அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


ஜனநாயகமா? பணநாயகமா?

சென்னை 92வது வட்டத் தி.மு.க. சார்பில் கோடம்பாக்கம் எம்.ஜி.ஆர். திடலில் 4.12.61 அன்று, மாநகராட்சி உறுப்பினர் சா.கணேசனுக்கு அளிக்கப்பட்ட பாராட்டுப் பொதுக் கூட்டத்தில் அண்ணா அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு –

இந்த வட்டாரத்திலுள்ள தி.மு.க. தோழர்கள் ஏற்கனவே தேர்தல் நிதி அளித்தமைக்கும் இன்று ரூ.300 தந்தமைக்கும் எதிர்பாராத நிலையில் காஞ்சித் தொகுதிக்கு நிதி கொடுத்தமைக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்.

சென்னை மாவட்டம் தரவேண்டிய பங்குத் தொகை ரூ.25,000 செலுத்தப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் கைதட்டி விட்டதாலேயே மேலும் நான் கேட்கமாட்டேன் என்றோ, உங்கள் கடமை இத்துடன் முடிந்து விட்டதென்றோ கருதிவிடாதீர்கள். வரும் தேர்தலில், சென்னை நகரத் தொகுதிச் செலவுக்கு நீங்கள் தாராளமாகவும், ஏராளமாகவும் தரவேண்டுகிறேன்.

தேர்தலில் நிதி ரூ.25,000 அளித்தமைக்கும் அவைகளைச் சேர்க்க பெருமுயற்சியெடுத்து வேலை செய்து விடாமுயற்சியோடு அளித்த தலைமை நிலையப் பொருளாளார் அவர்களுக்கும் சென்னை மாவட்டச் செயலாளர் நீல நாராயணன் அவர்களுக்கும், பொருளாளர் கபாலி அவர்களுக்கும் மற்றும் வட்டச் செயலாளர்களுக்கும், ஏனைய நண்பர்களுக்கும் நான் நன்றி கூறிக் கொள்கிறேன்.

பொதுவாக இந்த நிதி பூர்த்தியானாலும் கூட நகரத்தில் உள்ள பல்வேறு தொகுதிகளில் நிறுத்தப்படும் அபேட்சகர்களுக்கு வெற்றிதரக்கூடிய வகையில் நீங்கள் அதிக நிதி தந்தாக வேண்டியிருக்கிறது. சென்னை மாவட்டம் ரூ.25,000 தந்த தனது பங்கை முடித்திருப்பதானது ஒரு அத்தியாயம் பூர்த்தியானதாகுமே தவிர முற்றுப்புள்ளி வைத்து விட்டதாகக் கருதக்கூடாது.

நம்பிக்கையை வீணாக்காதீர்!

ஒரு அத்தியாயம் முடிந்தது, மறு அத்தியாயம் தொடங்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். சென்னை நகரத்தைப் பொறுத்தவரையில் மாபெரும் வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறார்கள். குக்கிராமங்களில் கூட நம் தோழர்கள் நெஞ்சை நிமிர்த்தி இதனைக் காங்கிரஸ்காரர்களிடம் சொல்லுகிறார்கள். சென்னையைப் பிடித்துவிட்டோம் என்கிறார்கள். ஏனென்றால் தி.மு.கழகம் மாநகராட்சியைக் கைப்பற்றியுள்ளது. நான்கு மேயர்கள் தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். எனவே தமிழகம் சென்னையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாமல் இருக்கும் அளவில் பணியாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நேற்று சென்னைக் கடற்கரையில் கொட்டும் குளிரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் காத்திருந்து கருத்து விளக்கம் கேட்டார்கள். அதற்குப் பின்னால் தோம்பேட்டைக்குச் சென்றபோது அங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்து கொள்கைவிளக்கம் பெற்றனர். அடுத்து ஆயிரம் விளக்கப் பகுதியில் மதியழகன் தொகுதி உறப்பினர்கள் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்து இலட்சிய விளக்கம் பெற்றனர். தி.மு.கழகம் இப்படிப் பொதுமக்களிடத்தில் நெருங்கிப் பழகி அதிகத் தொடர்பும் உறவும் பாசமும் கொண்டுள்ள கட்சியாகும்.

உணரவில்லையே அவர்கள்!

தி.மு.கழகம் எந்தத் தொகுதியில் நின்றாலும் வெற்றி பெறும் என்று மற்றக் கட்சிகள் உணர்ந்திருந்தால், சிக்கல்கள் வளர்ந்திருக்காது. இன்று நாட்டிலே காங்கிரசுக்கு அடுத்ததாகச் சரியான எதிர்க்கட்சியாக உள்ளது தி.மு.க. ஒன்றுதான் என்பதை எவரும் ஒப்புக் கொள்வர். வேளைக்கு வேளை நித்தம் நித்தம் மக்களைக் கண்டு உறவாடுகிற பாசமும் நேசமும், பந்தமும் சொந்தமும் கொண்ட கட்சி தி.மு.கழகம் என்ற அரசியல் உண்மையை மற்றக் கட்சிகள் உணரவேண்டும். தமிழகம் மகிழத்தக்க வகையிலும், மற்றவர்கள் உணரத்தக்க வகையிலும் வெற்றி பெற்றுத்தர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

உரிமை என்ன உண்டு?

காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற உரிமை என்ன இருக்கிறது? நோயாளிக்கு 4 நாள் மருந்து தந்து காப்பாற்றிய டாக்டரை விருந்துக்கு வரவழைப்பது போல அரசியலில் அல்லல்களை, பிணிகளைத் தீர்த்தது தி.மு.க.தான் என்பதால், தி.மு.கழகத்தை மக்கள் வரவேற்கிறார்கள்.

நெசவாளர்களிடையே நெருக்கடி ஏற்பட்டு, கைத்தறித் துணிகள் பெரும் அளவில் தேங்கிவிட்ட நிலையில் நாங்கள் தேம்பிக்கிடந்தபோது தி.மு.கழகம் அல்லவா கைத்தறி ஆடைகளைத் தலையில் சுமந்து விற்று எங்கள் வாட்டத்தைப் போக்கியது? உங்களை எப்படி நாங்கள் மறக்க முடியும்? என்று கைத்தறியாளர்கள் கூறுகிறார்கள்.

அதுபோலவே நில உச்சவரம்பு என்ற ஓர் சட்டத்தைச் சூதாகவும் கபடமாகவும், சூழ்ச்சியாகவும் கொண்டு வந்தபோது, அதன் குட்டுக்களை வெப்பிடுத்திக் குறைகளை எடுத்துச் சொன்னது தி.மு.கழகம்தானே? ஆகவே உங்களுக்கத்தான் ஆதரவு என்று உழவர் பெருமக்கள் உள்ளன்போடு கூறுகிறார்கள்.

ஆதரவு உங்களுக்குத்தான்!

தமிழ்ப் புலவர்கள், இன்று தமிழ் நல்ல முறையிலே வளர்ச்சி பெற்று எங்கும் தமிழ் மணம் கமழக் காரணம் நீங்கள்தான். இந்தியை அழித்தொழித்துத் தமிழுக்குப் பெருமை தேடித்தந்தீர்கள். எனவே எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான் என்று கூறி வரவேற்கிறார்கள்.

அதுபோலவே, தொழிலாளர்கள் முதலாளித்துவத்தை ஒழித்துத் தொழிலாளர்களுக்கு நன்மை செய்யக் கூடியவர்கள் நீங்கள்தான் எனவே நாங்கள் உங்கள் பக்கம் என்கிறார்கள்.

நடுத்தரக் குடும்பத்தார் விலைவாசிக் கொடுமையைக் கண்டித்த பேசிவருகின்ற கட்சி நீங்கள்தான் எனவே எங்கள் வாக்கு உங்களுக்கே என்கிறார்கள்.

மாணவர்கள் நீங்கள் தான் இந்த நாட்டின் மாண்பினையே உயர்த்தினீர்கள் எனவே, எங்கள் ஆதரவு உங்களுக்குத் தான் என்கிறார்கள்.

(நம்நாடு - 3.1.62)