அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


இரண்டு சர்க்கார்களுக்கிடையே சிக்குண்டு தவிக்கிறோம்!

வாலாசாபாத்துக்கு அடுத்த அவலூர் கிராமத்தில் கடந்த 7.5.60 மாலை தி.மு.க. சார்பில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குத் தோழர் கே. சீனிவாசன் தலைமை வகித்தார்.

செங்கற்பட்டு மாவட்டத் தி.மு.கழகத் துணைச் செயலாளர் ஜே.ஏ. வகாப், காஞ்சி சி.எஸ். பூஞ்சோலை, சி.வி. இராசகோபால், சி.வி.எம். அண்ணாமலை, ஏ.கே. கோவிந்தராசன். இரா. கோவிந்தசாமி, வா.கு. இரத்தினவேலு, மாணவி ஜோதி கண்ணம்மா ஆகியோர் கழகப் கொள்கைகளை விளக்கிப் பேசினர்.

இறுதியாக அண்ணா அவர்கள் பேச எழுந்ததும் அவலூர் வாலாசாபாத், உத்திரமேரூர், காவி தண்டலம் ஆகிய கிளைக் கழகங்களின் சார்பில் கைத்தறி ஆடைகளும், மலர்மாலைகளும் அவருக்கு அணிவிக்கப்பட்டன.

அண்ணா அவர்கள் பேசுகையில் குறிப்பிட்டதாவது –

இந்த ஊருக்கு நான் முதல் தடவையாக வருகிறேன். இங்குள்ள தோழர்கள் கழகத்தை ஓராண்டுக்கு முன் துவக்கி இடையில் ஒரு கூட்டத்தை நடத்தி மூன்றாவதாக என்னை அழைத்திருக்கிறார்கள்.

மக்கள் தொண்டு செய்வார்கள்

இம்மாதிரியான சிற்றூர்களில் கழகங்களைத் துவக்கி நடத்துவது எளிதல்ல. ஏனென்றால் இங்குள்ள மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான விவசாயம், வேறு பல தொழில் செய்து வருபவர்கள். அரசியலில் சுலபத்தில் அக்கறை ஏற்பட்டுவிடாது. மேலும் கட்சி அரசியல்களை ஆராய்ந்து பார்க்க நேரம் இருக்காது. நினைப்பு வராது, அப்படியிருந்தும் இங்குள்ள வாலிபர்கள் கழகத்தைத் துவக்கி நடத்துவது கண்டு மிக்க மகிழச்சி அடைகிறேன். அவர்களைப் பாராட்டுகிறேன்.

இவ்வூரிலுள்ள பெரியவர்கள் நமது பிள்ளைகள் கழகத்தில் சேருவதால் எங்குக் கெட்டுவிடுவார்களோ என்று எண்ண வேண்டாம். கழகத்தில் சேருவதால் துடிதுடிப்பு உள்ள வாலிபர்கள் அடக்க ஒடுக்கமுள்ளவராக மாறுவார்கள். நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்ல தொண்டு செய்வார்கள்.

நான் சுயமரியாதை இயக்கத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்னால சேர்ந்த பொழுது என் பாட்டியார் கவலை தெரிவித்தார்கள். அது எனக்கு நன்றாகக் கவனம் இருக்கிறது. ஆனால் உள்ளபடியே நான் என்ன கெட்டுவிட்டேன்? ரங்க ராட்டினத்திலே சுற்றுபவர்கள் தாங்கள் குதிரை மீது சவாரி செய்வதாக நினைப்பது வழக்கம். ஆனால் உண்மையில் அவர்கள் சுற்றுவதில்லை. அவர்களை வைத்துச் சுற்றுபவர்கள் வேறு. அப்படிச் சுற்றினாலும் சிறிது நேரம்தான். அதைப்போல் காங்கிரசு மேலிடம் இங்குள்ள காங்கிரசுக்காரர்களை இயக்குகின்றது. எனவே காங்கிரசின் ஊழல்களைப் பற்றி நாங்கள் பேசும்பொழுது அங்கு உள்ள காங்கிரசுக்காரர்கள் வருத்தப்படக்கூடாது.

எங்கும் நம்மைப் பற்றியே பேச்சு!

நாங்களே மந்திரியாகி விடுவோம் என்ற பயம் வேண்டாம். முதலமைச்சாராகக் காமராசர் இருக்கட்டும். யார் மந்திரியாக வந்தாலும் இருந்தாலும் ஆளக்கூடிய வல்லமையும், அதிகாரமும் இருக்கின்றதா என்பதே எங்கள் கேள்வி. எனக்கு மந்திரியாவதற்கு யோக்கியதை இல்லை. என்று உள்ளூர்க் காங்கிரசுக்காரர்களால் கூறமுடியாது. அவர்கள் முதலில் சொல்லுவார்கள், ஏன் யோக்கியதை இல்லை என்று. பிறகு சுற்றும் முற்றும் பார்த்து விட்டுக் காமராசர் ஆளும்பொழுது ஏன் அண்ணாதுரை ஆளக்கூடாது? என்று தான் கூறுவார்கள். சுப்பிரமணியம், கக்கன், லூர்தம்மாள் முதலியோர் மந்திரிகளாவதற்கு முன்னால் அவர்கள் யாரென்பதே பலருக்குத் தெரியாது. நெடுஞ்செழியனும், கருணாநிதியும், நானும் உங்களுக்கு முன்பே தெரிந்தவர்கள். காங்கிரசுக்காரர்கள் வீட்டில் உள்ள மாணவர்கள் தமிழ் படித்தால் நெடுஞ்செழியன் நடையா? சம்பத் பேச்சா? என்றெல்லாம் கேட்கிறார்கள். ஒவ்வொருவர் வீட்டிலும் எங்களைப் பற்றிய பேச்சு எழாத நேரமில்லை.

நாம் யாரென்பது தெரியாமலே வாழ்கிறோம். உதாரணமாக ஒருவர் தேங்காய் பறிக்க தென்னை மரம் ஏறும்பொழுது கட்டெறும்பு கடித்துக் கீழே விழுந்து மண்டையில் அடி ஏற்பட்டு மயங்கியநிலையில் இருக்கும்போது தன்தாய் வந்த நான் யார் தெரிகிறதா? என்று கேட்டால் குழம்பிய நிலையில் “கோடிவிட்டு அம்மாள்“ என்று கூறுவதுபோல் நாம் இருக்கின்றோம். நீங்கள் யாரென்று கேட்டால் படையாச்சி, பிள்ளை, செட்டியார், கோனார், நாடார், நாயக்கர் என்று கூறமுடியுமே ஒழிய நான் ‘தமிழன்‘ ‘திராவிடன்‘ என்று சொல்லுவதில்லை, எங்கள் வேலை அந்த மறதியைப் போக்குவதுதான், சாதிகள் இடைக்காலத்தில் கட்டி விடப்பட்டதே ஆதியில் இல்லை.

இரண்டாட்டில் ஊட்டிய குட்டி நாம்

ஓர் ஊரில் மூன்று பண்டாரங்கள் திண்ணை ஒன்றில் இரவைக் கழித்துக் கொண்டிருந்தார்கள். முதல் பண்டாரம் வீடு தீப்பற்றி எரிகிறது என்று இரண்டாம் பண்டாரத்திடம் சொன்னான். இரண்டாமவன் சொன்னான், “பரவாயில்லை படுத்து உறங்கு“ என்று, மூன்றாவது பண்டாரம் விழித்துக் கொண்டுதான் இருந்தான். அவன் வீடு பற்றி எரிகிறது என்று சொல்லுவானேன். வாய் வலிப்பானேன்? என்று வாளாவிருந்து விட்டான். அதைப்போல் முதல் பண்டாரம் நாங்கள் இரண்டாம் பண்டாரம் பொதுமக்கள், மூன்றாவது பண்டாரம் காங்கிரசுக்காரர்கள்.

நாங்கள் பேசுவதை அரசாங்க ஒற்றர் சுருக்கெழுத்து மூலம் எழுதுகிறார். இதனால் எங்களுக்கு இலாபமே தவிர நஷ்டம் இல்லை அதனால் நாங்கள் பொறுப்போடு, அளந்து, நல்லதை உண்மையைப் பேசுகிறோம். இப்பொழுது மாணவி கண்ணம்மாள் பேசியதைக் கேட்டீர்கள். அவர் பேச்சை நான் முன்பு சென்னையில் கேட்டேன். இப்பொழுது இரண்டாம் முறை. அவர்க பேசியதில் என்ன தவறு இருக்கிறது. தெரிந்ததைத் தெளிவாகப் பேசுகிறார். அப்படித் தவறாகப் பேச யாரையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

இரண்டு ஆட்டில் ஊட்டிய குட்டிபோல் நாம் சென்னை சர்க்காருக்கும், டெல்லி சர்க்காருக்குமிடையே சிக்குண்டு தவிக்கிறோம். எனவே நமக்குத் தனி திராவிடம் வேண்டும். எனவே நீங்கள் சிந்தித்து ஆவன செய்யுமாறு கூறி விடை பெறுகிறேன்.

(நம்நாடு - 30-5-60)