அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


இப்படை தோற்கின் எப்படை வெல்லும்

நேற்று நடைபெற்ற தி.மு.க. வெற்றி விழாப் பொதுக் கூட்டத்தில் அண்ணா அவர்கள் தலைமை வகித்து ஆற்றிய பேருரையில், வெற்றி பெற்ற கழகத் தோழர்கள் மேற்கொண்டொழுக வேண்டிய பொறுப்புணர்ச்சியையும், கடமைகளையும், கழகத்தின் எதிர்காலப் பணிகளையும் விளக்கினார்கள்.

தேர்தலுக்குப்பின் கழகத் தோழர்களுக்குக் காத்திருக்கின்ற பொறுப்புமிக்க பணிகளைச் சுட்டிக் காட்டினார்கள். ஆளுங்கட்சியின் எதேச்சாதிகாரத்தை வீழ்த்த எதிர்க் கட்சிகளின் நேசக்கரங்களைப் பெற்று ஆற்றவேண்டிய பணியினைக் கழகத் தோழர்கட்கு வலியுறுத்தியதுடன், எதிர்கட்சிகளுக்கும் அன்பழைப்பு விடுத்தார்கள்.

விலைவாசி உயர்வைக் குறைக்க தி.மு.கழகம் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அறிவித்தார்கள்.

சட்டமன்றத்தில் கவர்னர் ஆற்றவிருக்கும் உரையில், விலைவாசிகளைக் குறைக்க உரிய பரிகாரம் காணப்பட வில்லை யென்றால், வழிமுறை கூறப்படவில்லையானால், அதற்காகக் கிளர்ச்சியை மேற்கொண்டாவது உரிய பரிகாரம் தேடும் – என்றும் கூறினார்கள். அவர் ஆற்றிய உரை வருமாறு.

அடக்க உணர்வு அவசியம்!

“திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற வெற்றி பற்றியும், தோல்வி பற்றியும் இங்கே நண்பர்கள் குறிப்பிட்டார்கள். நாம் வெற்றி பெற்றதோடு வேலைகள் முடிந்துவிட்டதாகக் கொள்ளக்கூடாது தோல்வியின் போதுகூடச் சற்றுக் கோபம் இருக்கலாம். வெற்றி பெறுகின்றபோது, வளரும் ஓர் இயக்கத்திற்கு அடக்க உணர்ச்சி தேவை.

நமக்காக வாக்களித்த 34 இலட்சம் மக்களுக்கும், தொண்டாற்றும் பெரும பொறுப்பு நம்மைச் சார்ந்திருக்கிறது. அந்த அளவுக்கு அடக்க உணர்ச்சியும் கடமை உணர்ச்சியும் இருக்க வேண்டும்.

பொருள் உண்டு அதற்கு!

அந்த 34 இலட்சம் பேரும் தி.மு.கழகத்துக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்றால் – அவர்கள் தி.மு.கழகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்றால், நம்முடைய தூய தொண்டினை நம்பியிருக்கிறார்கள் என்று பொருள். அந்த நம்பிக்கை ஒரு துளியும் பங்கம் ஏற்படாமல், இந்தத் தடவை நம்மீது நம்பிக்கை கொள்ள மறுத்த மற்றவர்களும் அடுத்த முறை நம் பக்கம் வரும் அளவுக்குத் தொண்டாற்ற வேண்டும்.

நல்ல அடக்க உணர்ச்சிக்குப் பேர்போனவர் – என்று நான் பொறாமைப்பட்டுக் கொண்டிருந்த நமது என்.வி.நடராசன் கடற்கரைக் கூட்டத்தில் சற்றுப் பொறுமை இழந்ததை என் பொது வாழ்க்கைக்கே பெருங்களங்கமாகக் கருதுகிறேன், ஆனால், அவர், இப்போது இங்கே அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டதும் மெத்த மகிழ்ச்சியடைகிறேன். நமது கழகத்திற்கு இந்த அளவு வெற்றி தேடித் தந்த வாக்காளப் பெருமக்களுக்கும், உறுதுணையாக இருந்த நேசக்கட்சிகளுக்கும், நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

வெற்றிக் களிப்பில் ‘மறதி‘!

நான் அடக்கவுணர்ச்சி தேவை என்று குறிப்பிட்டதற்குக் காரணமுண்டு. திடீரென்று ஒரு ஐம்பது பேர் சட்டமன்றத்திதுக்கு வந்து விட்டதால் அந்த வெற்றிக் களிப்பில் அடக்கவுணர்ச்சியைச் சற்று மறக்க நேரிடுவது இயற்கையாகும்.

ஏழையொருவனுக்குத் திடீரென்று 5 ரூபாய் கிடைத்து விட்டால், அதை வீட்டிலே வைக்கமாட்டான் – சட்டைப் பையிலேயே வைத்துக் கொண்டு வீதியிலே செல்வான்!

ஒரு பணக்காரனுக்குப் பத்து ரூபாய் கிடைத்தால் அதை 15 ரூபாயாக ஆக்கும் வரையில் வெளியில் எடுக்கமாட்டான்!

அதைப்போல, நாம் பெற்றிருக்கின்ற இநத் வெற்றியை மேலும் அதிக வெற்றியை ஈட்டுவதற்குப் பயன்படுத்த வேண்டுமென்று நம்முடைய தோழர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

கழகம் பெற்றுள்ள இந்த வெற்றி குறித்து நீங்கள் அடைய வேண்டிய மகிழ்ச்சியெல்லாம் இன்றே அடைந்து விடங்கள், நாளை முதல், இதைவிடக் கடுமையான கடமையுணர்ச்சி மிக்க பணிகளில் ஈடுபட வேண்டும்.

பொறுப்புள்ள பணியுண்டு

இங்கே வெற்றி பெற்று வந்திருப்பவர்களில் நல்ல ஆர்வம் மிக்க இளைஞர்களும், அனுபவம் மிக்க முதியவர்களும், அறிவாற்றல் பெற்றவர்களும் ஜனநாயக உள்ளம் படைத்தவர்களும் நிரம்ப வந்திருக்கிறார்கள்.

எல்லாக் கட்சியினரும், பத்திரிகை நண்பர்களும் எங்களுக்கு ஒத்துழைப்புத்தரவேண்டும் என்ற பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு கட்சிதான் என்றென்றைக்கும் ஆளுங்கட்சியாக இருக்கும் என்று தாங்கள் கொண்டுள்ள விதிமுறையை மறந்து ‘ஜனநாயகத்தில் யாரும் அரசாளலாம்‘ என்ற நம்பிக்கைகொண்டு, அவர்களெல்லாம் ஒத்துழைக்க வேண்டும்.

நாங்கள் செய்கின்ற தவறை அவர்கள் இடித்துரைக்கட்டும் நாங்கள் செய்யும் நல்லதை நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள் என்று அவர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

ஜனநாயகம் வளர வழி!

பத்திரிகைக்காரர்கள் தேர்தலுக்கு முன்பெல்லாம் ஆளுங்கட்சியின் தவறுகளை எடுத்துக்காட்டிக் கண்டித்து வந்த போதிலும், தேர்தல் வந்தவுடன், ‘காங்கிரசுக்கு ஓட்டுப் போடுங்கள்‘ என்று கூற ஆரம்பித்து விடுகிறார்கள். இசைத் துறையிலே பல்லவி, அனுபல்லவி, சரணம் என்று இருப்பதுபோல் அவர்கள். முதலில் காங்கிரசின் குறைகளை எடுத்துக் காட்டிப் பல்லவியாகப் பாடுகிறார்கள். தேர்தலுக்குச் சில மாதங்கள் முன்னர் அதையே அனுபல்லவியாகப் பாடுகிறார்கள். தேர்தல் நெருங்க, நெருங்க, ‘காங்கிரசே சரணம்‘ என்று பாடத் துவங்கி விடுகிறார்கள். ஆகையினாலேதான் நாட்டில் நல்ல ஜனநாயகம் வளர முடியவில்லை. பத்திரிகை நண்பர்கள் ஓரளவேனும் நேர்மை உணர்ச்சியுடன் எங்களுக்குத் துணைநிற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

ஆளும் கட்சிக்குப் பலியாகி விடாதீர்!

நல்ல ஜனநாயகம் வளர வேண்டுமானால், ஆதிக்கம் செலுத்துகின்ற கட்சியை எப்படிக் கீழே இறக்குவது என்ற நோக்கத்துடனேயே எதிர்க்கட்சிகளெல்லாம் இருக்க வேண்டிய ஓர் எதிர்க்கட்சி இன்னொரு எதிர்க்கட்சியைத் தாக்கிப் பேசிக் கொண்டிருக்கக்கூடாது.

நமது தோழர்கள் கூட இங்கே சுதந்தராக் கட்சி பற்றியும் கம்யூனிஸ்டுக் கட்சிபற்றியும் சொனன்ார்கள். சுதந்தராக் கட்சியால் நாம் சில இடங்களை இழக்க நேரிட்டிருக்கலாம். அதேபோல் கம்யூனிஸ்டுக் கட்சியால் நாமும், நம்மால் கம்யூனிஸ்டுக் கட்சியும் சில பல இடங்களை இழந்திருக்கலாம்.

அதைக் காரணமாக வைத்து நம்மிடையே பகை மூட்டிவிட ஆளுங்கட்சியினர் தூண்டிவிடுகிறார்கள். நமது தோழர்கள் அதற்குப் பலியாகிவிடக்கூடாது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

காங்கிரசு எதேச்சாதிகாரத்தை வீழ்த்த யார் யார் கைகொடுக்கிறார்களோ – அவர்களுடைய நேசக்கரங்களெல்லாம் சேர்ந்தால் காங்கிரசை வீழ்த்த முடியும்.

புரிந்துவிட்டால் போதுமா?

ஒரு கட்சி, அதிகாரத்தில் 14 ஆண்டுகளாக இருந்து வருகிறது. பாராளுமன்றத்தில் அதற்கு இன்னமும் வலிமை மிக்க எதிர்க்கட்சி ஏற்படவில்லை. அது போடாத வரி இல்லை, தீட்டாத திட்டங்கள் இல்லை. வேலையில்லாத் திண்டாட்டத்தால் விலையேற்றத்தால் படும் வேதனை மக்களுக்கும் புரிகிறது, பத்திரிக்கைகளுக்கும் தெரிகிறது. இருந்தாலும் பாராளுமன்றத்தில் எதிர்த்தரப்புக்கள் தான் இருக்கின்றனவே தவிர பலமான அடிப்படைமீது எதேச்சாதிகாரம் கட்டப்பட்டிருக்கிறது, அதை வீழ்த்த எவ்வளவு பலமான எதிர்ப்புணர்ச்சி காட்டவேண்டும்‘ என்பது நன்றாகப் புலப்படும்.

எனவே, இந்த எதேச்சாதிகார அடிப்படையைத் தகர்க்க எந்தெந்தக் கட்சிகள் நமது அடிப்படைக் கருத்தைத் தாக்காத நேசக்கரம் நீட்ட வருகின்றனவோ அந்தக் கட்சிகளெல்லாம் நேசக்கரம் நீட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

அந்த நிலை வேண்டாம்

இதே நோக்கத்தோடு தான் நாங்கள் கடந்த காலத்திலும் பணியாற்றி வந்திருக்கிறோம். எங்களுடைய கடந்த காலச் சட்டமன்றப் பணிகளைக் கவனித்தால் இது புரியும், இன்று சுதந்தராக் கட்சியாக இருப்பவர்கள் அன்று சட்டமன்றத்தில் ‘ஜனநாயகக் காங்கிரசு‘ என்ற பெயரில் இருந்தனர். சட்டமன்றத்தில் ‘நில உச்சவரம்பு மசோதா வந்த போது அவர்கள் ‘உச்சவரம்பே கூடாது‘ என்றார்கள். கம்யூனிஸ்டுக் கட்சியினரும் நாங்களும்தான், உச்சவரம்பு தேவை‘ என்று வாதாடினோம். மற்றொருமுறை, ‘தேசிய அவமதிப்புத் தடுப்புச் சட்டம்‘ என்ற பெயரால் ஒரு மசோதா வந்தபோது அதை நாங்கள் மட்டும்தான் தனித்து நின்று எதிர்த்தோம், மற்ற எல்லோரும் ஆளுங்கட்சிப்பக்கம் சேர்ந்துகொண்டனர், சுயேச்சைகளில் கூடப் பலர் அவர்களோடு சேர்ந்துகொண்டனர்.

இப்போது வெற்றி பெற்று வந்திருக்கும் தோழர்கள் எந்தப் பக்கமும் சாய்ந்துவிடாமல், எந்த நேசக்கரத்தையும் விட்டுவிடாமல் பணியாற்ற வேண்டுமெனத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது வந்திருக்கும் நமது தோழர்கள் எப்படி நடந்து கொள்வார்களோ என்ற கவலை வேண்டியதில்லை. நல்ல விவரம் தெரிந்தவர்கள் வந்திருக்கிறார்கள்.

தெளிவாகிவிட்ட ஒன்று!

நாம் பெற் வெற்றி குறித்து 1957இல் காங்கிரசு கட்சியினர் ஆராய்ந்தார்கள். எப்படி இவர்களுக்கு இந்த வெற்றி கிடைத்தது என்று ஆராய்ந்தார்கள். அண்ணாதுரையும், கருணாநிதியும் மற்றும் மக்கள் முன்பு அடிக்கடி பேசிக் கொண்டிருப்பவர்களும், மக்களுடைய கண்களிலே அடிக்கடி பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதனாலே வெற்றி பெற்றுவிட்டார்கள்‘ என்று அவர்கள் அப்போது சொன்னார்கள். ஆனால், இப்போது மக்கள் கண்ணில் பட்டுக் கொண்டிருப்பவர்களில் பலர் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள், மக்கள் கண்ணுக்குப் படாதவர்கள் பலர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதைக் காங்கிரசார் ஆராய்ந்தார்களானால், வெற்றி பெறுவதற்கு ஆளல்ல முக்கியம் கொள்கைதான் முக்கியம்.

ஆள் மாறலாம் – ஆனால் கொள்கை மாறாதவர்களாக இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்பது தெளிவாகிவிட்டது இந்தத் தேர்தலில்.

கழகம்வெற்றி பெற்றதால் திராவிடநாடு கொள்கைகளை அத்தனைப்பேரும் ஒத்துக் கொள்கிறார்கள் என்ற அந்தக் கணக்கைப் போடவில்லை நாங்கள், இப்போது தான் அந்தக் கொள்கையைச் பேச ஆரம்பித்திருக்கிறோம் அப்படிக் கணக்குப் போட? ஆனால், எங்களை அறிந்து கொண்டவர்கள், எங்களுக்கும் வாக்களித்திருக்கிறார்கள். இது முதலமைச்சர் காமராசருக்கும் புரிந்திருக்கிறது.

அவருக்கே அது புரிகிறது!

நமது முதலமைச்சர் காமராசரைப் பத்திரிக்கை நிருபர்கள் பேட்டி கண்டபோது, காமராசர் நமது கழகம் பெற்றுள்ள வெற்றி பற்றிக் குறிப்பிட்டதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

அந்த நிருபர்கள் காமராசரைக் கிண்டிக் கிளறி, உள்ளேயிருப்பதை வெளியே கொண்டு வந்திருக்கிறார்கள். ஒரு நிருபர், தி.மு.க. 50 பேர் வந்திருக்கிறார்களே, இது பற்றி உங்கள் கருத்தென்ன? என்று கேட்டிருக்கிறார். இன்னொரு நிருபர் அவர் நிருபராக இருக்க முடியாது, அரசியல்வாதியாகத்தான் இருக்கக் கூடும், தவறிப்போய் நிருபராகிவிட்டார் அல்லது அரசியலில் தோல்வியுற்று நிருபர் வேலைக்குப் போயிருக்கக்கூடும் என்று எண்ணுகிறேன். அவர், தமிழ்நாட்டில் 206 இடங்களிலும் தி.மு.க. வெற்றி பெற்றாலும, திராவிட நாடு அமைக்க முடியுமா? மற்ற மாநிலங்கள் ஒத்துக் கொள்ளுமா? என்று கேட்டிருக்கிறார். அதற்குக் காமராசர் பதிலளிக்கையில், 206 பேர் வெற்றி பெற்றுவிட்டால் அலட்சியமாக இருந்து விட முடியாது, 206 இடங்களைப் பிடித்துவிட்டதால், ‘முதலில் தமிழ்நாட்டை மட்டுமாவது பிரித்துக் கொடு‘ என்று கேட்பார்கள் என்று சொல்லியிருக்கிறார்.

காமராசர் அளித்த பதில், நல்ல – யூகம் நிறைந்த வருங்காலத்தை எடுத்துக் காட்டக்கூடிய பதிலாகும்.

காமராசர் இப்படிச் சொன்னார் என்பதை ஏன் நான் அழுத்திச் சொல்லுகிறேன் என்றால் “அவருக்கே இது புரிந்தது“ என்பதை எடுத்துக்காட்டத்தான்.

இலட்சணம் புரிந்துவிட்டது அவருக்கு?

டில்லியில் உள்ளவர்கள் காமராசரை என்ன கேட்டிருப்பார்கள்? தேர்தலுக்கு முன்னால் மதுரையில் கூடிய அகில இந்தியக் காங்கிரசுக் கமிட்டிக் கூட்டத்தில், நாட்டுப் பிரிவினை கேட்கும் இயக்கத்தை எப்படி ஒழிப்பது, என்ற கேட்டபோது, காமராசரும் சுப்பிரமணியமும் அதைப்பற்றி உங்களுக்குக் கவலை வேண்டாம், நாங்களே அதைப் பார்த்து கொள்கிறோம் என்றனர், நேரு பெரியவர் அவர் இதையெல்லாம் கவனிக்க வேண்டாம் பெரிய பிரச்சினையான சீன எல்லைப் பிரச்சனையை அவர் கவனிக்கட்டும் தி.மு.க. எல்லைப் பிரச்சினையை நான் கவனித்து வருகிறேன்‘ என்றார் சுப்பிரமணியம்.

இவர்கள் பார்த்துக் கொள்ளும் இலட்சணம் புரிந்துவிட்டது அவர்களுக்கு! ‘இவர்களை நம்பித் தி.மு.கழகத்தை மட்டம் தட்டிவிடுவோம்‘ என்றார்கள் – அதை நம்பினோம். இப்போது தி.மு.கழகத்தவர் 7 பேர் பாராளுமன்றத்திற்கு வந்துவிட்டார்களே‘ என்று நேரு சோகத்துடன் வீற்றிருப்பார்!

எதிர்கால அரசியலுக்கு முன்மாதிரி!

‘தி.மு.க. பற்றி அலட்சியமாக இருந்துவிடக்கூடாது‘ என்று நிருபர்களிடம் கூறிய காமராசர்தான் முன்பு சொன்னார் – ‘கூட்டம்தான் தி.மு.கவுக்குச் சேரும், ஓட்டு எங்களுக்குத்தான்‘ என்று!

1957ஆம் ஆண்டில் 205 இடத்திற்கு 152 இடங்கள் காங்கிரசுக்குக் கிடைத்தது. அப்போது நமக்கு 15 இடங்களே கிடைத்தன. 17 இலட்சம் வாக்குகள் கிடைத்தன. இப்போது காங்கிரசு 139 இடங்களே பெற்றிருக்கிறது. நாம் 34 இலட்சம் வாக்குகள் பெற்று 50 இடங்களைப் பிடித்திருக்கிறோம். இந்தக் கணக்கு சாதாரணக் கணக்குத்தான். ஆனால் வரவிருக்கும் அரசியலுக்கு ஒரு முன்மாதிரியான சரியான கணக்காகும். இது உள்ளபடியே ‘ஏக இந்தியாவை‘ உடைக்கும்.

வருத்தமும் வேதனையும்

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் சில தினங்களுக்கு முன், பாராளுமன்றத்தில் நம்மைப் பற்றிப் பேசியிருக்கிறார். தி.மு.கழகம் பெற்றுள்ள வெற்றி மத்திய அரசின் எதேச்சாதிகாரப் போக்கைத்தான் காட்டுகிறது‘ என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். நமக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. நாம் வெற்றி பெற்றோம் என்பதைக் கேள்விப்பட்டவுட னேயே அங்கு இப்படிப் பேசப்படுகிறது. நமக்கு அவர் அறிமுகமில்லாதவர். சிலரைப் போல் வங்கத்திலிருந்து நமக்கு ஏதும் அழைப்பு வருவதில்லை. அதன் மூலம் அறிமுகம் ஆவதும் இல்லை. எனினும், அவர் கூறினார். தி.மு.கழக வெற்றி மத்திய அரசாங்கத்தின் எதேச்சாதிகாரப் போக்கைக் காட்டுகிறது. மாநில அரசுகளுக்கு அதிய அதிகாரமும் சலுகையும் தரவேண்டும் என்று. இது புத்திமதிதான், ஆனால், இந்தப் புத்திமதியையே திட்டமாக வைத்துக் கொண்டு செயல்படுவேன்‘ என்று கூறுகிறவர்கள் எதிர்பார்க்கும் பலனைவிடக் குறைவாகத்தான் பெறமுடியும்.

‘4 அணா வேண்டும், வேண்டும்‘ என்று கேட்டுக் கொண்டிருந்தால் இவ்வளவு நாளாகக் கேட்கிறானே என்று 2 அணா கொடுக்க சிபாரி செய்வார்கள். ஆனால், 4 அணா கேட்டுவிட்டு, சரி 3 அணா கொடு, 2 அணா இருந்தால் கொடு, அணாவது கொடு,இல்லையென்றால் இருப்பதையாவது கொடு என்றால் ஒன்றும் இல்லை, போ, என்பார்கள்.

ஏழு பேரைக் கண்டதும்!

தி.மு.கழகம் பெற்றுள்ள வெற்றியால் உடனடிப் பலனும் ஏற்படும் மூன்றாவது ஐந்தாண்டுத்திட்டத்தில் நிச்சயமாக சில புதிய சலுகைகள் கிடைக்கும். பாராளுமன்றத்தில் நம்முடைய தோழர்கள் ஏழுபேரைப் பார்க்கும்போது, நரு என்ன நினைப்பார்? ‘சேலம் இரும்ப எடுக்கவில்லை. அதனாலே இந்த ஏழுபேர் வந்து விட்டார்கள்( நெய்வேலி நிலக்கரி எடுக்கும் தொழில் துரிதமாக நடக்கவில்லை. அதில் மாநில அரசுக்குப் பங்கில்லை. அதனாலே இந்த ஏழுபேர்கள் வந்துவிட்டார்கள், தமிழ்நாட்டிற்கு ஆயிரம்கோடி ரூபாய்க்குத் திட்டம் கேட்டார்கள் – கொடுக்கவில்லை, அதனாலே இந்த ஏழு பேர் வந்து விட்டார்கள்( இப்படிப் பலவிதமாகவும் நினைத்துக் கொள்வார்.

இந்த ஏழு பேர் பேசினாலும் பேசாவிட்டாலும், இவர்களின் உருவத்தை அவர்கள் பார்ப்பதையே பேருரையாகக் கருதிக் கொள்வார்கள்.

ஏழுபேர், ஏதாவது இரகசிய ஒப்பந்தமோ?

நேரு, தன் முகவாய்க்கட்டையில் கையை வைத்துக் கொண்டு இவர்களைப் ‘பார்ப்பார். இளைஞராக இருக்கும் மனோகரனும், செழியனும், கல்லூரியை விட்டு இப்போதுதான் வெளிவந்தவர் போலிருக்கும் இராசாராமும், மற்ற தோழர்களும் இங்கே எப்படி வந்தார்கள்? என்று எண்ணுவார்கள், அவர்களுக்கு எப்படி இந்தப் பலம் வந்தது? என்று யோசிப்பார். காமராசரும் சுப்பிரமணியமும் தான் கூட்டவந்தார்களோ( ஒரு வேளை இவர்களுக்கும் அவர்களுக்கும் ஏதேனும் இரகசிய ஒப்பந்தம் இருக்குமோ என்று கூட ஐயப்படுவார்.

உரிமையும் உத்தியோகமும்!

பெங்களுரில் என்னைச் சந்தித்த ஒரு பத்திரிக்கை நிருபர், தென்னாட்டவருக்கு நல்ல உத்தியோகங்கள் கொடுத்தால் திருப்தியடைவீர்களா? என்று என்னைக் கேட்டார். இது எப்படி இருக்கிறது என்றால் எழுத்துப் பிழையை நீக்கி எழுத ஒரு புதிய பேனாவைத் கொடுத்து எழுதச் சொல்வது போலாகும்.

பிழையின்றி எழுதத் தெரியாதவருக்கு எழுதக் கற்றுக் கொடுக்க வேண்டுமே தவிர, புதிய பேனா கொடுத்துப் பயனில்லை?

அதைபோல உரிமை கேட்கும் நமக்கு உத்தியோகம் கொடுத்துத் திருப்தி செய்யப் பார்க்கிறார்கள்(

தென்னாட்டவருக்கு நல்ல உத்தியோகமும் கொடுக்கலாமா? என்று என்னைக் கேட்டால் கொடுங்கள் என்பேன். தாராளமாகக் கொடுக்கட்டும் – வரவேற்கிறேன். ஆனால், அதோடு நின்று விடுவீர்களா? என்று கேட்டால் – நிற்க மாட்டேன்.

இந்தியச் சுதந்திரப் போராட்டக் காலத்தில் சாப்ருவும் ஜெயகரும் இந்தியாவுக்கு, டொமினியன் அந்தஸ்து வழங்கினால் போதும் என்றார்கள். அந்த நேரத்தில் காந்தியாரைப் பார்த்து உங்கள் விருப்பம் என்ன? என்று கேட்டதற்குச் சுயராஜ்யம் தான் எனது இலட்சியம் அதை விடமாட்டேன் என்றார்.

‘டொமினியன்‘ அந்தஸ்துக்காகச் சாப்ருவும், ஜெயகரும் வேலை செய்தார்கள், பிரிட்டிஷாரும், டொமினியன் அந்தஸ்து வழங்குவதாக வாக்குறுதி அளித்தார்கள். ஆனால், காந்தியார் தமது போராட்டத்தை நிறுத்தவில்லை – ‘நான் கேட்பது சுயராஜ்யம் ‘டொமினியன்‘ என்பது அவர்களுக்குத் திருப்தியாக இருக்கலாம் எனக்கு எப்படி அதனால் திருப்தி ஏற்படும்? என்று கேட்டார்.

காந்தியாரைப் போன்றவன் – என்று என்னைக்கருத்தில் கொண்டு இதைச் சொல்லவில்லை. காந்தியார் அளவுக்கு நாம் தகுதியடைந்தவனல்ல.

என் சந்ததிக்கு நான் பாடுபடுகிறேன்!

ஆனால், காந்தியார் எப்படி சுயராஜ்ய இலட்சியத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தாரோ அதேபோல் திராவிட நாடு இலட்சியத்தில் எனக்கும் உறுதியான நம்பிக்கை இருக்கிறது.

என் வாதம் திறமையற்றதாக இருக்கலாம், அதில் வலிவு இல்லாமல் இருக்கலாம், ஆனால், அதில் அழுத்தம் திருத்தமான நம்பிக்கை இருக்கிறது. பெரிய அளவில் பேரம் பேசுவதற்கான அல்ல – திராவிட நாடு கேட்பது!

‘திராவிட நாடு பெற உன்னால் முடியுமா? என்று கேட்டால் என்னால் முடியாவிட்டால் என் தலைமுறையினரால் சாதிக்க முடியும்என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என் சந்ததிக்குப் பாடுபடுகிறேன் என்ற பெருமை எனக்கு இருக்கிறது. சாதிக்க முடியாது என்று கருதிக் கைவிட்டு ஓடும் அவசர அரசியல்வாதியல்ல நான்!

நாங்கள் சட்டமன்றத்திற்குச் செல்வது திராவிடநாடு விடுதலைக் குறிக்கோளுக்காக மட்டுந்தானா என்றால், இல்லை விலைவாசி உயர்வைக் குறைக்கப் போராடுவோம், வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கப் பாடுபடுவோம், காங்கிரசு எதேச்சாதிகாரத்தை வீழ்த்துவோம் என்கின்ற எண்ணத்திலேயும் தான் எங்களை அனுப்பியிருக்கிறார்கள்.

சட்ட மன்றத்தில் திராவிடநாடு பிரச்சனை பற்றிப் பேசுவது சாதத்துக்கு நெய் போன்றதாகும். எனவே, அது ஒன்ற மட்டுந்தான் என்பதல்ல எங்கள் பணி!

முரணாகப் பேசுகின்றனரே!

காஞ்சிபுரத்தில் அமைச்சர் சுப்பிரமணியம், ‘அண்ணாதுரை எனது நண்பர்தான், இருந்தாலும், நாட்டுப் பிரிவினையைக் கைவிடும்வரை அவரைச் சட்டமன்றத்திற்கு அனுப்பாதீர்கள், அவர் தோற்றால், பிரிவினைக் கட்சி போய்விடும்‘ என்று பேசினாராம்.

இப்போது காங்கிரசுக்காரர்கள் சொல்லுகிறார்கள், ‘தி.மு.கழகத்துக்குக் கிடைத்த வாக்குகள் நாட்டுப் பிரிவினைக்காக அளிக்கப்பட்ட வாக்குகள் அல்ல‘ என்று!

தேர்தலுக்கு முன்னே அவர்களே, ‘பிரிவினைக்காரர்கள் வருகிறார்கள், ஓட்டுப் போடாதீர்கள்‘ என்று கூறிவிட்டுப் பின்னர் தேர்தல் முடிந்துவிடும், ‘கிடைத்த வாக்குகள் பிரிவினைக்கான வாக்குகள் அல்ல‘ என்கிறார்கள்.

வந்துள்ள நமது சட்டமன்ற உறுப்பினர்களெல்லாம், சட்டமன்றத்திற்குள் சென்று வெளியே வரும் வரை திராவிட நாட்டைப் பற்றித்தான் பேசுவார்கள் என்பதல்ல. எங்களுடைய பேச்சம் மூச்சும் நாட்டு விடுதலை இலட்சியம்தான். என்றாலும் மக்களை வாட்டிவதைக்கும் பிரச்சினைகளையும் சட்டமன்றத்தில் இவர்கள் பேசுவார்கள்.

சட்டமன்றத்திற்குள் ஆர்வம் அதிகம் இருக்கும், ஆர்ப்பரிப்பு இருக்காது. கொள்கையில் உறுதி இருக்கும், ஆனால் தொகுதி நிலைமைப்பற்றிப் பேசத் தவறமாட்டார்கள். நாட்டுப் பிரச்சினை மட்டுமல்ல – வீட்டுப் பிரச்சினையைம் பேசத் தவறமாட்டார்கள்.

ஆவன செய்வது உறுதி!

சட்டமன்றம் கூடியதும் முதலில் பேசவேண்டிய பிரச்சினை விலைவாசி பற்றியதாக இருக்கம். கவர்னர் ஆற்றவிருக்கும் உரையில், இதற்கு ஏதாவது பரிகாரம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். விலைவாசி உயர்வைக் குறைக்க வழிமுறை எதுவும் அந்த உரையில் காட்டப்படவில்லையானால் கிளர்ச்சி மூலமாவது ஆவன செய்ய வேண்டும் என்றிருக்கிறோம்.

நமது என்.வி.நடராசன் பேசுகையில், ‘சட்டமன்றத்திற்குப் போகிறவர்கள் அங்கே போராடட்டும், நான் வெளியிலிருந்து போராடுவேன்‘ என்றார். கிளர்ச்சிக் காலத்தில் நமது சட்டமன்றமே சிறைச்சாலைதான்!

பெரியாரைப்போல், ‘என்ன கிளர்ச்சி நடத்தலாம்‘ என்று யோசித்து அறிவித்துப் பழகாதவன் நான், கிளர்ச்சியை நான் தேடி அலைவது கிடையாது, வந்த கிளர்ச்சியை விட்டவனுமல்ல!

ஆதரவும் எதிர்ப்பும்!

தமிழகத்திற்குப் பல சலுகைகள் மத்திய அரசாங்கத்தால் மறுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் சுட்டிக்காட்டிப் போராட வேண்டியுள்ளது. சென்ற தடவை நாங்கள் சட்டமன்றத்தில் இருந்தபோது மதுவிலக்குத் திட்டத்தை எதிர்த்தோமா?

தனக்கு ஓட்டுப் போட்டால் கள்ளுக்கடை திறப்பதாகக்கூட ஒரு காங்கிரசார் இந்தத் தேர்தலின் போது பேசியதாகக் கேள்விப்பட்டேன், ஆனால், நாங்கல், மதுவிலக்கு வெற்றி பெறப் பாடுபட்டிருக்கிறோம். அமைச்சர் பக்தவத்சலமே சட்டமன்றத்தில் சொல்லியிருக்கிறார். மதுவிலக்கிற்குத் தி.மு.கழகத்தின் ஒத்துழைப்பு கிடைக்கிறது என்று.

எனவே, மக்களைப் பாதிக்கும் எந்தப் பிரச்சினையாயிருந்தாலும் நமது தோழர்கள் சட்டமன்றத்தில் அச்சம் – தயை தாட்சண்யமின்றி விளைவைப் பற்றி எண்ணிப்பார்க்காமல் எதிர்ப்பார்கள். மக்களுக்கு நல்லதானால் ஆதரிப்பார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லாரும் நல்ல பெயரெடுக்கட்டும்!

நான் தோற்றுவிட்டது குறித்துப் பத்திரிக்கைகாரர்கள் எழுதும் போது, ‘சட்டமன்றத்தில் கழகத்தவர் ஒரு நல்ல தலைவரை இழந்துவிட்டார்கள்‘ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள் நான் போகாதது கூட அவ்வளவு கவலைத்தரத்தக்க நிகழ்ச்சியல்ல, நான் ஒருவன் மட்டும் சட்டமன்றத்திற்குப் போய் வேறு எவரும் போகாத நிலை ஏற்பட்டால், அப்போது மற்றோர் செய்யும் கேலியை என்னால் தாங்ககிக் கொள்ள முடியாது. இங்வே வெற்றி பெற்றிருந்தால் எனக்குத் துணையாக யாரும் கிடைக்க மாட்டார்கள். இவர்களில் ஒவ்வொருவரிடமும் நான் இருக்கிறேன்.

‘இந்த நேரத்தில் அவன் (அண்ணாதுரை) இல்லமல் போய்விட்டானே‘ என்று ஆளுங்கட்சியினர் எண்ணும்படி இவர்கள் நடந்து கொள்வார்களோ என்று யாரும் ஐயப்பட வேண்டாம். அப்படியில்லாமல் எல்லோரும் நல்ல பெயரெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

‘நிபந்தனை‘யை உணர்வீர்

ஐரோப்பாக் கண்டத்தில் இஸ்லாமியருக்கும் கிருத்தவருக்குமிடையே புனிதப் போர் நிகழ்ந்தது, ‘ஏசு பிறந்த ஜெருசலம் நகருக்குள் கிருத்துவர்கள் நுழையக் கூடாது‘ என்று இஸ்லாமியர் கூறியதாலேயே இந்தப் பயங்கரச் சண்டை நடந்தது.

இஸ்லாமியர்கட்குத் தலைமை வகித்துப் போர் நடத்தினார் சாவடின் மன்னன், ரிச்சர்டு என்பவன் கிருத்தவர்கட்குத் தலைமை தாங்கினான். ஒரு குறிப்பிட்ட நிபந்தனையின் மீது போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. ஜெருசலம்க நகருக்குள் போகும் உரிமை கிருத்தவர்கட்கு வழங்கப்பட்டது. எல்லாக் கிருத்தவர்களும் உள்ளே செல்லத் தயாரானார்கள். அந்த நேரத்தில் ஒரு நிபந்தனையை விதித்தான் சாவடின் மன்னன், அது என்ன நிபந்தனை என்றால், ‘கிருத்தவர்களின் தலைவரான ரிச்சர்டு மட்டும் உள்ளே வரக்கூடாது‘ என்பதுதான்.

அதேபோல், நான் வெளியே நிற்கிறேன். என் அணிவகுப்பு உள்ளே செல்கிறது, தலைவன் இல்லாது அணிவகுப்பு அமைக்க முடியும், ஆனால் அணிவகுப்பு இல்லாது தலைவனை அமைக்க முடியாது. என் தோல்வியைப் பற்றி வருந்துபவர்கட்கு நான் இதைத்தான் சொல்லிக் கொள்வோன்.

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

நான் சட்டமன்றத்திற்குச் செல்லாவிட்டாலும், என்னிடமுள்ள குணங்களில் நற்குணங்கள் அனைத்தும் நினைந்துள்ள – என்னிடமில்லாத சில நற்பண்புகளும் கொண்ட நாவலர் நெடுஞ்செழியன் தலைவராக உள்ளே சென்று அமரப்போகிறார். நல்ல சட்டமன்ற அனுபவமும் ஆற்றலும் மிக்க தம்பி கருணாநிதி துணைத் தலைவராகவும், நல்ல செயல் திறமைமிக்க தம்பி மதியழகன் செயலாளராகவும் அமரப் போகிறார்கள்.

நான் அடிக்கடி கேட்கும் கேள்வியையே இப்பொழுது கேட்க விரும்புகிறேன். ‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்‘

புனித புரிக்குச் செல்லும் இவர்கள், மாதாக்கோயில் மணியோசைக்கு மயங்காது, பொன்முலாம் பூசப்பட்ட ஜபமாலையின் உருட்டலுக்குத் தாள் பணியாது, கர்த்தரின் அருள் தனக்க மட்டுமே கிட்ட வேண்டும் என்று கருதாது பணிபுரிந்து நாட்டுக்கு வாங்கித் தருவார்கள் என்பதில்ஐயமில்லை.

வற்புறுத்தலுக்கு இசைந்தேன்

நான் டெல்லிக்குச் செல்வது குறித்து உண்மை நிலையை உங்களுக்குக் சொல்ல விரும்புகிறேன். நான் உண்மையில் சென்னையில் இருக்கத்தான் விரும்புகிறேன். ஆனால் எனது நண்பர்களெல்லாம் மிகவும் வற்புறுத்தினார்கள். டெல்லிக்குச் செல்லும் நமது தோழர்களுக்கு உறுதுணையாக இருக்கலாம் என்றும் திராவிட நாடு இலட்சியத்தை அங்கு எடுத்துச் சொல்ல வாய்ப்பு ஏற்படும் என்றும் தோழர்கள் என்னை அங்குச் செல்லப் பணித்தார்கள்.

வீட்டிலுள்ள வயதான பெரியொர்கள், தாங்கள் விரும்பாவிடினும், தங்களைச் சாய்வு நாற்காலியில் அமர வைத்துப் பெட்டியில் உள்ள ஜரிகைத் துணியைத் தங்கள் பேரன்மார்கள் அணிவிப்பதை அணிந்து கொள்வது போல, நான் எனது நண்பர் சொன்னதால் இதற்கு இசைந்தேன்.

என்ன காரணத்தாலோ நான் இப்போது டெல்லிக்குப் போவதும் பொருத்தமாகவே அமைந்திருக்கிறது. இப்போது டெல்லிக்குப் போவதைப் பற்றி நான் சில ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறேன். ஆனால், அன்று சொன்னதற்காக நான் இப்போது செல்லவில்லை. ஆனால்,அன்று சொன்ன இப்போது பொருத்தமாக அமைந்துவிட்டது என்பதற்காகவே அதை எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

செங்கோட்டையில் சந்திக்கிறோம்!

சட்டமன்றத்தில், நிதிநிலை அறிக்கையின் மீது நான் பேசிய போது, ‘நிதி அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் இங்கே இருந்து கொண்டு வடக்கிற்காக வாதாடுகிறார், இவர்இங்கே இருப்பதை விட வடக்கிற்கே போய் அங்கிருந்து கொண்டு தெற்கிற்காக வாதாடட்டும்‘ என்றேன். அதற்கு நிதியமைச்சர் பதிலளிக்கையில் வடக்கிற்கு என்னைப் போகச் சொல்ல வேண்டாம்‘ என்றார். உடனே – ‘நிதியமைச்சரை வடக்கே போகச் சொல்லக்கூடிய நேரத்தில், அங்கே போகும் போது நானும் அங்கே வருவதாகத்தான் இருக்கிறேன்‘ என்று சொன்னேன்.

இப்போது நான் டெல்லி மேல்சபைக்குப் போட்டியிடுவேன் என்பதை நினைத்து, அப்போது இப்படி நான் சொல்லவில்லை இருந்தாலும், இங்கே கடற்கரைக் கோட்டையிலே சந்தித்த நாங்கள் இனி செங்கோட்டையில் சந்திக்க இருக்கிறோம்.

உரிமைக்குரல் எதிரொலித்தே தீரும்!

மக்கள் சபையில் 7 பேரும், மாநிலங்கள் (மேல்) சபையில் நானும் நுழையும்போது எங்களை எந்தக் கண்ணோட்டத்தோடு பார்ப்பார்கள் என்பது தெரியும். சட்டமன்றத்தில் நுழையும்போது, பிறர் பார்த்த பார்வையிருக்காது – பகையுணர்ச்சியோடுதான் பார்ப்பார்கள்.

எனினும், வடபுலத்தார் நமது குரலை உணரும் வகையில் பணியாற்றுவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்களெல்லாம் இந்தக் கூட்டம் முடிந்து வீடு திரும்பும்போது அருகிலுள்ள ரிப்பன் கட்டிடத்தை (மாநகராட்சிக் கட்டிடம்) பார்த்துவிட்டுச் செல்லுங்கள். கடந்த சில ஆண்டுகளாக இந்த மாநகராட்சி நமது கையில் இருந்த வருவதால் வெளிநாடெல்லாம் நமது புகழ் பரவியிருக்கிறது. நம்மிடமுள்ள இந்த மாநகராட்சியை எப்படியும் கைப்பற்றிவிடக் காங்கிரசார் முயற்சி செய்து வருகின்றனர். அப்படிப்பட்ட பொறுப்பு நம்மிடமே வந்த சேர நாம் வெற்றியடைய வேண்டிய பணிகளை நீங்களெல்லாம் இன்றே கவனிக்கத் துவங்க வேண்டும்.

நம்மிடம் அதற்காகப் பணம் இல்லை. எனவே, பொருள் திரட்டுவதில், வாக்காளர்களைச் சந்திப்பதிலும் மாநகராட்சியிலி நாம் சாதித்துள்ள சாதனைகளை வீடுவீடாகச் சென்று விளக்கிச் சொல்வதிலும் ஒவ்வொருவரும் ஈடுபடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

(நம்நாடு - 19, 20, 22-3-1962)