அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


இணைந்திருப்பதால் என்ன நன்மை?

எங்களை உள்ளே தள்ளிவிட்டால் ஒன்றுமே நடைபெறாது என்று நினைத்துக் கொண்டார் ஆச்சாரியார், யாரோ ஒரு பைத்தியக்காரன், 9 மதங்கள் கர்ப்பிணியாயிருக்கம் ஒரு பெண்ணின் மேல் கோபங்கொண்டு, அந்த ஊரிலிருந்த வைத்தியனைப் பக்குவமாக வெளியூருக்கு அனுப்பிவிட்டானாம்! காரணம், பிரசவக் காலத்தில் வைத்தியன் இல்லாத காரணத்தால், அந்தக் கர்ப்பிணி கொஞ்சம் அவஸ்தை படட்டும், என்ற நோக்கத்தோடு!

“வைத்தியர் இருந்திருந்தால் கொஞ்சம் மெதுவாக வெளியே வைத்திருக்கும் குழந்தை – வைத்தியன் இல்லாத காரணத்தால், ஒரே ஒரு உதை உதைத்துவிட்டு, குழந்தை வெளியே வந்துவிட்டது. அதைப்போல, நாங்கள் வெளியே இருந்திருந்தாலும், கிளர்ச்சி என்ற குழந்தையைப் பக்குவமாக, வெளியே கொண்டு வந்திருப்போம். வைத்தியர்களாக எங்களை எண்ணி, உள்ளே பிடித்து வைத்துவிட்டதால், குழந்தை, தாயின் கர்ப்பத்தை உதைத்துக் கொண்டு வந்ததைப்போல, ஒரே நாளில் ஜூலை 15இல் சென்னைக் கடற்கரை முதல், கன்னியாகுமரி கடற்கரை வரையில் ரயில் ஓடவில்லை.“ என்று தஞ்சையில், திலகர் திடலில், தோழர் கே.கே. நீலமேகம் தலைமையில் நடைபெற்ற, தோழர்கள் அண்ணாதுரை, நெடுஞ்செழியன், மதியழகன், வரவேற்புக் கூட்டத்தில் நன்றி தெரிவித்துப் பேசுகையில், பொதுச் செயலாளர் தோழர் அண்ணாதுரை அவர்கள் குறிப்பிட்டார். மேலும் அவர் பேசினார்.

ஆச்சாரியார் நினைத்திருக்கமாட்டார்!

“நம்முடைய சிந்தை நைந்துவிடும் என்று சி.ஆர்.நினைத்திருக்க மாட்டார். அவர், அவ்வளவு ஏமாளியல்ல. ஆண்டவனிடம் அருள் பெறுவது இரண்டு வழிகளில் என்கின்றனர். ஒன்று அடித்து ஆதரிப்பது, மற்றொன்று அணைத்து ஆதரிப்பது. இதில் முதல் ரகத்தைச் சேர்ந்தவர் ஆச்சாரியார். ‘அடித்து ஆதரிப்போம்‘ என்ற முடிவுக்கு வந்துவிட்டார். ஆகையாலேதான் அவருக்குப் பின்னால் காங்கிரஸ்காரரிடம் இந்த நாட்டை ஒப்படைக்க, அவர் எண்ணவில்லை. இந்த நாட்டுக்குடயவரான நம்மிடமே ஒப்படைத்துவிட வேண்டும் – என்ற முடிவுக்கு வந்துவிட்டார். இதை நான், நன்றாக உணர்ந்து கொண்டிருக்கிறேன். ஏனெனில், சுமார் பத்து – பதினைந்து ஆண்டுகளாக அவருடைய அரசியல் போக்கைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்றேன். அதற்காக அவர், நம்மிடம் இந்தப் பரிட்சையை நடத்தி, தேறுகிறார்களா, இல்லையா என்று பார்த்திருக்கிறார். நாமும் ஒருவர் தவறாமல் தேறிவிட்டோம்.“

என்ன செய்ய? 500 ரூபாய் அபராதம் கொடுக்கக் கூடியவர்கள்தானே, கொடுத்துவிட்டுத் தாராளமாக வெளியே வந்திருக்கலாமே, என்று ஒய்யாரம் பேசினார் ஆச்சாரியார்! ஆனால், இன்ற எங்களுக்களித்த தண்டனை போதாது என்று உயர்நீதிமன்றம் நோக்கிப் போயிருக்கின்றார்.

தியாகத் திலகம் திலகர் திடலிலே கூடி அவருடைய சர்வாதிகாரப் போக்கைப் பற்றிப் பேச வேண்டியிருக்கிறதே என்பதற்காக வருந்துகிறேன்.

இராமராஜ்யத்திலே கொடுமைகளா?

இவர்கள், ஆள்பவர்களாக இல்லாமல், வெறும் கட்சிக்காரர்களாக வெளியே இருந்து – கிளர்ச்சிகள் நடத்தித் தண்டனையடைந்தபோது, அவர்களுக்களித்த தண்டனை போதாதென்று, வெள்ளைக்காரன் கோர்ட்டுக்குப் போனானா?

இந்த ராம ராஜ்யத்திலேதான், இந்த அகிம்சா மூர்த்திகளின் ஆட்சியிலேதான், தூத்துக்குடித் தோழர்கள் 5 மாதங்களாகச் சிறையிலே வாடுகிறார்கள். தோழர் கே.வி.கே. சாமி அவர்களின் தாயார் இறந்துவிட்டார்கள், அன்று அவரை வெளியே விடவில்லை, அந்தம்மையாரைத் தகனம் செய்த பிறகு வெளியே விட்டார்கள்.

இன்று, கழகத்திலே இருந்தவர்கள் மாத்திரம் சிறை சென்றார்கள், நாளை தெருவிலே இருப்பவர்களும் சிறை செல்லக் கூடும். தெருவிலே நிற்பவனைப் பார்த்து, “நீ திராவிட நாட்டை ஆதரிக்கிறாயா?“ என்று கேட்டு, அவன், ”ஆமாம்” என்றால், “நட ஸ்டேஷனுக்கு“ என்று அழைத்துக் கொண்டு போனாலும் போகக்கூடும். அந்த நிலை 1960இல் வரலாம்.

நாம் இதுவரை எந்தக் கொள்கைக்காகப் போராடினோமோ, எந்த நன்னோக்கங்களுக்காகப் போராடினோமோ, அந்த நல்ல கருத்துக்களுக்கா இனியும் போராடுவோம்.

இரயிலை நிறுத்தியது – தி.மு.க.வின் சக்தி!

அன்றந்த அறப்போரில் நீங்கள் காட்டிய உறுதி – என்ஜினில் நெருப்பு இருந்தது. டாங்கியில் தண்ணீர் இருந்தது, இயங்கும் நீராவி போதுமான அளவு இருந்தது, டிரைவர் இருந்தார். பையர் மேன் இருந்தார், கார்டு இருந்தார், ஸ்டேஷன் மாஸ்டர் இருந்தார், வண்டியை ஓட்டுவதற்கான பணியாட்கள் அனைவருமே இருந்தார்கள் – என்றாலும் வண்டி ஓடவில்லை. அது, திராவிட முன்னேற்றக் கழகம் காட்டிய சக்தி.

இதே சக்தியை வைத்துக் கொண்டு இதோடு, நாளுக்கு நாள் வளர்ந்துவரும் சக்தியையும் திரட்டி, ‘1960இல் ரயிலைக் கவிழ்த்து விடுங்கள்‘ என்றால் ரயில் கவிழாதா?

அந்தத் துர்பாக்கிய நிலைக்கு நாட்டை ஓட்டாதே, உன் வல்லமையையும், உன் துப்பாக்கியின் எண்ணிக்கையும் நாங்கள் அறிந்தே இருக்கிறோம், ஆகவே, அந்த விஷக் கருத்தை வளர்க்க மாட்டாய் என்று நினைக்கிறேன்.

‘எதனால் இந்தக் கிளர்ச்சி, ஏன் திராவிட நாடு‘ என்று பெரியாரிடம் வேண்டுமானால் கேட்டு ஒரு கூட்டறிக்கையை வெளியிடக்கூடாதா, இதிலென்ன கேவலம்? இதைப் பேச நபிகள் பிறந்த தின விழா கொண்டாட்ட மேடையா வேண்டும்?

பாகிஸ்தான் பகற்கனவு என்றவர்கள், காந்தியாரை ஜின்னா வீட்டிற்கு அனுப்பி விளக்கம் கேட்டு, பாகிஸ்தான் பிரிவினையை ஒப்புக் கொள்ளவில்லையா?

திராவிடம் – அழுத்தமான நம்பிக்கை!

அதைப்போல, திராவிட நாட்டுப் பிரிவினைப் பத்திரத்தில் நேரு அவர்கள் ஒப்பம் இடுகிற வரையில் ஓயமாட்டோம், உறுதி இருக்கிற வரையில் குருதியைக் கொட்டிக் கொண்டிருப்போம்.

திராவிடம் டெல்லியோடு இணைந்திருப்பதால் என்ன நன்மை, பிரிந்துவிட்டால் என்ன தீமை என்ற கேள்வியின் அடிப்படையிலே எழும்பிய எங்கள் இலட்சயி கீதம் ஓயப்போவதில்லை, இது இறுமாப்போ – இல்லை, அகங்காரமோ – அல்ல, அது எங்கள் அழுத்தமான நம்பிக்கை.

இதுவரையில், எங்கள் கோரிக்கை அநியாயமானது, அர்த்தமற்றது என்று யாராவது மறுத்ததுண்டா? இனியும் மறுக்க யாராவது இருக்கிறார்களா? இல்லை.

ஆகவே, திராவிட நாட்டைத் தனியாகப் பிரிக்கம் வரையிலும் ஓயமாட்டோம் என்று கூறிக்கொண்டு என் பேச்சை மமுடிக்கிறேன்.

(நம்நாடு - 15-1-1954)