அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


கிராமங்களின் அவலநிலை

3.10.1961 அன்று சைதை வட்டத்தைச் சேர்ந்த முகப்பேர் கிராமத்தில் தி.மு.க. சார்பில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அண்ணா அவர்கள் கலந்துகொண்டார்கள்.

அண்ணா அவர்களை மேளவாத்தியங்கள் முழங்க கம்பு விளையாட்டுக்களுடன் ஊர்வலமாக அழைத்து வந்தார்கள்.

கூட்டத்திற்குத் தோழர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தோழர்கள் சந்திரன், உலகநாதன் சைதை வட்டச் செயலாளர் சி. இராமலிங்கம், செங்கற்பட்டு மாவட்டச் செயலாளர் சி.வி.எம்.அண்ணாமலை, சி.வி.இராசகோபால் ஆகியோர் கழக இலட்சியங்களை விளக்கிப் பேசியதுடன் இன்றைய ஆட்சியில் மக்கள் படும் அவலநிலையை விளக்கினர்.

அண்ணா அவர்கள் பேசுவதற்கு முன் கிளைக்கழகச் சார்பில் தேர்தல் நிதியாக ரூ.152.51ம் மற்றும் தனிப்பட்டவர்கள் மூலமும் உண்டியல் வசூல் மூலமும் சேர்ந்த தொகையும் தேர்தல் நிதியாக அளிக்கப்பட்டது.

அண்ணா அவர்களுக்குச் சுற்றுப்புறக் கிராம மக்களின் சார்பில் மலர் மாலைகளும், கைத்தறித் துண்டுகளும் அணிவிக்கப்பட்டன.

பின்னர் அணணா அவர்கள் இவ்வூருக்கு வரும் பாதை எப்படிச் சரியில்லாமல் மேடு பள்ளமாக உள்ளதோ அதேபோல்தான் காங்கிரசு ஆட்சி உள்ளது என்றும், வரும் தேர்தலில் முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களிக்குமாறும் கேட்டுக் கொண்டார். செயலாளர் பனையப்பன் நன்றி கூறினார்.

நெசப்பாக்கம்

அடுத்து சைதை வட்டத்தில் உள்ள நெசப்பாக்கம் கிராமத்தில் நடந்த தி.மு.கழகப் பொதுக்கூட்டத்தில் அண்ணா அவர்கள் கலந்து கொண்டார்.

கூட்டத்திற்குத் தோழர் கனகசபை தலைமை வகித்தார். தோழர்கள் பெ.ஜெகதீசன், வி.து.லோகநாதன், பாலன், சா.கணேசன், எம்.சி.அலமேலு அப்பாத்துரை எம்.சி., கே.பி.தூயமணி, சைதை வட்டச் செயலாளர் சீ. இராமலிங்கம், மாவட்டச் செயலாளர் சி.வி.எம். அண்ணாமலை ஆகியோர் பேசியபின், அண்ணா அவர்கள் நீண்ட கையொலிக்கிடையே எழுந்து பேசத் தொடங்கினார்.

அண்ணா அவர்களிடம் 80 வயது மூதாட்டியார் பாலம்மாள் அவர்கள் தான் அன்பளிப்பாகத் தி.மு.கழகத்திற்கு அளித்த நிலத்தின் பத்திரத்தைக் கொடுத்தார்கள்.

அண்ணா அவர்கள் பத்திரத்தைப் பெற்றுக்கொண்டு மூதாட்டியாருக்கு வணக்கம் கூறித் தி.மு.கழகத்திற்கு அம்மூதாட்டியார் அளித்துள்ள நிலக்கொடை அவர்களால் நாட்டுக்குச் செய்ய முடிந்த தொண்டினைச் செய்துவிட்டதாகப் பொருள்படும் என்றும், அதோடு மட்டுமில்லாமல் இன்றைக்கு உள்ள ஆட்சியும் மாறவேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் நிலம் அளித்துள்ளதாகவும், அவர்களின் கருத்தை மற்றவர்கள் பின்பறற் வேண்டுமென்றும் குறிப்பிட்டார்கள்.

லாரியில்தான் போகலாம்

“நெசப்பாக்கம் கிராமம் சென்னைக்கு அருகிலுள்ள சிற்றூர். அத்துடன், ‘இந்திர லோகத்தையும் சந்திரலோகத்தையும்கூட சிருஷ்டிக்கிறோம்‘ என்று கூறக்கூடிய ஸ்டூடியோக்கள் நிறைந்த பகுதியுமாகும். இவ்வளவு நெருக்கத்தில் இருக்கின்ற ஊராகிய இங்கு நானும் நண்பர்களும் காரில் வரும்போது, பாதை சரியாக இல்லாமல் நான்கைந்து இடங்களில் வண்டியை நிறுத்தித் தொல்லைப்பட்டு வரவேண்டி நேரிட்டது.

நான் இங்கு வருவதற்குமுன் முகப்பேர் என்ற கிராமத்திற்குச் சென்றிருந்தேன். அவ்வூர், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நெற்குன்றத்திற்கு அருகில் இருக்கிறது. அங்குச் செல்வதற்குக் காரில் திரும்பினோம். அவர்கள், ‘இந்த வழியில் கார் போகாது. லாரியில்தான் போகவேண்டும்‘ என்று எங்களை லாரியில் ஏற்றி விட்டார்கள். அந்தப் பாதையில் ஒரு பக்கம் கல்லறுக்க மண் எடுத்தால் படு பள்ளம். மற்றொரு பக்கம் முள்செடி வேலி. பாதையோ மேடுபள்ளம் – லாரியை நன்றாக ஓட்டத் தெரிந்த டிரைவர்தான் ஓட்ட முடியும் பொறுப்புடன் வண்டியை ஒட்டி எங்களை அந்த ஊருக்கு அழைத்துச் சென்றார்கள்.

அண்ணாமலையின் தொகுதி

ஏன் அதைச் சொல்கிறேன் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். என் நண்பர் அண்ணாமலை அவர்களின் தொகுதிக்கு ஒருநாள் சென்றிருந்தோம். அங்கே ஒரு கிராமத்தைச் சுற்றிலும் தண்ணீர் நிரம்பியிருந்தது. ‘பாதை எங்கே?‘ என்று கேட்டேன். ‘தண்ணீருக்குக் கீழே இருக்கிறது‘ என்றார்கள். ‘எப்படிப் போவது என்றேன்?‘ ‘நடந்து‘தான் போகவேண்டும். ஆனால் ஆழம் இருக்காது‘ என்றார்கள். நானோ அண்ணாமலையைக் காட்டிலும் குள்ளம். பயந்து தண்ணீரில் நடந்து சென்று ஊரை அடைந்தோம். அவ்வூரிலுள்ளவர்கள், வருகின்ற தேர்தலில் கழகத்திற்கு ஓட்டளிப்பதாகவும், சென்ற தேர்தலில் ஓர் ஓட்டுகூட நமக்குப் போடவில்லை என்றும் சொன்னார்கள்.

தோழர் அண்ணாமலை அவர்களின் தொகுதி, அமைச்சர் பக்தவச்சலம் நின்று வெற்றி பெற்ற தொகுதியாகும். அவர் தொகுதியிலேயே கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதென்றால், மற்றத் தொகுதிகளைப் பற்றிப் குறிப்பிடவே வேண்டாம்.

காங்கிரசுக்காரர்கள் எந்தத் தொகுதியில் நின்று வெற்றி பெற்றிருந்தாலும் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டே உள்ளன. நான் எட்டு கூட்டங்களுக்கு ஏற்றுக் கொண்டால், ஆறு கூட்டங்களுக்காகக் கிராமத்திற்குத்தான் செல்கிறேன். எனவே நாடு முழுமையிலும் இதே நிலையைத்தான் காண்கிறேன். இன்றைய ஆட்சியாளர்களின் கவனமெல்லாம் நகரங்களை அழகுபடுத்தி வெளிநாட்டுக்காரர்கள் இங்கு வரும்போது அழகைக் காட்டி கடன்வாங்கப் பயன்படுத்துவதாகத்தான் இருக்கிறதோடல்லாமல், நாட்டிலுள்ள ஏழை மக்களுக்கு இதுவரை யாதொரு நன்மையும் ஏற்படவில்லை.

படித்தவர்களும் பணக்காரர்களும்

காங்கிரசை, படித்தவர்களும் பணக்காரர்களும் ஆதரிக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் என்ன? படித்தவர்கள் வெள்ளைக்காரன் உத்தியோகம் பெற்று வாழ்ந்தார்கள். பணக்காரர்களும் வெள்ளையன் காலத்திலும் லைசென்ஸ் பெற்ற ‘கோட்டா‘, ‘பெர்மிட்‘ பெற்று வாழ்ந்தார்கள். இப்போது காங்கிரசு ஆட்சியிலும் அந்த வசதிகளைப் பெற்ற வாழ்கிறார்கள். ஆகவே அவர்கள் காங்கிரசுத் தேர்தல் நிதிக்கு இலட்சக்கணக்கில் பணம் கொடுப்பதில் வியப்பில்லை.

இவ்வூர்க் கிளைக் கழகத் தோழர்கள் நிதி கொடுக்கும் போது, குறைந்தபட்ச மனத்துடன், இவ்வளவு தொகை கொடுப்பதாகச் சொன்னோம். ஆனால், இவ்வளவுதான் கொடுக்க முடிந்தது என்றார்கள். இந்த ஏழை மக்கள் கொடுத்த நிதி, உழைப்பால் சேர்த்துக் கொடுத்ததாகும். தாங்கள் நினைத்த தொகையை எப்படிக் கொடுக்க இயலும்.

இன்றைக்கும் நம் கழகம் வளர்ச்சியடைந்து, கிராமங்களிலெல்லாம் பரவி வருவதைப் பார்த்து, காங்கிரசில் உள்ள ‘கனம்‘கள் வயிற்றெரிச்சல் அடைகின்றனர். நான் ஓர் உதாரணம் சொல்ல விரும்புகிறேன்.

உழைப்பால் வந்த அழகு

ஒரு பணக்காரச் சீமாட்டி, கண்ணாடி முன் நின்று ஒரு மணி நேரம் வரையிலும் முகத்திற்குப் பவுடர் பூசி, இன்றைக்கு எந்தச் சேலை கட்டினால் எடுப்பாக இருக்கும். அழகாக இருக்கும் என்றெண்ணி, ‘பீரோ‘வைத் திறந்து. ‘பீரோ‘ நிறைய அடுக்கி வைத்துள்ள சேலைகளை எல்லாம் எடுத்துப் புரட்டி. பிடித்த சேலையாக எடுத்துக் கண்ணாடி முன் நின்று அதனைச் சரிபார்த்து, அதன் பிறகு கட்டிக்கொண்டு, மெருகு குலையாத காரில் ஏறி, சாலையில் போகின்றாள். அப்போது எதிரில் புல்கட்டைத் தலையில் சுமந்த கொண்டு நாட்டுப்புறத்துப் பெண் ஒருத்தி வருகிறாள். அவளுக்கு நல்ல சேலை இல்லை. நகைகள் கிடையாது. அவளிடம் இருப்பதெல்லாம் முகத்தில் மஞ்சள் பூச்சும், நெற்றியில் ஒரு பொட்டும் வைத்திருப்பதுதான், அவளிடம் நல்ல அழகு ஜொலிக்கிறது. அப்பெண்மணியைப் பார்த்த சீமாட்டி, ‘நாம் ஒரு மணிநேரத்திற்குமேல் கண்ணாடி முன் நின்று பாவுடர் பூசி, நல்ல சேலையைத் தேர்ந்தெடுத்து அழகுபடுத்திக் கொண்டோம். நம்மிடம் அவ்வளவு அழகு வரவில்லையே ஏன்? என்று வேதனைப்படுவாள். அத்துடன் மட்டுமின்றி, அந்தப் பெண்ணை மனதுக்குள்ளேயே ‘சனியன்‘ என்று சொல்லிக் கொண்டு செல்வாளே தவிர, வேறென்ன செய்ய முடியும்? நாட்டுப்புறப் பெண்ணுக்கு அவ்வளவு அழகு எப்படி வந்ததென்றால், உழைப்பினால் ஏற்பட்ட உடல் கட்டினால். உள்ளத் தூய்மையினாலும், மனத் தெளிவினாலும் தான் முக அழகு வந்ததே தவிர வேறெப்படி இருக்க முடியும்.

சீமாட்டியின் நிலையில் இருந்துகொண்டுதான் இன்றைய ஆட்சியாளர்கள் நம்மைப் பார்க்கிறார்கள். நாம் வளருகின்றோம் என்றால், ஏன் வளரமாட்டோம்?

திறமையுடன் செயல்படுவீர்

இன்றைய ஆட்சியில் ஏழைகளுக்கு எந்த நன்மையும் ஏற்பட முடியாது. ஆகவே, வரும் தேர்தலில் மூதாட்டியார் எப்படி நாட்டிற்காகத் தன் தொண்டை நிலமளித்து நிறைவு செய்து கொண்டார்களோ அதேபோல நீங்களும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஓட்டளித்து ஆதரித்தால்தான் இன்றைய ஆட்சியினரின் போக்கினை மாற்ற முடியும். இதற்காகக் கிளைக் கழகத் தோழர்கள் திறமையுடன் செயலாற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

மாவட்டச் செயலாளர் சி.வி.எம்.அண்ணாமலை அவர்கள் நிலமளித்த மூதாட்டியார் பாலம்மாளுக்குச் செங்கை மாவட்டத்தின் சார்பில் கைத்தறித் துண்டு அணிவித்தார்கள்.

கூட்டத்திற்குத் தோழர்கள் டி.இராசரத்தினம், சி.வி.இராசகோபால், செந்நீர்க்குப்பம் சர்க்கரை, வட்டச் செயலாளர் சி.இராமலிங்கம், ஆலந்தூர் பாலன் முதலானோர் வந்திருந்தனர்.

(நம்நாடு - 25.10.61)