தகுதிமிக்க தலைவரவர்களே, டாக்டர்
சிதம்பரநாதன் அவர்களே, நண்பர்களே! உங்கள் அனைவருக்கும் நன்றி
கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விழாவினை ஏற்பாடு செய்திருக்கும் மணவழகர் மன்றத்தாரின்
இந்தப் பணி, பயன்பெறத்தக்க பல பணிகளிலே ஒன்றாகும். அவர்கள்
ஆண்டுதோறும் நடத்துகின்ற விழாவிற்கு, இவர்கள் ஆற்றுகின்ற
பணி உறுதுணையாக இருக்கும். இந்தப் பணியினைத் திறம்பட செம்மையாகத்
தோழர்கள் செய்திருக்கின்ற னர்! மக்கள் பெரிதும் இலக்கியத்தை
அறிந்து கொள்கின்ற வாய்ப்பை இந்த விழாவின்மூலம் அளித்திருக்கிறார்கள்
அதற்காக மணவழகர் மன்றத் தோழர்களை பெரிதும் பாராட்டுகிறேன்.
நம் தலைவர் அவர்கள்
நீதிமன்றத்திலே நீதிபதியாக இருப்பவர். இவரை சந்திப்பது இதுதான்
முதல்தடவையாகும். சட்டக் கல்லூரியில் இவரோடு அளவளாவிய நேரத்தில்
தமிழ் இலக்கியங்கியங்களைப் பற்றி மெத்த அறிந்து கொண்டிருக்கிறார்
என்பதனை தெரிந்து கொள்கின்ற வாய்ப்பினை பெற்றேன். பயங்கரமான
பெரிய கட்டிடமான நீதிமன்றத்தில் நுழைந்த பிறகு இந்தத் தமிழ்
ஆர்வத்தை குறைத்துக் கொள்வார்களோ என்று ஐயப்பட்டேன்.
இன்று, நீதிபதி அவர்கள், நீதிமன்றத்தில் எழுப்புகின்ற வினாவைப்போல,
சில வினாக்களை எழுப்பி நான் பதில் சொல்லவேண்டுமென்று கேட்டிருக்கிறார்.
நீதிபதியின் வினா எப்போதுமே ஆபத்தானது என்பதை வழக்கறிஞர்கள்
நன்கு உணர்ந்திருக்கிறார்கள்!
யூகம் அதிகமுள்ள வழக்கறிஞர்களால் அதை புரிந்து கொள்ள முடியும்!
நீதிமன்றங்களில் சில வழக்கறிஞர்கள் எதை எதைச் சொல்லக் கூடாது
என்று நினைக்கிறார்களோ, அதையெல்லாம் நீதிபதி தங்களின் வினாவினால்
சொல்ல வைக்கவும் செய்யலாம்! நம் தலைவர் அமர்ந்திருப்பது
நீதிமன்றமும் அல்ல, தமிழ்க் குற்றக் கூண்டிலே நிற்கவும்
இல்லை. நானும் தைரியமாகவே பதில் சொல்லலாம். யாரும் பயப்படத்
தேவையுமில்லை!
இந்த விழாவிலே கலந்து கொள்வதற்கு முன்னாலே எனக்கு திகைப்பு
இருந்தது! என்ன திகைப்பு என்று நீங்கள் கேட்கக் கூடும்!
நண்பர் கோகுலகிருஷ்ணன் சந்தித்து தமிழ் இலக்கியத்தை பற்றி
பேச வேண்டுமென்று சொன்ன நேரத்தில், எனக்கு திகைப்பு ஏற்பட்டது.
நான் தமிழ் இலக்கியம் அதிகம் படிக்காதவன் என்பது அனைவருக்கும்
தெரிந்த ஒன்றாகும்!
டாக்டர் சிதம்பரனாதன் செட்டியார் அவர்கள் இங்கே அமர்ந்திருக்கிறார்கள்.
நான் இங்கு தமிழ் இலக்கியத்தைப் பற்றி பேசுவதென்பது மாணவன்
படித்தவைகளை ஆசிரியர் முன்னே சொல்லுவதைப் போலாகும்!
நீதிபதி அவர்கள் இரண்டு பிரச்சினைகளை எழுப்பியுள்ளார்கள்.
வாழ்வு என்றால் என்ன, இலக்கியம் என்றால் என்ன என்று கேட்டிருக்கிறார்கள்.
வாழ்க்கை இல்லையென்றால் இலக்கியமில்லை. இலக்கியமில்லையென்றால்
வாழ்க்கை இல்லை! இலக்கியமும், வாழ்க்கையும் ஒன்றோடொன்று
இணைந்து இருக்க வேண்டும்.
இப்போது வாழ்க்கைக்கும் இலக்கியத்திற்கும் எந்த வகை தொடர்பு
இருக்கிறது. இலக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் எப்படிப்பட்ட
தொடர்பு இருக்க வேண்டும். இப்போது எப்படி இருக்கிறது என்பதை
எண்ணிப் பார்க்க வேண்டும். இலக்கியம் வளர்ச்சி பெற வேண்டுமென்று
பேசுகிறவர்கள் எப்படி வளர்ச்சியை உண்டாக்க வேண்டுமென்று
சிந்திப்பதில்லை!
நீங்களும் நானும் இலக்கியப் பேராசிரியர்கள் அல்ல. விழா முடிந்த
பிறகு, ஏற்படுகின்ற ஐயப்பாடுகளை எப்படி தீர்த்துக் கொள்வது?
அனைவரும் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்ளுவதிலேயும்,
எப்படி வாழுவது என்பதை அறிய அக்கறை கொண்டிருக்கிறோமே தவிர,
இலக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு என்ன என்று
அறிந்துகொள்வதிலே அக்கறை செலுத்துவதில்லை எண்ணிப் பார்ப்பதுமில்லை.
இலக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு என்பதை
அறிந்து கொள்ள வேண்டும்.
தலைவரவர்கள் புரட்சி என்றால் என்ன என்றும் கேட்டார்கள்.
எதிர்பாராத விதத்திலே வருவது புரட்சி எண்ணிப் பார்த்து வரும்
வரும் என்று காத்திருந்து பெறுவது மறுமலர்ச்சி.
புரட்சி என்னும் சொல் அரசியலில் கலந்துவிட்ட பிறகு நாட்டில்
உள்ளவர்கள், இழித்துரைத்தும், பழித்துரைத்தும் பலாத்காரத்தின்
அடிப்படை, புரட்சி என்னும் விளக்கம் தருகின்றனர். விஞ்ஞான
இலக்கியத்திலே கூட எதிர்பாராத விதமாக புரட்சி ஏற்பட்டிருக்கிறது.
சந்திர மண்டலத்தைப் பற்றி இதுவரை தெரிந்த உண்மையைக் காட்டிலும்
புதிய உண்மைகளை திடீரென்று அளித்தது விஞ்ஞான இலக்கியத்தில்
புரட்சி என்று கூறலாம்! உலகத்தைப் பற்றி கலிலீயோ கண்டுபிடித்து
கூறியதை மறுமலர்ச்சி என்று கொள்ளலாம்! அன்று அவர் விஞ்ஞானத்தில்
ஏற்படுத்திய மறுமலர்ச்சி இன்றைய விஞ்ஞானப் புரட்சிக்கு வித்தாக
அமைந்தது.
வளருகின்ற பயிருக்கு நல்ல வளர்ச்சி இருக்க வேண்டுமானால்
உரம் போடுகிறோம். அதைப்போல் அன்றைய மறுமலர்ச்சி, இன்றைய
புதிய விஞ்ஞானப்புரட்சிக்கு உரமாக அமைந்தது! இன்று மறுமலர்ச்சியும்,
புரட்சியும் ஒன்றுக்கொன்று தழுவிக் கொண்டிருக்கின்றன!
மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் இன்னும் அதிகமாக பெருகிட வேண்டும்
என்று மதுரையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கூறினேன்.
மறுமலர்ச்சி மனதிலே இருந்துவிட்டால் மட்டும் போதாது! எழுத்தில்,
எழுதி அதை நடைமுறைக்கு அமைக்காதவர் மறுமலர்ச்சி எழுத்தாளர்களாக
மாட்டார்கள்!
வேகமாகவும் எதிர்பாராத விதமாகவும் எடுத்துச் சொன்ன சில
எழுத்தாளர்களைப் புரட்சி எழுத்தாளர்கள் என்று கூறினார்கள்.
புரட்சி என்னும் சொல் அரசியலில் கலந்துவிட்ட பிறகு சீர்திருத்த
படங்களைப் புரட்சிப் படங்கள் என்றார்கள். மறுமலர்ச்சி கவிதைகளை
தந்த பாரதிதாசன் அவர்களை புரட்சிக் கவிஞர் என்று நாட்டுமக்கள்
பாராட்டினார்கள்.
நாம் காத்திருந்தால், இன்னும் ஐம்பதாண்டு காலம், அறுபதாண்டு
காலத்திற்குப் பிறகு இந்தக் கருத்துக்கள் நமக்கே தோன்றும்.
கவிஞர் வேகமாக சிந்தித்து, அதை வேகமாக மக்களுக்கு அளித்தார்.
மக்களும் அதை பலப்பட பாராட்டி, பயனுற்றனர்!
வேகம் தாங்காமல் சில அழிந்துவிடும். இப்போது வீதியிலே உருளை
வண்டி போகிறது என்றால், அதை இழுத்துச் செல்பவனின் கண்களுக்கு
தெரியாமலேயே சக்கரத்தில் அகப்பட்டு வேகம் வண்டியின் தாங்காமல்
சில அழிந்துவிடும். அவைகள் கொலை என்று கருதப்பட்டாலும்
அப்படிப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்துக்கு வருவதுமில்லை-தீர்ப்பு
சொல்லுவதுமில்லை! வண்டி இழுப்பவன் வேண்டுமென்றே அதைச் செய்வதில்லை.
அழிவை அடிப்படையாக வைத்து புரட்சி எழுவது நீடிக்காது!
மேலும் இலக்கியம் யாருக்காக இருக்கிறது. இலக்கியம் இப்போது
எப்படி இருக்கிறது. இலக்கிய வளர்ச்சிக்காக என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்.
இலக்கியத்தை எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்கள்?
மரத்தில் பழுத்து இருக்கும் பழுத்த பழத்தைப் பார்த்ததும்
தின்பதற்கு ஆசையிருக்கிறது. பழத்தை எப்படித் தின்பது? பகிர்ந்து
சாப்பிட போகிறார்களா? இல்லை, பாராமல் எடுத்து தின்னப் போகிறார்களா?
சித்தர்கள் போல் காத்திருந்து-தானாக கனிந்து விழுந்ததும்
சாப்பிடப்போகிறார்களா? இலக்கிய வளர்ச்சியை எப்படி பயன்படுத்தப்
போகிறார்கள் என்பதை அறிய வேண“டும்.
அடிப்படையில் இலக்கியம் யாரால் இயற்றப்பட்டது. அது யாருக்காக
இயற்றப்பட்டிருக்கிறது. அது என்னென்ன காரியங்களுக்குப் பயன்பட்டிருக்கிறது
என்பதுதான் அதில் முக்கியமானதாகும்.
அதை கவனிப்பதற்கு முன்னால், இலக்கிய வளர்ச்சிக்கு ஏற்ற கல்விமுறை
இப்போது இருக்கிறதா என்பது ஐயப்பாட்டுக் குரியதாகும். இப்போது
இருக்கிற கல்வி முறையால் இலக்கியம் வளர்ச்சி அடையுமா?
இப்போதெல்லாம் கல்லூரிகள் மூடப்பட்டு வருகின்றன என்ற செய்தியை
பத்திரிகை படிப்பவர்கள் அறிந்திருப்பார்கள் என்று கருதுகிறேன்.
அதற்கு காரணத்தை அவர்கள் கூறுகின்ற நேரத்தில் மாணவர்கள்
குறைவாக வருகிறார்கள் என்று கூறுகிறார்கள்.
மாணவர்கள் தொழில் பள்ளிக் கூடங்களுக்குச் சென்று விடுகிறார்களென்றும்
கூறுகிறார்கள். இந்த நிலைமை இப்படியே நீடிக்குமானால் இலக்கியத்தைக்
கல்லூரிகள் பரப்ப முடியாது. மணவழகர் மன்றத்தைப் போன்றவர்களால்தான்
இலக்கிய வளர்ச்சி பெற முடியும்.
நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது எந்த படிப்பு
படிப்பது என்று யோசித்து கொண்டிருந்தபோது நண்பர்களும்,
ஆசிரியர்களும் இலக்கிய படிப்பு படித்தால் வேலை கிடைக்காது,
பொருளாதாரப் படிப்பு படித்தால்தான் வேலை கிடைக்கும் என்று
வற்புறுத்தினார்கள்.
வரலாற்றுப் படிப்பு படித்தால் வேலை கிடைக்காது என்று மாணவர்கள்
பொருளாதாரப் படிப்பு வகுப்பிற்குச் சென்று விடுவார்கள்.
வேதாந்த படிப்பு வகுப்பாசிரியர் எப்படியாவது இரண்டு மூன்று
மாணவர்களை இழுத்துப் பிடித்து வகுப்பு நடத்துவார். பொருளாதாரப்
படிப்பு வகுப்பிற்கு நூறு மாணவர்கள் தேவை என்றால் மற்ற மாணவர்களை
ஒதுக்கித் தள்ளினார்கள்.
இன்று படித்தால் மட்டும் போதும் என்கிறார்களே தவிர, கல்லூரி
படிப்பு தேவை என்பது அல்ல! இன்றைய படிப்பு படிக்கின்றவர்கள்
வியாபாரக் கண்ணோடு படிக்கின்றனர். வீட்டிலே உள்ள பெரியவர்கள்,
ஏன் வியாபார நோக்கத்தோடு படிக்கிறாய் என்று கேட்டால் நீயும்
மாணவனாய் இருந்தபோது வியாபார நோக்கத்தோடு படித்தாய் என்று
கேட்கும் அளவிலே இருக்கிறார்கள்.
அன்று இலக்கியம் படித்தவர்கள், குடும்பத்திலே வசதியோடு
இருந்தவர்கள் தான் இலக்கிய படிப்பு படித்தார்கள்! படித்து
பட்டம் பெற்று, இன்னொரு கல்லூரியில் போய் விரிவுரையாளராக
பணியாற்றுவார்கள். பொருளாதாரப் படிப்பு முடித்து பட்டம்
பெற்றால் ஒரு 500 ரூபாய் சம்பளத்தில் வேலை காத்திருக்கும்
என்று நினைத்தார்கள்.
இப்போது கல்லூரி படிப்ப என்பது காலக்கேடு, நேரக்கெடு என்றும்
கருதுகிறார்கள்! பத்தாவது வரை படித்தால் போதும், அவரவர்கள்
விரும்பும் தொழிலில் ஈடுபட்டு விடுகின்றனர்.
மின்சாரத் தொழிலிலே விருப்பம் உள்ளவர்கள் மின்சார தொழிலுக்கும்,
பஞ்சாலைக்குச் செல்ல விரும்புபவர்கள் பஞ்சாலைக்கும், ஆள்பலம்
இருப்பவர்கள் மருத்துவத் துறைக்கும் சென்றுவிடுகிறார்கள்.
படிக்கிறபோதே மாணவர்கள் தொகை பிரிந்து விடுகிறது! மிச்சம்
உள்ள மாணவர்களில் எத்தனை மாணர்கள் இலக்கியம் படிக்கப்போகிறார்கள்?
1970 ம் ஆண்டில் எத்தனை மாணவர்கள் இலக்கிய வகுப்பு படிக்கப்
போகிறார்கள்?
இப்போதுள்ள கல்வி முறையைக் காணுகின்ற போது, கல்லூரிகளினால்
இலக்கியம் வளராது என்பது தெளிவாகிவிட்டது! முன்பு கல்லூரிகளில்
இருந்த நிலைமைகளை உங்களுக்கு எடுத்துச் சொன்னேன். அந்த
நிலைமைகள் மாற்றப்பட்டாலொழிய இலக்கியம் வளராது! மாற்றப்படவில்லை
யென்றால் கல்லூரிகளால் இலக்கிய வளர்ச்சி ஏற்படாது!
இப்பொழுதுள்ள துரைத்தனத்தார் வியாபாரத் துறைக்கு பெயரிடுவதுபோல்,
பள்ளிகளுக்கு பல விஷயங்களைச் சொல்லிக் கொடுக்கும் இடம்
என்று பெயர் வைத்திருக்கிறார்கள். முன்பெல்லாம் பள்ளிகளுக்கு,
கல்விக்கூடம், அறிவாலயம் என்றெல்லாம் அழகாக பெயர் வைத்திருந்தார்கள்.
அதை இப்போது இப்படி மாற்றியிருக்கிறார்கள். ஆகையால்தான்
எதிர்காலத்தில் இலக்கியம் வளருமா என்று ஐயப்பாடு இருப்பதாக
முன்பு சொன்னேன்! ஆகவே நீதிபதியின் முன் இவைகளைச் சொன்னேன்.
அவர் தீர்ப்புச் சொல்லுவார் என்றும் கருதுகிறேன்.
இலக்கியம் யாருக்காக அமைக்கப்பட்டது. அதனால் என்ன பலன்?
இலக்கியத்தால் எத்தகைய பலனை பெற வேண்டும்? அன்றிருந்த தமிழறிஞர்கள்
பொதுவாழ்க்கையிலே நாட்டம் கொள்ளாமல் தனி வாழ்க்கையிலே
அதிகமாக இருந்திருக் கிறார்கள். இன்று சமுதாயத்தில் தனி
வாழ்க்கையை விரும்பவில்லை, கூட்டு வாழ்க்கையையே விரும்புகிறார்கள்.
அன்று தனித்து வாழ்ந்து, அறிவுத்திறனால், காலத்தினால் அழிக்க
முடியாத பேரிலக்கியங்களை ஆக்கித்தந்தார்கள்.
டாக்டர் சிதம்பரனாத செட்டியார் அவர்கள் பேசுகையில் கூட்டு
வாழ்க்கையின் தன்மையினைப் பற்றி எடுத்துரைத்தார்கள்.
கணவனாலே கைவிடப்பட்ட காரிகையைப் பற்றி சிந்தனை செய்து எழுத்தாளனாலே
எழுதமுடியும். அந்தக் காலத்தில் சிலப்பதிகாரத்தில் கோவலன்,
கண்ணகியைப் பிரிந்த நேரத்தில், அப்பொழுதிருந்த புலவர்கள்
கண்ணகியின் பிரிவை குறித்து கோவலனிடத்தில் சொல்லவில்லை!
சொல்லத் தெரியாது என்பதல்ல, காரணம்! கூட்டு வாழ்க்கை அதிகமில்லாத
நேரம் அது! இப்போது சொல்லப் போவது சிலப்பதிகார கண்ணகி
அல்ல. ஒரு வள்ளலின் மனைவி கண்ணகி என்று பெயர்.
அந்த வள்ளல் தன் மனைவியை விட்டுப் பிரிந்து காதல் கிழத்தியின்
இல்லத்திலே இருந்தான். கண்களில் கண்ணீர் கலங்க, சோக சித்திரமாய்
இருந்த அவன் மனைவியின் நிலையைக் கண்டு இரண்டு புலவர்கள்,
அந்த வள்ளலிடத்திலே எடுத்துச் சொல்லச் சென்றார்கள்.
உன் மனைவி கண்ணீர் விட்டு கலங்குகின்றாள் என்பதை நேரடியாக
எடுத்துச் சொல்ல மனமில்லாது உன் இல்லத்தின், பக்கம் சென்றேன்.
ஒரு மயில் கண்ணீர் விட்டு, கலங்கிய வண்ணம் நின்றிருந்தாள்.
அது நின் மனையாட்டிதானா என்று கேட்டார்களாம்! நேரடியாகச்
சொல்லாமல் புலவர்கள், உட்கருத்தாக வைத்துச் சொன்னார்கள்!
இப்போது பொது சிந்தனை வளர்ந்துவிட்டது! தனிப்பட்டவர்கள்
அறிந்ததை, தனிப்பட்டவர்களுக்கு அறிவிக்கின்ற முறை கடந்து,
அறிந்த உண்மைகளை உலகறிய, மக்களுக்கு எடுத்துச் சொல்லுகிறார்கள்.
இப்போதுள்ள சமுதாயத்தின் நடவடிக்கையை பார்க்கிறபோது, நீதி
குறைந்திருக்கிறது-பலரை வற்புறுத்தும் தன்மை அதிகமாயிருக்கிறது.
ஏழை அழுகிறான் என்றால், அவனைப் பார்த்து ஏன் அழுகிறாய் என்று
கேட்டு, அவன் துயரைத் துடைக்கிறோம் ஏன்?
சேற்றிலே பசு அழுந்திக்கிடக்கிறது, வெளியே வர முடியாமல்
தவிக்கிறது என்றால், பேசும் சக்தியற்ற உயிர்ப்பிராணி துன்பப்படுவதை
நீக்க வேண்டுமென்று எண்ணுவதில்லை. காரணம் மனிதன் உதவியைப்
பெற்று மகிழ்கிறான். கொடுப்பதால் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
வாங்குவதால் அந்த ஏழை மகிழ்ச்சியடைகிறான். அந்த மகிழ்ச்சியை
நாம் காணுகின்ற போது உதவி செய்த பலன் நமக்கு கிடைத்தது
என்று, நாமும் மகிழ்கிறோம்!
அந்தக் காலத்தில் தன்னைப் பற்றிப் பாடிக்கொண்ட புலவர்கள்
தான் அதிகம் பேர் இருந்திருக்கின்றனர். புலவர்கள், கஷ்டப்பட்டு
மக்களுக்கு அறிவுறுத்தவில்லை.
மன்னர்களின் உதவியைப் பெறுவதற்காக மண்டியிட்டுக் கிடந்தவர்களும்
அன்று இருந்தார்கள்! அறநிலையைக் காப்பாற்றுவதற்கும் புலவர்கள்
இருந்தார்கள். மன்னர்கள் அறவழியிலே இருந்து தவறுகின்ற நேரத்தில்
அஞ்சாமல் எதையும் சொல்லும் ஆற்றல் படைத்தவர்களும் அன்று
இருந்தார்கள்.
வாழ்க்கைப் படிப்பினை நன்கு உணர்ந்தவர்கள் இருந்தார்கள்.
அதுவும் உண்மை! தரணி மெச்ச வாழ்ந“தார்கள் என்பது உண்மை!
தமிழர்களின் வாழ்க்கை பிற்காலத்தில் எப்படி மாறியது? இப்போது
எப்படி இருக்கிறது? டாக்டர் அவர்கள் பேசுகையில் நல்ல வாழ்க்கை
வாழுங்கள். இலக்கியம் தோன்றும் என்று குறிப்பிட்டார்!
வாழ்க்கை என்பது தானும் வாழ்ந்து மற்றவர்களை வாழ வைப்பதுதான்
வாழ்க்கை!
ஆனால் இன்று பத்து பேர் கெட்டால்தான், தன் வாழ்க்கை செம்மை
பெறும் என்ற எண்ணம் சிலருக்கு இருக்கிறது! அந்த வழியிலேதான்
சமூக அமைப்பும் இருக்கிறது-பொருளாதார நிலையும் இருக்கிறது.
இயற்கை துணை நின்று, உழைப்பை உறுதுணையாக்கி, அறிவுத் துணையோடு
உழைக்கின்ற உழைப்பு அந்த உழைப்பில் மிச்சப்படுகின்ற நேரத்திலே
குறைந்த உழைப்பில் அனுபவித்த பலனை மற்றவர்களுக்கும் அளிக்கின்ற
மனம் வேண்டும். அது தான் வாழ்க்கை!
வாழ்க்கை என்றால் தேவைகள் நிறைவுற்றிருக்க வேண்டும்!
வண்டி இழுக்கிற வரதன் வாடுகிறான், வண்டியிலே இருப்பவன் சுகமாக
வாழ்கிறான் என்றால், இதை அடுக்கு மொழி என்று சிலர் கேலி
பேசுகிறார்கள். வண்டி இழுக்கிற வரதனைப் பார்த்து எப்படி
இருக்கிறாய் என்று கேட்டால் ஏதோ இருக்கிறேன் என்று கூறுவான்.
இருப்பது வாழ்க்கை அல்ல! இருக்கிறான் என்றால் மற்றவர்கள்
மதிக்கத் தக்க விதத்திலே வாழ வேண்டும்! பாவி! இவனும் இருக்கிறானே
என்னும் விதத்திலே வாழக்கூடாது!
தமிழர்கள் நல்ல வாழ்க்கை முறைகளை கையாண்டார்கள். துயர் இல்லாது
இருந்தார்கள். நிறைவுற்ற வாழ்க்கை வாழ்ந்தார்கள். அதனால்தான்
அக்காலத்திலே உள்ள புலவர் ஒருவர் யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்று பாடினார். தம்மைப் போலவே எல்லா நாட்டினரும் இருப்பார்கள்
என்று எண்ணியதால்தான். எங்களுக்கு எல்லா ஊரும் எங்கள் ஊர்தான்
என்று அவ்வாறு சொன்னார்.
ஆனால் பிற்காலத்தில் வந்த உறவினர்கள் இருப்பதைக் கெடுக்க
வந்தார்களே தவிர, கொடுக்க வரவில்லை. நள்ளிரவு கள்ளர்களுக்கும்
இவர்களுக்கும் பெயரில் தான் மாற்றம், செய்கையில் மாற்றம்
ஏதும் இல்லை என்றே நான் கருதுகிறேன். பிற்காலத்தில் வந்தவர்கள்
புதுவழி என்று சொல்லிக் கொண்டு தவறான வழியிலே சென்றனர்.
பழந்தமிழர்கள் கடவுள் பக்தியில் குறைந்தவர்களாக இருந்தனர்
என்று சிலர் கூறுகிறார்கள். பழந்தமிழர்கள் கடவுள் பக்தியில்
அழுத்தமான நம்பிக்கை வைத்துக் கொண்டிருந்ததால் தான் சிறந்து
விளங்கிய வாழ்க்கையின் தரம் குறைந்தது! ஆகவேதான் அந்தக்
காலத்தில் பெரும்பாலும் கடவுட் கதைகளாகவே இயற்றப்பட்டன!
ஆனால் திருமூலர் என்னும் புலவர் ஒன்றே குலம் ஒருவனே தேவன்
என்றுப் பாடினார் இலக்கிய தமிழர் சமுதாயம் பேதமற்ற, வேற்றுமையற்ற,
சமுதாயமாக, சுரண்டலற்ற சமுதாயமாக விளங்கியிருக்கிறது!
எப்படியாவது, வாழ வேண்டும், வாழ்வதற்கு இன்னின்னது தேவை
என்ற எண்ணம் இப்போது தோன்றிவிட்டதால்தான் இலக்கியத்திற்கும்
வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு அற்றுப் போய் விட்டது.
பழந்தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்று கூறுவதால் பழந்தமிழர்கள்
போல் இன்று வாழ இயலுமா? அன்றிருந்த பழந்தமிழர்கள் வேட்டையாடச்
சென்றார்கள். அப்போது ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்க்கிடையே
அடிக்கடி மோதல் ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. அப்படிப்பட்ட
வாழ்க்கையை இப்போது வாழச்சொல்கிறீர்களே. இது அறிவுடையாகுமா
என்று சிலர் பேசுகிறார்கள்.
இப்படி இப்படி யெல்லாம் பழந்தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பது,
மக்களுக்கு அறிவூட்டி, அவர்கள் வாழ்ந்த செம்மையான வாழ்வை
நாமும் வாழ வேண்டும் என்பதற்காகத் தான் வலியுறுத்துகிறார்கள்.
அந்தக்காலத்திலே வாழ்ந்தவர்கள், இன்று போல் இல்லை. சிகை
வளர்ந்திருந்தது! இன்று எல்லோரும் கிராப்பை எடுத்து விட்டு,
சிகை வளர்த்துக்கொள்ள முடியுமா?
அன்று, சட்டை போடாமல், இருந்தார்கள். அகன்ற மார்பு காட்டி
போர்களத்திற்குச் செல்லும் வீரர்கள் போல் நடை போட்டார்கள்.
இன்று அப்படி இருக்க முடியுமா?
அன்று வாழ்ந்தவர்களின், இடுப்பிலே எப்போதும் உடை வாளை வைத்துக்கொண்டிருந்தார்கள்,
வீரத்தோடு ஒன்றியவர்களாக அன்று வாழ்ந்தவர்கள் இருந்தார்கள்.
தேவையற்ற காரியங்கள் அன்று நடைபெற்றிருக்கின்றன. ஆகவே அவைகள்
அப்படியே இன்றும் இருக்க வேண்டுமென்பதல்ல! அன்று வாழ்ந்தவர்களின்
அடிப்படைக் கொள்கைகளைத் தான் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமே
தவிர, புறத்தோற்றம் முக்கியமல்ல! ஆகவேதான் அன்று வாழ்ந்த
புலவர்கள் அகம்-புறம் என்று பாடினார்கள். அகத்திலே இருப்பதை
புறத்திலே பார்க்க முடியாது! பழந்தமிழர்களின் அடிப்படை கருத்தை
நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்!
அந்தக் காலத்திலே வாழ்ந்த ஆடவன், இல்லக் கிழத்தி என்றும்,
காமக்கிழத்தி என்றும், பரத்தை என்றும் மூன்று பெண்களை வைத்திருந்தான்.
அந்தக்கால இலக்கியமும் இலக்கணமும் இதை ஏற்றுக்கொண்டிருக்கலாம்.
இது இப்போது இந்தக் காலத்திற்கு ஒத்து வருமா? இந்தக் காலத்தில்
ஒரே பெண்ணோடுதான், எத்தனை ஆண்டுகளானாலும் அவளோடு வாழ வேண்டும்.
“கள் குடிப்பது தீது” என்று சொல்லப்படுகிறது. பழந்தமிழர்கள்
குடிப்பதையே பெரிய கலையாகக் கொண்டிருந்தனர். இதற்கு சான்றுகள்,
சங்க இலக்கியங்களிலே ஏராளமாக இருக்கின்றன!
சங்க இலக்கியத்திலே கள் குடிக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்
என்பதற்காக ஆளுக்கொரு கோப்பையை எடுத்துக் கொண்டு குடிக்கச்
சென்று விடுவது தவறு. அதுவல்ல இலக்கிய வாழ்க்கை! மற்றவர்களைக்
கெடுக்கக்கூடாது. உழைத்து பிழைக்க வேண்டும். இதைத்தான் நல்ல
வாழ்க்கை என்று சொல்ல முடியும். ஆகையால் வாழ்க்கை எப்படி
அமையவேண்டும்? இலக்கியத்திலே இருந்து எந்தவிதமான கருத்தை
எடுத்துக் கொள்ளலாம் என்று ஆராய்ந்து பார்த்து, அந்தக்
கருத்தினை மனதிலே கொண்டு, அதனுடைய துணையால் வாழ்க்கையைச்
செம்மையாக்கிக் கொள்ள வேண்டும்! இப்படி வாழ்ந்தால்தான்
இலக்கியத்திற்கு மதிப்பு கொடுப்பதாகும். அன்று வாழ்ந்த
தமிழர்களின் புகழுக்கு ஏற்றமளிப்பது போலாகும்!
தமிழ் ஆட்சி மொழியாக வேண்டுமென்று கூறினால் சிக்கல் வரும்
என்று கூறுகிறார்கள்! தமிழ் ஆட்சி மொழியாகவேண்டும்! நீதிபதி
அவர்கள் வழக்கு மன்றத்தில் தமிழிலேயே தீர்ப்பு எழுதி படிக்க
வேண்டும் அந்த நாளை நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்!
டாக்டர் அவர்கள், தனித் தமிழ் வேண்டுமென்று கூறினார்! இப்போது
இருக்கின்ற துரைத்தனத்தில் தமிழர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள்
ஆள்கிறார்கள். தனித்தமிழ் ஆட்சியிலே நிலைக்க வேண்டுமென்று
சொல்லி வருவது கண்டு வெட்கப்படுகிறேன்! வேறு நாடுகளிலே
இது போன்ற நிலை இல்லை!
ஆங்கிலம் பேச எழுதத் தெரியாத பல நாடுகளில், அந்த நாட்டின்
தாய் மொழியே ஆட்சி மொழியாக இருக்கின்றன. ஆங்கிலம் வளர்ந்திருக்கும்
பல நாடுகளில் கூட அந்தந்த நாட்டின் தாய் மொழியைத்தான் ஆட்சி
மொழியாக்கி இருக்கிறார்கள். எஸ்கிமோக்கள் வாழ்கின்ற பகுதியிலே
கூட அவர்களின் தாய் மொழிதான் ஆட்சியிலே இருக்கிறது. அவர்களை
பார்த்து அவர்கள் வழி, பின்பற்றினால் பாதி பிரச்னை தீர்ந்துவிடும்!
இங்கே இருக்கின்ற துரைத்தனத்தாரை, தமிழிலே எழுதுகிறோம்
அனுமதி தாருங்கள், என்று கேட்கும் நிலைக்கு இருக்கிறோம்!
தமிழர்கள் என்றால் வாதாடலாம்-பகைவர்கள் என்றால் துச்சம்
என மதிக்கலாம்! என் கொடியின் கீழ் நீ நிற்கிறாய், நீ சொன்னால்
அதை நிறைவேற்ற வேண்டுமா? இப்போது இருப்பதை உன்னால் மாற்ற
இயலாது என்று சொல்லுவதைப் போல் இங்கே இருக்கின்ற துரைத்தனத்தார்
தமிழை ஆட்சி மொழியாக்க முடியாது என்று கூறுகிறார்கள். ஆங்கிலம்
தான் இன்று வழக்கிலே இருக்கின்றன! பேசத் தெரிந்தவர்கள் ஆங்கிலம்
பேசுகிறார்கள் பாடத் தெரிந்தவர்கள் வடமொழி சங்கீதத்தைப்
பாடுகின்றார்கள். ஆகவே மொழி உரிமையை இழந்துவிட்டு இன்னொரு
இனம் சும்மா இருக்காது!
சின்னஞ்சிறிய நாடு அயர்லாந்து! ஆங்கிலேயர்களின் ஆட்சியிலே
இருந்த காலம்! சுயாட்சி பெறவேண்டுமென்ற எண்ணம் பிறந்து,
விடுதலைக் கொள்கை வித்தூன்றிய காலத்தில், முதலில் தோன்றியது
புரட்சிக் கழகமல்ல! ஐரீஷ் மொழியை வளர்க்கும் கழகங்கள் தான்
முதலிலே தோன்றின!
ஐரீஷ் மொழி பேசுகின்றவர்களே, ஐரிஷ் மொழியிலே என்ன இருக்கிறது
இலக்கியம் இருக்கிறதா என்றார்கள். மொழி உணர்ச்சிக் கொண்டவர்கள்
ஆங்கிலத்திலே இலக்கியம் இருக்கலாம். ஐரிஷ் மொழியிலே இலக்கியம்
இல்லாமல் இருக்கலாம். ஆனால், உரிமை உணர்ச்சி கிடைக்கும்
என்றார்கள். மொழி உணர்ச்சி வலுப்பெற்ற போது ஆங்கில துரைத்தனத்தார்,
உங்களுக்கு ஐரிஷ் கொடி வேண்டுமா, எங்களது ஆனந்த வாழ்வு
வேண்டுமா, என்று கேட்டபோது விடுதலை தலைவன் டிவேலரா. அடிமை
வாழ்வில் கிடைக்கும் தேவை இல்லை. எங்களுக்கு ஐரிஷ் கொடிதான்
வேண்டுமென்றார். அதே போல்தான் நாம், நமது மொழி ஆட்சி மொழியிலே
இருக்க வேண்டுமென்று விரும்புகிறோம். தனித் தமிழ் வேண்டுமா
என்று நம்மைப் பார்த்துக் கேட்கும் துரைத்தனத்தாருக்கு நாம்
சொல்லும் பதில், புருவத்தை நெறிப்பதைத் தவிர வேறு ஒன்றும்
இல்லை!
தமிழ் இப்போது வேகமாக, முன்புள்ள நிலையை அடைவதற்கு வழிவகைகள்
ஏற்பட்டு வருகின்றன. பிறமொழி கலப்பு மாறி, தனித் தமிழ்
பேச்சு வழக்கில் நிறைய வந்து கொண்டிருக்கிறது.
நான் மட்டும் இப்போது நல்ல தமிழ் பேசவில்லை. இப்போது பலர்
நல்ல தமிழிலே பேசிவருகிறார்கள். திரைத் தமிழ் வளர்கிறது
என்று டாக்டர் அவர்கள் கூறினார்கள்.
உண்மையிலேயே திரைத் தமிழ் வளர்ந்து கொண்டுதான் வருகிறது.
படத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன் காதலனும், காதலியும் சந்தித்து
உரையாடுகின்ற கட்டமானால், காதலி-காதலனைப் பார்த்து சுவாமி
என்று வசனம் பேசுவான்! இன்று சுவாமி என்று பேசினால், பார்ப்பவர்கள்
இது என்ன கோயில் சீனா என்பார்கள்! இது எப்படி மறைந்தது?
எப்படி இருந்தது-இப்போது எப்படி மாறிற்று? இன்று கண்ணாளா,
கரும்பே, தேனே, மானே, வெண்ணிலவே என்று பேசுகிறார்கள். இந்த
அழகிய தமிழ் எப்படி வந்தது.
சுவாமி என்று பேசினால் தொழுகையிலே பேசுகின்ற பேச்சாகி விட்டது!
ஆண்டவனை தொழுதாலும், வரம் தரா விட்டாலும் கோபிக்காமலாவது
இருக்கலாம்! ஆகவே இன்று திரையில் அன்பே, ஆரூயிரே என்ற அழகிய
தமிழ், பழந்தமிழ் பேசப்படுகிறது!
ஒரு திங்களுக்கு முன் துரைத்தனத்தார் கூட்டிய கூட்டத்தில்
நானும் கலந்து கொண்டேன். கூட்டத்தில் பேரூர்தி நிலையம்
என்று ஒருவர் பேசும் போது கூறினார். உடனே ஒரு காங்கிரஸ்
உறுப்பினர் எழுந்திருந்து பேரூர்தி நிலையம் என்பது-இத என்ன
தமிழா? இது யாருடைய வாயில் நுழையும் என்று கூறினார். நான்
பேசுகிற போது குறிப்பிட்டேன். இது நுழைகின்ற வாய் நிறைய
இருக்கின்றன என்று.
நான் படித்த காலத்தில் தீபஸ்தம்பம் என்று சொல்லுகிற போது
அதிலே எத்தனை கம்பீரமாக இருந்தது. அதைச் சொல்லிப் பார்ப்பதிலே
ஒரு மகிழ்ச்சி இருந்தது! என் மகனிடத்திலே தீபஸ்தம்பம் என்றால்
என்னப்பா அது என்கிறான்! லைட் ஹவுஸுக்கு பெயர் தீபஸ்தம்பம்
என்றால் அவன் சிரித்து கலங்கரை விளக்கமா என்று கூறுகிறான்.
தீபஸ்தம்பம் என்றால் அவனுக்கு புரியவில்லை. கலங்கரை விளக்கம்
என்றால் தான் புரிகிறது! இது நான் கற்றுக் கொடுத்தது அல்ல-காலமத்
கற்றுக் கொடுத்தது! இது எப்படி ஏற்பட்டது? இதுதான் மறுமலர்ச்சி
வாயிலாக ஏற்பட்ட மொழி உணர்ச்சி!
பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இப்படி ஒரு கூட்டம் நடைபெற்று,
நண்பர் கோகுல கிருஷ்ணன் வரவேற்றுப் பேசுகிற போது, எப்படி
பேசியிருப்பார்?
மகாஜனங்களே! சகோதர சகோதரிகளே! உங்களையெல்லாம் சந்திக்கிற
வாய்ப்பு கிடைத்தது பெரும் பாக்கியம். நான் தன்யனானேன்!
இப்பொழுது உங்கள் மத்தியிலே ஸ்ரீமான் அண்ணாதுரை அவர்கள்
பிரசங்கம் செய்வார் என்று கூறியிருப்பார்! இப்பொழுது சபை
அவையாகிவிட்டது! நாடு அரசாகி விட்டது! நாடு, விடுதலை கிளர்ச்சி
என்கிற கண்டார்கள்! யாரும் நினைக்கவில்லை! இந்த மறுமலர்ச்சி
ஏற்பட்ட பின் சிலருக்கு அச்சம் ஏற்பட்டது! தூய தமிழ் இன்று
வென்று விட்டது! நிலையாக நின்று விட்டது!
ஆகவே, துணிந்து நம்பிக்கையோடு தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டுமென்று
எடுத்துரைக்க வேண்டும். புதிய புதிய சொற்களை நாம் இலக்கியத்திலே
இருந்த எடுத்தாள வேண்டும். புதிய சொற்கள் இலக்கியத்தில்
நிரம்ப இருக்கின்றன. வழக்கு மன்றங்களுக்கான சொற்கள் சிலப்பதிகாரத்தில்
வழக்குரைப் பகுதியில் இருக்கின்றன! அரசாட்சிக்குரிய சொற்கள்
மணிமேகலையில் இருக்கின்றன!
இல்லையென்று கூறுகின்றவர்களுக்கு இருக்கிறதென்று காட்ட துணிந்தால்
நிச்சயமாய் தமிழ் தனித்து இயங்கும். தமிழ் ஆட்சி மொழியாக
வேண்டுமென்று கூறுகிற போது தமிழ் செல்வாக்கு இழந்து விடும்
என்று ஆட்சியாளர்கள் கூறுவதற்கு காரணம், தமிழ் ஆட்சி மொழியானால்,
இப்போது இருக்கிற வடமொழி செத்துவிடும் என்ற அச்சம்தான்,
தமிழ் கெட்டுவிடும், கெட்டு விடும் என்று கூறுவதற்குக் காரணம்!
இதற்கு எடுத்துக் காட்டாக ஒன்று சொல்லுவேன் வடமொழி இப்போது
பேச்சு வழக்கில் இல்லை. லத்தீன் மொழி எழுத்திலே இருக்கிறதே
தவிர, பேச்சில் இல்லை. வடமொழிச் சொற்களில் கருத்து இருக்கலாம்.
ஆனால் அது பெரும்பான்மையாரால், பேசப்படுவதில்லை பேச்சு வழக்கிலே
இல்லை.
தமிழ் மொழியில் நல்ல இலக்கியங்கள் இருக்கின்றன. தமிழர்,
தாய்மொழி-தமிழ் என்ற நம்பிக்கை, உறுதிப்பாடு உங்களுக்கு
ஏற்பட வேண்டும். அந்த உணர்வு இல்லாத காரணத்தினால் தான் இருப்பதை
விரட்டப்படாமல் இருக்க வேண்டும் என்று என்பதற்காகத்தான்
தமிழ் கெட்டு விடும் என்று அச்சுறுத்துகிறார்கள்.
எந்த மொழியிலிருந்தும் கடன் வாங்கும் நிலையிலே தமிழ் இல்லை.
எப்படி துரைத்தனத்தார் மற்ற நாடுகளிலே இருந்து கடன் பெறுவதைப்
போல், மற்றமொழிகளிலே இருந்து கடன் வாங்கப்பட்டால், அந்த
நிபந்தனை ஆதிக்கம் நம் மொழியின் வளர்ச்சியைக் குலைத்துவிடும்!
எனவே தான் நாம் தனித்தமிழ் வேண்டுமென்று குறிப்பிடுகிறோம்.
மொழிவளம், தனித் தன்மை தமிழர்க்கு இருக்கிறது. தமிழ் இலக்கியம்,
வாழ்க்கையோடு எல்லா வகையிலும் ஒட்டி நன்மை செய்வதை நீங்கள்
பார்க்கக் கூடும். செம்மையான வாழ்க்கைக்கு வழிகாட்டியாக
இலக்கியத்தில் உருட்டி திரட்டி எடுத்ததுபோல் குறள் இருக்கிறது.
வாழ்க்கையிலே ஏற்படும் ஐயப்பாடுகளை நீக்கிக் கொள்வதற்கு
குறள் துணைபுரிகிறது!
குறளை வழிகாட்டியாகக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
வாழ்க்கைக்குத் திருவள்ளுவர் காட்டிய நெறியையும் புறநானூறு
காட்டிய வீரத்தையும் அகத்துறை காட்டிய அன்பையும் வருங்காலத்தில்
நாம் கடைபிடிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டு, இது போன்ற
மன்றங்கள் செய்யும் பணி, பாராட்டுதற் குரியது. இதற்கு நீங்கள்
அதிக அளவில் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.
|