அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


கேட்டதையெல்லாம் கொடுத்திருக்கிறீர்கள்

கழகத் தோழர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் அண்ணா வேண்டுகோள்
“நீங்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும் என்று நான் கேட்டபோதெல்லாம் தந்திருக்கிறீர்கள். தடியடி படவேண்டும் என்று சொன்னபோதெல்லாம் தாராளமாகப்பட்டீர்கள். சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டும் என்ற போதெல்லாம் சித்தம் கலங்காமல் சிறை சென்றீர்கள். தேர்தலுக்கு ஓட்டு சேகரிக்க வேண்டும் என்று கேட்டபோது தேர்தலில் பழக்கம் பயிற்சி இல்லா திருந்தும் மிகத் திறமையாக ஓட்டு சேகரித்து நல்ல வெற்றியைத் தேடித் தந்தீர்கள்; பணம் தேவை என்றபோதெல்லாம் சொந்தச் செலவுக்கு வைத்திருந்த பணத்தைக்கூடக் கொடுத்துதவி இருக்கிறீர்கள்.

“இப்படி உங்கள் இதயத்தையே பெற்றிருக்கிற நான் உங்களையெல்லாம் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்வது என்னவென்றால் எதைப்பற்றியும் கலங்காமல் அடக்க உணர்ச்சியுடன் இருக்கவேண்டும். சந்து முனையிலும், அங்காடியிலும், தெருத்திண்ணையிலும் பேசுவது இன்று கழகத்தைப் பெரும் அல்லலுக்கு ஆளாக்கியிருக்கிறது.

ஒத்துழைப்புத் தரவேண்டும்
எத்தகைய நெருக்கடி ஏற்பட்டாலும் அதைத் தலைவர்கள் தீர்த்துக் கொள்வார்கள் என்று அடக்க உணர்ச்சியோடு இருக்க வேண்டும். எங்களுக்கு இருக்கும் அறிவாற்றல் மிகச் சாதாரணம்தான். அது வெற்றிபெற நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்று நேற்று மாலை சென்னை 58 ஆவது வட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணா அவர்கள் தோழர்களையும் நாட்டு மக்களையும் கேட்டுக் கொண்டார்கள்.

அண்ணா அவர்கள் தொடர்ந்து பேசியதாவது:-

ஆபத்தைத் தாண்டினால்தான் வெற்றி கிடைக்கும்
“உங்களையெல்லாம் ஒவ்வொரு கூட்டத்திலும் நேராகப் பார்த்துப் பார்த்துப் பேசிய நான், இன்று சற்றுக்குனிந்து பார்க்கும்படியாக மிக உயரத்தில் (மூன்றடுக்கு மாடு போன்று) இந்த மேடையை அமைத்திருக்கிறார்கள். இவ்வளவு உயரத்தில் நான் ஏறிவருவதற்காக நண்பர்கள் மெத்த சிரமப்பட்டுப் படிக்கட்டு அமைத்திருக்கிறார்கள்.

“நான் ஒவ்வொரு படியிலும் ஏறும்போதும், இந்தப் படிக்கட்டு பத்திரமாக என்னை மேலே கொண்டு போய்ச் சேர்க்குமா? என்று சந்தேகப்பட்டுக் கொண்டே ஏறினேன். ஒவ்வொரு படியும் அச்சுறுத்திக் கொண்டேயிருந்தது. இதைப்போல நாம், அரசியலில் ஒவ்வோர் ஆபத்தையும் தாண்டினால்தான் வெற்றிக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும்.

“மெத்த உற்சாகத்தோடு நண்பர் சிட்டிபாவும், மற்ற தோழர்களும் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

“மிக நீண்டநேரம் பேசவேண்டும் என்றுதான் நான் எண்ணியிருந்தேன். ஆனால், இன்று எனக்கு ஏற்பட்டுள்ள அலுவலும் நமது கழகத்தில் ஏற்பட்டுள்ள நான் அதைப்பற்றி உங்களுக்கு விளக்கத் தேவையில்லை. என்னை நீண்ட நேரம் பேசமுடியாமல் செய்து விட்டன.

“நமது கழகத்தில் இன்று ஏற்பட்டுள்ள நிலைமை என் மனத்தை வெகுவாகப் பாதித்திருக்கிறது. அதுபற்றி நண்பர்களுடன் கலந்து பேச இந்த நேரத்தைச் செலவிட இருக்கிறேன். ஆகவே, நான் உங்களிடையே அதிக நேரம் பேசமுடியாத நிலையிலிருக்கிறேன்.

தாய்த்திருநாட்டை மீட்க...
“நான் இங்கு வரும் நேரத்தில் இங்கே பேசிக்கொண்டிருந்த நண்பர் நாட்டு மக்களுடைய கஷ்ட நஷ்டத்தைத் தீர்க்க திராவிட நாடு திராவிடருக்குக் கிடைத்தாலொழிய வேறு மார்க்கமில்லை என்று பேசினார். நாம் அப்படிப்பட்ட மிகப்பெரிய இலட்சியத்தை வைத்திருக்கிறோம்.

“நமது தாய்த்திருநாட்டை மீட்க, 12 ஆண்டுகளாக நாட்டு மக்களைத் திரட்டி வந்திருக்கிறோம். நாம் எதிர்பார்த்ததை விட அதிகமாக வேகமாக மக்கள் ஆதரவு திரண்டு வந்திருக்கிறது. அவர்களுக்கெல்லாம் நன்றி தெரிவிப்பதுடன், அவர்களுடைய நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் கழகத்தை நாம் நடத்திச் செல்லக்கூடிய வகையில் நமக்கு ஆற்றல் ஒற்றுமையுணர்ச்சி, தியாகப் புத்தி ஏற்படுமா என்பதுதான் எனக்கிருக்கும் கவலையெல்லாம்.

“கழகத்தில் இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடியை ஒருவருக்கொருவர் கலந்து பேசித் தீர்க்கமுடியும். இந்த விநாடிவரை எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. இந்த நம்பிக்கை வீண்போகாது. அதற்கு உங்களுடைய நல்லெண்ணம் என்பக்கம் தி.மு.கழகத்தின் பக்கம் இருந்து கழகத்தை வலிவுள்ளதாகவும் பொலிவுள்ளதாகவும் ஆக்கித் தரவேண்டும். காங்கிரஸ் ஏதேச்சாதிகாரத்தை எதிர்க்க நல்லதொரு படைவீடாக பாடிவீடாகக் கழகத்தை ஆக்கித் தரவேண்டிய பொறுப்பு உங்களுடையது.

எங்கே உண்டு இந்த வளர்ச்சி?
“மாற்றார் கண்டு பொறாமைப்படும் அளவுக்கு நாம் வளர்ந்திருக்கிறோம். உலகில் 12 ஆண்டுகளில் இவ்வளவு பெரிய வளர்ச்சியைக் கண்ட வேறு எந்தக் கட்சியும் இருந்ததில்லை.
“பணம் மட்டும் இருந்தால் கட்சி வளர்ந்து விடாது. பணம் படைத்த பித்தாபுரம் ராஜா போன்ற பிரபுக்களெல்லாம் கட்சி நடத்தியதைக் கண்டிருக்கிறோம். பிரபுக்கள் கட்சி நடத்தினார்களே தவிர, கட்சி வளர வில்லை. நாம் பிரபுக்களல்ல-சாதாரணமானவர்கள். பிரபுக்களே கட்சி நடத்தப்பயன்படும் போது நாம் இந்தக் கழகத்தை இவ்வளவு பெரியதாக வளர்த்துக் காங்கிரசு எதேச்சாதிகார அரசினை ஒழிக்கப் பாடுபடுகிறோம்.

மக்கள் நல்லெண்ணத்தைவிட மாமருந்து வேறு உண்டா?
“நமது வளர்ச்சிக்கு இந்த நேரத்தில் ஊறுவிளையும் வகையில் மனமாச்சரியமும் கிலேசமும் ஏற்பட்டிருப்பதை மறைப்பற்கில்லை. இதை நீக்குவது கடினமல்ல; தலைவலிக்குத் தைலம் தடவி உள்ளுக்கு மருந்து சாப்பிடுவது போல் உங்கள் நல்லெண்ணத்தைத் தைலமாக்கி, உங்கள் ஒத்துழைப்பை மாமருந்தாக்கி உள்ளுக்கு சாப்பிட்டால் எல்லாம் தீர்ந்துவிடும்.

“உங்களிடையே மணிக்கணக்கில் பேசி மகிழ்ந்த நான் வடநாட்டு ஆதிக்கத்தைக் கண்டித்தும் திராவிட நாட்டு எல்லையைப் பற்றி விளக்கியும் ஐந்தாண்டுத் திட்ட அநீதி குறித்தும் பேசி மகிழ்ந்த நான் இன்று எதைப்பற்றியும் பேசமுடியாத நிலையில் இருக்கிறேன். குழந்தை இந்த விநாடியில் பிறக்குமோ-அடுத்த விநாடியில் பிறக்குமோ என்ற நிலையில் மனைவி பிரசவ வேதனைப் பட்டு கொண்டிருக்கும்போது பக்கத்து வீட்டுக்காரர் பஞ்சாமிருதத்தைப் பற்றிப் பேசினாலும், எப்படி காதுக்கும் கருத்துக்கும் இனிக்காதோ அதைப்போல இப்பொழுது எதைப்பற்றியும் பேச எனக்கு மனம் இடம் தரவில்லை. இதுவரை என்றுமே இத்தகைய மனநெருக்கடியை நான் பெற்றதில்லை.

“இந்த நெருக்கடி தீருவதற்கான தடைகளெல்லாம் நீங்கி, தி.மு.க வெற்றிநடை போடும் என்ற நம்பிக்கையோடு நீங்கள் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன்.

(நம்நாடு - 24.2.61)