அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


இலங்கைத் தமிழர் அறப்போர்

“இலங்கையில் நடக்கும் அறப்போரை ஆதரித்தும் இலங்கை அரசின் அடக்கு முறைகளைக் கண்டித்தும் நடத்தப்படும் முதல் கூட்டம் இதுதான்; தி.மு.கழகம் முதன் முதலாக இப்படிப்பட்ட கூட்டத்தை இன்றைய தினம் கூட்டியிருக்கிறது என்றால் இதை அரசியல் வரலாற்றில் எங்கோ ஒரு மூலையில் தள்ளிவிடும் சாதாரணப் பிரச்சனையாக இது இருக்க முடியாது.

“இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமையும் அவர்கள் மீது வீசப்படும் பழிச்சொற்களும், இழி சொற்களும், தமிழர் கடைகள் சூறையாடப்படுவதும், ஆடவர், பெண்டிர், முதியவர்கள், குழந்தைகள் உட்பட அனைவரும் ஓடஓட விரட்டியடிக்கப்படுவதும் துடிக்கத் துடிக்க வெட்டப்படுவதும் கேட்டு நமக்கெல்லாம் மனம் பதறச் செய்கிறது.

“இதை எண்ணும்போது எனக்குத் தமிழ் நாட்டில் நெடுங்காலத்துக்கு முன்னால் இருந்த இரட்டைப் புலவர் நினைவு வருகிறார்கள். இரட்டைப் புலவரில் ஒருவருக்குக் கண் உண்டு. கால் இல்லை, மற்றொருவருக்குக் கால் உண்டு; கண் இல்லை. எனவே கால் உள்ள புலவர் காலில்லாதவரைத் தோளில் சுமந்து செல்வார். தோளிலே அமர்ந்துள்ள புலவர் வழிகாட்டிக் கொண்டு செல்வார். அவருக்குக் கண் இருந்த காரணத்தாலும் இரண்டு புலவர்களுக்கும் வாய் இருந்த காரணத்தாலும் ஆளுக்கு இரண்டு இரண்டு அடி வீதம் பாடி, பல கவிகளை இயற்றினார்கள்.

இரட்டைப் புலவர்கள் நிலையில்...
“அந்த இரட்டைப் புலவர்களைப் போல்தான் நாமும் இலங்கைத் தமிழரும் இருக்கிறோம். நமக்குக் கால்கள் இல்லை; அவர்களுக்குக் கண் இல்லை. நாம் அவர்களைப் பார்த்து அதோ பாருங்கள் சிங்கள வெறியர்களை என்றுதான் காட்ட முடிகிறதே தவிர, அங்குச் சென்று தடுக்க முடியவில்லை, காலில்லாத காரணத்தால். எனவே, அவர்களைப் பற்றி வாயளவிலே எடுத்துச் சொல்லும் தன்மையில்தான் நாம் இருக்கிறோம். நம்முடைய உளங்கனிந்த ஆறுதலையும் நெஞ்சார்ந்த ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று நேற்றுச் சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் அண்ணா அவர்கள் குறிப்பிட்டார்கள்.

அண்ணா அவர்கள் மேலும் பேசியதாவது:
“இலங்கைத் தமிழர்கள் நடத்துகின்ற அறப்போர் தக்கபலன் தந்து வெற்றி கிடைக்கவேண்டும் என்ற நமது நல்லெண்ணத்தினைத் தெரிவிக்கவும், அங்கே அவிழ்த்து விடப்பட்டிருக்கும் அடக்குமுறைக் கொடுமைகளை உலகிற்கு அறிவிக்கவும், உலகம் கூர்ந்து கவனிக்கும் ஒருபெரிய பிரச்சனையைப் பற்றிக் காமராசர் சர்க்கார் சிறு கவலையும் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதைக் கண்டிக்கவும், மத மதப்பாக இருக்கும் டில்லி சர்கக்õருக்கு இலங்கையில் நடப்பதைச் சுட்டிக்காட்டி நியாயம் கிடைக்க வழி செய்யும் படி வற்புறுத்தவும் இக்கூட்டம் தி.மு.க. சார்பில் கூட்டப் பட்டிருக்கிறது.

“இங்குப் பலர் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்கள். உலகில் தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு இழைக்கப் படும் அநீதியைக் கண்டிக்கத் தி.மு.க தோழர்கள் உரிமைப் பெற்றிருக்கிறார்கள் என்பதையும், இவர்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள் என்பதையும்தான் இன்று இங்குப் பேசிய பேச்சுகள் காட்டுகின்றன.

இலங்கை மீது படையெடுப்பா?
“இங்கே பேசிய எனது தம்பிமார்கள் பேச்சிலிருந்து வெளிப்பட்ட கருத்துகள் அனைத்தும் தி.மு.கழகத்தின் முடிவு என அவசரப்பட்டு எண்ணத் தேவையில்லை. நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி பேசுகையில் இலங்கை மீது படையெடுத்தோ, வேறு வழிகளிலோ அங்கு நடைபெறும் அநீதியை ஒழிக்கவேண்டும் என்பதாகக் குறிப்பிட்டார். இலங்கை மீது படையெடுத்துச் செல்லலாம். எப்போது? நமக்கென்று தனியாக ஒரு படை இருந்து நம்மிடம் படை இருப்பதை அறிந்தும் சிங்கள அரசு தொல்லை கொடுக்குமானால் அப்போது அதுபற்றி யோசிக்கலாம். கே.ஆர்.இராமசாமி இப்படிப் பேசியது அவரது ஆசையையும், இலங்கைத் தமிழர் மீதுள்ள அக்கறையையும் எடுத்துக்காட்டுவதற் கேயாகும்.

“எனவே கே.ஆர்.ஆர். அவர்களுடைய பேச்சைக் கேட்டதும் அடுத்த ஏப்ரல் திங்களிலோ, மே திங்களிலோ படையெடுக்க தி.மு.க திட்டமிட்டிருப்பதாகச் சிங்கள அரசு கவலைப்பட வேண்டாம். இங்குள்ள சில சிண்டு முடிந்துவிடும் பத்திரிகைகளும் அப்படிக் கருதவேண்டாம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏக்கம்-வெற்றிகிட்டச் செய்யும்
“அதைப்போல், ஆசைத்தம்பி அவர்கள் பேசிய போதும் இங்குள்ள சௌகார்பேட்டையைப் பார்த்துக் கொள்ளலாம் என்றார். அது மிகச் சுலபமான வழிதான், சுறுசுறுப்பான முறைதான். ஆனால் அதை ஏன் குறிப்பிட்டார்கள் என்றால் அந்த வகையில் நம் உள்ளத்திலிருக்கும் கவலையைத் தெரிவிக்கவும், நெஞ்சத்தில் ஆசை கொழுந்து விட்டு எரிகிறது என்பதையும்தான் அவர் பேச்சு எடுத்துக்காட்டுகிறது. பொறுப்புணர்ச்சியும் பாதுகாப்புணர்ச்சியும், சொன்னால் அதைச் செய்து காட்டவேண்டுமே என்ற கட்டுப்பாட்டுணர்ச்சியும் உள்ள நான் சொல்லிக்கொள்கிறேன்.
“திருமணம் செய்து கொடுத்துவிட்ட தனது பெண்ணை மருமகன் அடித்துத் துன்புறுத்துகிறான் என்றால், வசதியுள்ள தந்தையாக இருந்தால் அந்தப் பெண்ணைத் தன் வீட்டிற்குத் திருப்பி அழைத்து வந்து விடலாம். ஆனால், இன்னும் திருமணம் செய்து கொடுக்க வேண்டிய நிலையில் ஐந்து பெண்களை வீட்டிலே வைத்திருக்கும் தந்தையாக இருந்தால் என்ன செய்ய முடியும்? கணவன் அடித்தாலும் பரவாயில்லை; சோறு கிடைத்தாலே போதும், கணவன் வீட்டிலேயே அந்தப் பெண் இருக்கட்டும் என்று நினைத்துக் கொண்டு ஏக்கத்துடனிருப்பான்.

“அதைப்போலத்தான் நாமும். இலங்கைத் தமிழரைப் பற்றியும் நமக்குள்ள கவலைகளையும் எண்ணி ஏக்கமடைகிறோம். இந்த ஏக்கம்தான் ஓர் இயக்கத்துக்கு வலிவினைத் தரும். ஓர் இயக்கத்திற்கு ஏற்படும் ஏக்கம் அந்த இனத்திற்கு வெற்றி கிட்டச் செய்யும். தனி மனிதனுக்கு ஏற்படும் ஏக்கம் அவனைச் செயலற்றவனாகத்தான் ஆக்கும்.

தமிழ் வேதச் சங்கம்
“அறப்போர் வெற்றிபெற வேண்டுமென்று அங்குள்ள தமிழர்களுக்கும் அடக்குமுறைகளை விட்டொழித்துத் திருந்த வேண்டும் என்று சிங்கள சர்க்காருக்கும் எடுத்துக் கூற நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

“நான் இந்தக் கூட்டத்திற்கு வருவதற்கு ஓர் அரை மணி நேரம் முன்பு ஆப்பிரிக்காவிலுள்ள பிரிடோரியா நகரத்தில் குடியேறி வசிக்கும் தமிழர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாய் வந்து என்னைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஆறாயிரம் மைலுக்கு அப்பால் வாழ்கின்ற அங்குள்ள தமிழர்கள், ‘தமிழ் வேதச் சங்கம்’ என்ற பெயரிலே ஓர் அமைப்பை ஏற்படுத்தித் திருக்குறள் பயின்று வருகிறார்களாம். அவர்கள் வள்ளுவர் விழா நடத்த இருப்பதாகவும், அந்த விழாவிற்குத் தி.மு.க சார்பில் வாழ்த்து அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அந்தத் தாயார் என்னைக் கேட்டுக்கொண்டார்கள். இப்படி அவர்கள் நம்மைப் பார்த்துக் கேட்க மூன்று காரணங்கள் உண்டு.

மூன்று வகைக் காரணங்கள்
“ஒன்று தமிழர்கள் கண்ணுக்கெட்டாத தொலைவில் கடல் கடந்து வாழ்ந்தாலும் அவர்களைப் பற்றிக் கவலைப் படுவது தி.மு.க.தான்.

“நமக்கென்று இருப்பது இன மரபு அறிந்த தி.மு.க. ஒன்றுதான் என்ற உணர்வு அந்தத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது இரண்டாவதாகும்.

“மூன்று அவர்களுக்கெல்லாம் நாம் தரக்கூடியது அனுதாபச் செய்தியும் ஆறுதல் செய்தியும், வாழ்த்தும், நல்லுரையும்தான்.

“ஆகவேதான் நாம் இன்றைய தினம் இந்தக் கூட்டத்தைக் கூட்டி நம்முடைய ஆதரவையும் அனுதாபத்தையும் இலங்கைத் தமிழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

“வீழ்ந்துபட்ட தமிழர்களுக்கும், விரட்டியடிக்கப்படும் தமிழர்களுக்கும், நம்முடைய அனுதாபத்தைத் தெரிவிக்கும் வகையில் நமது கண்ணீரைக் காணிக்கையாக்குவோம். தாயிழந்து தவிக்கும் தனயனும், மகளை இழந்து தகப்பனும், அண்ணனைப் பறிகொடுத்த தம்பியும், தம்பியைப் பிரிந்த அண்ணனும்... இப்படியாக ஒரு கூப்பிடு தொலைவிலுள்ள இலங்கையில் இருந்து கொண்டு கொட்டும் கண்ணீருடனும் குமுறும் நெஞ்சத்தோடும் 30 லட்சம் தமிழர்கள் வாடுகிறார்கள். அங்குள்ள தமிழ்ப் பெருங்குடி மக்கள் தணலிலிட்ட தங்கம் போல் உருகுகிறார்கள். அவர்கள் படும் துயரம் பற்றிய செய்தி தரணியெல்லாம் பரவுகிறது. ஆனால் இங்குள்ள அரசினருக்கு ஏனோ எட்டவில்லை. விரைவில் இலங்கைத் தமிழர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை என் உள்ளத்தில் ஆழ்ந்த இடம்பெற்றிருக்கிறது. அந்த வெற்றிக்கு ஆக்கமும் ஊக்கமும் தர நீங்களெல்லாம் இங்கு வந்து கூடியுள்ளதைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன்.

ஆங்கிலத்தில் தீர்மானங்கள்
“இந்தக் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் இந்திய அரசுக்கும், சிங்கள அரசுக்கும் மட்டுமின்றி உலகிலுள்ள எல்லா நாட்டிற்கும் இன மக்களுக்கும் தெரியவேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறோம். அவற்றைப் படிக்கிறேன். நீங்கள் அனைவரும் ஆதரவைக் காட்ட வேண்டுகிறேன்.

(நம்நாடு - 14.3.61)