அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


காஞ்சி மணிமொழியார் பாராட்டு விழா!

1962 முதல் 1967 வரை சென்னைத் தியாகராயநகர் தொகுதியின் சார்பில் தமிழகச் சட்டமன்ற உறுப்பினராகத் திகழ்ந்த பெருந்தகையாளர் காஞ்சி மணிமொழியார் அவர்கள். அத்தொகுதி மக்களின் நன்மைக்காக அயராது ஆற்றிய அரும்பெரும் பணிகளைப் பாராட்டி மகிழ்வதற்காக, அத்தொகுதி மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் பொதுக்கூட்டம் 5.9.1967 அன்று, சென்னை வடபழனி சிங்காரவேலர் திடலில் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் நடைபெற்றது. வெள்ளம்போல் தமிழர் கூட்டம்-வீரம் கொள் கூட்டம், அங்கே பல்லாயிரக் கணக்கில் திரண்டு குழுமியிருந்தது. செம்மை சான்ற அப்பாராட்டு விழாவிற்குத் தி.மு.க.வின் அப்போதைய அமைப்புச் செயலாளரும், தற்போது பிற்பட்ட வகுப்புகள் நல அமைச்சராக இருப்பவரும் ஆகிய மாண்புமிகு திரு.என்.வி.நடராசன் அவர்கள் தலைமை தாங்கினார்.

அண்ணா பொன்னாடை போர்த்தினார்!

இறுதியில், அப்போதைய தமிழக முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்கள், மணிமொழியார் அவர்களுக்குப் பெருமகிழ்ச்சியுடன் பொன்னாடை போர்த்தி, மக்கள் மன்றத்தை மகிழ்ச்சிப் பெரு வெள்ளத்தில் ஆழ்த்திவிட்டு ஆற்றிய விரிவுரையில் சில பகுதிகள் பின்வருமாறு:-
“இங்கே சொற்பொழிவாற்றிய நண்பர்கள் அனைவரும், காஞ்சி மணிமொழியார் அவர்களுக்கு அறுபத்தெட்டு வயதாகிவிட்டது என்று குறிப்பிட்டபோது நம்மால் அதை எளிதில் நம்ப முடியவில்லை. மணிமொழியாருக்கா-அறுபத்தெட்டு வயதா-உண்மையாகவா என்றே வியப்புடன் கேட்கத் தோன்றுகிறது. அந்த அளவுக்குக்கட்டான உடலோடும், இளமைத் தோற்றத்தோடும் காட்சி அளிப்பவர் மணிமொழியார். அவரை விட எத்தனையோ ஆண்டுகள் இளையவர்களாக இருப்பவர்கள் கூட முதுமைத் தோற்றத்தோடு இருப்பதை நாம் காண்கிறோம். ஆனால், அவரோ அறுபத்தெட்டு என்கிற இந்த வயதிலே கூடக் கட்டிளங்காளை போல ஓடியாடிப் பணியாற்றுகிறார்-ஓயாமல் தொண்டு புரிகிறார். அவருடைய இந்த இளமை உள்ளமும்-தோற்றமும், நமக்கெல்லாம் மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கின்றன; பெருமையையும் பூரிப்பையும் தருகின்றன. என்றேனும் ஒருநாள், மணிமொழியார் அவர்களைத் தனியாகச் சந்தித்து, இத்துணை முதிர்ந்த வயதிலேயும் இவ்வளவு இளமைப் பொலிவுடன் அவர் காட்சி அளிப்பதன் இரகசியங்கள் என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு.

கனவு நனவாகும் வரை கழகப் பணிபுரிபவர்!
“ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக மணிமொழியார் தமிழகத்திற்கு எந்த வகையான அருந்தொண்டை ஆற்றியிருக்கிறாரோ, அதே தொண்டைத் தொடர்ந்து ஆற்றி, எந்தவிதமாக இலட்சிய நாட்டைக் காண வேண்டும் என்ற கனவு கண்டாரோ-அந்தக் கனவு-நனவாகும் வரை, அவர் இடைவிடாது பாடுபடவேண்டும் என்று அப்பெருமகனாரை நாம் பணிவுடன் வேண்டிக்கொள்வதுதான், அவருக்கு நாம் அளிக்கத்தக்க தலைசிறந்த பாராட்டாக இருக்க முடியும். அத்தகைய பாராட்டைத்தான் அவரும் விரும்புவார். எப்போதுமே அவர், ‘இயக்கம் தனக்காக என்ன செய்தது என்பதைப்பற்றிக் கவலைப்படாமல், இயக்கத்திற்காகத் தான் என்னென்ன செய்ய முடியும்’ என்பதைப் பற்றியே சிந்தக்கும் இயல்புடையவர்.

திராவிட முன்னேற்றக் கழகம் எந்தெந்த நேரங்களில் என்னென்ன கட்டளைகளை இட்டதோ, அவற்றையெல்லாம் தயங்காமல் உடனுக்குடன் நிறைவேற்றி வைத்தவர் மணிமொழியார்.

“தடியடி படுவதுதான் தமிழ் காக்கும் முறை என்றால், தடியடி படத்தயாரானார் அவர்.

காடுமேடு சுற்றிப் பட்டி தொட்டியெல்லாம் சென்று பிரசாரம் செய்வதுதான் தமிழின் பெருமையை உணரச்செய்யும் வழி என்றால், அப்படிப்பட்ட கடுமையான பிரசாரத்தைச் செய்யத் துள்ளியெழுந்து முன் வந்தார்.

“ஏடுகளை வெளியிடுவதுதான் இன்தமிழை வளர்க்கும் பணி” என்றால், அதற்கான ஏடுகளை நடத்தியிருக்கிறார்.

“தமிழ்ப் பாதுகாப்புப் பணிக்காக மணிமொழியார் நூல்கள் பல வெளியிட்டிருக்கிறார். ஊர்வலங்கள் பல நடத்தியிருக்கிறார்; பொதுக்கூட்டங்கள் பல கூட்டியிருக்கிறார்; மாநாடுகள் பல நடத்தியிருக்கிறார்.

அரும்பணியால் அமைந்ததே அரசு!
சாதாரண மக்களின் நன்மைக்காக மிகச் சாதாரண மக்கள் சிலரால் துவக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம், இன்றைய தினம் அரசாளும் பொறுப்பை ஏற்றிருக்கிறது என்றால், அது மணிமொழியாரும், அவர் போன்றோர் பலரும் ஆற்றிய அரும்பணியின் விளைவு என்பதை நான் பெருமையோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

“சிட்டுக் குருவிகள் வல்லூறைப்போல் கொத்தும் திறனற்றவை; கூர்மையான நகமற்றவை; ஆற்றலில் மிகமிகக் குறைந்தவை; ஆனால் ஒரு காலம் வரும். அப்போது சிட்டுக்குருவிகள் வல்லூறை வெல்லும்; பாமரமக்கள் பாராள்வார்கள்’ என்று இஸ்லாமியப் பெருங்கவிஞர் இக்பால், இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே பாடியுள்ளார்.

“இக்பால் அன்று பாடியதற்கு இணங்க இன்று தமிழகத்தில் சிட்டுக் குருவிகள் வல்லூறை வென்றுவிட்டன; பாமரமக்கள் பாராளத் தொடங்கிவிட்டார்கள்; தி.மு.க.ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்துவிட்டது.

“சிட்டுக்குருவிகள் இன்று வல்லூறை வென்றிருக்கின்றன என்றால், அதற்கு மணி மொழியார் போன்றவர்களின் தளராத தொண்டே தலையாய காரணம் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது; மறந்துவிடவும் முடியாது.

சிட்டுக்குருவிகள் வல்லூறை வென்றன!
“ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்னாலேயே மணிமொழியார் அவர்கள், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டது பற்றி நண்பர்கள் பலர் இங்கே பெருமையோடு குறிப்பிட்டார்கள். நம்முடைய இயக்கம் இப்போது இருப்பதைப் போல ஓங்கி வளர்ந்திராத காலம் அது. மிகச் சிலரே நம்மை ஆதரித்து வந்த காலம். அத்தகைய காலத்தில் மணி மொழியார் அவர்கள் அளவற்ற துணிச்சலுடன் நண்பர்கள் சிலரை மட்டும் துணைக்கு வைத்துக்கொண்டு, இந்தி எதிர்ப்பு ஊர்வலங்களையும், பொதுக்கூட்டங்களையும் நடத்தி, தமிழ் மக்களுக்கு உற்சாகத்தையும் உணர்ச்சியையும் ஊட்டியவர். அந்தக் காலத்தில் அவர் ஊர்வலங்களை நடத்தியபோது, தமிழ் என்று ஒருவர் குரல் எழுப்பினால், வாழ்க என்று பலர் பதில் குரல் எழுப்புவார்கள். ஆனால், ஒரே ஒரு குரல் மட்டும் கணீர் என்ற முறையில்-தெள்ளத் தெளிவாக மணியோசை போலக்கேட்கும். அந்தக் கம்பீரக்குரல் வேறு யாருடையதும் அல்ல. மணிமொழியார் அவருடையதுதான். எப்படியெல்லாம் மணிமொழியார் அந்தக் காலத்தில் பணியாற்ற வேண்டியிருந்தது என்பதை எடுத்துக்காட்டவே இதனைக் குறிப்பிடுகிறேன். இப்படியெல்லாம் அந்தக் காலத்தில் அவர் அளவற்ற ஆர்வத்துடன் ஆற்றிய தமிழ்ப் பாதுகாப்புப் பணியை இப்போது நினைத்தாலும் எனக்குப் பெருமகிழ்ச்சி ஏற்படுகிறது.

மணிமொழியார் யாராலும் மறக்க முடியாதவர்!

“மணிமொழியார் அவர்களே, நீங்களும் உங்களைப் போன்றவர்களும் ஆற்றிய அரும் பணிகள் விளைவாக, உங்கள் போன்றோரின் சார்பில், உங்களுடைய அடையாளச் சின்னங்களைப் போல், உங்களுடைய இளமை உருவங்களைப் போல் நாங்கள் எட்டு பேர் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருக்கிறோம். நாங்கள் நாட்டு மக்களின் கேட்டினைப் போக்கவல்ல நற்செயல்களில் ஈடுபடும்போது எங்களைத் தட்டிக் கொடுங்கள். நாங்கள் எப்போதேனும் தவறுகள் செய்தால் எங்களைத் தடுத்து நிறுத்து“கள். எங்களுக்கு உற்சாகம் தேவைப்படும்போது உற்சாகத்தை ஊட்டுங்கள்; ஆலோசனைகள் தேவைப்படும்போது ஆலோசனைகளைத் தாருங்கள்; நீண்ட பொது வாழ்வும், முதிர்ந்த அனுபவமும் படைத்த தங்களிடம், தங்கள் பாராட்டு விழா நடைபெறுகிற இந்த நேரத்தில் இந்த வேண்டுகோளைத்தான் நான் விடுக்க விரும்புகிறேன். தாங்கள் எங்களுக்கு வழிகாட்டியாக விளங்குங்கள்.”

தேநீர் விருந்தில் என்.வி.என்.
அறிஞர் அண்ணா அவர்களின் இந்த அரிய பாராட்டுரையுடன் முடிவுற்ற பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு முன்னால் வடபழனி நாவலர் நெடுஞ்செழியன் மன்றத் தலைவர் திரு.இரா.சங்கரலிங்கம் அவர்களால், விழாவிற் கலந்துகொண்ட பெருமக்கள்-தி.மு.க.பிரமுகர்கள்-மணிமொழியார் அவர்களின் நீண்ட கால நண்பர்கள் ஆகிய அனைவருக்கும் பெரிய அளவில் தேநீர் விருந்து ஒன்று அளிக்கப்பட்டது. அவ்விருந்திற்கும் திரு.என்.வி.நடராசன் அவர்கள் தலைமை தாங்கி அரியதோர் உரையாற்றினார்.