ஆச்சாரியார்கள் ஆகாத கல்வித்
திட்டத்திற்கு எழுந்த எதிர்ப்பு உணர்விற்கு மதிப்பளித்துக்
கல்வித் திட்டத்தைக் கைவிட்டார் என்பதற்காக மட்டுமே காமராசரைத்
தி.மு.கழகம் பாராட்டிற்று. அதற்காகவே, காமராசரோ, காங்கிரசோ
மற்றவரோ தி.மு.கழகத்தைத் தங்கள் சட்டைப் பைக்குள் போட்டுக்
கொள்ள முடியாது. நான் அவர்களுக்குத் தெளிவாகவே சொல்லிவிட
விரும்புகிறேன் – குடியேற்றம் தேர்தலைப் பார்த்து – அந்த
மாயமானைப் பார்த்து யாரும் ஏமாந்துவிட வேண்டாம் என்று.
காமராசர் நம்மோடு ஒற்றுமை
கொள்ள உகந்தவராவார் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை, அவரோடு
நாம் ஒற்றுமை கொள்ள அவல் போதுமான சான்றுகளைத் தரவில்லையே
நமக்கு? திராவிட நாடு திராவிடர்க்காக வேண்டும்‘ எனும் நமது
லட்சியம் குறித்துக் கவனிக்கிறேன். ஆதிபத்தியம் பற்றிச்
சிந்திக்கிறேன் என்று ஏதாவது ஒரு சொல்கூடக் கூறவில்லையே!‘
அவர் எண்ணம் எல்லாம் – நான்
தெரிந்து கொண்டிருக்கிற படி – அரசியல் கட்சிகளிடையே மேதுதல்
கூடாது, ‘ஒரு கட்சி மற்றக் கட்சியுடன் மோதிக் கொள்ளக் கூடாது
என்பதற்காக மட்டுமே அரசியலில் ஒற்றுமை வேண்டும்,‘ என்று
விரும்புகிறார் எனத் தெரிகிறது. தஞ்சையில் கம்யூனிஸ்டு கட்சி
அல்லாத மற்றக் கட்சியினர் எல்லாம் ஒன்றுபட வேண்டும் என விரும்புவதாகத்
தெரிவித்திருக்கிறார்.
கேள்விகளுக்குப் பதில் தேவை!
நான் அவரைக் கேட்டுக் கொள்கிறேன்
– பதில் சொல்லுமாறு! - ஒற்றுமை எந்த வகையில்? எந்த அடிப்படையி்ல்?
எதற்காக? எத்தனை காலத்திற்கு? ஏன்? யாருடைய திட்டத்தை யார்
விட்டுக்கொடுத்து ஒற்றுமையாவது? – இவைகளுக்கெல்லாம் நமக்குப்
பதில் தேவை.
சாடையாகாவாவது ‘திராவிட நாடு
கோரிக்கையை நான் மதிக்கிறேன்‘, என்று சொல்ல வேண்டாமா காமராசர்?
சொல்லுவாரா? சொல்லுவதானால் ஒற்றுமை கிடைக்கும். அதைவிட்டு,
கல்வித் திட்டத்தைக் கைவிட்டார் என்பதற்காக நாம் பாராட்டியதை
மட்டுமே எண்ணி, ‘நாம் பிரிவினைத் திட்டத்தைக் கைவிட்டுவிடுவோம்‘
என அவர் எண்ணினால், அவர் ஏமாறுவார் நிச்சயமாக! நாம் பாராட்டினோம்
என்பதாலேயே அவர், நம்மை எனது சட்டைப் பைக்குள் போட்டுக்
கொள்ள முடியாது!
இவ்வாறு தி.மு.கழகப் பொதுச்
செயலாளர் அண்ணாதுரை அவர்கள், 10.8.1954 அன்று சென்னை மவுண்ட்
ரோடு தி.மு.ககழகத்தின் மூன்றாவது ஆண்டு விழாப் பொதுக்கூட்டத்தில்
பேசுகையில் குறிப்பிட்டார்.
சட்டைப்பைக்குள்ளே போட முடியாது!
சென்னை, மவுண்ட்ரோடு !39வது
வட்டம்) தி.மு.கழகக் கிளையின் சார்பில் 10.8.1954 அன்று
மாலை 6.30 மணிக்கு ஓர் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அந்த வட்டக் கிளையின் மூன்றாவது ஆண்டு விழாவையொட்டி, கழகக்
கட்டிடத்திற்கருகில், எல்லிஸ் ரோட்டில் நடைபெற்ற அந்தப்
பொதுக் கூட்டத்திற்குத் தோழர் கா.பாண்டியன் அவர்கள் தலைமை
வகித்தார். தோழர்கள் கண்ணதாசன், என்.வி.நடராசன் ஆகியோரும்
சொற்பொழிவாற்றினர்.
கூட்டத்திற்கு இடம் நெருக்கடியானதாக
அமைந்திருந்தாலும் பலதரப்பட்ட மக்கள் திரண்டிருந்தனர் என்பது
குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பொதுச் செயலாளர் அண்ணாதுரை
அவர்கள் பேசியதாவது,
மவுண்ட் ரோடு கிளைத் தி.மு.கழகத்
தோழர்கள் இந்த நெருக்கடியான இடத்திலே, வேறு வசதியான மைதானம்
கிடைக்காததால், இந்த ஆண்டு விழாப் பொதுக்கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார்கள்.
ஆச்சாரியார் புகுத்திய கல்வித்
திட்டத்தை நாம் எதிர்க்கிறோம் என்பதை, நமது ஆதரவு பெற்ற
சட்டசபை உறுப்பினர்களிடம் எடுத்துச் சொல்வது என்ற நமது ஜனநாயக
ரீதியான முயற்சியை அரசாங்கம் தடை செய்தபோது, அந்தத் தடையை
மீறி இந்த வட்டத்தைச் சேர்ந்த தோழர்கள் முதன் முதலில் சிறை
புகுந்தனர். அவர்கள் சிறைச்சாலையில் இருந்தபோது நாங்களும்
சிறைச்சாலைக்குச் சென்றோம். அந்த நேரத்தில், எங்கள் விடுதிக்கு
வந்து பகல் முழுவதும் பேசிக் கொண்டிருந்துவிட்டுச் செல்வார்கள்,
இந்த வட்டத்துத் தோழர்கள்! எங்களிடையே அப்படி வளர்ந்தது,
பாசம் சிறைக்குள்! அந்தப் பாசத்தின் காரணமாக, என்னை இந்த
வட்டத்தில் வந்து அவர்கள் கழகத்தை கட்டிக்காத்து, ஆர்வத்தோடு
பணி புரிவதைப் பாராட்டவும், பொதுமக்கள் ஆதரவைத் தொடர்ந்து
தருமாறு வேண்டிக் கொள்ளச் சொ்ல்லவும் சொற்பொழிவாற்றுமாறு
அழைக்க சகல உரிமையுமிருந்தது அத்தோழர்களுக்கு! உங்களில்
பலருக்கு இப்போது கிடைக்காத அந்தப் பாசம் அடுத்த முறை நிச்சயம்
கிடைக்கும்.
அந்தச் சித்திரமே தவறு!
இன்றைய தின இதழ் ஒன்றில் காமராசர்
உருவம் ஒன்றை வரைந்து, அவரது சட்டையில் உள்ள நான்கு பைகளிலும்
நான்கு கட்சிகளைத் திணித்து ஒரு படம் வரையப்பட்டுள்ளது,
ஒரு பையில் பெரியார் ராமசாமியும், இன்னொரு பையில் நானும்,
மற்றொன்றில் பி.சோ. கட்சியும் இன்னொன்றில் லீக் கட்சியுமான
வரைந்து கம்யூனிஸ்டுகளைத் தனியாக எதிரே நிறுத்திப் படம்
வரையப்பட்டுள்ளது, அதன் கீழே, ‘கம்யூனிஸ்டு அல்லாத மற்றக்
கட்சியினர் எல்லாம் ஒன்றுபட வேண்டும் எனக் காமராசர் தஞ்சையில்
கூறினார் என்ற செய்தி வெளியாகியுள்ளது‘ என்றும் எழுதப்பட்டிருந்தது.
‘ஏது, இவர்களெல்லாம் ஒன்றாகி
விடுகிறார்களோ?‘ என்று பயந்து, இப்படிக் கேலிச் சித்திரம்
வரைந்தால் ஒருவேளை பிரிந்துவிட மாட்டார்களா என்ற சபலப் புத்தியாலோ
அல்லது காமராசர் தனது திறமையால் இந்தக் கட்சியினரை எல்லாம்
தனது சட்டைப் பைக்குள் பிடித்துப் போட்டுவிட்டார் என்ற எண்ணத்தாலோ
அந்தச் சித்திரத்தை வரைந்திருக்கக்கூடும் ஆனால், இந்தச்
சித்திரமே தவறானது?‘
நான் காமராசரைக் கண்டிருக்கிறேன்,
அவர் போட்டிருக்கிற சட்டை முழு நீளக்கை உடையது அல்ல, அரைக்
கைச் சட்டையைத் தான் அவர் அணிந்திருக்கிறார், மேலும் அவர்
சட்டையில் நான்கு பைகள் இல்லை, ஒரு பைதான் இருக்கிறது, ஒரு
பையுள்ள சட்டை அணியும் மனிதல் நான்கு கட்சிகளைத் தன் பைக்கள்
போட்டுக் கொள்வாரென்றால் எங்களில் பலர் இரண்டு பைகளையுடைய
சட்டை அணிபவர்கள் – இரண்டு பைகளிலும் எங்களால் எட்டுக் கட்சிகளை
உள்ள போட்டுக் கொளள் முடிய வேண்டும் அல்லவா?
நாட்டின் நிலையும் அரசியலும்
தெரியாதவர்கள்!
காமராசரின் திறமையைத் தெரிந்து
கொண்டிருக்கிற அந்தச் சித்திரக்காரருக்கு, அவர் அணியும்
சட்டை இன்னவகையானது என்பது தெரியாமற் போனது ஆச்சரியம்தான்!
இம்மாதிரி யெல்லாம் அவர்கள்
நடந்து கொள்வதற்குக் காரணம் இந்த நாட்டில் நிலவும் அரசியல்
நிலைகளை அவர்கள் தெரிந்து கொள்ளாதவர்கள் என்பதுதான்!
காமராசரின் சட்டைப்பைக்குள்
இருப்பதாகத் தீட்டப்பட்டுள்ள மற்ற மூன்று கட்சியினர் எப்படியோ?
அதைப் பற்றிப் பேச நான் அருகதை அற்றவன். தி.மு.கழகத்தைப்
பற்றி மட்டும் பேச எனக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பதால்
தி.மு.கழகத்தின் நிலைபற்றி மட்டும் சொல்லிவிட விரும்புகிறேன்.
தி.மு.கழகம் கொள்கைக்காக்த
தோற்றுவிக்கப்பட்ட கட்சியே அன்றி, கட்சிக்காக அதன் கொள்கை
தோற்றுவிக்கப்படவில்லை. கட்சி என்று ஒன்று வைத்திருக்கிறோமே,
அதற்கு ஒரு கொள்கையும் லட்சியமும் வேண்டாமா? என்றெண்ணித்
தோற்றுவிக்கப்பட்டதல்ல, ‘திராவிட நாடு திராவிடருக்கே‘ என்ற
கொள்கையும் லட்சியமும்!
திராவிட நாடு திராவிடருக்கே
இந்த நாட்டு மக்கள் திராவிடர்கள்.
‘வாழ்ந்தவர்கள் என்று வரலாறு சொல்லி்ற்று! வரலாறும் சிலாசாசனமும்
நமக்கச் சொல்லுகிறபடி வளமாக, சுதந்திரமாக வாழ்ந்த இனம்,
இன்று அரசியல் சட்டப்படி அடிமை ஆக்கப்பட்டிருக்கிறது! அந்த
இனம், தொழில் வளர்ச்சியின்றிக் கேடுற்றுக் கிடக்கிறது! அந்த
இனத்தின் அரசியல் தன்மானம் தரைமட்டமாகக்ப்பட்டுக் கிடக்கிறது!
தமிழ் மகன் உலகெங்கும் இழிவுப் படுத்தப்படுகின்றான்! இந்த
நிலை கண்டு மனம் நொந்து உளம் வெதும்பி, பலமுறை எண்ணி, எண்ணி,
ஏங்கித் தவித்து, இந்த இழிநிலை போக்கத் திட்டங்கள் பல தீட்டி,
இறுதியாக, ‘திராவிட நாடு திராவிடருக்காகப் பட்டாலன்றி, இந்த
நாட்டவர் நலிவு நீங்காது, ‘என்பதைப் கண்டு, அந்தத் திராவிடத்தைத்
திராவிடருக்காக்குவதையே லட்சியமாகக் கொண்டு லட்சியத்தை ஈடேற்றக்
காணப்பட்டதுதான் தி.மு.கழகம்.
காமராசர் நல்லது செய்தால்
பாராட்டுவோம்!
ஆகவே, காமராசர் கண்சாடை காட்டுவாலேயே
லட்சியத்தை விட்டுவிட மாட்டோம்!
காமராசர் விரும்பும் ஒற்றுமை
அவசியமானது எற்ால், எமது லட்சியம் அதனினும் மிக மிக அவசியமானது!
காமராசர் நல்லது செய்தால்,
நாமும் – நல்லவர் பலரும் பாராட்டத்தான் செய்வோம். ரூபாய்க்கு
நான்குபடி அரிசி தருகிறாரா! நாட்டவரைப்போலவே நாமும் வாழ்த்துவோம்
– நீடூழி வாழ்க என்று‘
காமராசர் மட்டுமல்ல – ஆச்சாரியாரே,
மக்களுக்கு நன்மை செய்தால் பாராட்டுவோம் ஆச்சாரியாரால் முடியுமா
என்பீர்கள்? செய்வதாகவே வைத்துக் கொள்வோம் – நிச்சயமாக அவரையும்
பாராட்டுவோம். பாராட்டியும் இருக்கிறோம். அவர் ஆட்சியிலிருந்த
காலத்தில் இரண்டாட்டுகள் வரை அவர் நம்மோடு வம்புக்கு வராத
வரையில், நாமும் வஅரை வம்புக்கு இழுக்க வில்லை என்பதை எண்ணிப்
பார்க்க வேண்டும். தஞ்சை பண்ணையாள் சட்டம் கொண்டு வந்தார்
பாராட்டினோம்! ஆகாத கல்வித் திட்டத்தைக் கொணர்ந்தார் – எதிர்த்தோம்!
எனவே, நமக்க ஆள் அல்ல முக்கியம் – ஆள்பவர்கள், மக்களுக்குச்
செய்யும் காரியம்தான் நமக்கு முக்கியம்.
மூன்று பெரிய பொறுப்புகள்!
தி.மு.கழகத்திற்கு மூன்று
பெரிய காரியங்களைச் செய்ய வேண்டிய பெரும் பொறுப்பு இருக்கிறது
– மக்களைத் திருத்த வேண்டும். சர்க்காரின் போக்கு தவறாக
இருந்தால் திருத்த வேண்டும் சொந்த சர்க்கார் அமைக்க வேண்டும்.
இம்மூன்றையும் நாம் செய்தாக
வேண்டும். எதாவது ஒன்றில்லாவிடினும் அது சரிப்படாது! ‘அல்லி
– அர்ஜுனா‘ நாடகம் நடத்த வேண்டுமானால் நாடக மேடை வேண்டும்.
மேடையில் ஆட ஆள் வேண்டும், ஆடுவதைப் பார்க்க மக்கள் வேண்டும்.
இதில் ஏதேனும் இரண்டு இருந்து, மற்றது இல்லாவிட்டால் நாடகம்
ஆட முடியுமா? அல்லது ஏதாவது ஒன்றுக்காக மற்றது தேவையில்லை
என்றுதான் சொல்ல முடியுமா?
வெற்றிலை, பாக்கு சுண்ணாம்பு
– இம்மூன்றும் இருந்தால் தான் சுவைக்க முடியும். ஆனால்,
வெறும் சுண்ணாம்பை மட்டும் வாயில் போட்டால் வாய் வெந்துவிடாதா?
வெற்றிலை மட்டும் போதும் என்று
எண்ணி மென்று தின்றால் சாதாரண ஆட்டு மந்தைக்கம் மனிதருக்கும்
அதிகம் வேறுபாடு இல்லாமல்லவா போய்விடும்?
வெறும் பாக்கை மட்டும் தின்பதெல்லாம்
அவர் அடைத்துக் கொள்ளும். எனவே, இம்மூன்றையும் ஒன்றாகக்
கூட்டினால்தான் சுவை. அளவோடு கூட்ட வேண்டும் என்பதையும்
மறந்து விடலாகாது! இன்னொரு உதாரணமும் சொல்கிறேன்.
காமராசர் கஃபே பரவாயில்லை!
ஒருவனுக்கு வயிற்று வலி வருகிறது,
வைத்தியனிடம் சொல்கிறான், வைத்தியரும் பரிசோதித்துவிட்டு,
என்ன சாப்பிடுகிறாய்? என்று கேட்கிறார், ஏதோ ஒரு ஓட்டலில்
சாப்பிடு வதாகக் கூறுகிறான். அங்குள்ள பொருள்கள் காரமாக
இருப்பதையும் சொல்கிறான். உடனே டாக்டர், ‘ஓட்டிலில் நீ சாப்பிடும்
பொருளில் உள்ள மிதமிஞ்சிய‘ காரம் தான வயிற்று வலிக்குக்
காரணம். எனவே சாப்பிடும் ஓட்டலை மாற்று என்கிறார். புதிய
ஓட்டலில் பொருள்கள் காரக் குறைவாகயிருப்பதால், நோயாளிக்கு
வயிற்றுவலி நின்றது, என்றாலும் ஓட்டலில் சாப்பிடுபவராகவே
இருக்க வேண்டும் என்று எவரும் விரும்ப மாட்டார்கள். நமக்கென்று
ஒருத்தி வந்து நாம் வாங்கித்தரும் அரிசி, பருப்பைச் சமைத்து,
நாவிற்கச் சுவையாய், கனிவோடு உணவு தரும் நாள் என்று வரும்
என்று எண்ணி ஏங்கிக் கொண்டுதான் இருப்பான். அது இயற்கையும்
கூட! அதைப்போலவே, ஆச்சாரியார் ஆட்சி – உயரமான உணவு, வயிற்று
வலியைத் தந்தது போல இந்த நாட்டு மக்களுக்குக் கேடுகளைத்
தர ஆரம்பித்தது. ஓட்டல் மாற்றப்பட்டது, ‘காமராசர் கஃகே‘
கொஞ்சம் பரவாயில்லை.
ஆனால் ‘சொந்தச் சாப்பாடு நிச்சயமாகத்
தேவை‘ என்று எண்ணுவது போன்றே, நமக்கென நாடும், அந்த நாட்டு
ஆட்சி நம் கையில் இருக்க வேண்டுமென்பதும் இன்றியமையாதன!
ஆகவே, தி.மு.கழகம், அந்த நமக்கென்றிருக்கும்
நல்லாட்சி சுதந்திரத்தைப் பெறுகிற வரையில் ஓயாது, அயராது,
உறங்காது, அல்லது ஒழிந்தும் விடாது!
வெள்ளைக்கார புல் டாக்
நான் ஆரம்பத்தில் கூறியதுபோன்று,
யார்மீதும் நாம் திடீர் திடீரெனப் பாய மாட்டோம்!
வெள்ளைக்காரர்களை புல் டாக்
போன்றவர் என்று சொல்வார்கள், அமெரிக்காவைப் போல் கண்ட கண்ட
இடங்களில் கை வைக்க மாட்டார்கள், பிரெஞ்சுக்காரர்கள் போல்
பலப்பல இடங்களிலும் பிடி வைத்துக் கொண்டு அவஸ்தைபட மாட்டார்கள்,
ஆனால், வெள்ளைக்காரர்கள், பிடித்த இடத்தையும் சுலபத்தில்
விடமாட்டார்கள்!
மலாயாவைப் பாருங்களேன் – அவர்களையும்
புல் டாக் என்ற சொல்வதற்குக் காரணம், அதுதான்! புல்டாக்
ஓயாமல் குரைத்துக் கொண்டே இருக்காது. எதையும் கண்டவடன் திடீர்
எனக் குறைக்காது, ஆனால், குரைத்துவிட்டு ஒரு பொருளைக் கவ்விக்
கொண்டால், கவ்வியபிறகு பிடியை விடவே விடாது.
நாமும் அதேபோலத்தான் – யாரையும்,
எதையும் திடீரென முடிவுகட்ட மாட்டோம், ஆனால், தீர்க்கமாக
பலமுறை சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவ யார் எந்த எலும்புத்
துண்டை வீசினாலும் விடமாட்டோம், அதற்குக் காரணம், நமது திறமை
அல்ல, மாறாக, நமது லட்சியம் சுலபத்தில் விட்டுவிட முடியாத
அளவு மிக மிக உயர்ந்ததாகும்.
நாம் நமக்கென்று நமது இனத்திற்கென்று
ஒரு அரசாங்கம் பெறுகிற முயற்சியில் ஈடுபட்டிருந்தோம், ஆனால்,
அதற்காக அந்த அராசங்கத்தைப் பெறுகிற வரையில், இடைக்காலத்தில்
இருக்கிற ஆட்சி பீடம் மக்களுக்குக் கொடுமை விளைவித்தால்
அதைத் திருத்த முற்படுவோம்.
தியாகத் தழும்பேற்கிறோம்!
இந்த நாட்டின் கொடுமை புரியும்
சர்க்கார்களைக் கண்டித்துத் திருத்துவதில் நாம் தான் நிற்கிறோம்.
அரசாங்கம் விதிக்கும் அநியாயமான
வரிகள், புகுத்தும் புதுப் புதுத் திட்டங்கள் இவை கண்டு
நமக்குத்தான் பதைபதைப்பும், ஆத்திரமும் வருகின்றன. நாம்
தான் கண்டிக்கிறோம், திட்டங்களை எதிர்த்துப் போர் புரிகிறோம்,
அதன்படித் திட்டங்களை எதிர்க்கும்போது, அரசாங்கம் அள்ளி
வீசும் அடக்குமுறை அடிகளைத் தாங்கியும் கொள்கிறோம், தியாகத்
தழும்பேற்கிறோம்.
திராவிடர்கள், தங்கள் நாட்டைத்
தாங்களே கட்டி ஆண்டவர்கள் கடாரம் கடந்தவர்கள், யவனத்திற்கும்,
சீனத்திற்கும் எத்தனையோ பொருள்களை ஏற்றுமதி செய்தவர்கள்!
திராவிடத்தில் ஒரு காலம் இருந்தது
– திராவிடத்தை ஆண்ட முடிதரித்த மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு
புலவர்கள் பலரால் காவியமாக்கப்பட்டுள்ளது, அந்தப் புலவர்கள்
எழுதும் கவிதைகளை மக்கள் புரிந்துகொள்ளும் அறிவைப் பெற்றிருந்தார்கள்,
அந்தப் புலவர்களைப் போற்றும் பல புரவலர்கள் இருந்தார்கள்.
புரவலர்களை மக்கள் ஏற்றிப் போற்றினார்கள், அந்த மக்களை,
மாநிலமெங்கும் உள்ளவர்கள் மதித்தார்கள்.
ஏன் போர்க்களம் புகுகின்றோம்?
நாட்டைக் கட்டி ஆண்டவர்கள்
திராவிடர்கள், ஆகவேதான் இன்றும் நம்மை நாமே ஆளவேண்டும் என்கிறோம்!
கடலிலே பெரும் மரக்கலங்கள்
செலுத்தியவர்கள் நாம், ஆகவேதான், இன்று, நமக்குக் கப்பல்கள்
தேவை என்கிறோம்.
படைகள் பல நடத்திச் சென்றவர்கள்
நாம், எனவேதான், நம்நாடு நமக்கு ஆகப் படை திரட்டுகிறோம்!
மொழியை வளர்த்தவர்கள் நாம்,
ஆகையால்தான், இன்று நம் மொழிக்கு ஊறு ஏற்படும்போதெல்லாம்
போர்க்களம் புகுகின்றோம்!
வாழ்ந்து கெட்டவர்கள் நாம்,
ஆகவேதான், இன்று நாம் வாழ விரும்புகிறோம்.
தி.மு.ககழகம், இழந்த வாழ்வை
மீண்டும் திராவிடருக்குப் பெற்றுத் தரத் தோற்றவிக்கப்பட்டது.
தி.மு.கழகத்தின் வேலை என்ன?
பார்ப்பனரைத் திட்டுவதா? அல்ல! அல்ல! அவர்களைத் திருத்துவது!
அதோடு முடிந்ததா என்றால் இல்லை!
பின்னோடும் பிள்ளையாகப் போக
மாட்டோம்!
சர்க்காரைக் கண்டிப்பதா? கண்டிப்பது
மட்டுமல்ல அதன் வேலை! இன்னும் இருக்கிறது. அது என்ன வேலை?
அதுதான், நமக்கென ஒரு அரசு காண்பது – திராவிட நாட்டை திராவிடர்க்காக்குவது?
எனவே, இந்த மகத்தான வேலையில்
ஈடுபட்டிருக்கும் நாம் யாருடனும் பின்னோடும் பிள்ளையாகப்
போக மாட்டோம்! காங்கிரசின் பின்னாலோ, காமராசர் பின்னாலோ
அன்றி கம்யூனிஸ்டுகளின் பின்னாலோ நிச்சயமாகப் போகமாட்டோம்.
பெற்று வளர்த்த பெரியார் அவர்களே
தவறு செய்தார் என மனமார உணர்ந்த காரணத்தால், தந்தையென்றும்
பாராது தனித்து வந்த வீரப் பிள்ளைகளா வேறு ஒருவர் பின்னார்
போவார்கள், போகமாட்டார்கள்! போகக்கூடாது.
(நம்நாடு - 11.8.1954)