அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


கேலிக்கூத்து – கண்துடைப்பு – எரிச்சல் தருவது!

சட்டமன்றத்தில் நிலவுரிமை வரம்பு மசோதாமீது அண்ணா ஆய்வுரை.

சட்டமன்றத்தில், நில உச்சவரம்பு மசோதாமீது அண்ணா அவர்கள் ஆற்றிய உரையின் முழு விவரமாவது.

“நிலத்திற்கு உச்சவரம்பு கட்டுவது என்ற இந்தத் திட்டம் பல ஆண்டுகளாக நமது நாட்டு மக்களுக்குத் தரப்பட்டு வந்த தேர்தல் வாக்குறுதி என்று அதனை எடுத்துக் கொள்ளலாம்.

நாட்டிற்குத் தேவையான அந்த நல்ல திட்டத்தை முற்போக்குக் கருத்துப் படைத்த எல்லாக் கட்சிகளுமே வரவேற்று, அதன் மூலமாகச் சமுதாயத்திலுள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஓரளவிற்குக் குறையலாம் என்றும், அதே நேரத்தில் விவசாயத்தை வளரச் செய்யத்தக்க விதத்தில் நிலைமையை மாற்றியமைக்கலாம் என்றும் நம்பிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் தோன்றுயிருக்கிற இந்த மசோதா சட்டமாக்கப்படுவதற்கான நிலை உருவாக்கியிருக்கிற இந்த மசோதா சட்டமாக்கப்படுவதற்கான நிலை உருவாகியிருக்கிற நேரத்தில் நான் அமைச்சரவைக்கு எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

மக்களின் ஏமாற்றம்

நாட்டு மக்கள் இந்த விஷயத்தில் எவ்வளவு அக்கறையற்றிருக்கி றார்கள் என்பதையும், ஒரு புரட்சிகரமான சட்டம் வரப்போகிறது என்று எண்ணிக் கொண்டிருந்தவர்கள் வரப்போகிற சட்டம் உண்மையிலேயே நாட்டு நிலைமையைத் திருத்தியமைக்கத்தக்க வகையில் அமையவில்லை என்று ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள் என்பதையும் எடுத்துச் சொல்ல ஆசைப்படுகிறேன்.

பலன் என்ன கிடைக்குமா?
உள்ளபடி, நிலத்திற்கு உச்சவரம்பு கட்டுவது எந்த நோக்கத்திற்காக என்பதிலே-அடிப்படையிலே கட்சிகளுக்குள் கருத்து வேற்றுமைகள் இருக்கின்றன என்றாலும், ஆளும் கட்சியினர் இந்த அடிப்படை விஷயத்தில்கூட தங்கள் கருத்துக்களை அடிக்கடி மாற்றிக்கொண்டு வந்திருக்கிறார்கள். சில வேளைகளில் நிலத்திற்கு உச்ச வரம்பு கட்டுவது உற்பத்தியைப் பெருக்குகிற எண்ணத்தோடு என்று வாதாடியிருக்கிறார்கள். சில நேரங்களில்-உச்சவரம்பு கட்டுவது பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் குறைப்பதற்காக என்று எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.

இப்பொழுது பொறுக்குக் குழுவிற்குச் சென்று ஈளைகட்டி இளைத்துத் திரும்பி வந்திருக்கிறபோது அவர்கள் “The committee decided that it should be amplified bringing out clearty that the legislation was in pursuance of the Directive principles of State Policy enumerated in clause 3© of article 39 of the constitution” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ‘அரசியல் சட்டத்தில் இருக்கிற 39ஆவது பிரிவின் அடிப்படையில்தான் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் இந்தச் சட்டத்தில் அவர்கள் அளித்திருக்கிற பல விதிவிலக்குகளுள், இந்தச் சபையில் அவர்கள், தங்களது கருத்தைப் பலமுறை மாற்றினாலும் சட்டத்தில் குறிப்பிட்டிருக்கிற 39ஆவது பிரிவை வெற்றிகரமாக நிறைவேற்றி வைப்பதற்கு ஏற்ற வகையில் அது அமையவில்லையென்று நான் பணிவன்புடன் அமைச்சரவைக்கு எடுத்துச் சொல்ல ஆசைப்படுகிறேன். உள்ளபடி ஒரு புரட்சிகரமான முறையில் ஒரு சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால் அது எவ்வளவுக்கு எவ்வளவு விரைவாக நிறைவேற்றப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவுதான் அதில் பலன் கிடைக்க முடியும்.

சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்திக் கொண்டனர்

ஆனால் இந்தச் சட்டம், கடந்த 15 ஆண்டுகளாக ‘வரப்போகிறது வரப்போகிறது‘ என்று சொல்லப்பட்டு வந்து இன்றைய தினம் அத்துறைக்கு அமைச்சராக அமர்ந்திருக்கின்ற கனம் மாணிக்கவேலர் அவர்கள் எதிர்த் தரப்பிலிருந்து, இப்படி ஒரு சட்டம் வரப்போகிறதா? என்று அவர்களே கேலி செய்து பேசிய அந்தக் காலத்திலிருந்து ‘அதே சட்டத்தை இதோ கொண்டு வந்திருக்கிறோம்‘ என்று சொல்கிற அளவு பலர் தங்கள் ‘அரசியல் அவதாரங்க‘களை மாற்றிக் கொள்ளும் அளவு அவ்வளவுக் காலம் அளிக்கப்பட்டிருக்கிறது. நான் ‘அவதாரங்‘கள் என்று செர்லவ்தால் அவரைக் கடவுளின் நிலைக்கு உயர்த்திவிட்டதாகக் கருத வேண்டாம். கேலிப் பொருள் என்றம் நினைக்கவேண்டாம். அவ்வளவுகாலம் பிடித்திருக்கிறது‘ என்று தான் குறிப்பிட விரும்புகிறேன்.

இவ்வளவு காலம் பிடித்திருப்பதால், நிலச் சொந்தக்காரர்கள், இந்தச் சட்டம் வந்தால் தங்களைப் பாதிக்காமல் இருக்க வேண்டுமென்பதற் காகப் பல்வேறு வகையில் நிலத்தைப் பிரித்து எழுதிக் கொண்டார்கள் என்பதை ஒளிவு மறைவில்லாமல் அமைச்சர் அவர்களே இந்த மன்றத்தில் பலமுறை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

சட்டத்தில் உள்ள ஓட்டை

மற்ற எல்லா அமைச்சர்களையும்விட கனம் மாணிக்கவேலர் அவர்களிடத்தில் நமக்குப் பெரிய மதிப்பு இருப்பதற்குக் காரணம் அவர் உள்ளொன்று வைத்துப் புறமொன்று சொல்லக்கூடிய பெரிய அரசியல்வாதியாக தன்னைக் கருதிக் கொள்ளாமல், ‘ஆமாம்‘ நிலத்தைப் பிரித்துக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எப்படியும் நிலத்தைப் பிரிக்க வண்டும் என்பதுதானே நமது நோக்கம்.

அதனால் நமக்கென்ன? என்ற அளவில் வாதாடியிருக்கிறார்கள். இவ்வாறு பிரித்துக் கொள்வதில் நம்முடைய நோக்கம் ஈடேறாது. அதே நேரத்தில், இதன் மூலம் எந்த விதமான பயனும் ஏற்படப் போவதில்லை என்பதை யாரும் மறைக்க முடியாது. அவர்கள் தாங்களாகவே பிரித்துக் கொண்டார்கள் என்றால் – சட்டம் வந்து, அதிகப்படியான நிலங்களைச் சர்க்கார் தங்களிடமிருந்து வாங்கிக் கொள்வார்கள், அதனால் பலவிதமான சங்கடங்கள் ஏற்படும், அதிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்தான் பரித்துக் கொடுத்திருக்கிறார்கள். சட்டத்திலுள்ள ஓட்டையைப் பயன்படுத்தித் தப்பித்துக் கொ்ண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

ஓர் அங்கத்தினர் அவர்கள் குறி்ப்பிட்டார்கள் – ‘மடாதிபதிகள் கையில் நிலங்கள் இருந்தாலும், தர்ம ஸ்தாபனங்களிடம் இருந்தாலும், அவர்களா நேரடியாக வந்த உழப்போகிறார்கள்? உழவர்கள் இறங்கித்தானே வேலை செய்யப்போகிறார்கள்? ஆதலால் இதில் தவறொன்றுமில்லை‘ என்று.

விசித்திரமான வாதம்

அவ்வாறு எடுத்துச் சொல்வதை ஓரளவுக்கு விரிவாகப் பரிசீலனை செய்து பார்த்தால், நாட்டில் திருடுகின்றவர்கள் திருடிய பொருளை இந்த நாட்டிலேதானே செலவு செய்யப்போகிறார்கள், அமெரிக்காவுக்கோ அல்லது ஆஸ்திரேலியாவுக்கோ கொண்டு போய்ச் செலவு செய்யப் போவதில்லை. முத்தன் வீட்டுப் பொருள் முனியன் வீட்டுக்குப் போகிறது. முனியன் வீட்டுப் பொருள் சின்னான் வீட்டுக்குப் போகிறது, ஆகவே இது களவு அல்ல, ஓர் இடத்திலிருந்த மற்றோர் இடத்திற்கு மாற்றி வைப்பதுதான்‘ என்று நல்ல வேளையாக யாரும் வழக்குமன்றத்தில் வாதாட முன்வரமாட்டார்கள். அந்த அளவில்தான் கனம் அங்கத்தினர் அவர்கள் கூறிய விசித்திரமான வாதத்தைக் கூர்மையாகக் கேட்டுக் கொண்டிருந்தோம்.

மிச்சத்திற்கு வரம்பா?

இப்போது இருக்கின்ற பிரச்சனை, உச்சவரம்புச் சட்டத்தைக் கொண்டு வருவதால் என்ன பலன் ஏற்படும் என்பதை நாட்டு மக்களுக்கு அறிவிக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதுதான். ஒரு சட்டத்தைக் கொண்டுவரும்போது, அதன் மூலம் நாம் என்னவெல்லாம் பலன்களை எதிர்பார்க்கிறோம் என்பதை, நாம் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். அந்த முறையில் சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால் விதவிலக்குகளை எல்லாம் நீக்கிவிட்டு, மீதி இருப்பது என்ன என்று பார்க்கும்போது, முன்பு நான் ஒருமுறை சட்டமன்றத்தில் குறிப்பிட்டதை இப்போது நினைவூட்ட விரும்புகிறேன். இது உச்சவரம்பு மசோதா அல்ல, மிச்சமிருப்பதற்கு வரம்பு காட்டும் மசோதா என்பது மட்டுமல்ல, இதன் மூலம் பாதிக்கப்படுகிற ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு அடைக்கலம் அளிக்கும்-அபயம் அளிக்கும் மசோதா என்றுதான் நான் நம்புகிறேன்.

கேலிக்கூத்து – கண்துடைப்பு(

உலகத்தின் முற்போக்கான நாடுகளை எடுத்துக் கொண்டால், இம் மாதிரியான சட்டத்தை் ககொண்டு வருகிற நேரத்தில், ஒரே இரவில் சிந்தித்து, திடீரென்று கொண்டு வந்து, நில உடைமைகள் கைமாறிப் போகாமால், அவைகளைச் சமுதாயத்திற்குக் கொண்டு வருகின்ற நிலையில் அவசரமாக – தீவிரமான அடிப்படையில் நிலையில் சட்டங்களைக் கொண்டு வந்த நிறைவேற்றுகிறார்கள்.

நாம் இந்தச் சட்டத்தைப் பற்றி 15, 16 ஆண்டுகளாகப் பேசிக் கொண்டு வந்திருக்கின்றோம். ‘உழவர்களுக்கு நிலம் சொந்தமாக்கப்படும்‘ என்று உரத்த குரலில் பேசியிருக்கிறோம்‘. இப்போது சட்டத்தை நிறைவேற்றி பின்னால், எந்த அளவுக்கு அவர்களுக்கு நிலம் கிடைக்கும்-எந்த அளவுக்கு நிலைமில்லாதவர்களுக்கு நிலம் தரப்படும் – எந்த அளவுக்கு நிலங்கள் மீதமாக அரசாங்கத்தின் ‘கை்கு வந்து சேரும் என்பதைக் கணக்கெடுத்துப் பார்க்கின்ற நேரத்தில், இது ஒரு கேலிக் கூத்தாகவும், ஒரு கண்துடைப்பதாகவும், எரிச்சல் தரக்ககூடியதாகவும், ஏமாற்றம் அளிப்பதாகவும் இருக்கிறதே தவி, என்ன பலனை இதன் மூலம் இந்த நாட்டு மக்கள் பெறப்போகிறார்கள்? பெறுவதற்கு ஒன்றுமில்லை. ஆகையினால்தான், நாட்டு மக்களிடத்தில் இதைப் பற்றிய ஒரு பரபரப்பு உணர்ச்சியில்லை.

பரபரப்பில்லாத அரங்கேற்றம்

முற்போக்கான நாடுகளில், இம்மாதிரி நிலங்களை உடைமையாகக் கூடிய சட்டங்கள் வருமபோது அந்த நாட்டில் இருக்கின்ற – அந்த நாட்டு மக்களுக்கு இருக்கின்ற பரபரப்பைப்போல் நாம் இந்த நாட்டில் – இந்த நாட்டு மக்களிடத்தில் இதைப்பற்றிய ஒரு பரபரப்பு உணர்ச்சியில்லை.

முற்போக்கான நாடுகளில், இம்மாதிரி நிலங்களை உடைமையாக்கக் கூடிய சட்டங்கள் வரும்போது அந்த நாட்டில் இருக்கின்ற –அந்த நாட்டு மக்களுக்கு இருக்கின்ற பரபரப்பைப்போல் நாம் இந்த நாட்டில்-இந்த நாட்டு மக்களிடத்தில் பார்க்க முடியவில்லை.

நிலங்களுக்கு உச்சவரம்பு கட்டவேண்டும் என்று எகிப்து நாட்டில், தலைவர் நாசர் அறிவித்தபோது – எண்ணற்ற மக்களுக்கு நிலம் கிடைக்கப்போகிறது என்ற மகிழ்ச்சியில் – அந்த நாட்டு மக்கள் தேர் திருவிழா போன்று அன்றைய தினத்தைக் கொண்டாடினார்கள் என்பதை நாம் பத்திரிகை வாயிலாகப் பார்க்கின்றோம்.

இம்மாதிரியான சட்டங்கள் உலகத்திலுள்ள முற்போக்கான நாடுகளில் எல்லாம் வரும்போது அங்குள்ள நாட்டு மக்கள் எல்லாம் வாழ்த்தி வரவேற்கும்போது, இம்மாதிரியான ஒரு சட்டம்-ஒரு புரட்சி கரமான சட்டம் நமது நாட்டில் கொண்டு வருகின்ற நேரத்தில் உப்புச் சப்பற்ற நிலைமை, அன்பும்அக்கறையும் இல்லாத நிலைமை இருப்பதற்கு என்ன காரணம்? இதற்குக் காரணம் எல்லாம் இந்த விதிவிலக்குகள்தான்(

கட்சிக் கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது

‘மடாலயங்களுக்குக் கொடுத்ததுகூட நியாயம்தான் ஆனால், சர்க்காரை ஆலைகளுக்கு விதிவிலக்கு கொடுத்ததைப் பற்றி கனம் அமைச்சர் அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்‘ என்று கனம் ஆளும் கட்சி அங்கத்தினர் ஒருவர் கேட்டுக் கொண்டார். எதிர்த்தரப்பு அங்கத்தினர்களுக்கு வேண்டுமானால் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் ஆளும் கட்சி அங்கத்தினர்களுக்குள்ளேயே வேறுபட்ட கருத்துகள், காரணமென்ன? தங்கள் கட்சிகளில் கூட்டங்களில் இதைப்பற்றி விரிவாக விவாதிக்காமல் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதா? இந்தே வேறுபாட்டுக்கு என்ன காரணம்? உண்மையிலேயே இதை ஒரு விசித்திரமான நிலைமையாக நான் கருதுகிறேன். இதில் இருக்கின்ற ஓட்டைகளை எடுத்துக் காண்பிக்கும்போது, அதை வெறும் கட்சிக் கண்ணோட்டத்தோடு மட்டும்பார்க்க வேண்டாம் என்று அமைச்சரவையைக் கேட்டுக் கொள்கிறேன்.

‘சர்க்கரை ஆலைகளுக்கு விதிவிலக்குக் கொடுப்பது சரியல்ல‘ என்று ஆளும் கட்சியைச் சேர்ந்த கனம் அங்கத்தினர் கந்தசாமி (முதலியார்) அவர்களும், ‘மடாலயங்களுக்கு விதிவிலக்கு அளித்தது மன்னிக்க முடியாதது‘ என்று தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஆளும் கட்சியைச் சார்ந்த கனம் அங்கத்தினர் ஒருவரும் குறிப்பிட்டார்கள்.

நிலைமையை உணரட்டும்

இதிலிருக்கின்ற ஓட்டை உடைசல்களைச் சுட்டிக் காட்டும்போது, கலை உலகத்தைப் பற்றிச் சற்றுப் பேசிவிட்டால் எங்களை ஏதோ குட்டுவது போல் இருக்கும் என்ற எண்ணிக் கொண்டிருக்கின்ற கனம் அங்கத்தினர் அவர்கள், உண்மையிலேயே துணிவு இருந்தால்-தைரியம் இருந்தால், கலையைப் பொதுவுடைமையாக்குவதற்குத் தக்கதொரு திட்டம் தரப்பட்டால் அதை முதலில் வரவேற்கக் கூடியவர்கள்- ஆதரிக்கக் கூடியவர்கள் எங்கள் தரப்பில்தான் இருப்பர் என்பதை வேறு பிரச்சனைகளில் எல்லாம் எங்களுக்கு அக்கறையில்லை என்று ஏதோ கலையைப் பற்றிப் பேசி எங்களை ஆத்திரமூட்டிவிடலாம் என்று நினைத்துப் பேசுகின்றவர்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இலாபத்தைக் கலையுலகில் கட்டுப்படுத்த வேண்டும், அவ்விதம் கட்டுப்படுத்தாத இந்தச் சர்க்கார் மடாலயங்களில் போய் அவர்களது சொத்தைக் கட்டுப்படுத்துவது என்பது எவ்வளவுக்குப் பொருந்தும் என்று கேட்பவர்கள்...

திரு.எம்.ஆர்.கந்தசாமி (முதலியார்) “நான் சொன்னது, கலையுலகைக் கட்டுப்படுத்தாமல், மடாலயத்தை மட்டும் கட்டுப்படுத்துவது சரியல்ல‘ என்றும், ‘கலை உலகிற்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்‘ என்றும்தான் நான் குறிப்பிட்டேன்“.

அண்ணா – இம்மாதிரியான விதிவிலக்குகள் கொடுத்திருப்பதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஆகவே, இந்தச் சட்டம் நல்ல விதத்தில் திருத்தியமைக்கப்ட வேண்டுமானால், விதிவிலக்கு அளித்திருப்பதை நிறுத்தி – அவ்விதம் யாராவது விதிவிலக்கு வேண்டும் என்று கேட்டாலும், அதை இந்த மன்றத்தில் கொண்டுவந்து விவாதிப்பதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து அதன்பின், யார் யாருக்கு என்று விதிவிலக்குக் கொடுத்திருந்தால்கூட ஓரளவு முறையாக இருந்திருக்கக்கூடம்.

யாருக்குத் திருப்தி அளிக்கும்?

ஆனால், முதலில் கொண்டுவரப்பட்ட இந்த மசோதா பொறுக்குக் குழுவுக்குப் போய் வந்த பிறகு, எப்படியிருக்கிறது? என்றால் – ‘மாமனால் வீட்டுக்குப் போய் இருந்து உடல் தேறி வரலாம்‘ என்று போன மருமகன், அங்குப் போய் வறுமையாக இருந்து, இருந்த வலிமையையும் இழந்துவிட்டுத் திரும்பி வந்ததுபோல்-பொறுக்குக் குழுவுக்குப் போய்விட்டு திரும்பியும் பல ஓட்டை உடைசல்களோடு திரும்பி வந்திருக்கின்றன. மசோதா யாருக்குமே திருப்தி அளிக்காது என்று நான் கருதுகிறேன்.

நம்முடைய அமைச்சர் அவர்கள், திருப்தியையே அல்லது அதிப்தியையோ, முகாபாவத்தில் காண்பிக்கக் கூடிய அளவுக்குப் பயிற்சி இல்லாதவர் என்றாலும் இது அவர்களுடைய நிலைய என்ன என்பது அவர்களுடைய புன்னகையிலிருந்து ஓரளவுக்கு தெரிய வருகிறது.

மிச்சம் என்ன இருக்கிறது?

மேய்ச்சல் காடுகளுக்கு விதிவிலக்கு அளித்து, தோப்பு, தோட்டங்கள் முதலியவற்றுக்கு விதிவிலக்கு அளித்து, சர்க்கரை ஆலைகளுக்கு விதிவிலக்கு அளித்து, மடாலயங்களுக்கு விதிவிலக்கு அளித்து, நல்ல விதத்தில் வருமானம் கிடைக்கக் கூடியவர்களுக்கு எல்லாம் விதி விலக்கு அளித்து இத்தனைக்குப் பிறகு மிச்சம் என்ன இருக்கும் என்று பார்த்தால், இவைகளில் எல்லாம் தங்கள் உடைமைகளை ஈடுபடுத்திக் கொள்ளாதவர்கள் அப்பாவி மனிதர்கள் சிக்கிக்கொண்டு, இருக்கிறார்களே அவர்கள் நிலங்கள் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியவில்லை.

இதைப் பார்த்துதான், எனக்கு முன்னால் பேசிய கனம் அங்கத்தினர் அவர்கள் கேட்டார்கள் – ‘எதற்காக இம் மாதிரி ஒரு சட்டத்தைக் கொண்டு வருகிறீர்கள்?‘ என்று.

இதன் மூலம் யாரைத் திருப்திபடுத்தப் போகிறார்கள் எந்த நியாய அடிப்படையில் இதை அமலாக்குகிறார்கள். இதன் மூலம் என்ன பலனை நாட்டுக்குத் தர இருக்கிறார்கள் என்று நான் அறிந்த கொள்ள விரும்புகிறேன்.

நிச்சயமாக இல்லை(

“உற்பத்தி பெருகுவதற்கு, அவர்களுக்குச் சொந்தத்தில் நிலம் இருந்தால்தான் நல்ல விளைச்சல் இருக்கும். அப்போது தான் விவசாயி அதிக அக்கறைகாட்டி பாடுபடுவான்“ என்று விவசாய அமைச்சர்கள் கூடிய மாநாட்டில் பேசியிருக்கிறார்கள்.

“உழுபவர்கள், ‘நாம் உழுகிறவர்கள், கடைசியில் அறுத்து எடுத்துக் கொண்டு போகின்றவர்கள் வேறு யாரோ? நாம் பாடுபடுகிறோம். ஆனால் பாடுபட்டுக் கிடைக்கின்ற பலன் வேறு யாருக்கோ போய்ச் சேருகிறது’ என்ற காரணத்தினால் தான் அக்கறையற்று இருக்கிறார்கள். அவர்களுக்கு அக்கறை ஏற்பட வேண்டுமானால் – தங்களுக்குத்தான் அந்த நிலம் சொந்தம் என்ற உணர்ச்சியும், அவர்கள் பாடுபடுவதன் பலன் அவர்களுக்குக் கிடைக்கும் என்ற உறுதிபபாடும் அவர்க்ளுக்கே இருந்தால்தான் ஏற்படும்“ என்ற உணவுப் பிரச்சனை பற்றி ஆராய்ந்த விவசாய அமைச்சர்கள் பலமுறை எடுத்துப் பேசியிருக்கிறார்கள். அந்த வகையிலே இந்தச் சட்டம் திருத்தியமைக்கப்பட்டிருக்கிறதா? இந்தச் சட்டம் அதைப் பூர்த்தி செய்கிறதா? என்றால் நிச்சயமாக இல்லை.

தவறிவிட்டனரா?

இந்த மடாலயஙக்ளுக்கு, அறநிலையங்களுக்கு விதிவிலக்கு அளித்திருப்பதற்கு ஒரு சட்டப் பிரச்சனையைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இப்படிச் சட்டப் பிரச்சனையைக் குறிப்பிட்டிருக்கிறார்களென்றால், உண்மையிலேயே இந்த மசோதா இத்தனை ஆண்டுகளாக உருவாகிக் கொண்டிருந்த நிலையில் கருவில் உருவாகிக் கொண்டு வருவதைப்போல் உருவாகிக் கொண்டிருந்த நிலையில் சட்ட நிபுணர்களைக் கலந்தாலோசிக்கவில்லையா? கலந்தாலோசிக்கத் தவறிவிட்டார்களா? அல்லது சட்ட ஆலோசனை கேட்காமல் இந்த மசோதாவில் குறிப்பிட்டுவிட்டார்களா? என்று அறிய விரும்புகிறோம்.

உத்தரவாதம் இல்லாத மசோதா

அவர்கள் குறிப்பிட்டிருப்பது அரசியல் சட்டத்தில் 26வது விதியின்படி மடாலயங்களுக்கும், அறநிலையங்களுக்கும் “26 © to own acquire movable and immovable property” என்று இருப்பதால், நாம் உச்சவரம்பு காட்டினாலும் கூட அவர்கள் புதிதாக நிலங்களை வாங்கிக் கொள்ள முடியும். அல்லது இருக்கிற நிலங்களை பறித்துக் கொண்டாலும் அவர்கள் வழக்கு மன்றத்திற்குச் செல்ல முடியும். ஆக, இதற்குத் தனியாக ஒரு ஏற்பாடு இஷ்டப்பட்டால், தேவைப்பட்டால் செய்யலாம். செய்யப் போகிறோம் என்று உறுதியில்லை. இந்த மசோதாவைத்தயாரித்துக் கொண்டிருக்கிறோம் என்ற உத்தரவாததம் இல்லை-இந்த முறையில் தப்பித்துக் கொள்ள விரும்புகிற நேரத்தில் இந்த ‘பாஷை‘ தான் வருகிறது. ஆக, ‘தேவைப்பட்டால் இந்த மசோதா கொண்டு வரலாம்‘ என்று குறிப்பிடுவதால், இப்போது இல்லை என்று ஏற்படுகிறது.

நான் எடுத்துச் சொல்ல விரும்புவது, இப்படி அவர்களது அசையும் அசையா சொத்துக்களை வாங்கவும் உரிமையாக்கிக் கொள்ளவும் அவர்களுக்குச் சட்டத்தில் இடம் கொடுத்திருப்பது இப்போது இருக்கின்ற உடைமைகளுக்கும், இனி வாங்குவதாக இருந்தாலும் நாம் குறிப்பி்டுகிற சட்டத்திற்கு உட்பட்ட அளவைக் குறிப்பிடுவதே தவிர, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கும் அளவுக்கு ஒரு பெரிய உரிமை கிடைத்து விடும் என்று யாரும் கருதத் தேவையில்லை.

சர்க்கார் நினைத்தால் பெறலாம்

ஆக, இந்த 26ஆவது பிரிவைப் பற்றியே உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற இதே வகையான வழக்கில் ஏற்பட்ட தீர்ப்பைப் படித்துக் காட்டுவது பயனளிக்கும் என்று கருதுகிறேன். “Property dedicated to a religious. Charitable or any other public purpose is not immune from acquisition by the State for public purposes” என்று அதிலே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

U.P. Case suryapal singh V. State of U.P. என்ற அந்த வழக்கில்,
ஆக பொதுக் காரியத்திற்காக – பொது நன்மையை உத்தேசித்து நிலத்தைச் சர்க்கார் தங்களுக்கு உடைமையாக்கிக் கொள்வதென்றால் மதஸ்தாபனமாக இருந்தாலும், அறநிலைய ஸ்தாபனமாக இருந்தாலும் மத ஸ்தாபனங்களால்தான் – மதம் இருக்கிறதா என்பது விவாதித்திற்குரிய பிரச்சனை, அற நிலையங்களால்தான் அறம் தழைக்கிறதா என்பதும் விவாதத்திற்குரிய பிரச்சனை – அவர்கள் தடுக்க விரும்பவில்லை. ‘அப்படிப்பட்ட இடங்களில் இருந்தாலும், பொது நன்மைக்கு அது தேவை என்று சர்க்கார் கருதினால் அதைப் பெறலாம்‘ என்று இந்த வழக்கில் ஏற்பட்ட தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எனக்கே தெரியும்போது...

நானே இதைப் பார்த்திருக்கும்போது எனக்கே இது கிடைக்கும்போது, சட்டப் புத்தகத்திலேயே தங்களை ஈடபடுத்திக் கொண்டிருக்கும் அமைச்சர் பார்க்காமல் இருந்திருப்பார்களா? நிச்சயம் பார்த்திருப்பார்கள். நிச்சயம் தெளிவாக இருந்திருக்கும்.

ஏதாவது ஒரு தடை சொல்ல வேண்டுமென்பதற்காக இது ஒரு சமயம் சட்டத்திற்கு விரோதமாக இருக்கக்கூடும் என்று சொல்லியிருக்கிறார்களே தவிர, 26ஆவது பிரிவும் இப்போது நிறைவேற்றப்படுகின்ற சட்டமும் ஒன்றுக் கொன்று முரண்பட்டதல்ல என்று மிகச் சாதாராண – சட்ட அறிவு வேண்டியதில்லை – பொது அறிவு படைத்தவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

விதிவிலக்கு நல்லதல்ல!

மத ஸ்தாபனங்களுக்கு விதிவிலக்கு, அறநிலையங்களுக்கு விதிவிலக்கு, சர்க்கரை ஆலைகளுக்கு விதிவிலக்கு என்று விதிவிலக்குகள் கொடுப்பது நல்லதல்ல என்று கருதுகிறேன். கூடுமானவரையில் இந்த விதிவிலக்குகள் நீக்கினால், உண்மையில் ஒரு சட்டத்தை நிறைவேற்றினோம் என்று பெருமைப்பட்டுக் கொள்ள முடியும். பிற்காலத்தில் இந்தச் சட்டத்தை யார் கொண்டு வந்தார்கள் என்று அறிந்து கொள்ளும்போது, நம்முடைய அமைச்சரைப் பற்றி ‘இப்படி ஒரு நிலச் சட்டத்தைக் கொண்டு வந்தாரோ‘ என்று நெடுங்காலத்திற்கப் பிறகு அவருடைய பேரப் பிள்ளைகளின் வாழ்த்துக்கு உரியவராகப் போகிறாரே என்று எனது உற்ற நண்பர் என்ற முறையில் பரிதாபப்படுகிறேன் – எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உள்ளபடி மராட்டியத்தில் சர்க்கரை ஆலைகளின் சொந்தக்காரர் களெல்லாம், மிக அழகான வெளியீடுகளெல்லாம் போட்டு விண்ணப்பம் கொடுத்தார்கள். அமைச்சரவையிடத்தில் ‘படையெடுப்பு‘ மாதிரி நடத்தினார்கள். ஆனால் அந்த நாட்டிலே சர்க்கரை ஆலைகளுக்குத் தரப்படும் நிலங்களுக்கு விதிவிலக்குக் கொடுக்கமாட்டோம்‘ என்று சொன்னார்கள்.

அந்த நாட்டிலே இனிக்காத சர்க்கரை நம் அமைச்சர்களுக்கு இனிப்பானேன்?

வயதான காலத்தில் சர்க்கரை இனித்தால் ஏதோ ஒரு வியாதி என்று சொல்வார்கள். இந்த வியாதி தனி ஆட்களுக்கும் கூடாது, கட்சிகளுக்கும் கூடாது.

கேடு கண்டு அஞ்சவில்லை

கட்சிகள் என்று சொல்கிற நேரத்தில், எங்களுடைய கட்சியைக் குறித்து எவ்வளவோ பேர் வெகு கேலியோடு பேசினார்கள் என்று கேள்விப்பட்டேன். அப்படிப்பட்ட கேலிகளை, தாக்குதல்களை எதிர்பார்த்துத்தான் பொது வாழ்க்கையில் இருக்கிறேனே தவிர, கேலிகளைக் கண்டு நான் அஞ்சவில்லை.

நிலத்திற்கு உச்சவரம்பு கொண்டுவருவதன் அடிப்படையான காரணம், ஒரே இடத்தில் உடைமை குவிந்துவிடக் கூடாது ஒரே இடத்தில் வருவாய் குவித்துவிடக் கூடாது, பரவலாக்கப்பட வேண்டும்‘ என்பதுதான். அந்த ஓர் அடிப்படைத் தத்துவப்படி நிறைவேற்றப்பட்ட வேண்டுமானால், குறிப்பிட்டிருக்கிற இத்தனை விதிவிலக்குகளும் தேவையற்றவை – தீதானவை – கெட்ட நோக்கத்தோடு புகுத்தப்பட்டவை – யாரையோ திருப்திபடுத்த ஏற்பட்டவை இவைகள். பொதுமக்களுக்கு எப்படித் திருப்தியளிக்க முடியும்?

அக்கறையற்ற தன்மையும் அற்ப ஆசையும்

ஆக, துவக்கத்தில் சொன்ன மாதிரி, இதைப்பற்றி அக்கறையற்ற தன்மையில் இருக்கிறார்கள். அமைச்சருக்குக் கூட ஆளும் கட்சிக்குக் கூட என்னுடைய கட்சியிலிருந்து யார் யார் மாயையிலிருந்து விலகுவார்கள், யார் யார் தங்களிடம் சேர்வார்கள் என்பதிலுள்ள அக்கறை, விவசாயிகள் விஷயத்தில் ஏற்படாதது. உள்ளபடி அவர்களுக்கு இருக்கிற அற்ப ஆசையையும், சட்ட விஷயத்தில அக்கறையற்ற தன்மை இருப்பதையும் எடுத்துக் காட்டுகிறது.

ஆகையால், இந்த மசோதா சட்டமாகும் நேரத்தில் பொதுமக்கள் வாழ்த்தி வரவேற்கும் முறையில் நல்லபடி திருத்தி அமைக்க வேண்டும்.

சட்டத்தின் உயிரைப் பாழாக்கி விட்டனர்

ஒவ்வொரு இடத்திலும் சிறு சிறு வார்த்தை மாற்றத்தினால் இந்தச் சட்டத்தின் உயிரைப் பறித்திருக்கிறார்கள்.

ஒரு சில அங்கத்தினர்கள், எங்களைச் சார்ந்தவர்கள் அடுக்கு மொழியாக ஜால வார்த்தைகள் பேசி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று சொன்னார்கள்.

எங்கள் அடுக்குமொழியும், ஜால வார்த்தைகளும் அமைச்சர் அவர்கள் கண்டுபிடிக்கும் வார்த்தைக்கு எடைபோடக் காணாது( சிறுசிறு வார்த்தைகளை வைத்துச் சட்டத்தின் உயிரைப் பாழாக்கியிருக்கிறார்கள்.

இதே மன்றத்தில், ‘ஸ்டாண்டர்ட் ஏக்கர்‘ என்பதற்கு என்ன இலக்கணம் என்பதைப் பற்றி ‘ஒரு ஏக்கர் நிலம் என்றால், கோயம்புத்தூரில் ஓர் ஏக்கர் நிலத்திற்கும், வட ஆற்காட்டில் ஓர் ஏக்கர் நிலத்திற்கும் ஒரே மாதிரி பலன் கிடைக்காதே, எப்படி நிர்ணயிக்கப் போகிறீர்கள்? என்று கேட்ட நேரத்தில், ரெவின்யூ அமைச்சர், ‘ஸ்டார்ண்டர்ட் ஏகக்கர் என்பதற்கு இலக்கணம் கூறுகிறேன்‘ என்று இலக்கணம் கொடுத்தார்கள். ‘நிலத்திற்கு வரி வசூலிக்கப்படுகிறது‘ என்று சொல்லி அதற்குக் கொடுத்த இலக்கணம் – ‘அந்த நிலத்திற்கு தருகின்ற தீர்வையைக் கணக்கெடுத்து ஸ்டாண்டர்டு ஏக்கர் நிர்ணயம் செய்யலாம்‘ என்று முடிவெடுத்த இலக்கணத்தை இப்போது மாற்றுவானேன்? யாருக்காக மாற்றுகிறீர்கள்? எந்த வற்புறுத்தலின் பேரில் இப்படி மாற்றுகிறீர்கள்? அப்படி மாற்றுவதிலே எவ்வளவு பெரிய தீமை ஏற்படப்போகிறது என்பதைப் புள்ளிவிவரம் அறிந்தவர்கள் உணர்ந்து கொள்ள முடியும்.

இலக்கணத்தை ஏன் மாற்றுகிறீர்கள்?

ஒரு நிலத்திற்கு தரபப்டுகிற தீர்வையிலே, தண்ணீர் தீர்வையைக் கணக்குப் பார்க்க வேண்டும், அப்படிக் கணக்குப் பார்த்து, அதை நீக்கிவிட்டுப் பார்க்க வேண்டுமென்று காரணம் என்ன?

அப்படி அதை நீக்கிவிட்டுப் பார்த்தால் இது ரெவின்யூ நிலத்தில் விஷயத்தில் 100 ஏக்கர் இருக்கலாம் என்று சொல்கிற இடத்திலே, தண்ணீர் தீர்வையை நீக்கிவிட்டுப் பார்த்தால் 200 ஏக்கர் வைத்துக் கொள்ளலாம் என்ற நிலைமையைத்தான் உண்டுபண்ணுகிறது. இன்னமும் சற்று ஆராய்ந்து பார்த்தால் அப்படி நிலத்தை வைத்துக் கொண்டு இருக்கிறவர்கள். ஆளும் கட்சியில் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்பதை ஒரு திங்களில் பர்த்துவிட முடியும். ஆனால் நான் அந்த அளவுக்குப் போக விரும்பவில்லை. நான் பணிவன்போடு கேட்டுக் கொள்ள விரும்புவது என்னவென்றால், ‘நாமே இந்தச் சட்டமன்றத்தில், நம்முடைய அமைச்சர் அவர்கள் இதற்கு வகுத்த இலக்கணத்தை ஏற்றுக் கொண்டிருக்கும்போது இப்போது எதற்காக மாற்றுகிறீர்கள்?‘ என்பதுதான். அப்படி மாற்றத் தூண்டியது எது? யார் மாற்றச் சொன்னார்கள்? அப்படி மாற்றும்படி உங்களை ஊக்குவித்து யார்? அப்படி மாற்றுவதினால் என்ன பலன் கிடைக்கிறத என்பதை கனம் அமைச்சர் அவர்கள், அவர்களுடைய பேச்சிலே நமக்கு எடுத்துக்காட்ட வேண்டும்.

மாமியார் வீட்டு மாப்பிள்ளை

மற்றொன்று – வார்த்தைகளை மாற்றுவதிலே அவர்கள் உண்டாக்கு கின்ற பல தீமைகளில் ஒன்றை எடுத்துக்காட்ட விரும்புகிறேன். இதுபற்றி ஒவ்வொரு விதியாகப் பேசப்படுகின்ற நேரத்தில் கவனிக்கப்ட்டாலும், இப்போது பொதுப்படையாகச் சிலவற்றை நான் குறிப்பிட விரும்புகிறேன்.

40ஆவது கிளாசிலே அதைப்பற்றிப் போட்டிருப்பதில், “சர்க்கரை ஆலைகளுக்கு நிலங்கள் தேவை என்றால், அப்படி சர்க்கரை ஆலைகள் நிறுவப்படும்போது அந்த நிறுவனத்தில் போர்டை அணுகி அந்த நிலங்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டுமெனக் கேட்டுக் ்கொள்ள வேண்டும்“ என்றிருந்தது.

அப்படிக் கேட்கும்போது, ‘போர்டார் கொடுக்கலாம், அல்லது கொடுக்காமல் மறுக்கவும் படலாம்‘ என்றிருந்தது. ஆனால், இது பொறுக்குக் குழுவுக்குப் போய்விட்டு வந்த பிறகு நான் முன்பு சொன்னதுபோல், மாமியார் வீட்டுக்குப் போய்விட்டு வந்த மாப்பிள்ளை இளைத்திருப்பது போல் தான் இருக்கிறது.

இந்த ஏற்பாடு எதற்காக?

அந்த நிலங்களை அடமானத்திற்கு வைத்துக் கொண்டால்கூட, அப்படி அடமனாம் வைத்திருக்கக்கூடிய நிலங்களுக்கு விதிவிலக்கு தரவேண்டிய நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. இது எந்த நிலைக்குக் கொண்டு போய் விடுமென்றால், ஒருவன் 100 ஏக்கர் நிலத்தைச் சர்க்கரை ஆலைக்கு அடமானம் செய்துவிட்டுப்பத்திரம் எழுதிக் கொண்டு தன்னுடைய நிலத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டுமென்று போர்டாரைக் கேட்டுக் கொண்டால், அவர்கள் கொடுத்தே தீரவேண்டும் என்ற நிலைமையைத்தான் உண்டாக்கி இருக்கிறது. அந்த ஏற்பாடுதான் இப்போது ஏற்படுத்தித் தரப்பட்டு இருக்கிறது.

ஆகவே, இப்படி ஒருசில வார்த்தைகளை மாற்றியமைப்பதன் மூலம், இந்தச் சட்டத்தின் உயிரையே பிரித்து எடுத்திருக்கிறார்கள் என்பதை நான் பணிவன்போடு தெரிவித்துக் கொள்ள விருமபுகிறேன்.

உப்புச் சப்பும் இல்லைய!

உள்ளபடி, நிலத்தின் தரம் இன்றைய தினம் உயர வேண்டுமென்று கருதினால், விவசாயத்தினுடைய தரம் உயர்த்தப்பட வேண்டுமென்று கருதினாலும, உழவர்களுடைய தரத்தை உயர்த்த வேண்டுமென்று கருதினாலும் இந்தச் சட்டம் அதற்குப் பயன்படாது. பயன்படாது என்பது மட்டுமல்ல – பொருளதார ஏற்றத் தாழ்வுகளைச் சமன்படுத்துவற்கு எந்த விதத்திலும் இது உபயோகப் படாது. இந்தச் சட்டத்திலே அதற்கான எந்த விதமான உப்புச்சப்பும் இருப்பதாகத் தெரியவில்லை.

இப்போது இதைபப்ற்றி இந்தச் சட்ட மன்றத்திலே விவாதிக்கின்ற நேரத்திலே – அதைப்பற்றி என்னுடைய கருத்தை எடுததுச் சொல்கின்ற நேரத்திலே, இது எல்லா வகைகளிலும் ஏமாற்றக் கூடிய வகையிலே தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதை எடுத்துச் சொல்வதை நான் சனநாயக் கடமையாகக் கருதுகிறேன்.

எடுத்துக்காட்ட கடமைப்பட்டவர்கள்

அப்படிப் பேசக்கூடிய நேரத்தில் சனநாயத்திற்குப் பக்கத்தில் எங்களுக்கு இருக்கக்கூடிய குறைந்த வலிமையையும் நாங்கள் மறந்துவிடவில்லை. அப்படி வலிவற்று இருந்தாலும்கூட – என்னுடைய மற்றொரு கனம் அங்கத்தினர் குறிப்பிட்டபோது உழவர்களுக்காகவும் குடிசையிலே வாழ்ந்து கொண்டிருக்கும் எண்ணற்ற பெருங்குடி மக்களுக்காகவும் விரல் விட்டு எண்ணக்கூடிய 10 பேர்களாக நாங்கள் இருந்தாலும், இந்தச் சட்டம் பற்றிப் பிறிதொரு காலத்தில் எடுத்துக்காட்ட வாய்ப்பு ஏற்படும்போது, ‘நமக்கு முன்னால் இருந்தவர்கள் இந்தச் சட்டத்தைப் பற்றி இத்தகைய கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்‘ என்று உணர்ந்த கொள்வதற்காக இந்தச் சட்டத்திலே உள்ள குறைகளை நாங்கள் எடுத்துக்காட்டக் கடமைப்பட்டவர்கள்.

அந்த வகையில்தான் என்னுடைய கருத்தையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஓர் அரசியல்வாதி என்ற கருத்திலே சொல்ல வேண்டுமானாலும், எவ்வளவுக்கெவ்வளவு இந்த அரசாங்கம் இந்த மசோதாவில் ஓட்டை உடைசல்கள் உள்ளதாகச் செய்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு எங்களுக்கு நல்லதுதான் என்பதையும் ஒளிவுமறைவு இல்லாமல் எடுத்துச் சொல்ல விரும்புகிறேன்.

ஆகவே அரசியல் எண்ணத்தோடு பார்க்காமல் மக்களின் நஷ்ட நஷ்டங்களை மனதிலே வைத்துக் கொண்டு அந்த வகையிலே திருத்தியமைத்து, உழுகின்றவர்களுக்கு நிலம் கிடைக்கத்தக்க வகையில் இந்த மசோதாவை உருவாக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டு இந்த அளவிலே என்னுடைய உரையை நிறுத்திக் கொள்கிறேன்.

(நம்நாடு - 1, 2.9.61)