கடந்த நவ.27 ஆம் நாள், சென்னை நுங்கம்பாக்கத்தில்
எம்.ஜி.ஆர் சார்பில் நடைபெற்ற மழை அங்கி வழங்கு விழாவில்
அண்ணா அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு:-
எம்.ஜி.ஆர் அவர்களின் கனிந்த உள்ளத்தின் விளைவாக, கடினமான
உழைப்பில் ஈடுபட்டிருக்கும் ரிக்ஷாத் தொழிலாளர்கள் மழையில்
படும் அவதியினைக் கண்டு அவர்களது துயரைத் துடைக்க 6,000
மழை அங்கிகளை வழங்கும் விழாவின் துவக்க நிகழ்ச்சியில், அவைகளை
அளிக்கும் வாய்ப்பினை எனக்கு அளித்தமைக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.
இங்கு அளித்தது போக இன்னும் மழைக்கோட்டுகளை வெவ்வேறு வட்டங்களிலும்
அளிக்க இருக்கிறார்கள்.
இந்தக் கோட்டு, பிளாஸ்டிக்கிலே செய்ததற்குப் பலவாறு தவறாகப்
பேசியதாகத் தோழர் வீரப்பன் அவர்கள் பேசும்போது எடுத்துச்
சொன்னார்கள். இந்த மழைக்கோட்டை வாங்கி வழங்கிடும்போது
‘நாமும் ஒன்று போட்டுக் கொள்ளலாம் போலிருக்கிறதே’ என்ற
ஆசை எனக்கு ஏற்பட்டது. அவ்வளவு அழகாக அவைகள் தைக்கப்பட்டுள்ளன.
குறுகிய குணம்-எனவே குறை கூறுகின்றனர்
மாற்றார், ஒரு நல்ல செயலை நல்ல கண்கொண்டு பார்க்காமல்,
உண்மையை உணராமல், ஆராயாமல், அறியாத் தனத்தால் குறுகிய குணம்
கொண்டு குறை சொல்கிறார்கள். நல்லது செய்தாலும், அதை ‘கொள்ளை’
என்று சொல்லுவது வாடிக்கை நம் உள்ளம் என்ன சொல்கிறது.
‘நல்லது’ என்று சொல்கிறது; எனவே சொல்பவர்களின் போக்கினைப்
பற்றிக் கவலையுறத் தேவையில்லை. நல்ல உள்ளம் உள்ள நண்பர்கள்
பாராட்டுவார்கள். அதுவே போதும்.
ரிக்ஷா தொழிலாளர்கள் படும் கஷ்டங்களைக் கண்ணாரக் கண்டவர்கள்,
இதைப்பற்றிக் குறைசொல்ல மாட்டார்கள். மாற்று அரசியல் கட்சியினர்தான்,
‘தேர்தல் காலத்தில் இது நடக்கிறதே’ என்று பயப்படுவார்கள்.
ஆனால் நாட்டு மக்கள் மனதார வரவேற்பார்கள் என்பதில் ஐயமில்லை.
எம்.ஜி.ஆர் அல்லாமல், அவர்களிலே ஒருவர் இதைச் செய்திருந்தால்
பாராட்டுவார்கள் புகழ்பண் பாடுவார்கள். அவர்கள் பாராட்ட
வேண்டும் என்பதல்ல ரிக்ஷாத் தொழிலாளர்களின் தொல்லைகளை,
துயர்களைத் தெரிந்த நாட்டு மக்கள் இதை உணருவார்கள்.
துயர் துடைக்கும் எண்ணம் எப்போதும் உண்டு!
‘பாட்டாளி மக்களுக்கு உதவவேண்டும்; வறுமையாளர்களுக்கு வழி
செய்ய வேண்டும், தொழிலாள வர்க்கத்தின் துயரைத் துடைக்க
வேண்டும்; ஏழை மக்களை ஈடேற்ற வேண்டும்’ என்ற நல்ல எண்ணம்
எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எப்போதும் உண்டு.
ஏழை மக்களை நேரில் பார்த்தவர்கள், அவர்களுக்கு எப்படி உதவி
செய்வதென்றே புரியாமலிருக்கிறார்கள்; ஆனால் எம்.ஜி.ஆர் அவர்கள்
ரிக்ஷாத் தொழிலாளர்களின் தொல்லைகளைக் கண்டிருக்கிறார்.
இருந்தாலும் அவருக்கு, இப்படி மழை அங்கிகளைத் தரவேண்டும்
என்ற எண்ணம் எப்படி வந்தது?
இந்த நேரத்தில் எனக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.
20 ஆண்டுகளுக்குமுன் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், ஒரு நாடகத்தில்
நடிக்க திருச்சிக்குச் சென்ற பொழுது, திருச்சி ஜங்ஷனில்
குதிரை வண்டி, மாட்டு வண்டிக்காரர்கள் மரத்தில் நிழல்கூட
இல்லாமல் வெயிலில் இருப்பதைக் கண்டு, உடனே அங்கு ஒரு கொட்டகையைக்
கட்டி அவர்களுக்கு உதவினார்.
வாழ்க்கை நிலையைக் கண்டறிந்த பண்பு
அதைப்போல எம்.ஜி.ஆர் அவர்கள் ரிக்ஷா தொழிலாளர்கள் மழையில்
படும் கஷ்டங்களைக் கண்டு அவர்கள் மழையில் வாடுவதைக் கண்டு
மற்றவர்களுக்காக அவர்கள் மழையில் வண“டி இழுக்கும் பரிதாபத்தைப்
பார்த்து பலத்த மழையில், வெயிலில், கடுங்குளிரில் வண்டி
இழுக்காவிட்டால் அவர்கள் வயிற்றுப் பாட்டுக்கு வியிருக்காதே
என்பதையும் உணர்ந்து மழையில் வண்டியிழுத்தால் அவர்களின்
உடலுக்கும் கஷ்டம், நோயையும் கொண்டு வந்துவிடுமே என்பதையும்
அறிந்து, மழையிலும் மக்களை வைத்து இழுத்து மக்களுக்குத்
தொண்டு செய்கிறார்கள் என்பதையும் தெரிந்து தங்களை மக்களுக்காக
அவர்கள் அர்ப்பணித்து விட்டார்கள் என்பதையும் நன்றாக அறிந்து
ஏழைத் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலையை உணர்ந்துதான்
இந்த நல்ல முயற்சியில் ஈடுபட்டு, நல்லதோர் உதவி செய்ய முன்வந்திருக்கிறார்.
சிந்தித்தார்-செயலாற்றினார்!
மழை வந்துவிட்டால் வண்டி இழுக்காமலிருக்க முடியாது. கடும்
மழையிலும் கண்டிப்பாக வண்டி இழுத்துத்தான் தீரவேண்டும்;
இல்லையேல் அவன் பட்டினி அவன் மனைவி பட்டினி-பச்சிளங்குழந்தைகள்
துடிக்கும் பசிக்கொடுமை தாளாமல். இத்தனைத் துயரையும் அனுபவிக்கும்
அந்த ரிக்ஷாத் தொழிலாளிக்கு எப்படி உதவியளிக்கலாம் என்று
அவர் எத்தனை நாள் எண்ணினாரோ-எத்தனை இரவுகள் தூங்காமல் கண்விழித்துச்
சிந்தித்தாரோ-அதனால் ஏற்பட்ட சீரிய எண்ணம்தான் இந்த மழைக்கோட்டு
வழங்கும் விழா.
மற்றவர்கள் நினைப்பார்கள் ‘ஏழைகளுக்கு எப்படி உதவலாம்?’
என்று அவர்கள் உள்ளத்தில் ‘100 பேருக்குச் சோறு போடலாம்;
200 பேருக்குத் துணி கொடுக்கலாம்; திருமணத்துக்கு ரூ.50
கொடுத்து உதவலாம் என்றுதான் தோன“றும்.
இப்படிப்பட்ட எண்ணங்கள் எல்லாம் மிகவும் எளிதானவை; ஆனால்
ஏழை படும் இன்னலை எண்ணி எண்ணிப் பார்த்துக் கனிவு உள்ளம்
பெற்றுத் தொண்டாற்றுகிறார் எம்.ஜி.ஆர்.
வேதனையை அனுபவித்த உள்ளம்
எம்.ஜி.இராமச்சந்திரன் நல்ல கலைஞர், நல்ல கலைஞர்கள் பெரிய
மோட்டார் வைத்திருப்பார்கள்; அதில் சென்றால் ஏழை எளியவரைப்
பார்க்க முடியாது; உள்ளே பள்ளமாக இருப்பதால் வெளியில் இருப்பவர்களைப்
பார்க்க முடியாதபடி மறைத்துவிடும். அப்படிப்பட்ட உயரிய நிலையிலே
வாழும் எம்.ஜி.ஆர். அவர்களுக்குக் குடிசைகளைப் பார்க்க வேண்டிய
எண்ணம் எப்படி வந்தது? அதைத்தான் அவரே விளக்கினார். ‘யானை
கவுனிப் பகுதியில் ஏழை நடிகனாக கேட்பாரற்றவனாக எத்தனையோ
நாட்கள் நடைபாதையிலேயே நடமாடினேன். அதுதான் ஏழைகளின் நிலையை
உணரமுடிந்தது’ என்று சொன்னாரே-அந்த உள்ளந்தான் அவரை எண்ணிப்
பார்க்க வைத்தது.
அந்த வேதனைக் காலத்தை நினைக்கும்போது அதனுடன் ஒப்பிட்டு
இன்று அல்லல்படும் மக்களை எண்ணி, அவர் வேதனைப்படுகிறார்.
அதன் காரணமாகத் தான் ஏழை மனிதனாகப் பிறந்து, மிருகத்திலும்
கேவலமாக மனிதனை மனிதன் இழுத்துச் செல்லும் காட்சிகளைக் கண்டு
உள்ளத்திலே நினைத்து, கண்ணீர் விட்டு அழுது, அவன் துயரத்தைத்
துடைக்கத் தானும் ஓரளவு உதவலாம் என்று முன்வந்து மழை அங்கிகளை
அளிக்கிறார்.
மற்றவர்களும் செய்ய வேண்டுமே!
இந்த அருமையான காரியத்தை மற்றவர்களும் செய்தால் மகிழ்ச்சியுடன்
வரவேற்றுப் பாராட்டுவேன்; அவர்கள் கலைஞர்களாக இருந்தால்
மெத்த சந்தோஷம்; கழகத்தைச் சார்ந்த கலைஞர்களாக இருந்தால்
இரட்டிப்பு மகிழ்ச்சி; எம்.ஜி.ஆர் தான் செய்கிறாரே என்று
யாருமே சும்மா இருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மழைக் காலத்தில், பனியில் பகலெல்லாம் பாடுபட்டு உழைத்துக்
கடுமையாகப் பணியாற்றிவிட்டுக் கட்டாந்தரையில் படுத்துத்
தூங்குகிறார்கள் பாட்டாள் மக்கள்; அவர்கள் இரவில் படுத்துறங்குவதற்கு
வசதியாகப் பெட்டியாலான் வண்டி ஒன்றைச் செய்து, அதில் 4 அடுக்குப்
பலகையைப் பொருத்தி, ஒரு வண்டியில் 4 அல்லது 5 பேர் படுக்க
வயதி செய்து கொடுக்கலாம். அப்படி உருவாக்கப்படும் வண்டிகளை
அவர்களுக்கே கொடுத்துவிட வேண்டும் என்பதுகூட அல்ல! இரவில்
கொத்தவால்சாவடி, சைனா பஜார், மூலக் கொத்தளம் போன்ற பகுதிகளுக்கு
8 மணிக்கு வண்டி வரும். இரவில் அவர்கள் அதில் படுத்துத்
தூங்கலாம்; பொழுது விடிந்ததும் வண்டிகள் பழைய இடத்துக்கே
வந்துவிடலாம். இப்படிச் செய்தால் ஓரளவு அவர்களுடைய கஷ்டம்
நீங்கும்.
போட்டிப் போட்டுக் கொண்டு உதவுங்கள்
கட்டாந்தரையானாலும், ஈரத்தரையானாலும், மழையானாலும், பனியானாலும்
வெட்டவெளியில் சாலையோரங்களில் நடைபாதைகளில் படுத்துறங்கும்
அந்த ஏழை மக்கள், இப்படிப்பட்ட வண்டிகளில் படுத்துறங்கினால்,
அவர்களுடைய உடலுக்கு அடிக்கடி வரும் பிணிகளிலிருந்து விடுபடக்
கூடுமல்லவா?
எம்.ஜி.ஆருடன் போட்டி போட்டுக் கொண்டு நன்கொடை வழங்க
முன்வரும் கலைஞர்கள், இந்த நல்ல காரியத்தைச் செய்யலாம்.
எம்.ஜி.ஆர் ஒரு சிறு உதவி செய்தால் அவர்கள் அதைவிடப் பெரிதாக
நல்ல உதவி செய்யட்டும்; இந்த உதவிகளெல்லாம் தொழிலாளர்களின்
துன்பத்தைத் துரத்தத்தானே? எனவே, அப்படி முன்வருவோரைப்
போற்றுவோம். எந்தக் கலைஞர்கள் எந்த இடத்தில் இருந்தாலும்
சரி, எந்த இடத்திலிருந்து எங்குப் போனவர்களானாலும் சரி,
அவர்கள் இந்த இடத்திலிருந்து போன கலைஞர்களாகத்தான் இருக்க
முடியும் என்பதால் நாம் மகிழ்ச்சியுறுகிறோம். இப்படிப்
போட்டிபோட்டுக் கொண்டு வேலைசெய்வதுதான் கலைஞர்களுக்கு
உகந்தது.
அதிசயித்துப் போனேன்
“மக்களிடம் பெறுகிறோம். மக்களுக்குத் திருப்பித் தருகிறோம்”
என்று எம்.ஜி.ஆர் கூறினார். நல்ல தத்துவம். எவ்வளவு பெரிய
உலகத்திலேயே ஈடு இணையற்ற சீரிய பொருளாதாரத் தத்துவத்தை
இவ்வளவு எளிமையாகச் சொல்கிறாரே என்று நானே அதிசயித்துப்
போனேன் அவர் பேசும்பொழுது?
இந்தத் தத்துவத்தைத்தான் சில நாடுகளில் ‘சன் மார்க்கம்’
என்கிறார்கள். சில நாடுகளில் ‘பொதுவுடைமை’ என்கிறார்கள்.
அப்படியெல்லாம் எந்தத் தர்மமும் இல்லாமல் மக்கள் கொடுக்கும்
பணத்தை மக்களுக்கே திருப்பித் தருவதாகக் கூறினாரே அதிலேதான்
அவருடைய உயர்ந்த உண்மை இருக்கிறது. அவர்கள் உள்ளத்தில் முன்னேற்றக்
கழகமே உள்ளது. நண்பர் எம்.ஜி.ஆர் தூய உள்ளத்தின் தத்துவத்தை
நானாகப் புரிந்துகொண்டேன். இந்தத் தத்துவம் எந்த ஆட்சி
நடந்தாலும் அதன் அடிப்படையாக இருக்க வேண்டும்.
காணும் காட்சி இதுதான்!
முதலாளிகள் மக்கள் உழைப்பைப் பெறுகிறார்கள். எனவே, உழை“பபால்
வரும் ஊதியத்தில் மக்களுக்குப் பங்கு தரவேண்டும். ஆட்சியாளர்கள்
மக்களிடம் ஓட்டுப் பெறுகிறார்கள். அந்த மக்கள் அடுத்த முறை
ஓட்டுப்போட உயிர்வாழ சோறு போடவேண்டும். ஆனால் அவர்களோ,
மக்களை மாடாக உழைக்கச் செய்து, ஓடாகத் தேய வைத்தபின், “அவர்கள்
வெளிநாட்டுக்காரர் கண்ணில் பட்டுவிட்டால் பட்ட கடனைத் திருப்பிக்
கேட்பார்களே, புதிய கடன் தரமாட்டார்களே” என்று எண்ணி, போலீசார்
மூலம் அவர்களைக் கண்ணுக்கு எட்டாத தூரத்துக்கு அனுப்புகிறார்கள்.
ஏழைப் பாட்டாளிகளுக்கு அணி வழங்கும் இந்தச் சீரிய காரியம்
நல்ல காரியம் நல்லவர்களுக்காகச் செய்யப்பட்ட காரியம் நல்லவரால்
செய்யப்பட்ட காரியம் நல்ல இயக்கத்தால் செய்யப்பட்ட காரியம்
நல்ல இதயத்தோடு செய்யப்பட்ட காரியம். அதனால்தான் நல்லவர்கள்
கூடியிருக்கிறார்கள்.
நல்ல காரியத்தை நல்லவர்களுக்கு நல்லவர், நல்ல இயக்கத்தின்
சார்பில் செய்கிறார்கள். அத்தகைய நல்ல விழாவில் நல்லவர்கள்
கூடியிருக்கிறீர்கள்.
வருந்தத் தேவையில்லை
நம்முடைய புரட்சி நடிகர் இராமச்சந்திரன் அவர்கள் மழை அணி
வழங்கும் இந்தச் சீரிய காரியத்தைக் குறித்து, பலர் பலவிதமாகப்
பேசுவதைப் பற்றி வருத்தப்படத் தேவையில்லை. புகழுக்காகத்தான்
இதை எம்.ஜி.ஆர். செய்கிறார் என்று சொன்னால் இப்படிப் புகழ்
பெறுவதிலே ஒன்றும் தவறில்லை.
புகழ் ஈட்டுவது என்பது தமிழ் மரபு ஆகும். ‘ஈதல் இசைபட வாழ்தல்’
என்ற இலக்கணத்தைப் பின்பற்றி வரும் மரபைச் சேர்ந்தவர்கள்
நாம். நாம் தேடிய புகழால் பிற்காலச் சந்ததிக்குப் பயன் உண்டு.
நாம் கட்டிய மாளிகைகள் காலத்தால் அழிந்து போகலாம்; நாம்
தோண்டிய அகழிகள் தூர்ந்து போகலாம்; நாம் எழுப்பிய கோபுரங்கள்
குலைந்து போகலாம்; ஆனால் நாம் ஈட்டிய புகழ் பரம்பரை பரம்பரையாக
தலைமுறை தலைமுறையாக நாட்டிற்குச் சொந்தமாக இருக்கும்.
அவர்களைப் பற்றி எண்ணாதீர்
ஈட்டிய புகழைக் காப்பாற்றத் தவறியவர்களும், வந்தடைந்த புகழை
இழந்தவர்களும், புகழ் ஈட்டியவர்களைக் கண்டு பொறாமை கொண்டவர்களும்
இப்படிப்பட்ட காரியங்களைத் தூற்றுவதைப் பற்றிச் சிறிதும்
கவலை கொள்ளத் தேவையில்லை; அவர்களை இந்த விழாவில் எண்ணிப்
பார்க்க வேண்டாமா?
இந்த விழா எம்.ஜி.ஆர். அவர்களின் புகழுக்காக அல்ல; அவருடைய
புகழுக்காக என்றால் நாங்கள் இங்கு இருக்கமாட்டோம்; நீங்கள்
வந்திருக்கமாட்டீர்கள்; நாமெல்லாம் கூடியிருக்க மாட்டோம்.
நாட்டுக்கு நல்லது செய்யும் விழா இது; அதனால்தான் கூடியிருக்கிறோம்.
நாட்டுக்கு எங்கு நல்லது என்று படுகிறதோ அதனை வரவேற்போம்,
மற்றவைகளை எதிர்ப்போம்.
எம்.ஜி.ஆர் ஈட்டுகின்ற புகழ் அவருக்கு மட்டுமல்ல அவர் மூலம்
நாட்டுக்குக் கிடைத்த நல்ல காரியமாகும்.
பொருளற்றவையா அவை?
வள்ளல்களின் வள்ளன்மையைப் பற்றி நம் பழந்தமிழிப் புலவர்கள்
பாடியவையெல்லாம் பொருளற்றவை அல்ல.
பாரி என்ற வள்ளல் புலவர்களுக்குத் தானம் கொடுப்பான், புலவர்கள்
வரவேற்று, உபசரித்து, பாடச் சொல்லிக் கேட்டு இன்புற்று,
சன்மானம் கொடுத்து வழியனுப்புவான்; பெற்றுக்கொண்ட புலவர்
போய்விடுவார். ‘புலவர் போய் விட்டாரே; இருந்திருந்தால்
இன்னும் பல பாடல்களைப் பாடுவாரே’ என்று எண்ணும் பாரி; தன்
அரண்மனை ஆட்களைவிட்டே அந்தப் புலவர்களிடம் கொள்ளை அடிக்கச்
சொல்லி அனுப்புவானாம்; புலவர் நாட்டு எல்லையைத் தாண்டும்
முன்பே அரண்மனை ஆட்கள் மாறுவேடத்துடன் சென்று வழிப்பறி நடத்தி
அந்தப் பொருள்களை அரசனிடம் கொண்டுவந்து சேர்ப்பார்கள்;
பொருள்களை இழந்த புலவர் மீண்டும் அரசனிடம் திரும்பி வந்து,
‘ஐயோ நீங்கள் கொடுத்ததைக் கள்வர்கள் அபகரித்துக் கொண்டார்கள்
என்று முறையிடுவர். ‘அது போனால் பரவாயில்லை; நீங்கள் மறுபடியும்
பாடுங்கள்; பாடி முடித்தபின் பாரி அவருக்குச் சன்மானம் வழங்கும்போது
கூறுவானாம். ‘யாரும் கொள்ளையடிக்கவில்லை; உங்கள் புலமையில்
எனக்கு அதிக நாட்டம் கண்டுவிட்டது; உங்களை மீண்டும் வரவழைக்க
நான்தான் ஆட்களை விட்டுக் கொள்ளையடித்தேன்’ என்று. இதனைத்
தான் ‘பாரி கொடுத்த பரியும், பாரி பறித்த பரியும்’ என்று
கூறுவார்கள்.
அப்படிப்பட்ட பரம்பரையில் தோன்றியவர்கள் நாம். அத்தகைய
மரபுக்குச் சொந்தக்காரர்கள் நாம்; புகழ் பெறுவது தரறுமல்ல.
தன்மானக் குறைவுமல்ல.
வாழ்த்துவரே அவர்கள்!
எம்.ஜி.ஆர் ஒருவரின் புகழுக்காக என்றால் இவ்வளவு பெரிய கூட்டத்தைக்
கூட்டியிருக்க வேண்டியதில்லை. வீட்டிலிருந்து கொண்டே எம்.ஜி.ஆர்
ரிக்ஷாக்காரர்களை ஒவ்வொருவராக அழைத்துக்கொடுத்திருந்தால்
அந்த மழை அங்கி அவர்களின் உடலிலே ஒட்டிக்கொள்ளாதா’ ‘எம்.ஜி.ஆர்
வாழ்க’ என்று அவர்களும் சொல்லியிருக்க மாட்டார்களா? தானாகவே
‘எம்.ஜி.ஆர் வாழ்க’ என்று கூறக்கூடியவர்கள், மழை அங்கி வாங்கிக்கொண்டு
சும்மாவா இருப்பார்கள்?
இதை இவ்வளவு பெரிய விழாவாக நடத்தியதற்குக் காரணம், ஒவ்வொருவருக்கும்,
‘நாம் என்ன உதவி செய்ய வேண்டும்?’ என்ற எண்ணம் உருவாகவேண்டும்
என்பதற்குத்தான். ‘அவர் மழை அங்கி தருகிறார் நாம் ஏதாவது
தருவோம்; அவர் பெரும் பொருள் ஈட்டுகிறார்-அவர் தருகிறார்,
நாம் ஈட்டுகிற அளவுக்கு ஏதாவது செய்வோம்’ என்ற எண்ணம் உருவாக
வேண்டும் என்பதற்காகத்தான்.
அன்புத்தொல்லை!
எம்.ஜி.ஆர் மக்களுக்கு அறிமுகமாகாதவரல்ல; அவர் தலையைக் கண்டாலே,
‘எம்.ஜி.ஆர். வாழ்க. எம்.ஜி.ஆர். வாழ்க’ என்ற குரலெழுப்புகிறார்கள்.
எம்.ஜி.ஆர் தலைகாட்டப் பயப்படுகிறார்; காரணம், மக்கள் அன்புத்தொல்லை
கொடுப்பதால்.
‘ஐயோ, மக்களைப் பார்த்தால் என்ன ஆகுமோ?’ என்று பயப்படுகிறார்கள்,
மற்றவர்கள்.
ரஷ்ய நாட்டிலே புரட்சிக்குமுன் சீமானின் மகன் ஒருவன் இருந்தான்.
கோடிக்கணக்கில் பணம் இருந்தது அவனிடம். பணம் குவிந்துகிடக்கும்
சீமான்கள் எதிலும் நாட்டமுள்ளவர்களாகத் தான் இருப்பார்கள்.
எனவே, கேளிக்கை களியாட்டங்களிலே அதிக ஈடுபாடு கொண்டான்
அந்தச் சீமான்.
ஒருநாள் அந்தச் சீமானின் மகன், இரவில் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு,
கேளிக்கைக் களியாட்டத்திற்காகக் கோச்சு வண்டியில் ஏறிச்சென“றான்.
கோச்சு வண்டியை ஓட்டுகின்றவர் ஒரு முதியவர்; ஏழை எளியவர்,
வண்டி ஒட்டிவிட்டு இறங்கி, களியாட்டக்கூட்டத்தின் உள்ளே
சென்றான் சீமான். வண்டிக்காரன் வெளியில் வண்டியில் உட்கார்“திருந்தான்.
வண்டியோட்டியும் மாடும்
உள்ளே சென்ற சீமான், களியாட்டத்தில் காணவேண்டிய காட்சிகளை
எல்லாம் கண்டான்; கேட்க வேண்டிய கீதங்களையெல்லாம் கேட்டான்;
குடிக்கவேண்டிய மது வகைகளை எல்லாம் குடித்தான்; பிடிக்க
வேண்டிய இடைகளையெல்லாம் பிடித்தான்; அணைக்க வேண்டிய அழகிகளை
அணைத்தான்; சுவைக்க வேண்டிய இதழ்களைச் சுவைத்தான்; ஆடவேண்டியவர்களுடன்
ஆடினான்; பாடவேண்டியவர்களுடன் பாடினான், போதை தலைக்கேறிவிட்டது;
சமாளிக்க முடியாமல் சுருண்டு விழுந்து விட்டான். காலையில்
அவனுடைய காதலி எழுப்பினாள் புரண்டு படுத்தான் அவன்; தட்டி
அன்புத் தொல்லை தந்தாள். ‘ஏன்’ என்றான். ‘மணி ஆறு’ என்றாள்
அவள். எழுந்தான் சீமான். நடந்தான் வண்டிக்கு; வண்டி ஓட்டும்
சவுக்கு கீழே கிடந்தது; சீமானுக்குக் கோபம்வந்துவிட்டது.
‘நாமதான் குடித்துவிட்டது; இந்த வண்டிக்காரனும் குடித்துவிட்டான்
போல் இருக்கிறது. எனவேதான் சவுக்குக் கீழே விழுந்து கிடக்கிறது’
என்று எண்ணினான். எடுத்தான் சவுக்கை. அடித்தான் வண்டியோட்டியின்
முதுகில். சீமானின் காதலி அன்போடு எழுப்பினாள்; வண்டியோட்டியைச்
சவுக்கு எழுப்பியது. ‘எழுந்திரு’ என்றான் சீமான் எழுந்திருக்கவில்லை
அவன். எழுந்திரு என்று அதே குரலில் கூப்பிட்டான். அவன் எழுந்திருக்கவேயில்லை;
‘எழுந்திரு’ என்று கோபமாகச் சவுக்கு நுனியால் வண்டியோட்டியைக்
குத்தினான். மாட்டைக் குத்தி எழுப்புவதைப் போல! வண்டியோட்டிக்கும்
மாட்டுக்கும் என்ன வித்தியாசம்? மாடும் போட்டதைத் தின்னுகிறது;
அவனும் போட்டதைத் தின்னுகிறான்; மாடும் சொன்னதைச் செய்கிறது
அவனும் சொன்னதைச் செய்கிறான்.
நான் மனிதானேன்
‘எசமான் எந்த நேரத்தில் வந்துவிடுவானோ’ என்று காத்துக்கிடந்தான்
வண்டியோட்டி; கடுமையான பணி. நெப்போலியனையே விரட்டிய பனி
அல்லவா? அந்தப்பனிக்கொடுமையால் அவன் உட்கார்ந்த நிலையிலேயே
விரைந்து உயிரற்ற பிணமாகிவிட்டான். இவன் குத்தியதும் அவன்
கீழே விழுந்தான் பிணமாக.
அன்றுதான் ‘நான் மனிதனானேன்’ என்று அந்தச் சீமான் மகன் ஒரு
கட்டுரையில் எழுதினான்; பிறகு புரட்சியிலே தான் சேர்ந்ததாகவும்
அவன் எழுதியுள்ளான்.
நமது நாட்டில் 10 அல்லது 15 பேர் பாலும் பழமும் பருகிவிட்டால்
அது உடலுக்குள் ஒட்டாது. பஞ்சைகளைப் பார்த்தால் உள்ளத்தில்
பதறல் ஏற்படவேண்டும். அவரவர்கள் வீடு, தெரு முதலியவைகளையாவது
சீர்ப்படுத்தத் துணியவேண்டும்.
கூட்டமும் எங்களுக்கு-ஓட்டும் எங்களுக்கு
எம்.ஜி.ஆர் அவர்கள் தன்னாலான உதவியைச் செய்திருக்கிறார்.
அவரைப் பாராட்டுகிறேன். அவர் மேலும் பல நல்ல காரியங்களைச்
செய்வதினால் பெருமைப்படுகிறேன்.
நம்முடைய இயக்கத்தவர் என்பதற்காகப் பாராட்டி அவரைப் பின்பற்றி
எண்ணிலடங்காதவர்கள் முன்வர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
தினந்தோறும் ஓட்டுக் கேட்டுக் கேட்டுச் சலித்துப் போய்,
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு அதுகுறித்து பேசாமல் இருக்கவே
வந்தேன்.
கொடுக்கப் போகிறவர்களை, ‘கொடுங்கள், கொடுங்கள்’ என்று
கேட்பதும், கொடுக்காதவர்களை ‘கொடுங்கள், கொடுங்கள்’ என்று
கேட்பதும் வீண். முதலமைச்சர் காமராசர் இதுவரை கூறிவந்தார்,
கூட்டம் அவர்களுக்குக் கூடும், ஆனால் ஓட்டு எங்களுக்குத்தான்’
என்று. இன்று அவருக்கு நான் கூறுவேன். இனி கூட்டமும் எங்களுக்குத்தான்;
ஓட்டும் எங்களுக்குத்தான்.
(நம்நாடு - 4.12.61)
|