிருப்பார், யூகித்துப் பார்த்தால் தெரியும். பதில் வரலியா? வரும் வரும். எப்போது ஆரம்பிக்கலாம்? பார்க்கலாம் ஆகட்டும் பார்க்கலாம். இப்படி எல்லோருக்கும் சொல்லும் பதிலை வெங்கட்ராமனுக்கும் சொன்னாரே தவிர, வெங்கட்ராமனுக்கு இதிலே அக்கறை இல்லை என்று நான் சொல்லமாட்டேன். அவருக்கு நிரம்ப அக்கறை இருந்தது. ஆனால் மக்களை தங்கள் பக்கத்திலே வைத்துக்கொள்ளாததாலே இந்திய பேரரசுக்கு இதைப் பற்றிய முழு விபரத்தை அவர்கள் தரத் தவறிவிட்டார்கள்.

இந்த எழுச்சிநாளின் மூலம் நாம்; இந்தியப் பேரரசுக்கு இதைத்தான் அறிவிக்கிறோம். இப்போது அரசாளுகின்றவர்கள் எந்த விபரத்தை மக்கள் முன்னாலே வைத்தார்கள்? இதிலே மந்திரி ஆகிவிட்டதாலேயே மக்கள் முன்னாலே பிரச்சினை வைக்கக்கூடாது என்று எந்த ஜனநாயகமும் எனக்குக் கற்றுக்கொடுக்கவில்லை. நான் படித்த ஜனநாயகம் மக்கள் முன்னாலே வைத்துவிடும்படியாகத்தான் சொல்லியிருக்கிறது. அந்த முறையிலே இந்தப் பிரச்சினை மட்டுமல்ல வேறு எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் மக்களிடத்திலே அறிவிக்கவேண்டிய பிரச்சினையை அறிவிப்பதற்கு நான் கடமைப் பட்டிருக்கிறேன். அந்த முறையில் சேலம் இரும்பாலை பற்றிய வரலாற்றையும் இதற்காக தமிழ்நாட்டு மக்கள் எத்தனை காலமாக காத்துக்கொண்டிருந்தார்கள் என்ற விபரத்தையும் இதை தருவதாக எத்தனைத் தடவை காங்கிரஸ் அமைச்சர்கள் வாக்களித்தார்கள் என்ற விபரத்தையும் அவர்கள் வாக்களித்தபடி நிறைவேற்றாமல் போய்விட்டார்கள் என்றத் தகவலையும் இப்போது நாலாவது ஐந்தாண்டு திட்டம் உருவாகிற நேரத்திலாகிலும் இதற்குப் பேரரசு திட்டவட்டமாக இதை எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற அவசியத்தையும் உங்களிடத்திலே எடுத்துச்சொன்னேன். நீங்கள் பல லட்சக்கணக்கில் தமிழ்நாட்டிலே இன்றையதினம் கூடி இதற்கு ஒப்ப மறுக்கின்றீர்கள். நீங்கள் அளிக்கின்ற இந்த ஒப்பந்தத்தையும் சேர்த்து இந்தியப் பேரரசிற்கு அழைப்புக் கொடுத்து இப்பொழுது என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்கவேண்டும் என்பதுதான் எழுச்சி நாளினுடைய முக்கியமான நோக்கமாகும்.

இப்பொழுது இருக்கிற நிலைமை அவர்கள் எடுத்து நடத்த முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டால் அதை எடுத்து நடத்துவதற்கு தமிழக சர்க்கார் தயாராக இருக்கிறது என்பதை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ஆனால் முதலில் எங்களாலே எடுத்து நடத்த முடியாது என்று தெரிவிக்கவேண்டுமே தவிர பண நெருக்கடி காரணமாக, அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக என்று வளையக் கூடாது. வெட்டு ஒன்று துண்டு இரண்டு உண்மையைச் சொல். நீ கொடுத்த வாக்குறுதியின்படி நாலாவது ஐந்தாண்டு திட்டத்திலாகிலும் சேலம் உண்டா இல்லையா? மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்திலேயே அது இணைக்கப்பட்டது நடக்கவில்லை. பொறுத்துக்கொள்ளலாம். இது நாலாவது ஐந்தாண்டு திட்டம். இந்த நாலாவது ஐந்தாண்டு திட்டத்திலாகிலும் சேலம் உருக்காலை உண்டா? இல்லையா? திட்டவட்டமான பதில் தேவை. ஆனால் யார் எந்தக் கேள்வியை பாராளுமன்றத்திலே எழுப்பினாலும் நேரடியான பதில் நமக்குக் கிடைப்பதில்லை. சேலம் உருக்காலை எப்போது கிடைக்கும்? நிலைமை சரியானதும். நிலைமை எப்போது சரியாகும்? நிலைமையை சரிப்படுத்திக்கொண்டு வருகிறோம். இப்படிப்பட்ட பதில் இருக்கிறதே இது பாராளுமன்ற பேச்சில் அவர்கள் வல்லவர்களாகிக்கொண்டு வருகிறார்கள் என்பதை வேண்டுமானால் விளக்கப் பயன்படுமே தவிர பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நிச்சயமாக பயன்படாது.

தமிழ்நாட்டு மக்கள் இன்றையதினம் ஒரு திட்டவட்டமான பதிலை மத்திய சர்க்காரிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். நீங்கள் சேலத்து உருக்காலை திட்டம் நியாயமானது தேவையானது லாபகரமானது நிபுணர்கள் ஒத்துக்கொண்டது நீங்களே அங்கீகரித்தது நீங்களே வாக்குக்கொடுத்தது என்பதை உணர்ந்து இதை நாலாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் துவக்குவதற்கு தயாராக வருகிறீர்களா? இல்லையா? இல்லை என்று நீங்கள் சொல்வீர்களானால் அதற்குப் பிறகு மறுபடியும் பொதுமக்களிடத்திலே நான் வந்து நமக்கு நியாயமாக செய்யவேண்டியதை மத்திய சர்க்கார் செய்யத் தவறியிருக்கிறது; இது மாற்றான் தாய் மனப்பான்மையின் விளைவு என்பதை எடுத்துச் சொல்லி அதற்குப் பிறகு மறுபடியும் உங்களை நான் ஆணையிடும்படி கேட்பேன். நாமே நடத்தலாமா? இவ்வளவு செலவாகும்; இன்னின்ன வழியிலே பணம் திரட்டலாம் என்று உங்களிடத்திலே ஆணை கேட்டு உங்களுடைய ஆணை கிடைக்குமானால் அதை ஆரம்பிப்பதென்பது இயலாத காரியம் அல்ல.
ஏனென்றால் ஜப்பான் நாட்டு நிபுணர்கள் மிகத்தயாராக இருககிறார்கள். சேலம் இரும்பாலைக்கு தங்களாலான எல்லா விதமான ஒத்துழைப்பையும் அவர்கள் தருவதற்குத் தயாராக இருக்கிறார்கள். சேலம் இரும்பாலை திட்டத்திற்கு அந்நியச் செலாவனி மட்டும முப்பது கோடி ரூபாய்க்கு கிட்டத்தட்டத் தேவை. இந்த முப்பது கோடி ரூபாய் அந்நியச் செலாவணியை அவர்கள் தருவதற்கும் அதற்குத் தேவையான கருவிகளை நம்மிடத்திலே கொடுப்பதற்கும் ஜப்பானிய நாட்டு தொழிலமைப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். நான் இந்த இரண்டு மூன்று மாதங்களிலேயே அவர்களை நாலைந்து தடவை பார்த்துப் பேசியாகிவிட்டது. அவர்கள் முப்பது கோடி ரூபாய்க்கு மேல் அந்நியச் செலாவணி பகுதிக்கு பொறுப்பு ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இருக்கிறார்கள். மீதம் நமக்குத் தேவைப்படுவது எழுபது கோடி ரூபாய். இந்த எழுபது கோடி ரூபாயை இங்கே உள்ள தொழில் நிறுவனங்கள், இங்கே உள்ள பாங்குகள் இவைகளிலேயிருந்து கடனாகப் பெற்றுக்கொள்ள தமிழக அரசினாலே முடியும். ஆனால் இதை கடனாகப் பெற்றுக்கொள்ளவேண்டுமானால் அதற்கும் மத்திய சர்க்காருடைய ஒப்புதல் வேண்டும். சரி என்னாலே ஆரம்பிக்க முடியவில்லை; நீ ஆரம்பித்துக்கொள் அதற்குத் தேவையான அறுபது கோடியோ எழுபது கோடியோ உனக்கு வல்லமை இருந்தால் இதை நீ கடனாகப் பெற்றுக்கொள் என்று இவர்கள் அறிவிப்பார்களானால் சேலம் இரும்பாலையை இந்த ஓராண்டிலே துவக்குவதற்கு தமிழக அரசாலே முடியும். ஆனால் தமிழக அரசாலே முடியும் என்பதை நாளையதினம் நம்முடைய பத்திரிகை நிருபர்கள் தனித்தலைப்பாக கொடுக்கவேண்டாம் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் அந்த ஒரு தலைப்பையே வைத்துக்கொண்டு நீயே எடுத்துக்கொள்வதாக சிவகங்கையிலே சொன்னதாலே நாங்கள் வரவில்லை; இல்லையென்றால் நாங்கள் வந்திருப்போம் என்று பின்னாலே அவர்கள் சொல்லக்கூடும். ஆகையால் பத்திரிகைக் காரர்களை என்னோடு ஒத்துழைக்கும்படி நான் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் நாளையதினம் முக்கியமானதாகத் தெரிவிக்கவேண்டியது இந்த நாலாவது ஐந்தாண்டு திட்டத்தில் சேலம் இரும்பாலை துவக்கப்படவேண்டும். எழுச்சி நாளில் திட்டவட்டமான வற்புறுத்தல் என்ற தலைப்பு கொடுத்து உள்ளே வேண்டுமானால் நான் சொன்னதையெல்லாம் போடுங்கள். நீங்கள் வெளியிலேயே தமிழ்நாட்டு அரசே நடத்தும் என்று போட்டு ஒரு நல்ல காரியத்தை உங்களையும் அறியாமல் கெடுத்துவிடாதீர்கள். அதை நான் உங்களை விரும்பி வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.